Tuesday, November 30, 2010

'ஸ்பெக்ட்ரத்தை' எப்படியெல்லாம் திசைதிருப்பலாம்??


கால்குலேட்டர் திரைக்குள்ளே வாராத அளவுக்கு இலக்கம் கோடி அரசுக்கு நஷ்ட்டத்தை ஸ்பெக்ட்ரம் மூலம் ஏற்படுத்தி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் ராசா. இந்த ஏலத்திற்காக அவருக்கும், மற்ற அரசியல்வாதிகள் மற்றும் வியாபார முதலைகளுக்கு எத்தனை கோடி கமிஷன் கிடைத்தது என்பது விடை காண முடியாத கேள்வி.

இந்த ஊழல் குறித்து முத்தமிழ் அறிஞர் என ஜால்றாக்களால் போற்றப்படும், முதல்வர் பொறுப்பில் இருக்கும் கருணாநிதி என்ன பேசினார் தெரியுமா? வேலூரில் நடந்த ஒரு பொது கோட்டத்தில் அவர் பேசியதாவது.

"காங்கிரஸ், - தி.மு.க., இரு கட்சிகளும் மதவாதத்தை ஏற்காது. நமக்குள் பிரிவு வந்தால் மதவாதிகள் உள்ளே நுழைந்து விடுவர். இனியும் துள்ளி குதிக்காமல் இருக்க இப்படி பேசுபவர்களை பேசவிடாமல் தடுக்கும் உரிமையும் காங்கிரஸ் தலைமைக்கு உள்ளது.இப்போது "ஸ்பெக்ட்ரம்' என்ற பேச்சு அடிபடுகிறது. ராஜாவை பற்றி பேசி பார்லிமென்ட் நடத்தவிடாமல், அமளியில் ஈடுபடுகின்றனர். பார்லிமென்ட் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் ராஜா ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கு பின் பார்லிமென்டில் கூட்டு விசாரணை தேவை என்கின்றனர்.

முன்பு "முந்திரா' ஊழலில் காங்கிரஸ் அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி பெயர் அடிபட்டது. அவர் ராஜினாமா செய்தார். "முந்திரா' ஊழல் முணுமுணுப்புடன் அடங்கிவிட்டது. ஆனால், ராஜா ராஜினாமா செய்த போதும் பார்லிமென்டை நடத்த விடாமல், பிரச்னை கிளப்புகின்றனர்.

இதற்கு காரணம் கிருஷ்ணமாச்சாரி ஆர்யாள், ராஜா தலித். இது தான் இந்திய சமதர்மமா? "ஸ்பெக்ட்ரம்' ஊழலை நிரூபிக்க தயாரா? . தற்போது, அரசியல் ரீதியாக ஆரியமா, திராவிடமா என்ற போட்டி நடக்கிறது. இதில், திராவிடம் வெல்லும்"

-இவ்வாறு தனக்கு "வாய்" இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக பேசிஇருக்கிறார் கருணாநிதி.

இதைபோலேவே கருணாநிதி அவர்கள் இந்த பிரச்சினையை திசை திருப்ப எப்படியெல்லாம் பேசலாம் என்று அவருக்கு மேலும் சில ஆலோசனைகள்.

1 . ராசா கருப்பாக இருப்பதால்தான் அவர் மீது குற்றம் சுமத்தி, அவர் நிரபராதி என ஏற்க மறுக்கிறார்கள். "சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் " என்று தம்பி வடிவேலு படத்தில் வருவதை போல, ராசா அவர்கள் தயாநிதி மாறனை போல சிவப்பாக இருந்து இருந்தால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அவரை நம்பி இருப்பார்கள்.

இது, கருப்பு இனத்திற்கும், சிவப்பு இனத்திற்கும் இடையே நடக்கும் யுத்தம்.

2 . பெரம்பலூர் போல கிராம(!) தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டதுதான் இந்த ஊழல் குற்றசாட்டுகளுக்கு காரணம். இதுவே அவர் ராஜீவ் காந்தி போட்டியிட்ட அமேதி போன்ற வட இந்திய தொகுதியில் இருந்து வெற்றி பெற்று இருந்தால், போபர்ஸ் போல ஸ்பெக்ட்ரத்தை மறந்து போய் இருப்பார்கள்.

3 . பெரும்பாலும் ராசா வேட்டி,சட்டை அணிந்தது பிடிக்காமல், ஸ்பெக்ட்ரம் குற்றசாட்டுகளை பாராளுமன்றத்தில் அவர் மீது சுமத்துகிறார்கள். இது, நமது தமிழ் பண்பாடுக்கு எதிராக நடக்கும் சதி. இதை நாம் அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும்.

4. அவர் பதவி வகித்த தகவல் தொழில்நுட்ப துறைக்கு எந்த வித சம்பந்தமோ, பொருத்தமோ இல்லாதவர் ஆ.ராசா. அவருக்கு,தனது மொபைலை தவிர வேறு எந்த சாதனத்தையும் பயன்படுத்த தெரியாது. அவர் மீது சுமத்தப்படும் ஸ்பெக்ட்ரம் - 2G குற்றசாட்டுகள் ஆதாரம் அற்றவை.

5 . ராசா பரம்பரை திமுககாரர். நான் பார்த்து வளர்ந்தவர். கணவர்(களை) இழந்து நிற்கும் கனிமொழிக்கு ஆறுதலாய்(?) நிற்கும் பாசத்திற்குரிய என் குடும்ப நண்பர். நான் சொல்லாமலே அமைச்சர் பதவியை ராஜினமா செய்த கழகத்தின் தியாக செம்மல். வரும் சட்ட மன்ற தேர்தலில் நமது கட்சியின் தேர்தல் செலவுகளை ஏற்பதாக உறுதிமொழி தந்து இருக்கும் உடன்பிறப்பு. இதில் இருந்தே தெரியவில்லையா அவர் நிரபராதி என்று. அவர் எப்போது ராஜினாமா செய்தாரோ அப்போதே இதற்கும்,அவருக்கும் சம்பந்தமே இல்லை என்று உணர்த்தி விட்டார் ராசா.

6 . அமைச்சராக இருந்தபோது, ராசா என்று தன்னை அழைத்து கொண்டதுதான் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு காரணம். இதையே "ராசா" என்று இல்லாமல், சமஸ்கிரதம் கலந்து "ராஜா" என்று பெயர் வைத்துகொண்டு இருந்தால் யாரும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை இப்படி பெரிசு பண்ணமாட்டார்கள். இது, தமிழ் மொழி மீதான வடமொழி பேசும் மக்கள் தொடுக்கும் போர்.

என்னைபோலவே,நீங்களும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை திசை திருப்ப
உங்கள் ஆலோசனைகளை "தலைவருக்கு" கூறுங்கள்.


-இன்பா
 
Follow @kadaitheru