Sunday, October 11, 2009

கொள்ளைபோன கச்சத்தீவு


"கச்சத்தீவு அருகில் மீன்பிடிக்கும் உரிமை தமிழக மீனவர்களுக்கு கிடையாது. அந்த தீவில் மீன்வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும், மாதா கோவில் விழாவில் பங்கேற்கவும் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது" என்று நமது மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் சமிபத்தில் அறிவித்துஇருக்கிறார்.

கச்சத்தீவில் தமிழ்நாட்டிற்கு நடந்த துரோகமும், அநீதியும் இப்போது வெட்டவெளிச்சமாகிவிட்டது.


கடந்தகால வரலாறுகள்படி கச்சத்தீவு யாருக்கு சொந்தமாகிறது? யாருக்கு அங்கே முழு உரிமை இருக்கிறது?

கி.பி.1480 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு காரணமாக இராமேஸ்வரம் தீவும், அதைச் சுற்றி 11 தீவுகளும் தோன்றியுள்ளன. இத்தீவுகள் தமிழகத்தின் நிலப்பரப்பில் இருந்துதான் துண்டிக்கப்பட்டன என்று இராமநாதபுரம் மாவட்ட அரசு வரலாற்றுக் குறிப்பு கூறுகிறது.

இந்தத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு என்பது, இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலைவிலும், இலங்கையிலிருந்து 13 மைல் தொலைவிலும் உள்ளது.
இது கிழக்கு மேற்காக ஒரு மைல் தூரமும், வடக்கு தெற்காக அரை மைல் தூரமும் கொண்டது. இதன் பரப்பளவு 3.75 சதுர மைல், அவ்வளவுதான்.

இந்தத் தீவுகள் எல்லாம் இந்தியாவுக்கும், இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கும் சொந்தமாக இருந்தன. இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு வருவாய் தரும் தீவுகளாக இருந்தன.
1947 இல் நாடு விடுதலையடைந்ததும் ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் வந்தது. அதனால் மன்னரின் உடைமைகள் மக்கள் உரிமையானது.
சேதுபதி மன்னர்கள் ஆட்சியில் இருந்தவரை இந்தத் தீவு முத்துக்குளிக்கும் இடமாகப் பயன்பட்டு வந்தது. அத்துடன் சித்த மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகைகளின் சோலைவனமாகவும் இருந்தது. இங்கே முத்துக்குளிக்கவும், மூலிகைகளைக் கொண்டு வரவும், மீன் பிடிக்கவும் விரும்பினால் சேதுபதி மன்னரின் அனுமதி பெற வேண்டும். அவர்கள் குத்தகைக்கு விட்டு வருவாய் பெற்றதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.


இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் இருந்து வந்ததற்கு 1822 முதல் ஆவணச் சான்றுகள் உள்ளன. கிழக்கிந்தியக் கம்பெனி, 1822 இல் ஓர் ஒப்பந்தம் மூலம் இராமநாதபுரம் மன்னரிடமிருந்து கச்சதீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. 69 கடற்கரை ஊர்களும், 8 தீவுகளும் சேதுபதி மன்னர்களுக்குச் சொந்தமாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சதீவு.

இங்கிலாந்து பேரரசி விக்டோரியாவின் காலத்தில் இலங்கையைப் பற்றி வெளியிடப்பட்ட பொது அறிவிப்பில் இலங்கையின் எல்லைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கச்சதீவு குறிக்கப்படவில்லை. இராமநாதபுரம் அரசரைப் பற்றிய குறிப்பில் கச்சதீவு அவருக்கு உரியதென்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னாள் இலங்கை அமைச்சரவைச் செயலாளர் பி.ஈ.பியரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கையின் பழைய வரலாற்று ஆவணங்களில் இத்தீவைப் பற்றிய விவரம் ஏதுமில்லை. டச்சுக்காரர்கள் மற்றும் போர்த்துக்கீசியர்கள் இலங்கையை ஆண்டபோது அவர்களின் ஆட்சி எல்லைக்குள் கச்சதீவு இடம்பெற்றிருக்கவில்லை. அவர்கள் ஆட்சி ஆவணங்களிலோ, குறிப்பேடுகளிலோ `கச்சதீவு' குறிப்பிடப்படவில்லை.


17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கை வந்த வரலாற்று ஆய்வாளர் பர்னோஃப். அந்நாட்டின் தேசப்படம் ஒன்றை உருவாக்கினார்.
இலங்கையின் வரலாற்று நூல்களான மகாவம்சம், ராஜாவளி, ராஜரத்னாசரியை இவற்றின் துணையோடு அவர் உருவாக்கிய தேசப்படத்தில் `நெடுந் தீவு' வரைதான் இலங்கையாக காட்டப்படுகிறது. நெடுந்தீவுக்கு அப்பாலுள்ள கச்சதீவு காட்டப்படவில்லை.

இராமநாதபுரம் மன்னருக்கு உரிமையுடைய கச்சதீவு, ஆங்கில இந்திய அரசோடு இராமநாதபுரம் சமஸ்தானம் இணைந்தபோது இந்தியாவோடு சேர்ந்துவிட்டது. இந்தச் செய்தியே அப்போதைய மத்திய அரசுக்குத் தெரியவில்லையா?

1974 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி - சிறிமாவோ பண்டார நாயக ஒப்பந்தத்தின்படி கச்சதீவு இலங்கைக்குச் சொந்தமாக ஆக்கப்பட்டது.
அதன் பின்னர் இருநாடுகளின் அதிகாரிகளுக்கு இடையே மீன் பிடிக்கும் உரிமை பற்றி கடிதப் போக்குவரத்து நடந்தது. இந்தக் கடிதங்களே 1976 ஒப்பந்தமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் மூலம் முதல் ஒப்பந்தத்தில் அளிக்கப்பட்ட உரிமைகளும் பறிக்கப்பட்டன.


இலங்கையின் இனக்கலவரம் உள்நாட்டுப் போராக உருவெடுத்ததும், இந்திய - இலங்கை கடல்வழிப் பாதை முக்கியத்துவம் பெற்றது. இலங்கை தமிழ் அகதிகள் வருகை, போராளிகளுக்கு ஆயுத உதவி எனக் காரணம் காட்டி இலங்கை கடற்படை முடுக்கி விடப்பட்டுள்ளது. .

அன்று முதல் இன்று வரையில் தொடர்ந்துகொண்டு இருக்கிறது நம் மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கச்சத்தீவு போராட்டங்களும். மீன்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட தரப்படவில்லை நம் மீனவர்களின் உயிர்களுக்கு.

இலங்கையை சேர்ந்த முரசம் இதழின் ஆசிரியர் திரு. வா.கி.குமார் தனது கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் சர்வதேசம் பறைசாற்றிவரும் இந்த வேளையில் இந்திய கடல் எல்லையில் இந்திய மீனவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுவருவது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

அதிலும் இந்த தாக்குதல் நடவடிக்கையின்போது சீன நாட்டு துரப்பினர்கள் இலங்கை கடற்படையினரின் படகுகளில் தரிசனம் ஆகி இந்த தாக்குதல்களை நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுவருவது இந்த சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது.இதன் பின்னணியில் வெளிநாட்டு சக்திகள் இருப்பதாக சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருவது குறித்து இந்தியா பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.

ஏற்கனவே இந்திய எல்லை தொடர்பில் சீனா இ;ந்தியாவுக்கெதிரான சதிகளில் ஈடுபட்டுவருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துவருகையில் இலங்கை - இந்திய எல்லைப்பகுதியில் சீனாவின் ஆதிக்கம் நிலை இலங்கையின் ஆதரவுடன் நிலைறுத்தப்படுவது தொடர்பில் பலரும் கவலை தெரிவித்துவருகின்றனர்

இந்தியாவிலும் சரி இலங்கையிலும் சரி தமிழன் தாக்கப்பட்டால் கேட்பார் யாரும் இல்லையென்ற நிலையே இந்த நாடுகளின் அரச ஆட்சியாளர்களின் மனதில் வேரூன்றியுள்ளது.

இந்தியன் என்ற நிலைக்கு அப்பால் தமிழன் என்ற நிலையே இன்று இந்திய அரசியல் மேலிடத்தில் காணப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவில் ஒரு இந்தியன் தாக்கப்படும்போது துடிக்கும் இந்திய தலைமைகள் தமது காலடியில் உள்ள நமது உறவு இன்னொருவனால் தாக்கப்படும்போது ஏன்வருவதில்லை?இது தொடர்பில் தமிழக அரசியல் தலைமை என்று சொல்லிக்கொள்பவரும் பெரிதாக அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.

கசப்பாய் இருந்தாலும், நெருப்பாய் சுடுகின்றன உண்மைகள்

"கச்சத்தீவு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்கு மூன்று உரிமைகள் தான் உள்ளன. மீனவர்கள், கச்சத்தீவில் வலையை உலர்த்திக் கொள்ளலாம், ஓய்வெடுத்துக் கொள்ளலாம், அங்குள்ள மாதா கோவில் விழாவில் பங்கேற்கலாம். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க உரிமை வழங்கப்படவில்லை" என்று பத்திரிகையளர்களுக்கு,மத்திய அரசு சார்பாக பேட்டி அளித்துஇருக்கிறார் அந்த உயர் அதிகாரி.

மத்திய/மாநில அரசுகளே, முடிந்தால் நீங்கள் கூறியுள்ள இந்த மூன்று உரிமைகளோடு கச்சத்தீவில் தயவுசெய்து இன்னொரு உரிமையையும் வாங்கிகொடுங்கள். அது, சிங்கள ராணுவத்தால் சுட்டுகொல்லபடும் எங்கள் மீனவர்களை அங்கேயே புதைக்கும் உரிமை.




பதிவு : இன்பா

1 comments:

Srinivas said...

//மத்திய/மாநில அரசுகளே, முடிந்தால் நீங்கள் கூறியுள்ள இந்த மூன்று உரிமைகளோடு கச்சத்தீவில் தயவுசெய்து இன்னொரு உரிமையையும் வாங்கிகொடுங்கள். அது, சிங்கள ராணுவத்தால் சுட்டுகொல்லபடும் எங்கள் மீனவர்களை அங்கேயே புதைக்கும் உரிமை.//

Nice ending..

 
Follow @kadaitheru