Tuesday, December 9, 2014

ஜானி - ரஜினியின் இன்னொரு முகம்



"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் " என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள் வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.

முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.

கமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.

ஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.

இரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.


ஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.

வித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், " காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது." என்று கொள்கையொடு இருப்பவர்.

அர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.

பாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.

தான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.

"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் " பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் "என் வானிலே ஒரே வெண்ணிலா " கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.


நட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.

இந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் "நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.

நாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.

சந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. "ஆசைய காத்துல தூது விட்டு " பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.

அதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை அழிக்கின்றது என்பதே மீதி கதை.

"நான் உங்க ஜானி இல்லை " என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்."நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much"..

இறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே .." .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .

ஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .

மலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.

அவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.

சூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு?

அது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.

-இன்பா

(ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு. கடை(த்)தெருவின் மறுபதிப்பில்.).

Saturday, December 6, 2014

'ஆச்சி' மனோரமாவைத் தேடி.....

அன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த  இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன்.

படத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண்மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.

அன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.

நடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் "ஜில் ஜில் ரமாமணி" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா?

ரஜினி அவர்களுடன் "மன்னன்" மற்றும் "எஜமான்" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.

கொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். "ஐயோ அய்யய்யோ" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.

அவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த "நடிகன்" தான்.

பாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.

உலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்?

சில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது. பின்பு டிஸ்சார்ஜ் ஆன செய்தியும் வந்தது.

மருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.

உள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.

தமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. " அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.

மீண்டும் மனோரமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. இந்தமுறை அவரது அருகில் அவர் குடும்பத்தினர் கூட இல்லை என்று தெரியவந்து இருக்கிறது.

உலக சாதனை செயத நடிகை, இறுதி நாட்களில் இப்படி யாருமற்ற அனாதையாக இருப்பதை என்னவென்று எழுதுவது??

அவர் பூரணநலம் அடைந்துவிடுவரா?

தான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.

இனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா?


 பண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா? போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.

ஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்? எப்படி இருக்கிறீர்கள்?



-இன்பா

Friday, December 5, 2014

காமம் போற்றும் பெண் கவிஞர்கள்

'எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.

தனது கவிதை நூலுக்கு "முலைகள்" என்று தலைப்பு வைத்து எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.

இவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.

ஒவ்வொரு கால்களிலும்
காமம் நடன ஊற்றாகி
கொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி
மோகத் திளைப்பில் சுருளும்
ஆண் சிலந்தியைக் கலவி
ஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .
கொன்று. . .
இரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி

- அனார்

கொழுத்த களிநண்டுகள்
அலையும் அலையாத்திக்காட்டில்
செம்பவள சில்லென
ஒளிர்ந்துகொண்டிருக்கிறதென் யோனி

சிறுசுடரென எரிகிறதென் யோனி
கரும்திரையென நிற்கும் வானில்
சிலாக்கோல்கள் போன்ற
சுரபுன்னைகாய்கள் நீரைக் கிழித்து
சேற்றில் விழும் சத்தம்
மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது
அப்போது.

- மாலதி மைத்ரேயி.

"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்."


- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா?' என்று கேட்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா??

--இன்பா

Monday, December 1, 2014

களவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்

“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா?

அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல்லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்.

ஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.

தங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம்.

அதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா? ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா? அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.

ஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன.

திருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.

நண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.

இந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நாட்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.

சந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.

கவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.

ஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.

(சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், நன்றி: காலச்சுவடு பதிப்பகம்)

Thursday, November 27, 2014

'அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை' - சீமான்


 'அரசியலுக்கு வர ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை " என்று கூறி இருக்கிறார் சீமான்.

அவர் விடுத்துள்ள அறிக்கை இங்கே...

"ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது?

நம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள்.

அதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

ரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா?

அரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம்.

அவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா? அல்லது ரஜினி ரசிகர்களா? என்று பார்த்துவிடலாம்.

2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா இல்லை கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறார்கள். தனித்து தான் போட்டி என்று நாம் பலமுறை சொல்லிவிட்டோம். வாழ்வோ, சாவோ தனித்து தான் போட்டி.

இங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா? சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ? அண்ணன் வழியில் நம் பயணம் தொடரும்

-என்றார் சீமான்.

ஈழத்தமிழர்கள் முதுகில் ஏறி 'தலைவர்' ஆக துடிக்கும் சீமான், ஏன் தனித்து போட்டியிட வேண்டும்?

. இவர் குறிப்பிட்டு இருக்கும் நல்லக்கண்ணு, நெடுமாறன்  ஆகியோரை முன்னிறுத்தலாமே???

அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியில்லை என்றால், ஊருக்கு ஊர் 'பிரபாகரன்' பட்த்தை போட்டுக்கொண்டு உண்டியல் குலுக்கும் சீமானுக்கு, தமிழினத்தை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை.

ஒவ்வொரு முறை சீமானின் வாய்ச்சவடால்களை கேட்டும்பொதெல்லாம், பின்வரும் பழமொழி நினைவுக்கு வருகிறது.

"கேக்கறவன், கேணையா இருந்தா....."

Wednesday, November 26, 2014

காடு - 'கத்தி'க்கூர்மை



சமிபகாலமாக தமிழ்சினிமாவில் மிகவும் ஆரோக்கியமான போக்கு ஒன்று உருவாகி இருக்கிறது. அது, சமகால சமுதாய பிரச்சனைகளை பேசும் போக்கு.

கிரிக்கெட்டில் சாதியம் பேசும் ஜீவா,அரசியல் தெளிவு பற்றி பேசும் மெட்ராஸ், எல்லாவற்றும் ஒருபடி மேலே சென்று பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை பேசியது கத்தி.  

 விஜய் போன்ற முண்ணனி நடிகர் ஒருவர் மக்கள் பிரச்சனைகளை, திரைப்படத்தில் முழங்கி இருப்பது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பிறகு கத்தியில் மட்டுமே பார்க்கமுடிந்து இருக்கிறது. கேப்டன் பிரபாகரனையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்

இந்த வரிசையில், "காடு"

இப்படி ஒரு படத்தை துணிந்து தயாரித்த நேரு நகர் நந்து அவர்களையும், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செய்த இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.

காடு - தலைப்புக்கு ஏற்றார்போல காட்டின், மரங்களின் அருமையை பேசுகிறது.

எப்படியாவது வனத்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று விரும்பும் ஒருவன், அந்த வேலைக்கு பணம் கொடுக்க சந்தனமரம் கடத்துகிறான்.
அவனுக்காக பழி ஏற்று, சிறைக்கு செல்லும் நண்பன் விதார்த், அங்கு புரடசியாளர் சமுத்திரகனியை சந்திக்கிறார். அதன் பிறகு, அவர் வாழ்வில்,குறிப்பாக கொள்கைகளில் நிகழும் மாற்றமே "காடு" படத்தின் கதை.
 
"நாங்க உயிர் வாழ்வதற்க்காக காட்டில் இருந்து, எத வேண்டுமானாலும் எடுத்துகொள்வோம். ஆனா, வசதியா வாழறதுக்காக ஒரு செடியை கூட வெட்டமாட்டோம்" என்னும் வசனமே படத்தின் உயிர் நாடி.

சமுத்திரகனி பேசும் சிந்தாந்தகளும், வசனங்களும். படத்துக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கின்றன. இதுபோன்ற ஒரு வேடத்துக்கு இவரைவிட வேறுயாரும் பொருந்தவாய்ப்பில்லை.

'கத்தி' படத்தில் விஜய் பேசியதைவிட,கூர்மையான வசனங்கள். இதுபோன்ற டிரெண்டை அமைத்து தந்து இருக்கும் விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு நாம நன்றி சொல்லலாம்.

குறிப்பாக, "போராட்டம் என்றால் ஒன்று வெற்றி அல்லது தோல்வி.. சமாதானம் என்று ஒன்று இருக்கவே முடியாது. உலக சரித்திரத்தில், எங்கெல்லாம் சமாதானம் முன்வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதிகாரம் ஜெயித்து இருக்கு". என்று அவர் விதார்த்துக்கு கூறுவது.

இதற்கு நம் இந்தியாவைவிட ஒரு சிறந்த உதாரணம் இல்லை. கடைசிவரை சமாதானம் வேண்டாமென்று புலித்தலைவர் மறுத்ததின் அர்த்தமும் இதுவே.

அதைபோன்று, கூத்துக்கலைஞராக நடித்து இருக்கும் ஒரு பெரியவர். காவல்துறையினர் சிறையில் அவரை அடித்து உதைக்கும்போது, அவர் கூத்து கட்டிய காட்சிகளை பார்க்கும்போது, ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதல்கள் நம் மனதை பிளக்கின்றன.

படத்தின் பாடல்களை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

யுகபாரதியின் யதார்த்தமான வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகத்தேவையான அளவுக்கே இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இசைஅமைப்பாளர் கே. தமிழ்சினிமாவில் இது புதிய முயற்சி. மேலும், தமிழிசை கருவிகளின் ஒலியை காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆகா,ஒகோவென்று புகழும் அளவுக்கான படமில்லைதான்.  கம்யுனிச நெடி படத்தில் தூக்கலாகவே இருக்கிறது.

ஆனால், படத்தின் கதைகளத்துக்காகவும், படத்தில் சொல்லி இருக்கும் கருத்துகளுக்காகவும்,குறைகளை மறந்துவிட்டு  நாம கொண்டாட வேண்டிய படம்.....காடு,

-இன்பா

Monday, November 24, 2014

ஐ vs என்னை அறிந்தால் - ஒரு 'ஜல்லிகட்டு' பார்வை




 



\













தமிழரின் வீர விளையாட்டான, 'ஜல்லிகட்டு' க்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.

ஆனால், உலக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஒரு பெரும் ஜல்லிக்கட்டு காத்திருக்கிறது.

ஜில்லாவோடு போன பொங்கலில் மோதி, வெற்றி பெற்றது வீரம். இந்த பொங்கலுக்கும் அதைபோன்ற ஒரு கடுமையான போட்டி 'தல'யின்
என்னை அறிந்தால் படத்திற்க்கு காத்திருக்கிறது.

அது, இயக்குனர் ஷங்கரின் "ஐ".

"ஐ" - பெரும் பிரம்மாண்டமான படம் என்றாலும், படத்தின் பாடல்கள், டிரைலர் போன்றவை வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.

தீபாவளிக்கு வெளிவருவதாக திட்டமிடபட்டு, அப்பொதே படம் வெளிவந்து இருந்தால், எதிர்பார்ப்பு நிலைத்து இருக்கும், ஆனால், இந்த தாமதம், படத்தின் சூட்டை குறைத்துவிட்டது.

படத்தின் பாடல்களும் ஆகாவென்று இல்லை. அதே சமயம் பாடல்களை படமாக்குவதில் ஷங்கருக்கு இணை இந்திய சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனம். எவ்வளவுதான் பிரம்மாண்டம் என்றாலும், படத்தின் மூலம் காதல் கதை.

ஸ்லிம் விக்ரம், ஒநாய் மனிதனாவது, காதலியை கடத்திக்கொண்டுபோய் வைப்பது என்பதெல்லாம் ஆங்கில படங்களில் பார்த்த விஷயங்கள்தான். எதிர்ப்பார்ப்பை எந்த அளவு நிறைவேற்றும் என்பது தெரியவில்லை.

"என்னை அறிந்தால்" - ஷங்கர்-விக்ரம்-ரகுமான் கூட்டணிக்கு சற்றும் குறைந்தல்ல அஜித்-கவுதம்-ஹாரிஸ் கூட்டணி. குறிப்பாக, படத்தின் பாடல்கள் "ஐ"யை விட சிறப்பாக இருக்கும் என நம்பலாம்.  காரணம், கவுதம்-ஹாரிஸ் என்றாலே, அது மிகப்பெரிய மியுஸிக்கல் ஹிட்தான்.
கூடுதலாக, 'தல'.

கவுதமுக்கு மிகப்பிடித்த போலிஸ் அதிகாரியின் பயணம். அவருக்கே உரித்தான சென்டிமெண்ட் ஆக்ஷனின் அஜித் அழகாக பொருந்துவார்.
பெண்கள் மத்தியில் இப்படம் அதிகம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது

"என்னை அறிந்தால்" படத்தைவிட, "ஐ" படத்துக்கு கூடுதல் திரைஅரங்குகள்  ஒதுக்கப்பட்டு விட்டது.

இரண்டு படங்களும் போட்டியில் சளைத்தவை இல்லை என்றாலும், படம் ரிலிஸான முதல் வாரத்தில் "ஐ"  வசூலில் முந்ததும்

அடுத்தடுத்த வாரங்களில் " என்னை அறிந்தால்" முதலிடம் வரும் என்பதே எங்களின் கணிப்பு. பார்ப்போம்.

ரசிகர்களுக்கு 'தல' பொங்கலோடு, "ஐ" விஷுவல் விருந்து காத்திருக்கிறது.


Sunday, November 23, 2014

காணாமல்போன கழுதைகள்


பிரபல ஆங்கில கவிஞனரான ஆர்.எல். ஸ்டீவன்சனுக்கு கழுதைகளின்மேல் தனி மரியாதை இருந்தது. அதனைப் போற்றி பெரிய கவிதையே எழுதி வைத்தார். கவிதையின் மையப் பொருளாக அதன் சகிப்புத் தன்மை போற்றப்பட்டது.

மக்கள் அதனிடமிருந்து இக்குணத்தை கற்க வேண்டும் என்ற அவர் விருப்பம் அதில் தொனித்தது. நெப்போலியனின் தங்கை தன் முகச்சுருக்கத்திற்கு கழுதை பாலில் மருந்து தயார் செய்து பூசிக் கொண்டாளாம், ஹிப்போகிரேட்டஸ் கழுதை பாலை சர்வ ரோக நிவாரணியாக புகழாரம் சூட்டியுள்ளார். கிளியோபாட்ரா தினமும் கழுதை பாலில்தான் குளித்தாளாம். அதற்காக 700பெண் கழுதைகள் அவள் அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்டது. பாவம் அதன் குட்டிகளின் கதி என்னாயிருக்கும்? இப்படியெல்லாம் படாத பாடுபட்டு தன் மேனியழகை பளபளப்பாய் வைத்துகொண்ட அவர் அல்பாயுசில் பாம்பைக் கொத்த விட்டு இறந்து போனதை என் மனம் ஏற்க மறுக்கிறது.

போன மாதம் புத்தக நிலையத்திற்கு சென்று புத்தகங்களை வாங்கினேன் எனது 7 வயது மகளும் அவள் பங்கிற்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆங்கில படக் கதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் . ஒரு வாரத்திற்கு பிறகு அவள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். கதையில் அலிபாபாவிற்கு ஒரு கழுதை நண்பனாக உள்ளதை போல் எனக்கும் ஒரு கழுதைக் குட்டி உடனடியாக வேண்டும் என்றாள். கோரிக்கையின் உப பங்காக முதலில் தான் கழுதையை நேரில் பார்க்க வேண்டும் என்றாள். ஒரு தந்தையின் தார்மீக கடமையாகக் கருதி எனது இருசக்கர வாகனத்தில் தேனியின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாயாக அலைந்தும் கழுதையைக் காணவில்லை.

நான் சிறுவனாக இருந்தபோது நிறையக் கழுதைகள் என் வீட்டிற்கு அருகே நின்றிருக்கும். தற்போது நவீன நகர்மயமாகிப் போன தேனி நகரத்தில் துவைப்பவர்கள் தங்கள் துணிகளைப் பழைய எம்.80 வண்டியிலோ, சற்று கூடுதலாக இருந்தால் பைக், டெம்போ வண்டியில் ஏற்றிச் சென்று மெஸின் மூலமே துவைக்கின்றனர். அரிதினும் அரிதாகவே ஆற்றில் துவைப்பதை காண முடிகிறது. அக்கம்பக்க நண்பர்களிடம் கழுதைகளின் இருப்பிடம் பற்றிக் கேட்ட போது கேலிச் சிரிப்பே மிஞ்சியது. கஜினியின் விடா முயற்சியோடு நான்கு வாரத் தேடலுக்கு பின் தேனியின் புறநகர் பகுதியில் ஒரு தாயும் குட்டியும் மேய்வதைக் கண்டோம். என் மகளும் மிகவும் வாஞ்சையோடு அதனை அணுகினாள். நட்புடன் பார்த்த தாயும், துள்ளலுடன் வந்த சேயும், எந்த வித தடையுமின்றி ஓடிச்சென்ற என் மகளும் என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.

மனித வளர்ப்பில் ஆளாக்கப்படும் உயிரினங்களில் கழுதை மிகவும் கேவலமாகவும், அவமானத்துக்குரிய ஜீவனாகவும் உள்ளது. உண்மையில் குதிரைகளைப் போல் ஏன் அதைவிடவும் ஒருபடி மேலே பயனுள்ளதாகவும் உள்ள மிருகம் இது. குளம்பி வகையைச் சேர்ந்த கழுதைகள் மனித சமுதாயத்தோடு பண்ணெடுங்காலமாக தொடர்பு கொண்ட ஒன்று. மெசபடோமிய நாகரீக படிமங்களில் கழுதைகள் மனிதனோடு தொடர்பு கொண்ட சான்றுகள் சிக்கியுள்ளன.

மிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையையும் தன் சிறப்புக் குணங்களாக  கொண்ட இவ்வினம் தன்னை விட 1 1/2 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது. இன்றும் முஸ்லீம் நாடுகளில் அதிகமாக தங்கள் பயணங்களில் உபயோகிக்கப்படும் உயிரினம் கழுதைகள். சுமார் 50 ஆண்டுகள் வரை வாழும் இவை, மனிதனால் மிக அதிகபட்சமாக உபயோகிக்கப்பட்டு இறுதி நாட்களில் நோய்வாய்பட்ட நிலையிலேயே தெருக்களில் கைவிடப்படுகிறது. யாருடைய கவனத்தையும், மனதில் சஞ்சலத்தையும் இன்று வரை இந்த விலங்கினம் இந்தியாவில் ஏற்படுத்தியது இல்லை என்பதுதான் சுடும் உண்மை.

வளர்ந்தவை 3 அடி உயரமும், 5 அடி நீளமும் கொண்டவையாக இருக்கும். இதன் பிறப்பு அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்திருக்கும் என்கிறார் இது தொடர்பான ஆய்வு செய்த டாக்டர் டயனா நானன் . பின்னர் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டன என்பது இவரது கருத்து. கூட்டமாக வாழ விரும்பும் இவைகள், 3 வயதிற்குப் பிறகு பருவத்திற்கு வருகின்றன. வயதில் முதிர்ந்த ஆணும் சரி, இளம் வயதினரும் சரி, பெண்ணைக் கவர்வதில் ஆவேசமாக போட்டி போடுவதில்லை. பெண்ணானது, சரிசமமாக உடலுறவு கொள்கிறது. ஆண்களுக்கு இடையேயோ அல்லது பெண்களுக்கு இடையிலோ போட்டி எனும் போது ஒன்றையொன்று வெறியோடு கடித்துக் கொள்கிறது. இதன் பற்கள் வலிமையானவை என்பதால் பலமான காயமேற்பட வாய்ப்புள்ளது. சந்தோஷ தருணங்களில் இவை அதே போல் செல்லமாக கடித்துக்கொள்ளும் நிகழ்வும் நிகழ்கிறது.

ஆண்குறியின் நீளம் அதிகமென்பதால் பெண்ணின் புழைக்குள் நுழைக்க அதிக முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இதன் விந்தும் உடனடியாக வீணாக வெளியேறி பெண்ணின் முதுகுப்புறத்தில், தொடையில் சிந்த நேரிடுகிறது. தவிர காதல் களியாட்டத்தின் ஒரு அங்கமாக உடலுறவு கொள்ளும் சமயம் பெண் திடீரென விலகி ஓடுவதும், பின்புறமாக எத்துவதுமாக இருப்பதும் ஆணின் பல முறை முயற்சிக்க நேரிடுகிறது. 10 நாட்கள் நீடிக்கும் இந் நாடகத்திற்குப் பின் கருவுறும் பெண் ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிபோடும். குட்டியை மிகுந்த அக்கறையோடு வளர்க்கும். இளம் குட்டியைத் தாக்க நினைக்கும் எந்த உயிரினத்தையும், தயவு தாட்சண்யமின்றி கடித்துக்குதறும். ஒரு வேளை 300 மி.லி சுரக்கும் இதன் பாலைக் கறந்து இன்றும் கிராமத்தில்  விற்பனை செய்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு கழுதைப்பாலை சுமார் 10 சொட்டுகள் வரை குடிக்கக் கொடுப்பதன் மூலம் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி வளரும் என்றும், பேய் பிசாசுகள் அண்டாது என்ற நம்பிக்கையும் உண்டு.

கழுதைகள் பேதமின்றி உணவைத் தின்கின்றன. மிக அதிகபட்சமாக உண்ணும். இவ்வுணவு மிக வளர்ந்த குதிரை உண்ணும் உணவை விட அதிகமாக இருக்கும். இதன் ஜீரணமண்டலமும், மிகச்சிறப்பானது. உலகிலேயே  பெரிய விலங்கினங்களில் மிகச்சிறந்த ஜீரண உறுப்பைக் கொண்டது கழுதைகளே. இதன் சாணமானது ,சத்துக்கள் முற்றிலும் உறிஞ்சப்பட்ட சக்கையாகவே வெளியேறும். இதனால் இது உரமாக்கப்படுவதில்லை. மலைப்பிரதேசங்களில் காய்ந்த இதன் சாணம் குளிர்காலங்களில் எரியூட்டப் பயன்படுகிறது. இதன் சிறுநீரும் காட்டமான நெடியுடையது. பழங்குடிகள், கொசு விரட்டியாக, பாம்பு போன்ற ஊர்வனம் தங்கள் குடிசைக்குள் வராமல் இருக்கவும் ,  இருப்பிடம் சுற்றி தெளிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகம்,

இதன் செரிமாண சக்தி குறித்து தொடர் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் மருந்துகள் தயாரிக்கவும் முயற்சி செய்கிறது. ஸ்மித் சோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைடால் எப்படி இதற்கு இப்படிப்பட்ட அதிக சக்தி படைத்த ஜீரண மண்டலத்தை இயற்கை படைத்துள்ளது என வியப்படைகிறார். அது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளதாம்!.

கழுதைகளின் காது மிகப் பெரியதாக இருப்பது இதன் உடலை மித வெப்பமாகவே நிலை நிறுத்தி வைக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்தமானது பிற பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதன் வாலும், மாட்டிற்கு உள்ளது போல நுனியில் அதிக முடி கொண்டது. உண்ணிகளை, ஈக்களை விரட்ட மட்டுமின்றி ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. மிக நுண்ணிய ஒலியையும், உணரும் இதன் காதுகள், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள எச்சரிக்கும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. தனது குறைந்த பார்வைத் திறனை காதுகளின் செயல்பாட்டின் மூலம் சமன் செய்து கொள்கிறது.

கழுதைகளின் ஒலி சற்று வித்தியாசமானது. சுமார் 7 விதமாக ஒலி எழுப்பும், ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும் ஒரு குறியீடாக இருக்கும். உதாரணமாக நீண்ட ஒலிதான் காமத்தோடு இருப்பதையும் கர்.......கர்....என்ற ஒலி கோபத்தோடு இருப்பதையும், புர்.....புர் என்ற உறுமும் ஒலிதான் உண்ணும் உணவில் பூச்சிகள் அல்லது ஒவ்வாத பொருட்கள் இருப்பதையும் அதே உறுமும் ஒலி படுத்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டால்தான் தூக்கத்திற்குத் தயாராக இருப்பது என பல்வேறு சமிக்ஞைகளின் அடையாளமாகின்றது.

அபூர்வ உயிரினமான கழுதைகள் இன்று இந்தியாவில் அருகி வருகின்றன. பம்பாய், கொல்கத்தா, போன்ற நகரங்களில் பல வயதான கழுதைகள்,
ஊனமுற்றும், நோய்களுக்கு ஆளாகியும் அநாதையாக விடப்படுகின்றன. கிராமங்களில், பாலியல் நோய்களால் தாக்கப்பட்ட, போதை பழக்கத்திற்கு ஆளான ஆண்கள், கழுதைகளோடு உறவு கொண்டால் நோய் தீர்ந்து போகும் என்ற தவறான நம்பிக்கையால் பல பெண் கழுதைகள் ,பாலியல் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து போகின்றது. இது திடுக்கிடும் உண்மையாகும். இதன் வாலில் பனை ஓலையை கட்டி தீ வைத்து மிரண்டு ஓடும் அதன் அழகை குரூரமாக ரசிக்கும் பல மக்களை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

இவ்வாறு இவைகள் கஷ்டப்படுவதையெல்லாம் அறிந்த பேராசியரும், உயிரின ஆதரவாளருமான டாக்டர் ஜீன் மற்றும் அவரது துணைவி பால் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று கொல்கத்தாவில் ஒரு காப்பகம் துவங்கி உள்ளனர். முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட, கைவிடப்பட்ட கழுதைகளை பேணிக் காப்பது இவர்களின் குறிக்கோள்.

கழுதைகளுக்கு 24 மணி நேரமும், மருந்தளிக்க மருத்துவர்களும் அழைத்து வர ஆம்புலன்சும் இங்குள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிகளுக்கு சென்று கழுதைகளின் சிறப்பு குறித்து வகுப்புகள் எடுக்கின்றனர். நிறைய துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். துவக்கத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர்கள் தற்போது புதுவித நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். நம் நாட்டில் உள்ள கழுதைகள் மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை  என ஒரு மதவாத அமைப்பு கேள்வி கேட்டும்,   நிதிவரத்து குறித்தும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மிக நுண்ணிய அறிவு படைத்த இவைகளை இந்தியா் மட்டும் ஏனோ கண்டு கொள்ளவே இல்லை. இவற்றைப் பொதி சுமக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில், இதனைப் புரிந்து இவற்றைப் பொதிசுமக்க மட்டுமின்றி ,உழவு வேலைக்கு, வண்டி ஓட்ட, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருப்பி அழைத்து வர, பட்டியில் அடைத்த ஆடு,கோழிகளைப் பாதுகாக்க போன்ற அறிவு சார்ந்த செயல்கள் பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். நம் ஊர் சேவல் சண்டை போல், ஆப்கானிஸ்தானில் கழுதைகளை வைத்து போட்டிகள், சண்டைகள் நடத்துகின்றனர்.

நமது மதங்களும் கூட கழுதைகளை காளராத்திரி தேவி, சீதளாதேவி போன்றோருக்கு வாகனமாக்கிப் பார்க்கிறது. நவ மாதர்களில் முக்கியமானவளாக கருதப்படுபவள் காளராத்திரி, நவராத்திரியில் இவளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. துர் மந்திர உபாசனை செய்யும் போது காளி தேவிக்கு கழுதையை வாகனமாக்கி வழிபடுவது மற்றுமொரு தந்திர வழிபாடு. பண்டைய எகிப்திய அரசர்கள் இதனை தெய்வத்தின் அடையாளமாகவும், தாங்கள் இறந்தால் 10 கழுதைகளைப் பலியிட்டு புதைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டனர். தற்போது கிடைத்துள்ள புதை பொருள் ஆராய்ச்சி இதனை உண்மை என நிரூபித்துள்ளது.

-எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா

 
Follow @kadaitheru