Thursday, June 30, 2011

ஜூலை மாதம் - சிலிர்க்கவைக்கும் வரலாற்றுச் சுவடுகள்1806 ஜூலை 10.

அன்று - சரியாக இருநூறு வருடங்களுக்கு முன்பு - வேலூர்க் கோட்டையின் மதில் சுவர்களுக்கு மேல் நிலவு பிரகாசித்துக்கொண்டிருக்க, அதிகாலை 2 மணிக்கு இந்தியச் சிப்பாய்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் காவல் படையுடன் கோரமான கிளர்ச்சி ஒன்றில் இறங்கினார்கள். அலறல்களும் துப்பாக்கிச் சூட்டின் சத்தமும் அமைதியைச் சிதைக்க, அவர்கள் ஆங்கிலேய அதிகாரிகளைச் சுட்டார்கள்; ஆங்கிலேயரின் பாசறைகளுக்குள் சுட்டார்கள்; அவர்களது மருத்துவமனையில் இருந்த நோயாளிகளைக் கொன்று குவித்தார்கள். அத்தாக்குதலில் 14 பிரிட்டிஷ் அதிகாரிகளும் 100 சிப்பாய்களும் இறந்தார்கள்.

14 மைல் தள்ளி ஆற்காட்டிலிருந்து விரைந்து வந்த கர்னல் ராபர்ட் ராலோ கில்லெஸ்பியின் படையினர் காலை 9 மணிக்கு ஏவிய எதிர்த் தாக்குதலில் 350 இந்தியச் சிப்பாய்கள் கொல்லப்பட்டார்கள். சில பிரிட்டிஷ் தகவல்களின்படி, இறந்த இந்தியச் சிப்பாய்களின் எண்ணிக்கை 800.

வரலாற்றுப் பதிவுகளில் அதிகம் இடம்பெறாத இந்த நிகழ்வுதான் காலனிய இந்தியாவில் வளர்ந்துவந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிராக நடந்த முதல் பெரும் கிளர்ச்சி. இந்த நிகழ்வால் சென்னை மாகாண கவர்னர் வில்லியம் பென்டிங்க் பிரபுவுக்கு வேலை போனது.

14ஆம் நூற்றாண்டின் இறுதியில் விஜயநகர சாம்ராஜ்யம் ஐரோப்பிய வடிவமைப்பில் கட்டிய, முதலைகள் நிறைந்த அகழியுடன்கூடிய வேலூர்க் கோட்டையை 1677இல் சிவாஜி கைப்பற்றினார்;

1768இல் அதைக் கிழக்கிந்தியக் கம்பெனி தனது ராணுவத் தளமாக்கிக்கொண்டது. கிளர்ச்சி நடந்த சமயத்தில் அந்தக் கோட்டையில் மேன்மை தங்கிய மன்னரின் 69ஆம் ரெஜிமென்ட், 1ஆம் பட்டாலியனின் ஆறு கம்பெனிகள், 1ஆம் ரெஜிமென்ட், 2ஆம் பட்டாலியனின் மொத்தப் படையினர், 23ஆம் ரெஜிமென்ட் எல்லோரும் சேர்ந்து 1,500 இந்தியச் சிப்பாய்களும் 370 ஆங்கிலேயர்களும் இருந்தார்கள்.

மோசமாக நடத்தப்பட்டது, முன்பிருந்த அந்தஸ்தை இழந்தது, மிகச் சுமாரான சம்பளம் ஆகியவற்றால் தக்காணத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இந்தியச் சிப்பாய்களுக்கு ஏற்கனவே அதிருப்தி எழுந்துகொண்டிருந்தது. ஆனால் திடீரென நடந்த அந்த ஆக்ரோஷத் தாக்குதலுக்கு வேறு சில தூண்டுதல்கள் இருந்தன.

சிப்பாய்களுக்காகச் சர்ச்சைக்குரிய புதிய தலைப்பாகை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியர்கள் அதை வெள்ளைக்காரன் தொப்பியாகத்தான் கருதினார்கள். நெற்றியில் ஜாதி அடையாளங்களை வரைந்துகொள்ளுதல், கடுக்கன் அணிதல், தாடி, மீசை வைத்துக்கொள்வது ஆகியவை பற்றிப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்த ராணுவக் கட்டுப் பாட்டு நெறிமுறைக்குச் சென்னை ராணுவத்தின் (Madras Army) தலைவர் சர் ஜான் க்ராடாக் 1806 மார்ச் 13 அன்று ஒப்புதல் வழங்கினார்.

திப்பு சுல்தானின் குடும்பத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் - 12 மகன்களும் 8 மகள்களும் - கிளர்ச்சிக்கு அரசியல் மற்றும் வரலாற்று ரீதியான பலத்தைக் கொடுத்தார்கள். 1799இல் ஸ்ரீரங்கப்பட்டினம் கைவிட்டுப் போனதிலிருந்து இவர்கள் வேலூர்க் கோட்டையின் பல்வேறு மஹால்களில் தங்கியிருந்தார்கள். தங்கள் உன்னத அந்தஸ்தை இழந்துவிட்டிருந்தாலும் வெளித் தொடர்பு இல்லாமல், அரண்மனைச் சுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

இக்கிளர்ச்சியைப் பதிவுசெய்த முதல் வரலாற்றாசிரியர் எஸ்.எஸ். ஃபர்னெல் என்பவர். த ம்யூட்டினி ஆஃப் வேலூர் என்னும் அவரது புத்தகத்தின் சில பகுதிகள் மெட்ராஸ் ஆர்க்கைவ்ஸில் இன்றும் எஞ்சியிருக்கின்றன.

3,000க்கும் மேற்பட்ட மைசூர்க்காரர்கள் (பெரும்பாலும் 'முகம்மதியர்கள்') வேலூர் இளவரசர்களின் இருப்பிடமான பின், வேலூரிலும் அதன் சுற்றுப் பகுதிகளிலும் குடியேறினார்கள் என்று ஃபர்னெலின் பதிவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் கர்நாடகப் போர்களில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்த பின் கிழக்கிந்தியக் கம்பெனி பல 'உள்நாட்டுச் சிப்பாய்களை' வேலையில் சேர்த்துக் கொண்டது. இவர்களில் திப்புவின் முன்னாள் சிப்பாய்கள் - குறிப்பாக அதிகாரிகள் - கணிசமான எண்ணிக்கையில் இருந்தார்கள். திப்புவின் வாரிசுகள் வேலூர்க் கோட்டையில் இருந்தது அவர்கள் தங்கள் முன்னாள் எஜமானர்களின் போராட்டத்தில் இணைந்துகொள்ள ஒரு முக்கியக் காரணமாக இருந்தது.

கிளர்ச்சி தொடங்கச் சில மாதங்களுக்கு முன் மைசூரிலிருந்து வந்த முகம்மதியப் பக்கிரிகள் சிலர் வேலூரின் தெருக்களிலும் கடைவீதிகளிலும் வெள்ளையர்களுக்கு எதிராகக் கோஷமிட்டபடி திரிந்துகொண்டிருந்தார்கள். நாடோ டிகளாக வாழ்ந்த அவர்களுக்கு 18ஆம் நூற்றாண்டிலிருந்து ஹோல்கர்கள், சிந்தியாக்கள், ஜெய்ப்பூர் மன்னர்கள் ஆகிய பல்வேறு இந்திய ராணுவங்களுடன் வரலாற்று ரீதியான தொடர்பு இருந்தது. யாருக்கு வேண்டுமானாலும் கூலிப்படையாகச் செயல்பட்ட பக்கிரிகளுக்குக் கட்டுப்பாடோ டு இயங்கிய பிரிட்டிஷ் ராணுவத்தில் இடமிருக்கவில்லை. 1805லிருந்து வேலூரில் காணப்பட்ட பக்கிரிகள் கிளர்ச்சியைத் தூண்டினார்கள்.

திப்புவின் முன்னாள் கூட்டாளிகளான அப்துல்லா கான், பீர்ஜாதா ஆகியோரின் தலைமையில் பக்கிரிகள் வேலூரில் ஆங்கிலேயர்களைக் கேலிசெய்தும் அவர்களுக்கு அழிவுக் காலம் நெருங்கிவிட்டதாகப் பிரகடனம் செய்தும் பொம்மலாட்டங்களை நடத்தினார்கள்; புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதற்காக, ஜாதி மற்றும் மத "மாசுபாட்டிற்கு" வழிவகுக்கும் வகையில் தோலாலான தலைப்பாகைப் பட்டையும் (cockade) மார்பில் சிலுவை போலிருந்த turnscrew ஒன்றையும் அணிந்ததற்காகப் பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஏளனம்செய்தார்கள். இதனால் காலப்போக்கில் எல்லாச் சிப்பாய்களும் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று பக்கிரிகள் அறிவித்தார்கள். மத மாற்றத்தை இந்துச் சிப்பாய்களைவிட முன்பு ஆளும் வர்க்கமாக இருந்த முகம்மதியச் சிப்பாய்கள் வெறுத்ததுபோல் தெரிந்தது.

லண்டனின் இந்தியா ஆஃபீஸ் நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் பெருமளவு அடிப்படையாகக் கொண்ட மாயா குப்தாவின் ஆராய்ச்சிப்படி, 1806 மே 6 அன்று 4ஆம் ரெஜிமென்ட்டின் இரண்டாம் பட்டாலியனைச் சேர்ந்த 29 சிப்பாய்கள் புதிய தலைப்பாகையை அணிய மறுத்தார்கள். தங்கள் எதிர்ப்பை மறுநாளும் தொடர்ந்த அவர்கள், தலைப்பாகை அணியாமல் கைக்குட்டை போட்டுக்கொண்டார்கள்; ஆங்கிலேய அதிகாரிகளை 'நாய்கள்' என்று ஏசினார்கள்.

கீழ்ப்படியாத சிப்பாய்கள் சென்னையில் சிறைவைக்கப்பட்டு ராணுவ விசாரணை செய்யப்பட்டார்கள். வருத்தம் தெரிவித்து எதிர்ப்பைக் கைவிட்ட சிப்பாய்களுக்குத் தண்டனை இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்த இரண்டு ஹவில்தார்கள் - (ஒருவர் முஸ்லிம், ஒருவர் இந்து) - 900 கசையடிகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். ஜூன் மாதம் வேலூர் அருகிலுள்ள வாலாஜாபாதிலும் தலைப்பாகையை எதிர்த்துப் பெரும் போராட்டம் ஒன்று நடந்தது.

ஜூன் 17 அன்று 1ஆம் ரெஜிமென்ட் சிப்பாய் முஸ்தஃபா பெக் கிளர்ச்சி நடக்கத் திட்டம் தீட்டப்படுவது பற்றித் தலைமை அதிகாரி லெப். கர்னல் ஃபோர்ப்ஸிடம் போய்ச் சொன்னார். ஃபோர்ப்ஸ் இந்திய அதிகாரிகளிடம் அது குறித்துக் கருத்துக் கேட்க, அவர்கள் அது சாத்தியமில்லை என்று சொன்னதோடு பெக்கிற்குப் புத்தி பேதலித்துவிட்டதாகச் சொன்னார்கள். பெக் இடமாற்றப்பட்டுச் சிறைவைக்கப்பட்டாலும், பிறகு அவருக்கு 7,000 ரூபாய் சன்மானமும் ஒரு சுபேதாருக்குரிய ஓய்வூதியமும் வழங்கப்பட்டன. கிளர்ச்சியாளர்கள் - குறிப்பாக அதிகாரிகள் - மைசூர் ஆட்சியை மீண்டும் நிறுவும் நோக்கத்தில் போலிகர்கள் (தக்காண நிலப் பிரபுக்கள்), ஹோல்கர்கள், மராட்டியர்கள், ஆட்சியை இழந்த ஹைதராபாத் மன்னர்கள் ஆகியோர் மட்டுமின்றிப் பாண்டிச்சேரியில் இருந்த பிரெஞ்சுக்காரர்களுடனும் தொடர்புவைத்திருந்ததாகப் பின்னாளில் கணிக்கப்பட்டு சீக்ரெட் சண்ட்ரீஸ் (Secret Sundries) என்னும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகளில் பெரும் பாலானவற்றில் குறிப்பிடப்படுகின்றன. அவர்கள் ஜூலை 14ஐத்தான் ஒருங்கிணைந்த கிளர்ச்சிக்கான தேதியாகக் குறித்திருந்தார்கள்; ஆனால் பெக்கின் துரோகம் கிளர்ச்சியை அதற்கு முன்பே நடத்தச் செய்தது.

திப்புவின் மூன்றாம் மகன் மொஹியுதீன், நான்காம் மகன் மொய்ஸுதீன் தவிர மூத்த மகன் ஃபத்தே ஹைதரும் அந்தக் கிளர்ச்சியைச் சிந்தித்து உருவாக்கிச் செயல்படுத்திய முக்கியமான நபர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். ஜூலை 10 அன்று கிளர்ச்சியாளர்கள் வேலூர்க் கோட்டையைக் கட்டுக்குள் கொண்டுவந்த சில நாள்களில் கோட்டையில் திப்பு சுல்தானின் கொடியை ஏற்றினார்கள். கிளர்ச்சி நிறைவு பெற்ற பின் சிப்பாய்களின் சம்பளம் இரண்டு மடங்காக்கப்படும் என்று மொய்ஸுதீன் உறுதியளித்தார்.

வேலூர்க் காவல் படையின் தலைமை அதிகாரி கர்னல் ஃபேன்கோர்ட்டும் 23ஆம் ரெஜிமென்ட்டின் தலைமை அதிகாரி லெப்டினன்ட் கெராஸும் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட, பல அதிகாரிகள் தப்பித்துச் சென்று ஒளிந்துகொண்டார்கள்; மிக அருகில் ஆற்காட்டில் இருந்த பிரிட்டிஷ் ராணுவத் தளத்திற்குத் தகவல் அனுப்பினார்கள்.

படுகொலை முடிந்து கோட்டையைக் கைப்பற்றியதும் சிப்பாய்கள் திருடுவதில் இறங்கினார்கள். ஆங்கிலேயர் வசிப்பிடத்தையும் (paymaster's) அலுவலகத்தையும் அவர்கள் சூறையாடினார்கள். சுமார் 7 மணியளவில் பொது மக்கள் பலரும் கோட்டைக்குள் நுழைந்திருந்தார்கள்.

ஒரு பிரிட்டிஷ் மதிப்பீட்டின்படி அந்தக் கிளர்ச்சியில் 5,48,429 பகோடாக்கள் (தங்க நாணயங்கள்) திருடப்பட்டன. சிப்பாய்களும் பொது மக்களும் சூறையாடிக்கொண்டிருக்கையில் ஆற்காட்டிலிருந்து கர்னல் கில்லெஸ்பியின் தலைமையில் 19ஆம் டிராகூன்ஸும் 7ஆம் குதிரைப் படையும் கோட்டைக்குள் நுழைந்தன.

கோட்டையின் நான்கு வெளி வாயில்களில் மூன்று கவனிப்பாரற்று இருந்ததால் ஆங்கிலேயப் படைகளுக்குக் கோட்டைக்குள் நுழைவது சிரமமாக இருக்கவில்லை. கர்னல் கென்னடி கூடுதல் படையினருடன் வந்ததாலும் இந்தியச் சிப்பாய்களின் ஆயுத பலம் குறைந்துவந்ததாலும் கிளர்ச்சியாளர்கள் கோட்டையை எவ்வளவு சுலபமாகக் கைப்பற்றினார்களோ அவ்வளவு சுலபமாக ஆங்கிலேயப் படைகள் கோட்டையை மீட்டன. எட்டு மணி நேரத்திற்குள் அத்தனை அமர்க்களமும் முடிந்துவிட்டிருந்தது. கில்லெஸ்பியும் அவரது ஆட்களும் இளவரசர்களையும் திப்பு குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் பிழைத்துப் போக விட்டார்கள்; 1807 ஜனவரி வாக்கில் இளவரசர்களின் மொத்தப் பரிவாரமும் தொலைதூரத்திலிருந்த கல்கத்தாவிற்குக் குடிபெயர்ந்தது.

787 சிப்பாய்கள் தப்பித்துப்போனதாகவும் 446 சிப்பாய்கள் பெரும்பாலும் சேலம், மதுரை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கைப்பற்றப்பட்டார்கள் எனவும் பிரிட்டிஷ் ராணுவப் பதிவுகள் சொல்கின்றன. "தண்டனை விதிக்கப்பட்ட ஆறு கிளர்ச்சியாளர்கள் பீரங்கிகளால் சிதறடிக்கப்பட்டனர், ஐவர் மஸ்கெட்களால் சுடப்பட்டனர், எட்டு பேர் தூக்கிலிடப்பட்டனர்" என்று சீக்ரெட் டெஸ்பேட்ச்சஸ் என்னும் ஆவணத்தின் 33ஆம் தொகுதி தெரிவிக்கிறது. இந்தத் தண்டனைகள் கோட்டையின் வடக்குப் பகுதியில் நிறைவேற்றப்பட்டன.

வட ஆற்காடு மாவட்டக் கையேட்டில் [Manual of the North Arcot District (1898)] மாஜிஸ்திரேட் ஆர்தர் சி. ஃபாக்ஸ் அடக்க முடியாத சந்தோஷத்துடன் இவ்வாறு குறிப்பிடுகிறார்:

"சிப்பாய்களைப் பீரங்கிகளால் சிதறடித்து மரண தண்டனை நிறைவேற்றியது மிக ஆழமான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தண்டனை நிறைவேற்றும் இடத்திற்கு ஏராளமான பருந்துகள் வந்தன; அந்த ரத்தக் களறியான விருந்திற்கு ஆவலுடன் காத்திருந்ததுபோல் சிறகடித்துக் கிறீச்சிட்டன; பிறகு பெருத்த வெடியோசை எழுந்து அவர்களது உடல்கள் துணுக்குகளாகச் சிதற, கழுகுகள் பல துணுக்குகள் தரையைத் தொடுவதற்கு முன் பாய்ந்து கொத்திச் சென்றன. பணியில் இருந்த உள்நாட்டுத் துருப்புகளும் தண்டனையைப் பார்க்கத் திரண்டிருந்த கூட்டமும் இந்தக் காட்சியைப் பார்த்துப் பீதியில் கூவினார்கள்."

இது போன்ற காட்சிகள் தென்னிந்தியர்களின் மனத்தில் ஏற்படுத்திய பயங்கரப் பாதிப்பில்தான் அவர்கள் 1857 கிளர்ச்சியில் பங்கேற்காமல் தவிர்த்தார்கள்.

"வேலூர்க் கிளர்ச்சியை வரலாற்றறிஞர் எரிக் ஹாப்ஸ்பாம் வர்ணித்த 'ஆதி தேசியவாதம்' (proto-nationalism) என்ற அடிப்படையில் புரிந்துகொள்ளலாம். ஆதி தேசியவாதத்தில் மொழி, இனம், பழக்க வழக்கங்கள், உடை முதலானவற்றில் உள்ள வேறுபாடுகளால் எதிர்ப்பு கிளம்புகிறது" என்கிறார் அதிகாரபூர்வமற்ற வேலூர் இருநூறாண்டு நினைவுக் குழுவிற்காக வேலூர்க் கிளர்ச்சியைப் பற்றி ஒரு புத்தகத்தைத் தொகுத்துவரும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் கே.ஏ. மணிகுமார்.

இந்தச் சம்பவம் ஏன் நாட்டு மக்கள் மனத்தில் ஓர் ஓரத்திலேயே இருந்திருக்கிறது என்று சென்னை வளர்ச்சி ஆய்வுகள் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி கூறுகிறார்:

"தமிழ்நாடு எப்போதுமே தேசியவாத வரலாற்று நூல்களில் ஓர் ஓரத்தில்தான் இருந்துவந்திருக்கிறது. வடக்கும் வங்காளமுமே பெருமளவு இடத்தைப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. 1920களில் பெரியார் தலைமையில் தமிழ்நாடு மேற்கொண்ட "தேசிய எதிர்ப்பு"ப் போக்கு, அதைத் தொடர்ந்து இந்தி எதிர்ப்புப் போராட்டம், தி.மு.க.வின் எழுச்சி ஆகியவை அப்படி ஓரங்கட்டப்படுவதற்கு ஒரு நியாயத்தைக் கொடுப்பது போலிருந்தன. வேலூர்க் கிளர்ச்சி பற்றிய மௌனத்தை இந்தப் பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டும்." வேலூர்க் கிளர்ச்சி முழுக்க முழுக்க ஒரு ராணுவக் கிளர்ச்சியாகவே இருந்தது என்கிறார் வேங்கடாசலபதி.

"அது பாசறைகளில் தொடங்கிப் பாசறைகளில் மட்டுமே நடந்தது. ஆனால் 1857 சம்பவம், ஒரு கிளர்ச்சியாகத் தொடங்கி வட இந்தியாவில் பல இடங்களில் பரவி ஒரு உள்நாட்டுக் கிளர்ச்சியானது" என்கிறார் அவர்.வேலூர்க் கோட்டையில் கிளர்ச்சிக்கான திட்டம் தோன்றிய இடமான திப்பு மஹால்,இப்போது இந்த இடம் போலீஸ் பயிற்சிக் கல்லூரியின் ஒரு பகுதி ஆகியிருக்கிறது. முன்பு இங்குத் தமிழகக் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் பயிற்சி பெற்றுவந்தார்கள் - ஒரு காலத்தில் மன்னர்கள் வாழ்ந்த இடத்தில் இவர்கள் குளித்துக்கொண்டும் மலம் கழித்துக்கொண்டும் இருந்தார்கள்.


வேலூர்க் கோட்டையில் இன்னொரு கிளர்ச்சியும் நடந்தது. திப்பு மஹாலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளில் 43 பேர் 1995 ஆகஸ்ட் 15ஆம் தேதி அகழி வழியாக 153 அடி நீளச் சுரங்கம் ஒன்று தோண்டித் தப்பித்தார்கள். தமிழகக் காவல் துறை அதில் அவமானப்பட்டுத் திப்பு மஹாலில் யாரும் நுழைவதற்குத் தடை விதித்திருக்கிறது.

வேலூர்க் கிளர்ச்சியின் இருநூற்றாண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ஆர்ப்பாட்டமின்றித் தொடங்கும் இந்தத் தருணத்தில், வரலாறு படைக்கப்பட்ட அந்த இடத்தை எட்டிப் பார்க்கக்கூடத் தமிழகப் பொதுமக்களுக்கு வாய்க்காமல் போகலாம்.

(நன்றி : அவுட்லுக் மற்றும் திரு.திவாகர் ரங்கநாதன்)

Saturday, June 25, 2011

6 - ஆம் அறிவு

கடைத்தெருவின் சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இன்றைய மூன்றாம் பகுதியில்,உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான Emma Maersk பற்றிய சில குறிப்புகளை காண்போம்.அறிவுச் சரக்கு : Emma Maersk - படத்தில் இருக்கும் கப்பலின் பெயர். இன்று உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் இதுதான்.

இந்த கப்பல் பற்றிய சில குறிப்புகள்.

Emma Maersk கப்பல் உருவான நாடு, டென்மார்க்.

5000 பேர் பயணம் செய்யக்கூடிய அமரிக்க விமானம்தாங்கி கப்பலை விட,இந்த கப்பல்
பெரியது.

15000 கொள்கலன்கள்(containers), 13 பணிக்குழுக்கள் (crew) ஆகியவை இதன் கொள்ளளவு.

இதன் கொள்ளளவு காரணமாக, பனாமா மற்றும் சுயஸ் கால்வாய் வழியாக பயணம் செல்லமுடியாது. உயர்மட்ட கடல் வழி மட்டுமே இக்கப்பலால் செல்லமுடியும்.

கப்பலின் கட்டுபாட்டு அறைக்கு மொத்தம் 10 தளங்கள்(floors) உள்ளன.

ஒரே சமயத்தில் இந்த கப்பலில் 11 பளுதூக்கி கருவிகளால்(Cranes), சரக்குகளை ஏற்றவோ இறக்கவோ முடியும்.

இந்த கப்பலின் நீளம் : 1302 அடிகள்...அதாவது 396.85 மீட்டர்கள்.அகலம் : 207 அடிகள்...அதாவது 63.1 மீட்டர்கள்.

இந்த கப்பலின் சரக்குகள் கொள்ளளவு 123,200 டன்கள்.

இந்த கப்பலை இயக்கம் இயந்திரம் 108 920 குதிரை சக்தி கொண்டது. இந்த இயந்திரத்தின் அளவு : 26.7 மீட்டர் நீளம் மற்றும் 13.2 மீட்டர் உயரம்.
இதன் எரிபொருள் கொள்ளளவு : மணிக்கு 6,275 லிட்டர்கள்.

இந்த கப்பலின் அடிப்பரப்பில் சிலிகான் பெயிண்ட்டை பூசி இருக்கிறார்கள். இது கப்பலுக்கு கடல் நீருக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 317,000 கேலன்கள் வரை டீசலை சேமிக்கமுடிகிறது.

இந்த சிறப்பு இயந்திரத்தை ஒரு மீட்டர் சுற்றளவை கொண்ட பிஸ்டன் தண்டுகளை(rods) கொண்டு செய்து இருக்கிறார்கள்.


ஒரு கப்பலின் வேகத்தை Cruise Speed என்பார்கள். இதன் அளவுகோல் நாட்(knot).ஒரு சிறந்த சரக்கு கப்பலின் Cruise வேகம் 18 - 20 நாட். ஆனால், இந்த கப்பலின் நாட் 31 .

இந்த கப்பலின் அதிகபட்ச வேகம்...மணிக்கு 55.80 கிலோமீட்டர்.

சீனாவில் இருந்து கலிபோர்னியா துறைமுகத்தை இந்த கப்பலால் நான்கே நாட்களில் சென்று சேர்ந்துவிட முடியும்.

கப்பல் தனது முதல் பயணத்தை தொடங்கிய வருடம், செப்டம்பர் 8 , 2006 .

இந்த கப்பலின் கட்டுமான செலவுகள் :145,000,000 அமெரிக்க டாலர்கள்.

Emma Maersk - சோமாலிய கொள்ளையர்கள் கையில் சிக்காமல் இருக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வோம்.

அறிவுக்கு அதிர்ச்சி:

மனிதன் மனம் விட்டு சிரிக்கும்போதெல்லாம், அவனது ஆயுட்காலம் கூடுகிறது என்பது அறிவியல் உண்மை.

ஆனால், சமிபத்திய ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டு இருக்கிறது.

அது, ஒரு குழந்தை ஒரு நாளைக்கு சுமார் 400 முறைகள் வரை சிரிக்கின்றது. ஆனால், வயது வந்த மனிதன் நாளொன்றுக்கு வெறும் 15 முறைகளே சிரிக்கிறான் என்கிறது.

இதைதான் கவிஞர் கண்ணதாசன் "பிள்ளையாய் இருந்துவிட்டால் இல்லை ஒரு தொல்லையடா" என்றானோ.

அறிவுக்கு அழகு:
-இன்பா

Thursday, June 23, 2011

தள்ளாமை,இயலாமை,முடியாமை


சென்ற வாரத்தில் ஒரு விடுமுறை நாள்.

என் நண்பர்கள் அறைக்கு சென்று இருந்தேன். அவர்கள் ரூம் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டு இருந்த மருத்துவ நிகழ்ச்சி ஒன்றில், ஒரு சித்த வைத்திய டாக்டர் என்று ஒருவர் இவ்வாறு பேசினார்.

"என்னுடைய முப்பாட்டானர் சத்யராஜ் இமயமலையில் தவம் செய்தவர். பின்னர் சேலம் வந்து, பல வருடங்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த வைத்திய சாலையை தொடங்கினார். பின்னர் எனது பாட்டனார் ராமராஜ் அவரது ஓலைச்சுவடிகளை (!?) கொண்டு, ஆராய்ச்சியை தொடர்ந்து நவீன படுத்தினார். பின்னர் எனது தந்தையாரும், நானும் மக்கள் சேவையே பெரிது என மருத்துவ சேவையை செய்து வருகிறோம்" என்கிற ரீதியில் பேசினார்.

ஆராய்ச்சி, ஓலைச்சுவடிகள், மக்கள் சேவை...முடியலடா சாமி.

வரிசையாக முப்பாட்டனார்,பாட்டனார்,தந்தையார் என படங்களை காட்டினார்கள். இந்த டாக்டரே வெவ்வேறு கெட்டப்புகளில் இருக்கிறாரா என்று ஒரு சந்தேகம் எனக்கு வந்தது.

இவர் பேசப்பேச,கஜுரஹோ காமகோவில் சிற்பங்கள் 'கிராபிக்ஸ்' மூலம் பின்னணியில் நகர்வதாக செட்டப் வேறு.

இவர்களுக்கு ஏற்றதுபோல சித்த வைத்திய சாலைகளுக்கு,மலையடிவார பகுதிகளை எப்படித்தான் வளைத்துபோட்டார்களோ?.

அதற்க்கு பின்னர் அழாதகுறையாக அவர் "தமிழ்நாட்டில் உள்ள என் குழந்தைகள் எல்லாம் என்னிடம் வந்து அழுகிறார்கள். மகன்களே, என்னிடம் வாங்க. உங்க குறையை நான் தீர்த்து வைக்கிறேன்" என்றார்.

"ஒண்ணும் புரியலையே. என்ன சொல்றார்?" என்றேன் என் நண்பனிடம்.

அவன் சிரித்தபடி சொன்னான்.

"குழந்தைகள் என்று இவர் சொன்னது திருமணமான பெண்களை. குறைபாடு உள்ள மகன்கள் என்று குறிப்பட்டது திருமணமான ஆண்களை. இப்போது புரிகிறதா?".

"டாக்டரின் விஜயம்" என்ற பெயரில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா ஊர்களிலும், ஏதாவது ஒரு லாட்ஜில் மக்களை சந்திப்பதாக விளம்பரங்கள் வேறு.

விட்டால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எங்கள் சித்த வைத்திய சாலைகளுக்கு கிளைகள் இருக்கிறது என்று சொல்வார்கள் போல.
(என்ன ஒரு வாழ்க்கை. என்ன ஒரு வேலை. நாமும்தான் வாழறோம்!)

நிகழ்ச்சியின் முடிவில்,ஒரு தம்பதி நம் டாக்டருக்கு அருகே அமர்ந்து கொண்டு, தங்களின் "சாதனை(?)" கதையை ஒப்பித்துகொண்டு இருந்தார்கள்.

டிவி தொடர்களுக்கு இணையாக, எல்லா சேனல்களிலும் குறிப்பிட்ட நேரங்களில், இவரை போன்று ஏதாவது ஒருவர், தான் ஒரு சித்த வைத்திய நிபுணர் என்று சொல்லிக்கொண்டு, என்னமோ ஒரு 'சின்ன வாத்சயனார்' என்று தன்னையே நினைத்துகொண்டு ஆண்மைகுறைபாடுகளுக்குக்கும், தாம்பத்திய பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

போதாகுறைக்கு, பத்திரிக்கைகளிலும் ஒரு பக்க விளம்பரம்....திருக்குறள் போன்று, தள்ளாமை,இயலாமை,முடியாமை என்ற தலைப்பில்.

அது என்னமோ தெரியல, என்ன மாயமோ தெரியல, ஜூவி, நக்கீரன் போன்ற அரசியல் பத்திரிக்கைகளில்தான் இது போன்ற விளம்பரங்கள் அதிகம் வருகின்றன. பெரும்பாலும் அவற்றை ஆண்கள் படிப்பதாலா, இல்லை, அரசியல்வாதிகள் எல்லாருமே ஆண்மையை(?) அடிக்கடி பயன்படுத்துவதாலா?
-என்று ஆராய வேண்டும். (அட, நானும் ஒரு ஆராய்ச்சியாளன்).

இந்த டாக்டர் அடிக்கடி குறிப்பிட்டு, பார்ப்பவர்களை(ஹி ஹி என்னையும்தாங்க!) பயமுறித்திய வார்த்தைகள், அதாவது இதுபோன்று சித்தா டாக்டர்களின் பிசினஸ் டெக்னிகல் வார்த்தைகள்...

'சொப்பன ஸ்கலிதம்', 'கைபழக்கம்', 'சுயஇன்பம்' போன்றவை.

"தமிழ் நாட்டு இளைஞர்கள் கைப்பழக்கத்திற்கு அடிமையாகி, சீரழிந்து சின்னா பின்னமாகி வருகிறார்கள். சுய இன்பம் அனுபவிப்பதால், ஆண்மை இழப்பு ஏற்படும். மனைவியைத் திருப்திப்படுத்த முடியாது. உச்சி முதல் உள்ளங்கால் வரையான நாடி, நரம்புகள் அனைத்தும் ஒரு சீராக வலுவிழக்கும்"

-இதைபோல இவர்கள் பேசுவதெல்லாம் எந்த அளவுக்கு நிஜம்??

இது பற்றிய கேள்விகளுக்கு, முறைப்படி படித்து டாக்டர் பட்டம் பெற்று, செக்ஸ்சாலாஜிஸ்ட் ஆக பணிபுரியும் ஒரு மருத்துவர் சொன்ன விளக்கங்கள் இங்கே..

முதலில் சுயஇன்பம்,

சுய இன்பம் என்பது ஒரு வியாதி அல்லது குறைபாடு இல்லை. அதற்க்கு அடிமையாக இருக்க கூடாது. அவ்வளவே என்கிறார் இவர்.

"Masturbation is a Healthy Sexual Behaviour. நீ சுய இன்பம் செய்யவில்லை என்றால்தான் குறைபாடு இருப்பதற்கான வாய்ப்புகளுண்டு. செய்கிறாய் என்றால் You are sexually perfectly alright. 95% ஆண்கள் சுய இன்பம் அனுபவிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. அப்படியானால் 100க்கு 95 பேருக்குக் குழந்தை பிறக்காமல் அல்லவா போக வேண்டும். அப்படி இல்லையே. துணையுடன் வாரமிருமுறை உறவு கொண்டால் தீங்கில்லை என்று சொல்லும் உன்னுடைய அந்த மருத்துவம் (சிவராஜ்), அதே செயலை திருமணத்துக்கு முன்பு துணையில்லாமல் செய்து கொண்டால் மட்டும் எப்படித் தவறென்று சொல்ல முடியும்? "

அடுத்ததாக சொப்பன ஸ்கலிதம்...அதாவது தூக்கத்தில் விந்து வெளியாதல்.

"வளரும் இளைஞனின் உடலில் குறிப்பிட்ட பருவத்தில் உற்பத்தியாகத் தொடங்கும் உயிரணுக்கள், முதல் முறை வெளியாவதற்கு இயற்கையே ஏற்படுத்தியிருக்கும் ஒரு முறைதான் இந்த சொப்பன ஸ்கலிதம். சரியாகச் சொன்னால் பெண்கள் ருதுவாதலை ஒத்த ஒரு ஆண் பூப்பெய்தல். ஆங்கில மருத்துவம் இதை Nocturnal Emission என்கிறது. துளி கூட இதனால் உடல் நலத்திற்கோ, குழந்தை பெறுதலுக்கோ பாதிப்பில்லை. இளைஞன் உடலுறவுக்குத் தயாராகி விட்டதற்கு ஒரு alerting mechanism தான். முதல் முறை மட்டுமல்ல. வாழ்வின் எந்தக் காலகட்டத்திலும் இது ஏற்படலாம். பயப்படத் தேவையே இல்லை".

அவர் குறிப்பிட்ட மருத்துவ விளக்கங்களை பின்வரும் சுட்டிகளில்(links) காணலாம்.

http://www.ayurvediccure.com/over_masturbation.htm
http://www.webmd.com/sex-relationships/guide/masturbation-guide
http://www.afraidtoask.com/masturbate/MedView.htm
http://en.wikipedia.org/wiki/Nocturnal_emission

அறிவியல் உண்மைகள் இப்படி இருக்க, நம் ராஜ் வகையாறக்கள் அனாவசியாமான பயங்களை மக்களிடம் வளர்த்துவிட்டு, 'துட்டு' பார்க்கிறார்கள். டிவி சேனல்களும் போட்டிபோட்டு கொண்டு இவர்களது டுபாக்கூர் நிகழ்சிகளை சமூக பொறுப்போ, அக்கறையோ துளியும் இல்லாமல் ஒளிபரப்பி வருகிறார்கள்.

"செக்ஸ் என்பது 90 சதம் மனம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி. மீதம் உள்ள வெறும் 10 சதம் மட்டுமே உடலின் பங்கு இருக்கிறது" என்கின்றன அறிவியலும் மனோத்தத்துவமும்.

புற்றீசல் போல ஆண்மை குறைபாடுகளை தீர்த்துவைக்கிறோம் என்று புறப்பட்டு இருக்கும் சித்தவைத்திய 'ராஜ்'கள் தொல்லையிடம் இருந்து பரமஹம்ச ரஞ்சிதானந்தா(!) சுவாமிகள்தான் மக்களை காப்பாற்றவேண்டும்.

சித்த வைத்தியத்தை பற்றி தவறாக கூறவில்லை. சிறப்பான முறைகள் கண்டிப்பாக சித்தவைத்தியத்தில் இருக்கின்றன. சித்தவைத்தியம் என்ற பெயரில் நம் சமுகத்தில்,டிவியில் உலா வரும் டுபாக்கூர் டாக்டர்களை பற்றியே நான் இங்கே குறிப்பிட்டு இருக்கிறேன்.

சீரியசாக விவாதிப்போம்.

உலக அளவில் இன்று நடைபெறும் குற்றங்கள் 75 சதவீதம் செக்ஸ் சம்பந்தப்பட்டவை என்கிறது ஒரு சர்வே.

இன்னொரு சர்வே இதை விட அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டு உள்ளது.

அதன்படி, பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளும், பாலியல் வக்கிரங்களும் பலமடங்கு அதிகரித்துவிட்டது என்பதே. குறிப்பாக, நம் இந்தியாவில்.

சில நாட்களுக்கு முன்னால் கூட, குமரி மாவட்டத்தில் ஒரு சிறுமியை அதிகாரிகள் சிலர் கூடி கற்பழித்துவிட்டனர் என்று செய்தி வெளியானது.

எல்.கே.ஜி குழந்தைகளுக்கு கூட, எது 'குட் டச் (good touch)' , எது 'பெட் டச் (bad touch)' என்று புரியவைக்கவேண்டிய காலகட்டத்திற்கு நாம் வந்துவிட்டோம்.

டிவி, இன்டர்நெட் என்று நம் வீட்டுக்குளேயே உலகம் வரதொடங்கிவிட்டதால், பள்ளிகுழந்தைகளுக்கு கூட செக்ஸ் சம்பந்தப்பட்ட எக்ஸ்போஷர்(exposure) மிக எளிதாக
கிடைத்துவிடுகிறது.

செக்ஸ் குற்றங்களை கட்டுப்படுத்த, செக்ஸ் பற்றிய பயங்களை போக்க நாம் என்ன செய்யவேண்டும்??

செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை,புரிதலை வளரும் பருவத்தினருக்கு ஏற்ப்படுத்துவது அவசியம் அல்லவா?

இன்று நம்மிடம் இருக்கும் ஒரே ஒரு நல்ல தீர்வு....மாணவர்களுக்கு பாலியல் கல்வி என்பதே.

-இன்பா

Tuesday, June 21, 2011

6 - ஆம் அறிவு

நமது கடைத்தெரு வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு தொடரான "6 - ஆம் அறிவு" தொடரின் இரண்டாம் பகுதி.அறிவுச் சரக்குகள் :

நமது பூமியின் எடை 6500 மில்லியன் மில்லியன் மில்லியன் டன்கள்.

உங்களுக்கு தெரியுமா? நாம் ஒவ்வொரு முறை தும்மும்போதும், நமது இதயம் ஒரு நொடி நின்றுவிடுகிறது.

ஒரு அறிவியல் ஆய்வுப்படி, ஒரு மனிதன் ஆண்டுக்கு சாராசரியாக 1460 கனவுகள் காண்கிறான்.

தலையை வெட்டினாலும், ஒன்பது நாட்கள் வரை உயிரோடு வாழக்கூடிய ஒரே உயிரினம்....வேற என்ன...கரப்பான் பூச்சி.

எஸ்கிமோக்கள் எனப்படும் பனிமலையில் வாழும் மக்கள், 'பனி' என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில், சுமார் 100 வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், "ஹலோ" என்று பொருள்தரும் ஒரு வார்த்தை கூட அவர்கள் மொழியில் இல்லை.

ஆங்கில மொழியில், அதிக விளக்கங்களை கொண்ட வார்த்தை..."SET".

ஆங்கில மொழியில் ஒரு எழுத்து கூட திரும்பவும் வாராத ஒரே 15 எழுத்துக்களை கொண்ட வார்த்தை.... "uncopyrightable".

"Sixth Sick Sheik’s Sixth Sheep’s Sick” இந்த வார்த்தைதான் ஆங்கில மொழியில் உச்சரிப்புக்கு மிகவும் கடினமான வார்த்தை.

முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட இணைய முகவரி(Domain Name).... Symbolics.com.
பதிவு செய்யப்பட்ட வருடம் மார்ச் 15, 1985.

உலகிலேயே தற்போது அதிக விலைக்கு விற்கப்பட்ட இணையதள முகவரி....Business.com.
விற்கப்பட்ட விலை : 7 . 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

அறிவுக்கு விருந்து :

அவன் ஒரு பெரிய தேவாலயத்தைப் பராமரிக்கிற வேலையில் இருந்தான்.

சிறு வயதிலிருந்தே அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த அவன் வயோதிகப் பருவத்தையும் அடைந்து விட்டிருந்தான். அந்த தேவாலயத்திற்கு ஒரு பாதிரியார் புதிதாகப் பொறுப்பேற்று வந்தார். அவர் தேவாலயத்தைப் பராமரிக்கிறவன் எழுதப் படிக்கத் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணினார். ஆனால் இவனுக்கோ எழுதப்படிக்கத் தெரியாது.

அவர் அவனை அழைத்து ஆறு மாத காலத்திற்குள் அவன் எழுதப் படிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், இல்லா விட்டால் அவன் வேலையை விட்டு நீக்கப்படுவான் என்றும் கறாராகச் சொல்லி விட்டார்.

இந்த வயதில் இனி எழுதப்படிக்கக் கற்றுக் கொள்வது கஷ்டம் என்று அவன் அவரிடம் மன்றாடிப் பார்த்தான். கல்வியறிவு மிக முக்கியம் என்று நினைத்த அவர் அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. கற்றுக் கொள் இல்லையேல் வேலை இல்லை என்று முடிவாகவே சொல்லி விட்டார். ஆனால் அவனால் கற்றுக் கொள்ள முடியவில்லை. கடைசியில் வேலையில் இருந்து நீக்கப்பட்டான்.

அவனுக்கு அந்த தேவாலய வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் தெரியாது. வேலையை இழந்து தேவாலயத்தை விட்டு வெளியே வந்த அவன் மனதில் இருந்த துக்கத்திற்கு அளவில்லை. பெரிய சேமிப்பும் கிடையாது. அவனை ஆதரிக்கிறவர்களும் இல்லை. கவலையுடன் அவன் தன் வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான். நடந்து செல்கையில் சுருட்டுப் பிடிக்கும் பழக்கம் உள்ள அவனுக்கு சுருட்டுப் பிடிக்க வேண்டும் என்று தோன்றியது. தன்னுடைய பையில் துழாவினான். சுருட்டு இல்லை.

சரி கடையில் இருந்து வாங்கிக் கொள்ளலாம் என்று எண்ணி தேடி நடந்தான். சுமார் இரண்டு மைல் தூரம் நடந்தும் அந்தப் பகுதியில் அவனால் சுருட்டு விற்கும் கடை ஒன்றைக் கூடப் பார்க்க முடியவில்லை. தன்னைப் போல் எத்தனை பேர் இந்தப் பகுதியில் சுருட்டுக் கடை இல்லாமல் அவதிப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிய அவன் உடனடியாகத் தன்னிடம் இருந்த சிறிய சேமிப்பில் அந்தப் பகுதியில் சிறியதாக ஒரு சுருட்டுக் கடை வைத்தான்.

அந்தப் பகுதியில் சுருட்டுக் கடை வேறு எதுவும் இல்லாததால் அவனுக்கு வியாபாரம் நன்றாக நடந்தது. கடையை விரிவுபடுத்தினான். வேறு பொருள்களையும் சேர்த்து விற்றான். அவன் விரைவிலேயே பெரிய பணக்காரன் ஆகி விட்டான். வங்கியிலும் அவன் கணக்கில் பெரும் தொகையை வைத்திருந்தான்.

தன் வங்கிக் கணக்கை சரி பார்க்கிற விஷயமாக ஒரு நாள் அவன் வங்கிக்குச் சென்றிருந்த போது வங்கி அறிக்கை ஒன்றில் அவன் கையெழுத்து இட வேண்டி இருந்தது. அவன் தனக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்று சொல்லி அதைப் படித்துக் காட்டும் படி வங்கி அதிகாரியைக் கேட்டுக் கொண்டான்.

திகைப்படைந்த அதிகாரி “எழுதப்படிக்கத் தெரியாமலேயே இவ்வளவு பெரிய பணக்காரர் ஆகி விட்டீர்களே, தெரிந்திருந்தால் இன்னும் என்ன ஆகியிருப்பீர்களோ” என்று சொன்னார்.

"எழுதப்படிக்கத் தெரிந்திருந்தால் தேவாலயத்தில் பணியாளனாகவே இருந்திருப்பேன்” என்றான் அவன்.


கருத்து : தேவாலயப் பணி போன போது அவன் வாழ்க்கையில் எல்லாமே தகர்ந்து போய் எதிர்காலமே கேள்விக் குறியாக நின்றது. படிக்கத் துவங்கும் வயதோ, அதற்குரிய திறமைகளோ இல்லாத அந்த முதியவன் வாழ்க்கையே அஸ்தமனமாகி விட்டது என்று நினைத்திருந்தால் அது ஆச்சரியமல்ல. தேவாலயப் பணி தவிர வேறு வேலை தெரியாத அவனுடைய அந்த நேரத்து நிலைமை பரிதாபகரமானது தான். ஆனால் சுருட்டு பிடிக்க நினைத்து அதை வாங்க கடை ஒன்றும் அப்பகுதியில் இல்லாத போது ’இந்த சின்ன விஷயத்தில் கூட என் விதி எனக்கு சதி செய்கிறதே. எல்லாம் என் நேரம்” என்று வருந்தி நிற்பதற்குப் பதிலாக அந்த சூழ்நிலையில் வாழ்க்கையின் அடுத்த நிலைக்குக் கிடைத்த அருமையான வாய்ப்பாக அவன் பயன்படுத்திக் கொண்டது அவனுடைய புத்திசாலித்தனம்.

ஆகவே அருமை வாடிக்கையாள நண்பர்களே,இது போன்ற சூழ்நிலைகள் பலருக்கு வரலாம். நல்லதாக, சௌகரியமான ஒரு வேலையில் பல வருடங்கள் வேலை செய்து அதிலேயே வாழப் பழகிய பின் எதிர்பாராமல் அந்த வேலையைப் பறி கொடுக்க நேரிடலாம். அப்படி ஒரு நிலை வரும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத போது அது ஏற்படுத்தும் எதிர்காலப் பயம் சாதாரணமானதல்ல. நின்று கொண்டிருக்கும் தரையோடு எல்லாம் தகர்வது போலக் கூட சிலர் உணரக்கூடும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பங்களில் சில உண்மைகளை நினைவு வைத்திருப்பது நல்லது.

உலகில் நாம் பிறந்திருப்பது ஒரு வேலையை மட்டுமே நம்பி அல்ல. "ஒரு வாசல் மூடி, மறுவாசல் வைப்பான் இறைவன்" என உறுதியுடன் வாழ்வோம்.

அறிவுக்கு அழகு:-இன்பா

Sunday, June 19, 2011

நெல்லை மாணவியின் உலக சாதனைசிஸ்கோ, மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் நடத்தும் ஆன் லைன் தேர்வுகளில் ஒன்றான சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்று உலக சாதனை படைத்திருக்கிறார் பத்து வயதேயான சிறுமி விசாலினி.

இந்தத் தேர்வுகளைக் கம்ப்யூட்டர் துறையில் பி.டெக், பி.இ., எம்.சி.ஏ., படிக்கும் மாணவர்களே எழுதுவார்கள். அதுவும் மிக மிகக் கடுமையாக முயற்சி செய்து.

திருநெல்வேலியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியான விசாலினி, இந்தத் தேர்வை மிக எளிதாக எழுதி வெற்றி பெற்றிருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

போன மாதம் 13- ஆம் தேதி சிசிஎன்ஏ தேர்வை எழுதி வெற்றி பெற்றிருக்கிறார் விசாலினி. இதற்கு முன்பு ஜனவரி மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் ஆன்லைன் தேர்வான எம்சிபி தேர்வை எழுதி அதிலும் வெற்றி பெற்றிருக்கிறார்.

பத்து வயதான யாரும் இதுவரை இத்தேர்வுகளை எழுதி உலக அளவில் வெற்றி பெறவில்லை.

விசாலினிக்கு மட்டும் இது எப்படி சாத்தியம்??

"உண்மைதான். எங்களுடைய மகள் விசாலினி உலக சாதனைதான் செய்திருக்கிறாள். இதற்கு முன்பு பாகிஸ்தானைச் சேர்ந்த இரிட்ஸ ஹைதர் என்ற 12 வயதுச் சிறுவன் இதுபோல இந்தத் தேர்வுகளை எழுதி உலக அளவில் சாதனை செய்தான். அவனைவிட 2 வயது குறைவான விசாலினி இப்போது சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் பூரிப்புடன் அவருடைய அம்மா சேதுராகமாலிகா.

"விசாலினி எட்டு மாதத்திலேயே பிறந்துவிட்டாள். சிசேரியன் மூலம் பிறந்தாள். சராசரி எடையைவிடக் குறைவான எடை. பிழைப்பது அரிது என்று கூடச் சொன்னார்கள். அதைவிட மருத்துவர்கள் சொன்ன இன்னொரு தகவல் எங்களை நிலைகுலைய வைத்துவிட்டது. விசாலினிக்குப் பேச்சு வராது என்ற தகவலே அது. அவளுடைய நாக்கின் அடிப்பகுதியில் ஜவ்வு இருந்தது. அது நாக்குக்குக் கீழ் உள்ள வாய்ப்பகுதியில் ஒட்டிக் கொண்டிருந்தது. அதனால் பேசுவது சிரமம் என்றார்கள். அதை அறுவைச் சிகிச்சை செய்து சரி செய்யலாம் என்றால் விசாலினியின் உடல் நிலை அறுவைச் சிகிச்சையைத் தாங்காது என்று சொல்லிவிட்டார்கள்'' என்ற அவர்,

"நல்ல வேளையாக டாக்டர் ராஜேஷைப் போய்ப் பார்த்தோம். அவர் குழந்தையின் 40 வது நாளில் இருந்து அவளிடம் எதையாவது பேசிக் கொண்டே இருங்கள், குழந்தை பேச வாய்ப்பிருக்கிறது என்றார். குழந்தைக்கு ஏதாவது புரியுமா? என்று கேட்டோம். புரிகிறதோ, இல்லையோ ஒரு நாளைக்கு 20 மணி நேரங்கள் பேசிக் கொண்டே இருங்கள் என்றார். அதன் பிறகு தினமும் நான் குழந்தையிடம் பேசிக் கொண்டே இருந்தேன். அவள் நாக்கு நன்கு பிறழுமாறு உள்ள சொற்களை அடிக்கடி கூறி வந்தேன். குழந்தை 9 வது மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டாள் '' என்கிறார்.

விசாலினியின் அப்பா கல்யாணகுமாரசாமி எலக்ட்ரிகல் காண்ட்ராக்டர். தன் குழந்தைக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யத் தயங்காதவர்.

விலாசினி பற்றி அவர், பத்திரிக்கையாளர்களிடம் விரிவாக பேசினார்.

"தொடர்ந்து நாங்கள் டாக்டர் ராஜேஷிடம் விசாலினியை அழைத்துக் கொண்டு போனோம். அவர் விசாலினியின் பேச்சு, நடவடிக்கைகளைப் பார்த்துவிட்டு, மதுரையில் உள்ள மருத்துவ உளவியலாளர் நம்மாழ்வாரிடம் அழைத்துச் சென்று சில பரிசோதனைகளைச் செய்யச் சொன்னார். எதற்கென்று தெரியாத நிலையில் நாங்கள் விசாலினியை மதுரைக்கு அழைத்துச் சென்று அவரைச் சந்தித்தோம்.

இரண்டு நாட்கள் விசாலினியைப் பல்வேறு பரிசோதனைகள் செய்த அவர், அவளுடைய ஐக்யூ, அதாவது அறிவுத்திறன் 220 இருப்பதாகக் கூறினார். சாதாரணமாக ஒருவருக்கு 90 இலிருந்து 109 வரைதான் இருக்குமாம். என் மகளின் ஐக்யூ கிட்டத்தட்ட சராசரியைவிட இரண்டு மடங்குக்கும் மேலே இருப்பது எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இவையெல்லாம் விசாலினியைப் பள்ளியில் சேர்க்காமல் இருந்தபோது நடைபெற்றவை''

"முதல் வகுப்பையும், இரண்டாம் வகுப்பையும் ஒரு வருடத்தில் முடித்துவிட்டாள். மூன்றாம் வகுப்புப் பாடங்களை ஒன்றரை மாதத்தில் முடித்துவிட்டாள். ஐந்தாம் வகுப்பில் மட்டும் ஓர் ஆண்டுகள் படிக்க வேண்டியிருந்தது. பள்ளியில் டபிள் புரோமோஷன் தர மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்கள். ஆறாம் வகுப்பில் சேர்க்கப் போகும்போது இவள் வயதுக்கு 4 ஆம் வகுப்புதான் படிக்க வேண்டும். வேண்டுமானால் நான்காம் வகுப்பில் சேர்த்துக் கொள்கிறோம் என்றார்கள். பிறகு எப்படியோ கஷ்டப்பட்டுக் கெஞ்சிக் கூத்தாடி ஆறாம் வகுப்பில் சேர்த்துவிட்டோம்.

வயது மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி பள்ளியில் இருந்து நிறுத்திவிட்டார்கள். இப்படி ஆறாம் வகுப்பை அவள் படித்து முடிக்கவே மூன்று பள்ளிகளை மாற்ற வேண்டியதாகிவிட்டது. மூன்றுவிதமான சீருடைகள், புத்தகங்கள் வாங்க வேண்டியதாகிவிட்டது. ஒரு பாடத்தில் ஒரு கேள்வியை விசாலினியிடம் கேட்டால் மூன்று புத்தகங்களில் இருந்தும் அதற்கு பதில் சொல்வாள். ஆறாம் வகுப்பில் டபிள் புரமோஷன் தர மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். அப்படித் தர வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித்துறையிடம் இருந்து சிறப்பு அனுமதி வாங்கி வாருங்கள் என்று சொன்னார்கள்'' என்கிறார் அவர்.

"நாங்கள் மூவரும் சென்னைக்கு வந்து பள்ளி கல்வித்துறையின் உரிய அதிகாரிகளைப் பார்த்துப் பேசினோம். அவர்கள் விசாலினியைப் பரிசோதித்துப் பார்த்தார்கள். அவளுக்கு ஐக்யூ அதிகமாக இருப்பதை ஒத்துக் கொண்டார்கள். விசாலினி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிப்பதால்,அது தொடர்பான துறையைத்தான் பார்க்க வேண்டும் என்றார்கள். நாங்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினோம்'' என்கிறார் கவலையுடன்.

""பாளையங்கோட்டையில் டான்டெம் கம்ப்யூட்டர் சென்டரின் சுந்தரபாண்டியன் சாரிடம் விசாலினியை அழைத்துச் சென்றோம். கம்ப்யூட்டரில் எதுவுமே தெரியாத விசாலினியைப் பார்த்து அவர் ஆரம்பத்தில் சிறிது யோசித்தார். ஆனால் அவர் பயிற்சி கொடுக்க ஆரம்பித்ததுமே அவளுடைய திறமையைத் தெரிந்து கொண்டார். கடந்த மார்ச் மாதம் மைக்ரோ சாஃப்ட் நிறுவனம் நடத்தும் எம்சிஏ ஆன்லைன் தேர்வு எழுதி அதில் விசாலினி தேர்ச்சி பெற்றாள். மே மாதம் அமெரிக்காவின் சிஸ்கோ நிறுவனம் நடத்தும் சிசிஎன்ஏ தேர்வு எழுதி அதில் வெற்றி பெற்று உலக சாதனை செய்திருக்கிறாள்'' என்கிறார் கல்யாணகுமாரசாமி.

நெல்லை மாவட்ட கலெக்டராக இருந்த ஜெயராமன் உடனே விசாலினியை அழைத்துச் சால்வை போட்டு பாராட்டியிருக்கிறார். மருத்துவர்கள், என்ஜினீயர்கள் உள்ள கூட்டத்தில் அவளைப் பேசச் சொல்லியிருக்கிறார்.

"இவ்வளவு சிறிய வயதில் பெரிய சாதனை செய்திருக்கிறீர்கள். அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு விலாசினி சொன்ன பதில்,

"ரொம்பப் பெருமையா இருக்குது. கலெக்டர் அங்கிள் என்னை அழைத்துச் சால்வைப் போட்டு பாராட்டினாங்க. அங்க நடந்த மீட்டிங்கில என்னைப் பேசச் சொன்னாங்க. அது ரொம்ப.. ரொம்ப பெருமையா இருக்குது'' என்கிறார் மழலை மாறாமல்.

"பாகிஸ்தானில் இரிட்ஸா ஹைதர் என்ற சிறுவன் 12 வயதில் இச்சாதனையைச் செய்தபோது அங்கே பாகிஸ்தானுக்கே பெருமை (Proud of Pakistan) என்று பாராட்டினார்கள். நமது நாட்டில் எங்களுக்குச் சிறப்பு அனுமதி பெறுவதற்கே இவ்வளவு சிரமப்பட வேண்டியிருப்பது கஷ்டமாக இருக்கிறது.

எட்டாம் வகுப்பு படித்த பின்பு அவளை பொறியியல் கல்லூரியில் சேர்க்காமல், பத்தாம் வகுப்பு வரை முறையாகப் படிக்க வைத்தாலும், பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும்போது வயது குறைந்தவர்கள் பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதக் கூடாது என்று பிரச்னை வரும். குறைந்த வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதிக்கமாட்டார்கள்.

எனவே குறைந்த வயதில் பெரிய வகுப்புகளைப் படிக்க அவளுக்குச் சிறப்பு அனுமதியைக் கல்வித்துறை கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்துவிட்டால் எங்களுக்கு ஒரு கவலையும் இல்லை.

தமிழக முதல்வர் மனது வைத்தால் எங்கள் கவலை ஒரு நொடியில் தீர்ந்துவிடும். இதில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் என்னவென்றால்,இப்போது பொறியியல் படிப்புகளில் நேரடியாகச் சேரும் தகுதியை எங்களுடைய மகள் நிரூபித்துவிட்டாள்'' என்கிறார் சாதனை மாணவியின் அம்மா சேதுராகமாலிகா.

(நன்றி : தினமணி)

திருநெல்வேலியில் இத்தகைய சாதனையை செய்திருக்கும் மாணவி விலாசினி, மற்றும் அவரது சாதனைக்கு காரணமான அவரது பெற்றோர்கள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

Saturday, June 18, 2011

எதிர்பார்க்க வைக்கும் "உதயன்"


ஒரு காதல் கதைக்கு எது முக்கியம்?

முதலில் இளமையான இசை, இரண்டாவதாக அதைவிட இளமையாய் ஒரு கதாநாயகி. குறிப்பாக 'ப்ரெஷ்' புதியமுகம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமைந்து இருக்கின்றன..."உதயன்" படத்திற்கு.

அறிமுகமான தெலுங்கு படத்தில் சுமாராக தெரிந்த புதிய நாயகி பிரணிதாதான் "உதயன்" படத்திற்கு தற்போது "மாஸ் அட்ராக்க்ஷன்".

படத்தின் இசை அமைப்பாளர் , டுயட் படத்தின் ஏ.ஆர்.ரகுமானுக்கு "சாக்ஸபோன்" இசைத்த இசை மேதை அமரர் கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் மணிகாந்த் கத்ரி. ஹாரிஸ் ஜெயராஜுக்கு அடுத்த இடத்தில் வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

சிறுவயதில் ஆசிப் அலி மற்றும் மங்களூரை சேர்ந்த ஸ்ரீநாத் மராத்தே ஆகியோரிடம் இசை பயின்ற மணிகாந்த், தனது தந்தை கோபால்நாத்துடன், சாக்ஸபோன் கச்சேரிகளில் தவறாமல் பங்கு பெற்றார். 'Dream Journey' என்கிற ஆல்பத்தை முழுக்க முழுக்க சாக்ஸ போன் இசை கருவியில் இசை அமைத்து வெளியிட்டு இருக்கிறார்.

"மெலடி பாடல்கள் மனித உடம்பில் ஓடும் ரத்தம் போன்றது" என்று கூறும் மணிகாந்த், மெலடி பாடல்கள்தான் தனக்கு மிகவும் விருப்பம் என்கிறார்.தனது தந்தையின் வழிகாட்டுதல்படி, புதுப்புது ராகங்களை உருவாக்கி இருப்பதாக கூறும் மணிகாந்த்,இசைக்கும் தனக்குமான தொடர்பை " Music is my living. It is an ocean the more you learn the more it generates" என்கிறார்.

ஏற்கனவே மணிகாந்த், கன்னட படத்தில் இசை அமைப்பாளாராக அறிமுகம் ஆகி விட்டாலும், அவர்க்கு மிகவும் பிடித்தமான தமிழில் இவருக்கு "உதயன்" தான் முதல் என்ட்ரி.

"உதயன்" படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.

1. "எவன் இவன் இவன் ரகசிய காதலன்" - சுருதி ஹாசனுக்கே உரித்தான 'கிக்'கான குரலில் ஒரு 'ஜில்' பாடல். ஒரு காதலி , தன் காதலனை பற்றி பாடுவதான சிச்சுவேஷன்.
இந்த பாடலை எழுதி இருப்பவர் புதிய கவிஞர் சூர்யா.

கல்லூரி மாணவிகளின் 'சாய்ஸ்' ஆக இருக்கபோகும் பாடல்.

2.ரிங் டிங் டிங் - ஒரு புதுமையான பாடல். ராப் பாணியில், பிரபல இந்தி பாப் பாடகர் பாபா ஷேகல், சுசித்ரா பாடியிருக்கும், முத்தமிழ் என்கிற கவிஞர் எழுதி இருக்கும் பாடல். உற்சாக துள்ளலான இசை.

3."இத்தனை யுகமாய் எங்கிருந்தாய்" - மெலடி பாடல்களின் இளவரசன் கார்த்தி பாடி இருக்கும் பாடல். அண்ணாமலை என்கிற கவிஞரின் காதல் வரிகள்.

கத்ரி கோபால்நாத் அவர்களின் மகன் என்பதை பின்னணி இசையில் நிருபிக்கிறார். அதற்க்கு ஏற்றார்போல, "இதயம் வெள்ளை காகிதம், நீ இங்கே ஓவியம்" என்கிற அழகான கவிதை வரிகள்.

மனதை தொடும் மெலடி இசை.

4."லக்கா, லக்கா" - படத்தில் இருக்கும் ஒரே ஒரு குத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கிறார். பிரசன்னா மற்றும் தர்ஷனா கார்த்திக் பாடி இருக்கிறார்கள். சுமார் ரகம்

5. " உதித்தான் புது சூரியனாய் இந்த உதயன்" - ஹீரோயிசம் பொங்கும் பாடல். படத்தின் இசை அமைப்பாளர் மணிகாந்த் கத்ரி பாடி இருக்கும் பாடல். இந்த பாடலை மட்டும் எழுதி இருப்பவர் இளமைகவிஞர்(?) வாலி.

அதிரடியான பாடல், அதற்க்கு பொருத்தமான புதிய குரல் மணிகாந்துக்கு.

6."பொங்க வச்சோம், அய்யனாரே" - படத்தில் மிகவும் சர்பிரைசான கிராமத்து பாடல். யுகபாரதி எழுதி இருக்கும் இந்த பாடலை பாடி இருப்பவர்கள் விவேக் நாராயணன் மற்றும் திவ்யா.

அதிரடியான கிராமத்து இசை. எந்த வகையான பாடலுக்கும் இவரால் இசை அமைக்கமுடியும் என்று மணிகாந்த் மீது நம்பிக்கை வருகிறது.


"பொதுவாக ஒரு பெண்ணைப் பார்த்ததும் ஹீரோ காதல் கொள்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் பார்த்தவுடன் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்று கேட்கிறார் " என்கிறார் தனது முதல் படமான "உதயன்" பற்றி, இயக்குனர் சாப்ளின்.

பார்த்த உடனே பத்திக்க வைக்கும் பிரணிதா, இளமை துள்ளலான மணிகாந்தின்
இசை என எதிர்பார்க்க வைக்கிறான்..."உதயன்".

படத்தின் ஹீரோவை பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்பவர்களுக்கு,அவர் 'வம்சம்' அருள்நிதி ஸ்டாலின்...அட விடுங்க, அவரா முக்கியம்???

-இன்பா

Friday, June 17, 2011

இசைப்ரியா - சிதைக்கப்பட்ட தமிழ் தேவதைபதிவை படிக்கும் முன்பு, சில நிமிடங்களை ஒதுக்கி, இந்த காணொளியை பாருங்கள்."இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்" என்று சமிபத்தில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

போர் தாக்குதல் நடக்காத இடங்கள் என்று முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளை அன்று இலங்கை ராணுவம் அறிவித்தது. அதை நம்பி, அங்கு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் சென்று சேர்ந்தனர்.

ஆனால், அங்கு உள்ள மருத்துவமனைகளை கூட விட்டுவைக்காமல், இலங்கை ராணுவம் என்ற மிருக கூட்டம் அங்கு கடும் குண்டுவீச்சில் இறங்கியது. திட்டமிட்டு நடந்த, இப்படுகொலையில் ஒரு இனமே சத்தமில்லாமல் அழிக்கப்பட்டது.

இலங்கை ராணுவத்தின் மனித உரிமை மீறல்களை சேனல் 4 செய்தி நிறுவனம் ஆதாரபூர்வமான வீடியோ ஆதாரங்களுடன் சமிபத்தில் வெளியிட,அதை பார்த்த உலக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

புலிகள் இயக்கம், அப்பாவி மக்களை தங்களை பாதுகாக்கும் கேடயமாக பயன்படுத்தியது உண்மை என்கிற செய்தியும் நம்மை சுடுகிறது.

பெண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்னால் கட்டி கற்பழித்து, லாரி லாரியாக இலங்கை வீரர்கள் ஏற்றும் ஒரு வீடியோ காட்சி நம்மை பதறவைக்கிறது.

கூடவே, ஆபாசமான வார்த்தைகள் பேசி சிரித்துக்கொண்டே, இளம் பெண்களின் நிர்வாண சடலங்களை அவர்கள் வண்டியில் எறியும் காட்சி.....

ராணுவம் மற்றும் காவல்துறையினரின் கற்பழிப்பு கொடுமைகள் நமக்கு புதியது இல்லை.

காஷ்மீரில், தீவிரவாதிகள் தேடல் என்ற பெயரில் அங்கு உள்ள பெண்களிடம் நமது இந்திய ராணுவம் தகாத முறையில் நடந்து கொண்டதாக,காஷ்மீர் மாநில பெண்கள் அவ்வப்போது போராட்டங்களில் இறங்குவது இன்றும் வாடிக்கை.

இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையும், தமிழ் பெண்களை கற்பழித்தது என்கிறார் மட்டகளப்பை சேர்ந்த என் நண்பர் ஒருவர்.

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒரு ஆதிவாசி பெண்ணை, இந்திய ராணுவ வீரர்கள் கற்பழித்துவிட, ராணுவ தலைமை அலுவலகம் முன்பு 'நிர்வாண போராட்டத்தில்' ஈடுபட்டார்கள் ஆதிவாசி பெண்கள்.

இவ்வளவு ஏன்?

வீரப்பனை தேடுகிறோம் என்று சென்ற நம் தமிழக காவல் படைகள், வாசாத்தி இன பழங்குடி இன பெண்களை சூறையாடியது நம் நினைவுக்கு வருகிறது.

இன்றும் அந்த வழக்கு நடந்து கொண்டே...இருக்கிறது.

இந்த பழங்குடி இன பெண்களை கற்பழித்த தமிழக காவலர்களை சட்டம் தூக்கில் போட்டதா?

அன்று ஆட்சியில் இருந்தவர்களை போர்குற்றவாளியாக அறிவித்தா?

அதைப்போலவே, இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே அவர்களை 'போர்க்குற்றவாளி' என்று அறிவித்து, சர்வதேச சமுகத்தின் முன் அவரை நிறுத்துவது என்பதெல்லாம். சாத்தியமே இல்லாத விஷயம் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இராக் பெண்களை, ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு உட்படுத்திய அமெரிக்கா போன்ற சர்வதேச நாடுகளிடம் இதற்க்கு எப்படி தீர்வு கேட்க முடியும்??

மனிதர்கள், மிருக இனத்தைவிட மிகவும் கொடூரமானவர்கள் என்பது மட்டும் இந்த சேனல் 4 வெளியிட்டு இருக்கும் இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்கள் வீடியோ ஆதாரத்தின் மூலம் உறுதிபடுத்தபட்டுள்ளது.

அப்போது,அந்த வீடியோவில் வெளியான ஒரு செய்தி....இசைப்ரியாவின் கோர மரணம்.

ஷோபா - ஒரு அழகான,எதையாவது சாதிக்கவேண்டும் என்கிற பெண். இலங்கையில் உள்ள யாழ்ப்பணத்தில் 1982 ஆம் வருடம் பிறந்தவர். பின், அவரது குடும்பம் வன்னிக்கு குடிபெயர்ந்தது.

அங்கேயே தனது படிப்பை முடித்த அவர், இலங்கையின் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் செய்தி நிறுவனமான tamilnet என்ற நிறுவனத்தில் நிருபராகவும், செய்தி அறிவிப்பலாளாராகவும் பணியில் சேர்ந்தார்.அழகிய பெயரில், இசைப்ரியா என்று தன்னை அழைத்துகொண்டார்.

பதிவின் தொடக்கத்தில் இருக்கும் வீடியோவில் இருப்பவர்தான்...இசைப்ரியா.

2007 - ஆம் வருடம், புலிகள் இயக்கத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து, ஒரு குழந்தைக்கு தாயாகவும் ஆனார்.

அப்போதுதான், அவர் வாழ்வில் முதல் புயல் தாக்கியது. பிறந்து ஆறே மாதங்கள் ஆன அவர் குழந்தை குண்டு வீச்சில் பலியானது.

ஆனாலும், மனம் தளராத இசைப்ரியா, செய்தி வாசிப்பாளாராக, ஈழ தமிழ் மக்களின் மனசாட்சியாக ஒலித்தார்.

சேனல் 4 வீடியோவின் உச்ச கட்ட கொடுரம் இதுதான்...

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக கற்பழிக்கபட்டு, பிணமாக கிடந்தார் இசைப்ரியா.இன்னமும் நம் காதுகளில் ஒலிக்கிறதே...இசைப்ரியாவின் அழகு யாழ்ப்பாண தமிழ். இனி, அந்த நாம் தமிழை கேட்க முடியுமா??

நம்மை, நம் மனதை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயத்தை, ஒரு துயரத்தை யாரிடமாவது பகிர்ந்துவிட்டால், மனம் அமைதி அடையும் என்கிறது மனோதத்துவம்.

இந்த பதிவின் மூலம் என்னுடைய துயரத்தை உங்களிடம் பகிர்ந்துவிட்டேன். ஆனால்,என் மனம் இன்னமும் கனத்துவிட்டதே,ஏன்?இன்னமும் நமக்கும், வெளிஉலகுக்கும் தெரியாமல், இப்படி இலங்கை ராணுவ மிருகங்களால் சிதைந்துபோன இசைப்ரியாக்கள் எத்தனை..எத்தனையோ???


-இன்பா

Tuesday, June 14, 2011

"ஒரு சில பார்ப்பனர்களின்" பட்டியல்


"ஒரு சில பார்ப்பனர்களின் முயற்சிதான் திமுகவின் தோல்விக்கு முக்கியமான காரணம் " என்று ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் கருணாநிதி.

அவர் குறிப்பிட்ட ஒரு சில பார்ப்பனர்கள் யாராக இருக்கலாம் என்று யோசித்ததில், பின் வரும் லிஸ்ட் உருவாகிவிட்டது.

ஜெயலலிதா :

சொல்லவே வேண்டியது இல்லை. அதிமுக தலைவியான ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக (?) கொண்ட ஜெயலலிதா என்ற பார்ப்பனரிடம், படுதோல்வி அடைந்து, எதிர்கட்சி அந்தஸ்த்து கூட இல்லாமல் போய்விட்டார் கருணாநிதி. கடந்தமுறை அம்மா ஆட்சியின் போது. ராவோடு ராவாக கருணாநிதியை கு(து)ண்டு கட்டாக வேனில் ஏற்றி, "கொல்றாங்கப்பா" என்று கதற கதற...ச்சே, கருணாநிதியை கைது செய்துவிட்டனர்.

இந்த முறை என்ன நடக்குமோ என்று கருணாநிதியின் ஒட்டுமொத்த குடும்பமே ஆடிபோய் இருக்கிறது.

திமுகவின் அரசியல் எதிரியான ஜெயலலிதா, கருணாவின் எவர்க்ரீன் பாப்பார எதிரிகளில், பாலக்காட்டு பார்ப்பனர் அமரர்.எம்.ஜி.ஆரை தொடர்ந்து "முதல்" இடத்தில் இருந்துவருகிறார்.

சு.சாமி :

சினிமாவில்தான் காமெடியன்கள் 'ஹீரோ' ஆவார்கள். ஸ்பெக்ட்ரம் வழக்குகள் மூலம் அரசியல் ஜோக்கர் என்று கூறப்பட்ட சுப்பிரமணியம் சாமி, இந்திய அளவில் கவனிக்கத்தக்க ஆசாமியாகி விட்டார் சு.சாமி. "யார் ஊழல் செய்தாலும் வழக்கு தொடர்வேன்" என்கிறார் சாமி.

2G வழக்கில் கருணாநிதியையும் குற்றவாளியாக சேர்க்கவேண்டும் என்று ஆரம்பம் முதலே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, கருணாநிதிக்கு 'குடைச்சல்' கொடுத்துவரும் சு.சாமிதான், கருணாநிதி குறிப்பிட்ட லிஸ்ட்டில் நம்பர் டூ.

சோ :

சு.சாமிக்கு அடுத்தபடியாக, கருணாநிதி குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் இன்னொரு பாப்பார சாமி....சோ.எஸ்.ராமசாமி. துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர். "அதிமுக வெற்றி பெற விஜயகாந்த்தை சேர்க்க வேண்டும்" என்று கடந்த சட்டமன்ற தேர்தலில் போதே கணித்தவர் சோ.

இந்த தேர்தலில் அதிமுக - தேமுதிக கூட்டணி வலுவாக அமைய ஒரு முக்கிய காரணமாக அமைந்தவர் சோ. "பலகோடிகள் ஊழல் செய்திருக்கும் கருணாநிதி தோல்வி அடையவேண்டும்" என்று கடந்த ஒரு வருடமாக பேசிவருகிறார் சோ.

SO,சோதான் கருணாநிதிக்கு எதிரான பாப்பார பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

ஞாநி :

"ஓ" பக்கங்கள் புகழ் எழுத்தாளர் ஞாநி, தன்னை ஒரு பெரியார்வாதியாக காட்டிக்கொண்டாலும், பிராமண சமுகத்தில் பிறந்த ஞாநி, தொடர்ந்து விகடன்,குமுதம்,கல்கி என்று துரத்த துரத்த "ஓ" பக்கங்கள் மூலம் கருணாநிதிக்கு எதிராக எழுதியும், பேசியும் கிட்டத்தட்ட ஒரு புரட்சி பத்திரிகையாளராகவே மாறி விட்ட இவருக்கு, லிஸ்ட்டில் நான்காம் இடம்.

லதா ரஜினிகாந்த் :

சூப்பர் ஸ்டாரின் மனைவி எப்படி இந்த பட்டியலில் வந்தார் என்றுதானே யோசிக்கிறீர்கள்?

தேர்தல் நாள் அன்று ரஜினிகாந்த், பூத்தில் அதிமுகவுக்கு ஒட்டு போட்டதை ஒரு பத்திரிக்கையின் நிருபர் போட்டோ எடுத்துவிட்டார். அவர் அப்படி ஒட்டு போட்ட நேரத்திற்கு பின், விழுந்த வாக்குகள் எல்லாம் அதிமுகவுக்கே போய் இருக்கலாம்.

ரஜினியை அதிமுகவுக்கு ஓட்டுபோட சொன்னவர் பார்ப்பனரான அவர் மனைவி லதா அவர்களாக இருக்கலாம் என்ற ஒரு "சந்தேகத்தின்(??)" அடிப்படையில் இவர் பெயர் நம் பட்டியலில்.

எஸ்.வி.சேகர்:

அதிமுக,திமுக,காங்கிரஸ் என்று அடிக்கடி கட்சி மாறி, எந்த கட்சியில் இருக்கிறோம் என்று இன்று அவர் நிலைமை அவர்க்கே காமெடியாக போய்விட்டது.

ஆனால், திமுகவில் கொஞ்ச காலமும், தேர்தலின் போது காங்கிரஸில் கொஞ்ச காலமும் இருந்து, தனது 'தாய்' கட்சியான அதிமுகவுக்கு "வேலை(!)" பார்த்துவிட்டார் மைலாபூர் பார்ப்பனர் எஸ்.வி.சேகர் என்கிறது நமக்கு கிடைத்த ரகசிய தகவல்.

கவிஞர் வாலி :

ஒரு வாளி(லி) கூஜா தூக்குகிறது என்று கவிதையே எழுதலாம்.
கருணாநிதியை புகழ்ந்து, ஸ்ரீரங்கம் பார்ப்பனர் கவிஞர் வாலி எழுதிய ஒரு கவிதையின் சில வரிகள் சாம்பிளுக்கு.

சக்கர நாற்காலியில் உலாவரும்
சர்க்கரைத் தமிழே!
உன்னைத் - தனக்கான
உலகத் தலைவன் என -
ஆராதிக்கிறது


உலகத் தமிழினம்
உன்னைத் தான் தொழுகிறது;
அதிசயமில்லை; உன் பேனாதானே
அவர்க்காக அழுகிறது

நீ
தமிழுக்கும்;
தமிழ் மண்ணுக்கும்
பண்ணிய தொண்டுகளை
எண்ணினால்...
எம்மநோக்கு வருகிறது
நன்றிக் காய்ச்சல்;
நன்றி இல்லார்க்கு வருகிறது
பன்றிக் காய்ச்சல்!

எம்தமிழரின் கால்களில்
இலங்கை - மாட்டிய
விலங்கை!
ஒருநாள் - நீ
உண்ணா நோன்பிருந்து
நீக்கினாய் சோறை;
நிறுத்தினாய் போரை;

உண்மையில் நீதான்
உலகத் தலைவர்;
அடுத்தவரெல்லாம்
அப்படிச் சொல்லி அலைவர்!

கவியரங்கம்,பட்டிமன்றம், பாராட்டு விழாக்கள் என கவிஞர் அடித்த "ஜால்ரா" சத்தத்தில், கருணாநிதியின் காதுகளில் விழாமல் போய்விட்டது...மின்வெட்டு,விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்சினைகள்.

இப்படியாக,கருணாநிதிக்கு கூட இருந்து "குழி" பறித்துவிட்டார் பார்ப்பன கவிஞர் வாலி.

திருநள்ளாறு கோவில் அர்ச்சகர் :

மேலே,நாம் குறிப்பிட்ட அனைத்து பார்ப்பனர்களையும் விட, கருணாநிதியை "நம்ப வைத்து மோசம் செய்தவர்" திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தான்.

தேர்தல் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னால், தனது குடும்பத்தை கும்பகோணம் அருகே உள்ள கோவில்களுக்கும், குறிப்பாக தான் வெற்றி பெற, திருநள்ளாறு கோவிலுக்கும் தனது குடும்பத்தை அனுப்பி,அங்கு உள்ள பார்ப்பனர்களின் ஆசி பெற முடிவெடுத்தார் கருணாநிதி.

திருநள்ளார் சனி பகவான் கோயிலில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் தரிசனம் செய்ததோடு, முதல்வர் கருணாநிதி பெயரில் சனி பகவானுக்கு தயிராபிஷேகம் மற்றும் பரிகார பூஜைகள் செய்தார். இதைத்தொடர்ந்து எள்தீபம் ஏற்றி , காக்கைக்கு அளித்தார்.

ஆறாவது முறையாக முதல்வராக , இந்த கோவில் பார்ப்பனர் பூஜையால் பதவி ஏற்ப்போம் என முடிவே செய்துவிட்ட கருணாநிதிக்கு, கடைசியில் கிடைத்தது வெறும் "எள்" மட்டுமே.

நீங்களே சொல்லுங்கள், இந்த திருநள்ளாறு கோவில் பார்ப்பனர்தானே, கருணாநிதியை,திமுகவை தோற்கடிக்க வைத்தவர்?

பகுத்தறிவு(!) : இன்பா

என்னவோய் சொல்லுங்கோ, இந்த பட்டியல் போறுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

Sunday, June 12, 2011

மங்காத்தா vs வேலாயுதம்


திரை அரங்கே தெரியாத அளவுக்கு கட்டவுட்டுகள், பேனர்கள், முதல்நாள் காட்சிகள் அனைத்தையும் நிரப்பும் அளவுக்கு ரசிகர் மன்றங்கள் என்று சகலவிதத்திலும் சரிசமமானவர்கள் ...இன்றைக்கு விஜய் மற்றும் அஜித்.

எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி-கமல் வரிசைக்கு பின் நிற்கிறார்கள் அஜித்-விஜய் ஜோடி. இவர்களுக்கு பின் சூர்யா,சிம்பு,தனுஷ், ஆர்யா, ஜெயம் ரவி,விஷால்,கார்த்தி என மிகத்திறமையான இளைஞர் பட்டாளம் இருக்கிறது என்றாலும், விஜய்-அஜித் நடிக்கும் படங்களுக்கு கிடைக்கும் "ஓபனிங்" மற்றவர்களுக்கு இல்லை. இந்த ஜோடியை சூர்யா,சிம்பு போன்றோர்கள் "மாஸ்" விஷயத்தில் கொஞ்சம் நெருங்குகிறார்கள்.அவ்வளவே.

தொடர்ந்து தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரனால் ஆறு படங்களில் நடிக்கவைக்கபட்டு, குறிப்பாக விஜயகாந்துடன் செந்தூரபாண்டி போன்ற படங்கள் மூலம் கைதூக்கி விடப்பட்டார் விஜய். ஆனால், அவர்க்கு முதல் வெற்றி, அவரது தந்தையின் படங்களால் வரவில்லை. விக்ரமனின் பூவே உனக்காக மற்றும் பாசிலின் காதலுக்கு மரியாதை போன்றவையே விஜய்க்கு அடித்தளம். ப்ரியமுடன் படத்தில் நெகடிவ் ரோல் செய்ததோடு சரி. அதன் பின்னர் தனகென்று ஒரு பார்முலாவை வைத்துகொண்டு அதன் படியே இன்று வரை பயணிக்கிறார் விஜய்.

விஜய் உடன் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் சிறிய வேடத்தில் நடித்த அஜித்குமார், அவருக்கு இணையாக, அவருக்கு போட்டியாக வளருவார் என்று யாரும் எதிபார்த்திருக்க மாட்டார்கள்.

ஒரே சமயத்தில் வெளியாகி, நல்ல வரவேற்ப்பை பெற்ற விஜய்யின் "பிரெண்ட்ஸ்" படத்தை ஓரங்கட்டி, விஜய்க்கு நிகரான "மாஸ் ஹீரோவாக" உருவெடுத்தார் அஜித்..."தீனா" படத்தின் மூலம்.

அதன் பிறகு, அஜித் - விஜய் படங்கள் தொடர்ந்து தீபாவளி,பொங்கல் போன்ற பண்டிகைகளில் பரமசிவன் - ஆதி, ஆழ்வார் - போக்கிரி என்று வெளியாகி களை கட்டின. "நீ என்ன பெரிய தலையா" என்று விஜய்யும், "முதுகுக்கு பின்னால பேசாதே" என்று அஜித்தும் தங்கள் படங்களின் 'பன்ச்' வசனங்களால் மோத, ரசிகர்களும் அவர்களின் படங்களின் ரீலிஸ் அன்று மோதிக்கொண்டார்கள்.

வாலி,சிட்டிசன்,வில்லன்,வரலாறு என்று பல பணிகளில் படம் செய்த அஜித், "பில்லா" வெற்றிக்கு பிறகு தென் இந்தியாவின் "ஸ்டைலிஷ்" ஹீரோ என்று உருவாகி, தற்சமயம் அதே பாணியில் படங்கள் செய்துவருகிறார்.

அஜித், விஜய் இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது... அவர்களுக்கு வெற்றி-தோல்வி தந்த பக்குவம்.

தங்களது கருத்துக்களை வெளிப்படையாக சொல்வதிலும் சளைத்தவர்கள் இல்லை..விஜய்,அஜித் இருவரும்.

ஒரு விழாவில்,"பாராட்டு விழாவுக்கு வரச்சொல்லி மிரட்டுறாங்க" என்று அன்றைய முதல்வர் கருணாநிதி முன்னாலே அஜித் துணிச்சலாக அறிவிக்க, விஜய்யோ அவருக்கு ஒரு படிமேலே சென்று "ஆளும் கட்சியினர் எனது ரசிகர்களை தாக்குகிறார்கள்" என்று வெளிப்படையாக அறிவித்து, எதிர்கட்சியான அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தலில் செயல்பட்டார்.

ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் - விஜய் இருவரின் படங்களும் ஒரே மாதத்தில் வெளியாக போகின்றன.

மங்காத்தா vs வேலாயுதம் என்று களை கட்டப்போகிறது ஆகஸ்ட் மாதம். தியேட்டர்கள் கிடைக்கததால், இரண்டு வாரங்கள் இடைவேளையில் வெளிவரப்போகின்றன இந்த இரண்டு படங்களும்.

விஜய்யின் 50 படமான "சுறா" படுதோல்வி அடைந்து விட்டது. இந்நிலையில் மங்காத்தா -அஜித்தின் 50 வது படம்.வேலாயுதம் - விஜய்யிக்கு 52 வது படம்.

இயக்குனர்கள்:


ஜெயம்,உனக்கும் எனக்கும், எம்.குமரன்,சந்தோஷ் சுப்பிரமணியம் என்று வரிசையாக தெலுங்கு படங்களை தமிழ் எடுத்து தொடர் ஹிட் தந்த ஜெயம் ராஜா படத்தின் இயக்குனர். "ரீமேக் ராஜா" என்று அழைக்கப்படும் ராஜா முதல் முறையாக சொந்த கதையை, தனது சகோதரர் ஜெயம் ரவி இல்லாமால் வேறொரு ஹீரோவை, அதுவும் விஜய்யை வைத்து இயக்கும் படம் "வேலாயுதம்".

விஜய் ஆண்டனி இசை அமைத்து இருக்கிறார். குழந்தைகள் வரை சென்றடையும் விஜய்யின் அதிரடி ஆட்டத்தில் வழக்கமான குத்து பாடல்கள் களை கட்டும் என எதிர்பார்க்கலாம்.


சென்னை 28 , சரோஜா மற்றும் கோவா படங்களின் இயக்குனர் வெங்கட் பிரபுதான் அஜித்தின் மங்காத்தா இயக்குனர். மூன்றே படங்கள் மட்டுமே இயக்கி இருக்கிறார். ஒரே மாதரி ஜாலி கதைகள் செய்த வெங்கட், இதில் அஜித்,அர்ஜுன் என்று சீரியஸ் கதையை முதல் முறையாக செய்கிறார்.

இரண்டு இயக்குனர்களை ஒப்பிட்டால், ஜெயம் ராஜா அனுபவம் மிகுந்தவர். கமர்சியல் விஷயங்களில் தேர்ந்தவர் என்பது அவரது தொடர் வெற்றி படங்களின் மூலம் அறியலாம். அதே சமயம், அவரது வெற்றி படங்கள் எல்லாமே ரீமேக் படங்கள்.

வெங்கட் பிரபு, தனது முதல் படத்தில் ஜெயித்தாலும்,அடுத்த இரண்டு படங்களை பார்க்கும் போது, ஒரு அமெச்சூர் இயக்குனராகவே காட்சி தருகிறார்.

வேலாயுதம் பிளஸ் :

வழக்கம்போலவே விஜய்யின் டான்ஸ் மற்றும் ஆக்க்ஷன்,ஜெனிலியா, சந்தானம் காமெடி இத்துடன் ஜெயம் ராஜாவின் கமர்ஷியல் விறுவிறு திரைக்கதை திறமை.

வேலாயுதம் மைனஸ் :
கிராமத்தில் இருக்கும் விஜய் பெரும் மக்கள் சக்தியாக வருவதான பழைய கதை.முகமூடி அணிந்த விஜய்யின் கெட்டப்பை பார்க்கும்போது அந்நியன்,கந்தசாமி படங்களின் நினைவுக்கு வருவது, அதே பாணியிலான படம் என்று காட்டுகிறது.

மங்காத்தா பிளஸ்:

அஜித்தின் 50 படம் என்கிற எதிர்பார்ப்பு, தமிழின் நம்பர் ஒன் நாயகியான த்ரிஷா, ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் மற்றொரு பிளஸ்.

இதுவரை வந்த வெங்கட் பிரபு - யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் எல்லாமே ஹிட் என்பதாலும், படத்தில் ஏற்க்கனெவே வெளியாகி கலக்கிக்கொண்டு இருக்கும் விளையாடு மங்காத்தா பாடல் மேலும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.அடுத்த மாதம் பிரமாண்டமாய் நடைபெறப்போகிறது மற்ற பாடல்களின் இசை வெளியிடு.

ஹாலிவுட் பாணியில் இருக்கும் வெங்கட் பிரபுவின் திரைக்கதை பாணி மற்றும் கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் பற்றிய ஒரு புதிய கதை போன்றவை இப்படத்தின் பிளஸ்.கூடவே, இன்று ஒரு புதிய டிரெண்டை அமைத்து இருக்கும் அஜித்தின் நரைமுடி கெட்டப் மற்றும் அவர் ஏற்று இருக்கும் நெகடிவ் ரோல்.

மங்காத்தா மைனஸ்:
பில்லா படத்திற்கு பிறகு அதே பாணியில் நடை,உடை பாவனைகள் இதிலும் தெரிகின்றன. மேலும், பிரேம்ஜியின் காமெடி மற்றும் வெங்கட் பிரபுவின் ஜாலி ஸ்டைல் அஜித்துக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. படத்தில் ஏராளமான கதாபாத்திரங்கள்.

வெங்கட் பிரபு மீது ஒரு சிறந்த இயக்குனர் என்ற நம்பிக்கை இதுவரை வரவில்லை.

சேனல்கள் ஆதரவு யாருக்கு?

வேட்டைக்காரன்,சுறா மற்றும் காவலன் படங்களின் கசப்பால், விஜய் திமுகவுக்கே எதிராக மாறிவிட்டார். "வேலாயுதம்" படத்தின் அனைத்து உரிமைகளையும் ஆளும் கட்சியின் சேனலான "ஜெயா டிவி" கைப்பற்றி இருக்கிறது.

அதிமுக அபிமானிகள் ஒட்டுமொத்தமாக விஜய்யை கொண்டாடபோவது உறுதி. (அதிமுக கொடி திரை அரங்குகளில் பறக்கும் என எதிர்பார்க்கலாம்).

மங்காத்தா படத்தின் தயாரிப்பாளர் துரை தயாநிதி, அழகிரியின் மகன் என்பதால், இப்படம் கலைஞர் டிவியின் கையில் இருக்கிறது. சன் டிவியின் ஆதரவும் இந்த படத்திற்கு மட்டுமே என்று சொல்லவேண்டியது இல்லை. சன் டிவி, தனுஷ் நடிக்கும் வேங்கை படத்தை வெளியிட உள்ளதால், அதன் மார்க்கெட்டிங் விவகாரத்தில்தான் இவர்கள் அதிக கவனம் செலுத்துவார்கள்.

பில்லா படத்தையும் கலைஞர் டிவி வாங்கினாலும், படம் வெற்றி பெற்றது. ஆனால், தற்சமயம் திமுக ஆட்சியில் இல்லை என்பது எந்த அளவுக்கு மங்காத்தாவை பாதிக்கும் என்று பார்க்கவேண்டும்.

மங்காத்தா vs வேலாயுதம் :

கோவா,தில்லாலங்கடி என வெங்கட் பிரபு,ஜெயம் ராஜா இருவரின் முந்தைய படங்களுமே தோல்வி என்பதால், தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் இருவருமே.

யாருக்கு வெற்றி என்பது,அஜித்,விஜய் என்ற முன்னணி நடிகர்களை விட, இந்த இயக்குனர்களின் திறமையை நம்பியே இருக்கிறது.

எது எப்படியோ, தல - தளபதி மோதலால்,சினிமா ரசிகர்கள் அனைவரும் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரு திருவிழா காண தயாராகி விட்டார்கள்.

-இன்பா

Friday, June 10, 2011

டாக்டர் அப்துல்கலாமின் "இளைஞர் இயக்கம்"


சமுக மாற்றத்திற்கான எந்தவொரு நல்ல முயற்சியையும் நம் குழந்தைகளிடம் இருந்து துவங்கவேண்டும்.

"இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர்கள்" ,அதைப்போலவே நாளைய சமுகம் சிறப்பாக இருக்க,இன்றைய குழந்தைகளே அஸ்திவாரம்.

உதாரணதிற்கு, மரம் வளர்ப்பு,மழை நீர் சேகரிப்பு, காடுகள் ஆகியவற்றின் அவசியங்களை பள்ளி குழந்தைகளுக்கு எளிய முறையில் பாடமாக்கினால், வளரும் போதே, அவர்கள் 'பசுமை காதலர்களாக' வளர்வார்கள் என்பது சரிதானே?

"ஓடி விளையாடு பாப்பா" என்று மகாகவி பாரதி, தனது அறிவுரையை குழந்தைகளிடம் இருந்து துவங்கினான்.

அதுபோலவே, டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள், எப்போதும் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீதே தனது கவனத்தை, அக்கறையை செலுத்திவருகிறார்.

இளைஞர் இயக்கம் - இதுதான் டாக்டர் திரு.அப்துல்கலாம் அவர்கள் துவங்கி இருக்கும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒரு புதிய இயக்கம்.

இதன் முதன்மை நோக்கம்...இன்று நாட்டில் பரவி இருக்கும் ஊழலை ஒழிப்பதே.

இளைஞர் இயக்கம் மற்றும் அதன் செயல்திட்டங்கள் என்ன? அது எவ்வாறு செயல்படபோகிறது?

இக்கேள்விகள் குறித்து திரு.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்கள் சமிபத்தில் ஆற்றிய உரை..."மாணவர்களே, உங்கள் வாழ்வின் லட்சியம் என்ன... எத்தனை பேர் இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆசிரியர்கள் ஆக கனவு காண்கிறீர்கள். எத்தனை பேர் விண்வெளியில் நடக்க விரும்புகிறீர்கள்.

கடந்த 12 ஆண்டுகளில், 1.2 கோடி இளைஞர்களிடம் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் கனவுகளை அறிந்து வைத்திருக்கிறேன்.சமீபத்தில், மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில், ஒரு லட்சம் இளைஞர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில், "இன்ஜினியர், டாக்டர், ஐ.ஏ.எஸ்., ஆகப் போவது யார்?' என கேட்டபோது, சில 100 பேர், கை தூக்கினர். "எத்தனை பேர் சந்திரன், வியாழன் கிரகத்திற்கு போக விரும்புகிறீர்கள்?' என கேட்டபோது, அனைவரும் கை தூக்கினர்.

அதில் ஐந்து பேரை தேர்வு செய்து, "நீங்கள் அரசியல் தலைவரானால், என்ன செய்வீர்கள்?' என கேட்டேன். "10 ஆண்டில் வளர்ந்த நாடாக மாற்றுவேன், லஞ்சத்தை ஒழிப்பேன்' என்றும், "இளைஞர்களிடம் என்னால் முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்து, இந்தியாவால் முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்குவேன்' என, ஒரு மாணவன் கூறினான்.

எங்கு சென்றாலும், இளைஞர்களிடம் நம்பிக்கை, லட்சியம், கனவைப் பார்க்கிறேன்.வளமான இந்தியாவை வழி நடத்தும் தலைவர்களை உருவாக்க வேண்டும். இப்படிப்பட்ட இந்தியாவை படைக்க, எழுச்சி எண்ணம் கொண்ட இளைஞர்கள் வேண்டும். உறக்கத்தில் வருவதல்ல கனவு. உன்னை உறங்க விடாமல் செய்வது தான் கனவு. எனவே, கனவு காண்பது அவசியம். லட்சியம் வேண்டும். அது நிறைவேற கடின உழைப்பு, அறிவும், அதை தொடர்ந்து செல்ல வேண்டும். தோல்வி மனப்பான்மையை தோல்வி அடைய செய்ய வேண்டும்.

நாட்டின் மிகப்பெரிய வியாதியாக ஊழல் உள்ளது. அதை எப்படி ஒழிப்பது என இளைஞர்கள் கேட்கின்றனர். ஊழலை ஒழிக்க பல சட்டங்கள் உள்ளன. பலர் கைது செய்யப்படுகின்றனர். சிலர் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படுகின்றனர்.

லஞ்சம் வீட்டிலிருந்து தான் துவங்குகிறது.இந்தியாவில் உள்ள 200 மில்லியன் வீடுகளில், 80 மில்லியன் வீடுகளில் உள்ளவர்கள் லஞ்சத்தில் ஈடுபடுவதாக வைத்துக் கொண்டால், எப்படி லஞ்சத்தை ஒழிக்க முடியும். அதை பார்த்து வளரும் இளைஞர்கள் மனம் எப்படி இருக்கும். அன்பு, பாசம் என்ற மிகப்பெரிய ஆயுதத்தை இளைஞர்கள் பெற்றோர் மீது பிரயோகித்தால், அவர்கள் லஞ்சத்தை விட்டு வெளியே வருவர் என்பது என் கருத்து.

ஒவ்வொருவரும் தன் குடும்பத்தில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், நல்ல சமுதாயம் உண்டாகும்; நல்ல தலைவர்கள் கிடைப்பர்; நாடு ஊழலில் இருந்து விடுபடும்.

ஆனால் ஒரு தலைவனால், கட்சியால், மீடியாவால், சட்டத்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியாது.

நாடு மாற வேண்டுமெனில் வீடு மாற வேண்டும்.இந்த மாற்றத்தை ஏற்படுத்த, இளைஞர்கள் இயக்கத்தை துவக்கியுள்ளேன். எனக்கு வேண்டும் என்ற சுய நல எண்ணம் தான் லஞ்சம் வாங்கத் தூண்டுகிறது. நாம் எண்ணத்தை மாற்றி வீட்டை, குடும்பத்தை தூய்மையாக்கினால் நாடு மாறும். "

- என்று விளக்கம் தரும் திரு.கலாம், அவருடைய இயக்கத்தில் சேருமாறு நமது இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.

"இளைஞர்கள் இதற்கு தயாரானால்; வாருங்கள் வந்து இயக்கத்தை வலுப்படுத்துங்கள். என்னுடைய இணைய தளத்தில் (www.abdulkalam.com) தொடர்பு கொள்ளலாம்." என்கிறார் கலாம்.

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே. அவர் நல்லவராவதும், தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே" என்னும் பாடல்வரிகள்தான் எத்தனை உண்மை. நல்ல பெற்றோர்களிடம் இருந்து வரும் குழந்தைகள் எப்படி ஊழல் அரசியல்வாதிகளாக, அயோக்கியர்களாக,திருடர்களாக உருவாக முடியும்??

உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களால், மெழுகுவர்த்திகள் ஏற்றிக்கொண்டே மெளனமாக அமர்வதால், ஊழலை ஒழித்துவிடுவது எப்படி சாத்தியம்?

அன்ன ஹசாரே, ராம்தேவ் போன்றவர்களின் போராட்டங்களின் நோக்கம் சிறப்பானதே என்றாலும், அவர்களின் போராட்டமுறைகள் அந்த நோக்கத்தை திசைதிருப்புவதர்க்கே
வாய்ப்புகள் அதிகம்.


நாம் ஏற்ற வேண்டியது மெழுகுவர்த்திகள் இல்லை. தீப்பந்தங்கள். அதற்க்கு தேவை...ஓவ்வொரு இளைஞன் மனதிலும் எழும் ஊழலுக்கு எதிரான தீப்பொறி.

"நாடு மாறவேண்டுமானால் வீடு மாறவேண்டும்" என்னும் திரு.அப்துல் கலாம் அவர்களின் சிந்தனையே உன்னதமானது. குறிப்பாக ஆக்கப்பூர்வமானது.

அப்துல்கலாம் அவர்களின் "இளைஞர் இயக்கம்" வெற்றிபெற வாழ்த்துவோம். நாமும்,நம்மால் முடிந்த பங்களிப்பை தருவோம்.

-இன்பா

Wednesday, June 8, 2011

6 - ஆம் அறிவு

உங்களுக்கு தெரிந்த/தெரியாத பொது அறிவுச் செய்திகள் ஒரு பொன்மொழியுடன்..அவ்வப்போது தொடர் சரக்காக தருகிறோம்.


அறிவுச்சரக்குகள் :

ரோலர் கோஸ்டர் எனப்படும் மிகபெரிய ராட்டினத்தில் பயணம் செய்தால், மூளையில் ரத்தம் கட்டிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம்.

சாதாரணமாக கண்களில் காணப்படும் வெண்மை நிறத்திற்கு பதில், நீல நிறத்தை கொண்டிருக்கும் மனிதனின் கண்களுக்கு இருட்டில் காணும் சக்தி அதிகம்.

எல்லாரும் நினைத்து கொண்டிருப்பதை போல, பணத்தாள்(ருபாய் நோட்டு) காகிதத்தால் செய்யப்பட்டது இல்லை. அது, ஒரு வகை "காட்டன் (cotton) " துணியால் செய்யப்பட்டது.

ஒரு சிறிது துளி சாராயம் அல்லது மதுபானத்தை ஒரு தேளின் மேல் தெளித்தால், அதனால் தாங்க இயலாது. அந்த தேள் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு இறக்கும்.

வெங்காயம் வெட்டும்போது கண்ணீர் வருகிறதா? ஒரு சூயிங்கம் (Chewing gum) மென்றுகொண்டே, வெங்காயம் வெட்டினால் கண்ணீர் வருவது மற்றும் கண்கள் எரிச்சல் பெருமளவு குறையும்.

உலகின் மிக நீளமான நதி...எகிப்தில் உள்ள நைல் நதி என்பது உங்களுக்கு தெரியும்தானே. ஆனால், அந்த நைல் நதிக்கு அடிப்பரப்பில் இன்னொரு நதி ஒன்று ஓடுகிறது. அதன் தண்ணீரின் அளவு, மேற்பகுதில் ஓடும் நைல் நதியின் தண்ணீரின் அளவை விட ஆறு மடங்கு அதிகம்.

ஒரு மணிநேரம் தொடர்ந்து நீங்கள் ஹெட்போனை(headpohne) தொடர்ந்து பயன்படுத்தினால், அது உங்கள் காதுகளில் உள்ள கிருமிகளை 700 மடங்கு அதிகரிக்கும்.

உலகின் அதிக அளவு மனித உயிர்கள் பலியாக காரணமாக இருக்கும் ஒரே உயிரினம்....கொசு.

ஒரு ஆய்வின்படி, வலது கை பழக்கமுடைய மனிதர்கள், இடது கை பழக்கமுடைய மனிதர்களை விட, சுமார் ஒன்பது வருடங்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

நமது மூளை, ஒரு சிறந்த கணிப்போறியைவிட நுட்பமானது. அதில், சுமார் 100 மில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

ஒரு மனிதன் மரணமடையும்போது, முதலில் செயல் இழக்கும் உறுப்பு..அவனது காதுகள்.

ஒரு மனிதனின் விழித்திரைகள் 45 சதவிதம் அதிகமாக விரிவடைகின்றன...அவன் தனக்கு பிரியமானவற்றை காணும்பொழுது.

தேன், மிக எளிதாக ஜீரணமடையும் ஒரு உணவுப்பொருள். ஏன் தெரியுமா? அது ஏற்கனவே தேனீக்களால் ஜீரணிக்கப்பட்டுவிட்டது.

டைட்டானிக் கப்பலை கட்ட ஆன மொத்த செலவு சுமார் 7 மில்லியன் டாலர்கள். ஆனால், அதை பற்றி ஜேம்ஸ் கேமரூன் படமாக எடுக்க ஆன செலவு சுமார் 200 மில்லியன் டாலர்கள்.

நீங்கள் உங்கள் கைவிரல்களை 'நெட்டி' முறிக்கும்போது ஏற்ப்படும் சத்தத்திற்கு காரணம்...நம் உடம்பில் நைட்ரஜன் வாயுவில் உள்ள குமிழ்கள் உடைவதே.

ரத்த ஓட்டம் இல்லாத மனித உடலில் உள்ள ஒரே பாகம்...கண்விழித்திரை. அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.

அறிவுக்கு ஆரோக்கியம் :

நாம் ஒவ்வொரு முறை மனம்விட்டு சிரிக்கும்போதெல்லாம், சுமார் 30 தசைகளுக்கு சிறந்த பயிற்சி அளிக்கபடுகிறது.

ஆகவே வாடிக்கையாள நண்பர்களே....மனம் விட்டு சிரியுங்கள்.

அறிவுக்கு அதிர்வு :
இந்த உலகின் மொத்த பெட்ரோல் உற்பத்தியில் 29 சதமும்,உலகின் மொத்த மின் உற்பத்தில் 33 சதமும் ஒரேயடியாக பயன்படுத்திக்கொள்ளும் நாடு.. அமெரிக்கா.

அறிவுக்கு அழகு :


பதிவு : இன்பா

Tuesday, June 7, 2011

கு(ச)லாம் நபி ஆசாத் பதில்கள்

குலாம் நபி ஆசாத் : காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர் மற்றும் மத்திய அமைச்சர்.

பதில் சொல்வதற்கு என்றே பிறந்தவர்.ஆசாத், கீறல் விழுந்த டேப் ரெக்கார்டர் என்பதற்கு சரியான உதாரணமாய் விளங்குபவர். குலாம் நபி ஆசாத் - திமுகவை பொறுத்தவரை ஒரு 'சலாம்' நபி ஆசாத்.

திமுக - காங்கிரஸ் உறவு குறித்து அவர் வெவ்வேறு காலகட்டங்களில் அவர் தந்த பதில்கள் இங்கே...செய்தி # 1 : பல ஆயிரம் கோடி ருபாய் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதாக ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், திமுக மத்திய அமைச்சர் ஆ.ராசா கைது

குலாம் நபி ஆசாத் : ராசா கைதுக்கும்,திமுக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

செய்தி # 2 : தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு.

குலாம் நபி ஆசாத் : திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி.

செய்தி # 3 : தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் தொகுதி பங்கீடு பிரச்சினையால் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக தி.மு.க. அறிவித்தது.

குலாம் நபி ஆசாத் : திமுகவுடன் உறவு முறியவில்லை. ஏனென்றால் பேச்சுவார்த்தை தொடர்கிறது. தொகுதிகளை இனம் காண அவகாசம் தேவை. பின்னர் நடைபெறும் பேச்சுவார்த்தையில் தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம்.

செய்தி # 4 : சட்டமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி படுதோல்வி.

குலாம் நபி ஆசாத் : சட்டப்பேரவை தேர்தலுக்கு முன், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பாக ஜெயலலிதா கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக அதிமுக தனது விருப்பத்தை தெரிவித்திருந்தது. ஆனால் அதை நாங்கள் ஏற்கவில்லை. ஏனென்றால் சந்தர்ப்பவாத கூட்டணியை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை. ஒரு கட்சி தோல்வியுற்றதால், வெற்றிபெற்ற மற்றொரு கட்சியின் பின்னால் செல்ல முடியாது

செய்தி # 5: 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது மகள் கனிமொழியை சந்தித்துப் பேசுவதற்காக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி காலை டெல்லி வந்தார்.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தமிழக விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் குலாம் நபி ஆஸாத், கருணாநிதியை அவர் தங்கியிருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சந்தித்தார்.

குலாம் நபி ஆசாத் : கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.எனினும் சட்ட நடைமுறைகளில் அரசு தலையிட முடியாது என அவர் கூறினார்.

தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது.

2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் நேரடியாக கண்காணிப்பதையும், இதில் அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை என்பதையும் கருணாநிதி புரிந்துகொண்டுள்ளார்.அது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே.

செய்தி # 6 : ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாட்டுக்களில் மற்றொரு திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணை.

குலாம் நபி ஆசாத் : கருணாநிதியின் வருத்தத்தில் பங்கேற்கிறோம்: மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியின் கைது நடவடிக்கையால், தந்தை என்ற முறையில் கருணாநிதியின் மனது எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கும் என்று புரிகிறது. அவர் மிகுந்த மன வேதனையில் இருக்கிறார். இந்த விஷயத்தில் அவரது வருத்தத்தை பகிர்ந்து கொள்ள மட்டுமே முடியும்.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, சிபிஐ இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருவதால் எங்களால் வேறொன்றும் செய்ய இயலாத நிலையில் உள்ளோம். மத்திய அரசின் பங்கு இதில் ஏதுமில்லை.


நாளை,இப்படி ஒரு செய்தி வந்தால் :

ஆ.ராசா,கனிமொழி மற்றும் தயாநிதி மாறன் இவர்களின் ஊழலுக்கு மூல காரணமாக இருந்ததால், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கைது.

அப்போது குலாம் நபி ஆசாத் இப்படி கூறுவார்:

பிரதமர் கூறியதுபோல ஊழலை ஒழிப்பதில் அரசு முழுமையான, உண்மையான அக்கறையுடன்தான் உள்ளது. கருப்புப் பணம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்க நாங்கள் கடுமையாக முயன்று வருகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

திமுக தலைவர் கருணாநிதி கைதால், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பாதிப்பும் வராது. இன்னமும், தயாளு அம்மாள்,ராஜாத்தி அம்மாள் கைது செய்யப்படவில்லை.

மேலும்,ஸ்டாலின், அழகிரி, உதயநிதி ஸ்டாலின், துரை தயாநிதி போன்ற இரண்டாம் கட்ட தலைவர்கள் இருக்கிறார்கள்.

திமுகவில் கடைசி தலைவர் கைது செய்யப்படும் வரை,திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது.


-இன்பா

Sunday, June 5, 2011

மனப்பாட எந்திரன்கள்


சமிபத்தில் நடந்த ஒரு சம்பவம் இது.

தேர்வு முடிவுகள் வந்த தருணத்தில்,எனக்கு தெரிந்த ஒரு பத்தாம் வகுப்பு முடித்த
மாணவனை அவனது பெற்றோர்கள் கடுமையாக கண்டித்ததில், மனமுடைந்த அவன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான்.

நீங்கள் நினைப்பது போல அவன் 'பெயிலாக'வில்லை. அவன் வாங்கிய மதிப்பெண்கள் 375.அவன் நானூற்று ஐம்பது மார்க்குகள் வாங்கி, அவன் படித்த பள்ளியில் முதலாவதாக வரவில்லை என்று அவன் பெற்றோர்கள் அவனை கடுமையாக கடிந்து கொண்டதே, அவன் மனமுடைந்து போனதற்கு காரணம்.

ஒவ்வொருமுறை தேர்வு முடிவுகள் வரும்போதெல்லாம், எதோ ஒரு ஊரில் எதோ ஒரு மாணவனோ மாணவியோ "பெயிலாகி" விட்டதால் தற்கொலை செய்துவருவது இன்று சாதாரண செய்தியாகிவிட்டது.

மதிப்பெண்களே இன்றைய மாணவனுக்கு அளவுகோல். அடுத்த மாணவனை சுட்டிக்காட்டியே அவனது தன்னம்பிக்கையை குறைப்பதுதான் இன்றைய பெற்றோர்களின் அளவுகோல்.

மெக்காலே உருவாக்கிய மனப்பாடம் செய்து,தேர்வில் வாந்தி எடுக்கும் கல்வி முறையை இன்னும் எத்தனை நாளைக்குதான் நாம் கட்டிக்கொண்டு அழப்போகிறோம்.

நமக்கு இந்த கல்விமுறையை அறிமுகப்படுத்திய இங்கிலாந்திலேயே,இத்தகையே கல்வி முறை இல்லை என்பதை நாம் அறிவோமா?

ஃபின்லாந்தில் 7 வயது வரை வகுப்புகளில் வெறும் விளையாட்டு மட்டும்தான்.

" 7 வயது வரை ஏ, பி, சி, டி சொல்லிக்கொண்டிருந்தால் குறுகிய காலத்தில் அபரிமிதமான வளர்ச்சி தெரிகிறது. ஆனால் 7 வயது வரை வெறுமனே விளையாடிக்கொண்டிருந்த குழந்தை நீண்ட கால ஓட்டத்தில் ஏ, பி, சி, டி படித்துக்கொண்டிருந்த குழந்தையைவிட படு வேகமாக அறிவாற்றலும் படைப்பாற்றலும் பெறுகிறது. இது ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இந்தியக் கல்வி முறையில்கூட ஏட்டுக் கல்வியில் தங்க மெடல் வாங்கிவிட்டு நிஜ வாழ்வில் பூஜ்ஜியமாக இருப்பவர்களையும் பள்ளியில் ஃபெயிலாகிவிட்டு நிஜ வாழ்வில் பெரு வெற்றி பெற்றவர்களும் அதிகம்" என்கிறார் எழுத்தாளர் மாயா.

இன்று தொழில் துறையில் சிறந்து விளங்குபவர்கள், சச்சின் போன்று விளையாட்டு துறையில், ஏ.ஆர்.ரகுமான்,இளையராஜா போன்று கலைத்துறையில் சாதித்தவர்கள் என்ன படித்தார்கள்? சச்சின் பிளஸ் டூ தெரிவில் பெயிலானவர் ஆவார்.

இன்றைய மாணவனுக்கு, ஒரு துறையில் சாதிக்க, நல்ல வேலையில் சேர மதிப்பெண்கள் ஒரு அளவுகோலே இல்லை. இன்றைய நிறுவனங்கள் நோக்குவதேல்லாம்....மாணவனின் வேலை சார்ந்த திறமை மற்றும் நிர்வாகத்திறனையும்.

"கிரேடு முறைக்கு மாறும் சி.பி.எஸ்.இ. ஒரு நல்ல மாற்றத்தை முன்மொழிகிறது. இதில் ஃபெயில் என்ற வார்த்தையே கிடையாது. மிகக் குறைவான தரப் பிரிவைச் சேர்ந்தவர்களின் கல்விச் செயல்பாடு திருப்தி தரவில்லை (E2-unsatisfactory) என்றே வகைப்படுத்தப்படுகிறது. கல்வியின் நோக்கம் அறிவையும் விழிப்புணர்வையும் உலக ஞானத்தையும் ஏற்படுத்துவதே அன்றி முத்திரை குத்துவதோ, மட்டம் தட்டுவதோ அல்ல. சி.பி.எஸ்.இ. அறிமுகப்படுத்தியிருக்கும் கிரேடு முறை அனைத்துத் தரப்பிலும் பின்பற்றப்பட வேண்டும். மதிப்பெண்ணின் முக்கியத்துவத்தைக் குறைப்பதால் மாணவர்கள் மனப்பாடத்திற்கு செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டு விளையாட்டிலும் கலைகளிலும் ஈடுபாடு காட்ட அதிகம் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.

குறைந்தது 10வது வரை ஒருவரையும் ஃபெயில் செய்யக்கூடாது என்ற மாற்றத்தையும் சி.பி.எஸ்.இ. பரிசீலிக்கிறது. ஆனால் 10, 12ஆம் வகுப்புகளிலும்கூட ஃபெயில் செய்வதில் அர்த்தமில்லை என்பதை நாம் உணர வேண்டும். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே அது அதிகாரபூர்வமற்ற முறையில் நடைமுறையில்தான் உள்ளது.

ஏதாவது ஒரு குறிப்பிட்ட பாடத்தில் பட்டம் படித்துவிட்டு கணிதம், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் எடுக்கும் அவலத்திற்கு ஆளாகும் கிராமப்புற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அதை நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆசிரியர் எண்ணிக்கையையும் கல்வியின் தரத்தையும் உயர்த்தினால் அன்றி 50 சதவீத கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கூட நியாயமாக பாஸ் செய்ய மாட்டார்கள் என்று கூறுகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள்.

அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளையும் தரத்தையும் மேம்படுத்துவது மிகவும் அவசியம்தான். அதோடு, இந்தியாவுக்கே பல்வேறு விஷயங்களில் முன்னோடியாக இருக்கும் தமிழகம் பாஸ், ஃபெயில் என்பதை ஒழிப்பதிலும் முதல் மாநிலமாக இருக்க வேண்டும். உயர் கல்வியில் சேர்வதற்கென்று தனியாக குறைந்தபட்சத் தகுதி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதால் இது எந்த வகையிலும் உயர் கல்வியின் தரத்தைப் பாதிக்காது. மண்ணெண்ணெய்க்கும் தூக்குக் கயிருக்கும் ரயிலுக்கும் அடுத்த ஆண்டும் இளம் பிஞ்சுகளை இழக்காமலிருக்க, தேவை இந்த அத்தியாவசியமான மாற்றம்"

-இவ்வாறு வலியுறுத்துகிறார் எழுத்தாளர் மாயா.

இன்று பேசப்பட்டுவரும் சமச்சீர் கல்வி முறையும். மாணவனை வெறும் "மனப்பாட எந்திரனாக" மாற்றும் ஒரு முறைதான். அரசுப்பள்ளிகளில், கிராமப்புறங்களில் சமச்சீர் கல்வியை முறையாக கற்று தரும் ஆசிரியர்களுக்கு எங்கே போவது?

சுய சிந்தனைக்கு வாய்ப்பளிக்கும், விளையாட்டுடன் கூடிய ஒரு இயல்பான கல்வி முறையே இன்று நம் குழந்தைகளுக்கு அவசியம்.

சிறந்த மனப்பாட திறன் உள்ள மாணவனே படிப்பில் சிறந்தவன் என்னும் நிலையை மாற்றும்,பாஸ் - பெயில் இல்லாத ஒரு கல்வி முறை வேண்டும்
என்னும் ஒரு புதிய சிந்தனை நமக்குள் பரவட்டும்.

-இன்பா

Saturday, June 4, 2011

கருணாநிதி,ஹாசாரே,ராம்தேவ் - உண்ணாவிரதங்கள்

என்னையும், நமது மீடியாவையும் கவர்ந்த அல்லது பாதித்த மூன்று உண்ணாவிரத போராட்டங்கள் பற்றி எழுதுகிறேன்.


இலங்கையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது,அப்போது ஒரு நாள் மட்டும் அடையாளவிரதம் இருந்தார் கருணாநிதி.

அந்த சமயத்தில், அவர் தமிழக முதலமைச்சர்.நாற்பது எம்.பி.க்களை உடைய மத்திய அரசில்,காங்கிரசுக்கு அடுத்த பெரிய கட்சி அபோது திமுக.சுமார் பத்து மத்திய அமைச்சர்கள் இருந்தார்கள் கருணாநிதிவசம்.

இரண்டு பக்கமும் இரண்டு மனைவியர், பேரன்கள்,பேத்திகள், நான்கு ஏசி எந்திரங்கள் சூழ,ஈழத்தமிழர்களின் படுகொலைகளுக்காக உண்ணாவிரதம் இருந்தார் கருணாநிதி.

அவரது உண்ணாவிரதம் எப்படியோ ஒரு "ஆரஞ்சு ஜூஸ்" அல்லது ஒரு "நீர் மோர்" மூலம் அன்று முடிவுக்கு வந்துவிட்டது.

ஆனால், இன்றும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன...இலங்கையில் இனப்படுகொலைகள்.


அன்னா ஹசாரே அவர்கள் ஊழலை எதிர்த்து ஒரு உண்ணாவிரதம் இருந்தார். அவரது நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? ஒன்றும் புரியவில்லை.

ஊழலுக்கு நிரந்திர தீர்வு என்று கூறி ஜன்லோக் பால் மசோதாவை நிறைவேற்ற வேண்டுமாய் ஒரு போராட்டத்தில் திரு.அன்னா ஹசாரே இறங்க, அவருக்கு பின்னால் இந்தியாவே திரண்டது. பின்னர் மத்திய அரசு வரும் குளிர்கால கூட்டத்தொடரில் இம்மசோதாவை நிறைவேற்றுவதாக வாக்களித்ததாக கூறி, தனது உண்ணாவிரத போராட்டத்தை முடித்தார் ஹசாரே.

இம்மசோதாவின் படி, ஹாசாரே அவர்களால் தேர்வு செய்யப்பட்ட அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் கொண்ட ஒரு வரைவு குழு அமைக்கப்பட்டது.

இந்த ஒரு அம்சத்தை சுட்டிக்காட்டி, இந்த மசோதாவை நிறைவேற்ற அனுமதிக்ககூடாது என்று நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த வரைவு திட்டத்தில் ஹசாரேவுக்கு அடுத்தபடியாக முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் மற்றும் இதே குழுவில் இடம் பெற்று இருக்கும் அவரது வாரிசு(??) பிரசாந்த் பூஷன் ஆகியோர் சம்பந்தப்பட்ட சிடி ஒன்று அந்த சமயத்தில்
வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

"எனது மகன் பிரசாந்த் பூஷண் நினைத்தால் ரூ.4 கோடி வரை கொடுத்து நீதிபதிகளை விலைக்கு வாங்கிவிடுவார் " என்று சாந்தி பூஷன் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் அவர்களுடன் உரையாடி இருப்பது தெரியவந்தது.

இந்த சிடியை ஆராய்ந்த சில தடயவியல் நிபுணர்கள், இது உண்மையான சிடி தான் என்று கூறியுள்ளனர்.

லோக்பால் வரைவு மசோதா கமிட்டிக்கு சாந்திபூஷனை பொறுப்பில் அமர்த்த வேண்டும் என அன்னா ஹசாரே அவர்களால் முன்மொழியப்பட்ட சாந்திபூஷனுக்கே, ஹசாரேவால் உத்திரவாதம் தரமுடியாத போது, அந்த வரைவு கமிட்டியில் உள்ள மற்றவர்களுக்கும், ஊழல் ஒழிப்பிற்கும் அவரால் எப்படி உத்திரவாதம் தர முடியும்??

"என்னை பொறுத்தவரை, பார்லிமென்ட் தான், மிக உயர்ந்த ஜனநாயக அமைப்பு. லோக்பால் மசோதாவை, பார்லிமென்ட் புறக்கணித்து விட்டால், பார்லிமென்டின் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன்" என்று வேறு அறிவித்து இருக்கிறார் ஹசாரே.

எல்லா அரசியவாதிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பது ஹசாரேவுக்கு தெரியாதா? ஊழல் செய்யாத அரசியவாதிகள் யாரும் இல்லை என்பது அவருக்கு புரியாதா? இதற்குத்தானே அவர் போராட தொடங்கி, மக்களை திரட்டினார்??

பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா போன்று வெறும் வாய் வார்த்தையில் மட்டுமே வேலைக்காகும் ஜன்லோக் பால் மசோதா.இது,வெறும் கண்துடைப்பு அல்லது நாடகம் என்ற உணர்வையே தருகிறது.


"ஊழல் குற்றச்சாட்டு நிரூபணம் ஆகிவிட்டால், அந்த ஊழல் ஆசாமிக்கு மரணதண்டனை விதிக்கபடவேண்டும்" உட்பட பத்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தில் தற்சமயம் இறங்கி இருக்கிறார் பாபா ராம்தேவ்.

கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட பந்தல் போட்டு,5000 மின்விசிறிகள் , போர்வெல் போட்டு 650 குழாய்கள், கிட்டத்தட்ட 1000க்கும் மேற்பட் பாத்ரூம், டாய்லெட்கள், கண்காணிப்பு குழுவாக சுமார் 60 டாக்டர்கள் என "உண்ணாவிரத செட்டிங்" போடப்பட்டு இருக்கிறது.

"பாபா ராம்தேவ் ஜெட் விமானத்தில் பறக்கிறார். ஐந்து நட்சத்திர வசதிகளுடன் அவருக்கு உண்ணாவிரத அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, பாபா ராம்தேவ் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் எந்தவகையான சத்தியாகிரகம் என்று எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்து இருக்கிறார் அமைச்சர் திக்விஜய் சிங்.

ஆனால், பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் அறிவித்தபோது, பிரதமர் முதல் காங்கிரஸ் அமைச்சர்கள் அவரை தொடர்பு கொண்டு, உண்ணாவிரதத்தை கைவிடும்படி கேட்டுகொண்டது ஏன்???

"ஊழலை ஒழிப்பதாக கூறும் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருக்க, ரூ. 18 கோடி செலவில் தில்லி ராம்லீலா மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பாவி மக்களை கவருவதற்காக கறுப்புப் பணத்துக்கு எதிராக போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசை பயமுறுத்த அவர் உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். ராம்தேவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து செல்வதா?"

- இவ்வாறு அறிக்கை விடுத்து இருக்கிறார் திராவிட கழக தலைவர் என்று தன்னைதானே சொல்லிக்கொண்டு,பெரியாரின் சொத்துக்களை நிர்வகித்து(?)கொண்டுவரும் கி.வீரமணி.

பாபா ராம்தேவ் ஒரு யோகா மாஸ்டர்.எந்த ஒரு பதவி மற்றும் அதிகாரத்தில் இல்லாதவர்.

அரசியலில் இருந்து ஊழலை ஒழிக்க அவர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்துவருகிறார்.

தனது அறக்கட்டளையின் சொத்துக்கள், பணம் வந்த வழி, வரும் வழி ஆகிய அனைத்து விவரங்களையும் மக்கள் முன் சமர்பிக்க ராம்தேவ் முன்வந்து இருக்கிறார்.

மேலே சொன்ன,இந்த மூன்று உண்ணாவிரதங்களும் நம்மை "மண்டை காய" வைத்ததோடு, மீடியாவுக்கும் 'சரியான தீனி' போட்டவை.

சொல்லுங்கள், இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் கவனம் பெற்ற,இந்த மூன்று உண்ணாவிரதங்களில் எது நிஜம்?? எது பொய்??

-இன்பா

 
Follow @kadaitheru