Thursday, December 31, 2009

கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை - பாரதியாரின் முதல் சொற்பொழிவு


முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார். அரசியல் வாழ்க்கையைத் துறப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டொரு இடங்களில் மட்டுமே உறைவதாகவும் தாம் எழுதுவதையும் பேசுவதையும் சி. ஐ. டி துறையின் தணிக்கைக்கு உட்படுத்த உடன்படுவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பேரில் 14 டிசம்பர் 1918இல் விடுதலை செய்யப்பட்டு, தம் மனைவியின் சொந்த ஊரான கடையம் சென்றார் பாரதி.

1919 ஜனவரி 30இல் தம் எட்டயபுரம் நண்பர் ஒருவருக்குக் கடையத்திலிருந்து பாரதி எழுதிய கடிதத்தை ரா.அ. பத்மநாபன் வெளியிட்டுள்ளார். 1919 மே 2 அன்று எட்டயபுரம் மன்னருக்குப் பாரதி எழுதிய ஓலைத்தூக்கும் கிடைக்கிறது.
இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரதி சென்னைக்கு வந்திருக்கிறார். மணி அய்யர் என்று அழைக்கப்பட்ட எஸ். சுப்பிரமணிய அய்யரின் தலைமையில் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றியிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு பாரதி கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி இதுவேயாகலாம்.

எஸ். சுப்பிரமணிய அய்யர் (1842-1924) காங்கிரசின் முதல் மாநாட்டில் (1885) கலந்து கொண்டவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. அன்னி பெசண்டின் பிரம்ம ஞான சபையிலும் ஹோம் ரூல் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். ரவுலட் சட்டத்தைக் கண்டித்தவர். பாரதி சிறைபட்டபொழுது அவர் விடுதலை பெற முயன்றவர்களில் இவரும் ஒருவர்.

பாரதி தம் இறுதிக் காலத்தில் கொண்டிருந்த தத்துவ, ஆன்மிகப் போக்கை இவ்வுரை புலப்படுத்துகிறது. இதில் பாரதி வெளிப்படுத்தும் கருத்துகள் ‘பாரதி அறுபத்தாறு’ என அறியலாகும் பாடல்களோடு ஒத்திசைகின்றன.


இவ்வுரையினிடையே பாரதி பாடிய இரணியன்-பிரகலாதன் தொடர்பான பாடல் ‘பாரதி அறுபத்தா’றில் (பாடல் எண்: 15) இடம்பெறும் செய்யுளாகலாம். இதன்வழி ‘பாரதி அறுபத்தாறு’ பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தைக் கணக்கிடலாம்.

திரு. சுப்பிரமணிய பாரதி, தாம் இயற்றிய தேசபக்திப் பாடல்களைக் கணீரென்ற குரலில் பாடியவாறு தம் உரையைத் தொடங்கினார்.

காலச்சுவடு இதழில் முதன்முறையாக அச்சில் வந்த பாரதியின் உரை இங்கே....

‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும்.

லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன.

அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது.


எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.


வசிஷ்டர் முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும்.

எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.

ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார்.

‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம்'.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

(‘தி ஹிந்து’, 4 மார்ச் 1919).

(நன்றி: திரு.ஆ.இரா. வேங்கடாசலபதி ).

வாசக நண்பர்களுக்கு எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Tuesday, December 29, 2009

உழவுத் தொழிலுக்கு வஞ்சனை செய்வோமா?


அரிசி இறக்குமதி செய்ய, நீண்டகாலத்திற்குப் பின்னர் மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இந்தியாவின் உயிர்நாடித் தொழில் விவசாயம். அதிலும், அரிசி இந்தியர்களின் முக்கிய உணவாக உள்ள நிலையில் இத்தகைய இறக்குமதிக்கான அனுமதி நாட்டில் விவசாயம் தேய்ந்து வருவதை மிகத் தெளிவாக எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.


மத்திய விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் (2009, ஜூலை 24-ம் தேதி) மாநிலங்களவையில் தெரிவித்த தகவல்படி, இந்தியாவின் அரிசி உற்பத்தி முந்தைய ஆண்டை விட 21 சதவீதம் குறைந்துள்ளது. அதாவது 1 கோடியே 45 லட்சம் ஹெக்டேராக இருந்த நெல் பயிரீடு 1 கோடியே 10 லட்சம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.


நாட்டின் அரிசி உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் உத்தரப்பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நெல் பயிரிடுவது கணிசமான அளவுக்குக் குறைந்திருக்கிறது.

தமிழகத்தின் மொத்த உணவுதானிய உற்பத்தியில் 85 சதவீதத்தை அரிசிதான் பெற்றுள்ளது. மாநிலத்தில் சுமார் 19 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிரிடப்படுகிறது. ஆனால், இங்கும் விவசாய நிலங்கள் மெல்ல மெல்ல சுருங்கி வருகிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாகக் கருதப்பட்ட தஞ்சைப் பகுதி தற்போது பெரும் பின்னடைவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஆம், காவிரிப் படுகைப் பகுதிகளில் தனியார் அனல்மின் நிலையங்கள் அமைக்கப்படுவதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் விவசாயிகளிடமிருந்து விலைக்கு வாங்கப்படுகின்றன. இதனால், வாங்கப்படும் விவசாய நிலங்கள் மட்டுமன்றி அதன் அருகிலுள்ள விளைநிலங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளில் கடும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது.

கிராமங்களில் ஒரு சில ஏக்கர் விளைநிலத்தை மட்டும் வைத்திருப்பவர்கள்கூட கல்லூரி, மருத்துவமனை, தொழிற்சாலை மற்றும் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் தங்கள் நிலத்தை விற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தடுப்பதற்கு கேரளத்தில் உள்ளதுபோல் விளைநிலத்தை குடியிருப்புப் பகுதி உள்ளிட்ட வேறு பயன்பாட்டுக்குப் பயன்படுத்த கடும் விதிமுறைகளை அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த வேண்டும்.


2005,06-ம் ஆண்டு தகவல்படி அரிசி உற்பத்தியில் விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் 1,68,435 ஹெக்டேர் நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது என்று தமிழக அரசின் இணையதளம் தெரிவிக்கிறது.(நாகை மாவட்டம் இரண்டாமிடத்திலும், தஞ்சை மாவட்டம் மூன்றாமிடத்திலும் உள்ளன.) நாடு முழுவதும் பெரும்பாலான புறநகர்ப் பகுதிகளில் கட்டுமானத் துறை மிக வேகமாக வளர்ச்சி பெற்று வருகிற நிலையில், தமிழகத்தில் குறிப்பாக விழுப்புரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தற்போது ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலத்தை செங்கல் சூளைகளாக மாற்றத் தொடங்கியுள்ளனர்.


செங்கல் சூளைத் தொழில் லாபகரமாக உள்ளது என்றாலும், இது பூமி வெப்பமயமாவதை மேலும் அதிகரிக்கச் செய்யும் அபாயமும் இருக்கிறது. சுமார் ஒரு லட்சம் செங்கற்களைத் தயாரிக்க 30 முதல் 40 டன் மரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக ஆயிரக்கணக்கான மரங்கள் தொடர்ந்து வெட்டப்படுகின்ற நிலையில் காடுகள் அழிக்கப்படுவதுடன் பூமி வெப்பமும் அதிகரிக்கிறது.

குடியிருப்புப் பகுதிகள் பெருகிய நிலையில் ஏரி நீர்ப்பாசனம், கால்வாய் நீர்ப்பாசனம் ஆகிய பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் குறைந்து கிணற்றுநீர்ப் பாசனம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால்,​​ தற்போது கிணற்றுநீர்ப் பாசனமும் வெகுவாகக் குறைந்துள்ளது. 1974-ல் தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பம்ப்செட்டுகள் இருந்தன. ஆனால், தற்போது சுமார் 20 லட்சம் பம்ப்செட்டுகள் உள்ளன.

மாநிலத்தில் உள்ள அனைத்து ஆறுகளிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருவது ஊரறிந்த ரகசியம். இதனால் ஆற்றுப் படுகைகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அருகிலுள்ள விவசாயப் பாசனக் கிணறுகள் வறண்டு வருகின்றன. இதனால், தண்ணீர் இல்லாத நிலையில் - வானமும் பொய்த்துவிடுகின்ற சூழலில் - விவசாயிகள் மாற்றுத் தொழிலுக்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றனர். இதனால் விளைநிலங்கள் 'விலை'நிலங்களாக வேறு பணிகளுக்கு மாற்றம் பெறுகின்றன.


தமிழகத்தில் 2004}2005-ம் ஆண்டில் மொத்த உணவுதானிய உற்பத்தி 61,46,044 டன்கள் ஆகும். ஆனால்,​​ 2005,06-ல் 61,16,145 டன்கள் தான். இது முந்தைய ஆண்டைவிட 29,899 டன்கள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.


ரியல் எஸ்டேட் துறை தற்போதைய அளவுக்கு அசுர வளர்ச்சி பெறாத காலத்திலேயே இத்தகைய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றால், விளைநிலங்கள் வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலங்களாகவும் உருமாறி வரும் இன்றைய காலத்தில் விவசாயத்தின் பரிதாப நிலை என்னவாக இருக்கும் என்பதைக் கணித்துக்கொள்ளுங்கள்.

கிராமப்புற வங்கிகள், விவசாய கூட்டுறவு வங்கிகள் ஆகியவை விவசாயிகளுக்கு அளிக்கும் மொத்தக் கடன்களைவிட, வர்த்தக வங்கிகள் தொழிற்சாலைகளுக்கு அளிக்கும் கடன்களின் அளவு நம் நாட்டில் எப்போதுமே பல மடங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலை மாறி விவசாயத்துக்குத் தேசிய வங்கிகளும் தனியார் வங்கிகளும் பெருமளவில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.

உரங்களுக்காக விவசாயிகள் பெரும் தொகையைச் செலவழிக்க வேண்டியிருப்பதால் இயற்கை மற்றும் பாரம்பரிய விவசாய முறை குறித்த விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்த அரசும் சமூக ஆர்வலர்களும் முன்வர வேண்டும்.

இந்தியாவின் 75 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கையில் இறங்க வேண்டும்.​ கிராமப்புற இளைஞர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த குறுந்தொழில்களில் ஈடுபட அரசு ஊக்கப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வங்கிக் கடன்கள் மேலும் எளிதாகக் கிடைக்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும்.

இன்றைய தலைமுறையினர் விவசாயத்தின் மீது எந்தவித ஈடுபாடும் இல்லாத நிலையை முற்றிலும் மாற்ற அரசு முனைப்புடன் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி அவற்றை நடைமுறைப்படுத்தினால் மட்டுமே விவசாயத்தையும் அதுசார்ந்த கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும்.
(நன்றி : தினமணி).

உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியாவில் இன்று அரிசி இறக்குமதி செய்யும் அவலநிலை வந்து விட்டது. நம் விவசாய நிலங்களை பீடிதது இருக்கும் ரியல் எஸ்டேட் என்னும் தீராத, கொடிய வியாதிக்கு முடிவு என்ன்? எப்போது?


கடைக்காரர் கமெண்ட்:ஒரு ரூபாய்க்கு இலவச அரிசி தரும் அரசு, அந்த அரிசி விளையும் நிலத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்ற போகிறது?
பதிவு : இன்பா

Monday, December 28, 2009

'அசல்' சிவாஜி கணேசன்


சிவாஜி கணேசன் விழுப்புரத்தில் பிறந்தவர். சிவாஜி ப்ரோடக்ஷன்ஸ் நிறுவனத்துக்கும் , இவருக்கும் சம்பந்தம் இருக்கிறது. தெரிந்த விஷயம் என்கிறீர்களா. சிவாஜி கணேசன் தற்சமயம் அஜித் நடித்து வரும் அசல் படத்தில் பணிபுரிந்து வருவது உங்களுக்கு தெரியுமா?

"அசல்" படத்தின் டான்ஸ் மாஸ்டர் கணேஷ் ஆச்சாரியாவின் ஒரிஜினல் பெயரும் சிவாஜி கணேசன்."நடிகர் திலகம் பிறந்த அதே ஊரில் பிறந்ததால், அவர் பெயரையே வைத்து விட்டனர் என் பெற்றோர்கள் " என்கிறார் இந்த சிவாஜிகணேசன்.

கணேஷ் ஆச்சாரியா இவரே வைத்து கொண்ட பெயர்.. சிறு வயதில் பெற்றோர்கள் இவரை மும்பை அழைத்து சென்று விட்டனர். 12 வயதில் அங்கு ஜூனியர் ஆர்‌டிஸ்ட் அசோசியேஷன் உறுப்பினர் ஆனார். பின்னர் 14 ஆவது வயதில் டான்ஸ்சர் அசோசியேஷன் உறுப்பினர். தனது 17 ஆவது வயதில் நடன உதவியாளர்.

இன்று பாலிவுட்டில் தவிர்க்க முடியாத, நம்பர் ஒன் டான்ஸ் மாஸ்டர் நம்ம சிவாஜிகணேசன் தான்.

டான்ஸ் மாஸ்டர் ஆக 1992 ஆம் வருடம் வெளிவந்த ஆணம் தொடங்கி, சமீபத்திய பெரும் வெற்றி படங்கள் ஆன ஆமிர்கான் நடித்த ரங்க் தே பசந்தி, ஷாருக் நடித்த சக் தே இந்தியா மற்றும் கார்ஸ் 4 ஆகைய அனைத்தும் இவருக்கு புகழ் தேடி தந்தன.

சுமார் 120 படங்களில் நடன இயக்குநராகவும், பல படங்களில் சிறு வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.


நடனம் என்பதை தாண்டி திரை பட இயக்குநராகவும் சாதித்து இருக்கிறார் கணேஷ். ஜுஹி சவலா நடித்த சுவாமி (Swami (2007)) என்ற இந்தி படம்தான் இவரது முதல் படம். "என் வீட்டில், எனது தந்தைக்கும், தாய்க்கும் உள்ள உறவையே முதல் படத்தின் கதையாக அமைத்தேன் " என்று குறிப்பிடுகிறார்.

இவரது இரண்டாவது படம் Money Hai Toh Honey Hai (2008).

அஜய் தேவுகன் நடித்து, உலகம் எங்கும் கவனம் பெற்ற "ஒம்காரா" படத்தில் நடனம் அமைத்தமைக்கு 2006 ஆண்டின் சிறந்த நடன இயக்குநருக்கான ஃப்லிம் ஃபேர் விருது பெற்றவர் கணேஷ்.

"இந்த விருது பெற்றது குறித்து நான் எதுவும் உணர வில்லை. காரணம், இந்த வெற்றிக்கு ஆதாரணமான என் தந்தை உயிரோடு இல்லை. மேலும், என் திறமைகளுக்கு உரிய அங்கீகாரம் பெற நான் வருடங்கள் பல காத்து இருந்தேன் " என்று தெரிவித்தார்.

தமிழில் "அழகாய் இருக்கிறாய். பயமாய் இருக்கிறது " படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்து இருக்கிறார்.


"கடந்த 19 வருடங்களாக இந்தியில் கோவிந்தா,ஷாருக்கான், ஹிரித்திக் ரோஷன் ஆகிய அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் நடன இயக்குநராக பணி புரிந்து இருக்கிறேன். தமிழில் இப்போதுதான் நல்ல வாய்ப்பு வந்து இருக்கு " என்றார் இவர்.


அசல் தமிழரான கணேஷ் ஆச்சாரியா என்கிற சிவாஜிகணேசன் , அசல் படத்துக்கு பின் இந்தி சினிமாவை போலவே, நம் தமிழ் சினிமாவையும் ஆட்டிவைப்பார் என எதிர்பார்க்கலாம்.

பதிவு : இன்பா

Wednesday, December 23, 2009

தாய்க்கு மட்டுமே தெரியும் வலி....


மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாயைச் சந்திக்கும்போது அவர் இப்படிச் சொன்னார், "மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனில் எந்த அரசுக்கும் அக்கறை இருக்காது; காரணம், இவர்கள் என்ன வாக்களிக்கவா போகிறார்கள்?' இது வேதனையின் விளிம்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள்.

அந்த நிலையில்தான் இருக்கிறோமா என்பதை எந்த அரசு ஆனாலும் சுயபரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

மனவளர்ச்சி குன்றியவர்கள் நலனில் சமுதாயமும் சரி, மத்திய, மாநில அரசுகளும் காட்டும் அக்கறை போதுமானதாக இல்லை.
விலங்கினங்களில்கூட ஊனமாகப் பிறக்கும் குட்டியைத் தாய் புறக்கணிப்பதில்லை. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறந்தால், அதைக் குடும்பத்தாரும், சமூகமும், அரசும் புறக்கணிக்கும் அவலம் மனித சமுதாயத்துக்கு வெட்கக்கேடான விஷயம்.

பிறரின் கேலிக்கு அஞ்சியே இந்தக் குழந்தைகளைச் சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர பெற்றோர் அஞ்சுகின்றனர். அக்குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும் அதன் வலி.

இதனை மீறி வெளிக்கொணர்ந்தாலும், அவர்களுக்குத் தேவையான முறையான பயிற்சிகள், மருத்துவ வசதிகள், சிறப்புப் பள்ளிகள், இதற்கான ஆசிரியர்கள் என அனைத்திலும் பற்றாக்குறை
.தமிழகத்தில் 2001 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படியே பார்த்தாலும் 6 கோடி பேரில் 6 லட்சம் பேர் மனவளர்ச்சி குன்றியவர்கள் என்பது தெரிகிறது. ஆனால், இவர்களில் வெறும் 50,619 பேர் மட்டுமே மாதாந்திர உதவித்தொகையாக ரூ.500 பெறுகின்றனர். இதிலிருந்தே தெரியும், மீதம் எத்தனை பேர், அரசின் உதவி கிடைக்காத நிலையில் இருக்கிறார்கள் என்பது.

உடல் ஊனமுற்றவர்களுக்கு, அதன் சதவீதத்தின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் நிர்ணயிப்பது சரி. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் முதல் நிலையில் இருந்தாலும், இறுதி நிலையில் இருந்தாலும், இவர்கள் அனைவருமே பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம். அப்படியிருக்க, இவர்களுக்கு எதற்குக் கட்டுப்பாடுகள்?

மனவளர்ச்சி குன்றியோரின் திறனைச் சோதிப்பதில் போதிய அக்கறை காட்டாமல், அரசு மருத்துவர்கள் கடைப்பிடிக்கும் "விதி' அக் குழந்தையின் தலைவிதியை மாற்றுகிறது என்பதை உணர வேண்டும்.

பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரை "மைல்டு' எனக் குறிப்பிட்டு, அரசு கொடுக்கும் உதவிகளுக்குக்கூட இவர்களைத் தகுதியற்ற​வர்களாகச் செய்து விடுகின்றனர். இதில் அரசு விதியைத் தளர்த்துவதில் தவறில்லை.
தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புப் பள்ளிகள் எண்ணிக்கை 250. இதில் ஒன்று மட்டுமே அரசுப்பள்ளி.

இறுதி, மிக மோசமான என இரு நிலைகளில் இருக்கும் குழந்தைகளுக்கான, சிறப்புப் பள்ளிகள் அதிகம் தேவை.

இவர்களால் நன்றாக நடக்க, தெளிவாகப் பேச முடியாது. இவர்களைத் தற்போது தொண்டு நிறுவனத்தினர் மட்டுமே பராமரித்து வருகின்றனர்.
முதல் நிலையான "மைல்டு' நிலையில் இருக்கும் குழந்தைகள், வழக்கமான பள்ளி மாணவர்களோடு கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்தும் திட்டத்தை
2001-ல் அறிமுகம் செய்ததோடு சரி. இதற்கான சிறப்பாசிரியர்கள் நியமனத்திலும் மெத்தனம்.

தொண்டு நிறுவனங்களில் பணியாற்றும் 38 ஆசிரியர்களுக்குக் கடந்த 8 மாதங்களாக தலா ரூ.3 ஆயிரம்கூட வழங்க மறுக்கிறது அரசு. 1992 க்குப் பிறகு புதிதாக ஆசிரியர்களையும் நியமிக்கவில்லை.

1 ம் வகுப்பு முதல் அரசுப் பள்ளிகளில் இயங்கும் சிறப்புப் பள்ளியில் பயிலும் இம்மாணவர்கள், 5 ம் வகுப்பு வரை எவ்விதப் பயிற்சியும் இன்த் தேர்ச்சி பெற்றுவிடுகின்றனர்.

6 ம் வகுப்பில் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற நிலை வரும்போது, இவர்களால் எழுதக்கூட முடிவதில்லை. மீண்டும் தொண்டு நிறுவனத்தின் சிறப்புப் பள்ளிக்குத் திருப்பி அனுப்பும் சூழல் உள்ளது.இது, நல்ல நிலையில் உள்ள குழந்தைகளுக்கான பாடத்திட்டத்தை, மனவளர்ச்சி குன்றியோருக்கும் அளிப்பதால் ஏற்படும் பிரச்னை.

இவர்களுக்கென தனிப் பாடத் திட்டம், தனி வகுப்பறை, சிறப்பாசிரியர்கள், முடநீக்கியல் வல்லுநர்கள் என எவ்வித வசதியும் செய்யாமல், வெறு​மனே பள்ளிக்கு வரவழைத்து, அமரவைத்து, திருப்பியனுப்புவதில் பயனேதும் இல்லை.

மனநிலை பாதிக்கப்பட்ட இவர்களுகுத் தேவை அன்பு, ஆதரவு, சத்தான உணவு, பயிற்சிகள் மட்டுமே. வறுமையில் வாடும் பெற்றோரால் எத்தனை காலத்துக்கு சத்தான உணவைத் தர முடியும்?

ஆனால், இவர்களுக்குத் தேவையானவற்றை யோசித்துச் செய்யும் நிலையில் அரசு இல்லை என்பது, அவர்கள் இதுவரை செய்திட்ட பணிகளின் மூலம் தெளிவாகிறது.

நல்ல நிலையில் இருக்கும் நபர்களுக்காக ஏராளமான புதிய திட்டங்களைத் தினசரி அறிவித்து, பல கோடி ரூபாயைச் செலவிடுகின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்டோர் நலனுக்காகத் தொடர்ந்து செயல்படுவதில் அரசுக்கு ஏன் இத்தனை தயக்கம்? பாதிக்கப்பட்ட தாயின் வேதனை வார்த்தைகளை உண்மையாக்குவதும்; பொய்யாக்குவதும் அரசின் கைகளில்!

இந்த நேரத்தில் நாம் குறிப்பிட விரும்புகின்ற ஒரு நிகழ்ச்சி. சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைதான் ஆசியாவிலேயே மிக பெரிய மனநலம் குன்றிய நோயாளிகளுக்கான மருத்துவமனை. இங்கு கடந்த 28 வருடங்களாக நடைபெறும் நிகழ்ச்சி கிறிஸ்துமஸ் விழா.

இவ்விழாவில் மனநலம் குன்றியவர்கள் தங்கள் கைப்பட உருவாக்கிய கைவினை பொருட்களின் கண்காட்சி நடைபெறுகிறது. மன வளர்ச்சி குன்றியவர்களின் மகிழ்ச்சிக்காக நடத்தப்படும் இவ்விழாவில் ஏராளாமானோர் கலந்து கொண்டு, இந்த கை வினை பொருட்களை வாங்கி செல்கின்றனர். தற்சமயம் இந்த மருத்துவமனையின் இயக்குநர் திரு. சத்திய நாதன்.

இங்கு மொத்தம் சுமார் 2800 பேர் நிரந்தரமாக தங்கி சிகிச்சை பெறுகிறார்கள்.
(நன்றி :தினமணி & தினமலர்).

கீழ்ப்பாக்கம் என்றாலே கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய இடம் என்று ஆகிவிட்டது. டிவியில் அடிக்கடி காண்பிக்கபடும் விளம்பரங்கள் (உ.தா : ஓனிடா மொபைல்) மற்றும் திரைப்படங்கள் எல்லாமே இந்த இடத்தை நகைச்சுவை பொருளாக்கி விட்டன.

மனவளர்ச்சி குன்றிய குழந்தையின் தாய்க்கு மட்டுமே தெரியும் இந்த வலி....


கடைக்காரர் கமெண்ட் :
ஊனமுற்றவர்களுக்கு கிடைக்கும் பரிதாபம் கூட மனநலம் குறைந்தவர்களுக்கு நம்ம சமூகத்துல கிடைக்கிறது இல்லை. அரசை மட்டும் நொந்து என்ன ஆகி விட போகுதுங்க?

வாசக நண்பர்களுக்கு எங்க கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவிச்சிக்கிறோம்


பதிவு : இன்பா

Monday, December 21, 2009

பேராசிரியர் கல்யாணி - ஒரு போராட்ட கதைகல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.

திரு.பழ நெடுமாறன் அவர்களுடன் தமிழகத்தில் எங்கு நமது இனம் தொடர்பான எங்கு போராட்டம் நடந்தாலும் பங்கு கொள்ளும் மொழி போராளி.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திர பாண்டியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கல்யாணி திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் விருப்ப ஓய்வுபெற்றுத் தற்போது அங்கேயே வசிக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மக்கள் யுத்தக் குழு)யின் பண்பாட்டு அமைப்பான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’த்தில் செயல்பட்டவர். அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ‘செந்தாரகை’ என்னும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த கல்யாணி பிறகு அதிலிருந்து விலகிக் கல்வி சார்ந்த பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மக்கள் கல்வி இயக்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் சார்பாகத் தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.


பணியிலிருக்கும் போதே பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திய கல்யாணி, ஓய்வுக்குப் பிறகு பழங்குடி இருளர் பேரவை என்னும் அமைப்பின் மூலம் அவர்களது வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார்.

காலச்சுவடு இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து, அவரது போராட்ட, அரசியல் வாழ்வு அவரது பார்வையில்......


எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திரபாண்டியபுரம். அப்பா சிறு விவசாயி, சமூகரெங்கபுரத்தில் தலையாரி வேலை பார்த்தார். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம். நான் கடைசியாக, பத்தாவது குழந்தையாக 1947இல் பிறந்தேன். கல்யாணி எனும் பெயரை எங்கள் பகுதியில் மறவர், தலித் சாதிகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வைப்பார்கள். நான் மறவர். மறவர் என்பது denotified tribe. அங்கு அது சிறுபான்மைச் சாதியாக இருந்தது. நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர்.


ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தேன். அப்புறம் கள்ளிகுளம் பள்ளிக்குச் சென்றேன். அது சாமியார்கள் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளி. அண்ணன் பத்தாம் வகுப்பு. நான் ஒன்பதாம் வகுப்புப் படித்தேன். பள்ளியில் அண்ணன் செய்த ஒரு தவறுக்காக நிர்வாகத்தினர் அவனைத் தண்டித்தனர். அவனுடன் சேர்ந்து தவறுசெய்த இன்னொரு மாணவர் நிர்வாகத்தினருக்கு வேண்டியவரென்பதால் அவரை விட்டுவிட்டனர். அதனால் அந்தப் பள்ளியில் படிக்க மாட்டேனென வீம்புடன் சொல்லிட்டு சமூகரெங்கபுரத்திலிருந்த பள்ளியில் சேர்ந்தேன். அது டிஸ்ட்ரிக்ட் போர்டு பள்ளி. அங்கு ரெட்டியார்கள் பெரும்பான்மை வகுப்பினராக இருந்தனர்.


பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் பியூசி (1963 - 1964). கல்லூரியில் நான்தான் கடைசி மதிப்பெண். ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவார்கள். முதலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. பியூசி முடித்துவிட்டு அங்கேயே இயற்பியல் (1964-1967) படித்தேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்கள் படிப்பது போன்ற சுய முயற்சிகளைச் செய்தேன். மூன்று வருடப் படிப்பில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக நேரம் விரயமாகியது. இயற்பியல் துறை சார்ந்து படித்தது மூன்றாம் ஆண்டில் தான். அறிவியல் பாடங்களில் அடிப்படை பலமாக இருந்ததால் தேர்ச்சி பெற்றேன். மேலும் விடுமுறையின் போதே கல்லூரிப் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டுபோய்ப் படித்துவிடுவேன்.
65இல் கல்லூரியில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தது. திமுகவில் இருந்ததால் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். ரகுமான்கான் அமெரிக்கன் கல்லூரி தானே! கல்லூரியில் அவர் எனக்குச் சீனியர். மற்றவர்களுடன் சென்று நானும் கலந்துகொண்டேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே திமுக அனுதாபி. அப்போது எனக்குப் பதினோரு வயது.

என் அண்ணன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர், திராவிடர் கழகத்துக்காரர் என்றே சொல்லலாம். என் சித்தப்பா கொழும்பில் இருந்தார். சித்தி மட்டும் இங்கே இருந்தார். அவரது வீட்டுக்கு அண்ணனுடன் போய்ப் பேசிக்கொண்டிருப்பது உண்டு. அப்போது அரசியல் பற்றிய பேச்சுகளும் வரும். அதனால் அந்தச் சின்ன வயதிலேயே கடவுள் மறுப்பு, திமுக அரசியலிலெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது.

1967இல் இளங்கலை முடித்தேன். முதுகலைப் படிப்புக்குச் செல்லவில்லை. வேலைக்குப் போகவே விரும்பினேன். கும்பகோணத்தில் ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியராகச் சேர்ந்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம். ஒரு வருடத்திற்குப் பிறகு மாமா மூலமாகத் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஒரு வருடம் வேலை. அடுத்த வருடம் சிவகங்கையில் வேலை. அங்கே பதினான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்த்தேன். அப்போது முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில் யானைமலை ஒத்தக்கடை அரசு விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அதில் சேர்ந்துவிட்டேன்.அந்த வேலையில் சேர்ந்த பிறகு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. திமுகவின் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருந்த தருணம் அது. அப்போதுதான் செம்மலர் பத்திரிகை வந்தது. மக்கள் உரிமைக் கழகத்தின் தில்லைநாயகம் மூலமாக முற்போக்கு இயக்கம் அறிமுகமானது. எனக்குத் திமுகவின் கொள்கைகளோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இடதுசாரிச் சார்பு மனநிலை உருவானது. முற்போக்கு இயக்கங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. எனக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் மார்க்சிஸ்ட் கட்சிதான் நெருக்கமாகத் தென்பட்டது. அதற்கு எந்தத் தத்துவார்த்தப் பின்னணியும் காரணமல்ல. எங்கள் கல்லூரி விவசாயப் பல்கலைக் கழகமாக ஆன பின்னர் அங்கே பணியில் தொடர எனக்கு ஆர்வமில்லை, எனவே கடலூருக்கு வந்துட்டேன். அங்கேதான் பழமலயைச் சந்தித்தேன். அவர் கடலூரில் பேராசிரியராக இருந்தார். அங்கேயிருந்து மதுரை மேலூரிலும் பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று மாதம் அங்கே வேலை பார்த்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. அதனால் விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்க வந்துவிட்டேன்.

அப்போதெல்லாம் சம்பளத்தோடு அனுப்பமாட்டார்கள். அப்போது 1975 நெருக்கடிநிலை சமயம். திமுகவின் நட வடிக்கைகள் பிடிக்காத சூழலில்கூட நெருக்கடிநிலைமீது ஒரு கோபம் வந்தது. நான் இருந்த விடுதிக்கு நேரெதிரே இருந்த இடத்தில் இரவு நேரத்தில் நெருக்கடிநிலை அமலாகியிருப்பது குறித்த சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். காலையில் போய் டீ குடித்துவிட்டுச் சுவ ரொட்டிமீது சாணி அடிக்க வேண்டுமென்று சாணியை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு முன்பே யாரோ அந்தச் சுவரொட்டிமீது சாணி அடித்திருந்தனர்.


1972-73இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகினார். அப்போது நான் கடலூரில் வேலையில் இருந்தேன். ஒரு கட்சிக்காரனாக எப்போதும் எம்ஜிஆரின் சினிமாத்தனங்கள்மீது எனக்கு விமர்சனம் உண்டு. அவரை விலக்கியது என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இந்த மாதிரி ஆள்களைக் கட்சியில் வைக்கக் கூடாது என்னும் நினைப்பு எனக்கிருந்தது. மாயத்தேவருக்காக சிபிஐ, சிபிஎம் எம்ஜிஆரை ஆதரித்ததால் அந்தக் கட்சிகளை வெறுத்து, சிபிஎம்மிலிருந்து நான் விலகிவிட்டேன்.


1976இல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு விழுப்புரத்தில் வேலை கிடைத்தது. முதுகலை முடித்த புத்துணர்ச்சியோடு மிக ஆர்வமாக வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்த சமயம் அது. வகுப்பில் போகிறபோக்கில் வாய்ப்புக் கிடைக்கும்போது கடவுள் மறுப்பு பற்றியெல்லாம் பேசுவேன். என் இயல்பு அது. மாணவர்களும் என்னை விரும்புவார்கள். விடுதிக்குச் சென்று தலித் மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுத்தால் அவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற துறைப் படிப்புகளுக்குப் போக முடியும் என்பதால் அவர்களுக்குப் பயிற்சியளிப்பேன். கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் இருந்தேன். இப்படிப் பல தளங்களிலும் இயங்கியதைப் பார்த்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் என்னை அவர்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அப்போதுதான் தினகரன் பத்திரிகை வந்தது. எப்போதும் தினகரன் பத்திரிகையோடுதான் இருப்பேன். அப்போது நான் தீவிர திமுக ஆதரவாளன். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், அவர்களின் வேண்டுகோள்களுக்காகக் கடவுள் மறுப்பு போன்ற செய்திகளைப் பேசுவேன்.


அஷ்வகோஷ் அங்கே அறிமுகம் ஆனார். ஒரு நாள் அங்கே ஏற்பட்ட விவாதத்தில் நான் பேசியதைக் கேட்ட ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சித் தோழர் என்னைப் பார்க்க அறைக்கு வந்துவிட்டார். அவர் வெளிப்படையாகத் தான் அந்த இயக்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளமாட்டார். என்னை அந்தத் தோழர் பார்த்ததை அறிந்த மார்க்சிஸ்ட்கள் அவரை மிரட்டினர். எனக்கு அவர்களின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. அவர்களைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். பிறகு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டேன். தோழர் செந்தாரகை வந்து என்னைச் சந்தித்தார். இரவில்தான் வருவார், தலைமறைவு அரசியலிலிருந்துதான் தொடங்குவார். எனக்கு நன்றாகத் தூக்கம் வரும். மார்க்சிஸ்ட்டுகளோடு இருந்த முரண்பாடு காரணமாக அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இயல்பான பிடிப்பு இல்லை. இப்படியான சூழலில் இலங்கையிலிருந்து வந்த சில மலையகத் தமிழர்கள் மார்க்சியம் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியுமென நினைத்து என்னிடம் வந்தார்கள். எனக்கும் எதுவும் தெரியாது. எல்லோரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லி அரசுங்கிற புத்தகத்தை வரிக்கு வரி படித்தோம். பின்னர் குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களைப் படித்தோம்.


அதன் விளைவாக மார்க்சியத்தின் அடிப்படை புரிந்தது.


1983இல் இலங்கைப் பிரச்சினை வந்தது. அதை ஆதரித்தது. பிரபாகரன் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியா சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது, இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று கூறினார்கள். திமுகவினர் இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். ஈழ விடுதலையை, தனி ஈழத்தை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்கள் ஆதரித்தனர். ஒரு தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமை. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. தேசிய இனப் பிரச்சினையிலும் மொழிப் பிரச்சினையிலும் இந்திய அளவில் ஏஎம்கே அளவுக்குத் தெளிவானவர்கள் யாரும் இல்லை. மொழிப் பிரச்சினை தொடர்பான இந்திய அளவிலான விவாதத்தில் தமிழ்நாடு வைத்த பயிற்சி மொழி, ஆட்சி மொழி, தொடர்பு மொழி மூன்றும் ஒரே மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்னும் ஒரு மொழிக்கொள்கையை அப்படியே எல்லா மாநிலங்களும் பின்பற்றின. மொழிப் பிரச்சினை தொடர்பாக மபொசி எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களுக்கான இடம் சமமாக இருக்க வேண்டும். மக்கள்தொகை சார்ந்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது என்று சிந்தித்திருக்கிறார்.


தொடக்கத்தில் சரியான அமைப்பு கிடையாது. நான் நக்சல்பாரி இயக்கத்தில் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் பெண் கல்வி தொடர்பா ஒரு பள்ளி கொண்டுவர வேண்டிய முயற்சிக்கு என்னை அணுகினர். வன்னியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி அது. மருத்துவர் ராமதாஸ் மக்களைச் சார்ந்து நிற்பார் என அவரைக் கொண்டுவந்தோம். அவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். பல்வேறு தரப்பினரைக் கொண்டு பள்ளி திறப்புக் குழு, வெகுஜன மேம்பாட்டுக் குழு என இருகுழுக்களை உருவாக்கினோம். தலைவர் மருத்துவர் ராமதாஸ். நான் ஒரு குழு உறுப்பினர். செயலாளர் பவனந்தி. ஹீராசந்த் அப்ப நகராட்சித் தலைவர். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் அதிமுக செயலாளர். அவரை எதிர்த்துதான் அதை நடத்த வேண்டும். கடுமையான போராட்டம். அவர்தான் இலக்கு. அவரை எதிர்த்து எப்படி அணி திரட்டுவது என்பது குறித்த தெளிவான பார்வை இருந்தது. அதில் எனக்குப் பயங்கர பாதிப்பு. ஆனால் திண்டிவனத்தில் எனக்குக் கிடைத்த நல்ல பெயர் அப்போராட்டத்தை வைத்து உருவானதுதான். நாங்கள் விரும்பியபடி பள்ளியைக் கொண்டுவந்துவிட்டோம். பல தடைகளைத் தாண்டி இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது.


98இல் டிசம்பர் 6 நிகழ்வை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரையும் இஸ்லாமியரையும் கைதுசெய்திருந்தனர். இதற்கு எதிராக ஒரு பத்திரிகைச் செய்தி கொடுக்க வேண்டுமென ரவிக்குமார் சொன்னார். செய்தியை அவரே எழுதினார். அப்போது இஸ்லாமியர்களுடன் இணைந்து சதிசெய்ததாக ஒரு வழக்கு எங்கள்மீது போடப்பட்டது. ரவி என்பவர் அப்போது மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். இருளர்களுக்கு எதிரான வழக்குகளில் ரவி சரியாகச் செயல்படவில்லை என நான் முன்பு அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு பழிவாங்கும்விதமாக இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டது.
2002இல் திண்டிவனம் அருகே பட்டிணத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைப் போட்டு அடித்துவிட்டார்கள். புகார் கொடுத்தோம். எதிர்த் தரப்பினர் கட்டப்பஞ்சாயத்துக்கு வந்தனர். தலித் இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தலைமையில் அந்தப் பஞ்சாயத்துக்கு வந்தனர். எப்போதும் கட்டப்பஞ்சாயத்துகளை நான் ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொள்ளமாட்டேன். கடுமையாகப் பேசிவிடுவேன். அதனால் இருளரில் ஒருவரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கையெழுத்து வாங்கி அவரை நான் திட்டியதுபோல் என்மேல் வழக்குப்போட்டார்கள். ஆனால் கைது செய்யவில்லை. அதை எதிர்த்துத் திருமாவளவன் தலைமையில் விழுப்புரத்தில் 10,000 பேர் திரண்ட பெரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பேரணியில் இணைந்தனர்.

மார்க்சிய - லெனினிய இயக்கத்திலிருந்து வந்த பின்பு பண்ணையபுரம் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான உண்மையறியும் குழுவில் இணைந்து பணிபுரிந்தேன். அப்போது 93இல் அத்தியூர் விஜயா வழக்கு கவனத்திற்கு வந்தது. ஒரு கைதியைத் தேடிப் போவதுபோல் போய் அந்த இருளர் இனத்துப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை. வழக்கமாகப் பாண்டிச்சேரி போலீசார் இவ்வாறு செய்வதுண்டாம். தமிழகப் போலீசாரும் இதற்கு உடந்தைதான். அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.

அவர்கள் பகுதியில் வின்செண்ட் என்பவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறார். விஜயாவின் அண்ணன் ஏழுமலை அதில் உறுப்பினர். அதன் மூலம் புகார் தந்தி அனுப்பியுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன.
அப்போது இணை ஆட்சியர் ஜவஹர் விசாரித்து அதில் முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை போடச் சொல்லிவிட்டார். இச்சம்பவம் நடந்து 15 நாள்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இந்தச் செய்தி போலீஸ் செய்தி வழியாகத் தினசரி நாளிதழ்களுக்கு வந்தது. அதை வைத்து மணிவண்ணன் எனும் மனித உரிமைப் பத்திரிகையாளர் மூலமாகத் தகவல் வந்தது. அதுவரை இருளர் என்று ஒரு பழங்குடியினர் சாதி இருப்பதே எனக்குத் தெரியாது. அதன் பின்பு பவனந்தி தலைமையில் உண்மையறியும் குழு அமைத்து, வழக்கறிஞர் லூசியானா போன்றோர் அங்கே சென்றோம். அந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இண்டியன் எக்ஸ்பிரஸிலும் தினமணியிலும் மிகப் பெரிய செய்தியாக வெளியிட்டனர்.

அதைத் தொடர்ந்து விஜயாவுடைய அப்பாவைத் திருப்பதி போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த வழக்கைக் கையில் எடுத்தோம். நானும் சிஸ்டர் லூசியானாவும் திருப்பதி போய் ரத்தினம் முலமாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அவரை பெயிலில் எடுத்தோம். இதற்கிடையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் மூலமாக ஆந்திரா போலீஸ் விஜயாவின் அப்பாவைக் கடத்தியது ஹைதராபாத்தில் ஆங்கில நாளிதழில் வெளியானது. இதைப் படித்த இளைஞர் ஒருவர் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனவே விஜயாவின் தந்தையை ஹைதராபாத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களிடம் ஒப்படைத்தனர். அங்கே மனித உரிமைப் போராளி பாலகோபால் இருக்கும் இடத்தில் தங்கியிருந்தோம். ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் இளம் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்துக்கு வழிகாட்ட மூத்த வழக்கறிஞர் சீனிவாசலு என்பவரை நியமித்திருந்தனர். நாங்கள் சென்று கண்ணபிரானைப் பார்த்தோம். அவர் சீனிவாசலுவை அறிமுகப்படுத்தினார். அவர் இவ்வழக்கு குறித்த முன் தயாரிப்புகளோடு இருந்தார். அங்கே அன்று நீதிமன்றப் புறக்கணிப்பு வேறு. எங்களிடம் போதிய பணமும் இல்லை. நாங்கள் தமிழகத்திலிருந்து சென்றிருந்ததால் வழக்கறிஞர் சங்கத்தினரே எங்களுக்குப் போக்குவரத்துக்கென 1,000 ரூபாய் கொடுத்தனர். இந்த வழக்கில் திருப்பதி போலீஸ் விஜயாவின் அப்பாவுக்கு 5,000 ரூபாய் தர வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதன் பின்பு விஜயா மூலமாகக் கிட்டத்தட்ட 16 வழக்குகள் எங்களிடம் வந்தன. அதனால் இவர்களுக்கென்று ஓர் அமைப்பு வேண்டும், அதற்கு ஒரு தலித் தலைமை ஏற்கவேண்டுமென நினைத்தேன். விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த லாரன்ஸை வைத்து அமைப்பை உருவாக்குவதாக ஏற்பாடு. கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை. கூட்டம் திட்டமிட்டபடி கூடியதால் ரத்தினம், சிஸ்டர் லூசியானா ஆகியோர் ஆலோசனைப்படி நானே அந்த அமைப்புக்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று. எனவே 04.08.1996இல் மயிலத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. 01.10.1996இல் இருளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பேரணி நடத்தினோம். வழக்கமான முழக்கங்களுக்குப் பதிலாகப் பழமலய் பாடல் எழுதிப் பாடினார். பல ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்ததுதான் நான் செய்த செயல்.


மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழுமூச்சாகச் செயல்பட வேண்டும் என நினைத்தேன். அதற்குக் குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் நாள் கடந்துவிட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது நல்லதென்று இப்போது நினைக்கிறேன். வேலைகள் செய்வதற்குத் தடையில்லாமல் இருக்கிறது.
தமிழ்மொழிப் பற்றுக் காரணமாக நான் எப்போதுமே பேசியதில்லை. நான் திமுகவில் இருக்கும்போதுதான் அப்படியொரு கருத்து எனக்கு இருந்தது. நான் மார்க்சிய - லெனினிய இயக்கத்துக்கு வந்தபோது அவரவர் தாய்மொழி அவரவருக்குப் பெரிது என்னும் எண்ணம் வந்துவிட்டது.


நமது மொழிக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். அதற்காக நாம் சிறப்பு உரிமை கொண்டாட முடியாது. மொழிப் பிரச்சினையை ஜனநாயக உரிமையாகப் பார்க்கிறேன். என் மொழியில் படிப்பதற்கு எனக்கு எல்லா வாய்ப்பும் இருக்க வேண்டும் என்கிறேன். தமிழக அரசு போடுகிற கடிதம் தமிழில் இருக்க வேண்டாமா?
பதிவு : இன்பா

Thursday, December 17, 2009

அன்புள்ள அப்பாவுக்கு,


"குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப்பொறுத்துக் கொள், பாரதா! ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்" .
(பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14/15 -ஆம் சுலோகம்)


நம்மை மிகவும் நேசிக்கும் ஒருவர், நாம் மிகவும் அறிந்த ஒருவரை வாழ்நாளில் இனி நாம் சந்திக்கவே இயிலாது என்னும் சோகமே மரணம். அந்த வேதனையை, வலியை ஒவ்வொரு மனிதனும் கடந்து போகும் ஒரு சூழல் வருகிறது. பிறக்கும் யாவருக்கும் மரணம் நிச்சியம் என்னும் நிதர்சனம் நமக்கு புரிந்தாலும், மரணம் தரும் வலி தாங்க இயலாத சோகமாகவே இருக்கிறது.
கடந்த 6-12-2009 அன்று இயற்கை எய்திய தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி, தன் மனத்தின் சுமைகளை இங்கே இறக்கி வைக்கிறார் நமது வாசக நண்பரும், கவிஞருமான திரு. லாரன்ஸ்.

கை பற்றி, மெல்லமாய் அழுத்தி, கண்கள் நேருக்கு நேர் சந்தித்து இதை சொல்லி இருக்க வேண்டும். அப்போது சொல்லாமல், என் தந்தை இறந்து அவர் உடல் நடு வீட்டில் கிட்த்தியபோது அழுது கொண்டே ... டாடி ஐ லவ் யூ திரும்ப திரும்ப மனம் சொன்னது.

கண்கள் என் கட்டுப்பாடின்றி கண்ணீர் சிந்தியது.அந்த வெப்ப நீர் பார்வையை மறைத்த்து. வெளி உலக பிரஞ்கை இன்றி எனக்குள் பேசிக் கொண்டு இருந்தேன்.


சாரி டாடி... இன்னும் உங்களை பார்த்திருக்கணுமோ. தவறி விட்டேனோ. ஒரு மனுசனாய் இருக்க வைத்த்தே நீங்கள் தானே. இந்த உடல், உள்ளம், படிப்பு, சோறு, வாழ்க்கை தரம் என எல்லாம் நீங்கள் தந்த்து தானே. நன்றி என வாய் வார்த்தையாய் சொல்லவில்லையோ.நன்றி என எப்படி சொல்வேன், நான் உங்களின் மறு பிம்பம் தானே.

ஏன் அழுகை. ஏன் புலம்பல். ஏன் துயரம். மரணம் தெரியும் தானே.கவிஞனாகவும், தத்துவ சிந்தையும் என்னுள் அனுமதித்த்தால் இந்த துயரம். இரண்டும் இல்லை என்றால் எம்பது வயசு தகப்பன் சாகும் போது சமனம் தானே .ஆறு மாதம் முன்பு விடுப்பு எடுத்து வந்த போது நானாய் நினைத்து கொண்டேன்.

அடுத்த முறை உங்களை உயிருடன் பார்ப்பேனா என கேள்வி கேட்டு. தெரியாது, சரியாய் சொல்லவும் தெரியாது என பதிலும் யோசித்தேனே. அந்த நினைப்பு வந்த்தால், உங்கள் அருகில் அமர்ந்து நிறைய நேரம் பேசினேனே. மெல்ல தோள் அணைத்து உங்கள் மறுப்பையும் மீறி, அருகில் இருந்த பூங்கா சென்று அமர்ந்தோமே. நீண்ட நேரம் உங்களை பேச விட்டு கண்கள் மூடி கேட்டேனே.சுகர் காரணம் காட்டி, பிஸ்கட் தின்னதை அக்கரையாய் சுட்டிக் காட்டிய போது , அவசரக் குடுக்கையாய் அறிவுரை எல்லாம் சொல்லாது, வேறு என்ன ஆசை. எதுவும் சாப்பிடணுமா, எதுவும் வேணுமா, சினிமா போகணுமா, உடுப்பு எதுவும் வேணுமா, என கேட்டேனே.


மெல்லிய வார்த்தையில் உங்கள் வாழ்வு வெற்றிகரமானது. உழைப்பால் முன்னேறி, நல்ல ஒரு குடும்பம் சமைத்த்தை நினைவு கூர்ந்து எல்லாம் நல்லதே என நாம் இருவரும் கருத்தில் இணைந்தோமே.எல்லா கடமையும் நல்ல படியா முடிஞ்சுச்சு, மேல இருக்கிற ஐயா எப்போ கூப்பிட்டாலும் ரைட்டு என குண்டி மண்ண தட்டி விட்டு போக வேண்டியது தான் என நயம்பட சொன்னீர்களே. தூத்துக்குடி காரர் நீங்கள், கடல்கரை மண்ணில் உட்காருவதும், எழுந்து உடைகள் சரி செய்வதும் என் நினைவுக்கு வந்த்தே. வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான் யோசித்தீர்களா.

நீங்கள் வாழ்வை ரசித்தீர்களா, இன்பம் துய்த்தீர்களா. ஐயா கூப்பிட்டா போக வேண்டியது தான் எனும் வார்த்தை பிரயோகத்தில் இறை நம்பிக்கையும், அன்பு கலந்த வாஞ்சையும் தெரிகிறது. இறைவனை காதலனாகவும், வேலைக்காரனாகவும் பார்க்கும் பாரதியின் பக்குவம் இதை சொல்லிக் கொடுத்த்தோ.


மரணம் மனிதனுக்கு முழுதும் புரியாதது. ஓங்கி நிற்கும் குழப்பத்தில் பயமே பிரதானம். வெல்ல முடியாத மரணத்தில் இயலாமையே பல் இளிக்கும். சே என்னடா இது நாமளும் செத்துப் போவோமே என கோபம். ஏனோ தெரியவில்லை, அமைதியாய் அன்பாய்... ஆங்.... தெரியுமப்பா பிறந்தால் இறப்போம் என அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் மரணிக்க கடினம் உள்ளதே இல்லையா?.

தூக்கத்தில் பிரிந்த தங்கள் உயிர், மூடிய போர்வை விலகாத விந்தை, எனக்கு தாங்கள் மனித இயலாமையை மீறியதாய் தோன்றுகிறது. முரண்டு பிடிக்காது, அன்புடன் மரணத்தை முத்தமிட்ட்தாய் தோன்றுகிறது.

அறிவியல், மனிதன் உடம்புதான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என அடம் பிடிக்கும். முதலில் ஒத்து கொள்ளாத மனஇயல் கூட பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து. ஆன்மீகம் ஆசிரமம் கடந்து இன்று ஆஸ்பத்திரியில் நுழைந்து இருக்கிறது. புற்று நோயால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பிராணிக் ஹீலீங், ரெய்க்கி என தனி பிரிவு அமைத்து அப்பல்லோ எனை ஆச்சர்யப்படுத்தியது.


நித்திய வாழ்வு, சொர்க்கத்தில் சுகம் என மதங்கள் எத்தனை மத்தளம் வாசித்தாலும் சராசரி மனிதன் சஞ்சலம் தீரவில்லை. ஆமா..யில்ல என சொல்லிவிட்டு ; இல்ல..... ஆமாம்!!! என சிந்திக்கிறான்.அன்னை இறந்த போது, எனக்கு வாழ்க்கை மேல் ரெளத்திரம். எனை பெற்றவளுக்கு தமிழ் இலக்கியத்தில் அப்படி ஒரு புலமை. சங்க, சமகால இலக்கியத்தில் ஏறக்குறைய எல்லாம் தெரியும். எந்த கடின வார்த்தையாயினும் அர்த்தம் தெரியும். தமிழ், அழிந்து போன கிரந்தம் எல்லாம் தெரியும். கல்வெட்டில் முனைவர் ஆக முயற்சி வேறு. அறைகுறை தமிழ் தெரிந்த நான் வெக்கி தலை குனிந்து ... சே! எப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்குவேன் என ஏக்கப் பார்வை இட வைத்த அன்னை மறைந்த போது. இவ்வளவுதானா. எங்கே அந்த ஞானம், எங்கே அந்த புலமை. என திரும்ப திரும்ப கேள்வி பிறந்து, இது தான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும். எதுக்கு கஷ்டப்படணும் என சிறு குழந்தை போல் திகைத்து நின்றது என் பகுத்தறிவு.எதுவுமே எதற்குமே அர்த்தம் இல்லை என்பதாய் அவசர தீர்மானம் செய்தது.ஆனால் தங்கள் மறைவு எனை சமனமாக்கியது.


இவ்வளவு தாண்டா வாழ்க்கை, பெரிசா அலட்டிக்கிறதோ, கவலைப்படறதோ அவசியமில்லை. என எதிலும் சாராமல் உணர்வுகள் அனாதையாய் இருக்கின்றன.தங்கள் மறைவு எனக்கு மறைமுகமாய் என் சாவு பற்றி பறை அறைகிறது. அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது. என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள் சுவடு தெரியாமல் காணாமல் போயிற்று. என் மரணம் பற்றிய தீர்மானத்தில் வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது. நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.ஐ லவ் யூ டாடி.....
திரு. லாரன்ஸ்,தங்கள் பிரியமான தந்தையின் ஆத்மா அமைதி அடையுமாறு பிராததிக்கிறோம்.

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46) .

தன் தாய் மரணம் அடைந்த போது ஒரு நண்பன் இப்படி சொன்னான். "நான் ஒரு மகனா அவங்களுக்கு நெறைய செய்யனும்ன்ணு நினைச்சு கிட்டு இருந்தேன். ஆனா, இதுவரைக்கும் நான் ஒண்ணுமே செய்யலைன்னு அவங்க போன அப்புறம்தான் புரியுது " .

ஆகவே நண்பர்களே, நம்முடைய பெற்றோர்களுக்கு, அவர்கள் நம்முடன் இருக்கும்போதே நாம் முழுமையான அன்பை தருவோம்.

உணர்வு : லாரன்ஸ்
(கடைத்தெருவின் முதல் விருந்தினர் பதிவு).

Tuesday, December 15, 2009

போர்க்களம் - சினிமா பார்வை


ரகுவரனுக்கு பின் குணசித்திரம் மற்றும் வில்லன் கேரக்டருக்கு வெகு இயல்பாக பொருந்துகிறார் கிஷோர். எந்த பிரச்சினை என்றாலும் அதை நிதானமாக அணுகும் மாறுபட்ட தாதாவாக "பொல்லாதவன்" , கபடி பயிற்சியாளராக "வெண்ணிலா கபடி குழு" என வெவ்வேறு கேரக்டர்களில் தனது அளவான , யதார்த்த நடிப்பின் மூலம் கலக்கி இருந்தார் கிஷோர்.

கிஷோர் முதல் முறையாக கதாநாயகனாக நடிக்கும் "போர்க்களம் " அவரது நடிப்பின் முழு பரிணாமத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கிறேன்.


படத்தின் அறிமுக இயக்குநர் பண்டி சரோ‌ஜ்குமார். இவரது பெயரை போலவே படமும் வித்தியாசமாக இருக்கும் என தெரிகிறது. 24 வயேதே ஆன ஆந்திராவை சேர்ந்த இளைஞர்.தாய்லாந்து தலைநகர் பாங்காங் போய் அங்குள்ள திரைப்படக் கல்லூ‌ரியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர்.

20 வயதில் தான் இயக்கிய குறும்படம் ஒன்றே தனக்கு விசிட்டிங் கார்டாக இருந்தது என்று கூறுகிறார் இயக்குநர்.

வழக்கமாக இல்லாமல் எழுத்து மற்றும் ஷாட் டைரக்ஷன் என குறிப்பிடுகிறார் பண்டி சரோ‌ஜ்குமார். ஒவ்வொரு இயக்குனருக்கும் என்று தனித்துவமான காட்சி அமைப்பு பாணி உண்டு என்று கூறும் இவர், இந்த படம் முழுவதும் வித்தியாசமான காட்சி அமைப்புகள் கொண்டதாக இருக்கும் என்கிறார்.

வழக்கமாக அறிமுக இயக்குநர்கள் கூறுவதை போல தோன்றினாலும், clipings பார்க்கும் போது அவர் சொல்வது சரி என்றே தோன்றுகிறது.

பட காட்சிகளில் நாம் காணும் கலர் மற்றும் லைட்டிங் ரொம்ப புதியதாக இருக்கிறது. டைடானிக் படத்தில் பயன்படுத்த பட்ட தொழில்நுட்பமான 100 அடி உயர STRADA என்னும் crane இதில் தமிழ் சினிமாவில் முதல் முறையாக பயன் படுத்த பட்டு இருக்கிறது.

ஆட்டோகிராஃப் பாணியில் இந்த படத்தில் மூன்று ஒளிப்பதிவாளர்கள். தேவராஜ், மகேந்திரன் மற்றும் தேவா என்ற மூன்று ஒளி கலைஞர்களில் பெரும் பாலான காட்சிகளில் பங்கு பெற்று இருப்பவர் மகேந்திரன்.

காரைக்குடி, திருச்செந்தூர், தென்காசி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, சென்னை, பாண்டிச்சேரி, பாங்காங் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

ஒரு வித்தியாசமான வாள் போன்ற ஆயுதங்கள், இறந்த ஒரு மாட்டின் தலை போன்ற காட்சிப்பின்னணி படம் பற்றிய எதிர்பார்பை தருகின்றன. கலை இயக்குநர் ஆனந்தன். படததோகுப்பு அருண்.

பரணி மினரல்ஸ் பட நிறுவனம் சார்பில் டி.பாஸ்கர்ராவ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்தில் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.அவரோடு ஹீரோயின் கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்மிதா நடிக்க, லால், சத்யன், பிஜுமேனன், சம்பத், சந்தான பாரதி, ராஜேஷ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தி நடிகர் நாயகன் புகழ் டினு ஆனந்த் இந்தப் படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.மேலும், பர்மாவை சேர்ந்த அதீஷ்வர் என்பவர் வில்லனாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் மொத்தம் ஏழு கதாபாத்திரங்கள் நெகடிவ்.

படத்தின் ஹைலைட் சண்டை காட்சிகள். மிக யதார்த்த பாணியில் அமைத்து இருக்கிறார் சூப்பர் சுப்பராயன்.

இந்த படத்தில், தமிழுக்கு முதன் முறையாக இசை அமைக்கிறார் இந்தி இசை அமைப்பாளர் ரோஹித் குல்கார்னி. அனைத்து பாடல்களையும் எழுதி இருப்பவர் நா. முத்துகுமார்.

படத்தில் நான்கு பாடல்கள். ஷான்,நிஷா பாடியிருக்கும் "இந்த பூமியில்" , எஸ்.பி.பி சரண் படியிருக்கும் "காற்றோடு ஒரு தூது" போன்ற பாடல்கள் பரவாயில்லை.கே.கே பாடியிருக்கும் "அறன் திறன்" , கார்த்திக் பாடியிருக்கும் "யாரோ இவன் யாரோ" போன்ற பாடல்கள் ஹிரோ புகழ் பாடுவதாக இருந்தாலும், இசை ஸ்டைல் புதுசு.

"சரித்திரத்தில் ஜெய்ப்பவன் வீரன். அந்த சரித்திரத்தையே ஜெய்ப்பவன்மாவீரன் " என தொடங்கும் படத்தின் தீம் ம்யூஸிக், அதன் கம்போஸிங் வெகு அருமை.

ஒரு தனி மனிதன் ஏழு தீய சக்திகளை , தீய விஷயங்களை எதிர்த்து போராடும் களம் இந்த போர்க்களத்தின் கதை என்கிறார் இயக்குநர்.

"நான் ஜெயிச்சா ஞாபகத்துல இருப்பேன். தோத்தா இதயத்துல இருப்பேன்" என்னும் catchyயான வசனம் படத்தின் caption.

"தமிழ் ரசிகர்கள் புதுமையை ஆத‌ரிப்பவர்கள். தமிழ் சினிமாவுக்கென்று ஒரு இலக்கணம் இருக்கிறது. அந்த இலக்கணத்தை மீறி எடுக்கப்பட்ட படங்களை அவர்கள் வெற்றி பெற செய்திருக்கிறார்கள். என்னுடைய போர்க்களமும் அப்படிப்பட்ட படம்தான்" .என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் பண்டி சரோ‌ஜ்குமார் .

இந்த மாதரி பேண்டசி ஆக்க்ஷன் படங்கள் எல்லா தரப்பையும் சென்று அடையுமா என்று தெரியவில்லை. வெண்ணிலா கபடி குழு, நாடோடிகள் , சமீபத்திய ரேணி குண்டா என நல்ல படங்களை மக்கள் ஏற்று கொண்டு இருப்பது தமிழ் சினிமாவின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அந்த வரிசையில் போர்க்களம் அமைந்து இருந்தால் நிச்சியமாக வெற்றிதான்.

வழக்கமான மசாலா அல்லது பார்முலா படங்களை தவிர்த்து ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து புதிய கதை முயற்சிகளோடு வரும் சரோ‌ஜ்குமார் போன்ற இளம் இயக்குநர்களை வரவேற்ப்போம்.பதிவு : இன்பா

Monday, December 14, 2009

மனிதனை ஆளப்போகும் எறும்புகள்


இந்த மாத துவக்கத்தில் பெய்த புயல் மழையில் என் மாடித் தோட்டம் பாதிப்புக்கு உள்ளாகியது. அதில் வசித்து வந்த ஒன்பது வகை எறும்பு இனங்களின் வாழ்விடங்கள் முற்றிலும் நாசமாகியது.90,000 எறும்புக் குடும்ப உறுப்பினர்கள் அடித்து செல்லப்பட்டனர். கரு முட்டைகள் கூமுட்டைகள் ஆகின.மழை ஓய்ந்த மறுநாள் எஞ்சிய எறும்புகள், மிகத் துடிப்புடன் புதிய புற்றுகள் அமைப்பதில் ஈடுப்பட்டு இருந்தன. மனிதனை போன்று ஒய்ந்து போய்விடவில்லை. அரசு உதவிக்காக காத்திருப்பது போன்றோ, நாட்களை கடத்தவில்லை. உடனடி செயல்பாட்டில் இறங்கிய அதன் உத்வேகத்தை, அதனிடம் கடிபட்ட போது உணர முடிந்தது.

எறும்புகள் இவ்வுலகிற்கு வந்து நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. வெற்றி கொண்ட அழியா பூச்சி இனம், என்ற வரிசையில் இது இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடம் பெற்றது கரப்பான் பூச்சி. 20,000 வகை உண்டு என்றும் இது அறுதி இடாத தகவல் என்று அறிவியல் கூறுகிறது. கும்பல் கும்பலாக வாழும் இவை, தலை சிறந்த சமூக அமைப்பின் அடையாளம். ஒரு கும்பலில் ஆண், ராணி, பெண் உழைப்பாளிகள் என கட்டாயம் மூன்று வகை உண்டு. பெண் உழைப்பாளிகளில் பல வேலைக்கார எறும்புகளாகவும் ,சில போர் புரியும் ராணுவ வீரர்களாகவும் செயல் படும் உட்பிரிவு உண்டு.


கும்பலாக வாழும் இவை பல்வேறு வகை எறும்பினங்களையும் கூட்டாக சேர்த்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் சிறு குழுக்களை ஏற்படுத்தி அரசாளுகின்றன. அவை வசிக்க தங்களுக்கென தனி வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. இவை புற்றுகள் என அழைக்கப் படும். இப்புற்றுகள் சகதி மண், களிமண் கொண்டு அமைக்கப்படும். வேறு சில வகை எறும்புகள் சிறு குச்சி, களிமண் உருண்டை கொண்டு பூசி கட்டும். அமேசான் காடுகளில் வாழும் எறும்புகள், 15 அடி உயர மலை போன்ற அமைப்புடைய புற்றுகளை கட்டுகின்றன.

இது மழையாலோ ,காற்றாலோ ,வேறு விலங்குகளாலோ பாதிப்புக்கு உள்ளாகாதவாறு இறுக்கம் கொண்டிருக்கும். ராணுவ கேந்திர மையம் போல அமையப் பெற்றிருக்கும் இப்புற்றுகளில் பல சுரங்க வழிகள், அறைகள் உண்டு.குழந்தைகளை பேணிக் காக்க, உணவு சேமித்து பாதுகாக்க, ஓய்வெடுக்க என பல அறைகள் ஒதுக்கப் பட்டு அறிவியல் நுட்பத்தோடும், கலை நயத்தோடும் அமையப் பெற்றிருக்கும்.இவ்வகையான கட்டமைப்பை வேலைக்கார எறும்புகள் செய்கின்றன. இவைகளுக்கு உதவியாக படை வீரர்கள் உதவி புரிகின்றன.


ஒரு சோகமான விஷயம் என்னவெனில் இவ்வகை எறும்புகளுக்கு என எந்த அறையும் ஒதுக்கப் படுவதில்லை. ஓய்வெடுக்க கட்டை இடுக்குகளையும், சுவரின் விரிசல்களையும் இவை தேர்ந்தெடுக்கின்றன. கூட்டமாக சென்று வேட்டையாடி உணவு சேமிப்பதும் , புதிய வாழிடங்களை உருவாக்கி தருவதிலும், ஈடுபடும் இவை எப்போதும் தனித்து இயங்குவதே கிடையாது. சில சந்தர்பங்களில் மாற்று புற்றுகளுக்கு சென்று, வேட்டையாடி கரு முட்டைகளை திருடி வந்து பேணிக்காக்கின்றன. அவற்றிலிருந்து வரும் எறும்புகள், இளமை பருவம் முதல் அடிமை சிந்தனையுடன் வளர்க்கப் படுகிறது. முழு வளர்ச்சி அடைந்த பிறகு சேவகம் புருவதில் தங்கள் வாழ் நாளை கழிக்கின்றன.

கும்பலில் உள்ள பெண் எறும்பே ராணி எறும்பு .கரையான், தேனி போன்று இங்கு உயிரியல் அந்தஸ்து காணப்படுகிறது. ஆணின் முக்கிய வேலை, உடலுறவு கொள்ளுதல்.அதிக சக்தி விரயம் ஆவதால் இவை பெரும்பாலும் 2 வாரங்களில் இறந்து விடுகின்றன. பெண் எறும்பு நீண்ட நாட்கள் உயிர் வாழும். ஒரு முறை பருவத்திற்கு வந்து பாலுறவு கொண்டவுடன், முட்டையிடுவதே இதன் பிரதான வேலை.


தன் வாழ்நாள் முழுதும் லட்சக் கணக்கான முட்டையிடும். ராணி இவ்வாறிருக்க பிற எறும்புகள் தங்கள் வேலைகளை யாருடைய கட்டளையும் இன்றி நிறைவேற்றும். பிற பூச்சி இனங்களை போன்று இவற்றிற்க்கும் 4 பருவ நிலை உண்டு. முட்டை , லார்வா, கூட்டுப் புழு, எறும்பு. ஆணோடு உறவு கொள்ள இவை வான் வெளியை தேர்ந்தெடுக்கும். பெரும்பாலும் வெயில் காலங்களிலும், இள வேனிற் காலங்களிலும் வானில் பறந்த படி இசையமைத்து ,நடனமாடி உறவு கொள்கின்றன. உறவானது சில நிமிடங்களே நீடிக்கும் என்றாலும், உறவுக்கான காதல் விளையாட்டு பல மணிநேரம் நீடிக்கும். பெண் பருவத்திற்கு வரும்போது இயற்கையின் கொடையாக இறக்கைகள் முளைக்கின்றன.உறவு முடிந்த உடன் பெண் தனது இறக்கைகளை உதிர்த்துவிடும்.


முட்டையில் இருந்து வெளிவரும் அனைத்து பெண் எறும்புகளும் பருவமடைந்து, கருவுறுவது கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகை எறும்புகள் மட்டுமே கருவுறுகிறது. பதவிச் சண்டை என வரும்போது அது பெரும் பாலும் தாய்க்கும், மகளுக்குமே நிகழுகிறது. சில வேளைகளில் தாயானது விரட்டி அடிக்கப்படும் மகளுக்கும் சில நேரம் இப்படி நேரும் . பிரிந்த பெண்ணானது தனியே சென்று தனக்கென கும்பலை உருவாக்கி அரசாள்கிறது.


எறும்புகள் உடல் மூன்று பகுதிகள் கொண்டது. தலை, உடல், மற்றும் பின் பகுதி.இவற்றிர்க்கு ஆறு கால்களும் நடுப்பகுதியும் உடல் எனப்படும். தலைப்பகுதியில் வாய், கண் மற்றும் உணர்வுக் குழல்கள் உண்டு.இதன் கண்கள் பல லென்சுகளை கொண்டது .எனவே இவற்றால் ஒரு பொருளை பல கோணங்களிலும் ஆராய முடியும். வாய் பகுதி கூரிய ரம்பம் போன்று இருக்கும் . இவற்றை கொண்டு இலைகளை கவ்வுவதும், துண்டாக்கி புற்றுக்கு கொண்டு செல்லவும் முடிகிறது. தீ எறும்புகள் ,இவ்வகையான செயல்களில் அதிகம் ஈடுபடும். உணர்வுக் குழல் மூலம் ,சுவை, மணம், சத்தம் போன்றவற்றை உணர முடிகிறது.


பின் பகுதியில் வயிறும், மலப் புழையும் உண்டு. பல எறும்பு வகைகளுக்கு இங்கு தான் விஷ நீர் சுரப்பியும் , கொடுக்கும் உண்டு. இதை கொண்டு தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட உயிரினத்தையும் வீழ்த்த முடியும். எறும்பிற்கு குடல் கிடையாது. பெரும்பாலும் உறிஞ்சி உண்ணுகின்றன. கர்ப்ப காலத்தில் மட்டும் ,பெண் எறும்புகள் புரதம் கலந்த உணவை உண்ணுகின்றன. பிற வகை எறும்புகள் "சுக்ரோஸ்" கலந்த இனிப்பு உணவையே எடுத்துக் கொள்ளும். நீரை பருகும் இவை பனி நீரை அதிகம் விரும்பிகின்றன.தன் உடல் முழுதும் காணப்படும் துளைகள் மூலமே இவை ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன்-டை- ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.ரத்த அணுக்கள் கிடையாது. எனவே இவைகளின் ரத்தம் நிறமற்றவை.
இதயம் நீண்ட குழாய் வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் நீரே ரத்தம் என்கிறார்கள். இது மூளையிலிருந்து வெளியேறி இதயத்திற்கு செல்லும். நரம்பு மண்டலம் மூலமாக மீண்டும் மூளைக்கே சென்றுவிடும். இவ்வகை நரம்பு மண்டல அமைப்பு மனித நரம்பு மண்டலத்தை ஒத்திருக்கிறது.


தங்களுக்குள் நிகழும் உரையாடலையும், கருத்து வெளிப்பாடையும் ,உணர்வுக் குழல்கள் மூலம் வெளிப்படுத்துவதோடல்லாமல் தொடுதல், தடவுதல், அணைத்தல் என அங்க மொழியையும் பயன் படுத்துகின்றன.இம் மொழி தன் கூட்டத்தை சார்த்த உறுப்பினர்களை அடையாளம் காணவும் உதுவுகிறது.இதை தவிர "பிரமோன்ஸ் " என்ற நீரையும் பீய்ச்சி விட்டு செல்லும். இதை நுகர்ந்த வாறு அந்த எறும்பை பிற எறும்புகள் பின் தொடரும். பிற இனங்கள் விலகிக் கொள்ளும்.மீறி நுழைபவர்களும், வழிதவறியவர்களும் கொல்லப் படுவார்கள்.


அமெரிக்கா, உள்ளிட்ட ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் இவற்றை எப்படி அழிக்கலாம் என பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அவ்வாறில்லை .எனினும் பல வேதியியல் பொருட்கள் கொல்வதற்கு பயன் டுத்தப்படுகின்றன.

ராகுல சாங்கிருத்தியாயன், தனது பயண குறிப்பேட்டில் மனித சமுதாயம் கம்யூன் அமைப்பு மூலமே வளர்ச்சி அடைந்து ஆளும் தன்மையை பெற்றிருக்கிறது.இவ்வமைப்பு உடையும் போது அவன் அழிவும் துவங்குகிறது என்கிறார். மனிதன் கைவிட்ட நிலையில் யானை உள்ளிட்ட பேருயிர்களும் ,எறும்பு போன்ற சிற்றுயிர்களும், இவ்வமைப்பை மையமாக கொண்டே வாழந்து வருகின்றன.அவை நம்மை ஆளும் நாள் வருமேயானால்....?

கற்பனை செய்து பாருங்கள்!


கடைக்காரர் கமெண்ட்:
எறும்புங்கள பாக்கும்போது இத்தனை பெரிய மனிதனுக்கு இத்தனை சிறிய அறிவு இருக்கு பாட்டு ஞாபகம் வருதுஙக.


(நன்றி :எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா,உயிர்மை)

படங்கள்,பதிவு : இன்பா

Friday, December 11, 2009

தொலைக்காட்சி பெட்டிகளில் தொலைந்த தமிழ் இனம்


"உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம்.
தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த கட்டுரையை இங்கே அப்படியே தருகிறேன்.

பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும்,அதிலும் முன்னணில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.

தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில்.

பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.

சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது,உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.

"ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம்.

டிவி சேனல்கள்,இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும்,தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும்,வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.

அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள்.

சமூகத்தில் மாற்றங்களும்,இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்,
தவறான வழிகளில் செல்வதாகவும்.சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுற்றத்தோடும்,உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும்,இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள்.

இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிடஅதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர்.

இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.

உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.
(நன்றி : தினமணி)

இன்று நடனம் என்ற பெயரில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாச கூத்துக்கள் அரங்கற்ற பட்டு வருகின்றன. குடிப்பதும், கள்ள உறவுகளும் இன்று வரும் மெகா தொடர்களில் சகஜம். தங்கள் வீட்டு குழந்தைகளும் டிவி பார்க்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த டிவி சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு இல்லாதது ஏன்?

சினிமாவை போலவே, சின்ன திரைக்கு எப்போது, எந்த அரசு தணிக்கை கொண்டு வர போகிறது?

கடைக்காரர் கமெண்ட்:
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, இலவசமா வீட்டுக்கு வீடு டிவி தரும் அவலமும் , அதுக்காகவே ஒட்டு போட்ட ஜனங்களும் நம்ம
தமிழ் நாட்ட தவிர வேற எங்க உண்டுங்க?

பதிவு : இன்பா

Thursday, December 10, 2009

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்.

" தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்ய பட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.

ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.
"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.

நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?கடைக்காரர் கமெண்ட்:
இது எங்க கடைத்தெருவுல 50 ஆவது சிறப்பு பதிவு. வருகை தரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்க நன்றியை தெரிவித்து கொள்கிறாம். தொடர்ந்து ஆதரவு தரும்படி அன்பொடு கேட்டுக்கிறோம்.


டிசம்பர் 12 அன்று பிறந்த நாள் காணும் ரஜினி அவர்களுக்கு எங்களின் நல்வாழ்த்துக்கள்
பதிவு : இன்பா

Monday, December 7, 2009

நாட்டுப்புற கலைஞர்கள் - ஒரு ஒடுக்கப்பட்ட இனம்

திருச்சியில் ஒரு நண்பனை பார்க்க சென்று இருந்தபோது, பக்கத்தில் ஒரு ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா. இரவில் கரகாட்ட நிகழ்ச்சி என்று என் நண்பன் அழைத்தவுடன், ஒரு நல்ல கலை நிகழ்வை காண ஆவலுடன் சென்றேன்.

நிகழ்ச்சி தொடங்கும் முன் அந்த கரகாட்ட குழுவை சேர்ந்த பெண்கள் ஒரு கடைக்கு செல்வதை பார்த்தேன். மிக மோசமான ஆடை, அளவுக்கு அதிகமான மேக்கப். வாயில் சரளமான கெட்ட வார்த்தைகள். ஒவ்வொரு பெண்களும் ஆளுக்கு இரண்டு பான்பராக் வாங்கி, அலட்சியமாய் வாயில் போட்டதை கண்டு அதிர்ந்து போனேன்.

உடனே நாங்கள் அங்கு இருந்து வெளியேறினோம்.அதன் பின் கரகாட்டம் என்ற பெயரில் அங்கு அரங்கெறியது ரெகார்ட் டான்ஸ் போன்ற ஒரு ஆபாச நடனம் என்று அறிந்தேன்.

இத்தனைக்கும் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு காலத்தில் பகழ் பெற்று விளங்கிய கரகாட்ட குழுவின் வழி வந்தவர்கள். என்று தெரிந்து கொண்டபோது , மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு பாரம்பரியம் மிக்க , பண்பாடு மிக்க மண்ணின் கலை இப்படி சீர் அழிந்ததமைக்கு யார் காரணம்?

புனிதமான கரகாட்டம் , ரெகார்ட் டான்ஸ் என ஆனது ஏன்?
"குறைந்த பட்சம் இந்த டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்ததே. எதாவது புது பட சிடி போட்டு இருந்தா இந்த வாய்ப்பு அவங்களுக்கு கூட வந்து இருக்காது " என்றான் என் நண்பன்.

எங்கள் கடலூர் மாவட்டத்தில் கிராம்புறங்களில் தோல்பாவை கூத்து முன்பு மிக பிரபலம் "அழகி" படத்தில் தங்கர் பச்சான் ஒரு பாடலில் பயன் படுத்தி இருப்பார். ஆனால் இன்று மாவட்டத்தில் தோல் பாவை கலைஞர் ஒருவர் கூட இல்லை.


"கலையை எப்போதும் கலைஞன் மட்டுமே முடிவு செய்வதில்லை. ரசிகனும் சேர்ந்தே முடிவு செய்கிறான். இன்றைக்கும் என்னால் விடிய விடிய கச்சேரி செய்யமுடியும். ஆனால் பார்க்க யார் இருக்கிறார்கள்?

காலம் மாறிப்போய்விட்டது. அதற்கேற்ப நாங்களும் மாறித்தானே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் நாங்களும் அழியவேண்டும். இந்தக்கலையும் அழியவேண்டும். பாவைக்கூத்து என்பது பின்பாட்டும் உரையாடலும் மாறி மாறி மணிக்கணக்காக செய்யும் வேலை. எனக்கு 5,000 பாடல்கள் வரை மனப்பாடம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை. நிலைமை ஒவ்வொருநாளும் மோசமாகிக்கொண்டே போட்க்கொண்டிருக்கிறது. எனக்குத்தெரிந்த வித்தையில் பாதியே என் மகனுக்குத்தெரியும். இந்த மண்ணின் கலைகள் எல்லாம் வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இரவெல்லாம் கூத்து நடத்திய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் இரண்டுமணிநேரத்துக்குள் முடித்துவிடு என்கிறார்கள். பக்த பிரகலாதன் கதையில் ரஜனி, கமல் எல்லாம் கலந்து காமெடி செய்யச்சொல்லுகிறார்கள்." என்று தெரிவித்து இருந்தார் பாவைக்கூத்துக்கலைஞர் கும்பகோணம் சங்கரநாதன்.

தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப் பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம்,கணியான் கூத்து, வில்லுப் பாட்டு போன்றவை கதை தொடர்புடைய கலைகள்

கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்,தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம் . போன்றவை கதை தொடர்பு அற்ற கலைகள்.

கதை தொடர்புடைய கலைகளில் வில்லுப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, இலாவணி ஆகியவை பாடல் உள்ள கலைகள். ஒயிலாட்டம், சேவையாட்டம் ஆகியவை ஆடலொடு பாடல் உள்ள கலைகள். தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், இராஜாராணி ஆட்டம் ஆகியவை ஆடல்,பாடல்,உரையாடல் உள்ளவை.

கதை தொடர்பு அற்ற கலைகளில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம்,தப்பாட்டம், தேவராட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம் ஆகியவை ஆடல் உள்ளவை. கோலாட்டம், சக்கையாட்டம், கைச்சிலம்பாட்டம், கழியல் ஆட்டம் ஆகியவை ஆடலொடு பாடல் உள்ள கலைகள்.குறவன் குறத்தி ஆட்டம் ஆடல்,பாடல்,உரையாடல் உள்ள கலை .

இத்தனை நாட்டுப்புற கலைகளில் இன்று எத்தனை கலைகள் இருக்கின்றன? இந்த கலைகளில் ஈடுபட்ட கலைஞர்கள் என்று அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்கிறார்கள்? நமது அரசு என்ன செய்து இருக்கிறது அல்லது செய்ய போகிறது?

தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது.
இந்த அரசாணைப்படி நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

"இவ்வாரியத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது முடிவடையாத கலைஞர்கள் ரூ. 100 பதிவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளவும், ஆண்டுதோறும் ஜனவரி 31-ம் தேதிக்குள் ரூ. 10 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்ய மாவட்ட கலைமன்றத்தால் கலைஞர்களுக்கான அடையாள அட்டை நகல் அல்லது இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை நகலை இணைத்து பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்த அடையாள அட்டை பெறாத கலைஞர்கள் கிராம நிர்வாக அலுவலர் அல்லது அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவரிடமிருந்து, தாங்கள் கலைஞர் என்பதற்காக பெறப்பட்ட சான்றிதழ் அல்லது தொடர்புடைய சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பிலிருந்து மேற்படிப்பு வரையிலும் ரூ.1000 முதல் ரூ.6000-ம் வரையும், திருமண உதவித் தொகை ரூ.2000, மூக்கு கண்ணாடி உதவித் தொகை ரூ. 500, மகப்பேறு உதவித் தொகை ரூ.6000, இயற்கை ஈமச்சடங்கு நிதியுதவி ரூ. 17 ஆயிரம், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக புதுப்பித்து இருந்தால் ரூ. 300 ஓய்வூதியம் வழங்கப்படும்.

நிகழ்த்தப்படும் நாட்டுப்புற கலைகளில் இன்றளவும் மக்களால் போற்றி பாதுகாத்து வரும் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், சிலம்ப ஆட்டம், தப்பாட்டம், புலியாட்டம், மேடை நாடகம், மயில் ஆட்டம். தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புறப்பாட்டு மற்றும் ஆலி ஆட்டம் முதலிய கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

மேலும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தவாரிய உறுப்பினர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்த வாரியத்தில் இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத கலைஞர்கள் உறுப்பினர்களாகி நல உதவிகள் பெறலாம்". என்கிறது அரசு.

இவையல்லாம் போதுமா இந்த கலைகளை வாழ வைக்க?

ஒரு சமயம் பெங்களூர் கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நமது நாட்டுப்புற கலைஞர்களை அழைத்து வர வந்த வாகனம் லாரீ என்கிறார் தஞ்சை தமிழ் பல்கலை கழக நாடக துறையின் தலைவராக இருந்த முனைவர் ராமசாமி.

"நாட்டுப்புற கலைஞர்களை தாழ்த்தபட்ட அல்லது ஒடுக்கபட்ட இனமாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தபட்ட, ஒடுக்கபட்ட என்னும் போது அங்கே அரசியல் வந்து விடுகிறது. அப்போதுதான் இந்த கலைஞர்களுக்கு விடிவு பிறக்கும் " என்கிறார் முனைவர் ராமசாமி.

கல்லூரி, பல்கலை கழகங்களில் நாட்டுப்புற கலைகளை பாடங்களாக கொண்டுவந்து, அங்கு கற்று தரும் வாய்ப்பை சமகால நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தை இந்த கலைகள் மீது திருப்பி, அவர்களது வேலை வாய்ப்புகளுக்கு உததிரவாதம் தரவேண்டும். செய்யுமா நம் அரசு?

கடைக்காரர் கமெண்ட்:பரத நாட்டியம் ஆடுவதையும், கர்நாடக சங்கீதம் படிக்கிறததையும் கவுரவமா நினைக்கிறவங்க நம்ம தமிழ் மண்ணொட கலைகளை விரும்பாதது ஏன்னு தெரியல.


பதிவு : இன்பா

Thursday, December 3, 2009

ஆஸ்கார் வென்ற "பிங்கி ஸ்மைல்" - குறும்படம்


பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது.

இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள்.

அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.
(கட்டுரை : திரு.சுப்ரபாரதிமணியன், நன்றி : உயிர்மை)

 
Follow @kadaitheru