ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்ற வாசகத்துக்கு உதாரணமாக மகாத்மா, தேசபிதா என்று அறியப்பட்ட காந்தி அவர்களின் வாழ்க்கைக்கு பின்னால் இருந்தார் கஸ்தூரிபா. 'பா' என்று காந்தி அன்புடன் அழைத்த கஸ்தூரிபா, பொறுமைக்கு, சகிப்புதன்மைக்கு உறைவிடமாய் வாழும் இந்திய பெண்களுக்கு ஒரு உருவகம்.
ஏப்ரல் 11, 1869 ஆம் வருடம், குஜராத் மாநிலம் காந்தி பிறந்த அதே போர்பந்தரில், கோகுலதாஸ் என்ற தொழிலதிபருக்கு மகளாக பிறந்தார் கஸ்தூரிபா. மிகவும் ஆச்சாரமான, கட்டுப்பாடுகள் நிறைந்த வைஷ்ணவ குடும்பம் அவருடையது. 1883 ஆம் வருடம் காந்தியை அவர் திருமணம் முடித்தபோது அவர் வயது 13 மட்டுமே. படிப்பறிவோ, பட்டறிவோ இல்லாத மழலை பருவம் தாண்டாத, வெளியுலகம் சிறிதும் அறியாதவராய் இருந்தார் அவர். அவருக்கு காந்தி அவர்களே ஆசிரியராய் இருந்து ஆங்கிலம்,சமஸ்கிரதம் உட்பட்ட கல்வியை போதித்தார். காந்தி அவர்கள் மேற்படிப்புக்காக லண்டன் சென்றபோது, தனது முதல் மகன் ஹரிலால் பிரசவத்தின் பொருட்டு, இந்தியாவில் இருந்தார் கஸ்தூரிபா.
1906 ஆம் வருடம் காந்தி அவர்கள், உடலுறவை முற்றிலும் புறக்கணித்து, பிரம்மச்சரியத்தை தனது கொள்கைகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டபோது, அதை முழு மனதோடு ஒப்புக்கொண்டார் கஸ்தூரிபா. சிறுவயது முதலே ஊறிப்போன தனது ஆச்சார, அனுஷ்டங்களை துறந்து காந்தி அவர்களோடு சாதி வேறுபாடுகளை பாராட்டாத ஆஸ்ரமங்களில் தங்கினார்.
1897 ஆம் வருடம் காந்தியுடன் தென்னாப்ப்ரிக்கவுக்கு பயணமானார். 1913 ஆம் வருடம் தென் ஆப்ரிக்காவிலுள்ள இந்தியர்களுக்காக போராடி காந்தி கைதானபோது கஸ்தூரிபாவும் ஜெயிலுக்குச் சென்றார்.
அங்குள்ள இந்தியர்கள் கஸ்தூரிபாவுக்கு 52 பவுன் நெக்லஸ் ஒன்றை பரிசாகத் தந்தனர். அதை விற்று கிடைத்த பணத்தில், ஒரு டிரஸ்ட் அமைத்தார். அந்தப் பணத்தை அங்குள்ள மக்களுக்கு உதவும்படி செய்தார்.
இந்தியா திரும்பியதும், சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு காந்தி சிறை சென்றதைப் பார்த்தார். விஷயம்புரியாவிட்டாலும்கூட, "என் கணவர் ஏதோ நல்ல விஷயத்துக்காக ஜெயிலுக்குப் போகிறார். நானும் அதுபோலசெல்கிறேன்' எனக்கூறி, மகளிர் அணிக்கு தலைமைப் பொறுப்பேற்று ஜெயிலுக்குப் போனார்.
ஒருமுறை ஜெயிலில் இருந்து வெளியிட்ட ஒரு அறிக்கையில், "வெள்ளையவர்களிடமிருந்து நாட்டை மீட்க பெண்களும் காங்கிரசுடன் இணைந்து போராட வேண்டும். கதராடை அணிந்தால் பொருளாதாரப் பிரச்னை தீரும். நெசவு வேலையில் பெண்கள் முக்கியமாக ஈடுபட வேண்டும். நம் நாட்டு துணி வியாபாரிகள் வெளிநாட்டு துணிகளை விற்கக் கூடாது' என்று கூறியிருந்தார்.இந்தியா முழுவதும் எதிரொலித்தது இந்த போர்குரல். உடனே கதராடையை ஏற்று கொண்டனர் மக்கள்.
அவருக்கும், காந்திக்கும் இடையே நடைபெற்ற ஒரு சுவாரசியமான சம்பவம்.
உப்புச் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கு முன், வழக்கம் போல் காந்தி தேசம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இந்த யாத்திரையின் போது காசிக்குச் சென்று ஸ்ரீ பிரகாசா என்பவர் வீட்டில் தங்கினார். அங்கிருந்து கிளம்பும்போது அக்குடும்பத்திலுள்ள எல்லோரும் காந்திஜியை வழியனுப்ப ஒன்று கூடினர். அவர்களில் ஸ்ரீ பிரகாசாவின் தாயாரும் ஒருவர். திடீரென்று அவள் காந்திஜியிடம் ‘மஹாத்மாஜீ, தாங்கள் ‘பா’விடம் மனம் நோகும்படி நடந்து கொள்ளுகிறீர்கள்’ என்றாள்.
இதற்க்கு சில நாட்களுக்கு முன் கஸ்தூரிபா செய்த சிறு தவறுக்காக ‘என் வருத்தம்; என் வெட்கம்’ என்ற உணர்ச்சி மிக்க கட்டுரையைக் காந்திஜி எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் கடுமையான வார்த்தைகளால் கஸ்தூரிபாவைக் கண்டனம் செய்திருந்தார். யாரோ ஒருவர் கஸ்தூரிபாவிடம் ரூபாய் நான்கு நன்கொடையாக்க் கொடுத்திருக்கிறார். அதை உரிய நேரத்தில் ஆசிரமத்தின் கஜானாவில் ‘பா’ சேர்க்க முடியாமற் போயிருந்தது. இந்தக் கட்டுரையைப் படித்த பலருக்கு மிகுந்த வேதனை ஏற்பட்டது.
இதனை மனதில் எண்ணிக்கொண்டுதான் ஸ்ரீ பிரகாசாவின் தாயார் காந்திஜியிடம் மேற்சொன்ன சொற்களைக் கூறினாள். ஆனால் காந்திஜியோ முற்றும் துறந்த முனிவராயிற்றே; சிரித்துக்கொண்டே, ‘பா’வுக்கு நான் சாப்பாடு போடுகிறேன், உடுக்க துணிமணி கொடுக்கிறேன். அவளை நான் கவனித்துக் கொள்கிறேன். மீண்டும் அவள் குறை கூறுகிறாளா? என்று கேட்டார்.
‘நான் ‘பா’வுக்குக் கொஞ்சம் ரூபாய் கொடுக்க விரும்புகிறேன். ஆனால் அவள் வாங்கிக்கொள்வதில்லை. வாங்க அனுமதியுங்கள்’ என்றார் அம்மையார்.
மகாத்மா இதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘இல்லை, இல்லை, ரூபாய் ‘பா’வுக்குக் கொடுக்கவேண்டாம், ஸ்ரீபிரகாசாவிடம் கொடுங்கள். ஏனென்றால் அவர் எனக்காக்க் கஷ்டப்பட்டு நிதிசேர்த்துக் கொண்டிருக்கிறார். தாங்கள் கொடுக்கவிரும்பும் பணத்தை அந்த நிதிக்கே கொடுத்துவிடுங்கள்’ என்றார். கடைசியில் அம்மையார் ‘பா’வுக்கு கொண்டுவந்திருந்த காசை அந்த நிதிக்கே கொடுத்துவிட்டார்.
1944, பிப்ரவரி 22, தனது 74 வது வயதில், மாரடைப்பு காரணமாக இறைவனடி சேர்ந்தார் கஸ்தூரிபா. காந்தி இறந்தபோது, "ஹே ராம்' என்று சொன்னதைபோன்று. அன்னை கஸ்தூரிபா இறப்பதற்கு முன் "ஆண்டவனே அபயம்.கருணை வேண்டி இறைஞ்சுகிறேன்' என்றார்.
கொள்கைகளுக்காக வாழ்ந்த மனிதர்களுடன், அவர்கள் நலனே தனது கொள்கை என அனுசரித்து, தியாகமனப்பான்மையுடன் வாழ்ந்த திருமதி. காந்தி மற்றும் திருமதி.பாரதி போன்ற பாரத தேசத்தின் பெண்மணிகள் காந்தி, பாரதியைவிடவும் போற்றுதற்குரியவர்கள்தானே?.
காந்தியின் இன்றைய முக்கியத்துவம் என்ன ?
காந்தி ஒரு ஆளுமை. ஒரு சித்தாந்தம் அல்ல. அந்த மனிதரை நாம் அறியும் போது நமது கண்கள் இந்த கலாச்சாரத்தையும் இங்குள்ள வாழ்வையும் வேறு விதமாகப் பார்க்க ஆரம்பிக்கும். அது மிக முக்கியமானது. நமது கண்கள் இப்போது நம்முடையவையல்ல. அவற்றில் உள்ள ரத்தமும் சதையும் மட்டும்தான் நம்முடையவை. பார்வை இரவல் வாங்கப்பட்டது. இரவல் பார்வையும் இரவல் குரலுமாக எவரும் இந்நாட்டு மக்களை அணுகி விட முடியாது
- ஜெயகாந்தன்:
அக்டோபர் 2, காந்தி பிறந்த தினம்.
வாழ்க நீ எம்மான்! இந்த
வையத்து நாட்டிலெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டு
பாழ்பட்டு நின்ற தாமோர்
பாரத தேசம் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி
மகாத்ம! நீ வாழ்க! வாழ்க!
- பாரதியார்.
தாக்கமும், ஆக்கமும்
இன்பா
Thursday, October 1, 2009
திருமதி.காந்தி
Posted by கடை(த்)தெரு at 8:22 PM
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
This is nice post.. I think inba is back :)
Good Writing.. All the best Best Kadaikaarare..!! :)
//கொள்கைகளுக்காக வாழ்ந்த மனிதர்களுடன், அவர்கள் நலனே தனது கொள்கை என அனுசரித்து, தியாகமனப்பான்மையுடன் வாழ்ந்த திருமதி. காந்தி மற்றும் திருமதி.பாரதி போன்ற பாரத தேசத்தின் பெண்மணிகள் காந்தி, பாரதியைவிடவும் போற்றுதற்குரியவர்கள்தானே?.//
இதுபோல் மனித தெய்வங்கள் போற்றுதலுக்குரியவர்கள்... இதுதான் தாய்மை நிலை என்பது... ஆனால் இன்று 5 நிமிட சுகத்துக்கு தன்னையும் அழித்துக்கொண்டு பெற்ற பிள்ளைகள் கணவர்கள் கொலைசெய்யும் பெண்உருவில் உள்ள மிருகங்களும் நம் நாட்டில் பெறுகிவிட்டது என்பது தான் வேதனை
Post a Comment