Thursday, April 26, 2012

பகவத் கீதையும், அலெக்சாண்டரும்

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக அழுகிறாய்?

எதை நீ கொண்டுவந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், வீணாவதற்கு?

எதை நீ எடுத்துக்கொண்டாயோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ அதை இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ, நாளை அது மற்றவருடையது ஆகிறது
மற்றொரு நாள் அது வேறொருவர் ஆகிறது.

-பகவத் கீதையின் சாரம்

மாமன்னன் அலெக்சாண்டர், உலக நாடுகள் அனைத்தையும் தன் காலடியில் கொண்டுவந்த மாபெரும் அரசன். தனது வெற்றிப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பினான். தன் தாயின் முகத்தை பார்க்க ஆவலுடன் விரைந்தான்.

ஆனால்,கிரீக்கு போகும் வழியிலேயே நடக்கவும் இயலாத அளவுக்கு கொடும்நோய்க்கு ஆளானான். தனது பணம்,படைகள், கொள்ளையடித்த சொத்துக்கள் யாவும் அர்த்தமற்று போனதை அவன் உணர்ந்த அந்த நிமிடம்.....

அலெக்சாண்டர் தி கிரேட் ஞானம் பெற்ற அந்த நிமிடம்...அவனது வாழ்க்கையில் மிகவும் அர்த்தமிக்கது...அவனது வெற்றிகளை காட்டிலும் மகத்தானது.

மரணத்தின் அழைப்பை உணர்ந்த அவன்,அப்போது அவனது உதவியாளர்களுக்கு தனது கடைசி ஆசைகளை மூன்று கட்டளைகளாக பிறப்பித்தான்.

ஒன்று, தான் இறந்த பின் தனது சவப்பெட்டியை தனது உடற்ப்பயிற்சியாளர்கள் மற்றும் போர்ப்பயிற்சியாளர்கள் சுமக்கவேண்டும்.

இரண்டு, கல்லறைக்கு தனது சவப்பெட்டி செல்லும் வழியெங்கும், அவன் தனது நாடுகளை வென்றதின் மூலம் சம்பாதித்த தங்கம்,வெள்ளி,வைரம் போன்ற கற்களை புதைக்க வேண்டும்.

மூன்று, அவன் தனது கடைசி ஆசையாக கூறியது "எனது திறந்திருக்கும் இரண்டு கரங்களும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு தொங்க விட படவேண்டும்".

தனது இந்த விசித்தரமான மூன்று கடைசி ஆசைகளுக்கு அவன் சொன்ன காரணங்கள்..."இவைகள்தான் இதுவரை நான் கற்ற பாடங்கள்..எனது வாழ்க்கையின் மூலம் உலகுக்கு கிடைக்கும் படிப்பினைகள்" என்றான் அவன்.

முதலில் சொன்ன ஆசைக்கு காரணம்...."இந்த உலகில் மனிதனின் நோயை எந்த ஒரு மருத்துவனாலும் குணப்படுத்த இயலாது. சாவில் இருந்து ஒருவனை யாராலும் தடுக்க இயலாது".

இரண்டாவதாக சொன்ன ஆசைக்கு காரணம்...."எவ்வளவோ செல்வத்தை குவித்தும், நாடுகளை வென்றும் கடைசியில் எதுவும் கூட வராது".

மூன்றாவதாக சொன்ன அவன் ஆசைக்கு காரணம்...."வெறுங்கையோடு வந்தேன் வெறுங்கையோடு செல்கிறேன் என்ற எனது வாழ்வின் தத்துவத்தை உலகம் புரிந்து கொள்ளவேண்டும்".

இதே தத்துவத்தை அவன் காலத்துக்கு முன்பே பகவத்கீதையின் சாரம் சொல்லி இருப்பது இப்போது உங்களுக்கு புரிகிறதா??

மாவீரன் அலெக்ஸாண்டரின் தனது வாழ்வில் இருந்த கற்ற பாடங்களும், பகவத் கீதையின் சாரமும் ஒன்றாகவே இருக்கிறதே.-இன்பா

Sunday, April 22, 2012

ஒதுக்கப்பட்ட ஓமந்தூர் பெருமாள்

இயற்கை எழில் சூழ்ந்த ஒரு கிராமம். அங்கு ஒரு பரந்த, கோடையிலும் நீர் நிரம்பிய ஒரு அழகான ஏரி. அந்த ஏரியின் நீர்த்திவலைகள் மோதி விளையாடும் கரையில் சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முந்திய பெருமாள் கோவில்.

இதுதான் இந்த பதிவின் படங்களில் நீங்கள் பார்க்கும் சிதிலம் அடைந்து, இன்றோ நாளையோ விழுந்து விடும் நிலையில் இருக்கும் இந்த பாழடைந்த கோவில்,
ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவில்.

இத்திருத்தலம் அமைந்து இருக்கும் ஊர் திண்டிவனம் அருகே புதுச்சேரி சாலையில் உள்ள ஓமந்தூர். தமிழகத்தின் முதல் முதல்வரான ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சொந்த ஊர் இது.

ஓமந்துரில் ராமசாமி ரெட்டியாருக்கு தற்போது ஒரு பிரமாண்டமான மணிமண்டபம் கட்டப்பட்டு வருகிறது.

ஆனால், கண்டுகொள்ள படாமல் இருக்கிறார் அதே ஊரில் ஆயிரம் வருடங்களாக சுமார் பத்து அடி உயரத்தில் மூலவராக வீற்றி இருக்கும் வைகுண்ட பெருமாள்.

'அந்த' கோவிலை சுற்றிலும் பான்பராக்/புகையிலை கறைகள். சிதறிகிடக்கும் சிகரெட் துண்டுகள் மற்றும் உடைந்த மதுபான பாட்டில் துண்டுகள். சிறுநீர் கழிக்கும் சிறுவர்கள். கிராமத்துபக்கம் இருக்கும் 'கவர்மெண்டு ஆஸ்பத்திரி' போன்று கேட்பார்அற்று இருக்கும் 'அந்த' இடத்தை பார்க்கும்முன் 'அவரை' பற்றிய ஒரு சிறிய அறிமுகம்.

'நினைமின் மனமே சிவபெருமானை' என்று பாடிய பட்டினத்தார் கி.பி.10 அல்லது 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, பதினெண் சித்தர்களில் ஒருவர். பூம்புகாரில் பெரும் செல்வந்தராக பிறந்த இவருக்கு, சிவனே மகனாக பிறந்து, செல்வத்தின் நிலையாமை குறித்த தத்துவத்தை ' காதற்ற ஊசியும் வாராது காண்கடை வழிக்கே' என்ற ஒரு வரி மூலம் உணர்த்தி யோகி ஆக்கியதாக இவர் வரலாறு கூறுகிறது, (அந்த ஒரு வரியின் அர்த்தம் : கையில் என்ன கொண்டு வந்தோம்.. கொண்டு செல்ல .. நன்றி : படையப்பா ).

அப்படிப்பட்ட பெருமைகளை உடைய பட்டினத்தார் முக்தி அடைந்த சமாதியின் இன்றைய நிலையை அறிய முந்தைய பத்திக்கு முதல் 'பாரா' வை மீண்டும் படிக்கவும். சமாதி,சென்னை திருவொற்றியூரில் இருக்கிறது.


புதுக்கோட்டை-தஞ்சாவூர் சாலையில் இருக்கும் பெருங்களூர் வம்சோத்தாரர்-மங்களாம்பிகா அம்மன் கோவிலுக்குப் போக வாய்ப்பு வந்தது. கோயில் குருக்கள் சொன்னது: “இக் கோயில் புதுக்கோட்டை மன்னரால் பராமரிக்கப்பட்டு அரசின் இந்து சமய போர்டு அதிகாரத்துக்கு மாற்றப்பட்டபின்னர், கோயிலுக்கு தினமும் தரப்படும் நிவேதனப் பொருள்: 200 மி. எண்ணெய், 200 மி. அரிசி".

அறந்தாங்கிக்கு அருகில் இருக்கும் சிங்கவனம் எனப்படும் ஜமீன் கிராமத்துக்கும் போயிருந்தேன். அங்கு மிகவும் பழமையான் (500 ஆண்டுகளுக்கு முன் மராத்திய மன்னரால் கட்டப்பட்டு) பட்டாபி ராமன் கோயிலில் வழிபடலாம் என்று. கோயில் சிதிலமடைந்து, இன்றோ நாளையோ சாகக்கிடக்கும் கிழவனார் போல் காட்சியளித்தது.

கும்பகோணம் அருகே உள்ள கிராமங்களில் புராதன கோவில்கள் பல சிதிலமடைந்து உள்ளன (உ.தா : ஆதனூர்).


சமிபத்தில் வேலூர் அருகே சிறுகரும்பூர் சிவன் கோவிலில் உள்ள 300 வருட பழைமையான மரகத சிலை திருடுபோய்விட்டது. பூட்டிகிடந்த இந்த புராதன கோவிலின் பெருமைகள் சிலைதிருடபட்டதற்கு பின்புதான் 'சன் டிவியால்(?)' உள்ளூர் மக்களுக்கே தெரியவந்திருக்கிறது.

வெற்றி பெற்ற வேட்பாளரை நம்பும் வாக்காளர் போல, பாவங்களை தீர்ப்பதற்கு திருப்பதி கோவிலை மட்டுமே நம்புகிறார்கள் நம் 'பெரிய' மனிதர்கள்.

தமிழக சுற்றுலாதுறை இது போன்ற இடங்களை பட்டியல் போட்டு பராமரித்தால். வரலாற்று தடங்கள் பாதுகாக்கபடுவதோடு, புதிய சுற்றுலா மையங்களை உருவாக்கலாம். செய்வார்களா?

சீரமைக்கவேண்டிய விஷயங்கள் இப்படி நிறைய இருக்கையில், தமிழ்நாட்டில் அங்கங்கே 'ஹைடெக்' கோவில்கள் பல முளைத்து வருகின்றன.

திண்டுக்கல் அருகே ஒரு கோடிசெலவில் கண்ணகி கோவில் அமைக்கப்பட என்ன அவசியம்?

சில வருடங்களுக்கு முன்பு 600 கோடி செலவில் வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோவில் உருவாக்கப்பட்ட 'மர்மம்' என்ன? கேட்டால் கனவு, புதையல் என்று 'விடாதுகருப்பு' பாணியில் கதை சொல்கிறார்கள். கணக்கு,வழக்கு இல்லாமல் சொத்துவைத்திருக்கும் பல 'பெரும்' புள்ளிகளின் 'மாஸ்டர்ப்ளான்' இந்த பொற்கோவில். வேலூரில் ஒரு 'தொழில்' புரட்சி ஏற்படும்அளவுக்கு இந்த கோவிலை பக்காவாக மார்கெட்டிங் செய்துவிட்டார்கள்.இதன் டிரஸ்ட் மதிப்பு இன்று இரண்டு ஆயிரம்கோடி ரூபாய் என்கிறார்கள். இதற்கெல்லாம் பணம், யாருக்கு, எங்கிருந்து, எப்படி வந்தது??

மொசைக் தரைகள், ஏசி, நவீன கன்ஸ்ட்ரக்க்ஷன் கூடவே டிவி உட்பட மீடியாக்களின் உதவியோடு "மார்க்கெட்டிங்" இவை அனைத்துமே கோவிலை பிரபலமாக்க 'கடவுளுக்கும்' இன்றைக்கு அவசிய தேவைகளாகி விட்டன.

"இந்த பெருமாளை சேவிக்கும்போது, நாம் தாய், தந்தை, பாட்டனார்,முப்பாட்டனர்களை இந்த பெருமாள் மூலம் நாம் பார்க்கிறோம்.

அவர்கள் பலப்பல வருடங்களாக இந்த பெருமாளின் முக விலாசத்தை பார்த்து பார்த்து இவனையே சிந்தித்து வாழ்ந்து இருக்கிறார்கள்.இவன் பாதங்களை சென்று அடைந்து இருக்கிறார்கள். நம் வாழ்வுக்கு இடைவெளி அற்ற தொடர்பை இவனே ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறான்".

ஸ்ரீரங்கம் பெருமாளை சேவிக்கும் போது, அந்த திவ்விய ரூபத்தில் தன் தாய் - தந்தையரை உணர்வதாக சுஜாதா கூறுகிறார்.

இப்படி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் குறிப்பிட்ட புராதான கோவிலிகளில் கிடைக்கும் ஆத்ம திருப்தியை எப்பொழுது மக்கள் உணரப்போகிறார்கள்.?

இப்படியாக கண்டுகொள்ள படாமல், ஊர்களின் ஒதுக்குபுறங்களில், சிதிலம் அடைந்து சிதைந்து போன "பெருமாள்கள்" எத்தனை, எத்தனையோ??


"இந்தியாவுக்கு நெடிய வரலாறு உள்ளது. ஆனால், இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு அறவே இல்லை" - ஒரு மேற்கத்திய அறிஞர்.


-இன்பா

 
Follow @kadaitheru