Thursday, December 30, 2010

காந்தியைக் கடந்த காந்தியம் - புத்தாண்டுச் சிந்தனைக்கு.

காந்தியை ‘மகாத்மா’ எனச் சுட்டுவதற்கு எனது மொழிப்புலன் இடம்தரவில்லை. அதில் உள்ள முரண் என்னை வெறுமையாக்குகிறது. ‘பாப்பு’ என மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அழைப்பதில், சுட்டுவதில் ஒரு இயல்பு நிலையை உணருகிறேன். மகாத்மா என்பதில் உள்ள உயர்தனி நிலை எனக்கு ஏற்புடையதல்ல. பாபாத்மா என்னும் எதிர்நிலையை அது கொண்டிருக்கிறது. காந்திக்கும்கூட அந்த அடையாளம் உவப்பானதாக இருந்ததில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவர் உணர்ந்திருந்தார்.

ரவீந்தரநாத் தாகூர் காந்தியை ‘மகாத்மா’ என உறுதிப்படுத்தியதன் பின்னணியில் ஒரு ஏகாதிபத்திய மறுப்பு இருந்தது. காந்தியை இந்திய அரசியலும் மக்களும் மகாத்மா என ஏற்றுக்கொள்ளும் முன்பே இந்த அடையாளம் காந்திக்கு உருவாகியிருந்தது. தென்னாப்பிரிக்க உரிமைப் போராட்ட காலத்தில் அவருக்கு இந்த அடையாளம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அடையாளம் பல சூழல்களில் காந்தியை உருமாற்றியிருக்கிறது.

காந்தி தான் தேர்ந்தெடுக்கும் மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டபோது தான் மகாத்மாவாக இறக்க வேண்டுமென்றால் இயற்கையானதாக அது நிகழக் கூடாது என்றார். தனது மகாத்மா தன்மையைப் பற்றிக் கேள்வி கேட்கப்பட்டபோதெல்லாம் தான் அதற்குத் தகுதியற்றவன் என்றே குறிப்பிட்டுவந்தார். அதே சமயம் தன்னை அதற்குத் தகுதியுடைய மனிதனாக மாற்றிக்கொள்ளும் முயற்சியை அவர் தொடர்ந்து மேற்கொண்டுவந்தார்.

தன்னை ‘மகாத்மா’வெனப் பிறர் குறிப்பிடும்போது அவர்கள் ஒருவித லட்சிய உயர்நிலையை ஏற்பதைக் காந்தி உணர்ந்தார். இந்த ‘லட்சிய உயர்நிலை’ குறித்த நம்பிக்கையை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு வரிடமும் உயர்குணங்களை, நற்பண்புகளை, அறங்களை வளர்த்துவிட முடியுமென்று அவர் நம்பினார்.

தேசிய அரசியலையும் விடுதலை அடைந்த சமூகத்தையும் உருவாக்க நினைக்கும் யாருக்கும் ‘மகாத்மா தன்மை’ என்ற லட்சிய உயர்நிலை வழிகாட்டும் பண்பு அடையாளமாக இயங்க முடியுமென்பதை அவர் கண்டார். ஒவ்வொரு இந்தியரும் மகாத்மா என்னும் நிலையை அடைவதற்கும் இந்தியா முழுமையும் விடுதலை அடைவதற்குமான உருவக உறவுநிலையை அவர் முன்வைத்தார். தான் செய்யும் நற்செயல்கள், பிழைகள் என்பவற்றை மதிப்பிடவும் அளவிடவும் மகாத்மா என்ற உருவகநிலையை ஒரு முன்புலமாகக் காந்தி பயன்படுத்திவந்தார், இதனைத் தனது அரசியல் சொல்லாடல் கட்டுமானத்திற்குப் பயன்படுத்திக்கொள்ள அவர் தயங்கவில்லை. இதைக் காந்தியத்தின் உருவகம், குறியியல் செயல்பாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு என்றே கூற வேண்டும்.

மகாத்மா என்ற அடையாளம் காந்திக்கு முன்பு பலருக்கு வழங்கப்பட்டிருந்தது. அது அவர்களின் தனித்தன்மை குறித்த அடையாளம் ஆனால் காந்திக்கு வழங்கப்பட்ட அவ்வடையாளம் தேசிய உளவியல், அரசியல் கூட்டுணர்வின் அடையாளமாக வரலாற்றுத் தன்மையை அடைகிறது. மகாத்மா காந்தி என்ற சுட்டுதல் இவ்வகையாகத்தான்; ஒவ்வொரு பின்னணியிலும் அல்லது சூழலிலும் உயர்நிலைக் கருத்தியல் ஒன்றின் சுட்டுதலாக, வழிகாட்டு நெறியின் சுட்டுதலாக, விமர்சனக் கருத்தியல் ஒன்றின் சுட்டுதலாகச் செயல்பட முடிந்தது.

காந்தியின் வாழ்வென்பதும் செயலென்பதும் இவ்வகையாகத்தான் குறிப்பான்களை, உருவகங்களை, சொல்லாடல்களை உருவாக்குவதாக இருந்தது. . தனிமனிதர், குடும்பம், ஊர், பிராந்தியம், மொழி அடையாளம், சமய அடையாளம், உலகுசார் அடையாளம் என்பனவற்றை ஒன்றுடன் ஒன்று பிணைந்ததாக மாற்றி ஒவ்வொரு உடல், ஒவ்வொரு தனிமனித இருப்பு, ஒவ்வொரு சொல் மற்றும் செயலசைவு அனைத்தையும் அரசியல் தன்மையுடையதாக விளக்கிக்காட்ட காந்தியத்தால் முடிந்தது.

அரசியல், சமூகச் செயல் மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகள் என்பவை, முற்றிலும் பூடகமான, எளிய தனிமனிதர்களுக்கு இயலாத பெரும் நிகழ்வுகள் என்பதான ஒரு மயக்கநிலையைக் காந்தி இவ்விதமாகத் தெளியவைத்து தனித்த உடல், தனி ஒரு சொல் என்பதிலிருந்தே அரசியல், பொருளாதாரம், வரலாறு என்பவை தொடங்குகின்றன என்பதைப் புலப்படுத்திக்காட்டினார். இது நவீன அரசியல் சமூகச் சூழலில் வகிக்கும் இடம் நாம் மதிப்பிடுவதைவிடப் பல மடங்கு பெருமதி கொண்டது. ஏனெனில் தனிமனிதர், தனி உடல் என்பதற்கு எந்த மதிப்புமற்ற ஒரு முன்நவீனநிலை இந்தியச் சூழலில் இருந்த ஒரு காலகட்டமே காந்திய அரசியலின் காலகட்டம். தனிமனிதர் என்பதன் உருவாக்கத்தை நாம் அறிவொளிக்காலத்திலிருந்து அடையாளம் காண்பது அகிலம் சார்ந்த சூழலில் பொருத்தமாக இருக்கும் (இந்திய உப மரபுகள், கிளை மரபுகள் மறதிக்குட்பட்ட காலகட்டத்தைப் பற்றியது இந்தக் குறிப்பு). இந்தியச் சூழலில் சாதிய, சமய, மொழியினச் சூழல்களில் தனிமனிதர் என்பதன் பொருள் வேறு. காலனியச் சூழலில் இந்திய உடல்கள் ஆளப்படும் உடல்களாக, உற்பத்தி செய்யும் உடல்களாக, பொருள் நுகரும் உடல்களாக அடையாளம் காணப்பட்டன. இயந்திரங்கள், உற்பத்திச் சாதனங்கள், தொழில்நுட்பக் கருவிகள், நவீன நிர்வாகம், பொதுச் சமூகம் என்பவையும் சட்ட - ஒழுங்கு விதிமுறைகள், வெகுமக்கள் தொடர்பு ஊடகங்கள் என்பவையும் இந்தியச் சமூகங்களில் தனிமனிதர் என்னும் நிலையை ஒரு யூகவடிவமாக அறிமுகப்படுத்தியிருந்தன. அடிபணியும் ‘தனிமனித நிலை’ என்பது இரு வகையில் உருவாக்கப்பட்டிருந்தது. மரபான அமைப்புகளுக்குப் பணிந்திருக்கும் தனிமனிதர்; காலனியப் பேரரசுக்குப் பணிந்திருக்கும் ‘தனிமனிதர்’. இந்தப் பணிந்திருக்கும் தனிமனிதர் நிலையைத்தான் காந்தி செயல்படும் தன்னிலையாக, ‘வினையாற்றும்’ தனிமனித நிலையாக, தன்னைத்தானே அடையாளப்படுத்தும் தன்னிலையாக மாற்றிக்காட்டினார். இந்தப் புதிய தனிமனிதத் தன்னிலை உருவாக்கம் பெரும் அரசியல் இயக்கங்களாலும் போராட்டங்களாலும்கூட உருவாகியிருக்க முடியும். இந்தியச் சூழலில் போரும் சமயமும் உருவாக்கித் தந்திருந்த தானற்ற நிலை நோக்கிய கூட்டு அடையாளத்திற்கும் தன்னிலை அழிந்தநிலைக்கும் நெருக்கமாகவே இந்தத் தேசிய-விடுதலை மற்றும் போராட்ட அடையாளங்கள் இருந்திருக்கும்.

ஆனால் காந்தி இதை உள்ளிருந்தே மாற்றிக் காட்டினார். ஒவ்வொரு சத்தியாகிரகியும் ஒரு தனிப்படை, தனித்த சக்தி என்பதை உருவகப்படுத்தியதன் மூலம் செயல்பாடுடைய, அடையாளமுடைய, தன்னொழுங்குடைய ஒரு தனிமனித அடையாளத்தை உருவாக்கிக் காட்டினார். இது நவீனத்துவக் கூட்டுத் தன்னிலைகளிலும்கூடச் சாத்தியமில்லாத ஒன்று.

உலகை மாற்றும் முன் உம்மை மாற்றுதல் என்பதில் தொடங்குவதால் உடல் - மனம், அகம் - புறம், பொருள் -கருத்துருவம், தனிநிலை - கூட்டுநிலை என்பவை குறித்த நவீனத்துவச் சிக்கல்கள் பலவற்றைக் காந்தியம் அழகியல், உருவகத்தன்மை என்பதன் மூலமும் நம்பிக்கை, அறம் என்பதன் மூலமும் எளிமையாகக் கையாண்டுவிடுகிறது. இந்த எளிமைதான் காந்தியத்திலும் காந்தியிடமும் உள்ள சிக்கலானதும் கடினமானதுமான பகுதி. எளிமைகள் சிக்கலடைவதும் இயல்புகள் அச்சமூட்டுவதும் மனித அறிவுருவாக்கத்தின் முரண்கள். மனித சமூகங்கள், இனங்கள் என்பவை எளிய நிலையிலிருந்துதான் இவ்வளவு சிக்கல்களை அடைந்திருக்கின்றன. அப்படியெனில் காந்தியத்தின் எளிமையைப் புரிந்துகொள்வதன் மூலம் நாம் நவீன உலகின், நவீனத்துவ அறிவு மற்றும் மனித உருவாக்கத் திட்டத்தின், மனித பொருள்படுத்தும் முறைகளின் சிக்கல்களைப் புரிந்துகொள்ள இயலுமா எனப் பார்க்க வேண்டும்.

காந்தியம் இவ்வகையில் உடலரசியல், நுண்ணரசியல், இனவியல் - பாலின அரசியல், அழகியல் - பண்பாட்டு அரசியல், அதிகார - கண்காணிப்பு அரசியல், ஓரமைவாக்க - மேலாதிக்க அரசியல், உலகமயமாக்கல் -இயந்திரமயமாக்கல் அரசியல், போர்மைய அரசியல், அழிவு அரசியல், தனிமனித - குழு அரசியல், மாற்று அரசியல் எனப் பலவித அரசியல்களைப் புரிந்துகொள்ளவும் மொழியாக்கிப் பார்க்கவும் நம்மைக் கொண்டு செல்கிறது. காந்தியைக் கடந்து காந்தியம் விரிவடையும் தளங்கள் இவை.

‘நோய் என்பது நமது செயல்களை மட்டும் சார்ந்ததல்ல. நமது சிந்தனைகளையும் சார்ந்தது.’ ‘மனிதரின் அடிமைநிலை அல்லது சுதந்திரம் என்பது அவரவரது மன அமைப்புச் சார்ந்து அமைவது.’ ‘அறியாமை என்பது நோய்க்கான ஒரு காரணம்.’ ‘இயற்கையான வாழ்வின் சுதந்திரத்துடன் வாழும் விலங்குகள், எப்போதும் பட்டினியில் இறப்பதில்லை. அவற்றுக்கிடையே ஒரு நாளைக்குப் பலமுறை உண்ணும் பணக்காரர், ஒருவேளை உணவு கிடைக்காத ஏழை என்ற பிரிவுகள் இல்லை. இந்த இயல்பற்ற நசிவுகள் மனிதர்களான நம்மிடையே தான் உள்ளன. இருந்தும் விலங்குகளைவிட நாம் நம்மை உயர்ந்தவர்களாக எண்ணிக்கொள்கிறோம்.’ (Gandhi, M.K. 1921. A Guide to Health. Madras: S. Ganesan Publisher).

இங்கு நோய், செயல், சிந்தனை, அடிமைநிலை, சுதந்திரம், மனம், அறியாமை, இயல்பற்ற நசிவு (abnormalities) மனிதர்களின் உயர்ந்தநிலை என்பவை சொற்பொருள் கடந்து உருவகக் குறியீட்டுக் கோட் பாட்டுப் பொருள்களை அடைகின்றன. இந்தச் சொற்களை அடிப்படையாக வைத்தே நாம் பல்வேறு தத்துவங்களை விவாதத்திற்கு உள்ளாக்கிவிட முடியும். அதேபோல் இன்றைய உலகு சார்ந்த மனிதச் சிக்கல்களைப் பற்றிய கேள்விகளையும் அணுகிவிட முடியும்.

காந்தியின் எளிமைக்குள் உள்ள சிக்கல்களைப் போலவே இந்தச் சொற்களும் நம்மைப் பல்வேறு கேள்விகளை நோக்கி நகர்த்துகின்றன. அந்தக் கேள்விகளை நாம் அணுகுவதென்பது காந்தியின் மொழியில் சொன்னால் ‘காந்தியத்துடன் நமது பரிசோதனை’ என்பதாக அமையலாம். காந்தி இறுதிவரை தனது நம்பிக்கைகள், செயல்கள், திட்டங்கள் எல்லாவற்றையும் பரிசோதனைகள் என்றே குறிப்பிட்டு வந்திருக்கிறார் என்பதை நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். அதே சமயம் காந்திக்குப் பிறகு காந்தியம் இந்தியச் சமூக அரசியல் தளங்களில் பரிசோதித்துப் பார்க்கப்படவில்லை என்பதையும்கூட நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியுள்ளது. இந்திய அரசும் அதன் மக்கள்சார் அணுகுமுறைகளும் காந்தியத்தையும் காந்தியையும் மறுத்து இயங்கத் தொடங்கிய இடத்திலிருந்தே இந்தப் பிழைகளும் தொடங்குகின்றன.

(காலச்சுவடு வெளியீடான "காந்தியைக் கடந்த காந்தியம்" நூலிலிருந்து.)

மங்காத்தா - 2011 ஸ்பெஷல்

அஜித்தின் 50 வது படமான மங்காத்தா வரும் புதிய ஆண்டில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்ப்படுத்தி இருக்கும் படம். மங்காத்தா பற்றி உங்களுக்கு தெரிந்தும்,தெரியாததுமான செய்திகள்...தல 50 - புத்தாண்டு ஸ்பெஷலாக.

அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, ஒரு முக்கிய வேடத்தில் நாகார்ஜுனா நடிப்பதாக இருந்த கேரக்டரில் இப்போது அர்ஜுன் நடிக்கிறார்.

மேலும் இவர்களுடன், பிரேம்ஜி அமரன், லக்ஷ்மி ராய், வைபவ் உட்பட ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. "நாகார்ஜுனாவின் தேதிகள் சரியாக அமையாததால் ஆக்க்ஷன் கிங் அர்ஜுன் இப்போது நடிக்கிறார் " என்கிறார் வெங்கட் பிரபு.

வெங்கட் பிரபு : இவருக்கு இது நான்காவது படம். படம் தொடங்கிய போதே, மங்காத்தா அஜித்தின் பிறந்த நாளான மே 1 ஆம் தேதி வெளிவரும் என அறிவித்து இருப்பது இவரது நல்ல திட்டமிடலுக்கு உதாரணம்.

"மங்காத்தா படம் தொடங்கும்போது கூட இப்படி ஜாலியான பசங்களாக இருக்காங்களே நமக்கு செட்டகுமா என்று யோசித்து இருக்கிறேன் " என்று வெளிப்படையாக சொன்ன அஜித் "ஆனால், படம் தொடங்கிய பின் இந்த டீமின் உழைப்பை பார்த்து, வியந்து போய்விட்டேன். வெங்கட் பிரபு அண்ட் டீமை work very hard and play very hard என்றுதான் சொல்வேன். இந்த படத்தின் திரைக்கதை,எனது கெட்டப் மற்றும் பாடல்கள் மேகிங் எல்லாமே பேசப்படும் " என்கிறார்.

படத்தின் முதல் கட்டபடபிடிப்பாக "விளையாடு மங்காத்தா " என்னும் பாடலை பாங்காங்கில் முடித்து விட்டு, மகாபலிபுரத்தில் ஒரு கட்டத்தையும் முடித்துவிட்டு தற்சமயம் சென்னையில் அஜித் மற்றும் திரிஷா நடிக்கும் காட்சிகளை எடுத்துவருவதாக தெரிவிக்கிறார் வெங்கட்பிரபு.

யுவன் ஷங்கர் ராஜா: "எனது காரில் எப்போதும் ஒலித்துகொண்டு இருப்பது, மங்காத்தாவுக்காக நான் இசை அமைத்து இருக்கும் "விளையாடு மங்காத்தா" தான்" என்று தனது ட்விட்டரில் எழுதி இருக்கிறார் யுவன்.

"மங்காத்தா ஒப்பந்தம் ஆனதும்,அஜித் என்னிடம் பேசியபோது இந்த படம் மியுசிக்கலாக சிறப்பாக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.அதனால், நான் தனிப்பட்ட கவனம் எடுத்து வருகிறேன். இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள்.அதில், ஐந்து பாடல்களுக்கு இசை அமைத்துவிட்டேன். இன்னும் பாடல் வரிகள் மற்றும் பின்னணி பாடகர்கள் முடிவாகவில்லை" என்கிறார் யுவன்.

"மங்காத்தா" வில் இன்னொரு சிறப்பு அம்சம் தனது தந்தை இசை ஞானி இளையராஜாவுடன் இணைந்து ஒரு பாடலை பாடுகிறார் யுவன்.தமிழ் - ஆங்கிலம் கலந்து வரும் இந்த பாடலின் தமிழ் வரிகளை இளையராஜாவும், ஆங்கில வரிகளை யுவனும் பாடவிருக்கிறார்கள்.

வாலி, கங்கை அமரன் : படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.
இந்த படத்தில் எனது தந்தை கங்கைஅமரன் பாடல் எழுதி இருப்பதும், எனது குடும்பத்தில் பிரேம்ஜி அமரன் இந்த படத்தில் இடம் பெற்று இருப்பதும் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி" என்கிறார் வெங்கட் பிரபு.

மங்காத்தா படத்தின் இசையில் மற்றொரு சிறப்பு அம்சம். நிரஞ்சன் பாரதி முதல் முறையாக ஒரு பாடல் எழுதி இருக்கிறார். இவர், மகாகவி பாரதியார் அவர்களின் பேரன்.

சக்தி சரவணன் : படத்தின் ஒளிப்பதிவாளர். வெங்கட் பிரபுவின் முந்திய படங்களும் இவரது கேமராவண்ணமே. மிக வேகமான ஷாட்டுகள் இவரது ஸ்பெஷல். குறிப்பாக, சென்னை 28 படத்தில் வரும் கிரிக்கெட் கட்சிகள், சரோஜாவில் வரும் இருட்டுக்குள் நடக்கும் இறுதிகட்ட காட்சிகள் இவரது திறமைக்கு சான்றுகள்.

ரித்திஷ் : படத்தின் கலை இயக்குனர். சரோஜா படத்தில் வரும் டேங்கர் லாரி விபத்து காட்சியால் பெரிதும் பேசப்பட்டார். மங்காத்தா படத்துக்காக, சென்னையில், மும்பையில் இருக்கும், தமிழர்கள் அதிகம் வாழும் "தாராவி" பகுதியை தத்ருபமாக செட் அமைத்து இருக்கிறார்.

செல்வா: படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர். பின்னி மில்லில் சமிபத்தில் அஜித் இடம் பெரும் ஒரு சண்டைகாட்சி படமாக்கபட்டது. மங்காத்தா - ஒரு முழு நீள ஆக்க்ஷன் என்பதால், சண்டைகாட்சிகளை முற்றிலும் புதிய பாணியில், சர்வதே தரத்தில் உருவாக்கி வருகிறார்.

மற்ற முக்கிய கலைஞ்சர்கள் : நடனம் : கல்யாண் மற்றும் ஷோபி. படத்தொகுப்பு : பிரவீன் ஸ்ரீகாந்த். நிர்வாக தயாரிப்பு : சுந்தர்ராஜன் மற்றும் தலைமை நிர்வாகம்:காஷாந்த் பிரசாத்.

மங்காத்தா - வெங்கட் பிரபு 'தலை'க்கு தரும் பிறந்த நாள் பரிசு.
ரசிகர்களுக்கு, 'தல'யே தரும் பரிசு.

-இன்பா

வாசக நண்பர்களுக்கு எங்களின் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Friday, December 24, 2010

கடிதக்கலை

ஒரு செய்தி : "இன்றைக்கு செல்போனின் வருகையால், போஸ்ட்கார்ட் உள்ளிட்ட கடிதங்களின் பயன்பாடு அடியோடு நின்றுவிட்டது.இதனால், தபால்துறை நஷ்டத்தில் இயங்கிவருகிறது.மேலும்,கடிதங்களை பயன்படுத்தாத காரணத்தால், தமிழை எழுதும் வழக்கமும் நமது மக்களிடையே அரிதாகிவிட்டது".
- திரு.ராமமூர்த்தி,தபால்துறை அதிகாரி.

எத்தனையோ
வருடங்களாகிவிட்டது
என் விரல்களுக்கு...

'இப்படிக்கு, அன்புடன்'
என்று முடிக்கும்
இருதயத்தை இறக்கிவைக்கும்
ஒரு கடிதம் எழுதி.

இருபதாம்நூற்றாண்டில்
எழுத்துதமிழை ஏந்திநின்ற
இரு கரங்கள்
'இன்லேன்ட் லெட்டரும்'
'போஸ்ட்கார்டும்'.

மரபுக்கவிதைகள்
பழைய ஏற்பாடு.
புதுக்கவிதைகள்
புதிய ஏற்பாடு.
இரண்டுக்குமே
மாற்று ஏற்பாடு
கடிதங்கள்.

கவிதைதொகுப்புகளுக்கு
இணையான சேகரிப்பு...
அஞ்சல்தலை சேகரிப்புகளும்.

அன்றைக்கு
வீட்டு வாசலுக்கு
தெருவாசிகளை
ஓடி வரவழைப்பது
சாமி தரிசனமும்
தபால்காரர் வருகையும்தான்.

சுவாமிக்கும் செல்லும்
சவஊர்வலத்திற்கும் செல்லும்
பூக்களை போலவே
கடிதங்களும்,

மஞ்சள்தடவி வந்து
மங்கள செய்தியும் சொல்லும்.
மரண செய்தியும் சொல்லும்.

என் சேமிப்பில்
கவிதைபுத்தகங்கள்
அஞ்சல் தலைகள்
கூடவே
மறக்க முடியாத
சில கடிதங்களும்.

அயல்நாட்டில் இருந்து
அப்பா அனுப்பிய கடிதத்தில்...
எனக்கான வரிகளை
இன்னொரு தாலாட்டாய்
அம்மா வாசித்த
நாட்கள் இனி,வருமா?

எனக்கென்று வந்த
முதல் கடிதம்
பள்ளிப்படிப்பை
பாதியில்நிறுத்திய
என் தோழன்
எழுதி அனுப்பிய கடிதம்.
வார்த்தைகள் யாவும்
இன்னமும் எனக்குள் கனமாய்..

இன்றுவரை
'அவளுக்கு' தராமலே
வைத்திருக்கிறேன்
கல்லூரி நாட்களில்
நான் எழுதிய
என் முதல்
காதல் கடிதத்தை.

'தொப்புள் கொடி' உறவுகளை
பிணைத்து வைத்தது
'தபால் கொடி' உறவுகள்.

கடிதமொழி பேசாத தமிழ்
இன்றைக்கு வெறும்
பேச்சுவழக்கில் மட்டும்.

நலமறிய ஆவலில்லா
நாகரிக மனிதர்களால்
காணமல் போன
கிராமத்து கலைபோலான
'கடிதக்கலை'
இன்னமும்
குற்றுயிராய் வாழ்வது
குறுக்கெழுத்துபோட்டிகளால் மட்டும்.

மனசுதொட்டு எழுதும்
'அன்புள்ள'வுக்கு
ஈடாகுமா?

ஈ-மெயிலின்
'ஹா(ஹ)ய்யும்'
செல்போனின்
'ஹலோவும்'.

கவிதை : இன்பா

வாசக நண்பர்களுக்கு கடைத்தெருவின் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

Thursday, December 16, 2010

அஜித்துடன் மோதவேண்டும் - சரத்குமார்


சரத்குமார் - 18 வயது இளைஞர். அஞ்சல் வழியில் BBA மார்க்கெட்டிங் படிகின்றார். இத்தாலி மொழியை ஆர்வமுடன் கற்று கொண்டு வருகிறார்.சென்னை தெருக்களில் பைக்கில் வலம் வருகிறார்.

இவர் ஒரு சாதாரண இளைஞர் என நீங்கள் நினைத்தால் அது தவறு. இவர்தான் நமது இந்திய நாட்டின் சார்பாக, வரும் 2011 ஆம் ஆண்டு
மார்ச் மாதம் நடைபெற உள்ள 125 cc பைக் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொள்ளப்போகும் முதல் இந்தியர்.

இவர் ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு இந்தியா அளவில் நடைபெற்ற சாம்பியன்ஷிப் பைக் ரேசில் கலந்துகொண்டு இருந்தாலும், சர்வதேச அளவிலான போட்டியில் இவர் பங்குபெறப்போவது இதுவே முதல் முறை.

2011 சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ளபோவது ""ஸ்ரீபெரும்புதூர் ரேஸ் மைதானத்தில் பகல் முழுவதும் கடுமையான பயிற்சி செய்துவருகிறேன். சிறப்பாக பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும், சர்வேதேச போட்டி என்பதால், மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும்.அந்த போட்டியில் என்னுடைய பார்ட்னர் ஒரு இத்தாலி நாட்டுக்காரர். நன்கு புரிதல் வேண்டும் என்பதற்காக இத்தாலி மொழியை கற்றுவருகிறேன்".என்கிறார் சரத்குமார்.

கிரிக்கெட்டை மட்டுமே கொண்டாடும் சென்னையில், பைக் ரேஸை எப்படி மக்களிடம் கொண்டு செல்லப்போகிறார் இவர்.

"FI எனப்படும் பைக் ரேஸ் போட்டி இங்கு சென்னையில்தான் நடைபெறப்போகிறது. இந்தியாவின் சார்பாக நாங்கள் கலந்துகொள்ளபோவதால், இந்த போட்டியை காண மக்கள் வருவார்கள்" என்று சொல்கிறார் சரத்.

இன்னொரு ஆச்சரியம்..இதுவரை பைக்கில் விழுந்து இவருக்கு காயம் எதுவும் ஏற்ப்பட்டதில்லை. "ஒரே ஒரு முறை மட்டும் நான் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தபோது தவறி விட்டேன். பைக் மட்டும் முழுவதும் சேதமாகிவிட்டது. ஆனால், எனக்கு சிறு காயம் கூட ஏற்ப்படவில்லை" என்று கூறும் சரத்துக்கு பயிற்சி தந்து குருவாக இருப்பவர் பெயர்..ரஜினி கிருஷ்ணன். சென்னைக்கரர்தான்.

விளையாட்டு வீரருக்கு உடல் ஆரோக்கியம் மிகவும் அவசியம் என்று கூறும் சரத் அதற்காக தினமும் ஜிம் செல்வதாகவும், சைக்கிள் ஓட்டுவதும், நீச்சலும் தனது பிட்னெஸ் ரகசியங்கள் என்கிறார்.

"மைதானத்தில்தான் நான் வேகமாக ஓட்டுவேன். சென்னை சாலைகளில் பைக் ஓட்ட நிறைய பொறுமை வேண்டும்" என்னும் சரத், HONDA DEO பைக்கை சென்னை சாலைகளில் பயன்படுத்துகிறார்.

இவருடைய ரோல் மாடல்..வேறுயாருமல்ல அது 'தல' அஜித்குமார்தான். இது பற்றி ரேசர் சரத்குமார் தெரிவித்து இருப்பது.

"ஒரு பைக் போட்டியிலாவது அஜித் சாருடன் மோதவேண்டும் என்பதே எனது விருப்பம்" .

நமது நாட்டில் கிரிக்கெட் வீர்கள் மட்டுமே கொண்டாடப்படுவது நின்றால்தான், பைக் ரேஸ் போன்ற மற்ற போட்டிகள் வளரும்.

2011 ஆம் வருடம் நடைபெறப்போகும் பைக் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற சரத்குமாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

-இன்பா

Tuesday, December 14, 2010

இயக்குனர் பாலுமகேந்திராவின் கலைப்பயணம்

இன்று கொடிகட்டி பறக்கும் பாலா - அமிர் - சசிகுமார் - பாண்டிராஜ் என்று புதிய தலைமுறைக்கு வித்திட்ட இயக்குனர் பாலுமகேந்திரா குறித்தான உயிர்மை இதழில் வெளிவந்த நான் படித்த திரு.ஆனந்த் அண்ணாமலை அவர்களின் கட்டுரை.
1946- ல் இலங்கையில் பிறந்த பாலுமகேந்திரா, 1969- ல் வட இந்தியாவின் புனே ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் ஒளிப்பதிவுத் துறையில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவராக வெளிவந்தார். முதலில் மலையாளப் படமான ‘நெல்லு’ வில்(1971), ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். முதல் படத்திலேயே தேசிய விருது கிடைத்தது. பின் கன்னடத்தில் ‘கோகிலா’(1979) என்ற படத்தை இயக்கி, இயக்குனராகவும் தேசிய விருது பெற்றார். 1978ல் மகேந்திரன் இயக்கத்தில், ‘முள்ளும் மலரும்’ படம் மூலம் பாலுமகேந்திரா தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். ‘அழியாத கோலங்கள்’ (1979) இவர் இயக்குனராக செயல் பட்ட முதல் தமிழ்ப் படம்.

இதெல்லாம் நடந்தேறும் வரையில் தமிழ்த்திரை தனது காட்சிபூர்வமான அழகியலை கண்டுகொள்ள காத்திருக்க வேண்டியிருந்தது என்று சொன்னால் அது மிகை இல்லை என்று நினைக்கிறேன்.

1977-ல் பாரதிராஜா இயக்கிய ‘பதினாறு வயதினிலே’ தமிழ் சினிமா சரித்திரத்தில் திருப்புமுனைப் படமாகக் குறிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த வருடம் வெளிவந்த ‘முள்ளும் மலரும்’ படமும் முக்கியமானதாக இன்றளவும் அறியப்படுகிறது. ஸ்டூடியோக்களுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தமிழ் சினிமாவை முதன் முதலாக பாரதிராஜா தன் ‘பதினாறு வயதினிலே’ மூலம் அசலான கிராமப்புறங்களை நோக்கி இட்டுச் சென்றார். சப்பானி, மயிலு என்றெல்லாம் பெயர் தாங்கி கிராமத்து வாழ்க்கையில் காணக் கிடைக்கும் எளிய மனிதர்கள் மையக் கதாபாத்திரங்களாக உருக்கொண்டு வந்தனர். ‘முள்ளும் மலரும்’ படத்திலும் ‘காளி’ என்ற சராசரி மனிதனின் பிடிவாத குணத்தை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டது. அதுவரை நட்சத்திர அந்தஸ்து வாய்க்கப் பெறாத ரஜினிகாந்த் என்ற துணை நடிகரே தன் பாத்திரப் படைப்புக்கு ஏற்றவர் என்று பிடிவாதமாகத் தயாரிப்பாளர்களிடம் சாதித்து தன் ‘முள்ளும் மலரும்’ படத்தை இயக்கினார் மகேந்திரன். இவையெல்லாம் சந்தேகமின்றி தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்திய முன்னோடி முயற்சிகள். அதேசமய்ம் இவையிரண்டையும் விட, இவற்றைத் தொடர்ந்து வந்த பாலுமகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்திலேயே காட்சிமொழி நுட்பமாக முழுவீச்சில் செயல் படத் துவங்கியிருக்கிறது என்பது என் எண்ணம்.

இதைத் தீவிரமான சினிமா ஆர்வலர்கள் எவரும் ஒப்புக் கொள்வார்கள் என்றே நம்புகிறேன்.

விடலைப் பருவ நினைவுகளை வாழ்வனுபவமாக்கிப் பேசும் இந்தப் படத்தில், பருவக் கொந்தளிப்பினால் பாலுணர்வுத் தவிப்புக்குள்ளாகும் ஒரு சிறுவனின் மனதை, பாலுமகேந்திரா இப்படிக் காட்சிபடுத்தியிருக்கிறார்:

இரவு. வீட்டில் அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருளுக்குள் பதின் வயதினனான அந்த சிறுவன் எழுந்து கொள்கிறான். சத்தமெழுப்பாமல் பெண்கள் உறங்கிக் கொண்டிருக்கும் பகுதிக்குள் நுழைகிறான். அங்கே கிட்டத்தட்ட அவன் வயதே உரிய அவனது உறவுக்காரப் பெண் பிற பெண்களுக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறாள். ஆர்வம், இச்சை, குறுகுறுப்பு ,பயம் என சகலமும் அவன் முகபாவத்திலும் உடல் மொழியிலும் வெளிப்படுகின்றன. மெல்ல உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெண்ணை நெருங்குகிறான். தயங்குகிறான். தவிக்கிறான். பின் தைரியம் கொள்கிறான். ஆசையுடன் நெருங்கி அவள் கால்களை, கன்னங்களை, இதழ்களைத் தொட்டுப் பார்க்கிறான். அவனது விரல்கள் அவள் முகத்திலிருந்து சற்று கீழே இறங்க, அதற்குள் யாரோ இருமும் ஒலி கேட்கிறது. சட்டென்று எழுந்து கொள்கிறான். இருளுக்குள் நடந்து மறைகிறான்.

ஒரு வசனம் கூட உச்சரிக்கப்படாத இந்தக் காட்சி கிட்டத்தட்ட நான்கு நிமிடங்கள், துவங்கி – நீடித்து - முடிகிறது.

முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, நான்கு நிமிடங்கள் என்ற நேர அளவு. இந்த நேர அவகாசத்தின் ஒவ்வொரு நொடிப் பொழுதும், காட்சி அனுபவமாக கதாபாத்திரத்தின் உளவியல் தவிப்புகளைப் பார்வையாளனுக்குள் கொண்டு செலுத்துவதாக, இயக்குனரால் பயன்படுத்தப்படுகிறது. இதே காட்சியை ஒரு சில நொடிக்குள் அவசரமாக சுருக்கிக் காட்டியிருந்தாலோ அல்லது நண்பர்களுடன் பேசுவதுபோல் வேறு முறையில் வசனம் அமைத்திருந்தாலோ, அப்போது அது இவ்வளவு கலைத்தரத்துடன், ஆழமாக வெளிபட்டிருக்க வாய்ப்பிலை. சினிமா காட்சி அமைப்பில் செயல்படும் ‘Time Length’ பயன் பாட்டுக்கு இந்தக் காட்சி மிகச் சிறந்த உதாரணம்.

இது போல இன்னும் நிறைய காட்சி ஊடகம்சார் நுட்பங்களை இந்தப் படத்திலிருந்து எடுத்துக் காட்டலாம். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இயக்கம் என மூன்று துறைகளிலும் தன் ஆளுமையை முழுமையாகச் செலுத்தி பாலுமகேந்திரா தன் திரை மொழியைப் படத்தினுள் அழுத்தமாக சாதித்துக் கொள்கிறார். சிறுவர்கள் முதல் முறை சிகரெட் புகைத்துப் பார்ப்பது, ஆற்றுக்குக் குளிக்கச் செல்லும் சிறுவர்களில் ஒருவன் மட்டும் மூழ்கி இறந்து விடுவது என பட்டியலிட்டுப் பேசத் துவங்கினால், படத்தில் வரும் எல்லா காட்சிகளையும் ஒவ்வொன்றாகப் பேசுவதாக அந்த செயல் முடியும்.

பாலு மகேந்திராவின் இந்தத் திரைமொழி சத்தயஜித் ரேவின் திரைமொழியிலிருந்து உருவாவது.

1955- ல் தன் முதல் படமான ‘பத்தேர் பாஞ்சாலி’ மூலம் பெங்காலி இயக்குனரான சத்யஜித் ரே, சினிமாவின், வாழ்வின், அழகியல் நிரம்பியதொரு திரைமொழியை உருவாக்கிக் காட்டினார். காட்சிக்குப் பின்னணியாக செயல்படும் இயற்கை, காட்சி ஓட்டத்தினூடே ஊடாடும் இயல்பான ஒளியமைப்பு, எந்த நிலையிலும் பதற்றம் கொண்டு விரைய முனையாத படத்தொகுப்பு, திரைக்கதையின் உணர்வு நிலைக்கேற்ப காட்சிப்படுத்தப்படும் பருவ நிலை மாற்றங்கள், வசன உச்சரிப்பு - உடல் மொழி என நடிப்பு சார்ந்த எந்த விஷயத்தையும் தூக்கலாக்கிக் காட்டாமல் அவற்றை எளிமையாக்கி, நடிகர்களின் இயல்பு நிலையைக் காட்சிக்குள் தக்கவைத்துக் கொள்வது, இப்படி ரே உருவாக்கிய அந்தத் திரைமொழி உலகெங்கிலும் தோன்றிய பல இயக்குனர்களிடம் தன் பாதிப்பை செலுத்தத் துவங்கியது. அத்தககைய பாதிப்பின் அடிப்படையில் தமிழில் உருவாகி வந்த திரைமொழி பாலுமகேந்திராவினுடையது. இதற்கான சாட்சியங்கள் பாலுமகேந்திரா இயக்கிய படங்களெங்கும் காணக் கிடைக்கின்றன. தமிழ் சினிமாவில் செயல்படத் துவங்கிய, சினிமாவின் அழகியல் கூறுகள் நிரம்பிய, முதல் நுட்பமான திரைமொழி இதுவே. இதுவரை தமிழ்த் திரையில் ஊடகம் சார் அமைதி வெளிப்பட்டிருப்பதும் பாலுமகேந்திரா கைக்கொண்ட இந்தத் திரை மொழி மூலம் மட்டுமே.

இப்படி பாலுமகேந்திரா தமிழுக்குப் பெற்றுக் கொடுத்த திரைமொழி திறந்து காட்டிய சாத்தியங்களை அடிப்படையாகக் கொண்டு மணிரத்‘னம், பாலா, ராம் போன்ற இயக்குனர்கள் தமிழில் உருவாகி வந்தார்கள். இவர்கள் பாலுமகேந்திராவின் திரைமொழியை அப்படியே பின்பற்றவில்லை, அதன் அடிப்படைக் காரணிகளை மட்டும் எடுத்துக் கொண்டு தங்களுடையதேயான ஒரு திரைமொழியைத் தங்கள் ஆளுமையின் போக்கிலும், தாம் உருவாக்க விரும்பும் சினிமாவின் வணிகத் தேவைக்கு ஏற்றபடியும், வளர்த்தெடுத்துக் கொண்டார்கள். அதுவே அவர்களை முக்கியமான இயக்குனர்களாக இன்று முன் நிறுத்தியிருக்கிறது.

கவனம். நாம் இங்கே பேசிக் கொண்டிருப்பது திரைமொழி பற்றியே தவிர உள்ளடக்கம் பற்றியல்ல. உள்ளடக்கம் என்பது எவரும் எவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ளக் கூடியது அல்ல, அவரவர் வாழ்க்கைப் பார்வை அவரவருக்குப் பெற்றளிக்கும் தனித்தன்மை அது. அதாவது இலக்கியத்தில் புதுமைப்பித்தன் உருவாக்கிய உரைநடை பின் எழுத வந்த பலரிலும் பாதிப்பு செலுத்தியது இல்லையா, அது போன்ற தோரணையில் சத்யஜித்ரே உருவாக்கிய திரைமொழி பாலுமகேந்திராவின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானது. ஆனால் அதன் பயன்பாட்டு ரீதியில் சத்யஜித்ரேவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் பல வித்தியாசங்கள் உண்டு. சத்யஜித்ரே தன் திரை மொழியை பயன்படுத்தி தன் வாழ்வியல் பார்வையைத் தீவிரமான கலைப்படைப்புகளாக்கிக் கொண்டிருந்தார். முக்கியமாக ரேவின் படைப்புகளுக்கடியில் வலுவானதொரு தத்துவார்த்த தேடல் ஆழமாகச் செயல்படுவதுண்டு. அது உலகரங்கில் கொண்டாடப்பட்டு உலகின் மிகமுக்கியமானதொரு இயக்குனராக அவர் அறியப்பட காரணமாக இருந்தது. உலக அரங்கில் அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் ரேவுக்குத் தொடர்ந்து தன் படைப்புகளில் முழு சுதந்திரமும் வாய்த்தது. பாலுமகேந்திராவிடம் அது நிகழவில்லை. பாலுமேகந்திராவின் படங்கள் தத்துவ ரீதியாக மிகக் குறைவான திறப்புகளை மட்டுமே உருவாக்க வல்லவை; அதுவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக மட்டுமே. இது அவரது படைப்புகளின் வீச்சினைக் குறுகலாக்கி விடுகிறது. தவிர அவர் உள்ளூர் சந்தைக்கு ஏற்றபடி பல இடங்களில் வளைந்து கொடுத்துப் போக வேண்டியிருந்தது. கலைத்தரத்தின் மேல் தீவிரமான பற்றும் காதலும் மிக்க பாலுமகேந்திரா, வளைந்து கொடுப்பதை ஆனவரை தவிர்க்க முயன்றார். அது கிட்டத்தட்ட ஒரு போராட்டமாகவே மாறியது. விளைவாக, முதல் படத்தில் துவங்கி இன்றுவரையிலான 31 வருடங்களில் இதுவரை 18 படங்களே அவரால் இயக்க முடிந்திருக்கிறது. இந்த 18 படங்களிலும், 'வீடு', 'சந்தியாராகம்', என்ற இரண்டு படங்களில் மட்டுமே எந்தவித சமரசமுமின்றி தன்னால் முழுச் சுதந்திரத்துடன் இயங்க முடிந்திருக்கிறது என்று அவர் தன் பேட்டி ஒன்றில் பதிவு செய்திருக்கிறார். மிச்சமுள்ள 16 படங்களில் ‘மூன்றாம் பிறை’ போன்ற அற்புதங்களும், "5 பாட்டு, 4 ஃபைட்டு இது தானய்யா நீங்க கேக்குறது" என்று சூழல்‘மேல் கோபம் கொண்டு அவர் இயக்கிக் காட்டிய ‘ நீங்கள் கேட்டவை’ போன்ற சராசரித்தனங்களும் சமபங்கில் நிகழ்ந்திருக்கின்றன.

எனக்கு இதுவரை அவர் இயக்கிய ‘சந்தியாராகம்’ பார்க்கக் கிடைக்கவில்லை. ‘வீடு’ குறுந்தகடுகளாகக் கிடைக்கிறது; சமீபத்தில்தான் பார்த்தேன். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை முக்கியமான படைப்பாகவே தோன்றியது. என் தனிப்பட்ட ரசனையில் ‘மூன்றாம் பிறை’ அவர் இயக்கிய படங்களில் உன்னதமான கலைப்படைப்பாகக் கூடிய அத்தனை சாத்தியங்களும் கொண்டது என்பேன். அதற்குத் தடையாக நிற்பது பாலுமகேந்திராவே பல இடங்களில் குறிப்பிடுவது போல், அதில் அவர் செய்து கொண்டிருக்கும் பல வகை சமரசங்கள். குறிப்பாக, பூங்காற்று பாடலைத் தவிர படத்தில் இடம் பெற்றிருக்கும் பிற பாடல்களையும், படத்தின் இறுதிக் காட்சியையும் சொல்ல வேண்டும். கமல் போன்ற திறமை மிக்கதொரு நடிகர், ரயில்வே நிலையக் காட்சி ஒன்றில் பல வித சர்க்கஸ் காட்சிகளைச் செய்து காட்டி பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தாக வேண்டியிருப்பது தமிழுக்கே உரிய சாபக்கேடு. அத்தகைய அதீதங்கள் மூலமே ஒரு துக்கத்தை தமிழ் மக்களுக்குப் புரிய வைக்க முடிந்திருக்கிறது! அசலில் இதுபோன்ற அதீதங்கள் இல்லாமலே அதே காட்சியை பாலுமகேந்திராவால் வலுவாக உருவாக்கிக் காட்டியிருக்க முடியும். உண்மையில் அந்த இறுதிக் காட்சி பார்வையாளனைக் கவர்வதற்காகப் பயன் படுத்தப்பட்ட உத்திதானே தவிர, கதா நாயகியின் நினைவை மீட்டுக் கொண்டுவர செய்தாக வேண்டிய சாகஸங்களாக எனக்குத் தோன்றவில்லை. ‘வீடு’ படத்தில் பாலுமகேந்திராவுக்கு வாய்த்த சுதந்திரம் ‘மூன்றாம் பிறை’யில் வாய்த்திருந்தால் ஒருவேளை அது அவருக்கு உலக அரங்கில் புகழ் பெற்றுக் கொடுத்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது.

இத்தனைக்கும் நடுவே பாலுமகேந்திரா சினிமா என்று சொல்லத்தகுந்த ஒரு முத்திரை அவரது எல்லாப்படங்களிலும் அழுத்தமாகப் பதிந்திருக்கிறது.

அவரது படங்களுக்கென பொதுவம்சங்களும் பல உண்டு. அவற்றுள் சில:

1) பாலுமகேந்திராவின் படங்களில் வரும் மைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் மிடில் க்ளாஸ்/ லோயர் மிடில் க்ளாஸ் போன்ற சொற்களால் குறிக்கப்படும் நடுத்தர வசதி படைத்த மனிதர்களாக இருக்கிறார்கள். சராசரி கனவுகளுடன் சாதாரணமாக நகர்ந்து கொண்டிருக்கும் அவர்கள் வாழ்வில் சட்டென்று விதிவசமாகப் பெரிய மாற்றம் ஒன்று நிகழ்ந்து அவர்கள் வாழ்வின் போக்கே மாறத் துவங்கி விடும். உதாரணம்: பள்ளிக்கூடத்தில் வாத்தியாராகப் பணிபுரியும் கதாநாயகனின் வாழ்வில் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட பெண் வருகை தருகிறாள் அது அவன் வாழ்வை மாற்றத் துவங்குகிறது ‘(மூன்றாம் பிறை)’, ஸீரியலுக்குக் கதை எழுதும் எழுத்தாளர் ஒருவருக்கு ஆக்ஸிடென்ட் நிகழ்கிறது. அவரது தீவிர ரசிகை ஒருத்தி அவரைக் காப்பாற்றுகிறாள். அந்த ரசிகை கொண்டிருக்கும் அபிமானம் மனநோய் கூறாக மாறி எழுத்தாளரின் வாழ்வு கேள்விக்குறியாகிறது (‘ஜூலி கணபதி’), கண்டிப்பான தந்தையுடன் போராடிக் கொண்டிருக்கும் மகன் ஒருவன் குடித்து விட்டு நண்பர்களுடன் இரவு வீடு திரும்புகையில் போலிஸீடம் மாட்டுகிறான். போலீஸ் ஸ்டேஷனில் ஓரினச்சேர்கையாளன் ஒருவனுடன் மோதல் ஏற்பட அது அவனைக் கொலைகாரனாக்கி வாழ்வை மாற்றி வைத்து விடுகிறது(‘அது ஒரு கனாக் காலம்’)…இப்படி இன்னும் சொல்லிக் கொண்டே செல்லலாம்.

2) அவரது கதையில் வரும் பெண்கள் வழக்கமான தமிழ் சினிமா கதாநாயகிகள் போல் ஊறுகாயாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மாறாக, முழு கவனமும் கொடுக்கப்பட்டு முக்கியமான கதாபாத்திரங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

3) பாலுமகேந்திராவால் பாடல்கள் திரைக்கதையினுள் புகுத்தப்படுவதை ஏற்க முடிவதில்லை. அவற்றைத் தவிர்க்கவோ குறைக்கவோ முயல்கிறார். அது முடியாதென்ற நிலையில், குறிப்பாக மெலடிக்களை உறவின் வளர்ச்சியை சொல்ல பின்னணி இசை போல் பயன்படுத்துகிறார். நடனத்தையும் ஆனவரை தவிர்த்து விடுகிறார். இதனால் சம்பந்தப்பட்ட ஆண்- பெண் இருவரும் வெவ்வேறு இடங்களில் அமர்ந்து பேசிச் சிரிப்பது, கைகோர்த்துக் கொண்டோ தோளுடன் தோள் உரசியபடியோ நடந்து செல்வது, தலைமுடியைக் கோதி விளையாடுவது, போன்ற பிம்பங்கள் படங்கள் தோறும் மீள மீள காணக் கிடைக்கின்றன. இதில் நடை வேகம் உறவின் வளர்ச்சி வேகமாகவும், சிரிப்பு உறவின் கவிதைத்தனமாகவும், சிணுங்கல்கள் சிறு சிறு ஊடல்களாகவும் பாடல்களுக்குள் படத்தொகுப்பின் மூலம் சரியான இடங்களில் இணைக்கப்பட்டு காட்சியாக்கம் பெருகின்றன

4) அவரது படங்களில் முக்கியமாகப் பயன்படுத்தப்படும் இடங்கள் உணவு விடுதிகள். கதாபாத்திரங்கள் சக கதாபாத்திரங்களுடன் காபி பருகிக் கொண்டோ டிபன் சாப்பிட்டுக் கொண்டோ பேசுகிறார்கள்.

5) அவர் இதுவரை காட்டியிருக்கும் அலுவலகங்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. மேஜைகள். அவற்றின் மேல் ஃபைல்கள். அருகில் ஒரு தொலைபேசி. அனேகமாக கதாபாத்திரம் காட்சியின் துவக்கத்தில் கையில் பேனாவை வைத்துக் கொண்டு ஃபைலைப் பார்த்துக் கொண்டிருக்கும். அப்போது வேறொரு கதாபாத்திரம் உள்ளே நுழையும் அல்லது தொலைபேசி சிணுங்கும்.

6) காட்சிக்குள் பதற்றத்தைக் கொண்டு சேர்க்கும் என்று நினைப்பாரோ என்னவோ, சென்னை போன்ற மாநகரின் பரபரப்பு நிலைக்கு பாலுமகேந்திரா அதிகம் காட்சி பூர்வமாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. காட்சிகளுக்கிடையே பொழுதுகளின் மாற்றங்களைக் காட்டும் வகையில் ஒருசில குறுக்குக் காட்சிகளாக மட்டும் காட்டி விட்டு வீடுகளுக்குள் நுழைந்து விடுகிறார். அவரது படங்களில் மாநகரின் வாகனப் போக்குவரத்தும் ஜனசந்தடியும் பெரும்பாலும் ஒலிகளாகவே பயன்படுத்தப்படுகின்றன. அதேசமயம் மலைபிரதேசமோ கிராமத்தையோ வசிப்பிடமாகக் கொண்ட கதாபாத்திரங்கள் என்றால் அதிக உற்சாகத்துடன் இயற்கையை விஸ்தாரமான பின்னணியாகப் பயன்படுத்துகிறார்.

மேற்கூறிப்பிட்ட பொதுஅம்சங்களின் முதல் இரண்டைத் தவிர மற்ற நான்கும் பாலுமேகேந்திராவின் படைப்புலக்குக்கென்று ஒரு எல்லையை உருவாக்கி பார்வையாளன் முன்வைக்கிறது. எல்லை என்பது சில சமயம் அனுகூலம் சேர்க்கும் வசதியாகவும், சில சமயம் பாரமானதொரு தடையாகவும் அமைந்து விடும் தன்மை கொண்டது. ஆகவே அவரவர் பார்வைக் கோணத்திற்கேற்ப சில எல்லைகள் சுவாரஸ்யமானதாகவும் சில எல்லைகள் சலிப்பூட்டுவதாகவும் தோன்றக்கூடும். அவற்றைத் தாண்டி இது பாலுமகேந்திரா கட்டமைத்துக் காட்டும் அவருடையதேயானதொரு உலகம் என்று புரிதல் கொள்வோமானால் அதன் மூலம் ஒரு பார்வையாளனாக வேறு சில புரிதல் தளங்களுக்கு நம்மை நாமே நகர்த்திக் கொள்ள அது வசதி செய்து கொடுக்கும்.

மற்றபடி, நம் சமூகத்தில் வணிகம் சார்ந்தே எல்லா விஷயங்களிலும் வெற்றி- தோல்வி போன்ற பதங்கள் பொருள் கொள்கின்றன. ஒரு சினிமா ரசிகனாக என்னால் இதை சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. பெங்காலியில் எத்தனையோ பணம் சம்பாதித்த இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் எவரும் அவரவர் காலத்தைக் கடந்து நினைவில் வைத்துக் கொண்டிருக்கப் போவதில்லை. ஆனால் சத்யஜித்ரே இன்னும் 100 ஆண்டுகளானாலும் உலகெங்கிலும் பல சினிமா ஆர்வலர்களின் நினைவில் தங்கி இருப்பார். அதுவே ஒரு கலைஞனின் வெற்றி. சொல்லப்போனால் ஒரு மானுட வாழ்வின் வெற்றியும் கூட.

தமிழில் இனி எப்போதும் தமிழ் சினிமாவின் கலைத்தரம் பற்றி ஒருவர் பேசத் துவங்கினால், அதன் ஆரம்பப் புள்ளி, தமிழ்த்திரையில் ஊடகம்சார் அமைதியை முயன்று பார்த்தவர், நுட்பமானதொரு திரைமொழியை அறிமுகபடுத்தியவர், வணிகத்தைத் தாண்டி தீவிரமான கலை ஈடுபாடு காட்டியவர், என்ற வகையில் பாலுமகேந்திரா பற்றிய பேச்சாகவே இருக்கும். அப்படிப் பார்த்தால் தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா அளவுக்கு வெற்றி பெற்ற இயக்குனர் இதுவரை வேறொருவர் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

Thursday, December 9, 2010

பெண் பார்த்தல்.....

கவிதைக்கு முன், ஒரு கட்டுக்கதை: இக்கவிதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் யாவும் கற்பனையே. அவை, யாரையும் குறிப்பிடுவன அல்ல.


'மான்' வேட்டையென நினைத்து
புறப்பட்ட எனக்கு
'புலி' வேட்டையாய் இருக்கிறது
பெண் பார்த்தல்.

வரன் தேடும் க(கா)ண்டத்தில்..
பெற்றோர்கள் விலகி நிற்க
கேள்விகளாலே
வேள்வி செய்கிறார்கள்
இன்றைய
நாகரிக பெண்கள்.

பேசும் முன்பே
'சிஸ்டர்ஸ்' இருக்காங்களா? என
சுதாரித்து கொண்டவள்
பெயர் பவித்ரா.

பேமலிக்கு நீங்க வாங்கற
'பே' பத்தாதே என்று
பின்வாங்கிய
ப்ரியா ஒரு
ப்ரோஜக்ட் லீடர்.
நான்
முதன் முதலாக
பேசியவள்.

'உங்க பேருல
வீடு ஏதும் இருக்காவென'
வினவினாள்
வேலை தேடும்
விலாசினி.

மூன்று நாட்கள்
முழுதாய் பேசியபின்
மேலோட்டமாக சொன்னாள் தன்
'முன்னாள் கணவனை' பற்றி.
ஐ.டி. திவ்யா.

பேச்சுவாக்கில் என்
'ப்ராபர்டிஸ்' பட்டியல்
கேட்டுக்கொண்ட
பத்மாவதிக்கு
பேங்க்கில் வேலை.

'நம்ம மேரேஜுக்கு அப்புறமும்
அவனோட ப்ரண்ட்ஷிப் வச்சுப்பேன்'
-இப்படி
கூலாக சொன்னவள்
'கால்சென்டர்' லக்ஷ்மி.

இனி
ஆண்களுக்குதான்
கேட்கவேண்டுமோ?
இட ஒதுக்கீடு.

'ஏதாவது குறை
இருக்கா?' என்று
விசாரிக்கிறார்கள்
சரியென்று
என்னை விட
ஏழை குடும்பத்தில்
பெண் பார்த்தால்.

கல்யாண மார்கெட்டில்
காணுமிடமெல்லாம்
இன்றைக்கு
'முதிர்' கண்ணன்கள்.

கிராமங்களில்
கள்ளிப்பால்.
நகரங்களில்
கருத்தடை.

'தன்வினை தன்னைச் சுடும்'
என்பது இதுதானா?

நான் பார்த்த
எல்லா பெண்களுமே
என்னிடம் பார்த்தது...

"வீடு இருக்கா இல்லை
'கேஷ்' இருக்கா?"


வரன் தேடும்
எந்த பெண்ணும்
இதுவரைக்கும் பார்க்காதது....

"கேரக்டர்" இருக்கா?.


கவிதை : இன்பா

கடைக்காரர் கமெண்ட்:
இப்படி புலம்பறதை விட்டுட்டு காசு சம்பாதிக்க வழி தேடறதுதான் புத்திசாலித்தனம்.
என்னங்க செய்யறது? கல்யாணத்தை விடுங்க. பணம்தான் இன்னைக்கு மனுஷன் வாழறதுக்கே தகுதின்னு ஆகிப்போச்சு இல்லீங்களா?.

அப்புறம் நண்பர்களே.
இது எங்க கடைத்தெருவோட 100 வது ஸ்பெஷல் சரக்கு.
இந்த வலைப்பதிவுல இருக்கிற வாடிக்கையாள அன்பர்களுக்கும், படிக்கின்ற உங்களுக்கும் ரொம்ப..ரொம்ப நன்றிங்க.

Monday, December 6, 2010

விக்கிலீக்ஸ் - ஒரு முழுமையான அலசல்.


அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் குறித்து 1961-62இல் யேல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி மில்கிராம் நடத்திய ஆய்வுகளில், ‘தங்கள் செயல் குறித்துத் தாங்களாக முடிவெடுக்கும்போது மனிதர்கள் செய்யத் தயங்குகிற பல வன்முறைச் செயல்களை அதே மனிதர்கள் அவை தங்களுடைய மேலதிகாரிகளின் உத்திரவுகளாக வருகிறபோது செய்யத் தயங்குவதில்லை’ என்பதைக் கண்டுபிடித்தார். ராணுவம், உளவு, காவல் துறைகளில் பணியாற்றும் பெரும்பான்மையானோர் தங்களது தனிப்பட்ட வாழ்வில் மிக மென்மையான மனிதர்களாக இருந்தபோதிலும் தங்கள் பணிகளின்போது தயங்காது பெரும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்.

மதம், குடும்பம், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் முதல் நிர்வாகம், ராணுவம்வரை சமூக, அரசு நிறுவனங்கள் அனைத்தும் கீழ்ப்படிதலை வற்புறுத்துவதற்கு இதுவே காரணம். மனித வரலாற்றில் நிகழ்ந்த அத்தனை மாற்றங்களும் கீழ்ப்படிய மறுத்தவர்களாலேயே நிகழ்ந்தன. இவையே மனித வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கின்றன. ராணுவம், உளவு, காவல் துறைகள் பெரும் வன்முறைக்கான கருவிகளாக இருப்பதாலேயே அவற்றில் முழுமையான, கேள்விக்குட்படுத்த முடியாத கீழ்ப்படிதல் விதியாக இருக்கிறது.

இன்று ஊடகத் துறையில் இத்தகைய பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கும் விக்கிலீக்ஸ் வலைத்தளத்தின் நிறுவனரும் தலைமையாசிரியருமான ஜூலியன் பால் அஸாஞ் தனது சிறுவயது முதல் கீழ்ப்படிதலை வெறுத்தவர். பள்ளிகள், பல்கலைக்கழகங்களில் எதிர் பார்க்கப்படும் ஆரோக்கியமற்ற கீழ்ப்படிதலை அவருடைய அம்மா விரும்பாத காரணத்தினாலேயே தன் மகனுக்கு வீட்டிலேயே கல்வி கற்பித்தார். 2010 ஜூலை 25, ஊடக வரலாற்றில் ஒரு பெரும் திருப்பு முனையை ஏற்படுத்திய நாள். ஆப்கானிஸ்தானில் 2004 முதல் 2010 வரையில் அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ படைகளின் செயல்பாடுகள் பற்றிய 91,000 ஆவணங்களில் 76,000 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வலைத்தளத்தில் அன்று தான் வெளியிடப்பட்டன. இன்னும் 15,000 ஆவணங்கள் வெளியிடப்படாமல் விக்கிலீக்ஸ் வசமிருக்கின்றன. இவை வெளியிடப்படும்பட்சத்தில் இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள - தாலிபன் பற்றி நேட்டோ படைகளுக்குத் தகவல்கள் கொடுத்த ஆப்கானியர்கள், ராணுவ வீரர்கள் உட்படப் - பலரின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே வெளியிடப்படாமல் உள்ளன. இந்த ஆவணங்கள் போர்க்களத்தில் இருக்கும் ராணுவ வீரர்கள், உளவுத் துறை அதிகாரிகளால் எழுதப்பட்டவை. இவை கொள்கை முடிவுகள் சம்பந்தமானவையோ ராணுவ நடவடிக்கைகள் பற்றிய விளக்கக் குறிப்புகளோ அல்ல. எதிரிகளின் (தாலிபன்கள்) நடவடிக்கைகள், தாலிபன்களைப் பற்றித் தகவல்கள் தருபவர்கள், போர்க்களத்தில் நடந்தவை பற்றிய நேரடியான குறிப்புகளான இவை அமெரிக்க ராணுவத்தால் ரகசிய ஆவணங்களாகக் (classifed documents) கருதப்படுபவை. இவற்றை விக்கிலீக்ஸுக்குத் தந்தது யார் என்பது யாருக்கும் தெரியாத ரகசியம், ஜூலியன் அஸாஞ்சிற்குக்கூடத் தெரியாது என்பதுதான் இதன் சிறப்பு. தங்களுக்குத் தகவல்களை, ரகசிய ஆவணங்களைத் தருபவர்கள் யார் என்பது இந்த வலைத்தளத்தை நடத்துபவர்களுக்கு எப்படித் தெரியாதோ அதைப் போலவே தகவல்களைத் தருபவர்களால் விக்கிலீக்ஸ் சம்பந்தப்பட்டவர்களைத் தொடர்புகொள்ளவோ அறிந்துகொள்ளவோ முடியாது. இந்த வலைதளத்தின் கட்டுமானம் அத்தகையது.

சில சமயங்களில் கற்பனைகளைவிட உண்மைகள் அதிசயமானவை என்று சொல்லப்படுவதுபோல் ஜூலியன் அஸாஞ்சின் வாழ்க்கையும் விக்கிலீக்ஸ் வலைதளம் செயல்படும் விதமும் ஜான் கிரிஷாம் நாவல்களைவிடப் புதிர்கள் நிறைந்தவை. இவருக்கென்று சொந்தமாக வீடு கிடையாது, நாடு நாடாகச் சுற்றிக்கொண்டேயிருப்பவர். நண்பர்கள், நண்பர்களின் நண்பர்களுடைய வீடுகள் என இவர் தங்குமிடங்களும் மாறிக்கொண்டேயிருக்கும். அடிக்கடி தனது மின்னஞ்சல் முகவரிகளையும் செல்பேசி எண்களையும் மாற்றிக்கொண்டேயிருப்பார். இவர் எங்கிருக்கிறார் என்பது இவருக்கு மிக நெருக்கமானவர்களுக்கே தெரியாத விஷயம். இவரைப் பத்திரிகைகள் புதிர் மனிதர் (man of mystery) என்றழைப்பது பொருத்தமானதே. பல நாடுகளின் அரசுகளுக்கு மிகப் பெரும் தலைவலியாக, குடைச்சலாக இருக்கும் இந்த வலைத்தளத்திற்கான நிரந்தர ஊழியர்கள் ஐந்து பேருக்கும் குறைவே. ஆனால் பல நாடுகளில் பகுதி நேர ஊழியர்களாக, தன்னார்வத் தொண்டர்களாக இருப்பவர்கள் சுமார் நூறு பேர். இந்த வலைத் தளத்தை நடத்துவதற்கென ஓரிரு கணிப்பொறியாளர்கள் இருக்கின்றனர். இவர்களில் மிகப் பெரும்பாலானவர்களுக்குத் தங்களது சக ஊழியர்களைப் பற்றி எதுவுமே தெரியாது என்பது இதில் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய விஷயம். இவர்கள் அனைவரையும் இணைக்கும் ஒரே புள்ளி ஜூலியன் அஸாஞ். பல அரசுகள், பன்னாட்டு நிறுவனங்களின் ரகசியங்களை உலகிற்கு அம்பலப்படுத்தும் இந்த அமைப்போ மிக ரகசியமாகச் செயல்படுவது ஒரு முரண்நகை. ஆனால் இது தவிர்க்க முடியாதது. தங்களைப் பற்றிய ரகசியங்கள் ஒருபோதும் வெளியாக மாட்டா என்னும் சூழல் தரும் துணிவால், அரசாங்கங்களாலும் கொள்கைவகுப்பாளர்களாலும் மக்களிடமிருந்து மறைக்கப்படும் பல ரகசியங்களையும் ஊழல்கள் குறித்த ஆவணங்களையும் விக்கிலீக்ஸுக்கு அளிக்க உலகெங்கும் பலர் (whistle-blowers) முன்வருகின்றனர். (இந்தியாவில் இவ்வாறு ஊழல் குறித்த ரகசியங்களை அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் வெளிப்படுத்திய பலர் ஊழலில் சம்பந்தப்பட்டவர்களால் கொல்லப்பட்டதை நினைவுபடுத்திக் கொள்க.)

கணிப்பொறியிலும் சங்கேத மொழிகளை எழுதுவதிலும் அவிழ்ப்பதிலும் நிபுணராக இருக்கிற காரணத்தினாலேயே இத்தகைய வலைத்தளத்தை அஸாஞ்சால் உருவாக்க முடிந்தது. எல்லோருக்கும் எல்லாத் தகவல்களும் கிடைக்கும்படியானவையாக இருக்க வேண்டுமென்பதே இவரது முக்கியமான கோட்பாடு. பல அநீதிகளுக்குக் காரணங்களாக அமைவது, தேசிய நலன்கள் என்னும் பெயரில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் இருக்கும் விஷயங்கள் பொதுமக்களின் பார்வையிலிருந்து மறைக்கப்படுவதே என்பதை மிகத் தெளிவாக உணர்ந்த இவருக்கு பிரான்ஸ் காஃப்கா, ஜார்ஜ் ஆர்வெல் போன்றோர் மிகப் பிடித்தமான எழுத்தாளர்களாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

பத்து லட்சத்திற்கும் அதிகமான ஆவணங்கள் விக்கிலீக்ஸ் ஆன்லைனில் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் அதிகமான வழக்குகளை இந்த வலைத்தளம் சந்தித்துள்ளது. இதன் உள்ளடக்கமானது உலகெங்கும் இருபதுக்கும் அதிகமான serverகளில் பராமரிக்கப்படுவதாலும் நூற்றுக்கணக்கான இணைய முகவரிகளில் செயல்படுவதாலும் விக்கிலீக்ஸில் வெளியிடப்படும் ஆவணங்களை வலைத்தளத்திலிருந்து அகற்றுவது என்பது உலகளாவிய இணையத்தையே முடக்கினால் மட்டுமே சாத்தியம். தனது ராணுவ நடவடிக்கைகளை இந்த அளவிற்கு அம்பலப்படுத்திப் பெரும் குடைச்சலைத் தந்திருக்கும் இந்த வலைத்தளத்தை அமெரிக்காவால் ஒன்றும் செய்ய முடியாமல் போனதற்கு இதுவே காரணம்.

இப்போது வெளியிடப்பட்டுள்ள 76,000 ஆவணங்கள் இதுவரை வெளியுலகம் அதிகம் அறியாதிருந்த பல ராணுவ நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியிருக்கின்றன. இவை அதிர்ச்சி தரும் ரகசியங்கள் அல்ல, ஏனெனில் இவற்றில் பல அரசல் புரசலாக ஏற்கனவே வெளிவந்தவை. இவை அனைத்தும் ஏற்கனவே அறிந்த விஷயங்கள்தாம் என வெள்ளை மாளிகை ஒப்புதல்வாக்கு மூலம் தந்தது. ஆப்கன் போர் குறித்த எங்களது பொது விவாதங்களில் இடம்பெறாத எந்த விஷயத்தையும் இந்த ஆவணங்கள் வெளியிட்டுவிடவில்லை என்றும் இப்போர் குறித்த தனது புதிய வியூகத்தைச் (மேலும் 30,000 அமெரிக்க ராணுவத் துருப்புகளை ஆப்கான் அனுப்புவது) சரி என்பதை இந்த ஆவணங்கள் காட்டுவனவாகவும் ஒபாமா குறிப்பிட்டார்.

இவ்வளவிற்குப் பிறகும் இது ஏற்படுத்தியிருக்கும் அதிர்வலைகள் சாதாரணமானவையல்ல. (அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குவது அனைவருக்கும் தெரிந்த மிகச் சாதாரண விஷயம் என்றபோதிலும் தெஹல்காவின் ரகசியக் கேமராவால் படம்பிடிக்கப்பட்ட, பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவராக இருந்த பங்காரு, லஷ்மணன் பணத்தை வாங்கும், காட்சியைப் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்வுகளைப் போன்றவை இவை.) மேலும் இந்தக் குறிப்புகளை எழுதியது பத்திரிகையாளர்களோ வேறு பார்வையாளர்களோ அல்ல. மாறாக இக்குறிப்புகள் போர்க்களத்திலுள்ள அமெரிக்க ராணுவ வீரர்களால், உளவுத் துறை அதிகாரிகளால் தங்களது மேலதிகாரிகளின் பார்வைக்காக எழுதப்பட்டவை. இந்த ஆவணங்களின் நம்பகத்தன்மை முழுமையானது என்பதை இவை பற்றி அமெரிக்க ராணுவத்தில் யாரும் கேள்வியெழுப்பவில்லை என்பதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம்.

ஆப்கன் போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை எப்போதும் மிகக் குறைத்தே சொல்லப்பட்டது. பொதுமக்கள் போரில் கொல்லப்படுவது கருத்தில் கொள்ளப்படாத பாதிப்பு (collateral damage) எனக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இவற்றில் பலவும் ராணுவத்தினரின் அலட்சியமான போக்கால் நிகழ்பவை. பொதுமக்களைக் கொல்வது அவர்களது நோக்கமாக இல்லை என்பது உண்மையே. ஆனால் பொதுமக்கள் கொல்லப்படுவதைப் பற்றி அக்கறையற்றவர்கள் இவர்கள். இதைப் பற்றிக் கூறுகிறபோது, “தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிற எறும்புகளைக் கொல்வது நமது நோக்கமல்ல. ஆனால் நாம் நடக்கிறபோது அவ்வாறு கொல்லப்படுகிற எறும்புகளைப் பற்றி நமக்கு அக்கறை கிடையாது என்பதைப் போன்றது இது” என்றார் நோம் சோம்ஸ்கி. இந்தப் போரில் 2004 -10 காலகட்டத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,000த்திற்கும் அதிகம். இதில் எதிரிகள் 15506 பேர், பொதுமக்கள் 4232 பேர், ஆப்கானிஸ்தான் ராணுவத்தினர் 3819 பேர், நேட்டோ படையினர் 1138 பேர். அதாவது நேட்டோ படை வீரர் ஒருவருக்கு 20 ஆப்கானியர்கள் வீதம் பலியாகியுள்ளனர். இதில் எதிரிகள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் தாலிபன்கள். ஆனால் தாலிபன்களோடு சம்பந்தமற்றவர்களும் அவர்களின் அரசியல்பால் அனுதாபம் கொண்டிருந்தவர்களும் எதிரிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுவிடுகின்றனர் என்பதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். ஏற்கனவே பல மேலை நாட்டுப் பத்திரிகைகள் அப்பாவிப் பொது மக்கள் இவ்வாறு கொல்லப்படுவதை அம்பலப்படுத்தியிருந்தபோதிலும் இப்போது அதைப் பற்றி முழுமையான தகவல்கள் கிடைத்துள்ளன. (நேட்டோ படைகள் தங்கள் தேவைக்காகவாவது இவ்வாறு தகவல்களை நேர்மையாகப் பதிவுசெய்கின்றன. ஆனால் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகள் குறித்து இப்படிப்பட்ட துல்லியமான பதிவுகள் எவையும் இருக்கமாட்டா என உறுதியாக நம்பலாம். வாரென் ஆண்டர்சனை வெளியேற அனுமதித்தது யார் என்பது பற்றியும் நெருக்கடி நிலை குறித்த குடியரசுத் தலைவரின் பிரகடனம் பற்றியுமே நம்மிடம் ஆவணங்கள் எவையுமில்லை என்று இந்திய அரசாங்கம் கூறுகிறது.)

இந்த ஆவணங்களில் வெளியான அடுத்த மிக முக்கியமான விஷயம் டாஸ்க் போர்ஸ் 373. நேட்டோ படைகளின் சிறப்புப் பிரிவு இது. தாலிபன், அல் கய்தாவைச் சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான முக்கியப் புள்ளிகளைத் தேடிச் சிறைபிடிப்பது அல்லது கொல்வது என்பதே இதன் பணி. பிடிபடுகிறவர்கள்மீது வெளிப்படையான வழக்கு விசாரணை எதுவும் இருக்காது. இப்பணிக்குக் குறுக்கீடாக அமைந்த அப்பாவி பொதுமக்களின் உயிர் வழக்கம்போல் ஒரு பொருட்டாக மதிக்கப்படுவதில்லை. நீதிமன்றங்களுக்கு அப்பாற்பட்ட இத்தகைய கொலைகளைப் (extrajudicial killings) பற்றிய வதந்தி களை ஆராய 2008 மே மாதம் ஆப்கானிஸ்தான் சென்றிருந்த மனித உரிமைகளுக்கான ஐநாவின் சிறப்புத் தூதுவர் பேராசிரியர் பிலிப் அல்ஸ்டன் ஆப்கானில் உள்ள சர்வதேசப் படைகள் வெளிப்படையாகவோ யாருக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டதாகவோ இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் தாலிபன், பாகிஸ்தானின் உளவுத் துறையான ஐஎஸ்ஐ இடையிலான உறவு குறித்த ஆவணங்களே இந்தியாவில் அதிகக் கவனம்பெற்றன. ஆனாலும் ஏற்கனவே சொல்லப்பட்டதுபோல் தாலிபனுடனான ஐஎஸ்ஐ உறவு ஏற்கனவே உலகறிந்த ஒன்று. Êசமீபத்தில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், ‘‘பாகிஸ்தான் அரசாங்கத்தின் அதிகாரிகள் சிலருக்கு ஒசாமா பின் லேடன் இருக்குமிடம் தெரியும் என்று தான் நம்புவதாகக்’’ குறிப்பிட்டார். ஐஎஸ்ஐ மூலம் தாலிபன் பெறும் நிதி, ஆயுத உதவிகள் அமெரிக்காவைக் கவலைகொள்ளச் செய்தாலும் அதற்காகப் பாகிஸ்தானைப் பகைத்துக்கொள்ளவும் முடியாது. ஆக, தாலிபன் - ஐஎஸ்ஐ உறவு புதிய செய்தியல்ல என்றாலும் அமெரிக்கா, பாகிஸ்தான் இரண்டுக்குமே இந்த விஷயம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தது தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெளிவாகக் காட்டும் ஒரு விஷயம் இதுதான்: அமெரிக்காவிற்கு ஆப்கான் இன்னொரு வியட்நாம். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் இங்கு முடிவான வெற்றி என்பது அமெரிக்காவிற்குச் சாத்தியமாகப் போவதில்லை என்பதையே இந்த ராணுவ ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆப்கான் போர் எப்படி வியட்நாம் போரை நினைவுபடுத்துகிறதோ அதைப் போலவே விக்கிலீக்ஸ், பென்டகன் பேப்பர்ஸ் (Pentagon Papers) விவகாரத்தை நினைவுபடுத்துகிறது. இரண்டிற்குமுள்ள தொடர்பு மிக நெருக்கமானது. 1967ஆம் ஆண்டு ஜூன் மாதம், அமெரிக்காவின் அப்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சரான ராபர்ட் மெக்னமாரா Vietnam Study Task Force என்னும் குழுவொன்றை அமைத்தார். வியட்நாம் போர் குறித்த அமெரிக்காவின் அரசியல், ராணுவ நடவடிக்கைகளை, முடிவுகளை, 1945 முதல் 1967 வரை நடந்த செயல்பாடுகளைப் பற்றி மிக விரிவான, முழுமையான ஆய்வறிக்கை ஒன்றைத் தயாரிப்பதே இதன் பணி. இத்தகைய குழு அமைக்கப்பட்டது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி லின்டன் ஜான்சனுக்கே தெரியாது.

இக்குழுவில் ராணுவ அதிகாரிகள், பல்கலைக்கழக ஆய்வாளர்கள் போன்றோர் இடம் பெற்றிருந்தனர். அதில் ஒருவர்தான் டேனியல் எல்ஸ்பெர்க். ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றிருந்த இவர் (ஏற்கனவே அமெரிக்க ராணுவத்தில் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர்) ஆய்வுக் குழுவில் செயலாற்றியபோதுதான் வியட்நாம் போர் குறித்த பல விஷயங்களை லின்டன் ஜான்சனும் அவரது நிர்வாகமும் மக்களிடமிருந்து மட்டுமல்ல அமெரிக்க காங்கிரசிடமே (அமெரிக்க நாடாளுமன்றம்) மறைத்திருந்தைத் தெரிந்துகொண்டார். மொத்த அறிக்கை 7,000 பக்கங்கள். குழுவிலிருந்த பலருக்கு இந்த அறிக்கையை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு கிட்டியதில்லை. அறிக்கையை முழுமையாகப் படிக்க வாய்ப்பு கிடைத்த எல்ஸ்பெர்க், 1945இலிருந்து தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஐந்து ஜனாதிபதிகளும் உண்மைகளை மக்களிடமிருந்து மறைத்துவந்ததை அம்பலப்படுத்தினாலொழிய வியட்நாம் போர் குறித்த உண்மைகள் மக்களுக்குத் தெரியப்போவதில்லை என்பதை உணர்ந்தார்.

பென்டகன் பேப்பர்கள் விவகாரம் தனக்கு உந்துசக்தியாக இருந்ததாக ஒரு பேட்டியில் ஜூலியன் அஸாஞ் குறிப்பிட்டிருந்தார். பென்டகன் பேப்பர்ஸ் விவகாரத்திற்கும் விக்கிலீக்ஸ் விவகாரத்திற்கும் ஒரு வேற்றுமை உண்டு. வியட்நாம் போர் முடிந்த பின்னரே பென்டகன் பேப்பர்ஸ் வெளியானது. ஆனால் இப்போது ஆப்கன் போர் நடந்துகொண்டிருக்கும்போதே அதைப் பற்றிய உண்மைகள் அம்பலமாகியிருக்கின்றன. இதன் காரணமாகப் போரின் போக்கில் எத்தகைய மாற்றங்கள் இருக்கும் என்று சொல்வது கடினம். இந்த அளவிற்கு இந்த விவகாரம் பேசப்பட்டதற்குக் காரணமே இது நியூ யார்க் டைம்ஸ், த கார்டியன் ஆகிய பத்திரிகைகளில் வெளியானதுதான். இன்னமும் பாரம்பரியமான நாளிதழ்களின் நம்பகத்தன்மை, செல்வாக்கு வீச்சை இணைய ஊடகத்தால் பெற்றுவிட முடியவில்லை. பாரம்பரியமான நாளிதழ்களும் பத்திரிகையாளர்களும் விக்கிலீக்ஸ் வலைத்தளம் போன்று கட்டுப்படுத்த முடியாதவர்கள் அல்ல. இசைவு உற்பத்தியில் (Manufacturing Consent) அரசுகளும் ஆளும்வர்க்கங்களும் கைதேர்ந்தவை.

ஆனால் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் வேகத்தைப் பார்க்கிறபோதும் ஜூலியன் அஸாஞ் போன்ற மனிதர்களைப் பார்க்கிறபோதும் புது ஊடகங்கள் (new media) அரசாங்கங்களுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பெரும் தலைவலியைத் தர முடியும் என்பதும் எல்லாத் தகவல்களும் எல்லோரின் விரல் நுனியில் என்னும் நிலை உருவாகும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்பது தெரிகின்றன. அதிகாரம் என்ற ஒன்றை இல்லாது செய்வதன் மூலம் மட்டுமே நீதியை நிலைநாட்ட முடியும். கீழ்ப்படிதலும் ரகசியத் தன்மையும் ஒழிவது அதன் முதல்படி.


(நன்றி : காலச்சுவடு பதிப்பகம்).

Thursday, December 2, 2010

மன்மதன் அம்பு - கமல் சார், தேவையா இது?.


மன்மதன் அம்பு படத்தின் பாடல்கள் அனைத்தையுமே கமலே எழுதி இருக்கிறார். ஒரு பாடலை மட்டும் போனால் போகிறது என்று கவிஞர் விவேகாவுக்கு விட்டுகொடுத்து இருக்கிறார்("கந்தசாமி" செண்டிமெண்ட் போலும்!).

இந்த படத்தின் பாடல்களை எழுதிவிட்டு இரண்டு முக்கிய ந(ண்)பர்களிடம் காண்பித்து, விவாதித்து இருக்கிறார் கமல்ஹாசன்.

முதலாமவர், கவிஞர் வாலி.

"நான் எழுதிய மன்மதன் அம்பு பாடல்களை வாலியிடம் படித்து காட்டினேன். திருத்தங்கள் எதாவது தேவை என்றால் செய்துவிடலாம் என்று நினைத்தேன்.ஆனால்,அவர் பாடல்கள் நன்றாக இருப்பதாக கூறிவிட்டார் " என்றார் கமல்.

இரண்டாமவர், கலைஞர் கருணாநிதி. கமலுடன் கலைஞர் என்ன விவாத்தார் என்று பதிவின் கடைசியில் சொல்கிறேன்.

முதலில், படத்தின் பாடல்களை பற்றி பார்ப்போம். ஏற்கனேவே ஹே ராம் படத்தில் "நீ பார்த்த பார்வைக்கு நன்றி" மற்றும் விருமாண்டியில் "உன்னை விட" என்று படல்களை கமல் எழுதி இருந்தாலும், ஒரு முழுமையான பாடலாசிரியராய் அவர் அவதாரம் எடுப்பது இதுவே முதல் முறை.

பாடல்களை கேட்டபின், இது இந்த அவதாரத்துக்கு கடைசி முறையாக இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

படத்துக்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத்.

1."தகிடு தத்தம்" - பாடலை பாடி இருப்பவரும் கமல்ஹாசனே. "போனால் போகுதுன்னு விட்டினா, கேணைன்னு ஆப்பு வைப்பாண்டா" என்று கமல் எழுதி இருக்கிறார். சுமார் ரகம்.

பேசாமல், இந்த பாடலை பேரரசுவிடம் கொடுத்து இருக்கலாம்.

2.who's the hero - என்று ஆங்கில வரிகளில் தொடங்கும் பாடல். பாடலை பாடி இருப்பவர் "செல்வராகவன்" புகழ் ஆண்ட்ரியா. அவரை போலவே செக்சியான குரல். படத்தோடு ஒன்றி வரும் பாடல் என்று தோன்றுகிறது.

பாதி பாடல் ஆங்கிலத்தில் இருக்கிறது. படத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டும்.
3."நீல வானம், நீயும் நானும் " என்று தொடங்கும் பாடல்.

இதை பாடி இருப்பவரும் கமலே.

"வையமே கோவிலாய், வானமே வாயிலாய், பாயிலே சேர்ந்து நாம் கூடுவோம்" என்று த்ரிஷாவை அழைக்கிறார் கமல்.

படத்தில் எனக்கு பிடித்த பாடல். நல்ல மெலடி. கமலுக்கு பதில் கார்த்தி பாடி இருந்தால், இன்னும் நன்றாக வந்து இருக்கும்.

4."உய்யாலே" என்று தொடங்கும் பாடல். சுசித்ரா மற்றும் கார்த்திக் குமார் பாடி இருக்கிறார்கள்.

இந்த பாடலை மட்டும் விவேகா எழுதி இருக்கிறார். சுமார் ரகம். "அண்டங்கக்காய் கொண்டைக்காரி" நினைவு வருகிறது பாடலை கேட்கும்போது.

5.ஒரு கவிதையாய் எழுதி, அதை த்ரிஷாவுடன் சேர்ந்து ப(டுத்தி)டித்து இருக்கிறார் கமல்ஹாசன். கவிதையின் சில வரிகளை பாருங்கள்.

கண்ணோடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா?
ஒழுக்கம் கெட்டவள் எச்சரிக்கை

ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்தபின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை

இந்த கவிதையுடனே, தனக்கு எந்த மாதரி கணவன் வேண்டும் என்று
ஸ்ரீ வரலட்சுமிக்கு ஒரு பெண் வரம் கேட்பதாகவும் கூடுதலாக ஒரு கவிதையை எழுதி, அதை படித்துஇருக்கிறார் கமல்ஹாசன்.

காம கழிவுகளை கழுவவும், சமையலறையில் உதவும் கணவன் வேண்டும் என்று வரிகள். "முற்றும் துறந்த பெண்களோடு, அம்மண துறவிகள் கூடிட கண்டேன்". என்றும், ரங்கநாதரையே வம்புக்கு இழுக்கும் வரிகளும் இருக்கின்றன.

இலக்கியத்தில், இசம் இசம் என்று சொல்வார்களே. அது போல இருக்கிறது கவிதை.

கவிதை நடையும், வரிகளிலும் அரத பழசான "மாலன்,பாலகுமாரன்" காலத்து பாணி.

6.மன்மதன் அம்பு - தேவி ஸ்ரீபிரசாத் பாடி இருக்கும் பாடல்.

வழக்கும்போலேவே, DSP என்று தன்னை அறிமுகபடுத்தி கொண்டு பாடி இருக்கிறார். வழக்கமான அவர் ஸ்டைல் பாடல்.

படம் முடிந்து, எல்லாரும் எழுந்து வீட்டுக்கு கிளம்பும்போது திரையில், தொழில்நுட்ப கலைஞ்சர்களின் பெயர்கள் வரும்போது ஒலிக்கும் பாடல் என்று நினைக்கிறேன்.

இது தவிர, தீம் இசையும் இருக்கிறது. கமலுக்கு பதில், கவிஞர் வாலியே எழுதி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

கமல் எழுதிய இந்த படத்தின் பாடல்களை கேட்டுவிட்டு கலைஞர் " என்ன கமல். நீங்களே பாட்டெல்லாம் எழுதிடீங்களே " என்றார்.

அதற்க்கு, கமல் சொன்ன பதில் " எழுத தெரிஞ்சவங்க கம்மி ஆய்ட்டாங்க" .

"உன்னை போல் ஒருவனில்" கவிஞர் மனுஷிய புத்திரன் கிடைக்கவில்லையா? இன்னும் எவ்வளவோ திறமையான கவிஞ்சர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்?

குடும்ப டிவிக்கள் இருக்கையில்,இந்த படத்தின் பாடல் வெளியிட்டு உரிமையை விஜய் டிவிக்கு தந்துவிட்டார் படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின். பாடல்களை கேட்டுவிட்டுதான் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.

மொத்தத்தில்,நம் எதிர்பார்ப்புக்கும் குறைவான தேவியின் இசைக்கு கரடு முரடாக பொருத்தமே இல்லாமல் இருக்கறது கமலின் வரிகள்.

படத்தின் ஸ்டில்லில், கமலுக்கு அடங்காத காளை போலவே, இன்னும் கமலின் கைகளில் சிக்காமல் திமிறுகிறது கவிதைகளும், பாடல்களும்.
கமல் சார், தேவையா இது??.

-இன்பா

 
Follow @kadaitheru