Friday, October 16, 2009

தீபாவளி பட்ஜெட் - ஒரு பட்டாசு ரகம்


தீபாவளி என்ற பண்டிகை கொண்டாடுவதர்க்காக இனிமேல் நாம் மாதந்தோறும் சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வைக்கவேண்டும் என்று தோன்றுகிறது விலைவாசி பட்டியலை பார்க்கும்போது.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அனைத்து பொருட்களின் விலையும் 20 முதல் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சில பொருட்களின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டு தீபாவளி, வெளிப்பார்வையில் இனிப்பாக அமைந்தாலும், உள் மனதில் கசப்பை கொடுக்கும் அளவுக்கு மாறி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இந்தியாவின் பங்குச் சந்தையில் நிலையில்லா தன்மை, ஆன்-லைன் வர்த்தகம் ஆகியவற்றால், அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையாக உயர்ந்துள்ளன.


ரெடிமேட் ஆடைகள் விலை, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், 40 முதல் 60 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. பிட் துணி, மீட்டருக்கு குறைந்தது 15 முதல் 25 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு 250 ரூபாய்க்கு விற்ற காட்டன், பாலியஸ்டர் சேலைகள், தற்போது, 300 முதல் 350 ரூபாய் வரை விற்கிறது. சுரிதார், ஜீன்ஸ் பேன்ட், உள்ளாடைகள் என, அனைத்து வகை துணிகளும் பாகுபாடின்றி 25 முதல் 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.


கடந்த தீபாவளியை ஒப்பிடுகையில், அரிசி விலையில் ரக வாரியாக 10 முதல் 30 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. கிலோ 48 ரூபாய்க்கு விற்ற சீரக சம்பா பிரியாணி அரிசி, தற்போது, 55 ரூபாய்க்கு விற்கிறது. அதேபோல், பொன்னி, கர்நாடகா டீலக்ஸ், ஐ.ஆர்., 20, கிராந்தி ரக இட்லி அரிசி என அனைத்தின் விலையும் உயர்ந்துள்ளது. துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த தீபாவளியின் போது, கிலோ 190 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆட்டுக்கறி, தற்போது, 210 முதல் 230 ரூபாய் வரை விற்பனையாகிறது. இந்த விலை, தீபாவளி அன்றும், அதற்கு அடுத்த நாளும் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


இந்த விலை உயர்வில், தங்க நகைகளுக்கும் விதி விலக்கு இல்லை. கடந்த ஆண்டு 1,120 ரூபாய்க்கு விற்ற ஒரு கிராம் தங்கம், தற்போது, 1,480 ரூபாய் வரை விற்கிறது.


தீபாவளியின் போது தித்திக்கும் பலகாரங்கள் தான் நினைவுக்கு வரும். ஆனால், நடப்பு ஆண்டு இவற்றின் மூலப் பொருட்களான சர்க்கரை, நெய், வெண்ணெய், மாவு வகைகளின் விலை அதிகரித்துள்ளதால், பலகாரங்களின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வியாபாரிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு, கிலோ 140 ரூபாய் வரை விற்ற சுவீட்ஸ் வகைகள், இந்த ஆண்டு 200 ரூபாயை தாண்டும். பால் விலை உயர்வு காரணமாக, மில்க் சுவீட்சின் விலை, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர உள்ளது' என்றனர் வியாபாரிகள்.


மக்களுக்கு ஒரே ஆறுதல் தரும் செய்தியாக, பட்டாசு விலை மட்டும் 5 சதவீதம் குறைந்துள்ளதுதான்.


வேறுவழியில்லை. நமக்காக இல்லாவிட்டலும், நம் வீட்டில் உள்ள குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக நாம் தீபாவளி போன்ற பண்டிகைகளை கொண்டாடவேண்டும்தானே?.


கடைக்காரர் கமெண்ட்:
இதில் சொல்லாமல் விட்ட விஷயம்... தீபாவளிக்கு வரும் புது படங்களோட டிக்கெட் விலை...ஒரு வாரத்துல சம்பாதிக்கனும்ன்னு தியேட்டர்ல கன்னாபின்னான்னு ஒரு டிக்கெட்டுக்கு விலை சொல்றாங்க...தியேட்டர்போய் ஒரு ஆளு படம் பாக்குற செலவுக்கு.. இன்னும் ரெண்டு மூணு நாள் வெயிட் பண்ணினா.. நல்ல விசிடி வாங்கி குடும்பத்தோடு வீட்லயே பாக்கலாம்...திருட்டு விசிடியை ஒழிக்கன்னும்னா முதல்ல டிக்கெட் விலையை குறைக்கணும்...இந்த விஷயத்தை யாராவது சினிமாக்காரங்களுக்கு புரியவச்சா புண்ணியமா இருக்கும்...



கடைத்தெருவுக்கு வருகை தரும் அனைத்து நண்பர்களுக்கும்,அவங்க குடும்பத்துக்கும் எங்கள் கடைக்காரர்கள் சங்கம் சார்பாக இனிய.............






பதிவு : இன்பா

1 comments:

R.Gopi said...

தங்களுக்கும், குடும்பத்தார்க்கும் என் மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

என் தீபாவளி பதிவை இங்கே வந்து பாருங்கள்... ஆச்சரியம் காத்திருக்கிறது...

 
Follow @kadaitheru