Wednesday, October 7, 2009

திருக்குவளை நினைவுகள் - கலைஞர்



"நான் பிறந்த மண்ணில் நான் பிறந்த இல்லத்திற்கு எத்தனை முறை வந்தால்தான் என்ன; தெவிட்டுவதில்லையே!"

என்று தனது சொந்த ஊரான திருக்குவளை சென்றுவந்தது குறித்து நெகிழ்ச்சியுடன் எழுதுகிறார் கலைஞர் கருணாநிதி.

"எத்தனையோ பசுமையான நினைவுகள் -எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் - தந்தையார் முத்துவேலரையும், அன்னை அஞ்சுகத்தையும் வாழ வைத்த இந்த வீடு; இன்று நாடு, மக்களை வாழ வைக்க என்னை எதிர் பார்க்கும் நிலையில் உயர்த்தி விட்டுள்ளதே! நான் பிறந்த மண்ணுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேன்" என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

"எத்தனையோ முறை நான் பிறந்த இல்லத்தைப் பார்ப்பதற்காக திருக்குவளைக்குச் சென்றிருக்கிறேன். இப்போதும் அப்படிச் சென்ற போது 1996-ம் ஆண்டு என் கைப்பட எழுதிய கல்வெட்டு போன்ற ஒரு கடிதம் 18-6-1996 என்று தேதியிட்டு பெரிய அளவில் திருக்குவளை வீட்டுச் சுவரில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டேன்.

நான் பிறந்த மண்ணில் நான் பிறந்த இல்லத்திற்கு எத்தனை முறை வந்தால்தான் என்ன; தெவிட்டுவதில்லையே! எத்தனையோ பசுமையான நினைவுகள் -எத்தனையோ மறக்க முடியாத நிகழ்ச்சிகள் - தந்தையார் முத்துவேலரையும், அன்னை அஞ்சுகத்தையும் வாழ வைத்த இந்த வீடு; இன்று நாடு, மக்களை வாழ வைக்க என்னை எதிர் பார்க்கும் நிலையில் உயர்த்தி விட்டுள்ளதே! நான் பிறந்த மண்ணுக்கு நான் எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேன்.

அதில் உள்ள இந்த வாசகத்தை நான் கண்ட போது நான் பிறந்த அந்த இல்லம் இன்னும் எனக்கு கடுமையான கட்டளைகளை வழங்கி, அதற்கான பயணத்திற்கு என்னை விரட்டுபவை போலவே இப்போதும் உணர்ந்தேன், உணருகிறேன்.


1996-ம் ஆண்டு இதை எழுதியதற்குப் பின்பு இடையில் 13 ஆண்டு காலத்தில் என் பயணத்தில் ஏற்பட்ட விளைவுகள் தமிழ் அறிஞர்கள் பலரின் கனவாக இருந்த தமிழுக்கு செம்மொழி தகுதி என்ற கோரிக்கை நிறைவேறியது என்பதையும், சேதுக் கால்வாய்த் திட்டத்திற்கான கால்கோள் விழா நடத்தப்பட்டு அதை நிறைவேற்றியே தீர வேண்டுமென்ற அக்கறை ஓரிரு கட்சிகளைத் தவிர மற்ற எல்லா கட்சிகளுக்கும் தமிழ் உணர்வின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் - மற்றும் தமிழகத்திலே முதல் முறையாக 7000 கோடி ரூபாய் விவசாயிகளுக்கான கடன் தொகை முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதையும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது என்பதையும், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகித உள் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டது என்பதையும், அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்பதையும், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்க முடியும் என்பதையும், உலகச் செய்திகளை ஏழை எளிய நடுத்தர மக்களும் அறிந்து கொள்ள அவர்களின் ஓய்வு நேரத்தை உற்சாகமாகக் கழித்திட வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தமிழகத்தில்தான் முதன் முதலாக வழங்கப்பட்டுள்ளன என்பதையும், நமது பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்த உடல் நலத்தையும் பேண வேண்டுமென்று பெருந்தலைவர் காமராஜரால் தொடங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம், அந்தக் குழந்தைகளுக்கு இப்போது என் தலைமையில் உள்ள ஆட்சியில் மூன்று முட்டைகள் வாரத்திற்கு என்ற அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதையும், அவ்வளவு ஏன்?
ஆரம்பக் கல்விக்கூடங்களையே காணாதிருந்த பட்டிக்காட்டுப் பகுதிகளில் எல்லாம் பாமரத்தன்மை விலகிடவும், பகுத்தறிவுப் பரிதிகளாக அவை தோன்றிடவும் - இதோ! என் பிறந்தகத்திற்கு அருகிலேயே திருவாரூரில் ஆயிரம் கோடி ரூபாயில் மத்தியப் பல்கலைக் கழகமே அமைந்துவிட்டது என்பதையும் காணும்பொழுது - அன்று நான் 1996-ல் திருக்குவளையில்
"நான் பிறந்த மண்ணுக்கு எப்படித்தான் நன்றி சொல்லப்போகிறேன்'' என்று எழுதியுள்ள அந்த வாசகத்தோடு ஓ! இப்படியும் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு நன்றி சொல்லலாமே! என்று பெருமிதமடைகிறேன்.
அந்தப் பெருமிதத்தோடு திருக்குவளையில் என் வீட்டிற்குள் நுழைந்தவுடன் அங்கேயே மீதம் உள்ள என் வாழ்நாளையும் கழித்து விடலாமா என்றும் அந்த வீட்டில் நான் தவழ்ந்த தாழ்வாரம் - குலவி மகிழ்ந்த கூடம், வேலிக்கு அப்பால் விளையாடிய தோட்டம், வீதிக்கடுத்துள்ள குளத்தில் நீராடி மகிழ்ந்த நேரங்கள் -இவையெல்லாம் "எங்களை விட்டுப் போகாதே! போகாதே!'' என்று தடுத்தபோதிலும் -தொல்லைகளுக்குள்ளே துன்பத்தையே இன்பமெனக் கருதிக் கொண்டு தொடர்ந்து இப்போது மேற்கொண்டுள்ள பயணத்தையே தொடருவது என்ற முடிவோடும்;

உடன்பிறப்பே, நீ துணை இருக்கிறாய் என்ற துணிவோடும் பிறந்தகத்திலிருந்து விடை பெற்று; தமிழ் மக்களுக்காக மேலும் மேலும் உழைக்கின்ற அருந்தவத்தில் ஆழ்கின்றேன் " என்று கூறியுள்ளார் கருணாநிதி.

"சோகங்களில் எல்லாம் பெரிய சோகம்... பிறந்த மண்ணை பிரிவதுதான்"
- இயக்குனர் பாரதிராஜா

0 comments:

 
Follow @kadaitheru