Monday, February 28, 2011

மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கு,

மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்கு,

இந்தியாவுக்கு ஒரு உள்துறை அமைச்சர் இருப்பதும், அது நீங்கள்தான் என்பதும் பல தருணங்களில் எங்களுக்கு நினைவே வருவதில்லை. அந்த அளவுக்கு இருக்கின்றன உங்கள் 'செயல்பாடுகள்'.

"யார் டம்மி பீஸ்" -நீங்களா, மன்மோகன் சிங்கா என்று ஒரு பட்டிமன்றம் வைத்தால், நிச்சியமாக வெற்றிமாலை உங்களுக்கே.

"தமிழகத்தை தொழில் துறையில் முதலிடம் பிடிக்க செய்வோம்" என்று அறிவுஜீவியாய், புள்ளிவிவரங்களை அடுக்கி கொண்டே பேசினீர்கள்.

"ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது " - இந்த பழமொழிக்கு உங்களைவிட சிறந்த உதாரணம் இந்த உலகத்தில் இல்லை, திரு. சிதம்பரம்.

தமிழகத்தில், அடுத்தடுத்து இரண்டு மீனவர்கள், இலங்கை படையினரால் சுட்டிகொல்லப்பட்ட செய்தியாவது உங்களை எட்டியதா?

அப்போது "தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனபோக்கை கடைபிடிக்கிறது" இப்படி சொன்னவர் குஜராத்தை சேர்ந்த பாஜக தலைவர் நிதின் கட்க்காரி. இந்திய கம்யூனிஸ்ட் பிரகாஷ் காரட் கூட இதுபற்றி கருத்து தெரிவித்தார்.

ஆனால், தமிழரான, அதுவும் உள்துறை அமைச்சரான நீங்கள் கண்டன அறிக்கையை விடுங்கள்,இதுபற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லையே??

நமக்கு சம்மந்தமே இல்லாத சுஷ்மா சுவராஜ் அவர்கள் பாதிக்கபட்ட மீனவ குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார். தமிழக மீனவர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் பேசுவதாக அறிவித்தார்.

நீங்கள் ராமேஸ்வரம், நாகை பகுதிகளுக்கு சென்று மீனவர்களை சந்தித்து பேசினார்களா?

ஆனால், கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாமல், இப்போது தமிழ்நாட்டு மண்ணை மிதித்து இருக்கீர்கள். உங்கள் 'திருவாய்' இப்போது திறந்து இருக்கிறது.

எதற்கு தெரியுமா? காங்கிரஸ்சுக்கு 81 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கருணாநிதியிடம் பேரம் பேசுவதற்காக மட்டும்.

இப்படி நீங்கள் பேரம் பேசிகொண்டிருந்த அதே நாளில் கூட, கச்சதீவில் மீன் பிடித்து கொண்டிருந்த நமது மீனவர்களை, இலங்கை கடற்படையினர் மிரட்டி, விரட்டி அடித்து இருக்கிறார்கள்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நக்சலைட்டுகள், காஷ்மீரில் ஓயாத தீவிரவாதம், கடுமையான விலைவாசி உயர்வு, சீனாவின் அத்துமீறல்கள் என ஏகப்பட்ட பிரச்சினைகள் விவாதிக்க வேண்டி காத்துகொண்டு இருக்கிறது.

உள்துறை அமைச்சரான நீங்கள், இங்கே சென்னையில்,அண்ணா அறிவாலயத்தில் "சீட்டுக்கு" கருணாநிதி அண்ட் கோவின் கால்களை விடிய விடிய பிடித்துகொண்டு "பேரம்" பேசிக்கொண்டு இருப்பது கேவலம் என்றால், உங்களை இப்படி "மாடு பிடிக்க" அனுப்பிய உங்கள் காங்கிரஸ் தலைமை அதைவிட கேவலம்.

மீனவர் மீதான தாக்குதல் குறித்த பேச்சுவார்த்தைக்கு இலங்கை சென்ற நிருபமா, ஏன் சென்னைக்கு வந்து பின் கொழும்பு செல்லவேண்டும்?? டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல நேரடிவிமானம் இல்லையா? எல்லாம் வெறும் கண்துடைப்பு என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா?

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் என்று வடஇந்திய மீடியா ஏன் பிரதமர் மன்மோகன் சிங் கூட பேசுகிறார். ஏன் இந்திய மீனவர்கள் என்று அங்கே யாரும் சொல்வதில்லை. தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலம்தான் என்று தெரியவில்லை போலும்.

தமிழரான உங்களுக்கும், மற்ற தமிழக எம்.பிக்களுக்கும் எந்த அக்கறையும், பொறுப்பும் இல்லாதபோது, வட இந்தியர்களை குறை சொல்லி என்ன பயன்?

இந்திய மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறதே, இது பற்றி இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளன, அது பற்றிய விவரங்கள் என்னென்ன, இது விஷயமாக இலங்கை அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அளிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

-இப்படி எல்லாம் தற்போது நடைபெற்றுவரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பி இருப்பவர்கள் யார் தெரியுமா? ராஜஸ்தானைச் சேர்ந்த பரத்ராம் மெஹ்வால் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஏக்நாத் கெய்க்வாட் என்ற பா.ஜ., எம்.பி.,க்கள்.

தயவுசெய்து இனிமேல் நீங்கள் டெல்லியில் வேட்டிகட்டி கொண்டு, தமிழராக வலம் வரவேண்டாம் மிஸ்டர் சிதம்பரம்.

அது, எங்கள் தமிழ்நாட்டு மீனவ சமுதாயத்துக்கு வெட்ககேடு.

சிவகங்கையில் உள்ள உங்கள் வீட்டில், மீனவ பெண்கள் எல்லாம் புடவைகளை வீசி ஆர்ப்பாட்டம் செய்தார்களாமே.வேண்டுமானால், அதில் இருந்து ஏதாவது ஒன்றை எடுத்து உடுத்திகொள்ளுங்கள்.

இந்த கோரிக்கை உங்களுக்கு மட்டுமல்ல. உங்களை போலவே ஊழல் செய்வதை தவிர வேறு ஒன்றுக்கும் லாயக்கு இல்லாத அனைத்து தமிழக எம்.பி க்களுக்கும் பொதுவானது.

இது,ஒட்டுமொத்த தமிழக மீனவமக்களின் சார்பான கோரிக்கை.

-இன்பா

Thursday, February 24, 2011

"பஸ் டே” கொண்டாட்டங்கள் - கோபி

இது, என் இனிய நண்பர் திரு.கோபி எழுதிய பதிவு. படித்தவுடனே பொட்டில் அடித்த உணர்வு. உண்மையான பாதிப்புடன் அவர் வெளியிட்டு இருக்கும் இந்த பதிவு...உங்களுக்காக
இன்றைய இந்தியா அயோக்கிய அரசியல்வாதிகளிடம் மட்டும் சிக்கி தவிக்கவில்லை... சில பல அராஜக, அயோக்கிய மாணவர்கள் கையிலும் சிக்கித்தான் தவிக்கிறது.. இளைஞர்களே கனவு காணுங்கள், நம் நாடும் நாளை வல்லரசாக மாறும் என்று... இளைஞர்களே... இன்று நீங்கள் வாழ்வில் செய்யும் எந்த விஷயங்களும், எடுக்கும் எந்த நல்ல முடிவுமே வருங்காலத்தில் நம் நாட்டின் எதிர்காலமாக இருக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?

நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் தான் என்று இன்று இருக்கும் பல நல்லவர்கள் உங்களை பற்றி உயர்வாக நினைத்து கொண்டிருக்கும் வேளையில் நீங்கள் செய்வது என்ன?

ஒவ்வொரு வருடமும் ”பஸ் டே” கொண்டாட்டங்கள்....

ஆஹா... பஸ் டே கொண்டாட்டமா, தாராளமாக கொண்டாடுங்களேன்... பொங்கல், தீபாவளி, கிருஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகைகளின் போது அனைத்து குடும்பங்களும் எப்படி மகிழ்ச்சியாக தன் சுற்றம் சூழ மகிழ்வாக கொண்டாடுகிறோமோ அப்படித்தானே இந்த பஸ் டே கொண்டாட்டமும்..

இந்த கொண்டாட்டத்திற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

* மாணவர்கள் அந்தந்த பகுதிகளில் இருக்கும் பஸ் டிப்போக்களுக்கு சென்று, அழுக்கடைந்து காணப்படும் பேருந்துகளை வெளிப்புறம் நன்றாக தண்ணீர் விட்டு அலம்பி, உட்புறம் நன்றாக சுத்தம் செய்து, பொதுமக்கள் முகம் சுளிக்காமல் பயணம் செய்யும் வகையில் செய்யலாம்...

* வருடம் முழுதும் பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், பள்ளி குழந்தைகள் என்று எல்லோரையும் பத்திரமாக செல்லும் இடம் சேர்க்கும் வாகன ஓட்டுநர்கள், பேருந்தில் டிக்கெட் கொடுக்கும் நடத்துநர்கள் ஆகியோருக்கு ஏதேனும் பதில் மரியாதை செய்யலாம்...

* பேருந்தில் பயணிக்கும் சக பயணியர்களுக்கு உபத்திரவம் கொடுக்காமல் இருக்கலாம்...

* தான் கல்லூரிக்கு செல்வது படிப்பதற்கே, மற்றபடி தான் எந்த வேலையையும் (மாணவர்களை கவனித்து கொள்ளும் தந்தை, அண்ணன்கள் போல்) செய்யாமல், வெறுமே புத்தகங்களை கையிலேந்தி வகுப்பறையில் ஆசிரியர்களுக்கு மரியாதை அளித்து, அவர் சொல்லிக்கொடுக்கும் நல்ல விஷயங்களை கிரகித்து அதை தன் வாழ்நாளுக்கு உபயோகப்படுத்துதலாம்...

ஆனால் ”பஸ் டே” என்ற பெயரில் அந்த தினத்தில் சென்னையெங்கும் நடக்கும் கூத்துகள் என்ன?

பேருந்துகளில் உடன் பயணிக்கும் பயணிக்கும் சக பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் பெரிதாக ஓசையெழுப்புவது...

பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பெண் பயணிகளை கிண்டல் செய்வது
பேருந்துகளில் உடன் பயணிக்கும் சக பயணிகள் யாரேனும் இந்த நடவடிக்கைகளை தட்டிக்கேட்க முன்வந்தால் அவர்களை கும்பலாக சேர்ந்து நையப்புடைத்து காயப்படுத்துவது.

பேருந்துகளின் மேற்கூரையில் ஏறி நின்று கொண்டு ஆட்டம் என்ற பெயரில் அனைத்து கன்றாவிகளையும் செய்வது.

பேருந்துகள் செல்லும் வழியெங்கும் சாலைகளில் இருக்கும் கடைகளை அடைக்க சொல்வது, கடைகளை சூறையாடுவது, பேருந்து நிறுத்தங்களில் இருக்கும் பயணியர்களை ஏசுவது, பெரும்பாலும் அனைத்து மாணவர்களும் பெண்களை கண்டால் கண்டிப்பாக ஏதாவது ஒரு அசிங்கமான வார்த்தையை உபயோகிக்காமல் இருப்பதில்லை (உபயம் : இன்றைய கேவலமான திரைப்படங்கள்).... எதிர்ப்படும் வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்துவது....

நாட்டின் பாதுகாப்பில் பெரும் பங்கு வகிக்கும் காவலர்கள் இந்த அராஜக மாணவர்களின் அட்டகாசங்கள், கூத்துக்கள் அத்துமீறாமல் இருக்க, பெரும்படையாக இவர்களுடன் பலதரப்பட்ட வாகனங்களில் கூடவே ஊர்வலம் வர செய்வது...

இதெல்லாம் இந்த படிக்கும் வயதில், இளைஞர்கள் / மாணவர்கள் செய்ய காரணம் என்ன? இன்றைய அக்கிரம அரசியல்வியாதிகள் தான்...

போன வருடம் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம், கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளை நாம் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? இதோ, இந்த வருடமும் இந்த “பஸ் டே” கொண்டாட்டம் என்ற பெயரில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அளவில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இருக்கின்றனர்... ஏராளமான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து உள்ளனர்... பெண் காவல்துறை அதிகாரியை கொச்சையான, ஆபாசமான வார்த்தைகள் சொல்லி அவமானப்படுத்தி உள்ளனர்... ஏன், இவர்கள் வீடுகளில் பெண்கள் இல்லையா, அவர்களை இப்படி தான் நடத்துகிறார்களா? இது தான் இவர்கள் தன் வாழ்நாளில் கற்றுக்கொள்ளும் பாடமா?

இந்த மாணவர்களின் கடமை தான் என்ன?

இன்றைய சூழலின் மிகுந்த சிரமங்களுக்கிடையில் இவர்களை பெற்றோர்கள் கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்... நன்றாக உணர்ந்து படிப்பது ஒன்று மட்டுமே இவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்...... எப்படி உணவருந்த வீட்டில் உட்காரும் போது, உணவை ருசித்து சாப்பிடுகிறார்களோ, திரையரங்குகளுக்கு சென்றால் திரைப்படத்தை ரசித்து பார்க்கிறார்களோ, அதே போல் கல்லூரியில் படிக்கும் அந்த 3-4 வருடங்கள் அவர்களின் முழு கவனமும் படிப்பின் மீது மட்டுமே இருக்க வேண்டும்...

அனைத்து விதமான தீய பழக்கங்களில் இருந்தும் கவனமாக ஒதுங்கி இருக்க கற்றுக்கொள்ளலாம்... முடிந்த வரை அடுத்தவர்களுக்கு ஏதேனும் ஒரு வழியிலாவது உதவியாக இருக்கலாம்... தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு எந்த அநாவசிய செலவையும் வைக்காமல் இருக்க குறைந்தபட்சம் முயற்சிக்கவாவது செய்யலாம்... ஓய்வு நேரங்களை தன் வாழ்வை வளமாக்கும் வழியில் நூலகங்களில் சென்று செலவிடலாம்... அயோக்கிய அரசியல்வாதிகள் பின்னால் சென்று, கூட்டங்களுக்கு ஆள் பிடிப்பது, கோஷம் போடுவது, போஸ்டர் ஒட்டுவது போன்ற நிகழ்வுகளுக்கு செலவிடும் நேரத்தில், தன் பகுதியில் உள்ள வசதியற்ற குழந்தைகளுக்கு இலவசமாக ட்யூஷன் எடுக்கலாம்...

இனி வரும் காலங்களிலாவது படிக்கும் வேளையில் இந்த மாணவர்கள் அயோக்கிய அரசியல்வாதிகளின் கையில் சிக்கி, சின்னாபின்னமாகி, சீரழிந்து வாழ்வை தொலைக்காமல், படிப்பு மட்டுமே குறிக்கோளாக வைத்து நன்கு படித்து, தன் குடும்பத்திற்கும், எழுத்தறிவித்த ஆசான்களுக்கும் நல்ல பெயர் எடுத்து கொடுத்தால், அதே நல்ல பெயர் மற்றவர்களால் இவர்களையும் வந்தடையும்...

செய்வார்களா இன்றைய மாணவர்கள்?? இல்லையென்றால், இதுவும் செவிடன் காதில் ஊதிய சங்கு தானா?

நம் நாட்டின் இன்றைய நிகழ்வுகளை ஜீரணிக்க முடியாத ஒரு சராசரி குடிமகன்.

(உணர்வு : ஆர்.கோபி)

Tuesday, February 22, 2011

அறிவுக்கு விருந்தாகும் ஆங்கில புத்தகங்கள் - 2010

சென்ற ஆண்டு வெளிவந்த சில சிறந்த ஆங்கிலப் புத்தகங்கள் பற்றி திரு.சச்சிதானந்தன் சுகிர்தராஜா அவர்கள் காலச்சுவடு இதழில் எழுதிய ஒரு அருமையான கட்டுரை இங்கே...

நாவல்

சென்ற ஆண்டு எத்தனையோ புதினங்கள் வெளிவந்தன. அவற்றில் Tariq Ali இன் Night of the Golden Butterflyஐ உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். அலியின் நாவலை முக்கியப்படுத்துவதற்குக் காரணம் உண்டு. அதைச் சொல்லும் முன்பு சில தகவல்கள். தாரிக் அலியைப் பெரும்பாலானவர்கள் அரசியல் கிளர்ச்சியாளராகவும் செயல்திறனாளராகவுந்தான் அறிந்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அலி தன்னை நல்ல கதை சொல்லியாக மறு உருவாக்கம் செய்திருக்கிறார். அலியுடன் தங்கள் அரசியல் வாழ்வை இடதுசாரிப் பார்வையுடன் ஆரம்பித்தவர்கள் இன்று அரசின் உண்மையை அறிவிப்பவர்களாக மாறியபோதும் அலி இன்னும் சளைக்காமல் அரசுக்கு உண்மையை எடுத்துரைப்பவராக இருக்கிறார்.

இந்த நாவல், இஸ்லாமுக்கும் மேற்குலக்குமிடையே ஏற்பட்ட கலாச்சார, அரசியல் ஊடாடுகளை (interaction) அலி அலசும் வரிசைத் தொடர் நாவலில் ஐந்தாவதும் இறுதிப் பாகமும் ஆகும். முதல் பாகம், Shadows of the Pomegranate Tree 15ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் ஆண்ட ஸ்பெயினில் ஆரம்பிக்கிறது. இதை வாசித்த Edward Said நாவலைச் சமகாலம்வரை நீட்டிக்கச் சொன்னார். சயத்தின் வேண்டுகோளை இந்தக் கடைசிப் பாகம் பூர்த்திசெய்கிறது.

இந்த நாவல் 60களில் கூட்டாளிகளாகவும் பொதுவுடமை எண்ணமுள்ளவர்களாகவும் லாகூரில் வாழ்க்கையைத் தொடங்கிப் பிறகு மேற்கே சென்ற Dara, Zahid, Plato and Confucius என்னும் நண்பர்கள் நால்வர் மறுபடியும் பாகிஸ்தானுக்குத் திரும்புவது பற்றியது. இந்த ஐந்து தொடர்நாவல்களில் ஒவ்வொன்றும் தனித்தன்மையானவை. ஆகையால் காலமுறை வரிசையில் படிக்க வேண்டியதில்லை. வாசகர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ற மாதிரி இந்தத் தொடரில் எந்தத் தொகுதிக்குள்ளும் நுழையலாம். தந்தையர் நாடான பாகிஸ்தானை உள்ளிருந்து அரிக்கும் நான்கு புற்றுநோய்களான அமெரிக்கா, ராணுவம், முல்லாக்கள், வசப்படுத்தத்தக்க அரசியல்வாதிகள் என ஆரம்பிக்கும் நாவலில் ஒவ்வொரு பக்கத்திலும் அரசியல் குறும்புத்தனம் துள்ளுகிறது.

இஸ்லாமைவிட்டு விலகி இன்று வலதுசாரிகளின் சுவரொட்டிப் பாவையான Ayaan Hirsi Ali எப்படி மறைமுகமாகப் பகடிசெய்யப்படுகிறார் என்பதைப் படிக்கும்போது ரசிக்கத் தவறாதீர்கள்.

அலியின் நாவல் என் கவனத்தைக் கவர்வதற்குக் காரணம் இதுதான். இன்றைய ஆங்கில இலக்கியத்தில் முதல்முதலாக ஒபாமாவின் ஆட்சியை விசாரணைப்படுத்தும் நாவல் இதுதான் என்று நினைக்கிறேன். இந்த நாவலின் பிரதான பாத்திரமான Dara, ஓவியர். அவர் வரைந்த படத்தில் இன்றைய ஏகாதிபத்தியத்தின் தலைவர் ஒபாமா ஒரு பொத்தான் அணிந்திருக்கிறார். அதில் பொதிந்திருக்கும் வாசகம் ஒபாமாவின் ‘ஆம் எம்மால் முடியும்’ என்னும் பிரபலமான சொற்றொடரைப் பரிகசிக்கிறது: Yes, we can… still destroy countries.

ஒபாமா ஜனாதிபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்டபோது ஆப்பிரிக்க-அமெரிக்கர் ஒருவர் சொன்ன வார்த்தையைக் காலச்சுவடில் எழுதியிருந்தேன். அவரின் ஆருடத்தை ஒபாமாவின் சமீபத்திய சில செயல் முறைகள் மெய்ப்பித்திருக்கின்றன. அன்று எழுதியதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்: ஒபாமா ஆப்பிரிக்க-அமெரிக்கராக இருக்கலாம். ஆனால் பதவியில் இருப்பவர்களுக்கு வரும் இயல்பான அதிகாரத்துடன் ஆள்வார்.

சுயசரிதை

நான் புழங்கும் வட்டத்தில் டொனி பிளையர் ஒரு தூஷன வார்த்தை. ஆகையால் அவரது சுயசரிதையான A Journeyஐ வாங்கும்போது புத்தகக்கடையில் யாராவது எனக்குத் தெரிந்தவர்கள் தென்படுகிறார்களா என்று நாலு பக்கமும் பார்த்துவிட்டுத்தான் வாங்கினேன். 600க்கும் மேலான இந்தத் தொக்கையான புத்தகத்தில் பிளையரைப் பற்றிப் புதிதாக அறிந்துகொள்வதற்கு ஒன்றும் இல்லை. பிளையரை உந்துவித்த இரண்டு சமாச்சாரங்கள் உண்டு. ஒன்று அவருடைய அரசியல் கருத்தியல். இரண்டாவது மத நம்பிக்கை.

ஆனால் இந்தப் புத்தகத்தில் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் அவை பற்றிய தகவல்கள் மிகக் குறைவே. அவருடைய புகழுக்கும் அவர் தொழிற்கட்சிக்கு ஈட்டிக் கொடுத்த மூன்று தேர்தல் வெற்றிகளுக்கும் பின்னால் இருக்கும் அரசியல் தத்துவம் பற்றி விளக்கமே இல்லை. இவர் நிச்சயமாக சமதர்மவாதியல்ல. சமூக மக்களாட்சிவாதியும் அல்ல. அவருடைய எதிரிகள் கேலிசெய்வதுபோல் பழமைவாதியும் அல்ல.


இந்த நூலில் தன்னை ‘முற்போக்காளர்’ ‘நவீனமயமாக்காளர்’ என்று வர்ணிக்கிறார். ஆனால் இவருடைய சிந்தனை என்ன மாதிரியான முற்போக்குடையது அல்லது இவருடைய திட்டங்கள் எவ்விதம் புதுமாதிரியானவை என்று தெளிவான விளக்கமில்லை. பிளையரைச் சக்தியூட்டியதில் கிறிஸ்தவத்திற்குப் பெரும் பங்கு உண்டு என்பது எல்லோரும் அறிந்த செய்தி.

79ஆம் பக்கத்தில் ஒருவகையில் மதம் என் வாழ்வில் முதல் இடம்பெறுகிறது என்கிறார். நூலின் இறுதியில் அரசியலைவிட ஆன்மிகத்தில்தான் தான் ஆர்வம் காட்டியதாக எழுதுகிறார். ஆனால் இந்தப் பக்கங்கள் உள்ள இடைவெளியில் கிறிஸ்தவம் எவ்வாறு அவருடைய அரசியல் முடிவுகளைத் தீர்மானித்தது என்று ஒரு தகவலும் இல்லை. இந்த விடுபடல் லெனின் தன்னுடைய சுயசரிதையில் மார்க்ஸைக் குறிப்பிடத் தவறியதுக்குச் சமமானது.

செய்தியறிவிப்பு இலக்கியம்

நான் அடுத்து அறிமுகம் செய்யும் படைப்பு நாவலா ஆவணமா எனச் சொல்ல முடியாத இலக்கிய வகையைச் சேர்ந்தது.


உண்மைச் சம்பவத்தைக் கொஞ்சம் கற்பனையும் கலந்து தந்திருக்கிறார் David Eggers அவரது Zeitoun என்னும் நூலில். தலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ இணைய உலக (cyber space) நாவல் என்று எண்ணிவிடாதீர்கள். இந்த எழுத்து முக்கியப்படுத்தும் Abdul-rahman Zeitoun என்பவரின் குடும்பப் பெயர். 2005இல் அமெரிக்காவைத் தாக்கிய காட்ரீன் சூறாவளிக்காற்று ஷைட்டூனுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் ஏற்பட்ட கடும்தேர்வை (ordeal) விவரிக்கிறது.

ஷைட்டூன் கட்டட வடிவமைப்பாளர். சிரியா நாட்டிலிருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவற்றைவிட மிக முக்கியச் செய்தி இவர் முஸ்லிம். இவர் காத்தி என்ற லூசீயான வெள்ளைப் பெண்ணை மணந்திருந்தார். சூறாவளிப் புயல் நீயூ ஒர்லீயன்சில் சேதம் விளைவித்தபோது முழுநகரமே ஊரை விட்டுக் கிளம்பியது. மனைவியையும் பிள்ளைகளையும் அடுத்த மாநிலத்தில் வசித்த காத்தியின் உறவினர் வீட்டுக்கு அனுப்பிவிட்டார். குடும்பத்தைப் பத்திரமாக வழியனுப்பி விட்டு ஷைட்டூன் வீட்டில் சும்மா இருக்கவில்லை. வெள்ளத்தில் வீட்டில் அடைபட்டுக்கொண்ட வயோதிகர்களுக்குத் தன்னுடைய சிறு வள்ளத்தில் போய்ப் பல உதவிகள் செய்திருக்கிறார். அப்போது தான் பிரச்சினை ஆரம்பமாயிற்று. புயலுக்குப் பிறகு குண்டர்கள் சிலர் நடத்திய சூறையாடலைத் தடுக்க அனுப்பப்பட்ட ராணுவம் இவரது மத்தியக் கிழக்குத் தோற்றத்தையும் ஆங்கில உச்சரிப்பையும் வைத்து இவர் ஒரு அல்கைதா, தலிபான் என்று கைதுசெய்து மறியலில் வைத்தது. ஷைட்டூன் இருந்த சிறை சாதாரண காவல்கூடம் அல்ல. குந்தான பே பாணி சிறைச்சாலை. காத்தி இவரை விடுவிக்க எடுத்த முயற்சிகள், அரசின் நிர்வாகக் கட்டுப்பாடுகள், நடந்துகொண்ட விதம், அமெரிக்கத் தேசியப் படையினரின் திமிர், சிறைச்சாலை அதிகாரிகளின் உணர்வின்மை ஆகியவை இந்தப் புத்தகத்தின் பக்கங்களை நிரப்புகின்றன.

இவற்றைக் கதையாக எழுதியிருந்தால் இப்படியும் அமெரிக்காவில் நடக்குமா என்று வாசகர்கள் மூக்கில் விரலை வைப்பார்கள். ராணுவத்தின் நடவடிக்கையைப் படிக்கும்போது ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. 9/11க்குப் பிறகு அமெரிக்க அரசு எந்தப் பிரச்சினையையுமே பயங்கரவாதத்திற்கு எதிரான போராகத்தான் பார்க்கிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் தூப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்த சட்டச் செயலாக்க அதிகாரிகளின் தொகை 46,838. அமெரிக்க அரசு லூசியானாவில் நடத்தியது மீட்பு நடவடிக்கை அல்ல. படையெடுப்பு. சொந்த மக்கள்மீதான தாக்குதல்.

ணிரீரீமீக்ஷீsஇன் நூல் தனி மனிதனின் கதையைத் தேசத்தின் கதையுடன் ஒருங்கிணைக்கிறது. ஷைட்டூன் இந்தச் சூறாவளி தனக்கு வந்த சோதனை என்றார். ஒருவிதத்தில் காட்ரீன் புயலை அமெரிக்கா என்ற வல்லரசு எப்படியான நாடு என்பதைப் பரிசோதிக்க நடத்திய மிகக் கடினமான பரீட்சையாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

மின்நூல்

இஸ்லாமியர்கள் ‘படுதீவிரவாதிகள்’, ‘குண்டுதாரிகள்’ என்னும் பரவலான ஊடக ரூபக்கெடுதலை (distortion) சீர்செய்து நாஜிகள் (Nazis) யூதர்களைப் பெரும் நாசம் செய்த நாட்களில் முஸ்லிம்கள் எவ்வாறு யூதர்களுக்குக் கருணை காட்டினார்கள் என்று சித்தரிக்கும் மின்பிரதி The Role of the Righteous Muslims (eds. Fiyaz Mughal & Esmond Rosen).


யூதர்கள் மீட்டெடுப்பு பற்றிப் பேசும்போது வணிக சினிமா பிரபலப்படுத்திய ஸ்டிவன் ஸ்பில்பேர்கின் ஓஸ்கார் சிண்டிலர் ஞாபகத்துக்கு வருவார். சிண்டிலரின் உள்நோக்குக் கொஞ்சம் சந்தேகத்துக்குரியது. மீட்பு நட வடிக்கையைவிட அவருக்கு யூதர்கள் மலிவான கூலிகளாகவே தென்பட்டார்கள். ஹாலிவூட் ஆரவாரத்தில் மறந்துபோன இன்னொருவர் ஜப்பானியரான Chiune Sugihara. இவர் லித்தூனிய தூதராலயத்தில் வேலைசெய்த நாட்களில் இவரும் இவருடைய மனைவியும் யூதர்களுக்கு நுழைவிசைவு (ஸ்வீsணீ) வழங்குவது சட்டவிரோதமான செயலாகக் கருதப்பட்டாலும் தாராளமாக வினியோகித்தார்கள்.


இதனால் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் நாஜிகளின் ஆக்கினையிலிருந்து தப்பிக்க முடிந்தது. சுகிகாராவின் இரக்க உணர்ச்சியை அங்கீகரித்து யூதர் அல்லாதவர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த தகுதியான ‘நாட்டினங்களின் நியாயவான்’ (Righteous Among the Nations) என்னும் பட்டத்தை இஸ்ரேல் வழங்கியுள்ளது.

இதேரீதியில் இஸ்லாமிய நாடுகளான டியுனிசியா, அல்ஜீரியா, மொரோக்கொ, போஸ்னியா, குரோஏசியா வாழ்யூதர்களுக்கு முஸ்லிம்கள் காட்டிய இரக்கம், இவர்களை நாஜிகளின் பிடியிலிருந்து தப்பிக்கவைத்த உபாயங்களை இந்தச் சிறிய மின் நூல் பதிவுசெய்கிறது. இவர்களின் தயவான செய்கைகளைப் பாராட்டி முஸ்லிம்கள் பலருக்கு ‘நாட்டினங்களின் நியாயவான்’ என்ற கௌரவத்தை அளித்துத் தன் நன்றியை இஸ்ரேல் தெரிவித்திருந்தது. அவர்களின் பெயர்களை இந்நூல் பட்டியலிட்டிருக்கிறது.


இந்த நூலின் பலம் முஸ்லிம்களை நேர்நிலையானவர்களாகக் காட்ட உதவுகிறது. இதுவே அதன் பலவீனமுங்கூட. நாஜிகளுக்கு உடந்தையாக இருந்த அரபு நாடுகளின் பெயர்கள் இங்கே தரப்படவில்லை. கிட்டத்தட்ட 150,000 - 300,000 முஸ்லிம்கள் நாஜிகளுக்கு நேசமான படைகளுடன் இணைந்து இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மீள்வாசிப்பில் ஒரு சங்கடம் சரித்திர முரண்பாடுகள், கருத்துமாறுபட்ட விவரங்கள் விடுபட்டுப்போவதாகும்.

வாழ்க்கை வரலாறு

தென் ஆப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலாவை ஊடகம் பூலோக பொக்கிஷமாக மாற்றியிருக்கிறது. அவதார ஸ்தானத்திலிருக்கும் மண்டேலாவின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் நூல் David James SmithÞ¡ Young Mandela. மண்டேலாவின் சுயசரிதையான Long Road to Freedom இல் விடுபட்டுப்போன, மறைக்கப்பட்ட சம்பவங்கள் இதில் இருக்கின்றன.


இந்த நூலில் மண்டேலாவின் இளவயதுப் பால் புணர்ச்சிப் பிசவுகள், அவருடைய காதலிகள், முக்கியமான அவருடைய முதல் திருமணம் எப்படிக் கட்டுச்சிதைவடைந்தது பற்றி விவரிக்கிறது. அவருக்கும் அவருடைய முதல் மனைவி Evelynக்கும் ஒத்துப்போகவில்லை. எவலினுக்குப் மண்டேலாவிடம் செம்மையாக அடிவாங்கியிருக்கிறார். அவரது தொண்டையைக்கூட மண்டேலா நெறித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த உடல் வதைப்புகள் விவாகரத்தில் முடிவடைந்தது. ஈவிலீனுக்குப் பிறந்த குழந்தைகள் மண்டேலாவை விட்டு ஒதுங்கியே இருந்தார்கள். மூத்த மகன் Thembe மண்டேலா சிறையில் இருந்தபோது அவரை ஒரு தடவையாவது போய்ப் பார்க்கவில்லை. இவருடைய இரண்டாவது மகன் Makgatho மிதமிஞ்சிய மது நுகர்வாளர். உடற்தேய்வு சம்பந்தப்பட்ட நோயால் இறந்துபோனார்.


வெள்ளை அரசியல் எதிரிகளுக்குப் பரிவுகாட்டிய மண்டேலா தன்னுடைய சொந்தப் பிள்ளைகளுக்குப் பாசம் காட்டத் தவறியவராகக் காட்சியளிக்கிறார். டேவிட் ஜான்ஸ் சிமித் உருவாக்கியிருக்கும் இளம் மண்டேலா தமிழ் சினிமா அப்பாக்கள்போல் மரபுவழி ஆண் ஆதிக்கக் கட்டுப்பாட்டாளர்.

மண்டேலாவின் வாழ்க்கை சரிதத்தைப் படிக்கும்போது இன்னும் ஒரு தலைவர் ஞாபகத்துக்கு வருகிறார். அவரும் மண்டேலா போல் ஒரு வக்கீல். தேச விடுதலைக்காகத் தன் வாழ்வை அர்ப்பணித்தவர்.


இதுவரை நீங்கள் ஊகித்திராவிட்டால் அவர் பெயர் மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி. காந்தியின் மண வாழ்க்கை, அவருடைய பாலியல் சோதனைகள், அவருக்கும் அவருடைய மகன்களுக்குமிடையே ஏற்பட்ட மனஸ்தாபங்கள் ஏற்கனவே பொதுக்களத்தில் விவரமாகவும் வாதிக்கிடமாகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.



நம்முடைய தலைவர்களின் கால்கள் களிமண்ணாலானவை. ஒன்று மட்டும் நிச்சயமாகிறது. ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாகப் போராடுகிறவர்கள் தங்கள் சொந்தக் குடும்பத்தினருக்கு இரக்கம் காட்ட இயலாதவர்களாக இருக்கிறார்கள்.


“தலைவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை வாசிக்கும்போது ஒன்று தெளிவாகிறது. பெருந்தலைவர்களுக்குச் சீடர்கள் இருப்பார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கைச் சரிதங்களை யூதாஸ்கள்தான் எழுதுவார்கள்”, இது என்னுடைய சொந்தச் சரக்கல்ல. மார்க் டுவையின் சொன்னது.


மண்டேலாவின் பேத்தி சொன்னதுபோல் தேசிய வாழ்வில் ஈடுபடுகிறவர்களுக்குக் குடும்பம் இல்லாதிருப்பது நல்லது. இது இன்றைய தமிழக அரசியல் குடும்பம் கேட்க வேண்டிய முக்கியச் செய்தி.

Thursday, February 17, 2011

பில்லா 2 - விஷ்ணுவர்த்தனுக்கு பதில் சாக்ரி


பில்லா 2 - அஜித்தின் 51 வது படமாக அறிவிக்கப்பட்டது. "பில்லா" வை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்குவதாக முடிவு செய்யப்பட்டு பிரமாண்டமான ஏற்ப்பாடுகள் தொடங்கின.
இதற்கிடையே ஒரே சமயத்தில் தமிழில் பில்லா 2 படத்தையும், தெலுங்கில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்ட படத்தை இயக்குவதாகவும் ஒரு பேட்டியில் சொன்னார் விஷ்ணுவர்தன்.

பில்லா பட தயாரிப்பாளர்களான சுரேஷ் பாலாஜியுடன் மற்றும் வைட் ஆங்கிள் நிறுவனத்துடன், இப்படத்தை தயாரிக்க போவது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் நிறுவனமான ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த IN Entertainment (INE) நிறுவனம் ஒப்பந்தம் செய்து உள்ளது.

இந்நிலையில், தயாரிப்பாளர்கள் தரப்பு தெலுங்கு படத்தை ஒத்திவைக்கும்படியாக விஷ்ணுவர்தனிடம் கோரிக்கை விடுத்தது. பில்லா 2 - ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பாதால், இயக்குனர் விஷ்ணுவர்தன் முழு கவனமும் இப்படத்தில் செலுத்தவேண்டும் என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், இயக்குனர் விஷ்ணுவர்தன் தெலுங்கு படத்தை கைவிட முடியாத நிலையில் இருப்பததாக தெரிவித்து இருக்கிறார்.

இதை தொடர்ந்து, அதிரடியாக விஷ்ணுவர்தன் இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் இந்த ப்ராஜக்டில் நீடிக்கிறார்கள்.

விஷ்ணுவர்தனுக்கு பதில், "பில்லா 2 " படத்தை இயக்க போகிறவர்...சாக்ரி டோலிடி.

சாக்ரி டோலிடி.....அமெரிக்காவில் படித்தவர். ஆங்கில குறும்படங்கள் இயக்கியவர். "தசாவதாரம்" படத்தில், கமலின் நண்பராக, அவர் அமெரிக்காவில் இருந்து தப்பிக்க உதவும் நண்பராக நடித்தவர்.

மிக முக்கியமாக. இவரின் திறமையை கண்டு கமல்ஹாசன், அவரை அமெரிக்காவில் இருந்து வரவழைத்து தனது சொந்த படமான, "உன்னை போல் ஒருவன்" படத்தை இயக்கம் வாய்ப்பை அளித்தார். உன்னை போல் ஒருவன் படத்தின் மெகா வெற்றி அவரது தேர்வை நியாயபடுத்தி இருக்கிறது.
கமல்ஹாசன் மற்றும் எழுத்தாளர் இரா.முருகன் ஆகியோருடன் "உன்னை போல் ஒருவன்" விவாதத்திலும் முழுமையாக பங்கெடுத்தார் சாக்ரி.

"உன்னை போல் ஒருவன்"- ஹிந்தி படத்தின் ரீமேக் என்றாலும், எளிமையான கதையை , ஒரு புதிய பாணியில் அருமையாக சொல்லி அசத்தி இருந்தார் இயக்குனர் சாக்ரி.

அவரது இரண்டாவது படமான "பில்லா 2 " அதற்க்கு நேர்மாறாக, தமிழில் முதல்முறையாக ஹாலிவுட் நடிகர்கள் சிலர் நடிக்க, அஜித் இதுவரை நடித்த படங்களிலேயே மிக பெரிய பட்ஜெட்டில் தயாராக போகிறது.அஜித் - சாக்ரி என தமிழுக்கு ஒரு ப்ரெஷ்ஷான கூட்டணி உருவாகி இருக்கிறது.

இயக்குனர் விஷ்ணுவர்த்தனுக்கு, இந்த வாய்ப்பு பறிபோனது பெரிய இழப்பு என்றாலும், சாக்ரி டோலேடி, இப்படத்தை இயக்க போவது, "பில்லா" படத்தின் சாயலில் இருந்து அஜித்துக்கு இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

-இன்பா

Monday, February 14, 2011

பகவத்கீதை சொன்ன மாவீரன் அலெக்சாண்டர்


எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

- பகவத்கீதை

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீசுக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....
அலெக்சாண்டர் தி கிரேட் ஒரு ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.

மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

இதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா??

-இன்பா

Friday, February 11, 2011

ஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன் - கருணாநிதி

"ஏழை மக்கள் சார்பில் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக ராசா செய்த ஒப்பந்தத்தை நான் பாராட்டுகிறேன்" - இவ்வாறு ஆனந்தவிகடன் பேட்டியில் கூறி இருக்கிறார் கருணாநிதி.

இது பற்றி, திரு.சிவகுமார் என்கிற தொழில்நுட்ப ஆய்வாளர் எழுதி, எனக்கு வந்த ஒரு முழுமையான விளக்கம் இங்கே...

மக்கள் அனைவரையும் இலவசங்களை மட்டுமே வாங்க தெரிந்த மாக்கான்கள் என்றே நினைத்து விட்டார். அதற்காகத்தான் தமிழ்நாட்டில் அனைவரும் குழந்தை பெற்றுகொள்கிறார்கள் என்று சொன்னாலும் ஆச்சரிய படுவதற்கு இல்லை. என்னது ஏழைகள் பயன்படுத்தும் அளவிற்கு குறைந்த விலையில் சேவையை கொண்டுவந்தது ராசாவா? மக்களே உண்மையை புரிந்து கொள்ளுங்கள். இந்த புளுகு மூட்டைகளின் பாவத்திற்கு ஆளாகாதீர்கள். விலை குறைந்ததிற்கான காரணத்தை இங்கு குறிப்பிடுகிறேன்.
1999 ஆண்டில் தான் தொலைதொடர்பு உரிமங்கள் வழங்க ஆரம்பிக்கபட்டது. அன்று வெறும் பணம் படைத்தவர்கள் மட்டுமே கைபேசியை பயன்படுத்தினர். எனவே நுகர்வோரின் எண்ணிக்கை மிக குறைவு. சில பல லட்சங்கள் மட்டுமே. தொழில் நுட்பவளமான 1G அல்லது 2G அலைக்கற்றைகள் மிக அதிக அளவில் அரசிடம் கையிருப்பு இருந்துள்ளது.

ஆனால் உரிமம் வாங்க உலக அளவிலோ இந்திய அளவிலோ போட்டிகள் இல்லை. விலை கொடுத்து உரிமம் வாங்கியவர்கள் லாபம் பெற நுகர்வோரிடம் நிமிடத்திற்கு அதிக கட்டணம்(In coming and out going ) வசூல் செய்ய கட்டாயம் ஏற்பட்டது. இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் நாம் தான் வாதி படைத்தவர்களாச்சே என்று இஷ்டத்திற்கு பேசி நேரத்தையோ பணத்தையோ அன்றைய வசதி படைத்தவர்கள் விரையம் செய்யவில்லை. குறைவான நேரத்துக்குதான் கைபேசியை பயன்படுத்தினர்.

நுகர்வோரின் எண்ணிக்கை குறைவாக இருந்ததால்தான் அன்று அலைகற்றை உரிமம் பெற அதிக நிறுவனங்கள் முன்வரவில்லை. இதை சரி செய்ய அன்றைய அரசு ஒரு தொலை தொடர்பு புரட்சியை உருவாக்க முயன்றது. விளைவு நாளுக்கு நாள் நுகர்வோரின் எண்ணிக்கை அதிகமானது. இன்றும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.

2010 நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 60 கோடிக்கும் மேல். 2008 இல் 50 கோடிக்கும் மேல். இதற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு போதிய அலைகற்றைகள் அரசிடம் இன்றும் உள்ளனர். ஆனால் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெறும் 60 கோடிதான். 122 தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு உரிமம் வழங்க பட்டுள்ளது. தகுதி என்றால் என்ன? போதிய அனுபவம், வங்கி காசோலை, வங்கி செக்யூரிட்டி டெபொசிட் அது மட்டும் இல்லை வாங்கியவுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் சேவையை தொடங்க வேண்டும். இந்த குறிப்பை நினைவில் வைத்து கொள்ளுங்கள். பின்னால் உதவும். டாட்டா, ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களும் உரிமம் வாங்கியுள்ளனர். இதோடு அந்த 122 தகுதி இல்லாத நிறுவனங்களையும் சேர்த்து கொள்ளுங்கள்.

நியாய கணக்கு:

இந்தியாவில் 60 கோடி மக்கள் கைபேசி சேவையை பயன்படுத்துவதாக உண்மை தகவல் உள்ளது. எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன். ஒரு நபர் தனது கைபேசியை ஒரு நாளைக்கு சராசரியாக வெறும் 15 நிமிடங்கள் (LOCAL CALLS ONLY) பயன்படுத்துவதாக வைத்துக்கொள்வோம். ஒரு நிமிடத்திற்கு 40 பைசா கட்டணம். அப்போ 15x0.40 =6.0 ரூபாய் ஒரு கைபேசியின் மூலம் செலவாகிறது. 60 கோடி கைபேசிகள். 60x6.0 = 360 கோடிகள் ஒரு நாளைக்கு செலவாகிறது. ஒரு மாதத்திற்கு 30x360 = 10,800 கோடிகள். ஒரு வருடத்திற்கு 12x10,800 = 1,29,600 கோடிகள். 2008 இல் 2G ஏலம் விடப்பட்டது. இன்று வரை இரண்டு வருடங்கள் ஆகிறது. அப்போ குறைந்தபட்ச வருமானம் இன்றுவரை 2,59,200 கோடிகள். இது ஒரு நாளைக்கு வெறும் 15 நிமிடங்கள் கைபேசியை பயன்படுத்தினால் இரண்டு வருடத்திற்கு கிடைத்திருக்கும் வருமானம். இதோடு SMS, MMS, STD, ISD, சேவை கட்டணம், இணைப்பு கட்டணம்.......இன்னும் என்ன என்னவோ கட்டணங்கள் உள்ளது என்று சொல்கிறார்கள் மற்றும் 15 நிமிடத்திற்கு அதிகமாக பயன்படுத்துவோரின் செலவையும் சேர்த்தால் எத்தனை கோடி கோடிகள் வருமானமாக கிடைக்கும் என்பதை நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்.

என்னால் கணக்கிடவே முடியவில்லை. என்னிடம் உள்ள கால்குலேட்டர் மற்றும் கணினி காண்பிப்பது "INFINITIVE". நான் தற்போது இந்தியாவில் இல்லை. இருந்திருந்தால் அனைத்தையும் அலசி ஆராய்ந்து இதைவிட இன்னும் துல்லியமாக நடந்த ஊழலின் அளவை குறிப்பிட்டு இருப்பேன். இந்த வருமானம் அனைத்தும் அரசுக்கு கிடைத்திருக்க வேண்டும். அது மக்களை சென்று அடைந்து இருக்கவேண்டும். கிடைத்ததா? மக்களை சென்றடைந்ததா? நிச்சயம் இல்லை என்றுதான் ஒவ்வொரு மக்களும் கூறவேண்டும். அப்படி என்றால் இந்த மக்கள் பணம் சட்டத்திற்கு புறம்பாக யாரிடமோ சென்று அடைந்துள்ளது.

இந்த ஊழல் பணம் அடுத்த சில ஆண்டுகளில் தனது சொந்தநாட்டு மக்களையே தாக்கப்போகிறது. விலைவாசி உயரும். பொருளாதாரம் நாசாகும். "Above middle Class" மக்கள் நடுத்தர மக்களாகவும், நடுத்தர மக்கள் ஏழைகளாகவும், ஏழை மக்கள் மேலும் பரம ஏழைகளாகவும் மாறுவார்கள். ஜனநாயகம் வேரோடு அழியும். மனிதாபிமானம், மனிதநேயம் மண்ணோடு மண்ணாகும். ரௌடிசம்,குற்றசம்பவங்கள் தலைவிரித்து ஆடும். கடந்த ஐந்தாண்டுகளாக ஆயுள் கைதியாக உள்ள நடுநிலை பத்திரிகைகள் இனி மரண தண்டனை கைதிகளாக மாற்றப்பட்டு தூக்கில் போடப்படும்.

துரோகம்-1: உரிமம் வாங்கிய அனைத்து நிறுவனங்களும் சுமார் 13000 கோடிக்கும் அதிகம் பொறுமானம் உள்ள(உதாரணம் S .TEL நிறுவனம்13000 கோடிக்கு வாங்க முன்வந்தது) அலைகற்றைகள் உரிமத்தை அடிமாட்டு விலைக்கு அதாவது 1200 , 1300 ,1650 கோடிகளுக்கு திட்டமிட்டு விற்கப்பட்டுள்ளது. அரசுக்கு சேரவேண்டிய, மக்களுக்கு சேர வேண்டிய வருவாய் சில சுய நலவாதிகளை சென்றடைந்துள்ளது.

துரோகம்-2: பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் உரிமத்தின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்று கொள்ளை லாபம் பார்த்துள்ளனர். இதனால் அரசுக்கு அதாவது பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் வருவாய் சில சுய நல தனி மனிதர்களை சென்று அடைந்துள்ளது.

துரோகம்-3: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய 122 நிறுவங்களில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இதில் "swan, Unitech" போன்ற லெட்டர் பேட் நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனகள் ஏன் இன்னும் சேவையை தொடங்கவில்லை என்று உள்ளூர ஆராய்ந்தால் மிக தெளிவாக புரியும். பெரிய நிறுவனங்கள் போட்டி இல்லாமல் தொலைதொடர்பு துறையில் கொள்ளை லாபம் பார்க்க அதாவது கட்டணம் என்ற பெயரில் மக்களின் உழைப்பை சுரண்ட பெரும்பாலான தகுதி இல்லாத பினாமி லெட்டர் பேட் நிறுவனங்கள் இன்னும் சேவையை தொடங்கவில்லை. இவைகள் சேவையை தொடங்கி இருந்தால் சந்தையில் போட்டி அதிகமாகி கைபேசியில் பேசும் கட்டணம் இப்போது இருப்பதை விட மேலும் குறைந்திருக்கும். ஒரு வேளை இதற்காகத்தான் திட்டமிட்டு "S.TEL போன்ற போட்டி நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கவில்லை என்ற சந்தேகம் தெளிவாக எழுகிறது.

துரோகம்-4: MTNL BSNL போன்ற அரசு நிறுவனங்களுக்கு அதிக அளவில் அலைகற்றைகளை ஒதுக்கி போதிய ஆப்பெரடர்களை நியமித்து இருந்தால் கைபேசியில் பேசும் கட்டணம் நிமிடத்திற்கு வெறும் ஒரு பைசாவுக்கு வந்திருக்கும். மக்கள் அரசினால் பயன் அடைந்து இருப்பார்கள்.

துரோகம்-5: தகுதி இல்லாமல் உரிமம் வாங்கிய லெட்டர் பேட் நிறுவனங்கள் தனது பங்குகளை பல வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுள்ளனர். அதில் பாகிஸ்தான் போன்ற நாடுகளும் அடங்கும். இந்தியாவின் தொலை தொடர்பு துறையை இந்த நாடுகளும் பயன்படுத்துகின்றனர். இது உள்நட்டு மக்களின் பாதுகாப்புக்கு மிக பெரிய அச்சுறுத்தல்.

துரோகம்-6: நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள், CAG ,தொலைதொடர்பு சம்பந்தபட்ட, கைபற்றபட்ட ஆவணங்கள், சம்பந்தபட்ட பிரதமர் அலுவலக கடிதங்கள் புறகணிப்பு, சட்ட,நிதி துறை கடிதங்கள் புறகணிப்பு, TRAI பரிதுரைகள் புறகணிப்பு இப்படி கோடி கணக்கில் ஆதாரங்கள், சாட்சிகள். முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்று முந்தைய ஆட்சியாளர்கள் வகுத்த அடிப்படை கொள்கை கூட பின்பற்றப்படவில்லை. அதிலும் முறைகேடு.

துரோகம்-7: இவ்வளவு குற்றங்கள் செய்தும் சம்பந்தபட்ட குற்றவாளிகள் செய்த தவறை ஒப்பு கொள்ளாமல் நாங்கள் தவறு செய்யவில்லை என்று மக்களிடம் பொய் பிரச்சாரம் செய்வது மக்களுக்கு இழைக்கப்பட்ட ஏழாவது துரோகம். இதன் உச்சகட்டம்தான் 2G யில் ஊழலும் இல்லை நஷ்டமும் இல்லை என்று மத்திய அமைச்சரின் பத்திரிகை பேட்டி. இந்த உலகத்திலே தான் மட்டும்தான் புத்திசாலி வக்கீல் மற்ற அனைவரும் அடி முட்டாள்கள் என்ற ஆணவ நினைப்பு.

துரோகம்-8: நடந்த அனைத்து தேச துரோகங்களும், குற்றங்களும் பொருளாதார மேதை பிரதமருக்கு தெரிந்தே கண்முன்னே நடந்துள்ளது. இருந்தும் பிரதமர் வாய் மூடி மௌனியாக இருப்பது மக்களுக்கு இழைக்கபடும் மகா மகா துரோகம்.

துரோகம்-9: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முறைகேடாக பெறபட்ட பணங்கள் பெரும்பாலானவை இந்தியாவில் புழக்கத்தில் இல்லாமல் அந்நிய நாடுகளில்,வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல். இந்த பணம் அரசுக்கு வருவாயாக கிடைத்து இருந்தால் ஏராளமான அரசு கல்லூரிகள், பள்ளிகள், பாலங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் என்று உருவாக்கி அனைவருக்கும் கல்வி,வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் என்று ஏற்படுத்தி ஏழைகளே இல்லாத நாட்டை உருவாக்கி இருக்கலாம். இலவசங்கள் பெறாத மக்களை கண்டிருக்கலாம்.

துரோகம்-10: ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்தை பயன்படுத்தி தலித் பற்றும் பிற இனத்தை சேர்ந்த ஏழை விவசாய மக்களிடம் மிரட்டி விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டதாக தகவல். இது மக்களுக்கு இழைக்கபட்ட துரோகம் பத்து. ஒரு முறைகேட்டை செய்து அதையே மூலதனமாக வைத்து இன்னொரு முறைகேடு செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்வதினால் மக்களுக்கு இழைக்கபடும் துன்பங்களுக்கு இதை விட சிறந்த உதாரணம் வேறென்ன வேண்டும். நண்டு கொழுத்தால் வலையில் தங்காது. இதுதான் ஊழலின் விளைவுகள். இவர்கள் ரத்தம் குடிக்கும் கொசுக்கள் மாதிரி. நம்மிடம் உள்ள ரத்தத்தை உறிஞ்சுவதோடு மட்டும் இல்லை அதோடு சேர்த்து நோய் கிருமிகளையும் நமது ரத்தத்தில் விட்டு செல்கின்றனர்.

இப்படி 2G ஊழலில் மக்களுக்கு இழைக்கபட்ட துரோகங்கள் எண்ணில் அடங்காதது. இந்த ஊழலின் தாக்கம் இதோடு நிற்காது. மக்களைத்தான் சுத்தி சுத்தி அடிக்கும். எப்படி?

ஊழல் பணத்தை வைத்து ஏழைகளின் நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு அதை பிளாட் போட்டு அதே மக்களிடம் அதிக விலை வைத்து விற்கப்படுகிறது. ஒரு ஏக்கரை குறைந்த விலைக்கு விற்ற மக்கள் அந்த பணத்தை வைத்து அதே இடத்தில் அதாவது முந்தைய சொந்த இடத்தில ஒரு கிரௌண்ட் நிலம் கூட வாங்க முடியவில்லை. இதுதான் ஊழலின் விளைவு.

இப்போது புரிந்து இருக்கும் ஏழைகள் எப்படி உருவாகிறார்கள் என்று. இது மட்டும் இல்லை ஊழல் பணத்தை வைத்து அனைத்து இடங்களையும் வளைத்து போட்டு ரியல் எஸ்டேட் நடத்தும் அனைத்து அரசியல்வாதிகளும் இப்படி ஊழல் பணத்தில்தான் செய்கின்றனர். அவர்கள் சொல்வதுதான் விலை. விலைவாசி உயர்வது இயற்கை அல்ல. அனைத்தும் மிக மிக செயற்கையே. இயற்கை என்று ஆளும் கட்சியினர் கூறுவது தவறு. உண்மையை மூடி மறைக்கும் செயல். இது ரியல் எஸ்டேட் மட்டும் இல்லை. அனைத்து பொருள்களுக்கும் பொருந்தும். குறைந்த விகிதத்தில் உள்ள பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆவார்கள். அதிக விகித்தில் உள்ள நடுத்தர மக்கள், ஏழைகள் மேலும் ஏழைகளாக ஆவார்கள். இந்த ஏழை, பணக்காரன் இடை வெளியை குறைக்கத்தான் அரசாங்கம் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
இன்று ஆளும் வர்க்கத்தினரே அதற்கு முழு முதல் காரணமாக திகழ்கிறார்கள். சொல்லபோனால் அரசின் கடமைகளை அரசியல்வாதிகளும் மறந்துவிட்டனர். இவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களும் தங்கள் கடமைகளை மறந்து இலவசத்துக்கு பின் செல்கின்றனர். இலவசம் வாங்கும் மக்களே ஒன்றை நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் உழைப்பு என்னும் மூலதனத்தை மறந்து இலவசம் வாங்குவதால் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீங்கள் ஏழைகளாகத்தான் இருக்க முடியும். உங்கள் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இலசவசம் கொடுக்க தேவையான வரிபணத்தை செலுத்தும் உழைக்கும் மக்களின் வாழ்கை தரமும் உயரபோவதில்லை. இது நிச்சயம். மாற்றம் ஒன்றே மாறாதது. இலவசம் மாறவில்லை என்றால் உங்கள் வாழ்கை தரமும் மாறபோவதில்லை.

எனது நோக்கமே இந்த 2G உலக மகா ஊழலால் மக்கள் எவ்வாறு வஞ்சிக்கபட்டார்கள் என்பதை ஒவ்வொரு இந்திய குடிமகனும் பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நண்பர்கள் உள்பட அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான். எனவே தெரிந்துகொள்ளுங்கள், புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு ஏழை மக்களுக்கும் தெரியபடுத்துங்கள். ரோட்டில் இறங்கிதான் போராடவேண்டும் என்று இல்லை.கொடி பிடிக்க அவசியமும் இல்லை. e -mail, FAX , Facebook , orkut என்று எவ்வளவோ தொழில் நுட்ப வசதி உள்ளது. தங்களுக்கு உகந்த ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து தங்களின் அன்றாட வேலைகள் பாதிக்காத வகையில் சுலபமாக இதை செய்யமுடியும். செய்வீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி.

சிவகுமார்.M
சீனியர் எஞ்சினியர்
தனியார் நிறுவனம்
துபாய்

Tuesday, February 8, 2011

இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி


இயக்குநர் வெற்றிமாறன், பாலுமகேந்திராவின் மாணவர். காற்றில் கதைகளைத் தேடாமல் மக்களின் வாழ்க்கையில் கண்டடையும் இயக்குநராக பரிணமித்திருக்கிறார். சர்வதேசப் படங்கள், இலக்கியம், எழுத்து என தனது ஈடுபாடுகள் குறித்து த சன்டே இந்தியனிடம் பேசும்போது பகிர்ந்துகொண்டார்.


நீங்கள் எப்படி சினிமாவுக்கு வந்தீர்கள். உங்களுடைய பின்னணி என்ன?

என்னுடைய அப்பா சித்திரவேல், கால்நடை மருத்துவ ஆராய்ச்சியாளர். அம்மா மேகலா சித்திரவேல், எழுத்தாளர். அக்கா டாக்டர். எனக்கு பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தேன். பள்ளிப்படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ராஜநாயகம் கொடுத்தார். 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசினார். இந்தப் பயணத்திற்கு அவர்தான் தொடக்கம். அவரே என்னை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். 1997 முதல் 2005 அதுவொரு கனாக் காலம் வரை அவரிடம் பணியாற்றினேன். 2004 ஆகஸ்டில் தனுஷ் படம் செய்யலாம் என்று சொன்னார். பொல்லாதவன் வெளியான ஆண்டு 2007 நவம்பர். வாழ்க்கையிலும் காத்திருத்தல் என்பது தொடர்ந்துவந்த சங்கடமாக இருந்தது. ஏழு ஆண்டுகள் காதலித்தேன். ஒரு படம் இயக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஆனால் பையன் படம் பண்ணப் போகிறான் என்று வீட்டில் திருமண தேதியெல்லாம் குறித்துவிட்டார். படம் தள்ளிப்போனது, திருமணம் மட்டும் நடந்தது.

பாலுமகேந்திராவிடமிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள். அவருடைய பாணியிலிருந்து எப்படி மாறுபடுகிறீர்கள்?

எங்களிடம் இருப்பது பாலுமகேந்திரா கற்றுக்கொடுத்த சினிமாதான். ஆனால் அதை எங்களுடைய எண்ணத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவரிடமிருந்து வேறுபடவேண்டும் என்பதற்காகவே எந்த சினிமாவையும் எடுக்கவில்லை. அப்பாவும் நாமும் ஒன்றுதான் என்றாலும் ரேகைகள் வேறுபடுகின்றனவே. நமக்கு என்ன வருமோ அதுதான் பிரதிபலிக்கும். வளர்ப்புமுறை, சிறுபிராயத்தில் பார்த்த சினிமாக்கள், உள் மனம் எல்லாமும் சினிமா மொழியை, நாம் இயக்கும் படத்தின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. அவருடைய உயரத்துக்கு வர முடியாது. சின்ன அளவில்தான் அவரை நாங்கள் பின்தொடர்கிறோம். நம்முடைய இயல்பு என்னவோ அதுதான் படத்தில் கதையாக வருகிறது.

தனுஷூடன் சேர்ந்தே இரண்டு படங்களை செய்துள்ளீர்கள். இருவரும் சேர்ந்தே நல்ல வளர்ச்சியை அடைந்துள்ளீர்கள். ஒரு இயக்குனராக தனுஷை எப்படி பார்க்கிறீர்கள்?

அதுவொரு கனாக் காலம் படத்திலிருந்து தனுஷூடன் பழக்கமுண்டு. அவர் ஒரு டைரக்டர் ஆர்டிஸ்ட். ஒவ்வொரு காட்சியையும் நன்கு புரிந்துகொண்டு நடிப்பார். எல்லா படங்களிலும் அவர் கற்றுக்கொண்டே போய்க்கொண்டிருக்கிறார். ஒரு இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்பது பெரிய விஷயமில்லை. ஆனால் நமக்கு என்ன தேவையோ, ஸ்கிரிப்ட்டுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே அவர் தருவார். ஒரு மில்லி மீட்டர் அளவுகூட ஸ்டார் என்பதை எந்த காட்சியிலும் வெளிப்படுத்த மாட்டார். இப்படி செய்துகொள்ளலாமா என்றும் கேட்டு காட்சிக்கு மெருகு சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பார். என்னுடைய மனோநிலை, உடலமைப்பு ஆகியவற்றைப் பொறுத்து என்னுடைய ஹீரோவை வடிவமைக்கிறேன். 72 மணி நேரம் நான் தூங்காமல் வேலை பார்த்துக்கொண்டே இருப்பேன். எனவே எனது படங்களில் தூங்குவது போன்ற காட்சிகளை வைக்கமாட்டேன். என்னால் இரண்டுபேரை அடிக்க முடியும். அதுக்குமேலே முடியாது என்றால் என் ஹீரோவும் அப்படித்தான். தனுஷை மனதில் வைத்துக்கொண்டுதான் கதைகளை எழுதுகிறேன். இதுவரை 5 ஸ்கிரிப்டுகள் எழுதி, 2 படங்களைத்தான் எடுத்திருக்கிறேன். வேறொருவரை வைத்து எழுத எனக்கே பயிற்சி வேண்டும். ஆடுகளம் படத்தில் பட காட்சிகளில் வெறுமனே நிற்பார்; சும்மா உட்கார்ந்திருப்பார். படம் வெளிவந்ததும் யாரைப் பற்றிப் பேசுவார்கள் என்று அவருக்குத் தெரியும்.

கமர்ஷியல் பார்முலாக்களிலிருந்து விலகி தமிழ் சினிமா, தமிழ் வாழ்க்கையை சற்று நெருக்கமாகப் பார்க்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு குறித்த உங்கள் கருத்தை சொல்லுங்கள்?

தமிழர்களின் அடையாளங்களை தமிழ் வாழ்வியலை கூர்ந்துப் பார்த்து படங்கள் எடுப்பது புதியதல்ல. பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நமக்குக் கிடைக்கத் தொடங்கிய சர்வதேசப் படங்களின் பரவலான அறிமுகம் நம்முடைய அடையாளங்களைத் தேடவைத்திருக்கிறது. அது 2002 வாக்கில் நிகழ்ந்தது. இப்படி டிவிடிக்களை மக்களிடம் ஜனநாயகப்படுத்திய பர்மா பஜார் வியாபாரிகளுக்கு ஒரு படத்தை அர்ப்பணிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். சில படங்களை படவிழாக்களில்தான் பார்க்கமுடியும். அவர்கள் அதையெல்லாம் எளிதாக்கிவிட்டார்கள்.
எந்த அளவு துல்லியமாக நம் மண்ணின் அடையாளங்களைச் சொல்கிறோமோ, அந்த அளவு அது சர்வதேச எல்லையைத் தொடும். சர்வதேசப் படங்கள் உள்ளே வரும்போது தன்னுடைய மண்சார்ந்த அடையாளங்களை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கம் அதிகரிக்கிறது. என் முதல் படத்தில் சென்னை வாழ்க்கையைச் சொன்னேன். அதைவிட சேவல் சண்டையின் மிகப்பெரிய பதிவாக ஆடுகளம் இருப்பதால், ஒரு சமூகத்தின் வாழ்க்கையைச் சொன்ன திருப்தி இருக்கிறது. ஆடுகளம் படத்திற்கு Ôஅமரோஸ் பரோஸ்Õ என்ற படம்தான் ஆரம்பப்புள்ளியாக இருந்தது. அதில் ஒரு நாய்ச்சண்டையின் ஊடே பல விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கும். சர்வதேசப் படங்களைத் திறந்துவிட்டதுதான் நம்முடைய வேர்களை நோக்கி பயணிக்கத் தூண்டுதலாக அமைந்தது.

ஒரு சினிமா இயக்குனர் என்பதற்கான உங்களது தனிப்பட்ட இலக்கணம் என்ன?

ஓர் உண்மையைச் சொல்வதென்றால் ஆக்ஷன், கட் சொல்வதால் மட்டும் இயக்குநராகி விடமுடியாது. ஒரு முழுமையான விழிப்புணர்ச்சியுள்ள நிலையை அடைந்து, ஒரு நல்ல படத்தை எடுத்துவிடுவேன் என்ற நம்பிக்கையில்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். அதற்கான ஒரு பயணத்தில் இருப்பதாகவே உணர்கிறேன். பொல்லாதவன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரை ஆடுகளம் படத்தின் மூலம் ஒரு படிமேலே உயர்த்தி வைத்திருக்கிறேன். அந்த வகையில் நாங்கள் எல்லோரும் ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்கிறோம்.

வாசிப்பு அனுபவம் சினிமாவுக்கு எப்படி உதவுகிறது?

இருபத்தைந்து வயதில் ஸ்கிரிப்ட் எழுதத் தொடங்கிவிட்டேன். ஒரு சராசரி வாழ்க்கையை வாழ முயற்சித்தாலும் சில நேரங்களில் அது இயலாமல் போய்விடுகிறது. ஒரு முப்பது ஆண்டு அனுபவத்தை வைத்துக்கொண்டு, அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு எப்படி கதைகள் எழுத முடியும். இரண்டு, புத்தகங்கள் என் மனப்போக்கை மாற்றியமைத்தன என்று சொல்லலாம். மங்கோலிய நாடோடிகளின் வாழ்க்கையைச் சொன்ன ஜியாங் ராங்கின் 'உல்ஃப் டோட்டம்'என்ற 600 பக்க நாவல், இருபது ஆண்டுகால வாழ்க்கையை சாறாகக் கொடுத்தது. அந்த எழுத்தாளரின் பல ஆண்டு அனுபவங்களை பத்து நாட்களில் புரிந்துகொள்கிறோம். மாணவப் பருவத்தில் படித்த அலெக்ஸ் ஹேலியின் Ôரூட்ஸ்Õ என்ற நாவல். என் வாழ்க்கையை ரூட்ஸ¨க்கு முன் பின் என்று பிரித்துக் கொள்ளலாம். ஓர் ஆப்பிரிக்க குடும்பத்தின் ஏழு தலைமுறையினரின் வலியைச் சொன்ன நூல் அது. ஒரு மனிதன் சக மனிதனை எந்த அளவுக்கு கொடுமைப்படுத்துகிறான் என்பது புரிந்தது. புத்தகங்கள்தான் உலகத்தைப் பற்றிய முழுமையை நமக்குக் கொடுக்கின்றன. சினிமாக்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றுவதில்லை. நல்ல புத்தகங்கள்தான் அதைச் செய்கின்றன. நாங்கள் ஒரு கதையை வெளிப்படுத்தும் கட்டாயத்தில் இருப்பதால், சுவைக்காக படிப்பதற்குப் பதிலாக உள்ளடக்கத்திற்காக படிக்கும் கட்டாயம் வந்துவிட்டது.

உங்களுக்குப் பிடித்த சர்வதேச, இந்திய, தமிழ், இயக்குனர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

அகிரோ குரோசவா, அலெக்சாண்டர் கொன்சாலஸ் இனாரிட்டு, தமிழில் பாலுமகேந்திரா, மணிரத்னம்.

தமிழ் சினிமாவின் வணிகக்கூறுகளை தக்க வைத்துக்கொண்டே இயல்பான ஒரு கதையைச் சொல்கிறீர்கள். அதுதான் உங்கள் பாணியா?

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் முதலீடு செய்கிற தயாரிப்பாளர், முதலில் அது கிடைக்கவேண்டும் என்றுதான் நினைப்பார். அதுவும் கிடைக்காவிட்டால் தொடர்ந்து படங்கள் செய்ய முடியாது. அது நிறைவேற வேண்டும். வேறெதையும்விட சினிமா என்ற கலையில் மட்டும்தான் அறிவியலும் வணிகமும் சேர்ந்திருக்கிறது. மினிமம் கேரண்டி இல்லாவிட்டால் எப்படி அடுத்த படத்தை எடுக்க முடியும். அதற்கு உத்தரவாதம் கிடைத்துவிட்டால், நாம் என்ன நினைக்கிறோமோ அதை செய்துகொள்ளமுடியும். எனக்கு இரண்டு படவாய்ப்புகளும் அப்படித்தான் அமைந்தன. என் விருப்பங்களுக்கு குறுக்கீடாக யாருமே நிற்கவில்லை. பொல்லாதவன் படத்தில் ஒரு காமெடி காட்சியை மட்டும் விருப்பமில்லாமல் வைத்தேன்.

வஐச ஜெயபாலனை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள்?

எங்களுடன் பணியாற்றிய உதவி இயக்குநர் ஹசீன்தான், கவிஞர் வஐச ஜெயபாலனை அறிமுகப்படுத்தினார். 'ஒருமுறை அவரைப் பாருங்கள். நாம் தேடுகிற கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார்' என்று சொன்னார். அவரைப் பார்த்ததும் ரொம்பவும் பிடித்துவிட்டது. நடிக்கிறீர்களா என்று கேட்டேன். உடனே சரி என்றார். பேட்டைக்காரராக உருவாக்கிவிட்டோம்.

உங்களுடைய அடுத்த ஆடுகளம் என்ன?

இன்னும் தீர்மானிக்கவில்லை. கிளவுட் நைன் நிறுவனத்திற்காக அடுத்த படத்தை இயக்குகிறேன். என்மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்திருப்பதால், ஏற்கெனவே எழுதிவைத்திருந்த கதைக்களனை மாற்றலாம் என்றிருக்கிறேன்.

நன்றி: த சன்டே இந்தியன் மற்றும் தமிழ் சினிமா.காம்

Monday, February 7, 2011

கல்வி விளக்கேற்றும் INFOSYS

இளமையில் வறுமை கொடிது என்ற வாசகத்தை விட, நல்ல கல்வித்திறன் இருந்தும் வறுமை என்பதே மிகவும் கொடுமையானது.

நம்மை சுற்றி, நமக்கு தெரிந்தவர்கள் மத்தியில் நல்ல திறமைகள் இருந்தும் முறையான கல்வி கற்க வசதியில்லாதவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்து, என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்த ஒரு பெண் வீட்டு வேலைக்கு சென்றுவிட்டார். குறிப்பாக நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கும் பெண்கள் பலர், வீட்டின் வறுமை காரணமாக மேற்கொண்டு படிக்கஇயலாமல் இருப்பது கண்கூடு.

ஏழை மாணவர்களுக்கு கல்வி தரும் மகத்தான சேவையை துவக்கி இருக்கிறது....பிரபல சாப்ட்வர் நிறுவனமான INFOSYS.

இந்நிறுவனத்தில் நான் முற்றிலும் வெறுக்கும் ஒரே விஷயம்...இந்நிறுவனத்தில் வேலைக்கு சேரவேண்டுமானால், பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தொடங்கி கல்லூரியின் அனைத்து செமஸ்டர்களிலும் 60 % மதிப்பெண்கள் பெற்றாக வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது. நடைமுறையில் இது கிராமபுற மாணவர்களுக்கு எதிரானது என்பது என் கருத்து. பல நல்ல மாணவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்பதும் என் கருத்து.

INFOSYS நிறுவனத்தின் அறக்கட்டளை குழுவான NGO-Prerana துவங்கி இருக்கும் இந்த சேவை பெறுவதற்கு மாணவர்களுக்கு . இரண்டே இரண்டு விதிமுறைகள் மட்டும் இருக்கின்றன.

ஒன்று, பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 80 % மதிப்பெண்கள் பெற்று இருக்கவேண்டும்.

இரண்டு, NGO-Prerana நடத்தும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்

இந்த இரண்டு தகுதிகளும் இருந்தால் போதும்... தகுதி பெறும் மாணவர் விரும்பும் வரை, மாணவரின் மேற்படிப்புகள் அனைத்துக்கான மொத்த செலவுகளை இந்நிறுவனமே ஏற்றுக்கொள்ளும்.

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும், ஏழை மாணவர்களுக்கும் இந்த விவரங்களை கண்டிப்பாக அளியுங்கள்.

NGO-Prerana இது குறித்தான தொடர்புகளுக்கு,

1 . திருமதி.சரஸ்வதி, மொபைல் எண் : 99009 06338

2. திரு.சிவகுமார் , மொபைல் எண் : 99866 30301

3. பிந்து, மொபைல் எண் : 99645 34667

தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:

580,Shubhakar,
44th cross, 1st A main road, Jayanagar 7th block,
Bangalore :


இதை முன்னுதராணமாக கொண்டு, இத்தகைய சமுகசேவைகளை செய்வதற்கு மற்ற நிறுவனங்களும், கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் நடிகர்களுக்கும் முன்வரவேண்டும்.

’அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’

-மகாகவி பாரதியார்

-இன்பா

Sunday, February 6, 2011

மை நேம் இஸ் பில்லா 2

அமிதாப்பச்சன் - ரஜினிகாந்த - ஷாருக்கான் - அஜித் என்று வரிசைப்படி அவதாரம் எடுத்த பில்லா, இப்போது பில்லா 2 என்று ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறது.

அஜித் - விஷ்ணுவர்த்தன் - யுவன் ஷங்கர் ராஜா - நிரவ்ஷா - சுரேஷ் பாலாஜி என்று கலக்கிய அதே 'பில்லா - 2010 ' கூட்டணி இணையும் படமான "பில்லா 2 " அறிவிக்க பட்ட நாள் முதலாக கவனம் பெற்று இருக்கிறது.

"ஒரு சாதாரண மனிதன் ஒரு பெரிய இடத்துக்கு போய் நிற்ப்பது என்கிற இந்த சாகச கதை எனக்கும், எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது" என்று சொன்ன அஜித், தனது 50 வது படமான "மங்காத்தா" முடிந்தவுடன் செய்யப்போகும் படம் "பில்லா 2 " என்று அறிவித்து இருக்கிறார்.

விஷ்ணு,நிரவ்ஷா,யுவன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய நண்பர்களோடு மீண்டும் பணிபுரியப்போவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார் தல.சுரேஷ் பாலாஜி,மறைந்த நடிகர் மற்றும் 'ரஜினி பில்லாவின்' தயாரிப்பாளர் பாலாஜியின் மகன்.

இதில் இன்னொரு முக்கிய அம்சம், பில்லா பட தயாரிப்பாளர்களான வைட் ஆங்கிள் நிறுவனத்துடன், இப்படத்தை தயாரிக்க போவது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் முதலையான ஹிந்துஜா குழுமத்தினர் முதல் முறையாக தமிழில் தயாரிக்கபோகிறார்கள்.

ஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த IN Entertainment (INE) நிறுவனம் சுரேஷ் பாலாஜியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.

"ஹிந்துஜாவை போன்ற வலுவான பின்னணி உள்ள நிறுவனம் இணைந்து இருப்பது பெரும் பலம் " என்றார் அஜித்.

"பில்லா 2 , பில்லா படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. ஆனால், பில்லாவின் கதையை வேறு ஒரு கோணத்தில் சொல்லப்போகும் கதை. இது, பில்லாவை விட மிக பிரமாண்டமாக இருக்கும்" என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்."அஜீத்,நான்,யுவன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா எல்லோரும் ஒரு வெற்றிக்குழுவை உருவாக்கி இருக்கிறோம்" என்று பேட்டியில் சொன்னார் விஷ்ணுவர்த்தன்.

மதுரை அருகே ஒரு சிறிய ஊரில் தொடங்கும் கதை, பின்னர் உலக நாடுகள் எங்கும் பயணிப்பதாகவும் சொன்னார் விஷ்ணு.

ஏப்ரல் 2011 இல் துவங்க திட்டமிடப்பட்டுள்ள "பில்லா 2 " பில்லாவை விட பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சாமானியனான டேவிட் எப்படி "பில்லா" என்று உருவானான் என்பதே கதைக்கரு. பில்லாவாக வளர்வதற்கு முன்னால் அவனது இளமை பருவம் பற்றி பேசப்போகிறது "பில்லா 2 ". இதற்காக அஜித், கார் ரேசுக்கு செய்ததை போல பயிற்சிகள் செய்து, எடை குறைத்து மிகவும் இளமையான கெட்டப்பில் வரபோகிறார் என்றார் விஷ்ணுவர்த்தன்.

வெத்தலைய போட்டேண்டி, மை நேம் இஸ் பில்லா என்று பில்லாவில் கலக்கியது போன்ற ரீமிக்ஸ் பாடல்கள் இதிலும் உண்டா டைரக்டர் விஷ்ணு சார்??

-இன்பா

களத்தில் இறங்கிய "காவலன்"


"மோதனும்ன்னு முடிவு பண்ணிட்டா மன்னன்னு பார்க்கமாட்டேன், மந்திரின்னு பார்க்கமாட்டேன் " - என்று "சுறா" படத்தில் விஜய் பேசியபோது 'மொக்கையாய்' தோன்றிய இந்த வசனம் இப்போது அர்த்தத்தோடு கேட்கிறது. அவர் நிஜமாகவே மன்னர்களோடும், மந்திரிகளோடும் மோதுவதற்கு தயாராகிவிட்டார் என்று தெரிகிறது.

நம் தமிழ் சினிமாவில் தற்சமயம் மன்னர்கள் அல்லது மாமன்னர்கள் என்றால், அது வரிசைப்படி 'சன் பிக்சர்ஸ்' கலாநிதி மாறன், 'ரெட் ஜெயன்ட்ஸ்' உதயநிதி ஸ்டாலின் மற்றும் அழகிரியின் மகன் ' க்ளவுட் நைன்' துரை தயாநிதி. (ஊரில் இருக்கும் நிறுவனங்களை எல்லாம் தமிழில் பெயர் வைக்க சொன்னவரின் குடும்ப நிறுவனங்களின் பெயர்களை கவனியுங்கள்).

அரசு அதிகாரம் மற்றும் அளவிட முடியாத பணபலம் இவற்றால், தமிழ் சினிமா துறையில் இவர்கள் செய்யும் அராஜகங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல என்று திரைத்துறையில் குரல்கள் கேட்க தொடங்கி இருக்கின்றன.

உதாரணங்களுக்கு, சுமார் ஒன்றரை கோடியில் தயாரான "களவானி" கொஞ்சம் கவனம் பெற தொடங்கியதுமே அதை ஒரு கோடிக்கும் குறைவான அடிமாட்டு விலைக்கு கேட்டு உதயநிதி ஸ்டாலின் மிரட்டியதாக அதன் தயாரிப்பாளர் திரு.நசிர் தெரிவித்த கருத்து வெளியில் வாராமல் முறிக்கப்பட்டு விட்டது.

சென்ற மாதம் வெளியாகி நல்ல வெற்றிபடமாக வரவேண்டிய "தா" , இவர்கள் குடும்பத்து படங்கள் பொங்கலில் வருவதற்காக, ஒரு சில திரைஅரங்குகளில் சில தினங்கள் மட்டுமே ஓடி, பின்னர் வேறு எங்கும் வெளிவராமல் நிறுத்தப்பட்டது.

சன் பிக்சர்ஸ் தங்கள் வெளியிடும் படங்கள் படு மொக்கை என்று தெரிந்தும் கூட, "இந்த வாரம் முதல் இடத்தை பிடித்த படம்" என்று கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாத ஒருவரை வைத்து தங்கள் "டாப் டென்" நிகழ்ச்சியில் அறிவிக்கிறார்கள். மற்ற படங்களை நன்றாக ஓடினாலும், அதை மட்டம் தட்டிவிடுகிரார்கள். நேர்மையான, நடுநிலையான விமர்சனங்களுக்கு இப்போது எந்தவொரு சானலிலும் இடம் இல்லாமல் போனதற்கு சன்
டிவியே பிள்ளையார் சுழி.

ஒரு படம் வெளிவரும் முன்பே மக்கள் மத்தியில் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கவேண்டும் அல்லது ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கவேண்டும் அல்லது சிறிய பட்ஜெட்டில் வெளிவரப்போகும் கொஞ்சம் நல்ல படமாக இருக்கவேண்டும்(உ.தா: மைனா).

மேற்கூறிய மூன்று வகையறாவில், ஏதேனும் ஒன்றில் இருந்தால் அதை கருணாநிதியின் குடும்பத்தை சேர்ந்த கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி இந்த மூன்று மன்னர்களில் யாரேனும் ஒருவர்தான் வெளியிடவேண்டும் என்ற எழுதபடாத சட்டமே தற்சமயம் இருக்கிறது.

இவர்களை மீறி இந்த சட்டத்துக்கு புறம்பாகவோ,அதை எதிர்த்தோ யாரும் வாயே திறக்க முடியாத இன்றைய அரசியல் சூழலில், யாருமே எதிர்பார்க்காத, அவர்களுடன் மிகவும் நெருக்கமானவராக இருந்த விஜய், முதல் முறையாக எதிர் குரல் கொடுத்து இருக்கிறார்.

தனது "காவலன்" படத்தை இவர்களுக்கு தர மறுத்து தன்னிச்சையாக வெளியிட முயன்றதுதான் விஜய்யை அரசியலை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கவைத்திருகிறது.

அதை தொடர்ந்து அவர்க்கு பலவகையான பிரச்சினைகளை தரத்தொடங்கி விட்டார்கள் 'மன்னர்கள்(?)' தரப்பு ஆசாமிகள். அவர்களது படங்களான "ஆடுகளம்" மற்றும் கருணாநிதி தனது ஓய்வு(?) நேரத்தில் எழுதிய "இளைஞன்" போன்ற படங்களின் ரிலீசை சுட்டிக்காட்டி "காவலனை" முடக்கிவிட முயற்சி செய்கிறார்கள் என்பது ஊருக்கே தெரிந்து விட்டது.

இதை பற்றி துணிந்து பத்திரிக்கைக்கு பேட்டி அளித்திருக்கிறார் விஜய்.

"காவலன் படம் ரிலீஸ் ஆகக் கூடாதுன்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு தெளிவாக திட்டம் போடுறதை புரிஞ்சுக்கிட்டேன். பல தரப்புகளில் இருந்து காவலன் படத்துக்குப் பெரிய பிரஷர் கொடுத்தாங்க. அதில் சிலர்... தீபாவளி, பொங்கல்னு பண்டிகை தினங்களில், அரசு விடுமுறை நாட்களில் வரிசையா என் படங்களை ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது மட்டும் எந்த வகையில் நியாயம்? வேடிக்கை என்னன்னா, என் முகத்தை அழிக்க என் முகமேதான் தேவைப்படுது.

குறிப்பிட்ட சிலர் எடுக்கும், குறிப்பிட்ட படங்களை மட்டும்தான் பண்டிகை நாட்களில் வெளியிடணும்னு நிர்பந்தம் செய்தால் எப்படி? எல்லோருமே கொண்டாடத்தானே தீபாவளி, பொங்கல் பண்டிகை வருது. நாங்க மட்டும்தான் பட்டாசு வெடிப்போம்... கரும்பு கடிப்போம்னு சட்டம் போட்டா... அது நல்ல நாடா?

ஒரு படத்தைத் தயாரிக்க ஒவ்வொரு மனிதனும் எவ்வளவு கஷ்டப்படுறான் தெரியுமா? அத்தனை அவமானங்களையும் கேவலங்களையும் தாண்டித்தான் காவலன் வந்தான்.சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய காவலன் ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன்.

அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்தாங்க? விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே? காவலன் படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே? "

என்ற விஜய், பேட்டியின் உச்ச கட்டத்தில் "இது, ஒட்டுமொத்த சினிமா உலகத்தின் ஆதங்கம். நான் சொல்லிட்டேன். நிறையப் பேர் சொல்ல முடியாம அழுதுட்டு இருக்காங்க.
" என்று கூறியிருக்கிறார்.


"தி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த புரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.

எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளினாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடை சூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது. அதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.

முதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா?'

யார் பேச்சையும் கேட்டு உடனடியா எதிலும் இறங்க மாட்டேன். ஆனா, அரசியலில் இறங்குறதுக்கான அஸ்திவாரத்தைப் பலமாப் போட்டுக்கிட்டே வர்றேன்"
.
என்று தனது அரசியல் பிரேவசம் குறித்து அறிவித்துவிட்டார் நடிகர் விஜய்.

விஜய்யின் முந்தைய படங்களை போல எந்தவொரு ஆர்ப்பட்டமும், விளம்பரங்களும் 'காவலனுக்கு' இல்லை. படம் வருமா இல்லை கிடப்பில் போடபட்டுவிட்டதா என்ற அளவுக்கு இருட்டில் கிடந்தது இப்படம்.

இத்தனையையும் மீறி, கலைஞர் மற்றும் சன் டிவியில் "காவலன்" விமர்சனங்களிலும் , விளம்பரங்களிலும் ஓரங்கட்டபட்ட போதும், படம் ஓரளவுக்கு வெற்றிப்படமாக போய்கொண்டு இருப்பது மற்ற தயாரிப்பாளர்களுக்கு நம்பிக்கையை தந்து இருக்கிறது என்று நம்பலாம்.

இதை எல்லாம் விட என்னை கவர்ந்த(!) விஷயம்...கருணாநிதி ஆட்சியில் இருக்கும்போதே, துணிச்சலாக எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதாவை விஜய் நேரடியாக சந்தித்ததுதான். . இந்த தைரியம் ரஜினி,கமல் போன்ற எந்தவொரு முன்னணி நடிகருக்கும் இருக்குமா என்பது சந்தேகமே.

நம் மன்னர்களை எதிர்த்து விஜய் தொடர்ந்து தாக்குபிடிப்பாரா இல்லை இன்னொரு "எஸ்.வி. சேகர்(பாபு)" கணக்கில் சேருவாரா என்று எனக்கு உறுதியாக சொல்லதெரியவில்லை.

என்ன இருந்தாலும் , கலாநிதி மாறன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் துரை தயாநிதி என்ற, தமிழ் சினிமாவையே ஒட்டு மொத்தமாக விழுங்கிவிட
துடிக்கும் இந்த மூன்று பூனைகளுக்கு 'மணி' கட்டிய ஒரு காரணத்திற்கே நாம் "காவலனை" வரவேற்க்கலாம்.

-இன்பா

 
Follow @kadaitheru