Monday, October 26, 2009

காந்திஜியின் கடிதங்கள்


காந்திஜி அவர்களின் ஒரு சிறப்பு குணாதியசத்தை பற்றி படித்தபோது, ஆச்சரியமாய் இருந்தது.

காந்தியடிகள் எந்தப்பொருளையும் வீணாக்குவதில்லை. பழைய தபால் உறைகளைக்கூட அவர் பயன்படுத்துவார். கடிதங்களில் உள்ள காலிப்பகுதிகளைக் கத்தரித்துச் சேர்த்துவைத்துக்கொள்வார். பார்சல்களின் மேலுள்ள உறைகளையும்,பத்திரிக்கைகள் வைத்துவரும் உறைகளையும் சேர்த்து வைத்து உபயோகப்படுத்திக்கொள்வார்.


இப்படி சேர்த்து வைத்த துண்டுக் காகிதங்களின் மேல் தம் கருத்துக்களை எழுதுவார். அல்லது அன்றாடம கணக்குகளை எழுதிக்கொள்வார். துரதிஷ்டவசமாக அநேகக்காகிதங்கள் காணாமற் போய்விட்டன. ஆனால் கிடைத்த காகிதங்களை வைத்துக்கொண்டு பார்க்கையில், பத்திரிகை ஆசிரியர் தொழில், அச்சு சம்மந்தமான எப்பேர்பட்ட நுணுக்கங்களையெல்லாம் காந்தியடிகள் இந்தத் துண்டு காகிதங்களில் எழுதி வந்தார் என்பது புலனாகிறது. அவர் பேசா நோன்பு மேற்கொள்ளும் நாட்களில் இப்படிப்பட்ட கழிவுக் காகிதங்கள் மிகமிக உபயோகப்பட்டன.

ஒரு நாள் கிருஷ்ணதாஸ் என்ற நண்பர் , காந்தியடிகளைப் பார்க்க அவருடைய அறையில் நுழைந்தபோது அடிகள் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். ‘கிருஸ்ணதாஸ், எனக்குத் தினந்தோறும் அநேக தந்திகள் வந்துக்கொண்டிருக்கின்றன. அவைகளை யெல்லாம் கிழித்து எறியச்செய்தேன். இதனால் எனக்கு மிகுந்த வருத்தம்தான். இவைகளை எந்த வித்திலாவது உபயோகப்படுத்த முடியாதா என யோசித்துக் கொண்டிருந்தேன். கடைசியில் எனக்கு ஒரு வழி தோன்றிற்று” என்றார் காந்தியடிகள்.
இவ்வாறு சொல்லிவிட்டு அவர் தந்திப்பார்ம் ஒன்றைக் கையில் எடுத்து அதை மடித்து எப்படி உறை செய்வது என்பதை விளக்கிச் சொன்னார். இனிமேல் உறைகள் எல்லாம் இம்மாதிரியே செய்யப்படவேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

கிருஷ்ணதாஸ் இப்படியே செய்து வந்தார். பழைய காகிதங்களை உறையாக மாற்றி உபயோகிப்பதில் காந்தியடிகளுக்கு மிகுந்த ஆவல். புது உறைகளைக்கையால் தொடக்கூட மாட்டார். பழைய உறைகளைப் பயன்படுத்துவதில் அடிகளுக்குத் தனி ஆர்வம்.

இந்து - முஸ்லிம் கலவரங்களுக்கு எதிராக, காந்திஜி நவகாளி யாத்திரையை மேற்கொண்ட போது, காலில் செருப்பு அணிவதை தவிர்த்தார்.

அதற்க்கு அவர் சொன்ன விளக்கம், ”நாம் கோவிலுக்கோ, மசூதிக்கோ அல்லது மாதாகோவிலுக்கோ செல்லுமுன் செருப்புகளைக் கழற்றி வைத்துவிட்டு நுழைகிறோம். அதாவது புனித இடங்களில் நாம் செருப்பு அணிவதில்லை. நானோ தரித்திர நாராயணர்களைப் பார்க்கச் செல்கிறேன். அவர்களுடை உற்றார் உறவினர்கள் சூரையாடப்பட்டனர். அவர்களுடைய குழந்தைகள், மனைவிமார்கள் கொலை செய்யப்பட்டனர். மானத்தைக்காப்பாற்றிக்கொள்ள போதிய ஆடையும் அவர்களிடத்தில் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்க்கத்தான் இந்த மண்ணில் நடந்து போக இருக்கிறேன். எனவே என்னைப் பொறுத்த மட்டில் எனக்கு இது புனித யாத்திரையாகும். அப்படியிருக்க இந்த யாத்திரையில் நான் எப்படிக் காலணியை அணிய முடியும்?”

இந்து - முஸ்லிம் உறவுகள் குறித்து காந்திஜி எழுதிய கடிதங்கள் மூன்று மாதங்களுக்கு முன்னால் லண்டன் நகரில் ஏலம் விடப்பட்டன. இந்த கடிதங்களை ஏலம் எடுத்தவர்கள், இந்திய வம்சாவளியை சேர்ந்த சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோர்.

இஸ்லாமிய அறிஞர் மௌலானா அப்துல்பாரிக்குக் காந்தி இந்தியிலும், உருது மொழியிலும் எழுதிய கடிதங்களும், அவர் ஜெயிலில் இருந்த போது எழுதிய கடிதங்களும் இதில் அடங்கும்.

மௌலானா அப்துல்பாரி, காந்தி அவர்களின் சிறந்த நண்பர். நூறுக்கும் மேற்ப்பட்ட புத்தகங்களை உருது மொழியில் எழுதியவர். மேற்க்கத்திய கல்வி முறைகளுக்கு எதிராக இஸ்லாமிய மதரசாக்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர். கிலாபத் இயக்கத்தில் முக்கிய பங்காற்றியவர்.காந்தியுடன் இணைந்து இந்து,முஸ்லிம் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்தவர்.


காந்தி இவருக்கு எழுதிய இக்கடிதங்களையும் மேலும் காந்தி உபயோகப்படுத்திய சில பொருட்களையும் மகாராணி எலிசபெத்தின் விருந்தினராக, நமது ஜனாதிபதி பிரதீபா பட்டீல் லண்டன் செல்லும்போது, அவரிடம் ஒப்படைக்க இருப்பதாக ஏலத்தில் எடுத்த இருவரும் பெருந்தன்மையோடு தெரிவித்து இருக்கிறார்கள்.


சர்குலாம் கே.நூண், பேராசிரியர் நாக்புரி ஆகியோருக்கு நாம் நன்றி தெரிவிப்போம்.

கடைக்காரர் கமெண்ட்:
காந்தியோட கொள்கைகள காப்பாத்ததான் ஆளு இல்லாம போய்டிச்சு...போகட்டும்.

வெள்ளைக்காரங்க கிட்ட இருந்து நாட்டை காப்பாத்தின காந்தியோட கடிதங்களை..ஏலத்துல வெள்ளைக்காரங்ககிட்ட போகாம காப்பாத்தினவங்களுக்கு நன்றி.






பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru