Tuesday, October 6, 2009

காதலா? நட்பா?





ஒரு 'டீன் ஏஜ்' பெண்ணின் கேள்விக்கு, மனகுழப்பதிற்க்கு விளக்கம் தருகிறார் எழுத்தாளர் அனுராதா ரமணன்.





அன்புள்ள ஆன்ட்டி-


வணக்கம். நான் பிளஸ் டூ படிக்கும் மாணவி. சுமாராகப் படிப்பேன். எட்டாம் வகுப்பு வரையில் கணக்கு பாடத்தில் மக்காக இருந்தேன். அப்போது, என்னுடன் பீட்டர் எனும் மாணவன் (பெயர் மாற்றி இருக்கிறேன்) படித்துக் கொண்டிருந்தான். ஐந்தாம் வகுப்பிலிருந்தே நானும், அவனும் பிரண்ட்ஸ். அவன் மிக நன்றாகப் படிப்பான். அவன் அப்பா, கட்டடத் தொழிலாளி. இவன் படித்து பெரிய ஆளாய் வரவேண்டும் என்று இவனுடைய அம்மா, என் எதிரிலேயே சொல்லி இருக்கிறார்.


நான் கணக்கில் குறைந்த மார்க் வாங்கிய போதெல்லாம் மற்றவர்கள் கிண்டல் செய்தனர். இவன் தான் என்னிடம் சொன்னான்... "கணக்குல நீ வாங்கற முட்டைய எனக்குக் கொடுத்திடு; நான், உனக்கு கணக்கு சொல்லித் தர்றேன்!' என்று.சத்தியமாய் ஆன்ட்டி... அவன் சொல்லித் தந்து, நான் கணக்கில் 53 மார்க் வாங்கினேன். எனக்கு கணக்கு சொல்லித் தந்ததற்காக தினமும் இவனுக்கு முட்டை வாங்கித் தருவேன்; சந்தோஷமாய் சாப்பிடுவான்.
இதைத் தவிர, எங்களிடையே வேறு எந்தத் தப்பான நினைப்பும் கிடையாது. எட்டாம் வகுப்பு வந்த போது, நான், கணக்கில் 64 மார்க் வாங்கினேன். ஆனால், எங்கள் வகுப்பு மாணவர்கள் என்னையும், அவனையும் சேர்த்து வைத்து கேலி பேசினர். ஹெட்மாஸ்டர் வரைக்கும் விஷயம் போனது. அவர், அவனைக் கூப்பிட்டு கண்டித்து அனுப்பினார்.


ஆனால், இது என் வீட்டுக்குத் தெரிந்து, என் தாய்மாமாவும், சித்தப்பாவும் பள்ளிக்கூடத்துக்கு வந்து, என் கண்ணெதிரிலேயே அவனை அடித்து விட்டனர். நான் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை.நாங்கள் வசதியானவர்கள். மாமன் கவுன்சிலராக இருக்கிறார். அதனால், அவனை பள்ளியை விட்டே நிறுத்திவிட்டனர்.


நான் அழுதேன். அதையும் தப்பாவே எடுத்திட்டு, அவனைப் பார்க்கவோ, பேசவோகூடாது என்று சொல்லிவிட்டனர். நான் பள்ளிக்கூடத்துக்குப் போற வழியிலே தான் இரும்பு பட்டறையில பீட்டர் வேலை பார்க்கிறான். என்னால், இதைத் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.


எத்தனையோ தடவை பேச முயற்சி பண்ணினேன்; முடியவில்லை. என்னைப் பார்த்தால், முதுகைக் காட்டிதிரும்பி நிற்கிறான்; இல்லாவிட்டால், கண்ணை இறுக்க மூடிக் கொள்கிறான். என் வருத்தமெல்லாம் இதுதான்... குறைந்த மார்க் வாங்கிட்டிருந்த நான், எப்படியும் பிளஸ் டூவில் 60 மார்க் வாங்கி பாஸ் பண்ணிவிடுவேன். அப்புறம், என்னை காலேஜ்லே கூட சேர்க்க மாட்டாங்க; கல்யாணம் தான். ஆனால், நன்றாகப் படித்துக் கொண்டிருந்தவன், என்னால், படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு, "டிங்கரிங்' செய்து கொண்டிருக்கிறான்.இப்பொழுதும் சொல்கிறேன்... எனக்கு, அவனிடம் காதல் இல்லை; அவனுக்கும் இல்லை. இருவரும் நல்ல நண்பர்களாகப் பழகுகிறோம்.
இப்படி அவன் எதிர்காலத்தை வீணடித்து விட்டதை நினைத்தால் செத்துப் போய் விடலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது; அப்படிச் செய்தாலாவது என் வீட்டு ஆண் பிள்ளைகளுக்கு புத்தி வராதா?

என் அப்பாவுக்கு, சுயமாக எதையுமே முடிவு எடுக்க தெரியாது. அவரிடம் சொல்லி, பீட்டரை வேறு ஊருக்குப் போய் படிக்க பணம் கொடுக்கச் சொன்னேன். அதையும், தன் தம்பியிடம் சொல்லி, மேலும் சிக்கலாக்கி விட்டார். "உனக்கு இன்னும் அவன் நினைப்பு போகலையா?' என்று சித்தப்பா அசிங்கமாய் பேசினது, இப்பொழுது நினைத்தாலும் அழுகையாக வருகிறது.ஏதாவது வழி சொல்லுங்களேன்... பீட்டர் படிக்க வேண்டும்.


இப்படிக்கு, அன்பு மகள்.


பதில் தருகிறார் எழுத்தாளர் அனுராதா ரமணன்.



அன்புள்ள மகளுக்கு-


காதல் வேறு; நட்பு வேறு... நிறைய பேருக்கு இது புரிவதில்லை. நட்பு, காதலை விடவும் உயர்த்தி.

உன்னால் ஒருவன் படிப்பை தொடர முடியாமல் போனது மிகவும் சங்கடமான நிலைமை தான்; அதுவும் நன்றாகப் படிக்கக் கூடியவன். பெரியவர்களுக்கு அன்பில் பல பரிமாணங்கள் இருக்கும் என்பதே புரிவதில்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் சினிமாத் தனமானக் காதல் தான்.சரி... விடு... இத்தனை தூரம் நடந்து முடிந்த பின், நீ அப்பாவிடம் பணத்தைக் கொடுத்து, பீட்டரை ஊருக்கு அனுப்பி படிக்கச் சொல்லியிருக்கக் கூடாது. நீ அவனைப் பற்றி கவலைப்படாதே. படிக்கிற ஆர்வமுள்ள பையன்கள், எப்படிப்பட்டச் சூழ்நிலையிலும் படிப்பைத் தொடர்வர். எத்தனையோ விதமானக் கல்வித் துறைகள், வீட்டிலிருந்தபடியே, சம்பாதித்தபடியே படிப்பதற்கு இருக்கிறது; அதெல்லாம் அவனுக்குத் தெரியும்.ஆனால், இதற்காக எல்லாம் செத்துப் போய் விடலாமா என அசட்டுத்தனமாய் யோசிக்கக் கூடாது. நீ அப்படிச் செய்து கொள்வதால், அவர்களுக்குத் தாங்கள் செய்த தவறு புரியும் என்றா நினைக்கிறாய்? அசடு நீ. இது மாதிரி ஏதாவது செய்து கொண்டால், கண்டிப்பாய் மேலும் பழி தான் சொல்வர்;
பீட்டருக்குத் தான் இன்னும் பிரச்னை அதிகமாகும். உன் நல்ல நண்பன், வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றால், இது போல மரணத்தைக் குறித்து யோசிப்பதை நிறுத்து.

பார்... உன் வயது தான் உன் சிநேகிதனுக்கும்... புத்திசாலித்தனமாக, உன்னுடன் பேசுவதைத் தவிர்க்கிறான்.

அவனுக்கு வாழ்வின் யதார்த்தங்கள் புரிந்திருக்கிறது. உன்னால், அவனுக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமானால், அனாவசியமாய் அவனுடைய வாழ்க்கையில் குறுக்கிடாமல் இரு.பெரியவர்கள் பார்த்து, தேர்ந்தெடுக்கும் மணமகன் புத்திசாலியாய், நல்ல சுபாவமும், பழக்க வழக்கங்களும் நிறைந்தவராக இருப்பின் திருமணத்துக்கு சம்மதி; அதுவும், நீ மேஜரான பிறகு தான் என்பதைத் திட்டவட்டமாகச் சொல்.என்னவோ, உனக்கும், பீட்டருக்கும் நடுவில் ஏதோ தேவையில்லாத சமாச்சாரம் இருப்பது போல நினைத்து, அவசரப்பட்டு சரியான நடவடிக்கை இல்லாத மாப்பிள்ளையை உன் வீட்டினர் தேர்ந்தெடுத்து விடப்போகின்றனர். எனவே, தைரியமாக, திட்டவட்டமாக, உன் அபிப்பிராயத்தைத் தெரிவி.

"நாள் ஆவதால் நான் எங்கேயும் ஓடிப் போய் விடமாட்டேன்; நீங்கள் நல்ல மாப்பிள்ளையாகக் கொண்டு வாருங்கள். நான் பூரண சம்மதத்துடன் கழுத்தை நீட்டுகிறேன்!' என்று சொல்...என்ன... அவரவர் வாழ்க்கையை அவரவர் தான் அனுபவிக்க வேண்டும். உன் நல்ல நண்பனுக்காக, கடவுளிடம் பிரார்த்தனை செய்; அதை யாராலும் தடுக்க முடியாது.


இப்படிக்கு, அன்புடன்,
அனுராதா ரமணன்.


(நன்றி : தினமலர்)


பதிவு : இன்பா

1 comments:

R.Gopi said...

A very good answer from Mrs.Anuradha Ramanan...

Thanks for publising it here and brought to many people's knowledge

 
Follow @kadaitheru