Sunday, January 29, 2012

'நண்பனை' 'வேட்டை' ஆடிய லிங்குசாமி



'இந்தியாவின் ஸ்பீல்பெர்க்' என்று அழைக்கப்படும் இயக்குனர் ஷங்கர் - இளைய தளபதி விஜய் - ஹாரிஸ் ஜெயராஜ் என்று கூட்டணி, சன் உட்பட மீடியாக்களின் ஆதரவு, பாதுகாப்பாக ஏற்கனவே இந்தியில் வெளியாக மெகா ஹிட்டான படத்தின் ரீமேக்.. எக்கச்சக்க எதிர்ப்பார்ப்பு...இப்படி வெளிவந்த படம்தான் "நண்பன்".

ஆனால், படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றி பெற்றதா?? என்றால் பதில்....சான்ஸ் இல்லை என்பதுதான். ஏ சென்டர்களை தவிர தமிழகம் எங்கும் படம் வெளியிடப்பட்ட திரை அரங்குகளில் 'ஈ' ஒட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதே கண்கூடு.

ஆனந்த விகடன் போன்ற பெரிய பத்திரிக்கைகள் எல்லாம் 'ஷங்கர்' என்ற இமேஜிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வேட்டைக்கு இரண்டாம் இடம் கொடுத்து இருக்கின்றனர்.

'நண்பன்' ஒரு நல்ல படம்தான் என்றாலும் திரைக்கதையின் நிதான ஓட்டத்தால் கமர்சியல் வெற்றி பெற முடியவில்லை என்று கூறலாம். பார்த்தவர்கள் எல்லாம் நல்ல கருத்துக்கள் சொல்லி இருப்பதால் 'ஆகா' வென புகழ்ந்தாலும்,வசூலில் 'நண்பனை' ஓவர்டேக் செய்துவிட்டது நண்பன் வெளியான அதே பொங்கல் அன்று வெளிவந்த "வேட்டை."


ஏற்கனவே நாம் பார்த்த ரன் மற்றும் சண்டைகோழி படங்களின் சாயலோடு இருக்கும் படம்தான் "வேட்டை" என்றாலும், படத்தின் வெற்றிக்கு காரணம் ...லிங்குசாமிக்கே உரித்தான 'குடும்ப' டச்களோடு இருக்கும் விறுவிறு திரைக்கதை.

வேட்டை வெளியிடப்பட்ட திரை அரங்குகளில் மக்கள் குடும்ப சகிதம் இன்னமும் நிற்கிறார்கள்.

'நண்பன்' போன்று ஒரு மெகா கூட்டணி படம் வெளிவரும் அதே நாளில் "வேட்டையை" வெளியிட எப்படி துணிச்சல் வந்தது?

"ஷங்கர் என் நண்பர். அதே சமயம் நான் என் கதை மீது மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளேன்" என்று சொன்னார் இயக்குனர் லிங்குசாமி.



அந்த நம்பிக்கைக்கு மக்கள் கொடுத்த வெற்றிதான் "வேட்டை" படத்தின் வசூல் வேட்டை.

'ஒய் தி கொலைவெறி' - ஒரு ஆராய்ச்சி(?) கட்டுரை.


அபத்தமான, அர்த்தமற்ற பாட்டு என்று அதைப் பாடியவரே ஒப்புக்கொள்கிறார். என்ன ராகம்? யாருக்குத் தெரியும்? எங்கள் யாருக்கும் முறைப்படி இசைப் பயிற்சி இல்லை என்கிறார் வெள்ளையாக சிரித்தபடி.

மெட்டை ஒரு இளைஞன் போட்டான், அதற்கு இசைவாக மனத்தில் தோன்றிய வார்த்தைகளையெல்லாம் கல்லூரி மாணவர்கள் பேசுவதுபோல ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்லிஷில் ஒரு காதல் பாடல்.

தாபம் நிறைந்த பாடல். காதலியால் ஏமாற்றப்பட்ட காதலன். கையிலே க்ளாஸூ, க்ளாஸ்லே ஸ்காட்ச்சு என்று அலைபவன். வார்த்தைகள் முக்கியமில்லை. மொழியும் முக்கியமில்லை. மெட்டும் ஒலியும் தாளமுமே போதும், உலக இளைஞர்களை இணைக்க. விளையாட்டாக உருவான ஒரு பாடல் உலகெங்கும் ஆட்டம் போடுகிறது.

சீனர்களையும் ஜப்பானியர்களையும் ஒய் திஸ் கொலைவேறி டீ என்று பாடவைக்கிறது. யூ ட்யூபில் லட்சக்கணக்கானவர்கள் வயது பேதமில்லாமல் அதை டவுன் லோட் செய்து பாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அமிதாப்பச்சனும் க்ரிக்கெட் வீரர்களும் அதைப் பாராட்டுகிறார்கள். இசை அமைத்த இளைஞர்கள் இதன் வெற்றி எங்களுக்கே ஆச்சரியம் என்று அவை அடக்கத்துடன் சிரிக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆங்கில சானலும் அவர்களைப் பேட்டி எடுக்கும்போது அழகான ஆங்கிலத்தில் புத்திசாலித்தனமாக, கொஞ்சமும் பாசாங்குத்தனம் இல்லாமல் அமரிக்கையாகப் பேசுகிறார்கள்.

ஜாவேத் அக்தர் போன்ற ஆசார சீலர்கள், இது இசைக்கு நேர்ந்த இழுக்கு. இசையமைப்பாளர்களுக்கு அவமதிப்பு என்கிறார். இத்தனை அபத்தமான ஒரு பாடலைத் தான் கேட்டதே இல்லை என்கிறார்.

பள்ளியில் ஆசிரியை வராத சமயத்தில் சிறுவர் சிறுமியர் இந்தப் பாடலைப் பாடிக்கொண்டு இருப்பதாக ஆசிரியைகள் கவலைப்படுகிறார்கள். இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கண்டிக்கிறார்கள். கொலைவெறி என்கிற சொல் அவர்களை அச்சுறுத்துகிறது. குழந்தைகளுக்கு அதன் அர்த்தம்கூட தெரிந்திராது.

எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இது கிட்டத்தட்ட தாலிபான் கண்ணோட்டம். இசை யாருக்கு சொந்தம்? கவித்துவம் மிக்க வார்த்தைகளே இசைக்கு உகந்தவை என்பதும் குழந்தைகளுக்கு நீதி புகட்டும் இசையே கற்பிக்கப்படவேண்டும் என்பதும் ஒரு வகையில் அடிப்படைவாதம்.

ஜேக் அண்ட் ஜில் பாடலுக்கு என்ன அர்த்தம்? அதைப் பாடுவதால் சிறுவர்களின் அறிவு எந்த வகையில் விசாலமாகும்? இங்கிலி பிங்கிலி மைனமோவுக்கு என்ன அர்த்தம்? மெட்டும் தாளமுமே பிரபஞ்சம் தோன்றிய நாளிலிருந்து செவிப்புலன்களை உயிர்ப்புடன் வைத்திருப்பவை. மனித மனத்தை இளக்குபவை. சமத்துவ உணர்வை சிலிர்த்தெழுப்புபவை. பீட்டில்ஸ் அலை எழுந்தபோதும் மைக்கேல் ஜாக்ஸன் வெறியூட்டியபோதும் இப்படித்தான் விமர்சனங்கள் எழுந்தன. கலாச்சார அழிவின் சின்னங்கள் என்றார்கள்.

ஒய் திஸ் கொலைவெறி ஓர் அர்த்தமற்ற அபத்தப் பாடல் - சந்தேகமில்லை. ஆனால் வெளிப்பட்ட விநாடியிலிருந்து மொழி புரியாத லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது என்றால் ஒன்றை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இசைக்கு மொழியில்லை. எல்லைகள் இல்லை. வரம்புகள் இல்லை. இலக்கணம் கூட இல்லை. அபத்தமோ, பிதற்றலோ அதை ரசித்து வெள்ளை மனத்தோடு எல்லோரும் தாளம் போடுகிறார்கள் என்றால் அதை விமர்சிக்கும் தகுதி நமக்கு இல்லை.

இப்படிப்பட்ட ஒரு தெனாவட்டான ஒரு பாடல் எப்படி உலக மாந்தர்களை இணைத்திருக்கிறது என்று எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. கட்டுகளைத் தளர்த்தவேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதன் அடையாளமாகிவிட்டது -ஒய் திஸ் கொலைவெறி டீ.

- எழுத்தாளர் வாஸந்தி. (நன்றி : உயிர்மை பதிப்பகம்)

ஒய் திஸ் கொலைவெறி டீ :


உலகம் எங்கும் இந்த பாடல் மெகா ஹிட்டாக நான் அறிந்தவரை முக்கிய காரணங்கள் பின்வருமாறு.

படம் வெளிவரும் முன்பே ' 3 ' படத்தின் பாடலாக இன்டர்நெட்டில் வெளியிடப்பட்ட இந்த பாடல், படக்காட்சிகளாக இல்லாமல் பாடல் பதிவு செய்யும் விதத்தை காட்டிய புதுமை முயற்சி.

முழுக்க முழுக்க வசன நடையில், தங்லிஷில் எழுதப்பட்ட படால்வரிகள் மற்றும் தனுஷின் புலம்பல்தன்மை கொண்ட குரல்.

ரஜினிகாந்தின் மகள் மற்றும் படத்தின் இயக்குனர் ஐஸ்வரியா தனுஷின் மார்கெட்டிங். இதே பாடலை நவீன் என்ற சிறுவனை வைத்து பாடல் வரிகளை கொஞ்சம் மாற்றி குழந்தைகளிடம் கொண்டு சென்றது போன்றவையே.

தனுஷின் போட்டியாளாரான் சிம்பு, இந்த 'கொலைவெறி' பாடலுக்கு போட்டியாக வெளியிட்ட 'லவ் ஆன்தம்' இந்த பாடலின் ஹிட்சுக்கு அருகே கூட நெருங்கவில்லை.

காரணம், 'கொலைவெறி' ப்ரோமோ பாடலாக இணையத்தில் வெளியிடப்பட்ட முதல் முயற்சி. இனி, இதே ' 3 ' கூட்டணி நினைத்தாலும் இனி 'கொலைவெறி' பாடல் போன்று இன்னொரு வெற்றியை பெற முடியாது என்பதே நிதர்சனம்.

-இன்பா

Sunday, January 22, 2012

பில்லா 2 - இயக்குனர் சக்ரியின் விசிடிங் கார்டு


கடந்த 2011 ஆம் ஆண்டின் நம்பர் ஒன் வெற்றி படமாக அமைந்த "மங்காத்தா" வை தொடர்ந்து வெளி வர இருக்கும் தலயின் 51 வது படமான பில்லா 2 பெரும் எதிர்பார்ப்பில் இருப்பதோடு,சுமார் 5 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு உரிமையை பெற்று இருக்கிறது G.K Media என்கிற அமெரிக்க நிறுவனம்.


கமலின் முழு கட்டுப்பாட்டில் இருந்த 'உன்னை போல் ஒருவன்' படத்தை இயக்கினாலும், என்னை பொறுத்தவரை சக்ரி டோலேடி அவர்களுக்கு முழு சுதந்திரத்துடன் பணியாற்றிவரும் "பில்லா 2 " தான் முதல் படம்.

"II" மட்டுமே தோன்றும் ஒரு லோகோவை முதல் விளம்பர போஸ்டராக போட்டு, அனைவருக்கும் 'பில்லா 2' என கொண்டு சென்றது சக்ரிக்கு ஒரு விசிடிங் கார்டு என்று சொல்லலாம்.



முதல் பாகத்தில் மிகவும் பிரபலமான தீம் இசையை பயன்படுத்தாமல், பில்லாவின் இரண்டாம் பாகத்திற்கு தனிப்பட்ட தீம் இசையை உருவாக்கி வருவதாக கூறி இருக்கிறார் அஜித்தின் லக்கி இசை அமைப்பாளர் யுவன். அடுத்த அஜித்தின் இரண்டு படங்களுக்கும் இவரே இசை அமைப்பாளர் என்றும் தெரிகிறது.

படத்தின் ஒரு ப்ரோமோ பாடலை இணையத்தில் வெளியிட்டு மற்ற நடிகர்கள் விளம்பரத்திற்கு படாத பாடு பட்டு வரும் இன்றைய டிரெண்டில், மூன்றே மூன்று போஸ்டர்களில் பெரும் எதிர்ப்பார்ப்பை படத்திற்கு கொண்டு வர இயலும் என்றால், அது தலைவர் ரஜினிக்கு பின் தலயால் மட்டுமே சாத்தியம். உதா பில்லா 2 படத்தின் ஸ்டில்கள்.

"பில்லா 2 ஸ்டில்களை பார்த்த பின் படம் வெளிவரும் வரை கட்டுபடுத்திக்கொண்டு காத்திருக்க முடியாது என்று தோன்றுகிறது" என்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

அது.....


-இன்பா

காமம் போற்றும் பெண் கவிஞர்கள்


"எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து கவனம் எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் சமிபத்தில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

பெண் சிலந்திப்பூச்சியின் வீடு

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

நிலவில் துளையிட்ட ராட்சத முனையை
மலைமுகட்டில் இழுத்துக்கட்டி
முடிகிறாள் மறுமுனையை

முதலையின் தருணக் காத்திருப்பில்
கோடித் தாபங்களாய் வலை விரித்திருக்கிறாள்

வெறும் கோதுகளாகிய பிற பூச்சிகளும்
ஆண் சிலந்திகளின் இறந்த உறுப்புகளும்
பெண் சிலந்தியின் சிறைவாசலில் எறியப்பட்டிருக்க

கனவின் துவாரங்கள் வழி
சொட்டித் தேங்கிய
காமக் கடல் அலைகள் பாய்கின்றது
சிலந்தி வயிற்றினுள்

சிலந்திப் பெண்ணிலிருந்து தோன்றி
நீளத் தொடங்குகிற நூலாம்படைகள்
மிதமிஞ்சிய வல்லமைகளாய்ப் பொங்கி
உலகைத் தாண்டிப் பெரிதாகிறது . . .


- அனார்

சிறுசுடரான யோனி

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

காமத்தின் பேரலையை
ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்
மேலே கூடமைக்கின்றன
தூரதேசப் பறவைகள்
நட்சத்திரங்கள் புதைந்துபோன
சதுப்பு நிலத்தின்
கூதிர்கால இரவொன்றில்
இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற
கொத்திக்கொண்டு பறக்கிறது
கருங்கால் நாரை
அதன் அலகில்
சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.


"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."

- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??

- இன்பா

 
Follow @kadaitheru