Saturday, October 31, 2009

நதிநீர் இணைப்புத் திட்டம் - நன்மையா? தீமையா?


நதிகள் இணைப்பு திட்டம்....அடிக்கடி செய்திகளில் மட்டும் அடிபடும் ஒரு திட்டம்.இன்றைக்கும் ஒரு செய்தி ஆகி இருக்கிறது நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களின் ஒரு அறிக்கையால்.

கடந்த மாதம் சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எம்.பி., நதிநீர் இணைப்புத் திட்டம் பேரழிவு திட்டம் என்றும், இந்தத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து விளையும் என்றும் கூறினார். இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், டெல்லியில் ஓர் ஆங்கிலப்பத்திரிகை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கலந்து கொண்டார். தொடக்க உரைக்கு பிறகு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதில் அளித்து மன்மோகன்சிங் கூறியதாவது:-

"நதிநீர் இணைப்பு திட்டத்தால், கூடுதலான விவசாய நிலங்களில் நீர்ப்பாசனம் செய்ய முடியும். ஆனால் இதில் சில பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கவலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், அது உயிரினங்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, நதிநீர் இணைப்பு திட்டத்தை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டி இருக்கிறது.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டம், எந்த அளவுக்கு மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பை அளிக்கும் என்று நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும், தற்போது இரண்டு, மூன்று நதிநீர் இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஓடும் கேன்- பேட்வா நதிகளை இணைக்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை சோதித்து பார்க்கப்போகிறோம்" - என்று அறிவித்து இருக்கிறார் பிரதமர் அவர்கள்.

நதிகள் இணைப்பு எந்த அளவுக்கு சாத்தியம்? எளிதில் முடிகிற காரியமா இது?இதனால் ஏற்படும் சாதக,பாதகங்கள் என்ன?

இரண்டு விஞ்ஞானிகளின் இருவேறு மாறுப்பட்ட கருத்துக்களை உங்கள் முன்வைக்கிறேன்.

டாக்டர் அப்துல்கலாம் : "நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே" என்கிறார் கலாம் அவர்கள். இவர் தமிழக நதிகளை இணைத்து, அவற்றுக்கு ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்கும் ஒரு புதிய திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்.

நதிநீர்இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம்கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான்கேட்கிறோம்.

தமிழ்நாடுவாட்டர்வேஸ் பிராஜக்ட் பற்றிச் சொல்லியிருந்தேன். அது ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடியஅற்புதமான திட்டம்.

தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.இது என்னுடைய கனவுத் திட்டம்.

இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இது ஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.

முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.இரண்டாவது கட்டம் மேட்டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய்திட்டங்கள்.

இப்படி நதிகளைஇணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது.
பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடிய பிராக்டிகலான திட்டம்.இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.

150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்குவரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
சாலைப்போக்குவரத்தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக்கும். ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும். புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.

சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா? அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமிழகத்தில் நதிகளை இணைத்தார்கள், அதன் மூலம் தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப்பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?

என்று ஒரு கட்டுரையில் விளக்கம் தந்து, தனது நதி நீர் இணைப்பு கனவை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் : "இயற்கைக்கு முரணாக நதிகளின் போக்கை திருப்பிவிடக் கூடாது" என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"நதிகளின் போக்கை திரும்பிவிடக் கூடாது. அது இயற்கைக்கு முரணானது. அதனால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வனப்பகுதியும் அழிந்துவிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நதி நீர் ஆதாரம் இல்லாத நிலையில் மன்னர்கள் ஏராளமான ஏரிகள், குளங்களை அமைத்தனர். அவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்து வந்தது. அப்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீரின் தேவையும் குறைவாக இருந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் பாழ்பட்டது. நீரின் தேவையும் அதிகரித்தது. பராமரிப்பின்றி ஏரிகளும் குளங்களும் தூர்ந்துபோனதால், விவசாயமும் அழிந்து வருகிறது. நமது விவசாயிகள் 120 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி வந்தனர். அவற்றில் 90 வகை நெல் ரகங்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. இவை எல்லாமே வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. மக்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவித்து இருக்கிறார் நம்மாழ்வார் அவர்கள்.

இயற்கை வேளான்மை திட்டம் பின் நதிகள்,குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல் போன்றவையே அரசு செய்யவேண்டிய, அத்தியாவசியமான திட்டங்கள் என்கிறார் அவர்.

நமது வாசக நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் "எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும்,அவையாவும் இயற்கைக்கு ஈடாகுமா..?" என்று கேட்டுஇருந்தார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறுவதுபோல, இயற்கை என்பது ஒரு எல்லை இல்லா மாபெரும் சக்தி. அதற்க்கு எதிராகவோ அல்லது முரணாகவோ செல்வது மனிதர்களால் இயலாத காரியம் என்றே நமக்கு தோன்றுகிறது. அப்படி செல்வது, தீமைகளையே தரும் என்றும் தோன்றுகிறது.

கடைக்காரர் கமெண்ட்:
நம்ம ஊரு நெய்வேலி கரண்ட்டு எல்லா மாநிலத்துக்கும் போகுது. கேட்டா அது தேசிய உடைமைன்னு சொல்றாங்க.

ஆனா காவேரி, பாலாறு போன்ற நதியெல்லாம் அது உருவாகுற மாநிலத்துக்குத்தான் சொந்தமாகுது. நமக்கு மிச்சம்,மீதிதான் அனுப்புறாங்க.

முதல்ல நதிகளை தேசிய உடமை ஆக்குங்க...அப்புறம் அதை சேக்கறது பத்தி பாக்கலாம்.
பதிவு : இன்பா

Thursday, October 29, 2009

பூமியை காக்குமா நானோ தொழில்நுட்பம்?


"பருவநிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை இனிமேலும் அலட்சியப்படுத்த முடியாது. இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தை காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும்" - இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்துஇருந்தார் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன்.

வெப்பமயம் பற்றி ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தலைமையிலான "உலக மனிதநேய அமைப்பு" முதல்முறையாக விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சில மாதங்களுக்கு முன்னால் வெளியிட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

சுற்றுப்புற சுழல், மாசு படும் கற்று, குறையும் நிலத்தடி நீர், அழிந்துவரும் விளைநிலங்கள், அழிக்கப்பட்டுவரும் காடுகள்......நமது பூமியின்,மனித இனத்தின் மிகப்பெரும் எதிரிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.

புவி வெப்பமயமாதலால் ஏற்ப்படும் தீமைகளை, விளைவுகளை பற்றி பல கட்டுரைகள், பிரச்சாரங்கள் வந்துஇருக்கின்றன.

2030ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

2000 - 2007 வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட புதிய தரவுகளின் படி, வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் காபனீரொக்சைட் மற்றும் மெதேன் வாயுக்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த நிலை தோன்றி இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெருமளவு சுவட்டு எரிபொருட்களை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச்செயற்பாடு அதிகளவு காபனீரொக்சைட்டை வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது.
அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வெப்பமடைவதால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு மையம் எச்சரித்துள்ளது.

வறட்சியைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பல நாடுகள் இப்போதிருந்தே எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

வறட்சி மற்றும் நீராதாரத்தை திறம்பட நிர்வகிக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளாகும். இதிலும் குறிப்பாக வறட்சியை சமாளிக்க நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. புவியின் சுற்றுச் சூழலை பாதிக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்காத வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. - இவ்வாறு கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.மற்றும் சுற்று சுழல் ஆய்வாளர்கள்.
தொழில் மயமாக்கத்தால் வெளியேறும் வாயுக்களால் உலகம் வெப்பமடைதல் அதிகரித்துவரும் நிலையில், அது முன்னேற்றத்திற்குத் தடையாவது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென சுற்றுச் சூழல் இயக்கத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணன் எச்சரித்துள்ளார்.

உலகம் வெப்பமாவதை தடுக்கவும், அதற்கான வழிமுறைகளை ஏற்கவும், அதனடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடையேதுமின்றி வழங்கலும், அதற்கான தொழில் நுட்பங்களில் முதலீடுகளைச் செய்தலும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியமான வழிகளே என்று கூறிய சுனிதா, இன்றைய நிலையில் உலகின் சுற்றுச் சூழலிற்கு மட்டுமே அச்சுறுத்தலாய் உள்ள இப்பிரச்சனை எதிர்காலத்தில் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலாகலாம் என்று எச்சரித்தார்.

காற்றாலை, நீர் மின் நிலையம், சூரிய வெப்ப சக்தியை மின் சக்தியாக்கல் போன்ற மாற்றுத் தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் வெப்பமயமாதலை மிக அதிக அளவிற்கு குறைக்க முடியும் என்றார் அவர்.

இந்த முறைகளை போன்று, நானோ தொழில்நுட்பம் மூலம் பூமி வெப்பமயமாதலை குறைக்க முடியும் என்று ஒரு கருத்து நம் தமிழகத்தில் முன்வைக்க பட்டுள்ளது.

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.

நானோ தொழில் நுட்பம் என்பது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்துவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் National Nanotechnology Initiative - நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications."

நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கு வரும் 30ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை கூடுதல் செயலர் எஸ்.ஆர்.ராவ் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

நானோ தொழில் நுட்பம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதை பயன்படுத்தி வறுமையை ஒழிக்க வேண்டும். ஆக்க சக்திகளுக்கு மட்டுமே நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது மருத்துவம், ராணுவத்திற்கும் நானோ தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பூமி வெப்பம் அடைந்து வரும் வேளையில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பசுமையை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகத்தின் பேரிடர் மேலாண்மைக்காக ரூ.2.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ராவ் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர், இத்தாலி பெரேரா பல்கலைக் கழக பேராசிரியர் டோனாடோ வின்சென்சி, அண்ணா பல்கலைக்கழக கிரைஸ்டல் குரோத் சென்டர் இயக்குநர் அறிவொளி, கிண்டி பொறியியல் கல்லூரி டீன் எம்.சேகர், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி டீன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நானோ தொழில்நுட்பம், நம் பூமி வெப்பமயமாவதில் இருந்து நம்மை காப்பாற்றுமா என்பதை பொறுத்துஇருந்துதான் பார்க்கவேண்டும்.


கடைக்காரர் கமெண்ட்:
அது என்ன நானோவோ..என்னமோ..இந்த பூமி சூட்டை குறைக்க நமக்கு தெரிஞ்ச...முடிஞ்ச..எளிமையான வழி வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கறதுதான்.
ஆனா அதை நம்ம அரசியல்வாதிங்க எதாவது போராட்டம் பண்ணும்போது..பஸ்ஸை நிறுத்தனும்ன்னு ரோட்டுல வெட்டி போடாம இருக்கனும்ங்க.
பதிவு : இன்பா

Wednesday, October 28, 2009

இதற்குமேல் என்ன பண்ண முடியும்? - கனிமொழி பேட்டி


பத்து தமிழக எம்.பிக்களை தேர்வு செய்து நம் தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பி இருந்தது தெரிந்ததே. அதன் முக்கிய நோக்கம் போருக்கு பின்னர் அங்கு வாழும் தமிழர்களின் நிலையை அறிந்துகொள்ள, அவர்கள் வாழும் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை நேரில் கண்டறிய, அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப குடியேற்றுதல் போன்றவற்றை அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்துவதே.

அவர்களின் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? இதனால் அங்கு என்ன என்ன மாற்றங்கள் நடந்தது அல்லது நடந்து விட்டது அல்லது நடக்க போகிறது?

நம் மனதில் எழும் இந்த கேள்விகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார் அங்கு சென்று வந்த தி, மு, க எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி.

கேள்வி: செம்மொழித் தமிழ் மாநாடு உட்பட, எல்லாவற்றுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடும் முதல்வர், இலங்கைப் பயணத்துக்கு மட்டும், கூட்டணியோடு சுருக்கிக்கொண்டது ஏன்?

பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் உட்படத் தொடர்ந்து முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும், இது முதல்வருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. அவர் நேரில் செல்ல இயலாத நிலை என்பதால், அவர் சார்பில், மத்திய அரசின் அனுமதியோடு கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் சென்றோம். இதில், அனைவரையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

கேள்வி: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களையும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

பதில்: எங்கு இருந்தாலும், முகாம் என்பது முகாம்தான். இங்கு இருப்பவை, இன்னொரு நாட்டில் புகலிடம் தேடி வந்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள். ஆனால், தமது சொந்த நாட்டிலேயே எந்த மண்ணை நம்பி வாழ்ந்தார்களோ அங்கேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்படுவது, யாராலுமே நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத விஷயம். இங்கு இருப்பவர்களும், ஒரு வரையறைக்குள் தான் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கிறது. அதிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் கருணாநிதி, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக இருக்க வேண்டுமா?

கேள்வி: வசதி வாய்ப்புகளின் அடிப்படையில், முகாம்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

பதில்: முகாம்கள், மனிதர்கள் வாழும் இடம் இல்லை என்பதே என் கருத்து. ஐந்து நட்சத்திர ஹோட்டலையே முகாமாக மாற்றினாலும், அது முகாம்தான். முதல்வர் சொன்னமை போல, தங்கக் கூண்டாக இருந்தாலும், அடைபட்டுக் கிடப்பது வேதனை தானே! அதற்காக, முகாம்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளன என்று சொல்லவில்லை. முகாம்களுக்கே இருக்கக் கூடிய பிரச்சினைகள் அங்கு இருக்கின்றன. அதை மறுக்கவே முடியாது. அங்கிருக்கக் கூடிய சிலர் சொல்லலாம், "உங்கள் ஊர் முகாம்களை விட எங்கள் ஊர் முகாம் சிறப்பாகத் தான் இருக்கின்றன'' என்று. பிரச்சினை அதில்லை. சொந்த நாட்டிலேயே அவர்கள் ஏன் அகதிகளாக இருக்கவேண்டும் என்பதுதான் கேள்வி.

கேள்வி: முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் கண்ட பிறகும், தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று ராஜபக்ஷ அரசை எப்படி நம்புகிறீர்கள்?

பதில்: தீர்வைக் கொடுக்கும் இடத்தில் அவர்கள்தானே இருக்கின்றனர்? அவர்களோடுதான் நாம் பேசியாக வேண்டும். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அதைத் தவிர நம்மிடம் வேறு வழி இல்லை. இதை அரசியலாக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், அவர்கள் கையில் தான் இருக்கிறது. அது ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி; ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி. இலங்கை அரசோடுதானே நாம் பேசியாக வேண்டும்...?

கேள்வி: வெறுமனே கோரிக்கை, வேண்டுகோள் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா?இலங்கை விவகாரத்தில் முதலுதவி என்பது நிரந்தரத் தீர்வா?

பதில்: என்ன பண்ணியிருக்க முடியும், என்ன பண்ணியிருக்க முடியாது என்பவை யெல்லாம் கடந்துபோன விஷயங்கள். அதை அலச வேண்டிய காலகட்டம் இது அல்ல; இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்த பிறகு, இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துப் பேசி, அலசலாம். இது அவசர நிலை. உடனடித் தேவை முதலுதவி. இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசுவது சரியல்ல. மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், ஒரு நாடு இன்னொரு நாட்டு உரிமையில் குறுக்கிடுவது எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி இருக்கிறது. இன்னொரு நாட்டுக்கு நெருக்கடி கொடுப்பது, ஒரு நிமிடத்தில் நடக்கக் கூடிய விஷயமில்லை.

கேள்வி: ஏற்கனவே, அமைதிப்படையை அனுப்பிய அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறதே?

பதில்: இப்போதைய கால கட்டத்தில், அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என நினைக்கிறேன். அது சரியான தீர்வாக முடியுமா என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

கேள்வி: பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.கவும் மத்திய அரசும் மிதமான போக்கைக் கைக்கொள்வதாகக் குற்றச்சாட்டு இருக்கிறதே.....?

பதில்: இதற்குமேல் ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. சர்வதேசப் பிரச்சினையில் மத்திய அரசுதான் முடிவு எடுக்கமுடியும். போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம்; மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வர் உட்பட அனைவரும் மாறி மாறி மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம். முதல்வரே உண்ணா விரதம் இருந்தார். அதன் பிறகு தானே, அப்பாவிகளைக் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தனர். இதற்கு மேல் என்ன பண்ண முடியும்? அமெரிக்கா போன்ற நாடுகளே, ஓரளவுக்கு மேல் என்ன நெருக்கடி கொடுக்க முடிந்தது?

கேள்வி: எந்தப் பக்கம் சாய்வது என்ற தெளிவு இந்தியாவுக்கே இல்லாததால், உலக நாடுகளும் அடக்கி வாசித்தன என்ற கருத்து உள்ளதே?

பதில்: தமிழர்களாக நாம் இப்போது செய்ய வேண்டிய விஷயம், இலங்கைத் தமிழர்கள் வாழ்வை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதுதான். எது சரி, எது தவறு என ஆராய வேண் டியது அவசி யம். அதற்கான காலகட்டம் வரும்போது தான் அதைச் செய்யவேண்டும். அதற்கான காலம் இது இல்லை. "இதுதான் இதன் பதில்" எனத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

கேள்வி: ஒட்டுமொத்தமாக, உங்கள் இலங்கைப் பயணத்தால் கண்ட பலன் என்ன?

பதில்: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முதல் கோரிக்கை. அதை ஏற்றுத்தான், முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதியளித்தனர். தற்போது வரை 50 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வருகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலான விஷயம். இதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் விடுவிக்கப் பட்டுவிடுவர் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்துள்ளது. இதோடு முடிந்து போகிற விஷயமும் இது இல்லை. ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்பதுதான் நம் முக்கியமான குறிக்கோள்.

கேள்வி: தமிழர்கள் விடுவிக்கப்படுவதற்குக் காலக்கெடு எதுவும் இருக்கிறதா?

பதில்: இதுவரை 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என அறிவித்துள்ளனர். மீதமுள்ளோரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கேள்வி: இதை எப்படிக் கண்காணிக்கிறீர்கள்?

பதில்: அங்குள்ள தூதரகம் மூலமாகவும், செய்தியாளர்கள் மூலமாகவும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேள்வி: இலங்கைத் தமிழரின் மறுவாழ்வுப் பணிக்காக தி.மு.க. சார்பில் நிதி பங்களிக்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

பதில்: முதல்வரின் வற்புறுத்தலின் அடிப் படையில்தான் மத்திய அரசு 500 கோடி ரூபா அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபா வழங்கத்தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்பட்ட பிறகு, இது செலவிடப்படும். அதையும் தாண்டி நிதித் தேவை இருக்குமானால், மாநில அரசு சார்பிலோ, கட்சி சார்பிலோ வழங்குவதில் முதல்வருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.

நான் கேட்க நினைத்த கேள்விகள்...

இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் செய்த பங்களிப்பை தெரிந்தும், தெரியாதமாதரி எப்படி இத்தனை காலம் திமுக அரசால் நடிக்க முடிந்தது?

இந்த பயணத்தின்போது, செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற சேவை அமைப்புகளைபாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அனுப்புமாறு ஏன் இலங்கை அரசை நிர்பந்திக்கவில்லை?

நம் எம்.பிக்கள் சென்றுதான் அங்கு உள்ள நிலையை அறிந்துகொள்ளுமளவுக்கு அங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது கண்கூடாக கனிமொழி உள்ளிட்டோர் நேரில் கண்ட உண்மை. ஏன் அங்கு உள்ள உண்மை நிலையை காண சர்வேதேச மற்றும் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அனுமதியும்,சுதந்திரமும் ஏன் இலங்கை அரசு வழங்கவில்லை?

அங்கு வாழும் தமிழ் மக்களுக்கான சம உரிமையை பற்றி,அதற்காக இலங்கை அரசின் சட்டங்களின் உருவாக்கவேண்டிய மாற்றங்கள் ஏன் யாரும் பேசவில்லை?

இதுபோல ஆயிரம்...ஆயிரம் கேள்விகள் நம் மனதில். ஆனால் முறையான பதில்களை அந்த கதிர்காம முருகனால் மட்டுமே தரமுடியும் என்று தோன்றுகிறது.


கடைக்காரர் கமெண்ட்:
பதிவுக்கு தமிழ்நாட்டு எம்.பிக்களின் இலங்கை சுற்றுலா அனுபவங்கள்ன்னு தலைப்பு வச்சு இருக்கலாம்.


பதிவு : இன்பா

Tuesday, October 27, 2009

ஒரு வட்டத்தில் சிக்கிய பெரியார்"நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி"

ஜூலை 16, 1939 ஆம் அருப்புகொட்டையில் நடந்த ஒரு திராவிட கழக மாநாட்டில் இப்படி முழங்கினார் தந்தை பெரியார் அவர்கள்.

அவர் கனவு பலித்ததா? நெருப்பாய் தொடங்கிய அத்தைகைய ஒரு புரட்சி எங்கு போயிற்று இன்று?

"இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும்,அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவேஅனுபவித்து வருகிறார்கள்.மனிதன் "பெண்களை"த் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட,ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட,மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள்.ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்"

இப்படி எந்த காலத்துக்கும் பொதுவான பெரியாரின் கருத்துக்கள் ஏன் மக்களை சென்று அடையவில்லை? சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம் குறித்த அவரது உலகளாவிய சிந்தனைகளும், படைப்புகளும் எல்லாருக்கும் எளிமையாக கிடைத்திருக்கிறதா??

"நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." - என்கிறார் பெரியார்.

பெரியாரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதை வேறு யாருக்கும் தரமாட்டோம். எங்கள் உரிமையை விட்டு தரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார் இன்றைய திராவிட கழக தலைவர் திரு. கி. வீரமணி.

இந்த உரிமையை பெற கோர்ட் வரை சென்று இருக்கிறார் அவர்.

பெரியார் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அச்சிட்டு தி.க. வெளியிட்டு வருகிறது. இவற்றை அச்சிட்டு வெளியிட பெரியார் திராவிடர் கழகமும் முன்வந்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் வீரமணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்து, ‘’பெரியார் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீரமணி அப்பீல் செய்தார்.

தந்தை பெரியாரின் படைப்பு உரிமை தொடர்பாக வீரமணி தொடுத்துள்ள வழக்கு தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியார் படைப்புகள் வெளியிடும் உரிமை தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்யநாராயணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்து, வேறு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப கோரி தலைமை நீதிபதிக்கு வழக்கின் கோப்புகளை அனுப்பி வைத்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் தனது திராவிட கழக இளைஞர்கள், தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு இலக்கணமே வகுத்துதந்துதான் போயிருக்கிறார்.

08.05.1948-இல் தூத்துக்குடியில் திராவிடர் கழக 18-வது மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினர்.

"நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடமில்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை. கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத் தான் கழகத்தில் மதிப்புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத் தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக்காசாயினும் கழகத்திற்குச் செலவு செய்கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன்.

கழகம் பாடுபடுகிறவனுக்குத் தான் சொந்தமே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடந்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத்திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரை கல்லைக் கொண்டு தான் நம் இளைஞர்கள் மதிப்பிட வேண்டும்.

இவ்விதம் ஆராய்ந்து தெரியாமல் நம் இளைஞர்கள் பொறாமைக்காரர்களின் விஷமப்பிரசாரத்திற்கு இடம் கொடுத்து வருவார்களேயானால் நான் கழகத்தைக் கலைத்து விடவும் தயங்க மாட்டேன். நம் இளைஞர்களுக்கு உண்மையை உணர்ந்து கொள்வதில் கவலை இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் தூக்கிக் கொண்டு கூத்தாடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நமது கழகம் தியாகிகளுக்கே சொந்தமான கழகம், சுயநலக்காரர்களுக்குச் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் "

பெரியாரை, அவரது அறிவுரைகளை அவரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கமே கடைப்பிடிக்கவில்லை.

பாரதியாரின் படைப்புக்களை போலவே,எல்லாரையும் பெரியாரின் கருத்துக்கள் சென்றடைய வேண்டும். அவரது எழுத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க படவேண்டும்.

அப்படி இல்லையென்றால்,அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களில்...மேடைகளுக்கு பின்னால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களில் மட்டுமே இருப்பார் பெரியார் அவர்கள்.


கடைக்காரர் கமெண்ட்:
பெரியாரை பத்தி பேசறவங்களுக்கும் சரி..பெருமாளை பத்தி பேசறவங்களுக்கும் சரி..இன்னைய தேதியில எல்லாருக்கும் 'வியாபாரம்' தான் முக்கியமா போச்சு...பதிவு : இன்பா

Monday, October 26, 2009

காந்திஜியின் கடிதங்கள்


காந்திஜி அவர்களின் ஒரு சிறப்பு குணாதியசத்தை பற்றி படித்தபோது, ஆச்சரியமாய் இருந்தது.

காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர் பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும்,பத்திரிக்கைகள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார்.


இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.

ஒரு நாள் கிருஷ்ணதாஸ் என்ற நண்பர் , காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.

இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு எதிராக, காந்திஜி நவகாளி யாத்திரையை மேற்கொண்ட போது, காலில் செருப்பு அணிவதை தவிர்த்தார்.

அதற்க்கு அவர் சொன்ன விளக்கம், ”நாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை. நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்?”

இந்து - முஸ்லிம் உறவுகள் குறித்து காந்திஜி எழுதிய கடிதங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னால் லண்டன் நகரில் ஏலம் விடப்பட்டன. இந்த கடிதங்களை ஏலம் எடுத்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர்.

இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.

மௌலானா அப்துல்பாரி, காந்தி அவர்களின் சிறந்த நண்பர். நூறுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை உருது மொழியில் எழுதியவர். மேற்க்கத்திய கல்வி முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய மதரசாக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.காந்தியுடன் இணைந்து இந்து,முஸ்லிம் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்தவர்.


காந்தி இவருக்கு எழுதிய இக்கடிதங்களையும் மேலும் காந்தி உபயோகப்படுத்திய சில பொருட்களையும் மகாராணி எலிசபெத்தின் விருந்தினராக, நமது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லண்டன் செல்லும்போது, அவரிடம் ஒப்படைக்க இருப்பதாக ஏலத்தில் எடுத்த இருவரும் பெருந்தன்மையோடு தெரிவித்து இருக்கிறார்கள்.


சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவிப்போம்.

கடைக்காரர் கமெண்ட்:
காந்தியோட கொள்கைகள காப்பாத்ததான் ஆளு இல்லாம போய்டிச்சு...போகட்டும்.

வெள்ளைக்காரங்க கிட்ட இருந்து நாட்டை காப்பாத்தின காந்தியோட கடிதங்களை..ஏலத்துல வெள்ளைக்காரங்ககிட்ட போகாம காப்பாத்தினவங்களுக்கு நன்றி.


பதிவு : இன்பா

Saturday, October 24, 2009

மனதோடு பேசும் தெரு - பிரபஞ்சன்


சிறு வயதில் நாம் பிறந்து,வளர்ந்த தெருவை மறக்க முடியுமா? நம் பால்யகால நினைவுகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாம் ஓடி..விளையாடிய அந்த தெரு.அன்று நம் சட்டையில் படிந்த புழுதி....இன்று பூக்களாய் மணக்கிறது நம் நினைவுகளில்.

அப்படி தன்னை பாதித்த, தன்னை எழுத வைத்த புதுச்சேரியில் இருக்கும் தன தெருவை பற்றி எழுதுகிறார் திரு. பிரபஞ்சன்.


உயிர்மை இதழுக்காய், 'மனதில் புகுந்தது மா மத யானை' என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் உங்கள் உணர்வுக்கு...ரொம்ப காலம் இல்லை. ஐந்து வருஷங்கள்தான். ஐந்து வருஷங்களுக்குப் பிறகு எங்கள் தெருவுக்குள் நான் நுழைகிறேன். ஐம்பத்தெட்டு வருஷங்கள் நான் வாழ்ந்த தெரு அது. எனக்கே அடையாளம் தெரியாதபடி தெரு மாறி இருந்தது. எங்கள் தெருவின் முகம் எனக்குத் தெரியும். அதன் குரல், அதன் வாசம் எனக்குத் தெரியும்.


விடியலுக்கு முந்தைய வைகறைப் போதிலும், நள்ளிரவுக்குப் பிறகான யாமத்திலும் தெருக்கள் பேசும். நான் கேட்டிருக்கிறேன். கடல்கள் 'கத்தும்' என்றான் ஒரு கவி, நாகைப்பட்டிணத்துக் கடலை. ஒரு பழைய ஊர் 'கல்' என்ற ஓசையைக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஒரு சங்கக் கவி. ஓசை மட்டுமல்ல, தொண்டி நகரத்துக் காற்றில் தேன் மணந்தது என்கிறார் ஒரு புறக்கவி. தேன் எப்படி மணக்கும்? காதில் தேன் வந்து பாயும் என்பது சரியானால் அதுவும் சரிதான். பௌதிகமாகப் படரும் ஓசையும் மணமும்தான் நம் புலன்கள் அறியும் என்றால், நம் புலன்கள் பழுது பட்டவை என்று பொருள். ஓசை ஒரு சத்தம் என்றால், அ-ஓசை பெருஞ் சத்தம். என் தெரு என்னிடம் பேசும். அரை நூற்றாண்டுக்கு முன்னால். முதலில் அதற்குப் பெயர் இல்லை. எங்கள் தெரு முடியும் இடத்திலிருந்து ஒரு பெரு வெளி இருந்திருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட சாதியார்க்கென்று ஒதுக்கப்பட்ட தெரு அது. அப்படி, ஒரு காலத்து விதி. எங்கள் தெருவுக்குச் சாணார் தெரு என்பது பழம் பெயர். கள்ளிறக்கும் தொழிலாளர் வாழும் தெரு. என் மூதாதையர்கள் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அத்தெருவில் குடியேறினார்கள் போலும். யாரோ ஒரு குலங்கோத்திர மேதை, சாணார் என்ற சொல் சான்றோர் என்ற சொல்லின் மரூஉ என்றும், சான்றோர் என்பது சான்றார் என மாறி, சான்றார் என்பதே சாணார் என்று மாறியதாக (கன்று-கன்னு) 'ஆய்ந்து' அறையப் போக, எங்கள் தெருக்காரர்கள் பலருக்குத் தாங்கள்தான் அந்தச் 'சான்றோர்' என்ற பெருமிதம் ஏற்பட்டுவிட்டது. சான்றோன் ஆக்குதலாகிய கடமையைச் செய்யும் தந்தையர் தாங்கள்தான் என்றும் அவர்கள் தலைப்பாகை கட்டிக் கொண்டார்கள். சாதியை ஒழிக்கக் கிளம்பிய கிளர்ச்சியாளர்கள் தெருவின் பண்டைய பெயரை ஒழித்து வ.உ.சி. பெயரை இட்டழைத்துப் பெருமை கொண்டார்கள். இப்போது வ.உ.சி.க்கும் ஒரு சிலை அமைந்துவிட்டது ஊரில். செக்கிழுத்த அந்தத் தியாகிக்குச் சிலை வைத்தவர்கள் பிள்ளைமார்கள்.
எங்கள் தெருவுக்கும் இந்தப் பிள்ளை விளையாட்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தெரு அப்படியே இருந்தது. மூடர்களையும் பித்தர்களையும் ஒரு சேரச் சகித்துக்கொண்டு தெரு அப்படியேதான் இருந்தது. கப்பி போட்டுத் தெருவை உயர்த்தி இருந்தார்கள். அதனால், வீடுகளின் உயரம் குறைந்து கொண்டிருந்தது. என்னை உறுத்தியது வேறு விஷயம். புதிதாக உருவான வீடுகள் சுற்றுச் சுவர்களை எழுப்பிக் கொண்டு, மேலும் இரும்பு கேட் போட்டும் தங்களை மூடிக்கொண்டிருந்தன. நான்கு முதல் ஆறு அடி உயரம் கொண்ட காம் பவுண்டுச் சுவர்களின் முகத்தில் ததும்பி வழிந்த குரோதம் பயமாகக் கூட இருந்தது. தங்கள் வசிப்பிடம் இது. இதற்குள் எவரும் பிரவேசிக்க அனுமதி இல்லை என்று உரத்துக் கூவிக் கொண்டிருந்தன அந்தச் சுவர்கள். தெருவில் இருந்தும், அடுத்த வீடுகளில் இருந்தும், மனிதர்களிடம் இருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டதான குறியீடாக இருந்து கொண்டிருந்தன அந்தக் காம்பவுண்டுச் சுவர்கள். சில சுவர்கள், கல் அடுக்குச் சுவர்களின் மேல், ஈட்டிகளைச் செருகி வைத்திருந்தன. ஒன்றிரண்டு சுற்றுச் சுவர்களின் தலைப்பகுதியில் உடைந்த பாட்டில் ஒட்டுத் துண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.அடுத்த மனிதனை, அடுத்த வீட்டை, அடுத்த வெளியை இவை விலக்கிவைத்திருக்கின்றன. எச்சரிக்கின்றன. அச்சம் ஊட்டுகின்றன. ஒவ்வொரு வீடும் தனித்தனித் தீவுகள். இப்படியும் சொல்லலாம்: ஒவ்வொரு வீடும் அடுத்த வீட்டை, அடுத்த மனிதனை அஞ்சின. தன்னை ஒளித்துக் கொள்ளும் முகத் தான் தன்னைக் குறுக்கிக் கொண்டும், தன்னை மறைத்துக் கொண்டும் வரம்பு எழுப்பிக் கொண்டன.தமிழர் வாழ்க்கையில், அவர்கள் வீடுகளுக்கு சுற்றுப்புறச் சுவர் ஏது? மன்னர்கள், எதிரி மன்னர்களுக்குப் பயந்துகொண்டு சுற்று மதிலைத் தங்கள் கோட்டைகளுக்கு வெளியே கட்டிக் கொண்டார்கள். மக்களின் வீடுகள், அவர்களின் தெருக்களின் வாசல்களில் தொடங்கின. தெருக்களையும் தங்கள் வீடுகளின் தொடக்கமாகவே அவர்கள் கருதினார்கள். அதனால் தான், தங்கள் வீட்டுக்கு முன் உள்ள தெருப்பகுதியில் கோலம் போட்டுத் தங்கள் விஸ்தீரணத்தை, அல்லது பரவலை ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். தங்கள் வீட்டு வாசலுக்கு முன் உள்ள குறடுகள், பாதசாரிகளுக்கானவை; திண்ணைகள் வழிப்போக்கர்களுக்கு உரியவை என்று தங்கள் வீடுகளைப் பங்கிட்டுக் கொடுத்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள். தெருவில் நின்று பார்த்தால் வீட்டுத் தோட்டத்துக் கிணற்றடி தெரிகிற திறந்த மரபு அவர்களுடையது; மட்டும் அல்லாமல், வாயில் கதவுக்கு உட்புறம் இருண்ட ரேழியை அடுத்து, வானம் தெரிகிற வாசல் கூடம் இருக்கும். வெயிலும் மழையும், வெளிச்சமும் காற்றும் உள்நுழைய இடம் கொடுக்கும் அமைப்பைக் கொண்டவை மத்திய தர மக்கள் வாழ்ந்த வீடுகள். 'வெளியே போ' என்று உத்தரவு போட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சுற்றுச் சுவர்கள், ஆங்கிலேய, பிரஞ்ச், டேனிஷ், போர்ச் சுக்கீசியர்களிடம் இருந்து பெற்ற கலாச்சாரக் கொழுந்து. அந்த அன்னியர்கள், தங்கள் ஆளும் மக்களை அஞ்சிக் கொண்டே இருந்தவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையினராகிய அவர்கள், தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட மக்களிடம் அச்சம் கொண்டிருந்ததன், தங்கள் பாதுகாப்பு குறித்த உள்ளுணர்வின் வெளிப்பாடே அந்தச் சுவர்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அனைவருமே கோழைகள். விதேசிகளிடம் இருந்து தங்கள் வாழ்க்கைக் கூறுகளைக் கற்ற, கற்க வேண்டிய அவசியத்தில் இருந்த, அதிகாரங்களை அண்டி வாழ்ந்த மேட்டுக் குடியினர், அதிகார வர்க்கம், அதிகார வர்க்கமாக இருப்பதாலேயே செல்வம் ஈட்டிய பணக்கார வர்க்கம், ஜாதியப் படி முறையில் மேம்பட்ட மனிதக்கும்பல், தங்கள் குடியிருப்புகளையும் அவ்வாறே ஒரு சுற்றுச் சுவருக்குள் அடக்கிக் கொண்டன. மேல் மட்டத்துப் பழக்க வழக்கங்களை அனைத்து மட்டங்களும் ஏற்பது என்பது ஒரு சமூகப் பொதுவிதி.இந்தச் சாணார் வீதியில்தான் என் இளமைக் காலம் சென்றது. இந்தத் தெருவில், தெருப் பையன்களோடுதான் கால்பந்து, கிட்டிப்புள், சடுகுடு விளையாட்டுகள் நிகழ்ந்தேறின. விளையாடிக் களைத்த பையன்கள் யார் வீட்டுக்குள்ளும் நுழைந்து தண்ணீர் கேட்டுக் குடித்தோம். சிலவேளைகளில் பனங்கல்கண்டு எலுமிச்சை ரசம் சேர்ந்த பானகம் கிடைக்கும். எல்லாச் சாதியாருமே - பிராமணர்கள் இல்லை, முதலியார்கள் இல்லை, ஒரு ரெட்டியார் குடும்பம் இருந்தது - தெருவில் இருந்தார்கள். எங்களுக்கு எல்லா வீடுகளும் சொந்த வீடுகள் போலவே இருந்தன. சமையல் அறை வரை சென்று, 'அத்தை. . . தண்ணீர் வேணும்' என்று கேட்டுக் குடித்தது, என் நினைவில் நிற்கிறது.


எந்தத் தடையும் எந்த உருவத்திலும் எங்களுக்கு இருந்தது இல்லை. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். எங்கள் வீட்டுக்கு எதிரே, பால் வியாபாரம் செய்த யாதவக் கோனார் வீடு இருந்தது. அடுத்த சில வீடுகள் கோனார்கள். அப்புறம் ஒரு பெரிய வீடு. அது செட்டியார் வீடு. ஆலைகளில் வேலை செய்த ஆலைச் சுவர் வீடுகள், ஆலைரைட்டர் (குமாஸ்தாக்கள்) வீடுகள், ஒரு மாரியம்மன் கோயில், சில கள் சார்ந்த கிராமணிகள் குடும்பம், சில கிறிஸ்தவர் வீடுகள், ஒன்றிரண்டு வன்னியர் வீடுகள், இரண்டு இசுலாமியர் வீடுகள் என்று இருந்தன. ஒரு விளக்கம் காரணமாகவே சாதிகள் பற்றிக் குறிப்பிட்டேன்.


சாதிகள், அந்தக் காலங்களில் திருமணங்களின்போது சிந்திக்கப்பட்டிருக்கக்கூடும். மற்ற வாழ்க்கை ஊடாட்டத்தில் அவர்களின் அடையாளம் சாதி சார்ந்ததாக இல்லை. அண்ணன், மாமன், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணி, அக்கா, பெரியம்மா என்றுதான் எங்கள் உறவுகள் இருந்தன.அந்தக் காலத்து வீடுகள் என் நினைவில் இருக்கின்றன. தெருவுக்கு இருபுறமும் வீடுகள் ஒரு ஒழுங்காகக் கட்டப்பட்டிருக்கும். நடுவாக்குக்கு இருபுறமும் மயிர்க்கற்றைகள் படிந்துள்ளது போன்று, மிக அழகாக இருக்கும். பெரும்பாலும் ஓடு வேய்ந்த வீடுகள். முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். தூண்களை அடிப்படையாகக் கொண்டு நிறைய விளையாட்டுகள் எங்களிடம் இருந்தன.


திண்ணைகள் எங்கள் சந்திப்பு மற்றும் விளையாட்டுக் கூடங்கள். எங்கள் வீட்டுத் திண்ணைகள் மிகப் பெரியவை. ஒவ்வொரு திண்ணையிலும் பத்துப் பேர்கள் படுக்கலாம். அப்பா மதிய உணவுக்குப் பிறகு சுருட்டு குடிக்கும் இடம் திண்ணை தான். எனக்கு அப்பாவின் சுருட்டு மணம் மிகவும் பிடிக்கும். திண்ணை முழுக்கவும் பரவும் புகையிலை மணம், தெருவுக்குச் சாம்பிராணி போடுவது போல இருக்கும். அப்பா சாப்பாட்டுக்குப் பிறகு சுருட்டும், மற்ற நேரங்களில் சிகரட்டும் பிடிப்பார். முதலில், பிளேயர்ஸ் டின் சிகரட்டுகள் பிடித்துக் கொண்டிருந்தார். 50 சிகரட்டுகள் கொண்ட டின் அது. அவரது பொருளாதார வீழ்ச்சிகளின்போது சார்மினாருக்கு மாறினார். அவர் பாக்கெட்டிலிருந்து நான் பல சமயங்களில் சிகரட்டுகள் எடுத்துக் கொள்வது என் பழக்கமாக இருந்தது. தெரியும் அப்பாவுக்கு. அவர் எதற்காகவும் என்னைக் கோபித்ததும் இல்லை. வருத்தப்பட்டதும் இல்லை. ஏழாம் வகுப்பில் சிகரட்டும், ஒன்பதாம் வகுப்பில் சாராயமும் எனக்கு அறிமுகம் ஆயின. ஒன்பதாம் வகுப்பில், காதல் தோல்வியைச் சுவைத்த பிறகும், குடிக்காமலும், கவிதை எழுதாமலும் இருந்தால் எப்படி?துண்டு துண்டாக, தனித் தனியாக, நின்றிருந்தன புதிய வீடுகள். ஒன்றை ஒன்று அறியாத மூட வீடுகள். அடுத்த வீட்டு மனிதர்களை அறியாத, அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாத ஈரமற்ற வீடுகள். வாழ்க்கை அப்படியாகிவிட்டது என்பது ஒரு சமாதானம். அவசர கதி, இயந்திர கதி, மனிதப் பரவல், புதியவர்கள் பரவல் எதைச் சொன்னாலும், மனிதர்கள்தாமே நாம்? வீடு என்ன செய்யும். தெருதான் என்ன செய்யும். எவ்வழி நல்லவர் மக்கள், அவ்வழி நல்லது நமது தெருவும், நாடும்.

- பிரபஞ்சன்.

இக்கட்டுரையை படித்தவுடன் நான் வாழ்ந்த தெருவின் நினைவுகள் நெஞ்சில் பாரமாய் நிற்கின்றன. ஆனால், மீண்டும் அந்த தெருவுக்கு சென்று பார்க்க நான் விரும்பவில்லை.


வாழ்ந்த தெருவை, சொந்த ஊரை பிரிந்து வாழும் சோகத்தை விடவும் கொடுமையானது நம் தெருவில் காலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள்... அவை நம் மனதில் இருக்கும் பசுமைகளை ஒரே நொடியில் பாலைவனமாக்கிவிடும்.

நம் பழைய தெரு.. நினைவுகளில் மட்டும் நிலைத்து இருக்கட்டும் அதன் பழமை மாறாமல்.பதிவு : இன்பா

Friday, October 23, 2009

சத்தியம் தவறிய சத்யம் நிறுவனம்


இன்றைக்கு நாம் வேலையில் இருப்போமா? .. இதுதான் தனியார் அல்லது ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் மனதில் ஒவ்வொரு நாள் காலையிலும் எழும் கேள்வி.

மனைவி, குழந்தைகள் என்று வாழும் ஒரு குடும்பத் தலைவனுக்கு திடிரென்று வேலை பறிபோனால் எழும் மனஉளைச்சல்கள்...பதட்டம்...இவற்றை வார்த்தைகளில் விளக்க முடியுமா?

குறிப்பாக வங்கிகளில் கடன் வாங்காத ஐ.டி நிறுவன ஊழியர்களே இல்லை எனலாம். வேலை போகும் பட்சத்தில் அவர்கள் எவ்வாறு சமாளிப்பார்கள்?

ஐதராபாத்திலுள்ள சத்யம் நிறுவனம் 6400 பேரை வேலை நீக்கம் செய்வதாக தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளது.

ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிறுவனத்தில் அதிபர் ராமலிங்க ராஜூ நிறுவனங்களில் மோசடி செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

அதன் பிறகு சத்யம் நிறுவனத்தை மத்திய அரசு அமைத்த குழு நிர்வாகம் செய்தது. பின்னர் மகேந்திரா நிறுவனம் சத்யம் கம்ப்யூட்டரை வாங்கி விட்டது.
இதையடுத்து இந்த நிறுவனம் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இங்கு வேலை பார்த்த 9 ஆயிரம் ஊழியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் கட்டாய விடுமுறை அளித்து பணியில் இருந்து தற்காலிகமாக நிறுத்தி இருந்தனர். அவர்களில் 1600 ஊழியர்களை திரும்ப அழைத்து கொண்டனர்.

இந்த நிலையில் மீதி உள்ள 6400 ஊழியர்களுக்கு நிர்வாகம் நேற்று இ.மெயில் ஒன்று அனுப்பி உள்ளது. அதில் உங்களை பணியில் தொடர வைக்க முடியாது. டிசம்பர் 18-ந் தேதிக்குள் உங்கள் கணக்குகளை முடித்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

எனவே 6400 ஊழியர்களும் திடீரென வேலையை இழந்துள்ளனர்

ஏற்கனவே வேலை வாய்ப்புகள் குறைவை உள்ள இந்த பொருளாதார சூழலில்..அவர்ளுக்கு வேறு சரியான வேலை எப்போது..எப்படி கிடைக்கபோகிறது?

"நிரந்தரம் இல்லாமையே நிரந்தரம்" என்னும் தத்துவம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஐ.டி நிறுவன ஊழியர்களுக்கு நூறு சதம் பொருந்துகிறது.

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அவர்களின் பாடல ஒன்று..பள்ளி நாட்களில் படித்தது.

"உழ‌வும் தொழிலும் இல்லாம‌ல் உல‌கில் ஒன்றும் செல்லாது"

எங்கு வேலை செய்தாலும்..எவ்வளவு சம்பாதித்தாலும் ஒரு சுயதொழிலுக்கான முனைப்புகள், முதலிடுகள் மற்றும் சேமிப்புகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் உணர வேண்டியதைத்தான் இந்த பாடலும், செய்தியும் உணர்த்துகிறது.

கடைக்காரர் கமெண்ட் :
என்னத்தை சொல்றது...நான் படிச்ச ஜோக்கு ஒன்னு உங்களுக்கு சொல்றேன்..


என் மூத்த மகன் கம்ப்யூட்டர் எஞ்சினியர்..ரெண்டாவது மகன் விமானம் ஓட்டுறான்...மூணாவது மகன் ஷேர் மார்க்கெட் பத்தி ஆலோசனை சொல்றவன்..ஆனா..நாலாவது மகன் டீக்கடை வச்சு இருக்கான்...

ஏன் அவனை மட்டும் படிக்க வைக்கலையா நீங்க...

அட நீங்க வேற...அவன் குடும்பத்தோட ..மூத்த பசங்க குடும்பத்தையும் சேர்த்து அவன்தான் இப்போ பாத்துக்கிட்டு இருக்கான்.

சொந்தமா,நமக்குன்னு ஒரு தொழில் இருக்கறதுதான் எப்போவும் நல்லதுன்னு தோணுதுங்க...


பதிவு : இன்பா

Thursday, October 22, 2009

அம்பானி சகோதரர்களின் Gas Trouble


கடந்த 15 ஆம் தேதி,நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, பெட்ரோலிய துறை அமைச்சர் முரளி தியோரா, சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி ஆகியோர் ஒன்று கூடி அவசர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.

மத்திய அரசின் மூன்று முக்கிய அமைச்சர்கள் இப்படி ஆலோசிக்கும் அளவுக்கு என்ன நடந்துவிட்டது நம் நாட்டில்...??

இந்திய பொருளாதாரத்தின் தலைஎழுத்தை தீர்மானிக்கும் ஒரு குடும்பத்தின் இரண்டு சகோதரர்களுக்கிடையே நடக்கும் மோதல்தான் அமைச்சர்களின் இந்த கூட்டத்திற்கு காரணம்.

RIL எனப்படும் Reliance industries Limited - இது முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. RNRL எனப்படும் Reliance Natural Resources Limited - இது அவர் சகோதரர் அனில் அம்பானிக்கு சொந்தமானது.

2005ம் ஆண்டுக்கு முன்பு வரை ரிலையன்ஸ் நிறுவனங்கள் அனைத்தும் ஒரே குழுமமாக இருந்தன. அதன் பிறகு குடும்ப பாகப் பிரிவினை ஏற்பட்டது. முகேஷுக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் கிருஷ்ணா கோதாவரி படுகை வாயு உற்பத்தியில் அனிலின் ஆர்என்ஆர்எல் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் காஸ் சப்ளை செய்ய ஒப்புக் கொள்ளப்பட்டது.


இப்போது வாயு உற்பத்திக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், பழைய விலையில் சப்ளை செய்ய ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்து வருகிறது. இதுதொடர்பாக, மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனில் அம்பானிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானது.


அந்த தீர்ப்பு, Reliance to sell 28 million metric standard cubic metres of gas a day at $2.34 per mBtu for 17 years to RNRL என்கிறது.

அதை எதிர்த்து அண்ணன் முகேஷ், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கிறார்.

இதன் காரணமாக..நேற்று சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்து இருக்கிறது.மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.


வழக்கை தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் தலைமையிலான பென்ச் விசாரித்து வருகிறது. நீதிபதிகள் கூறுகையில், "பிரச்னையை இரு நிறுவனங்களும் மத்தியஸ்தர் அல்லது நடுவர் தீர்ப்பு மூலம் தீர்த்துக் கொள்ள முன்வர வேண்டும்" என்றனர்.


"இந்த வழக்கின் இறுதிகட்ட நிலையிலும், நானும் முகேஷ் 'பாய்' யும்(??) இந்த பிரச்சனையை சுமுகமாக பேசி தீர்க்க முடியும் என தான் நம்புவதாக(!) கூறுகிறார் அனில் அம்பானி. அவர்கள் இருவரும் ஒருமித்த கருத்தை எட்ட விரும்பினால் என்று ஒரு கண்டிஷன்(?) போட்டும்இருக்கிறார் அவர்.

இந்திய சந்தையின் இந்த வாய்வு தொல்லை(Gas Trouble) விரைவில்
குணமடையும் என்று நம்புவோம்.கடைக்காரர் கமெண்ட் :
நூறு கோடி பேரு இருக்குற நம்ம நாட்டோட மார்க்கெட்டையே ஒரே ஒரு கடைக்காரர்(!) குடும்பந்தான் ஆட்டிப்படைக்குது.... பாத்தீங்களா..

பதிவு : இன்பா

Tuesday, October 20, 2009

தமிழக விவசாயிகளின் இஸ்ரேல் பயணம்'உழுதுஉண்டு வாழ்வாரே வாழ்வார்' என்று பாடினர் வள்ளுவர். ஆனால், விவசாய நாடான இந்தியாவில், சீரழிந்துவரும் தொழிலில் முதலிடத்தில் இருக்கிறது விவசாயம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் ஆர்வத்தை விவசாயத்தின்பக்கம் திருப்பும், வாய்ப்புகளை பெருக்கும் உருப்படியான செயல் திட்டங்கள் எதையும் அரசுகள் ஆலோசிப்பதாக கூட தெரியவில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை. ஒருபக்கம் விளை நிலங்களை எல்லாம் விலைநிலங்களாக மாறிக்கொண்டு இருக்கின்றன. இன்னொருபக்கம் காவேரி நதி பிரச்சினை முடிவதாக தெரியவில்லை

1924 பிப்.,18ல் சென்னை மாகாணமும், மைசூர் மாகாணமும் செய்த ஒப்பந்தத்தின்படி, காவிரி ஆற்றின் குறுக்கே 1929ல் கர்நாடகாவில் 45 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ்., (கிருஷ்ணராஜ சாகர்) அணை கட்டப் பட்டது. தமிழகத்தில் காவிரியின் குறுக்கே 1934ல், 93.470 டி.எம்.சி., நீர் கொள்ளளவு கொண்ட மேட்டூர் அணை கட்டப்பட்டது.

1956ல் மொழிவாரி மாநில சீரமைப்பின் படி, மைசூர், சென்னை ஆகியவை கர்நாடகா, தமிழ்நாடு என்ற இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன் பின், நீர்தேக்கங்களைக் கட்டி அதிகளவில் நீரை சேமித்து பாசனத்துக்குப் பயன்படுத்த முடிவு செய்த கர்நாடக அரசு, பவானி அணைக்கு எதிராக கர்நாடகாவில் கபினியாற்றின் குறுக்கே அணை கட்டியது.
1924 ஒப்பந்தம் 1974ல் காலாவதியானது. காவிரி பாசனப்பகுதியில் 11 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன பரப்பை அதிகரிக்கக் கூடாது என்ற விதியை மீறி கர்நாடகா 40 கோடி ரூபாய் மதிப்பில் 6.6 லட்சம் எக்டேர் கூடுதல் பாசன வசதி ஏற்படுத்தியது.
அதற்கேற்ப கர்நாடக அரசு, தமிழகத்திற்கு வழங்கிய நீரின் அளவை படிப்படியாகக் குறைந்தது.காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி பாதித்தது.

பலகோடி ருபாய் மக்களின் வரிப்பணத்தை விழுங்கிகொண்டிருக்கும் காவேரி நதிநீர் விவாகரத்திற்கு என்றைக்கு முடிவு வரும்??

இந்த கேள்விக்கு பதிலே இல்லை இன்று உணர்ந்து கொண்ட நமது தமிழக அரசு, நீர் ஆதாரம் இல்லாத இஸ்ரேல் நாட்டில் நடந்து வரும் விவசாய புரட்சி குறித்து அறிவதற்க்காக விவசாயிகள் குழு ஒன்றை அங்கு அனுப்பிஇருக்கிறது.

வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் குழுவை வழியனுப்பி வைத்தார். தோட்ட கலைத் துறை இயக்குனர் சந்திரமோகன் மற்றும் அதிகாரிகள் மேற்பார்வையில் தமிழக விவசாயிகள் நலவாரிய தலைவர் ராமலிங்கம் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 21 மாவட்டங்களைச் சேர்ந்த 21 விவசாயிகள் கொண்ட குழுவினர் சென்னையில் இருந்து இஸ்ரேல் சென்று உள்ளனர். .

விவசாயக் குழுவை சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்த வேளாண் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறியதாவது:

"நீர் ஆதாரம் இல்லாத நாடான இஸ்ரேல், விவசாய துறையில் சிறந்து விளங்குகிறது. இதற்கு அங்குள்ள சிறந்த தொழில்நுட்பமும், நீர் சுத்திகரிப்பு முறையும் முக்கிய காரணம். தமிழகத்திலும் இஸ்ரேலை போன்று, விவசாயத் துறையில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முதல்வர் விரும்பினார்.

இதையடுத்து, தமிழக விவசாயிகளுக்கு இஸ்ரேலில் பயிற்சி அளிக்க உலக வங்கி ஏற்பாடு செய்தது. இந்த ஒருவார பயிற்சி வரும் 24ம் தேதி வரை நடக்கிறது. இஸ்ரேல் நாட்டில் விவசாயத்தில் பயன்படுத்தப்படும் சொட்டுநீர் பாசன முறை, நீர் சுத்திகரிப்பு முறை உள்ளிட்ட பல விஷயங்கள் தமிழக விவசாயிகளுக்கு விளக்கப்பட உள்ளன. பண்ணைகளுக்கும் விவசாயிகள் நேரடியாக சென்று பார்வையிட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்திலும் வறட்சி பகுதிகளில் விவசாயத்தை மேம்படுத்த முடியும் " . இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.

விவசாயத்தை மேம்படுத்த இயற்கை வேளாண்மை என்னும் எளிமையான திட்டத்தை நம்மாழ்வார் அறிவித்து, பல பகுதிகளில் நிரூபித்தும் காட்டிஇருக்கிறார்.
"நாம் பல ஆயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றிய இயற்கை விவசாய முறையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டும். அது ஒன்றுதான் தீர்வாகும்.ஒவ்வொரு மாவட்டத்திலும் உழவர்களுக்கான சேவை மையம் தொடங்கப்பட வேண்டும். முதலில் உழவர்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இரசாயன உரம் பயன்படுத்தினால் அதிக விளைச்சல் பெற முடியும் என்கிற தவறான எண்ணத்தை மாற்ற வேண்டும். விளைச்சல் அதிகமாகிறதோ இல்லையோ, விளைநிலம் செத்துவிடும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

பொதுவாகவே உணவுப் பொருள்கள் அதிக தூரம் பயணம் செய்யக் கூடாது. அந்தந்த மாவட்டத் தேவைகளை அங்கேயே உற்பத்தி செய்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி செய்பவரும், நுகர்வோரும் அருகிலேயே இருந்தால்தான் விலையேற்றமும் இருக்காது.இரசாயன உரங்களை அறவே புறந்தள்ளி, பாரம்பரிய இயற்கை விவசாய முறைகளை நாம் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் " என்கிறார் நம்மாழ்வார்.

நதிநீர் சேகரிப்பு, தூர்வாருதல், மணல் கொள்ளையை முற்றிலுமாக ஒழித்தல் போன்ற அம்சங்களை நிறைவேற்ற லாயக்கு இல்லாத அரசு, இஸ்ரேல் நாட்டு விவசாய முறைகளை இங்கே எப்படி அமல் படுத்தபோகிறது?

ஏன் எந்த அமைச்சர்களும் நம்மாழ்வார் கூறும் இயற்கை வேளாண்மை திட்டத்தை இதுவரை முன்மொழியவில்லை?


கடைக்காரர் கமெண்ட்:
காவேரிதான் கைய விட்டு போச்சுன்னு பாத்தா....பாலாற்றை ஆந்திராவும், முல்லை பெரியாரை கேரளாவும் எடுத்துக்க போறாங்க.....நம்ம தமிழ்நாடே குடிக்ககூட தண்ணி இல்லாம பாலைவனமாக போகுது..... இதுல இஸ்ரேல் விவசாயத்தை இங்க கொண்டு வராங்களாம் நம்ம அரசியல்வாதிங்க....
பதிவு : இன்பா

Monday, October 19, 2009

அருணாச்சலபிரதேசம் நமக்கே சொந்தம் - அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் சீனா சட்டவிரோதமாக 43,180 சதுர கிலோ மீட்டரை ஆக்கிரமித்துக் கொண்டதாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. அதுபோல் அருணாசலப் பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை இந்தியா பிடித்து வைத்துக் கொண்டதாக சீனா குற்றம்சாட்டி வருகிறது.

எல்லைப் பகுதியில் உள்ள அருணாசலப் பிரதேச மாநிலத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ. தமக்கு சொந்தமான பகுதி. அதை இந்தியா ஆக்கிரமிப்புச் செய்துள்ளது என்று சீனா கூறி வருகிறது.

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான எல்லை இன்னும் அதிகாரப்பூர்வமாக நிர்ணயிக்கப்படவில்லை. சீன - இந்திய எல்லையின் கிழக்குப் பகுதியில் சீனாவின் நிலை மிகவும் தெளிவானது, உறுதியானது என்று சீன வெளியுறவு அமைச்சகம் கருத்து தெரிவித்து இருந்தது.

"சீனாவை பொறுத்தவரை இந்தியா இரண்டு விதமான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது. ஒன்று எல்லைப் பிரச்னைக்கு தூதரக நிலையில் பேச்சு நடத்துவது. அடுத்தது, சீனாவுடனான இந்திய எல்லையில் உள் கட்டமைப்பையும் ராணுவத்தையும் பலப்படுத்துவது. பிரதமர் மன்மோகன் சிங் அருணாசலப் பிரதேசம் சென்றதற்கு சீனா ஆட்சேபம் தெரிவித்ததும் பாகிஸ்தான் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து உள்ள காஷ்மீரில் கட்டுமான பணிகளை சீனா செய்து வருவதும் இந்தியாவுக்கு அதிர்ச்சியை அளித்து உள்ளது.

எல்லைப் பிரச்னைக்கு சமரச பேச்சு மூலம் தீர்வு காண முயற்சிக்கும் அதே நேரத்தில் சீனாவுடனான எல்லையில் இந்திய ராணுவத்தின் திறன் பலப்படுத்தப்பட்டு எதற்கும் தயார் நிலையில் உள்ளது" இவ்வாறு அறிவித்துஇருக்கிறார் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி.

இந்த சூழ்நிலையில் "அருணாச்சல பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவிற்கே சொந்தமானது" என்று மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா விளக்கம் அளித்து இருக்கிறார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடையே கூறியதாவது:

அருணாசலபிரதேச மாநிலம், இந்திய நாட்டின் ஒரு அங்கமாகும். அதன் ஒவ்வொரு அங்குலமும் இந்தியர்களுக்கு சொந்தமானது என்பதை அனைவருக்கும் உணர்த்துவோம்.

கடந்த காலங்களில் ஆட்சி செய்த பல பிரதமர்கள் அருணாசலபிரதேசம் சென்று வந்துள்ளனர். ஆனால், இப்போது பிரதமர் மன்மோகன்சிங் அங்கு சென்றுவந்தவுடன் அதனை சீனா பிரச்னையாக்க முயல்கிறது.

அருணாச்சல பிரதேச பகுதி பல்லாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவுக்கு சொந்தமாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. சிக்கிம்மை இந்தியாவின் பகுதி என்பதை ஒப்புக் கொள்ள மறுத்து வந்த சீனா கடந்த 2003ம் ஆண்டு இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சிக்கிம்மை ஏற்றுக் கொண்டது. அதுபோல் அருணாச்சல பிரதேசத்தையும் ஏற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் இதனை கண்டிக்க வேண்டும். இந்த பிரச்னை குறித்து ரஷ்யா, சீனா மற்றும் இந்திய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் அக்டோபர் 26மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. அருணாசலபிரதேசம் குறித்த சீனாவின் கருத்திற்கு உரிய பதில் தரப்படும்.

இவ்வாறு நமது வெளியுறவு துறையின் அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதிமொழி தந்துள்ளார்.


கடைக்காரர் கமெண்ட் :
இவர் இப்படி சொன்னதற்கு அப்புறம்தான் நிஜமாவே அருணாச்சல பிரதேசம் யாருக்கு சொந்தம்ன்னு நமக்கே ஒரு சந்தேகம் வந்துவிட்டது.......இந்த மாதரி நம்ம(?) இந்தியாவுல இருக்கற ஒவ்வொரு மாநிலமும் யாருக்கு சொந்தம்ன்னு அமைச்சர் பெருமக்களோ இல்லையானா மத்திய அரசோ தனித்தனியா விளக்கம் சொன்னா நல்லது...நமக்கும் நாட்டு நிலவரம் புரியும்...

பதிவு : இன்பா

Sunday, October 18, 2009

நான் நடிகர் இல்லை - மன்னிப்பு கேட்கிறார் நோபல் ராமகிருஷ்ணன்


"இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். எனது இ-மெயில் பகுதியையே நிரப்பி முடக்கி விடுகிறார்கள். அவர்களது கடிதங்களை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகி விடுகிறது. இவர்களது இ-மெயில் வெள்ளத்தால், எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட கிடைக்காமல் போய் விடுகின்றன.


இவர்களுக்கு இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது எல்லாம் சரிதான். அதற்காக என்னை ஏன் தொந்தரவு செய்கிறார்கள். நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பது கூட முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. நாமெல்லாம் மனிதர்கள். ஒருவரின் தேசம் என்பது, பிறப்பால் வருவது தானே?" - என்று பேசினார் நோபல் இந்திய தமிழர்(?) ராமகிருஷ்ணன்.


இப்படியெல்லாம் தான் பேசிய கருத்துக்களுக்கு, இந்தியர்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருக்கிறார் 'நோபல்' ராமகிருஷ்ணன்.


மேலும், அவர் கூறியதாவது


"இந்தியாவில் இருந்து வந்த இ - மெயில்கள் குறித்து நான் தெரிவித்த கருத்துக்களுக்கு எழுந்துள்ள எதிர்ப்பை பார்த்து, நான் பெரிதும் வருத்தம் அடைந்தேன். நான் தெரியாமல் பலரது மனதை புண்படுத்தியதை உணர்ந்து கொண்டேன். இதற்க்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


எனக்கென்று தனிப்பட்ட உதவியாளர் கிடையாது. எனது இ-மெயிலை எனது பணிக்காக பயன்படுத்துகிறேன். ஆகவே, முக்கியமான கடித தகவலை தெரிந்து கொள்வது கடினமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.


நடிகர்கள்,விளையாட்டு வீரர்கள் போலன்றி, நாங்கள் அமைதியான வாழ்க்கை வாழ்பவர்கள். திடீர் பிரபலம் ஆகும் போது அதை எப்படி எதிர்கொள்வது என்று எங்களுக்கு தெரியாது. அதுவம், யாரென்று தெரியாதவர்களிடம் இருந்து மலைபோல் இ- மெயில்கள் வந்தபோது அதை எப்படி அணுகுவது என்று தெரியாமல் போய்விட்டது.


தேசம் என்பது பிறப்பால் வருவது என்று நான் கூறியதற்கு மக்கள் ஆட்சேபனை தெரிவித்து உள்ளனர். நாம் எல்லாம் மனிதர்கள் என்று நான் சொன்னதை அவர்கள் பார்க்க தவறிவிட்டனர். ஒருவர் சாதனையில் மகிழ்ச்சி அடைய வேண்டுமானால், அவர் செய்த பணிகள் மீது விருப்பம் கொள்வதுதான் சரியான வழிமுறை.


எனக்கு நல்ல கல்வியும், வசதி வாய்ப்புகளும், நல்ல குழுவும் இருந்ததால்தான் இந்த சாதனையை செய்ய முடிந்தது.


தனிப்பட்ட முறையில் நான் முக்கியம் அல்ல. நான் செய்த சாதனைகளே முக்கியம். அதுதான் மக்களை மகிழ்ச்சி அடைய செய்ய வேண்டும்.


இந்தியாவிலும், வேறு நாடுகளிலும் நோபல் பரிசு பெறாத எத்தனையோ திறமையான விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்களின் பணிகளை அங்கிகரிக்க வேண்டும், இந்தியாவிலும் அத்தைகைய திறமைசாலிகளும், புத்திசாலி இளம் மாணவர்களும் உள்ளனர். அவர்களை நான் இந்தியா சென்ற போது நேரடியாகவே சந்தித்து இருக்கிறேன்."என்று கூறியிருக்கிறார் ராமகிருஷ்ணன்.


2002 ஆம் ஆண்டுக்கு பின் வருடம் தோறும் இந்தியா வருவதாகவும், அப்படி வரும்போதெல்லாம் நட்சத்திர ஹோட்டல்களில் தங்காமல் மாணவர்களுடன் கல்வி நிறுவனங்களில் தங்குவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.


"நான் பல ஆண்டுகளுக்கு முன்னால் சந்தித்த சக விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களிடம் இருந்தும், தொடர்பை இழந்து விட்டவர்களிடம் இருந்தும் வாழ்த்துக்களை பெறுவது சந்தோஷமாக இருக்கிறது " என்கிறார் அவர்.கடைக்காரர் கமெண்ட் :
நல்ல சாமியார்களும், நல்ல விஞ்ஞானிகளும் தனக்குன்னு ஒரு உலகத்தை உண்டாக்கி...அதுல வாழறவங்க ....அவங்களை வாழ்த்துக்களை சொல்றதோட... விட்டுவிடுவோம்.

பதிவு : இன்பா

Saturday, October 17, 2009

மக்கள் ஆதரவை இழந்த மார்க்சிஸ்ட்டுகள் - முதல்வர் புத்ததேவ்


1964 ஆம் ஆண்டு, இந்தியாவில், கம்யூனிஸ்டு கட்சி இடது, வலது என பிரிந்தது. மார்க்சிஸ்ட் கட்சி இடதுசாரிகள் ஆக உருவானது. இந்த பிரிவினைக்கு காரணம், கட்சிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள். மாசேதுங் சார்ந்த கொள்கைகளை முன்னிறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி.


பாட்டாளி மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் கட்சியை உருவான இயக்கம், சிங்கூர், நந்திக்கிராமத்தில் நடந்த சம்பவங்கள் மூலம் தனது சித்தாந்தங்களுக்கு நேர் எதிராக, சர்வதிகார சக்திகளை மிஞ்சும் வகையில் உருவெடுத்துவிட்டது.


"மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு சரிந்துவிட்டது, கட்சி மக்களிடமிருந்து விலகிவிட்டது" என்று அக்கட்சியின் மூத்த தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறினார்.

"மார்க்சிஸ்ட் கட்சியின் செல்வாக்கு குறைந்துவிட்டதற்கு அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளே சாட்சியம்,நம் கட்சி மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குறைந்துவிட்டது என்பதை இந்த தேர்தல் முடிவுகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம்" என்றார் அவர்.

மேற்கு வங்க மாநிலத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பரசத் என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார் என்று கட்சிப் பத்திரிகை ஜனசக்தியில் கூறப்பட்டுள்ளது.


இழந்த செல்வாக்கை மீட்கவும் மக்களுக்கும் கட்சிக்கும் இடையே உள்ள இடைவெளியைப் போக்கவும் நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியினரை அவர் கேட்டுக்கொண்டார்."ஏழைகளில் ஒரு பகுதியினர், நாம் முன்பு போல அவர்களது நலனில் அக்கறை செலுத்துவது இல்லை என்று கருதுகின்றனர்.திரிணமூல் காங்கிரஸ் பெயரைக் குறிப்பிடாமல் அந்தக் கட்சி மாவோயிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு அவற்றை வளர்த்து வருகிறது. இது மிகவும் ஆபத்தானது. இது குறித்து மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும்" என்றார் அவர்.

கம்யூனிஸ்டுகளின் இரும்புக் கோட்டையாக கருதப்பட்ட மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கூட்டணி தோல்வியடைந்தது. திரிணமூல் காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு செல்வாக்குடன் திகழ்ந்த மார்க்சிஸ்ட் முதல் முறையாக சரிவைச் சந்தித்தது.

சிங்கூர், நந்திக்கிராமத்தில் டாடா போன்ற தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க விளை நிலைங்களை கட்டாயமாக கையகப்படுத்தியது மாநில அரசு. இதை எதிர்த்த விவசாயிகள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டனர். விளை நிலங்களை கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து திரிணமூல் காங்கிரஸ் பிரசாரம் செய்தது. இதன் காரணமாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கு சரிந்தது என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.


மேற்கு வங்காளத்தை விட்டு தள்ளுங்கள்.


திருவனந்தபுரத்தில் முதல்வர் அச்சுதானந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:


"முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலையிட கோரி கேரள அரசு கடிதம் எழுதியுள்ளது. தமிழ்நாட்டுடன் நல்லுறவை நீடிக்கவே கேரளா விரும்புகிறது. இதை சீர்குலைக்கும் வகையில் தமிழகம் நடந்து கொள்ளக்கூடாது. புதிய அணை கட்டுவதில் கேரளம் உறுதியாக உள்ளது".


மலையாள சக தோழர் பிணாராயி விஜயன் மீது வழக்கு போடப்பட்டதற்கு, தமிழ்நாட்டு மாவட்ட தலைநகரங்களில், தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய தமிழக மார்க்சிஸ்ட்டுகள், முல்லை பெரியாறு விவகாரத்தில் காட்டும் மவுனம்தான் அவர்கள் வாய்கிழிய பேசும் போராட்ட சித்தாந்தங்களா?மாநிலத்திற்கு,தேர்தலுக்கு என்று ஒவ்வொரு கூட்டணி வைத்திருப்பது மற்ற அரசியல் கட்சிகளை போல சாக்கடை அரசியல் செய்யும் கட்சியை, என்று எப்படி பாட்டாளி வர்க்கத்தின் கட்சி என்று அழைப்பது?


நான்கு மாவட்ட பாசனத்தில், ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பதற்கு பெயர்தான் பொதுவுடைமை கொள்கையா?பதிவு : இன்பா

Friday, October 16, 2009

தீபாவளி பட்ஜெட் - ஒரு பட்டாசு ரகம்


தீபாவளி என்ற பண்டிகை கொண்டாடுவதர்க்காக இனிமேல் நாம் மாதந்தோறும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்கவேண்டும் என்று தோன்றுகிறது விலைவாசி பட்டியலை பார்க்கும்போது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் 20 முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சில பொருட்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி, வெளிப்பார்வையில் இனிப்பாக அமைந்தாலும், உள் மனதில் கசப்பை கொடுக்கும் அளவுக்கு மாறி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் பங்குச் சந்தையில் நிலையில்லா தன்மை, ஆன்-லைன் வர்த்தகம் ஆகியவற்றால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளன.


ரெடிமேட் ஆடைகள் விலை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 40 முதல் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிட் துணி, மீட்டருக்கு குறைந்தது 15 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 250 ரூபாய்க்கு விற்ற காட்டன், பாலியஸ்டர் சேலைகள், தற்போது, 300 முதல் 350 ரூபாய் வரை விற்கிறது. சுரிதார், ஜீன்ஸ் பேன்ட், உள்ளாடைகள் என, அனைத்து வகை துணிகளும் பாகுபாடின்றி 25 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


கடந்த தீபாவளியை ஒப்பிடுகையில், அரிசி விலையில் ரக வாரியாக 10 முதல் 30 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. கிலோ 48 ரூபாய்க்கு விற்ற சீரக சம்பா பிரியாணி அரிசி, தற்போது, 55 ரூபாய்க்கு விற்கிறது. அதேபோல், பொன்னி, கர்நாடகா டீலக்ஸ், ஐ.ஆர்., 20, கிராந்தி ரக இட்லி அரிசி என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த தீபாவளியின் போது, கிலோ 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டுக்கறி, தற்போது, 210 முதல் 230 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை, தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


இந்த விலை உயர்வில், தங்க நகைகளுக்கும் விதி விலக்கு இல்லை. கடந்த ஆண்டு 1,120 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், தற்போது, 1,480 ரூபாய் வரை விற்கிறது.


தீபாவளியின் போது தித்திக்கும் பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், நடப்பு ஆண்டு இவற்றின் மூலப் பொருட்களான சர்க்கரை, நெய், வெண்ணெய், மாவு வகைகளின் விலை அதிகரித்துள்ளதால், பலகாரங்களின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு, கிலோ 140 ரூபாய் வரை விற்ற சுவீட்ஸ் வகைகள், இந்த ஆண்டு 200 ரூபாயை தாண்டும். பால் விலை உயர்வு காரணமாக, மில்க் சுவீட்சின் விலை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர உள்ளது' என்றனர் வியாபாரிகள்.


மக்களுக்கு ஒரே ஆறுதல் தரும் செய்தியாக, பட்டாசு விலை மட்டும் 5 சதவீதம் குறைந்துள்ளதுதான்.


வேறுவழியில்லை. நமக்காக இல்லாவிட்டலும், நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாம் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடவேண்டும்தானே?.


கடைக்காரர் கமெண்ட்:
இதில் சொல்லாமல் விட்ட விஷயம்... தீபாவளிக்கு வரும் புது படங்களோட டிக்கெட் விலை...ஒரு வாரத்துல சம்பாதிக்கனும்ன்னு தியேட்டர்ல கன்னாபின்னான்னு ஒரு டிக்கெட்டுக்கு விலை சொல்றாங்க...தியேட்டர்போய் ஒரு ஆளு படம் பாக்குற செலவுக்கு.. இன்னும் ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணினா.. நல்ல விசிடி வாங்கி குடும்பத்தோடு வீட்லயே பாக்கலாம்...திருட்டு விசிடியை ஒழிக்கன்னும்னா முதல்ல டிக்கெட் விலையை குறைக்கணும்...இந்த விஷயத்தை யாராவது சினிமாக்காரங்களுக்கு புரியவச்சா புண்ணியமா இருக்கும்...கடைத்தெருவுக்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்,அவங்க குடும்பத்துக்கும் எங்கள் கடைக்காரர்கள் சங்கம் சார்பாக இனிய.............


பதிவு : இன்பா

Thursday, October 15, 2009

நடிகர் விவேக்கிற்கு ஒரு பகிரங்க கடிதம்வெட்கம் இல்லாத விவேக் அவர்களுக்கு,


மூடநம்பிக்கைகள் எல்லா மதங்களிலும் இருக்கின்றன. ஆனால், முற்போக்குத்தனம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பழக்க, வழக்கங்களை மட்டும் திரைப்படங்களில் நக்கல் செய்யும் உங்கள் கோமாளித்தனதிர்க்கு வர,வர ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.சரி, சினிமாவில் நீங்கள் உங்களை அறிவுஜீவியாக காட்டிக்கொள்வதர்க்காக இப்படியெல்லாம் உளறுகிறீர்கள் என்று எங்களால் புரிந்துகொல்ல முடிகிறது. ஆனால், நிஜ வாழ்க்கையில் உங்கள் முட்டாள்தனம், உங்கள் நடிப்பையும் மீறி வெளிப்பட்டுவிட்டது பத்திரிகையாளர்களை பற்றிய உங்கள் கிழ்த்தரமான பேச்சில்.


"டேய்! யாரு படத்தடா போடுற? உங்கக்கா, உங்கம்மா,உன் பாட்டி நிர்வாண படம் இருந்த அத எடுத்து போடு. இங்க திரிஷா குளிக்கிறத எடுத்து இன்டெர்நெட்ல உட்டியே, உன் பொண்டாட்டி, உன் அக்கா ,உன் அம்மா குளிக்கிற படம் இருந்த அதைப் போடு" என்ற ரீதியில் நடந்த உண்மையை எதிர்கொள்ள முடியாமல், எங்கே தானும், தன்னை சேர்ந்தவர்களும் மாட்டிக்கொல்வார்களோ என்ற பயத்தில் பேசிவிட்டீர்கள் திரு.விவேக் அவர்களே.

இப்படியெல்லாம் பேசிய உங்களை ஒன்று மட்டும் கேட்கிறேன். உங்களுடன் அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட நடிகைகள் எல்லாருமே பத்திரிக்கையாளர்களை வலுவில் அழைத்து 'போஸ்' கொடுத்து இருக்கிறார்கள் என்ற உண்மை உங்களுக்கு தெரிந்தும், தெரியாத மாதரி எப்படி நடிக்க முடிந்தது உங்களால்??.


இவ்வளவு ஏன்? நீங்கள் வக்காலத்து வாங்கும் புவனேஸ்வரி அவர்களே வாய்ப்புகளுக்காக(?) தனது 'தரமான' படங்களை பத்திரிக்கைகளுக்கும், இணையதளங்களுக்கும் வாரி வழங்கி இருக்கிறார். அது எல்லாம் நீங்கள் சொன்ன வெறும் மார்பிங்க் இல்லை விவேக்...நிஜம்...உங்கள் நிழல் உலகின் நிஜம்.


இரட்டை அர்த்தங்கள் வாராத உங்கள் காட்சிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். அதை காமெடி என்பீர்கள். பொது மேடைகளில் மட்டும் நீங்கள் சகோதரிகள் என்று அழைக்கும் சக நடிகைகளின் முத்த மற்றும் கவர்ச்சி காட்சிகளை என்னவென்று அழைப்பீர்கள்? எல்லாம் 'தொழில்' என்று ஆகிவிடுமா? தவறு செய்யும் பெண்கள் எல்லா துறைகளிலும், குடும்ப பெண்கள் என்னும் போர்வையிலும் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதேசமயம் சினிமா உலக பெண்கள் பற்றி உங்களுக்கு தெரியாதது இல்லை. அப்படி இருந்தும், பத்திரிக்கையாளர்களை விமர்சிப்பது என்ன நியாயம்??.


நீங்கள் கடவுளை கிண்டல் செய்தால், மத உணர்வுகளை காமெடி என்ற பெயரில் நக்கல் செய்தால், அதை அனைவரும் பொறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால், போலீசிடம் கையும், களவுமாக மாட்டிய நடிகைகளை பற்றி எழுதினால் உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. கூட்டம் போட்டு வாய்க்கு வந்தபடி கேவலமாய் பேசுவீர்கள் இல்லையா?


சினிமா பிரஸ் கிளப் சார்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றபட்டு இருக்கிறது. அதில் "நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பெற்றிருக்கும் திரு.விவேக் அந்த விருதின் தன்மையையும், கவுரவத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் பொது நிகழ்ச்சியில் பேசியிருப்பதையும் அவருடைய திரைப்படங்களில் ஊனமுற்றவர்களையும், பெண்களையும் இழிவுபடுத்தி வசனம் பேசி வருவதையும் மத்திய அரசுக்கு உரிய ஆதாரங்களுடன் தெரியப்படுத்தி அந்த விருதை திரும்ப பெற வேண்டுகோள் வைக்க வேண்டும்" என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


உங்களை சொல்லி குற்றமில்லை. உங்களை எல்லாம் 'பெரியஆளாய்' ஆக்கிய எங்களையும் , நாகேஷ்,தங்கவேலு போன்ற சிறந்த கலைஞர்கள் கூட பெற முடியாத, விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் பெறக்கூட தகுதி இல்லாத உங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியவர்களையும்தான் குற்றம் சொல்லவேண்டும்.பதிவு : இன்பா

Wednesday, October 14, 2009

படிப்புக்கு கடன்... 15 நாளில்

மாணவர்கள் அளிக்கும் ஆவணங்கள் சரியாக இருந்தால் விண்ணப்பித்த 15 நாளில் கல்வி கடன் வழங்கப்படுமென்று ஐ.ஓ.பி. அதிகாரி தெரிவித்துள்ளார்.


இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சென்னை மண்டல பொது மேலாளர் டி.தேனப்பன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கல்விக் கடன் கேட்கும் மாணவ-மாணவிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கல்விக் கடன் கேட்பவர்களுக்கு இந்தியன் ஓவர் சீஸ் வங்கி உடனே வழங்கி வருகிறது. சரியான ஆவணங்களை கொடுக்கும் பட்சத்தில் மறுப்பது இல்லை.


பணம் இல்லை என்ற ஒரு காரணத்திற்காக கல்வி தடைபடக் கூடாது. அதை மனதில் கொண்டு கல்விக்கடன் கேட்கும் என்ஜினீயரிங், மருத்துவம், நர்சிங், மற்றும் தொழில் நுட்ப உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

என்ஜினீயரிங் படிக்கும் மாணவர்களே அதிகம் பேர் கல்விக் கடனுக்கு விண்ப்பித்துள்ளனர். ரூ. 4 லட்சம் வரை எந்த பணயமும் இல்லாமல் கடன் வழங்கப்படுகிறது. ரூ.7.5 லட்சம் வரை 3-வது நபர் கியாரண்டி கிடையாது. அதற்கு மேலான தொகைக்கு பாதுகாப்புக்காக ஆவணங்கள் எதாவது பெறப்படும்.

உள் நாட்டுக்கடன் ரூ.10 லட்சம் வரை பெற விண்ணப்பதாரர்கள் 5 சதவிதம் பணம் வங்கியில் செலுத்த வேண்டும். வெளிநாட்டு கல்விக்கடன் ரூ.20 லட்சம் வரை பெறுபவர்கள் 15 சதவீதம் மார்ஜின் கட்ட வேண்டும். பெரும்பாலும் கல்விக்கடன் பெற விரும்புபவர்கள் அருகில் உள்ள வங்கிகளில் அணுகுவது தான் முறையாகும். அல்லது கணக்கு உள்ள பாங்கிகளை நாட வேண்டும். அப்போதுதான் எளிதாக கடன் அளிக்க முடியும்.

படிப்புக்காக பெறுகிற கடனை வங்கிகளுக்கு திரும்ப செலுத்த வேண்டும் இலவசமாக கருதக்கூடாது அப்போதுதான் மற்றவர்களுக்கு கடன் கொடுக்க முடியும். கல்விக்கடனை 5 முதல் 7 வருடத்தில் திருப்பி செலுத்த வேண்டும்.
வட்டியை படிக்கும் போதே கட்டலாம். படித்து முடித்து ஒரு வருடம் வரை கடனை திருப்பி செலுத்துவதற்கு அவகாசம். அதற்கு முன் வேலைகிடைத்து விட்டால் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

மத்திய-மாநில அரசு களின் அங்கீகாரம் பெற்ற கல்லுரிகளில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வங்கி கேட்கும் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தால் 15 நாட்களில் கல்விக்கடன் பெறலாம். கல்விக் கடனுக்கு வட்டி இல்லை என்பது தவறு.


மாணவர்கள் செலுத்த வேண்டிய வட்டியை மத்திய அரசு மானியமாக வங்கிகளுக்கு வழங்கும். ஆனால் இதுபற்றிய தகவல் எதுவும் இதுவரை வரவில்லை. கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் ஐ.ஓ.பி. மூலம் 82 ஆயிரத்து 737 மாணவர்களுக்கு ரூ.1450 கோடி கவ்விக்கடன் வழங்கப்பட்டது. இதில் தமிழகத்தில் தான் பெருமளவில் கடன் கொடுத்து இருக்கிறோம்.
இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை (6 மாதம்) 950 பேருக்கு ரூ.250 கோடி கல்விக்கடன் அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கடைக்காரர் கமெண்ட்:
இந்தியாவுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டேன்....இந்தியாவுல நான் பொறந்ததே ஒரு ஆகசிடெண்டுன்னு நோபெல் பரிசு வாங்குன சங்கட ச்சே வேங்கட ராமகிருஷ்ணன் சொல்லி இருக்காரு.... இந்த மாதரி படிப்புக்காக கடன் வாங்கும் பசங்க.. கண்டிப்பா இந்தியாவுலதான் வேலை செய்யணும்..அல்லது எங்கே வேலை செஞ்சாலும் இந்தியனா இருக்கனும்ன்னு ஐ.ஓ.பி. தனியா ஒரு பேப்பருல கையழுத்து வாங்கிகிட்டா நல்லா இருக்கும்..Tuesday, October 13, 2009

பத்து தமிழக எம்.பிக்களின் பம்மாத்து வருகைபத்து தமிழக எம்.பிக்களின் யாழ்.வருகை வெறும் பம்மாத்துத் தானா?


"எல்லோரும் வந்து பார்வையிட்டுச் செல்வதற்கு இலங்கையில் உள்ள நலன்புரி நிலையங்கள் மிருகக்காட்சிச் சாலைகள் அல்ல" என்று இந்தியாவுக்கான இலங்கைத் துணைத்தூதர் கிருஷ்ணமூர்த்தி கூறியது தமிழகத்திலிருந்து இந்தியத் தூதுக்குழுவினரைப் பொறுத்தவரை சரியானதாகவே தோன்றுகின்றது.


ஏனெனில் நலன்புரி நிலையங்களைப் பார்வையிட்டு மக்களின் அவலங்களை நேரில் கண்டுணர்ந்து அந்த அவலங்களைப் போக்குவதற்கான எண்ணத்தோடு வந்தவர்கள் போல அவர்களின் செயற்பாடுகள் அமையவில்லை.ஒரு சுற்றுலாப் பயணக் குழுவைப் போலவே இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பத்துப்பேரின் நிகழ்ச்சிநிரலும் அமைந்துள்ளது. இதனால் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த மக்களின் நம்பிக்கைகள் எல்லாம் புஷ்வாணமாகிப் போயுள்ளன.


முதற்கோணலே முற்றும் கோணல் என்பது போல, இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதலாவது நாள் நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருந்த கிழக்கு மாகாண விஜயம் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே இரத்துச் செய்யப்பட்டது. இன்னமும் இதற்குரிய காரணங்கள் சம்பந்தப்பட்டவர்களால் தெரிவிக்கப்படவேயில்லை. தமிழ்க் கட்சிகளோடு கலந்துரையாடியதோடு மட்டுமே இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் முதல்நாள் முடிவடைந்தது.
இரண்டாம் நாளில் (11.10.2009) காலை 8.30 இற்கு யாழ்ப்பாணத்திற்கு இந்திய நாடாளுமன்றக் குழு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் இந்திய நாடாளுமன்றத் தூதுக்குழுவுக்கு வரவேற்பு நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியிருந்த யாழ். பொது நூலக கேட்போர் கூடத்திற்கு 8 மணிக்கு முன்னதாகவே குடாநாட்டின் முக்கியப் பிரமுகர்கள், அரச உயரதிகாரிகள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூகசேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் என்போர் சென்று காத்திருக்கத் தொடங்கினர். காத்திருந்து காத்திருந்து விழிகள் பூத்ததுதான் மிச்சம். 10.30 மணிவரையும் நாடாளுமன்றக் குழுவினர் வரவேயில்லை.பொதுநூலகத்திற்கு வெளியே குழுமியிருந்த ஏராளமான பொதுமக்கள் இதனால் மனம் வெறுத்துப் போய் திரும்பிச் செல்லத் தொடங்கி விட்டனர்.அந்தநேரத்தில் பெரியமனது பண்ணி வானத்தில் ஹெலிகள் வட்டமிட்டு வந்திறங்கின. அதிலிருந்து இந்தியக் குழுவினர் பரபரப்போடு இறங்கினர்.அவர்கள் இறங்கிய வேகத்தைப் பார்த்தபோது அடுத்த நொடியே மக்களின் அவலங்களை தீர்த்துவைத்து விடுவார்கள் போலத் தெரிந்தது! ஆயினும் அணிவகுப்பு மரியாதையோடு உள்நுழைவதில் காட்டிய அவசரமும் அக்கறையும் மக்களின் பிரச்சினைகளை செவிமடுப்பதில் அவர்கள் சிறிதள வேனும் காட்டவில்லை.எல்லாம் செய்கிறோம் என்ற ஒற்றைச் சொல் "மந்திரம்".இந்தியக் குழுவினர் பொது நூலகத்துக்குள் உள்நுழையும் முன்னர் அவர்களைச் சூழ்ந்துகொண்ட பொதுமக்கள் கைகூப்பி, கண்ணீர்மல்கி "முகாம்களில் வாடும் எங்கள் உறவுகளை விடுவிக்க ஏற்பாடு செய்யுங்கள். இத்தனை நாளும் நாங்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் போதும். இனியும் அந்த வாழ்வு வேண்டாம்" என்று நெஞ்சுருகும் வகையில் நெகிழ்வுடன் இந்தியக் குழுவினரின் கைகளைப் பற்றியவாறு கூறினார்கள். ஆனால் அவர்களுக்கு ஆறுதல் வார்த்தையேதும் கூற மறந்த இந்தியக் குழுவினரின் முகங்கள் இயந்திரத்தனமாக இறுகியே இருந்தன.அவர்களின் இதயங்கள் மக்களின் அவலமொழி கேட்டு கொஞ்சமேனும் இளகியதாகத் தெரியவில்லை. "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் பதிலாகக் கொடுத்துவிட்டு விடுவிடென்று வரவேற்பு நிகழ்வுக்காக நூலகத்துக்குள் சென்றுவிட்டார்கள்.


நூலகத்துக்குள் இந்தியத் தூதுக்குழுவினரின் வருகையை எதிர்பார்த்து இரண்டரை மணிநேரமாக அங்குள்ளவர்களின் காத்திருப்பு நிகழ்வு ஒருவாறு முடிவுக்கு வந்தது. "பராக்!! பராக்!!! இந்தியக் குழுவினர் வருகிறார்கள்" என்று கட்டியம் சொல்லாத குறைதான். அந்தளவுக்கு அதிகாரத் தோரணையோடு மேடையில் ஏறியமர்ந்தார்கள் அவர்கள்.அதன்பின் இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்து வந்திருந்த தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு உரையாற்ற எழுந்தார்."டைம் ஷார்ட்டா இருக்கிறதனால ஸ்ரைட்டா மேட்டருக்கு வாங்க"(நேரம் குறைவாக இருப்பதால் நேரடியாக விடயத்துக்கு வாருங்கள் என்பதைத் தான் இப்படித் "தமிழில்" கூறினார்.) என்று கூறி மக்களை நோக்கி அவர்களது பிரச்சினைகளைத் தனக்குக் கூறுமாறு வேண்டினார். அட! மக்கள் பிரச்சினைகளை அறிவதில் பாலு இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாரே என்று அங்குள்ளவர்கள் அடைந்த ஆச்சரியம், மக்கள் பிரச்சினைகளை அவர் கேட்பதில் காட்டிய அசிரத்தையால் இருந்த இடம்தெரியாமல் மறைந்தோடி விட்டது.


அங்கு பிரச்சினைகளை எடுத்துரைக்க முற்பட்ட பலரும் நலன்புரிநிலையங்களில் வாடும் மக்களைப் பற்றியும் அவர்களின் விடுவிப்புப் பற்றியுமே அதிகமாகப் பிரஸ்தாபித்தார்கள். மக்கள் எல்லோரும் ஒரே குரலில் இவ்வாறு நலன்புரிநிலைய மக்களைப் பற்றிக் கூறத்தொடங்கியது இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த.பாலுவுக்கு ஏனோ பிடிக்கவில்லை.


"இதெல்லாம் நமக்குத் தெரியும். ஒரே விஷயத்தையே எல்லோரும் சொல்லாதீங்க. வேறு ஏதாவது சொல்லுங்க" என்று கிளிப் பிள்ளைபோல திரும்பத் திரும்ப சற்று அதிகாரத் தொனியில் அங்கு குழுமியிருந்தவர்களை வேண்டினார்.இப்போது இலங்கைத் தமிழர்களின் முன்னாலுள்ள மிகப்பெரிய "எரியும் பிரச்சினை" நலன்புரிநிலையங்களில் வாடும் மக்கள்தான். எனவே அவர்கள் அனைவரும் அதைப் பற்றித்தான் அதிகம் பேசமுடியும். நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகளை அறியத்தான் இந்தியக் குழுவே இலங்கைக்கு வந்திருந்தது வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கையில் நலன்புரி நிலைய மக்களைப் பற்றி எல்லோரும் கதைப்பதை ஆர்.பாலு ஏன் விரும்ப வில்லையென்பது புரியவேயில்லை. அத்துடன் அங்கு நிகழ்ந்த கருத்தாடலை வேறொரு திசைநோக்கி நகர்த்தவே அவர் பெரிதும் விரும்பினார்.அத்துடன் பலர் தமது கருத்துக்களைக் கூறிக்கொண்டிருக்கும்போதே பாலுவால் அதட்டும் தொனியில் அவர்களது கருத்து தொடர்ந்து தெரிவிக்கப்படாது தடுக்கப்பட்டது. வேறு விடயங்களைப் பேசுங்கள் என்று பாலு கூறியதால் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் நிதிப்பிரச்சினை பற்றியும், பெண்களுக்கு இடஒதுக்கீடு பற்றியும் இப்போதைக்கு அவசரமோ அவசியமோ இல்லாத உப்புச் சப்பற்ற விடயங்களே அதன்பின்னர் அவர்களுக்கு கூறப்பட்டது. நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினைகள் பற்றி கூறப்பட்டபோது விட்டேத்தித் தனமாக இருந்த இந்தியக் குழுவினர் இத்தகைய சில்லறைப் பிரச்சினைகள் பற்றிக் கூறும்போது மிக அவதானமாக அவற்றைச் செவிமடுத்ததுதான் அன்றைய பெரும் வேடிக்கை!நூலகத்தில் நிகழ்ந்த வரவேற்பு நிகழ்வு முடிவடைந்த பின்னர், யாழ்.பல்கலைக்கழகத்துக்குச் சென்று பல்கலைக்கழக மாணவர்களைகுறிப்பாக நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை சந்திப்பதே இந்தியக் குழுவினரின் அடுத்த நிகழ்வாக இருந்தது.ஆயினும் 8.30 மணிக்கு வரவேண்டிய இந்தியக் குழுவினர் ஆடியசைந்து 10.30 மணிக்கே வந்ததால் இந்நிகழ்வில் மாற்றம் செய்யப்பட்டது.


பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து பஸ்வண்டிகள் மூலம் நூலகத்துக்குக் ஏற்றி வரப்பட்டனர். அங்கு "இந்தியக் குழுவினர் கேட்போர் கூடத்தில் நடக்கும் வரவேற்பு நிகழ்வு முடிந்தபின்னர் வெளியே வரும்போது வீதியில் நீங்கள் அவர்களைச் சந்திக்கலாம்" என்று மாணவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆயினும் அதற்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் பத்துப்பத்து மாணவர்களாக உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். இதனால் இந்தியக் குழுவைச் சந்திக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்களில் அரைவாசிப் பேரே உள்நுழைந்து அவர்களைச் சந்திக்க முடிந்தது.


அந்தச் சந்திப்பின்போது நலன்புரிநிலையத்திலிருந்து வந்த மாணவர்களைத் தனியே சந்தித்து அவர்களது கருத்துக்களை அறியவோ அல்லது அவர்களுக்கான கல்வி தொடர்பான உதவிகளை வழங்குவது பற்றியோ இந்தியக் குழுவினர் மறந்துபோயும் வாய்திறக்க வில்லை. ஆயினும் பல்கலைக்கழகத்துக்கு வராமல் தம்மை இந்தியக்குழுவினர் அவமதித்து விட்டமையால் மாணவர்கள் தமது பிரச்சினைகளைத் தயங்காமல் கேட்டார்கள்.

"ஒரு ராஜீவ்காந்தியின் உயிருக்குப் பதிலீடாக இன்னும் எத்தனையாயிரம் தமிழ் மக்களைப் பலி கொள்ளப்போகிறீர்கள்?"
"வடக்குகிழக்கு இணைந்த மரபுவழித் தாயகம் தமிழர்களுக்குச் சுயாட்சியுடன் கிடைக்கும் தீர்வே அவசியம். அதற்கு இந்தியா என்ன செய்யப்போகிறது?"

"எம்முடைய குடும்பத்தவர்கள் நலன்புரி நிலையங்களில் வாடுகிறார்கள். அவர்களை எம்முடன் சேர்த்துவைக்க உதவுவீர்களா?" என்று கேள்விக் கணைகள் பல்கலைக்கழகத் தரப்பிலிருந்து இந்தியக் குழுவை நோக்கி ஏவப்பட்டன. அப்போதும் உரிய பதிலேதும் சொல்லாமல் விட்டேத்தித் தனமாக "எல்லாம் செய்கிறோம்" என்ற ஒற்றைச் சொல்தான் பதிலாக வந்தது.
அத்துடன் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கண்ணீர் விட்டுக் கதறியபடி நலன்புரிநிலையத்திலிருக்கும் தன் குடும்பத்தவர்கள் பற்றி கல்லும் கசிந்துருகும் வண்ணம் விவரித்துக் கொண்டிருக்கும்போது, மேடையில் அமர்ந்திருந்த இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத், வலு "ஹாயாக" சிகரெட் ஒன்றை ரசித்து ரசித்துப் புகைத்துக்கொண்டிருந்தார்.


ஒட்டுமொத்தத்தில் இந்தியக் குழுவினரின் யாழ்.விஜயம் எந்தவித அர்த்தப் பெறுமானத்தையும் கொண்டிராமல் பூஜ்ஜியமானதாகவே அமைந்துவிட்டது. "இலங்கையிலுள்ள எல்லா நலன்புரிநிலையங்களையும் பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை அறியவே இங்கு வந்துள்ளோம்" என்று நூலகத்தில் மார்தட்டினார் டி.ஆர்.பாலு. ஆனால் குடாநாட்டிலுள்ள எந்த ஒரு நலன்புரிநிலையத்துக்கும் அவர்கள் செல்லவேயில்லை. இந்தியக் குழுவினர் வருவார்கள், தமது குறைகளைக் கேட்பார்கள் என்றெண்ணிக் காத்திருந்த பல நலன்புரிநிலைய மக்கள் இலவுகாத்த கிளிகளாக ஏமாந்து போனதுதான் மிச்சம்.


உல்லாசப் பயணிகள்போல "வந்தார்கள், சென்றார்கள்" என்ற ரீதியில் இந்தியக்குழு நடந்துகொண்டிருப்பதால் அவர்களின் இலங்கை விஜயத்தின் மூலம் இலங்கைத் தமிழர் களின் பிரச்சினையிலோ நலன்புரிநிலைய மக்களின் பிரச்சினையிலோ எவ்வித செயலூக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.


ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்காக கப்பலில்அனுப்பப்பட்ட பொருள்களையே உரிய முறையில் இறக்கி மக்களுக்கு வழங்கச் செய்வதில் கையாலாகாத்தனமாக இருக்கின்றது இந்திய அரசு. அப்படியிருக் கையில் வெறும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசரத்தனமான திட்டமிடலற்ற மேம்போக்கான விஜயம் மாற்றத்தைக் கொண்டுவரும் என நம்பினோமானால் மீண்டும் ஏமாறுவதைத் தவிர வேறேதும் நடக்கப்போவதில்லை.


-ஒளண்யன்

(நன்றி : உதயன் இதழ், இலங்கை)

கேட்கிறதா எங்கள் அழுகுரல்?


செய்தி : சிவகாசியில் சுமார் 576 பட்டாசுத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் மட்டும் சுமார் 45,000 வரை இருக்கக்கூடும் என்று NGO நிறுவனங்களின் புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. அரசு தரும் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10,000.

இந்தியாவில் தயாரிக்கப்படும் பட்டாசுகளில் 90 விழுக்காடு சிவகாசியில் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பெரும்பகுதி ஒரே நாளில் - தீபாவளியன்று, கொளுத்தப்பட்டு விடுகிறது.
குழந்தைத் தொழிலாளர்களில் 90% பெண் குழந்தைகள்தான். அதுவும் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகள்.

இந்தியா - உலகிலேயே அதிக குழந்தை தொழிலாளர்களை கொண்ட நாடு. அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தொகை 11 மில்லியன். நிஜகணக்கு 75 மில்லியன்.குழந்தை தொழிலாளர்களுக்கு தனி சட்டம் அமல்படுத்தபட்ட ஆண்டு 1986

உங்களின்
மத்தாப்பூக்களுக்காக
பறிக்கப்பட்டுவிட்டன
எங்களின் சிரிப்புகள்.

நீர்சோற்றை பிசையும்போது...
ஊசிபட்டாசுகளை கோர்த்தே
ஊசியாய் போன
விரல்களின் இடுக்குகளில்
சிக்குகிறது வெடிக்கல்.

'கேப்'புகளின் வாசம்
குடிக்கின்ற கேப்பைகளியில்.
உங்களின் குழந்தைகள்
'பென்சில்' பிடிப்பதற்காய்
பேனா பிடிக்கவில்லை
எங்கள் கைகள்.

ராக்கெட்டுகளாய்...

வான்நோக்கி பறந்து
கைக்கு எட்டாமல் சிதறுகின்றன
எங்களின்
பள்ளிக்கூட கனவுகள்.


வாசல்தோறும்
சிதறிக்கிடக்கும்
வெடித்த உதிரிவெடிகள்
எங்கள் விரல்களை
நினைவுபடுத்தவில்லையா
உங்களுக்கு?

ஆயிரம்வாலா
சரங்களின்
சபதங்களில்...
யாருக்கும் கேட்காமல்போனது
எங்களின் அழுகுரல்.

மழையில்
நமுத்துப்போன
புஸ்வாணங்கள்...
எங்களுக்காக
போடப்பட்ட
சட்ட, திட்டங்கள் எல்லாம்.


ஒரு நொடியில்
எரிந்து,புகைக்கும் சாட்டைகள்....
அறுக்க இயலாத
சங்கிலிகளாய் கட்டுகின்றன
எங்கள்
ஒட்டுமொத்த வாழ்வையும்.


ஒரே ஒரு நாள்
கொண்டாடும்
உங்களின்
தீபாவளி வெளிச்சதிற்க்காய்...
வருடந்தோறும்
உருகும் மெழுகுவர்த்திகள் நாங்கள்....


கவிதை : இன்பா

 
Follow @kadaitheru