Saturday, October 31, 2009

நதிநீர் இணைப்புத் திட்டம் - நன்மையா? தீமையா?


நதிகள் இணைப்பு திட்டம்....அடிக்கடி செய்திகளில் மட்டும் அடிபடும் ஒரு திட்டம்.இன்றைக்கும் ஒரு செய்தி ஆகி இருக்கிறது நமது பிரதமர் திரு. மன்மோகன் சிங் அவர்களின் ஒரு அறிக்கையால்.

கடந்த மாதம் சென்னைக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி எம்.பி., நதிநீர் இணைப்புத் திட்டம் பேரழிவு திட்டம் என்றும், இந்தத்திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து விளையும் என்றும் கூறினார். இதனால் இத்திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், டெல்லியில் ஓர் ஆங்கிலப்பத்திரிகை சார்பில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங்கலந்து கொண்டார். தொடக்க உரைக்கு பிறகு அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு பதில் அளித்து மன்மோகன்சிங் கூறியதாவது:-

"நதிநீர் இணைப்பு திட்டத்தால், கூடுதலான விவசாய நிலங்களில் நீர்ப்பாசனம் செய்ய முடியும். ஆனால் இதில் சில பிரச்சினைகள் உள்ளன. சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய கவலை உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டால், அது உயிரினங்களுக்கு ஈடுசெய்ய முடியாத அளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். எனவே, நதிநீர் இணைப்பு திட்டத்தை எச்சரிக்கையுடன் செயல்படுத்த வேண்டி இருக்கிறது.

மேலும், நதிநீர் இணைப்பு திட்டம், எந்த அளவுக்கு மக்களுக்கு தண்ணீர் பாதுகாப்பை அளிக்கும் என்று நிபுணர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருகின்றன. இருப்பினும், தற்போது இரண்டு, மூன்று நதிநீர் இணைப்பு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றில், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் ஓடும் கேன்- பேட்வா நதிகளை இணைக்கும் திட்டமும் ஒன்று. இந்த திட்டத்தை சோதித்து பார்க்கப்போகிறோம்" - என்று அறிவித்து இருக்கிறார் பிரதமர் அவர்கள்.

நதிகள் இணைப்பு எந்த அளவுக்கு சாத்தியம்? எளிதில் முடிகிற காரியமா இது?இதனால் ஏற்படும் சாதக,பாதகங்கள் என்ன?

இரண்டு விஞ்ஞானிகளின் இருவேறு மாறுப்பட்ட கருத்துக்களை உங்கள் முன்வைக்கிறேன்.

டாக்டர் அப்துல்கலாம் : "நதிகள் இணைப்பு திட்டம் சாத்தியமே" என்கிறார் கலாம் அவர்கள். இவர் தமிழக நதிகளை இணைத்து, அவற்றுக்கு ஒரு பொதுவான வழித்தடத்தை உருவாக்கும் ஒரு புதிய திட்டத்தை முன் மொழிந்து இருக்கிறார்.

நதிநீர்இணைப்பு சாத்தியமில்லை என்று சில அரசியல் தலைவர்களும் மந்திரி பொறுப்பில்உள்ளவர்களும் பேசுவதை இப்போதும் கேட்கிறோம். நாம் வானத்தை வில்லாகவளைக்கச் சொல்லவில்லை, வானவில்லையும் நேராக்கச் சொல்லவில்லை. நம்கண்ணெதிரே இருக்கக் கூடிய ஒரு விஷயத்தைச் சரி செய்யுங்கள் என்றுதான்கேட்கிறோம்.

தமிழ்நாடுவாட்டர்வேஸ் பிராஜக்ட் பற்றிச் சொல்லியிருந்தேன். அது ஒரு மிகப் புதுமையான திட்டம். வெள்ளத்தைக் கட்டுப் படுத்துவது மட்டுமின்றி உபரிநீரைச்சேமிக்கவும் வைக்கக்கூடிய திட்டம். இரண்டு வழிகளில் நீர் செல்லக்கூடியஒன்று. மேட்டூர், சாத்தனூர், பவானி, வைகை, மணிமுத்தாறு, பேச்சிப்பாறை,சோலையாறு, பாபநாசம், சேர்வலாறு இவற்றோடு பூண்டி, சோழவரம், ரெட் ஹில்ஸ்,செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற எண்ணற்ற ஏரிகள், குளங்களை இணைக்கக் கூடியஅற்புதமான திட்டம்.

தமிழ்நாட்டில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாயக்கூடிய முக்கியமான நதிகளை ஒருபொதுவான வழியின் மூலம் இணைக்கக் கூடிய அத்தனை வரைத் திட்டங்களும் அதில்இருக்கின்றன. இந்தத் தண்ணீர் வழிகள் அனைத்தும் கடல் மட்டத்திலிருந்து 300மீட்டர் உயரத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்றால் எவ்வளவு ஆழமானஆராய்ச்சிக்குப் பிறகு இவை தீட்டப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குப்புரியும்.இது என்னுடைய கனவுத் திட்டம்.

இந்த தண்ணீர் வழிகளின் வழியே தமிழ்நாட்டின் அத்தனைஆறுகளும் இணைக்கப்பட்டு தமிழகத்தின் எல்லா ஆறுகளும், ஏரிகளும்,குளங்களும், கால்வாய்களும், இணைக்கப்பட்டு எல்லாவற்றிலும் ஆண்டு முழுவதும்கற்கண்டுத் தண்ணீர் தளும்பி நின்று விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும்,தொழிற்சாலைகளுக்கும் எப்போதும் தாகம் தீர தண்ணீர் கிடைக்கக் கூடிய அந்தஅற்புதக்காட்சி எப்போதும் என் கனவுகளில் வருவது உண்டு. அந்தக் கனவுமட்டும் நிறைவேறிவிட்டால் தமிழ்நாடே சொர்க்கபுரி ஆகிவிடாதா என்ன?

ஒவ்வொரு நதியும் ஒவ்வொரு இடத்தில் இருப்பது போல் மேம்போக்காகப் பார்க்கும் போதுநம்மை பிரமிக்க வைக்கும். ஆனால் தேர்ந்த வரைபடத் திட்டங்களின் முலம் இவைஎத்தனை அழகாக இணைக்கப்படக்கூடியவை என்கிற உண்மை புரியும்.

இது ஏதோ வரைபடத்தில் மட்டுமே உள்ள, நிதர்சனத்தில் சாத்தியமே இல்லாத பகல்கனவுதிட்டம் அல்ல. ஐந்து கட்டங்களில் நிறைவேற்றப்படக் கூடிய பிராக்டிகலானதிட்டம்.

முதல் கட்டத்தில் வைகையையும் மேட்டூரையும் இணைக்கும் திட்டம். இது 350 கிலோ மீட்டர் நீளமானது.இரண்டாவது கட்டம் மேட்டூரையும் பாலாறையும் இணைப்பது, இது 270 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.150 கிலோ மீட்டர் நீளம் கொண்ட வைகை - தாமிரபரணி இணைப்பு அடுத்த கட்டத்தில் உள்ளது.நான்காவது கட்டத்தில் 130 கிலோமீட்டர் நீள முள்ள தாமிரபரணி - பெருஞ்சாணி இணைப்பு வருகிறது.ஐந்தாவதுகட்ட மாக இந்த நதிகளை இணைப்பு மூலம் கிடைக் கக்கூடிய உபரி நீரை ஆங்காங்கே உள்ள குளம், குட்டை, ஏரிகளில் இணைக்கக்கூடிய சப்சிடியரி கால்வாய்திட்டங்கள்.

இப்படி நதிகளைஇணைப்பது மூலம் தண்ணீர் அற்ற நதிகளுக்குத் தண்ணீர் கிடைப்பது மட்டுமன்றி,இதர தண்ணீர் நிலைகளுக்கு அதன் உபரித்தண்ணீரும் திறந்து விடப்படுவதால்நாடெங்கும் தண்ணீர் திரண்டு நிற்கக்கூடிய அற்புதமான நிலையை நம்மால் காணமுடியும். செவ்வாய் கிரகத்துக்குச் செல்ல வேண்டியதைப் போன்ற மலைக்கவைக்கும் திட்டம் அல்ல இது.
பத்தே வருடங்களில் செய்து முடிக்கக் கூடிய பிராக்டிகலான திட்டம்.இதனுடைய பலா பலன்களும் திட்டவரைவில் தெளிவாகவே சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

முதல்கட்டமாக வெள்ள அபாயத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது இந்தத் திட்டம்,உபரியாக, 7.5. மில்லியன் ஏக்கர் அளவு விவசாய நிலத்துக்குப் பாசன நீரைஅளிக்கும்.

150 மெகாவாட்மின்சாரத்தை ஹைட்ரோ பவர் மூலம் உற்பத்தி செய்யும். நிலத்தடி நீர் அளவைஅதிகரிப்பதின் மூலம் மின்சார உபயோகத்தை 1350 மெகாவாட் அளவு குறைக்கும்.

10மீட்டர் ஆழமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு அருமையான நீர்வழிப்பாதையை இந்தத் திட்டம் ஏற்படுத்தித் தரும். தண்ணீர் போக்குவரத்து, சுற்றுலாபோன்ற வற்றின் மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும்.
சாலைப்போக்குவரத்தைக் காட்டிலும் 90 சதவீத எரிபொருள் சேமிப்பு இந்தத் தண்ணீர்வழிப் போக்கு வரத்தின் மூலமாகக் கிடைக்கும். ஐம்பது மில்லியன் பொது மற்றும் தொழிற் சாலை சார்ந்த மக்களுக்கு இந்தத் தண்ணீர் மூலம் பயன் கிடைக்கும். புதிய மின் உற்பத்திக் கான வழிகள் இந்தப் புதிய தண்ணீர் சாலைகளின் வழியே ஏற்படும்.

சிந்தித்துப்பாருங்கள். இந்தப் புதிய தண்ணீர் வழிகள் தமிழ்நாட்டின் தலைவிதியையே மாற்றிவிடாதா? அசோகர் சாலை இருமருங்கிலும் மரங்களை நட்டார், ஏரி, குளங்களைஏற்படுத்தினார் என்று இன் றைய சரித்திரத்தில் படிக்கி றோமே, அதே போல்நாளைய வரலாற்றில், தமிழகத்தில் நதிகளை இணைத்தார்கள், அதன் மூலம் தமிழ்நாடு வளம்பெற்றது என்று எழுதப்பட வேண்டாமா? அது நம் கையில்தானேஇருக்கிறது?

என்று ஒரு கட்டுரையில் விளக்கம் தந்து, தனது நதி நீர் இணைப்பு கனவை வெளிப்படுத்தி இருக்கிறார் டாக்டர் அப்துல் கலாம்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் : "இயற்கைக்கு முரணாக நதிகளின் போக்கை திருப்பிவிடக் கூடாது" என்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"நதிகளின் போக்கை திரும்பிவிடக் கூடாது. அது இயற்கைக்கு முரணானது. அதனால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வனப்பகுதியும் அழிந்துவிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.

நதி நீர் ஆதாரம் இல்லாத நிலையில் மன்னர்கள் ஏராளமான ஏரிகள், குளங்களை அமைத்தனர். அவற்றின் மூலம் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைத்து வந்தது. அப்போது இயற்கை விவசாயம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதால், தண்ணீரின் தேவையும் குறைவாக இருந்தது. ஆனால், பசுமைப் புரட்சி என்ற பெயரில் ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டால் நிலம் பாழ்பட்டது. நீரின் தேவையும் அதிகரித்தது. பராமரிப்பின்றி ஏரிகளும் குளங்களும் தூர்ந்துபோனதால், விவசாயமும் அழிந்து வருகிறது. நமது விவசாயிகள் 120 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்தி வந்தனர். அவற்றில் 90 வகை நெல் ரகங்கள் இப்போது வழக்கொழிந்துவிட்டன. இவை எல்லாமே வறட்சியைத் தாங்கும் திறன் கொண்டவை. மக்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்" என்று அறிவித்து இருக்கிறார் நம்மாழ்வார் அவர்கள்.

இயற்கை வேளான்மை திட்டம் பின் நதிகள்,குளங்கள் மற்றும் ஏரிகளை தூர்வாருதல் போன்றவையே அரசு செய்யவேண்டிய, அத்தியாவசியமான திட்டங்கள் என்கிறார் அவர்.

நமது வாசக நண்பர் முனைவர் இரா.குணசீலன் அவர்கள் "எத்தனை தொழில்நுட்பங்கள் வந்தாலும்,அவையாவும் இயற்கைக்கு ஈடாகுமா..?" என்று கேட்டுஇருந்தார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் கூறுவதுபோல, இயற்கை என்பது ஒரு எல்லை இல்லா மாபெரும் சக்தி. அதற்க்கு எதிராகவோ அல்லது முரணாகவோ செல்வது மனிதர்களால் இயலாத காரியம் என்றே நமக்கு தோன்றுகிறது. அப்படி செல்வது, தீமைகளையே தரும் என்றும் தோன்றுகிறது.

கடைக்காரர் கமெண்ட்:
நம்ம ஊரு நெய்வேலி கரண்ட்டு எல்லா மாநிலத்துக்கும் போகுது. கேட்டா அது தேசிய உடைமைன்னு சொல்றாங்க.

ஆனா காவேரி, பாலாறு போன்ற நதியெல்லாம் அது உருவாகுற மாநிலத்துக்குத்தான் சொந்தமாகுது. நமக்கு மிச்சம்,மீதிதான் அனுப்புறாங்க.

முதல்ல நதிகளை தேசிய உடமை ஆக்குங்க...அப்புறம் அதை சேக்கறது பத்தி பாக்கலாம்.




பதிவு : இன்பா

4 comments:

Srinivas said...

kadikarar comment is good as always

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அது இயற்கைக்கு முரணானது. அதனால், பல்லாயிரக்கணக்கான உயிரினங்களும் வனப்பகுதியும் அழிந்துவிடும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை.//

ஆமாம். குளங்கள் கட்டுவது என்பது இயற்கைக்கு எதிரான செயல்தான். பயிர்களை ஒரே இடத்தில் நட்டு விவசாயம் செய்தல் என்பது இயற்கைக்கு எதிரான செயல். இயற்கையாக செடிகள் வளரும்போது பலவகையான செடிகள், கொடிகள், மரங்கள் ஒரே இடத்தில் வளரும். மனிதன் அதிலிருந்து உணவு எடுத்துப் பழகவேண்டும். இயற்கைக்கு எதிரான விவசாயம் செய்யும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும். அப்போதுதான் இயற்கை கட்டிக் காக்கப் படும். இயற்கையை மீறினால் பேரழிவு நிச்சயம்..,

பெசொவி said...

கடைசி வரி சும்மா "நச்"னு இருக்குதுங்கோவ்!

R.Gopi said...

மற்றொரு மிக நல்ல பதிவு...

இரு வேறு பெரிய மனிதர்களின் இருவேறு எதிர்மறையான கூற்று...

இப்போ, இணைக்கலாமா, வேண்டாமா??

கடைக்காரர் கமெண்ட் நச்....

 
Follow @kadaitheru