Saturday, October 17, 2009

மக்கள் ஆதரவை இழந்த மார்க்சிஸ்ட்டுகள் - முதல்வர் புத்ததேவ்


1964 ஆம் ஆண்டு, இந்தியாவில், கம்யூனிஸ்டு கட்சி இடது, வலது என பிரிந்தது. மார்க்சிஸ்ட் கட்சி இடதுசாரிகள் ஆக உருவானது. இந்த பிரிவினைக்கு காரணம், கட்சிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள். மாசேதுங் சார்ந்த கொள்கைகளை முன்னிறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி.


பாட்டாளி மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியை உருவான இயக்கம், சிங்கூர், நந்திக்கிராமத்தில் நடந்த சம்பவங்கள் மூலம் தனது சித்தாந்தங்களுக்கு நேர் எதிராக, சர்வதிகார சக்திகளை மிஞ்சும் வகையில் உருவெடுத்துவிட்டது.


"மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது, கட்சி மக்களிடமிருந்து விலகிவிட்டது" என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறினார்.

"மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டதற்கு அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே சாட்சியம்,நம் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்" என்றார் அவர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பரசத் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்று கட்சிப் பத்திரிகை ஜனசக்தியில் கூறப்பட்டுள்ளது.


இழந்த செல்வாக்கை மீட்கவும் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கவும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்."ஏழைகளில் ஒரு பகுதியினர், நாம் முன்பு போல அவர்களது நலனில் அக்கறை செலுத்துவது இல்லை என்று கருதுகின்றனர்.திரிணமூல் காங்கிரஸ் பெயரைக் குறிப்பிடாமல் அந்தக் கட்சி மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றை வளர்த்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

கம்யூனிஸ்டுகளின் இரும்புக் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி தோல்வியடைந்தது. திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செல்வாக்குடன் திகழ்ந்த மார்க்சிஸ்ட் முதல் முறையாக சரிவைச் சந்தித்தது.

சிங்கூர், நந்திக்கிராமத்தில் டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க விளை நிலைங்களை கட்டாயமாக கையகப்படுத்தியது மாநில அரசு. இதை எதிர்த்த விவசாயிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர். விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு சரிந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.


மேற்கு வங்காளத்தை விட்டு தள்ளுங்கள்.


திருவனந்தபுரத்தில் முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:


"முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட கோரி கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டுடன் நல்லுறவை நீடிக்கவே கேரளா விரும்புகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் தமிழகம் நடந்து கொள்ளக்கூடாது. புதிய அணை கட்டுவதில் கேரளம் உறுதியாக உள்ளது".


மலையாள சக தோழர் பிணாராயி விஜயன் மீது வழக்கு போடப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மாவட்ட தலைநகரங்களில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய தமிழக மார்க்சிஸ்ட்டுகள், முல்லை பெரியாறு விவகாரத்தில் காட்டும் மவுனம்தான் அவர்கள் வாய்கிழிய பேசும் போராட்ட சித்தாந்தங்களா?மாநிலத்திற்கு,தேர்தலுக்கு என்று ஒவ்வொரு கூட்டணி வைத்திருப்பது மற்ற அரசியல் கட்சிகளை போல சாக்கடை அரசியல் செய்யும் கட்சியை, என்று எப்படி பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைப்பது?


நான்கு மாவட்ட பாசனத்தில், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்கு பெயர்தான் பொதுவுடைமை கொள்கையா?பதிவு : இன்பா

1 comments:

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

எப்படி இன்றைய காங்கிரசை பழைய காங்கிரசுடன் ஒப்பிட முடியாதோ, அதே போல் இன்றைய கம்யூனிஸ்ட் கட்சிகளை உண்மையான கம்யூனிஸ்ட்களாக கொள்ள முடியாது. இவர்களும் முதலாளித்துவ வாதிகளே. தொண்டர்களை ஏமாற்றி தாங்கள் மட்டும் வளத்தை பெருக்கி கொள்ளும் முதல் தர(ம் கெட்ட) துரோகிகள்.

 
Follow @kadaitheru