Wednesday, October 28, 2009

இதற்குமேல் என்ன பண்ண முடியும்? - கனிமொழி பேட்டி


பத்து தமிழக எம்.பிக்களை தேர்வு செய்து நம் தமிழக அரசு இலங்கைக்கு அனுப்பி இருந்தது தெரிந்ததே. அதன் முக்கிய நோக்கம் போருக்கு பின்னர் அங்கு வாழும் தமிழர்களின் நிலையை அறிந்துகொள்ள, அவர்கள் வாழும் அகதி முகாம்களில் அடிப்படை வசதிகளை நேரில் கண்டறிய, அவர்களை மீண்டும் சொந்த ஊர்களுக்கு திரும்ப குடியேற்றுதல் போன்றவற்றை அறிந்துகொண்டு, அவற்றை நிறைவேற்ற இலங்கை அரசை வலியுறுத்துவதே.

அவர்களின் பயணத்தின் நோக்கம் நிறைவேறியதா? இதனால் அங்கு என்ன என்ன மாற்றங்கள் நடந்தது அல்லது நடந்து விட்டது அல்லது நடக்க போகிறது?

நம் மனதில் எழும் இந்த கேள்விகளுக்கு ஒரு பேட்டியில் பதில் அளித்து இருக்கிறார் அங்கு சென்று வந்த தி, மு, க எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி.

கேள்வி: செம்மொழித் தமிழ் மாநாடு உட்பட, எல்லாவற்றுக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடும் முதல்வர், இலங்கைப் பயணத்துக்கு மட்டும், கூட்டணியோடு சுருக்கிக்கொண்டது ஏன்?

பதில்: இலங்கைத் தமிழர் பிரச்சினையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் உட்படத் தொடர்ந்து முதல்வர் எடுத்த எந்த நடவடிக்கையிலும் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. மேலும், இது முதல்வருக்கு விடுக்கப்பட்ட அழைப்பு. அவர் நேரில் செல்ல இயலாத நிலை என்பதால், அவர் சார்பில், மத்திய அரசின் அனுமதியோடு கூட்டணிக் கட்சி எம்.பிக்கள் சென்றோம். இதில், அனைவரையும் அழைத்துச் செல்லவேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை.

கேள்வி: இந்தியாவில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களையும், இலங்கையில் உள்ள முள்வேலி முகாம்களையும் எப்படி ஒப்பிடுவீர்கள்?

பதில்: எங்கு இருந்தாலும், முகாம் என்பது முகாம்தான். இங்கு இருப்பவை, இன்னொரு நாட்டில் புகலிடம் தேடி வந்ததன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள முகாம்கள். ஆனால், தமது சொந்த நாட்டிலேயே எந்த மண்ணை நம்பி வாழ்ந்தார்களோ அங்கேயே அகதிகளாக முகாம்களில் அடைக்கப்படுவது, யாராலுமே நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத விஷயம். இங்கு இருப்பவர்களும், ஒரு வரையறைக்குள் தான் வாழ்க்கை நடத்தவேண்டியிருக்கிறது. அதிலிருந்தும் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பதற்காகத்தான், முதல்வர் கருணாநிதி, இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.சொந்த நாட்டிலேயே தமிழர்கள் அகதிகளாக இருக்க வேண்டுமா?

கேள்வி: வசதி வாய்ப்புகளின் அடிப்படையில், முகாம்களை எப்படி ஒப்பிடுகிறீர்கள்?

பதில்: முகாம்கள், மனிதர்கள் வாழும் இடம் இல்லை என்பதே என் கருத்து. ஐந்து நட்சத்திர ஹோட்டலையே முகாமாக மாற்றினாலும், அது முகாம்தான். முதல்வர் சொன்னமை போல, தங்கக் கூண்டாக இருந்தாலும், அடைபட்டுக் கிடப்பது வேதனை தானே! அதற்காக, முகாம்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல் போன்று உள்ளன என்று சொல்லவில்லை. முகாம்களுக்கே இருக்கக் கூடிய பிரச்சினைகள் அங்கு இருக்கின்றன. அதை மறுக்கவே முடியாது. அங்கிருக்கக் கூடிய சிலர் சொல்லலாம், "உங்கள் ஊர் முகாம்களை விட எங்கள் ஊர் முகாம் சிறப்பாகத் தான் இருக்கின்றன'' என்று. பிரச்சினை அதில்லை. சொந்த நாட்டிலேயே அவர்கள் ஏன் அகதிகளாக இருக்கவேண்டும் என்பதுதான் கேள்வி.

கேள்வி: முகாம்களில் அடிப்படை வசதிகள் இல்லை என்பதை நேரில் கண்ட பிறகும், தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று ராஜபக்ஷ அரசை எப்படி நம்புகிறீர்கள்?

பதில்: தீர்வைக் கொடுக்கும் இடத்தில் அவர்கள்தானே இருக்கின்றனர்? அவர்களோடுதான் நாம் பேசியாக வேண்டும். நாம் நம்பினாலும், நம்பாவிட்டாலும், அதைத் தவிர நம்மிடம் வேறு வழி இல்லை. இதை அரசியலாக்கும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இறுதி முடிவெடுக்கும் அதிகாரம், அவர்கள் கையில் தான் இருக்கிறது. அது ராஜபக்ஷவாக இருந்தாலும் சரி; ரணில் விக்கிரமசிங்கவாக இருந்தாலும் சரி. இலங்கை அரசோடுதானே நாம் பேசியாக வேண்டும்...?

கேள்வி: வெறுமனே கோரிக்கை, வேண்டுகோள் என்ற நிலைப்பாட்டைத் தாண்டி, இலங்கைக்கு இந்தியா நெருக்கடி கொடுத்திருக்க வேண்டாமா?இலங்கை விவகாரத்தில் முதலுதவி என்பது நிரந்தரத் தீர்வா?

பதில்: என்ன பண்ணியிருக்க முடியும், என்ன பண்ணியிருக்க முடியாது என்பவை யெல்லாம் கடந்துபோன விஷயங்கள். அதை அலச வேண்டிய காலகட்டம் இது அல்ல; இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைத்த பிறகு, இவற்றை எல்லாம் தோண்டி எடுத்துப் பேசி, அலசலாம். இது அவசர நிலை. உடனடித் தேவை முதலுதவி. இந்த நேரத்தில் மற்ற விஷயங்களைப் பேசுவது சரியல்ல. மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், ஒரு நாடு இன்னொரு நாட்டு உரிமையில் குறுக்கிடுவது எந்த அளவு சாத்தியம் என்ற கேள்வி இருக்கிறது. இன்னொரு நாட்டுக்கு நெருக்கடி கொடுப்பது, ஒரு நிமிடத்தில் நடக்கக் கூடிய விஷயமில்லை.

கேள்வி: ஏற்கனவே, அமைதிப்படையை அனுப்பிய அனுபவம் இந்தியாவுக்கு இருக்கிறதே?

பதில்: இப்போதைய கால கட்டத்தில், அது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என நினைக்கிறேன். அது சரியான தீர்வாக முடியுமா என்பதையும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

கேள்வி: பொதுவாகவே, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.கவும் மத்திய அரசும் மிதமான போக்கைக் கைக்கொள்வதாகக் குற்றச்சாட்டு இருக்கிறதே.....?

பதில்: இதற்குமேல் ஒரு மாநில அரசு, ஒரு மாநிலக் கட்சி என்ன மாதிரி நெருக்கடி கொடுத்திருக்க முடியும் என எனக்குப் புரியவில்லை. சர்வதேசப் பிரச்சினையில் மத்திய அரசுதான் முடிவு எடுக்கமுடியும். போராட்டம் நடத்தியிருக்கிறோம்; கூட்டம் நடத்தியிருக்கிறோம்; மனிதச் சங்கிலி நடத்தியிருக்கிறோம். முதல்வர் உட்பட அனைவரும் மாறி மாறி மத்திய அரசிடம் பேசியிருக்கிறோம். முதல்வரே உண்ணா விரதம் இருந்தார். அதன் பிறகு தானே, அப்பாவிகளைக் கொன்றழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்துவதைக் குறைத்தனர். இதற்கு மேல் என்ன பண்ண முடியும்? அமெரிக்கா போன்ற நாடுகளே, ஓரளவுக்கு மேல் என்ன நெருக்கடி கொடுக்க முடிந்தது?

கேள்வி: எந்தப் பக்கம் சாய்வது என்ற தெளிவு இந்தியாவுக்கே இல்லாததால், உலக நாடுகளும் அடக்கி வாசித்தன என்ற கருத்து உள்ளதே?

பதில்: தமிழர்களாக நாம் இப்போது செய்ய வேண்டிய விஷயம், இலங்கைத் தமிழர்கள் வாழ்வை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்ல என்ன செய்ய வேண்டும் என்பதுதான். எது சரி, எது தவறு என ஆராய வேண் டியது அவசி யம். அதற்கான காலகட்டம் வரும்போது தான் அதைச் செய்யவேண்டும். அதற்கான காலம் இது இல்லை. "இதுதான் இதன் பதில்" எனத் தெளிவாக யாராலும் சொல்ல முடியாது.

கேள்வி: ஒட்டுமொத்தமாக, உங்கள் இலங்கைப் பயணத்தால் கண்ட பலன் என்ன?

பதில்: முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளவர்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் முதல் கோரிக்கை. அதை ஏற்றுத்தான், முதல்கட்டமாக 58 ஆயிரம் பேரை சொந்த ஊருக்கு அனுப்புவதாக உறுதியளித்தனர். தற்போது வரை 50 ஆயிரம் பேர் அனுப்பப்பட்டுள்ளனர் எனச் செய்திகள் வருகின்றன. இது மிகப் பெரிய ஆறுதலான விஷயம். இதன் தொடர்ச்சியாக மற்றவர்களும் விடுவிக்கப் பட்டுவிடுவர் என்ற நம்பிக்கை துளிர்க்க ஆரம்பித்துள்ளது. இதோடு முடிந்து போகிற விஷயமும் இது இல்லை. ஓர் அரசியல் தீர்வு வேண்டும் என்பதுதான் நம் முக்கியமான குறிக்கோள்.

கேள்வி: தமிழர்கள் விடுவிக்கப்படுவதற்குக் காலக்கெடு எதுவும் இருக்கிறதா?

பதில்: இதுவரை 50 ஆயிரம் பேர் விடுவிக்கப்பட்டுவிட்டனர் என அறிவித்துள்ளனர். மீதமுள்ளோரையும் விரைவில் விடுவிக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.

கேள்வி: இதை எப்படிக் கண்காணிக்கிறீர்கள்?

பதில்: அங்குள்ள தூதரகம் மூலமாகவும், செய்தியாளர்கள் மூலமாகவும் தகவல்களைச் சேகரித்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

கேள்வி: இலங்கைத் தமிழரின் மறுவாழ்வுப் பணிக்காக தி.மு.க. சார்பில் நிதி பங்களிக்கும் திட்டம் ஏதேனும் இருக்கிறதா?

பதில்: முதல்வரின் வற்புறுத்தலின் அடிப் படையில்தான் மத்திய அரசு 500 கோடி ரூபா அறிவித்தது. மேலும் 500 கோடி ரூபா வழங்கத்தயாராக இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இலங்கைத் தமிழர்கள் மீள் குடியமர்த்தப்பட்ட பிறகு, இது செலவிடப்படும். அதையும் தாண்டி நிதித் தேவை இருக்குமானால், மாநில அரசு சார்பிலோ, கட்சி சார்பிலோ வழங்குவதில் முதல்வருக்கு எந்தத் தயக்கமும் இருக்காது.

நான் கேட்க நினைத்த கேள்விகள்...

இந்திய அரசு தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் செய்த பங்களிப்பை தெரிந்தும், தெரியாதமாதரி எப்படி இத்தனை காலம் திமுக அரசால் நடிக்க முடிந்தது?

இந்த பயணத்தின்போது, செஞ்சிலுவை சங்கங்கள் போன்ற சேவை அமைப்புகளைபாதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் அனுப்புமாறு ஏன் இலங்கை அரசை நிர்பந்திக்கவில்லை?

நம் எம்.பிக்கள் சென்றுதான் அங்கு உள்ள நிலையை அறிந்துகொள்ளுமளவுக்கு அங்கு பத்திரிகை சுதந்திரம் உள்ளது கண்கூடாக கனிமொழி உள்ளிட்டோர் நேரில் கண்ட உண்மை. ஏன் அங்கு உள்ள உண்மை நிலையை காண சர்வேதேச மற்றும் இந்திய பத்திரிகையாளர்களுக்கு அனுமதியும்,சுதந்திரமும் ஏன் இலங்கை அரசு வழங்கவில்லை?

அங்கு வாழும் தமிழ் மக்களுக்கான சம உரிமையை பற்றி,அதற்காக இலங்கை அரசின் சட்டங்களின் உருவாக்கவேண்டிய மாற்றங்கள் ஏன் யாரும் பேசவில்லை?

இதுபோல ஆயிரம்...ஆயிரம் கேள்விகள் நம் மனதில். ஆனால் முறையான பதில்களை அந்த கதிர்காம முருகனால் மட்டுமே தரமுடியும் என்று தோன்றுகிறது.


கடைக்காரர் கமெண்ட்:
பதிவுக்கு தமிழ்நாட்டு எம்.பிக்களின் இலங்கை சுற்றுலா அனுபவங்கள்ன்னு தலைப்பு வச்சு இருக்கலாம்.


பதிவு : இன்பா

1 comments:

R.Gopi said...

இந்த குழுவில் இடம் பெற்றிருந்த “குருமா”வை ராஜபக்‌ஷே... அந்த கூட்டணியில இருந்திருந்தா நீயும் செத்திருப்பன்னு சொன்னப்போ, ஹீ...ஹீ...ன்னு சிரிச்சுட்டு, இங்க வந்து சூப்பரா குரல் கொடுத்தாரே...கவனித்தீரா....

 
Follow @kadaitheru