Thursday, October 29, 2009

பூமியை காக்குமா நானோ தொழில்நுட்பம்?


"பருவநிலை மாற்றத்தால் மனித இனத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை இனிமேலும் அலட்சியப்படுத்த முடியாது. இப்போது நாம் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக உலகளவில் உடனடியாக விவாதித்து மனித இனத்தை காப்பாற்ற முக்கிய முடிவு எடுக்க வேண்டும்" - இவ்வாறு கடும் எச்சரிக்கை விடுத்துஇருந்தார் ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன்.

வெப்பமயம் பற்றி ஐ.நா. முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னன் தலைமையிலான "உலக மனிதநேய அமைப்பு" முதல்முறையாக விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை சில மாதங்களுக்கு முன்னால் வெளியிட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

சுற்றுப்புற சுழல், மாசு படும் கற்று, குறையும் நிலத்தடி நீர், அழிந்துவரும் விளைநிலங்கள், அழிக்கப்பட்டுவரும் காடுகள்......நமது பூமியின்,மனித இனத்தின் மிகப்பெரும் எதிரிகள் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள மறுக்கிறார்கள்.

புவி வெப்பமயமாதலால் ஏற்ப்படும் தீமைகளை, விளைவுகளை பற்றி பல கட்டுரைகள், பிரச்சாரங்கள் வந்துஇருக்கின்றன.

2030ம் ஆண்டுக்குப் பிறகு வெப்பமயத்தால் ஏற்படும் பேரழிவுகளால் இறப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன்படி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 லட்சமாக உயரும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
பருவநிலை மாற்றத்தால் உலகளவில் இப்போது ஆண்டுக்கு ரூ.6 லட்சம் கோடிக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்றும் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளது.

2000 - 2007 வரையான காலப்பகுதியில் திரட்டப்பட்ட புதிய தரவுகளின் படி, வளிமண்டலத்தில் நிகர அளவில் அதிகரித்து வரும் காபனீரொக்சைட் மற்றும் மெதேன் வாயுக்களை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படாமையினால் இந்த நிலை தோன்றி இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

குறிப்பாக இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகள் பெருமளவு சுவட்டு எரிபொருட்களை மின்சாரத் தேவைக்காக எரித்து வருகின்றன. இச்செயற்பாடு அதிகளவு காபனீரொக்சைட்டை வளிமண்டலத்துக்குள் வெளித்தள்ளுக்கின்றது.
அயனமண்டலக் காடுகள் உலர்ந்து வருகின்றன என்றும் இதனால் காட்டுத்தீ போன்றவை ஏற்பட்டு பெருமளவு தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. பூமி மேற்பரப்பில் சராசரி வெப்பநிலை அதிகரித்திருப்பதால் துருவப் பனிப்படிவுகளும் விரைந்து உருகி வருகின்றன. அத்துடன் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தும் சூறாவளிகளும் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

வெப்பமடைவதால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான வறட்சி ஏற்படும். இதனால் உணவுப் பஞ்சம் ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பேரிடர் குறைப்பு மையம் எச்சரித்துள்ளது.

வறட்சியைச் சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை பல நாடுகள் இப்போதிருந்தே எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இல்லையெனில் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

வறட்சி மற்றும் நீராதாரத்தை திறம்பட நிர்வகிக்காதது உள்ளிட்ட பிரச்னைகள் உணவுப் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் முக்கியக் காரணிகளாகும். இதிலும் குறிப்பாக வறட்சியை சமாளிக்க நீண்ட கால அடிப்படையிலான தொலைநோக்கு திட்டங்களை உருவாக்க வேண்டும்

இந்த நூற்றாண்டின் இறுதியில் உலகில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. புவியின் சுற்றுச் சூழலை பாதிக்கும் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்காத வரை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது. - இவ்வாறு கூறியிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.மற்றும் சுற்று சுழல் ஆய்வாளர்கள்.
தொழில் மயமாக்கத்தால் வெளியேறும் வாயுக்களால் உலகம் வெப்பமடைதல் அதிகரித்துவரும் நிலையில், அது முன்னேற்றத்திற்குத் தடையாவது மட்டுமின்றி, சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகும் அபாயம் உள்ளதென சுற்றுச் சூழல் இயக்கத்தைச் சேர்ந்த சுனிதா நாராயணன் எச்சரித்துள்ளார்.

உலகம் வெப்பமாவதை தடுக்கவும், அதற்கான வழிமுறைகளை ஏற்கவும், அதனடிப்படையிலான புதிய தொழில் நுட்பங்களை வளர்ந்த நாடுகள் மற்ற நாடுகளுக்கு தடையேதுமின்றி வழங்கலும், அதற்கான தொழில் நுட்பங்களில் முதலீடுகளைச் செய்தலும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக்கூடிய சாத்தியமான வழிகளே என்று கூறிய சுனிதா, இன்றைய நிலையில் உலகின் சுற்றுச் சூழலிற்கு மட்டுமே அச்சுறுத்தலாய் உள்ள இப்பிரச்சனை எதிர்காலத்தில் சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் கூட அச்சுறுத்தலாகலாம் என்று எச்சரித்தார்.

காற்றாலை, நீர் மின் நிலையம், சூரிய வெப்ப சக்தியை மின் சக்தியாக்கல் போன்ற மாற்றுத் தொழில் நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் வெப்பமயமாதலை மிக அதிக அளவிற்கு குறைக்க முடியும் என்றார் அவர்.

இந்த முறைகளை போன்று, நானோ தொழில்நுட்பம் மூலம் பூமி வெப்பமயமாதலை குறைக்க முடியும் என்று ஒரு கருத்து நம் தமிழகத்தில் முன்வைக்க பட்டுள்ளது.

நானோ தொழில்நுட்பம் எனப்படுவது 100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவுகளால் அமைந்த உருவ அமைப்புகளைக் கொண்டு, அச்சிறு அளவால் சிறப்பாகப் பெறப்படும் பண்புகளைக் கொண்டு ஆக்கபடும் கருவிகளும், பொருட்பண்புகளும் நானோ தொழில் நுட்பம் என்று அழைக்கப்படுகின்றது. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரின் 1,000,000,000ல் (ஒரு பில்லியனில்) ஒரு பங்கு. ஒரு நானோ மீட்டர் நீளத்தில் 8-10 வரையான அணுக்களின் அமர முடியும். சாதாரணமாக மனிதர்களின் தலைமுடியானது 70,000 முதல் 80,000 நானோ மீட்டர் தடிப்புடையது.

நானோ தொழில் நுட்பம் என்பது பல துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, ஏற்படுத்துவரும் ஒரு நுட்பம் ஆகையால் நானோ தொழல்நுட்பங்கள் என்று பன்மையில் அழைக்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் நானோ தொழில் நுட்பம் ஒரு தனிப்பட்ட துறையில் மட்டும் செல்வாக்கு செலுத்த தொடங்கவில்லை மாறாக உயிரியல், வேதியியல், இயற்பியல், மின்னியல், மருத்துவம், பொறியியல் என்று பல்துறைகளில் தாக்கம் செய்து வருகின்றது. அமெரிக்காவின் National Nanotechnology Initiative - நானோ தொழிநுட்பத்தைக் கீழ்க்காணுமாறு வரையறை செய்கின்றது. "Nanotechnology is the understanding and control of matter at dimensions of roughly 1 to 100 nanometers, where unique phenomena enable novel applications."

நானோ சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் நேற்று தொடங்கியது. இந்த கருத்தரங்கு வரும் 30ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.

மத்திய தகவல் மற்றும் தொழில் நுட்பத்துறை கூடுதல் செயலர் எஸ்.ஆர்.ராவ் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:

நானோ தொழில் நுட்பம் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இதை பயன்படுத்தி வறுமையை ஒழிக்க வேண்டும். ஆக்க சக்திகளுக்கு மட்டுமே நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். தற்போது மருத்துவம், ராணுவத்திற்கும் நானோ தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

பூமி வெப்பம் அடைந்து வரும் வேளையில் நானோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி பசுமையை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அண்ணா பல்கலை கழகத்தின் பேரிடர் மேலாண்மைக்காக ரூ.2.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ராவ் பேசினார்.

நிகழ்ச்சியில், சென்னை அண்ணா பல்கலைக் கழக துணை வேந்தர் மன்னர் ஜவகர், இத்தாலி பெரேரா பல்கலைக் கழக பேராசிரியர் டோனாடோ வின்சென்சி, அண்ணா பல்கலைக்கழக கிரைஸ்டல் குரோத் சென்டர் இயக்குநர் அறிவொளி, கிண்டி பொறியியல் கல்லூரி டீன் எம்.சேகர், அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் உள்ள அழகப்பா தொழில் நுட்பக்கல்லூரி டீன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நானோ தொழில்நுட்பம், நம் பூமி வெப்பமயமாவதில் இருந்து நம்மை காப்பாற்றுமா என்பதை பொறுத்துஇருந்துதான் பார்க்கவேண்டும்.


கடைக்காரர் கமெண்ட்:
அது என்ன நானோவோ..என்னமோ..இந்த பூமி சூட்டை குறைக்க நமக்கு தெரிஞ்ச...முடிஞ்ச..எளிமையான வழி வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கறதுதான்.
ஆனா அதை நம்ம அரசியல்வாதிங்க எதாவது போராட்டம் பண்ணும்போது..பஸ்ஸை நிறுத்தனும்ன்னு ரோட்டுல வெட்டி போடாம இருக்கனும்ங்க.








பதிவு : இன்பா

1 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும்
அவையாவும் இயற்கைக்கு ஈடாகுமா..?

 
Follow @kadaitheru