Thursday, June 7, 2012

நான் மொட்டைமாடி பேசுகிறேன்


நட்சத்திர  புள்ளிகளை இணைத்தபடி
நிலவொளிப் பாயில்
என்மீது படுத்ததுண்டா
நீங்கள்?

ஒரு
சூர்யோதையப் பொழுதில்
கோபுர தரிசனம்
செய்ததுண்டா நீங்கள்?
என்மீது நின்றபடி.

அந்திமாலை வானத்தில்
பறவைகள் ஊர்வலம்.
இப்படியொரு வேளையில்
என்றாவது ஒரு நாள்
என்னோடு சேர்ந்து
ஒரு கவிதைப்புத்தகம்
வாசித்ததுண்டா?

உங்களோடு
நீங்கள் மனம்விட்டு பேச...
யாருமில்லா வேளையில்
என்வழி பேசுவதே
ரே வழி.

எங்கிருந்தோ ஒலிக்கும்
பாடல்.

பூக்களாய்..
என்மீது மோதி
மொட்டுக்களாய் சிதறும்
மழைத்துளிகள்

தெரியுமா உங்களுக்கு?
இந்த பட்டியலில்
இருப்பதும்,
இல்லாமல் விடுபட்டதும் .

அன்று
அம்மாவோடு சேர்ந்து
நிலாச்சோறு ஊட்டிய
நான்..
இன்றோ
ஒரு
சரக்கு தர்'பார்'.

துணி, வற்றல்
உலர்த்தவும்
லாயக்கு இல்லாமல்
போய்விட்டேன் நான் .
பால்கனியின்
வரவுக்கு பின்.

அண்டை வீட்டுக்காரர்களை
மட்டுமல்ல
எல்லோருக்கும் மேலிருக்கும்
என்னையும் தெரியாத
இன்றைய
அடுக்குமாடி மனிதர்கள்.

இன்றைக்கு
காணாமல் போனவர்கள்
பட்டியலில்...
திண்ணை
தாவணி
துப்பட்டாவோடு
நானும்.


கவிதை :  இன்பா

 
Follow @kadaitheru