Thursday, January 21, 2010

மாவீரர் நேதாஜி நினைவலைகள்...


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மனியிலிருந்து ஜப்பானுக்குச் செல்லுமுன் பிப்., 8, 1943ல், தன் சகோதரர் சரத்சந்திரபோசுக்கு தன் கைப்பட வங்க மொழியில் ஒரு கடிதம் எழுதி, அதை அவரது ஆஸ்திரிய மனைவி எமிலி ஷெங்கில்லிடம் கொடுத்திருந்தார்.

நேதாஜி 1941ல் எமிலியை மணந்து கொண்டார். ஒரு வருடம் மனைவியுடன் தங்கி இருந்தார். பெண் பிறந்து 27வது தினத்தில் ஜப்பானுக்குப் புறப்பட்டார். 1935ல், "இந்தியப் போராட்டம்' என்னும் நூலை நேதாஜி எழுதிய போது, சுபாஷின் காரியதரிசியாக பணியாற்றினார் எமிலி. திருமதி எமிலி ஆஸ்திரியாவில் ஒரு மத்தியதர வகுப்பைச் சேர்ந்த பெண்.

அக்கடிதத்தை, 1948ல் வியன்னாவிற்கு சென்றிருந்த சரத்போசுவிடம் கொடுத்தார் எமிலி.

நேதாஜி எழுதிய வங்கக் கடிதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு...

பெர்லின், 8.2.1943
என் பேரன்பிற்குரிய அண்ணா அவர்களுக்கு,

இன்று நான் மறுபடியும் தாயகம் நோக்கிப் புறப்படுகிறேன். என் பிரயாணமோ பேராபத்து நிறைந்தது. இம்முறை தாயகம் வரவே கிளம்புகிறேன். ஒரு வேளை நான் அங்கு வந்து சேர இயலாமல் போனாலும் போகலாம். வழிப் பிரயாணத்தில் நான் ஏதும் விபத்திற்குள்ளானால் என்னைப் பற்றிய குறிப்பு ஒன்றை எழுதி, அதை தங்களிடம் உரிய காலத்தில் சேர்ப்பிக்கச் சொல்லியுள்ளேன்.

நான் இங்கே கலியாணம் செய்து கொண்டு குடும்பஸ்தனாகி விட்டேன். என் மனைவிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. அண்ணா! தாங்கள் என் வாழ்நாள் முழுதும் என்னிடம் காட்டி வந்த அன்பு எல்லையற்றது. அதே அன்பை, கருணையை, என் மனைவி, மகள் இருவரிடத்தும்... நான் இம் மண்ணுலகினின்று நீங்கிய பின்னரும், ஒரு போதும் காட்டத் தவறாதிருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். என் மனைவியும், பெண்ணும், நான் உலகில் அரை குறையாய் விட்டுச் செல்லும் பணியை வெற்றியுடன் செய்து முடிப்பார்களாக! இதுவே, நான் ஆண்டவனிடம் செய்து கொள்ளும் இறுதியான பிரார்த்தனை. விடை பெற்றுக்கொள்கிறேன்.


அண்ணா! தங்களுக்கும், அண்ணியார் அவர்களுக்கும், மகா பூஜிதையாகிய நம் அன்னையார் அவர்களுக்கும், நமது குடும்பத்தார் அனைவருக்கும் எளியேனின் மதிப்பிற்குரிய வணக்கம்.

தங்கள் பேரன்பிற்குரிய
சகோதரர் சுபாஷ்.

"ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிந்தி, உயிர்தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும்,கேட்டும்,பேரம் பேசியும் பெறுவதல்ல...' என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர் நேதாஜி.

அவர் ஒரு மாபெரும் தியாகி. விவேகானந்தரின் கருத்துக்களால் 16 வயதிலேயே ஈர்க்கப்பட்டு, வீட்டை துறந்தவர். ஐ.சி.எஸ்., என்ற உயர் பதவியில், 24 வயதில் இந்தியாவிலேயே நான்காவது மாணவனாக தேர்வு பெற்று அமர்ந்தவர், இந்த பதவியால் இங்கிலாந்து மக்களுக்கு மட்டுமே லாபம், இந்திய மக்களுக்கு பிரயோசனமில்லை என்பதை அறிந்த அடுத்த கணமே அந்த பதவியை துறந்தவர். குடும்ப சொத்தாக தனக்கு வந்த பங்களாவை 35 வயதில், "தேவையில்லை' என, தேசத்திற்காக அர்ப்பணித்தவர்.

காங்கிரஸ் கட்சி தலைவராக 42வது வயதில் வெற்றி பெற்ற போதும், அந்த பதவியால் எதுவும் செய்ய முடியாது என்று எண்ணிய உடனேயே அந்த பதவியை தூக்கி எறிந்தவர்.

ஜெர்மன், ஜப்பான், உள்ளிட்ட உலக நாடுகளுக்கு 44வது வயதில் பயணம் செய்து, நாட்டின் விடுதலைக்காக வித்திட்டவர். 85 ஆயிரம் வீரர்கள் கொண்ட இந்திய தேசிய ராணுவம் அமைத்து, மொத்தம் அன்றைய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை குலை நடுங்க வைத்தவர்; அந்த படையில் ஜான்சி ராணி என்ற பெண்கள் பிரிவையும் ஏற்படுத்தியவர்.

நம்மிடையே, "வாழ்ந்து' கொண்டு இருப்பவரான தேச தலைவர் நேதாஜி, சென்னைக்கு இரண்டு முறை வருகை தந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டை பாரதி சாலையில் உள்ள காந்தி சிகரம் என்ற வீட்டிற்கு, 1939ம் ஆண்டு, செப்டம்பர் 3,4,5 ஆகிய தேதிகளிலும், பின் 1940 ம் ஆண்டு, ஜனவரி 10,11 ஆகிய தேதிகளிலும் வந்து தங்கியுள்ளார்.
தேச பக்தரான அய்யாசாமி என்ற பொறியாளர், 1930ல் கட்டிய இந்த வீட்டின் மாடியில் உள்ள தனி அறையில் தங்கினார் நேதாஜி. இப்போது, அய்யாசாமியின் பேரனான, எஸ்.பி.தனஞ்ஜெயா என்பவர் இந்த வீட்டை மட்டுமல்ல, நேதாஜி தொடர்பான பல ஆவணங்களையும், புகைப்படங்களையும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார்.

நேதாஜி வந்து தங்கியிருந்த போது ஆன செலவு, தனியாக ஒரு பேப்பரில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதில், ஒரு மூட்டை அரிசி 8 ரூபாய் என்றும், மூன்று நாளைக்கு தேவையான துவரம் பருப்பு வாங்கிய வகையில் 2 ரூபாய் என்றும் கணக்கு போகிறது. கம்பீரமாக பாரதி சாலையில் நேதாஜி நடந்து வருவது, மற்றும் குழுவாக அவர் எடுத்துக் கொண்ட பல அரிய படங்கள் உள்ளன. சில படங்களில் அவரே கையெழுத்தும் போட்டுள்ளார்.

மூன்றாவது மாடியில் அவர் தங்கியிருந்த அறை சிறியது என்றாலும் அழகானது. அங்கு இருந்து பார்த்தால், கடற்கரையும், இந்த பக்கம் அண்ணாநகர் கோபுரமும் தெரியுமாம். இப்போது காங்கீரீட் காடாகி விட்ட சென்னையில் அதெல்லாம் மறைந்துவிட்டது.

நேதாஜியின் தமிழக வருகையை சரியான ஆவணங்களுடன், நிறைய ஆதாரங்களையும் கொண்டு ஒரு சாட்சியாக நிற்கும் இந்த நினைவு இல்லத்தை பராமரிப்பது தற்போது தனஞ் ஜெயாவிற்கு சிரமமாக உள்ளது. வாடகைக்கு விட்டால், ஒரு நொடியில் வர்த்தகமயமாக்கி, இதன் அருமை தெரியாமல் செய்துவிடுவர்.

ஆகவே, நேதாஜியின் நினைவுகளை தாங்கி நிற்கும் இந்த இடத்தை, அதன் பழமை மாறாமல் அப்படியே பாதுகாக்க விரும்புவர்களும்,நேதாஜி நினைவு இல்லத்தை சுற்றிப் பார்க்க விரும்பு பவர்களும் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 09381001793.

நேதாஜி என்று நம் இந்திய மக்களால் பெருமையுடனும், மரியாதையுடனும் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ்க்கு வருகிற
ஜனவரி 23ந்தேதி, 113 வது பிறந்த நாள்.

(நன்றி : தினமலர்) .

கடைக்காரர் கமெண்ட் :
அரசியல் கட்சிகளின் லாப நோக்கத்துக்கு காந்தி பயன்பட்டது போல, அமரர் நேதாஜி பயன்படவில்லை போலும்.
நமது வரலாற்றில் மறுக்கப்பட்ட அல்லது திட்டமிட்டு மறைக்கப்பட்ட மாவீரர் நேதாஜியை நாம் நினைவு கொள்வோம்.


பதிவு : இன்பா

Monday, January 18, 2010

'அசல்' - எழுத்தாளர் அஜித்

"இந்த படத்துக்கு திரைக்கதை எழுதி முடிப்பதற்க்குள் இருக்கிற கொஞ்ச தலைமுடியும் கொட்டிவிட்டது " என்று "வள்ளி" பட ஸ்க்ரிப்ட் எழுதிய போது சொன்னார் ரஜினி. "எழுதுவது என்பது ஒரு பிரசவ வலி" என்றார் கமல்.

இந்த வரிசையில் இன்னொரு முன்னணி நடிகரும் இணைந்து இருக்கிறார். விரைவில் வெளிவர இருக்கும் ஒரு படத்தின் டைட்டிலில் கதை-திரைக்கதை ஒத்துழைப்பு என்று அவர் பெயரும் இடம் பெறுகிறது.

அந்த நடிகர் 'தல' அஜித். படம் அசல்.

"அசல் படத்தில் அஜித் அவர்களின் பங்களிப்பு கதையில் மட்டும் இல்லாமல் திரைக்கதை மற்றும் வசனங்களிலும் அதிகம் இருக்கிறது. அதற்க்கு விலை மதிக்க இயலாது. ஸ்க்ரிப்டில் உருவெற்றிய விஷயங்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் மெருகு ஏற்றி இருக்கிறார் இயக்குநர் சரண் " என்கிறார் படத்தின் விவாதம் மற்றும் ஸ்க்ரிப்டில் பணிபுரிந்த எழுத்தாளர் யூகிசேது.

வில்லன் மற்றும் ரமணா போன்ற பெரும் வெற்றி படங்களில் ஏற்கனவே யூகிசேது பங்குபெற்று இருக்கிறார்.

"முதல் முறையாக அஜித்தின் பெயர் எழுத்தாளர் என்ற தலைப்பில் இடம் பெறுவது எங்களை போன்ற எழுத்தாளர்களுக்கு பெருமை தரும் விஷயம். எழுத்துக்கு இத்தனை முக்கியத்துவம் தருவதால்தான் தன்னையும் அதில் இணைத்து கொண்டு இருக்கிறார் அஜித் " என்று கூறுகிறார் யூகிசேது.

ஆரம்ப கட்டங்களில் தான் நடிக்கும் படங்களின் கதையே கேட்காத அஜித் , இன்று அசல் படத்தில் எழுத்து வேலைகளில் இறங்கியது எப்படி?

"அவர் 49 படங்களில் நடித்து இருக்கிறார். இதில் ஆர்வம் என்பதை விட, அனுபவம் அவருக்கு நிறைய உள்ளது. சொல்லும் கதை, எளிமையாக இருக்கவேண்டும். அப்போது தான் அது சி சென்டர் ரசிகர்களுக்கும் சென்றடையும் என்பதில் அஜித் தீர்மானமாக இருந்தார். முழுக்க வெளிநாடுகளில் எடுக்க பட்டாலும், ஆங்கில வசனம் அதிகம் இடம் பெறாமல் பார்த்துக்கொண்டார்" என்று தனது அனுபவங்களை பகிர்கிறார் சரண்.

"அவருக்கு இருக்கும் அனுபவத்துக்கு அவர் விரைவில் படம் டைரக்ட் செய்தாலும் ஆச்சிரிய படுவதார்க்கு இல்லை " என்று ஒரு சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார் சரண்.

ஒரு பைக் மெக்கானிக் என்று தொடங்கிய அஜித்தின் வாழ்க்கை பயணம், நடிகர், விளையாட்டு வீரர், ஏரோனாடிக்ஸ் என்று பல பரிணாமங்களை வெளிப்படுத்தியதை போலவே, இயக்குனர் என்ற பரிணாமத்தையும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்ப்போம்.

இது பற்றிய ஒரு கேள்விக்கு இவ்வாறு பதில் தந்தார் அஜித்.

"ஒரு படம் நல்லா வரணும்னா டீம் வொர்க் ரொம்ப அவசியம். நான் நடிக்கிற படம் சிறப்பா வர என்ன என்ன செய்யணும்மோ அதை செய்யறேன். ஒரு நடிகனா நிலையான இடம் கிடைச்சு இருக்கு.தனியா ஒரு படம் இயக்க ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா கண்டிப்பா நான் பின் வாங்க மாட்டேன் ".

'அஜித்' என்பது தன்னம்பிக்கையின் மறு பெயர்.

பதிவு : இன்பா

Tuesday, January 12, 2010

விவசாயி - கடவுள் கண்டெடுத்த தொழிலாளி?

எந்திரம் என்பதற்காக நான் எந்திரத்தை எதிர்க்கவில்லை ,அது நம்மீது முழுமையாக ஆளுமை கொள்ளும் போது முற்றிலுமாக எதிர்ப்பேன்"


--யங் இந்தியாவில் காந்திஜி எழுதியது.

நேற்றோடு முடிந்த ,கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தினமும் 4,5 லாரிகள் என கேரளா நோக்கி சென்ற அடி மாடுகளின் எண்ணிக்கை ஏராளம்.அவை அனைத்தும் என் இல்லம் கடந்தே சென்றது மன வருத்தத்தை அளிக்கிறது.30-40 ஆண்டுகள் பால் வியாபாரம் செய்த வரதனும் இனிமேல் தொழில் செய்ய முடியாது என்ற தீர்மானத்தில் அதை விட்டுவிட்டதாக கூறினான். தான் பால் கறக்கும் வீடுகளில் 10 க்கும் மேற்பட்டவர்கள் மாடுகளை அடி மாடாக விற்று விட்டார்கள்.மாடுவளர்ப்பு தங்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது என தகவல் சொன்னான்.


கம்பம் பள்ளத்தாக்கில் புறக்கணிக்கப்பட்ட கிராமங்கள் அதிகம். அரசின் உதவி என்பது அவர்களது அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்யாமல் பரிதவிக்க வைக்கின்றன.இலவச கலர் டீவியை குதிரையில் சுமந்து சென்று அரசு தருகிறது. ஆனால் பாவம் ஞாபகமறதியில் மின் இணைப்பை தரவில்லை. கட்டிலில் படுக்கவைத்து நோயுற்றவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கி செல்ல வேண்டி உள்ளது.ஆரம்ப சுகாதார மையம் இல்லை. உருப்படியான பாதை இல்லை.இப்படியாக நிறைய "இல்லாமைகள்" அதிகம் உள்ள கிராமங்கள் அதிகம். அவர்களது அடிப்படை தொழில் காட்டு புற்களை கொண்டு கூடை முடைவது ,விவசாயம் செய்வது, பால்மாடு வளர்ப்பது ஆகும்.உழவிற்கு "ஏர் உழவு தான்" ,டிராக்டர்கள் இல்லை. இவ்வளவு நெருக்கடியிலும் மக்கள் மனதில் ஈடில்லா மகிழ்ச்சி நிறைய உள்ளது.
காந்தி வாழ்ந்த காலத்தில் டிராக்டர்கள் இல்லை.ஆற்றல் என்ற வார்த்தை பிரயோகம் பல்வேறு கோணங்களில் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த போது , விவசாயம் சார்பாக, டிராக்டர்கள் முன்னிறுத்தப்பட்டது. இதன் வருகை காளைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.


நவீன அறிவியலின் அடையாளமான டிராக்டர், மீண்டும் உருவாக்க முடியாத பெட்ரோல், டீசல் போன்ற இயற்கை மூலாதாரங்களை சார்ந்தே வரும் என்பதை யாரும் அப்போது உணரவில்லை.இன்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஏர் உழவு பிராதனமாக கொண்டிருக்கும் சூழலில், நம் பொருளாதார மேதைகள் இதை "மாட்டுவண்டி பொருளாதாரம்" என கிண்டல் செய்து,புறந்தள்ளுவது பெரும் வேதனை. இன்று "உயிர்ச்சூழல் சமன்பாடு" என்ற (ecological balance) வார்த்தை அதிக புழக்கத்தில் உள்ளது. அதிக குழப்பம் தரும் வார்த்தையும் இதுவே. இந்த சமன்பாட்டை தரும் ஒரே உயிரினம் பசுக்கள், எருமைகள், மற்றும் காளைகளே.ஆனால் டிராக்டர் வாங்க கடன் உதவியும்,தள்ளுபடியும் தரும் வங்கிகள் ஏனோ காளை வண்டி வாங்க கடன் தருவதில்லை. 1960களில் 31,000 டிராக்டர் மட்டுமே இருந்த இடத்தில் தற்போது பல லட்சம் டிராக்டர்கள் உள்ளன.ஒன்று, இரண்டு ஏக்கர் நிலம் உள்ள விவசாயியால் எப்படி டிராக்டர் வாங்க முடியும்?இதை அரசு நினைவில் கொள்ளவே இல்லை.பத்தாண்டுகளுக்கு முன்னர் 740 லட்சம் காளை மாடுகள் ,நமது விவசாயத்திற்கு தன் தோள் தந்தது.8,200 லட்சம் பசுக்களின் சாணமும், கோமியமும் உரமாகின. இன்று இவை அனைத்தும் மாமிசத்திற்காக கொலை களத்தில் உள்ளன. கால் நடை பாதுகாப்பு சட்டங்கள் இயற்றப்பட்ட ஜோரில் காலாவதியும் ஆகியது.


பெங்களூரில் உள்ள "கார்டுமேன்" நிறுவனம் ஒரு சர்வே நடத்தி சேகரித்த தகவல் படி இந்திய காளைகளின் சக்தி தினமும் ஆறு மணி நேர வேலை என்ற அடிப்படையில் 30,000 மெகா ஹெர்ட்ஸ் அளிக்கிறது. உழவிற்கு பால் வற்றிய பசு ,எருமை மாடுகளின் ஈடுபாடும் சுமார் 16,000மில்லியன் யூனிட் மின் சக்தியை மிச்சமாக்குகின்றன. பாரமிழுக்கும் மாடுகள், சந்தைக்கு செல்ல, குடும்ப உறுப்பினர்களை அழைத்து செல்ல, தோட்டத்திற்கு செல்ல என அனைத்து அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்வதால் சுமார் 4000 மில்லியன் யூனிட் மின்சக்தி மிச்சமாகிறது.இந்த அளவு மின்சக்தியை பெற 40,000 கோடி ரூபாய் டீசலை நாம் கச்சா எண்ணை வாங்க வேண்டும்.இந்த நடமாடும் சக்தி ஜீவன்களின் பயன்பாடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பூஜ்ஜிய நிலைக்கு வருமானால், நம் பொருளாதாரம் திவாலாகும் நிலைமை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார் அமெர்த்தியா சென். நவீன அறிவியலை உட்புகுத்திய ஐரோப்பிய நாடுகள், தங்கள் கிராமங்களில் இன்றும் காளைகளை பயன்படுத்துவதற்கு எப்போதும் தயங்குவதே இல்லை.நம் நாட்டின் நிலை தலைகீழாக மாறி கிராமங்களில் காளை உழவை காண்பது அரிதாகி வருவது வேதனைக்குரியது.


மத்திய அரசின் புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி அமைச்சகம், ஆற்றலை விரிவாக்கும் நோக்கத்தோடு, சூரிய ஆற்றலை பயன்படுத்த அதிகம் முக்கியத்துவம் அளிக்கிறது.உண்மையில் சூரிய ஆற்றலை எரிசக்தியாக உபயோகிக்க பயன்படும் நுட்பம் இந்திய தொழில் நுட்பம் இல்லை,அது அமெரிக்க நுட்பமாக உள்ளதால் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. அதற்காக அரசும் மானியம் தரவேண்டிய அத்தியாவசியம் ஏற்படுகிறது. பயோமாஸ் விஷயத்திலும் இதே நிலைதான்.பயோமாஸ் தொட்டி அமைக்க மானியம் தரும் அரசு அதற்கான மாடுகள் வாங்க எந்த மானியமும் அளிப்பதில்லை.அவ்வாறு தர முன் வந்தாலும் நிறைய உத்திரவாதங்களை வங்கி வேண்டுகிறது.எல்லாவற்றையும் கடந்து மாடு வாங்கினாலும் புல், வைக்கோல், மாட்டு தீவனம் போன்றவற்றின் விலை ,அப்பாடா தலையே சுற்றிவிடுகிறது.இப்படி அடுக்கடுக்கான தொல்லை வேண்டாம் என்று விவசாயி, அந்நிலத்தையே ரியல் எஸ்டேட் வியாபாரியிடம் விற்றுவிட்டு கிடைத்தவரை லாபம் என ஒதுங்கிவிடுகிறார்கள்.


காமாட்சிபுரத்தில் நடந்த வேளாண்மை கருத்தரங்கில் ஒரு விவசாயி கோபமாக, டிராக்டர் சாணி போடுமா? என வினவினார்.அப்போது உடனிருந்த அரசு அலுவலர்கள் அவரை கிண்டலாக பார்த்து சிரித்தனர். அவரின் உட்கருத்து வேறு.இயற்கை வேளாண்மையில் மிகவும் முக்கியமானதும், உயர்வாகவும் சாணமே உள்ளது. மண்ணை மிருதுவாக்கி இளம் பயிர்கள் எளிதில் வேர் விட உதவுகிறது. "ஈரமான நிலத்தில் கால் பட்டாலே புல் முளைக்காது".என்பது எங்கள் ஊரின் பெரியோர் வாக்கு .இந்நிலையில் 3 டன் எடையுள்ள டிராக்டர் ஓடும் போது நிலம் அதிக அதிர்வுக்கு உள்ளாகிறது.டிராக்டரால் 4அடி ஆழம் வரை மட்டுமே உழ முடிகிறது. இதனால் அடி மண் மிகவும் கடினமாகிறது.ஆனால் காளை உழவினால் 6 அடி வரை உழ முடிகிறது. அதிர்வும் இராது. மண்புழு மற்றும் நுண்ணியிர்களுக்கும் சேதம் இருக்காது.


பஞ்சாப் ,ஹரியானா போன்ற மாநிலங்கள் இந்தியாவின் சிறந்த கால்நடை இனங்களை கொண்டவை. காலம் காலமாக உழவு வேலைக்கு, காளைகளையும், உரமாக சாணத்தையும் உபயோகித்து வந்த அம்மக்கள் யாருடைய அறிவுரையால் மாறினார்களோ தெரியவில்லை, உழவுக்கு காளையை விட்டுவிட்டு ,டிராக்டரை நாடியுள்ளனர். சாணம் போய் ரசாயன உரம் இடம் பிடித்துள்ளது. நிலமேம்பாட்டு ஆணையத்தின் ஆராய்ச்சி அறிக்கையில் கடந்த 10 வருடங்களில் அம்மாநில மக்களின் நிலங்களில் வளர்ச்சி விகிதம் திடுக்கிடும் அளவு குறைந்துள்ளது. வயல் வெளிகளின் தன்மை முற்றிலுமாக மாறிப்போனது. வழக்கம் போலவே, அவ்விவசாயிகள் திவாலாகி அவர்களின் வாழ்வு தற்கொலையில் முடிந்தது. நில அதிர்வால் உண்டான இறுக்கமும், பெட்ரோல்,டீசல் போன்றவற்றின் பாதிப்பும் ,பிரதான காரணங்களாக பின்னர் அறியப்பட்டன.


டி.டி.கோசாம்பி தனது "பண்டைய இந்தியா" நூலில் பூர்வீக எச்சங்கள்(primitive survivals) என்ற தலைப்பில் உழும் கருவியாகிய ஏர் கலப்பையை,"இன்றும் வாழுகின்ற சாட்சியம்" என்று அழைக்கிறார். மரக்கலப்பை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் குஷானர் காலத்தில் வடிவமைக்கப்பட்டதை உறுதி செய்யும் ஒரு காந்தார சிற்ப படத்தையும் அளித்துள்ளார்.தோல்வி அடைந்த பசுமை புரட்சியினால் பலன் பெற்றவர்கள் தொழில் துறையினர் அன்றி விவசாயிகள் அல்லர். உரம், பூச்சி மருந்து தயாரிப்பாளர் துவங்கி, மிகப்பெரிய ஆலை தொழில் அதிபர்கள் வரை நஷ்டம் அடையாமல் பாதுகாக்க, அரசு மானிய திட்டத்தை கொணர்ந்தது.இது விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு விவசாயிகளுக்கு உதவவில்லை.


நாட்டின் மொத்த உற்பத்தியில் 35%விவசாயத்திலிருந்தே பெறப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கும் தொகை 14% மட்டும் பெறக்கூடியவர்களாக விவசாயிகள் உள்ளனர்.மன்மோகன் பிரதமர் ஆவதற்கு முன் ஒரு நேர்காணலில் "நான் பிரதமர் ஆனால் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் தருவதை ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் "என்றார்.இது மின்சாரத்தை பற்றிய ஒருபொருளாதார மேதையின் பார்வையாக மட்டும் எடுத்துக் கொள்ள கூடாது. ஒட்டுமொத்த விவசாயத்தின் மீதான தவறான பார்வையாகத்தான் கருத வேண்டும்.


"விவசாயம் இந்நாட்டின் முதுகெலும்பு" என தத்துவம் பேசும் அரசியல் வாதிகள், உண்மையான நோக்குடன் விவசாயத்தை அணுகி அதன் மூலாதாரங்களான, கால்நடை வளர்ப்பு, தீவன மேலாண்மை, இயற்கை உர தயாரிப்பு போன்றவற்றில் அக்கறையும், பங்களிப்பும் தர வேண்டும் .இப்போதெல்லாம் நான் பார்க்க யாரும் தங்களை "விவசாயி" என அறிமுகம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அதற்கு பதிலாக "ரியல் எஸ்டேட்" பிஸினஸ் என பெருமையாக கூறிக்கொள்வதை கேட்கும் போது வேதனையாக உள்ளது.

(நன்றி:எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா , உயிர்மை பதிப்பகம்).


வாசக நண்பர்களுக்கு எங்கள் இனிய தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Friday, January 8, 2010

தமிழை காக்கும் ஓதுவார்கள்


உலகில் நிலவும் பலவகைச் சமயங்களுள் மிகவும் தொன்மையான சமயம் சைவ சமயம். சைவ சமயத்துக்கு அடிப்படையான நூல் பன்னிரு திருமுறைகள்.

இப் பன்னிரு திருமுறைகளையும் அருளிச் செய்தவர்கள் 27 அருளாளர்கள். அவர்கள் 4,286 பாடல்களை அருளியுள்ளனர். தமிழகம் செய்த தவப்பயனால் கிடைத்தவை பன்னிரு திருமுறைகள். திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேந்தனார் உள்பட இருபத்தேழு அடியார்களால் அருளிச் செய்யப்பட்டவை.

"எனதுரை தனதுரையாக' என சம்பந்தர் கூறுவதால், திருமுறைகள் யாவும் இறைவன் வாக்காகும். கல்லா மாந்தரையும் வன்னெஞ்சரையும் கசிவிக்க வல்லவை.

"மெய்யன்போடு காதலாகிக் கசிந்து ஓதுபவர்கட்கு' இம்மைச் செல்வங்கள், மறுமைப் பயன்கள், வீடுபேறு ஆகிய நலன்களையும் செம்மையாக அளிக்க வல்லவை.

பல லட்சம் பாடல்களில் செல்லுக்கும், மண்ணுக்கும் உணவானவை போக 796 பதிகங்கள்தான் எஞ்சியிருக்கின்றன. சைவ சமய நூல்களில் பன்னிரு திருமுறைகள் "தோத்திரங்கள்' என்றும், பதிநான்கு மெய்கண்ட நூல்கள் "சாத்திரங்கள்' என்றும் வழங்கப்படுகின்றன.

தோத்திரங்கள் அன்பை அடிப்படையாகக் கொண்டவை. சாத்திரங்கள் அறிவை அடிப்படையாகக் கொண்டவை என வரலாறு கூறுகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், செம்மொழி அந்தஸ்து பெற்றுவிட்டது தமிழ். ஆனால், தமிழ்ப் பண்ணிசை பாடும் ஓதுவாமூர்த்திகளின் நிலை பரிதாபத்துக்குரியது.
பித்தா பிறைசூடி பெருமானே என தமிழ்ப் பாடல் பிறந்த ஊர்களில் ஓதுவாமூர்த்திகளின் எண்ணிக்கை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகக் குறைந்து வருகிறது.

நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஓதுவாமூர்த்திகள் உலகோர் யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழப் பாடுகிறார்கள். பண்ணாங்கம், சுத்தாங்கம், சரிதம், முகவுரை, தாளம் இவை அனைத்தும் முறையாகப் பயிற்சி அளிக்கப்பட்டு தமிழகம் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் தமிழ் இசையைப் பரப்பியவர்கள் ஓதுவாமூர்த்திகள்.

ஊர்தோறும் சென்று அங்குள்ள திருக்கோயில்களில் தேவார, திருமுறைகளைப் பாடி, சமயத் தொண்டு செய்து தமிழ் வேதத்தின் அற்புதங்களை உலகறியச் செய்தவர்கள்.

திருத்தலங்களைப் பாடல் பெற்ற தலங்கள் என்று கூறுகிறோம். ஆனால், அப் பாடலாகிய தமிழிசைக்கு உரிய பண்ணிசை பாட ஓதுவாமூர்த்திகள் இல்லை. அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி பண்பாட்டுத் துறையினரால் எவ்விதப் பலன்களும் கிடைக்கவில்லை.

திருவிழாக் காலங்களில் திருக்கோயில்களில் தமிழ்ப் பண்ணிசை பாட வாய்ப்பளிக்க வேண்டும். அறநிலையத்துறையில் உள்ள சில அதிகாரிகளின் தவறான செயல்பாடுகளால் திருமுறைகளின் அருமை, பெருமை அறியாமல் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஓதுவாமூர்த்திகளே கோயில்களை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் போன்ற அதிக வருவாய் உள்ள கோயில்களில்கூட ஓதுவாமூர்த்திகள் இல்லாத நிலை தொடர்கிறது.

சென்னை, கடலூர், சேலம், விழுப்புரம் உள்பட 16 இடங்களில் உள்ள அரசு இசைப் பள்ளிகளில் தேவார இசைப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, அரசு பல லட்சம் செலவு செய்கிறது. ஆனால், மாணவர்கள் தேவார இசைப் பயிற்சிக்கு வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

நிலைமை இப்படியிருக்க, ஒவ்வொரு கோயில்களுக்கும் தகுந்தவாறு தமிழ்ப் பண்ணிசை ஓதுவார்களுக்கு மிகக் குறைந்த ஊதியமே வழங்கப்படுகிறது. அவர்கள் ஓய்வுபெற்றால் மாதம் ரூ.750 ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. அதுவும், ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணியாற்றினால் மட்டுமே இந்த ஓய்வூதியம். அவர்களில், பலருக்கும் ஓய்வூதியம் கிடைப்பதில்லை.
அனைவரும் மண்ணில் நன்கு வாழ்வதற்காக தமிழ்ப் பண்ணிசை பாடியவர்களின் நிலை வேதனையாக உள்ளது. இதே நிலை நீடித்தால், தமிழகத்தில் ஓதுவாமூர்த்திகளே இல்லாத நிலை ஏற்படும். இது தமிழுக்கு நேரும் இழுக்கல்லவா? இந்நிலை வருவதற்கு முன் அரசு கண் விழிக்க வேண்டும்.

ஓதுவாமூர்த்திகள் இல்லாத திருக்கோயில்களில் ஓதுவார்களைக் கட்டாயமாக நியமனம் செய்ய வேண்டும். காலநிலை கருதி போதிய ஊதியம் வழங்க வேண்டும்.


தமிழ், தமிழ் என கூக்குரலிட்டால் போதாது. கோயில்களில் தமிழில் வழிபாடு நிகழ்த்த ஓதுவாமூர்த்திகள் வேண்டாமா? இதற்கு உரிய நடவடிக்கை இல்லாவிட்டால், பிறகு சம்ஸ்கிருதம் தானே கோலோச்சும். இதை நாம் உணர வேண்டாமா?
தமிழுக்காகத் தொடர்ந்து வாழ்க்கையை அர்ப்பணிக்கும் ஓதுவாமூர்த்திகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அவர்கள் ஓய்வுபெற்ற பின் ரூ.3 ஆயிரமாவது ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

ஒரே கோயிலில் 20 ஆண்டுகள் பணி செய்தால் மட்டுமே ஓய்வூதியம் என்ற நிபந்தனையைத் தளர்த்தி, பணிசெய்த ஓதுவார்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

திருவிழாக் காலங்களில் தமிழ்ப் பண்ணிசை வாணர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும். தேவாரப் பாடசாலையில் தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பயிற்சி பெற்றவுடன் கோயில்களில் பணி வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் உடனடியாகச் செய்யும்பட்சத்தில் தமிழைப் பரப்பும் ஓதுவாமூர்த்திகளின் எதிர்காலம் சிறக்கும், தமிழும் வளரும்.

(நன்றி : தினமணி)

கடைக்காரர் கமெண்ட்:
தமிழை காக்கும் ஓதுவார்களுக்கு நிரந்திர பணி வழங்க நம்ம அறநிலையதுறை உடனே நடவடிக்கை எடுக்கணும். இல்லையனா அடுத்த தலைமுறைக்கு தேவாரம், திருவாசகம் அப்படினா என்னன்னு தெரியாம போய்விடும்.

பதிவு : இன்பா

Thursday, January 7, 2010

சாருவின் வெற்றியும்,ஜெயமோகனின் தோல்வியும் - கவிஞர் மனுஷ்யபுத்திரன்


மனுஷ்யபுத்திரன் பக்தி இலக்கியத்தின் நீட்சி. நம்மாழ்வாரின் பேரன். குணங்குடி மஸ்தானின் மறுபிறவி. இறைவனை அடைதலே அவரது கவிதையின் ஆதார தேவை. அவர் ஊனத்திலிருந்து எழுந்த குறையுணர்வு தான் அவரை தன் ஆத்மீக குறையை உணர வைத்து ஆன்மீக கவிஞராக்குகிறது.
- எழுத்தாளர் ஜெயமோகன்

"நான் ஒரு தொழில்முறை கவிஞனே ஒழிய உணர்ச்சிகளின் கவிஞன் அல்ல."
- கவிஞர் மனுஷ்யபுத்திரன்.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்களின் பதில் கட்டுரை....

கடந்த வாரம் துவங்கிய சென்னை புத்தகக் கண்காட்சி வார இறுதி நாட்களில் வாசகர்களின் பெரும் உற்சாகத்தால் நிரம்பி வழிந்தது. உண்மையில் பெரும் மக்கள் திருவிழா என்றுதான் சொல்லவேண்டும். தேதி மாற்றம் பார்வையாளர்களின் வருகையை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. மக்களின் திரளான வருகையை உறுதி செய்யும் வண்ணம் விரிவான விளம்பர ஏற்பாடுகள் செய்திருந்த சென்னை புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்க புதிய நிர்வாகக் குழுவினர் பாராட்டிற்குரியவர்கள்.
பல புதிய நூல்கள் கண்காட்சியை முன்னிட்டு வெளிவந்துள்ளன. வாசகர்களின் தேர்வு கடினமாகியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பதிப்பகத்தின் நூல்கள் பல கடைகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு அதில் திரும்பத் திரும்ப வைக்கப்பட்டிருப்பது பெரும் எரிச்சலூட்டுவதாக வாசகர்கள் பலரும் தெரிவித்தனர். இவ்வாறு அந்தப் பதிப்பகம் போலிப் பெயர்களில் கடைகளை எடுத்து கண்காட்சியை ஆக்ரமிப்பது, கண்காட்சியின் உண்மையான நோக்கத்தை சீர்குலைப்பது குறித்து ஏற்கனவே பல முறை பப்பாஸியிடம் பதிப்பாளர்கள் புகார்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த சங்கக் கூட்டத்தில் இந்தப் பிரச்சினையை கடுமையாக எழுப்பப் போவதாகப் பதிப்பாளர்கள் சிலர் தெரிவித்தனர்.


உயிர்மை அரங்கம் வழக்கம்போல வாசகர்களின் பேராதரவைப் பெற்றுள்ளது. புதிய நூல்களை சிறந்த முறையில் கொண்டுவரும் ஒரு பதிப்பகம் அடையக் கூடிய அத்தனை நன்மதிப்பையும் அனுகூலங்களையும் உயிர்மை முழுமையாகப் பெற்றுள்ளது. வாசகர்களின் இந்த அன்புக்கும் ஆதரவிற்கும் உயிர்மை குடும்பத்தினர் தலைவணங்குகின்றனர்.


இந்தச் சந்தர்ப்பத்தில் மன வருத்தம் தரக்கூடிய சில சம்பவங்களும் நடந்தேறின. ஜெயமோகன் தனது இணையத் தளத்தில் வெளியிட்டுள்ள சில அறிவிப்புகள் கருத்துகள் தொடர்பாக சில நண்பர்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளனர்.


ஜெயமோகனுக்கும் எனக்குமான நட்பைக் குறித்தோ அல்லது அவரது நெருக்கடியான சந்தர்ப்பங்களில் நான் எவ்வாறு அவருடன் இருந்தேன் என்பது பற்றியோ அல்லது உயிர்மை அவரை எவ்வளவு கொண்டாடியது என்பது பற்றியோ நான் பேசாமல் இருக்கவே விரும்புகிறேன். காரணம் அவை எனது அந்தரங்கமான தேர்வுகள். உயிர்மை என்ற பெயர் உருவாவதற்கு பலவருடங்கள் முந்தைய தேர்வு அது. நண்பர்களுக்கு செய்ததைச் சொல்லிக் காட்டுவதை, உள்ளார்ந்த பிரியத்தை நினைவுபடுத்துவதைவிட இழிவு ஒன்றுமே இல்லை. அதே சமயம் உயிர்மைக்கு அவர் ஆற்றியுள்ளதாக கூறும் பங்களிப்பு அனைத்தையும் குறித்த அவரது பிரகடனத்தை நான் முழுமையாக ஏற்கிறேன். ஆம், அதில் சந்தேகமே இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் நான் அதை மறக்கவோ மறுக்கவோ போவதில்லை. அவை பத்து நாளைக்கு முன்வரையிலான சரித்திரம்.


சாருநிவேதிதா உயிர்மை நூல்வெளியீட்டுக் கூட்டத்தில் ஜெயமோகன் கருத்துகள் தொடர்பாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்திய விதத்தை நான் எந்த விதத்திலும் ஏற்கவில்லை. அது அவரது தேர்வு. அவரது வழிமுறை. அதற்கு அவர் மட்டுமே பொறுப்பாளி. இதற்குமுன்பும் உயிர்மை கூட்டங்களில் பலரும் பலருக்கு எதிரான கடுமையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.


ஜெயமோகனே ஒரு கூட்டத்தில் சாரு நிவேதிதாவை அவரும் பேசிய அரங்கில் ‘முட்டாள்’ என்று வர்ணித்தார். ஒரு சக எழுத்தாளனை நோக்கிச் செலுத்தப்படும் இந்த வசை நிகழ்த்தப்பட்ட அவையிலும் அந்த மேடையில் இருந்த நான் மெளனமாகவே இருந்தேன்.


ஜெயமோகனை கருணாநிதி திட்டினாலும் சரி, எம்.ஜி சுரேஷ் திட்டினாலும் சரி ஜெயமோகனுக்காக வாதாடிய நான் ஏன் இந்த அரங்கில் மெளனமாக இருந்தேன் என்பதற்கு காரணம் மிக எளிமையானது. கூட்ட்டத்தின் கவனம் இந்தப் பிரச்சினையில் குவிவதை நான் விரும்பவில்லை. கூட்டத்தை நடத்துகிறவன் என்ற முறையில் சாரு முன்வைத்த கருத்துகள் தொடர்பாக மொத்தக் கூட்டமும் திசை திரும்புவது எனக்கு ஏற்புடையது அல்ல. எஸ்.ராமகிருஷ்ணனின் கூட்டத்தில் ஞாநி என்னைக் குறித்துப் பேசிய பேச்சுக்கு நான் எதிர்வினையாற்றவேண்டுமென்று பல நண்பர்கள் மேடையில் இருக்கும்போதே குறுஞ்செய்திகளை அனுப்பியவண்ணம் இருந்தனர். அவர் அந்த மேடையில் எங்கள் விருந்தினர். அவரை நான் அவமதிக்க விரும்பவில்லை. அப்போதும் மௌனமாகத்தான் இருந்தேன்.
சாரு நடந்துகொண்டவிதம் தொடர்பாக ஜெயமோகனோ அவரது வாசகர்களோ புண்பட்டிருந்தால் அதற்காக கூட்டத்தின் அமைப்பாளன் என்ற பொறுப்பில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்பதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.


ஆனால் அமெரிக்கா சதாம் ஹுசைன் மேல் நடத்திய ஒரு விசாரணைக்கும் தண்டனைக்கும் நிகரான ஒன்றை ஜெயமோகன் என்மீது சுமத்த விரும்புகிறார். இது நானும் சாருவும் சேர்ந்து நடத்திய கூட்டுச் சதி என்று திரும்பத் திரும்ப எழுதுகிறார். ஒரு நெடுங்கால நண்பனின் மேல் இந்த அவதூறை சுமத்துவது தொடர்பாக அவருக்கு எந்த அவமான உணர்ச்சியும் இல்லை. இதற்கு ஆதாரமாக அவர் மூட்டமான எதை எதையோ தெரிவித்து வருகிறார். அவை அவரை வைத்து விளையாட விரும்புகிற அற்பங்களின் கற்பனைகள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. யாராவது தான் செய்யப்போகிற ஒரு சதியை ஊரெல்லாம் சொல்லிவிட்டு நிறைவேற்றுவார்களா என்பதைக்கூட ஜெயமோகன் யோசிக்கவில்லை. மேலும் அந்த சதியின் மூலம் நான் அடையக்கூடியதுதான் என்ன?


என் கவிதைகள் தொடர்பாக அவர் முன்வைத்த சில கருத்துகள் எனக்கு உடன்பாடில்லை என்பதை அவரிடமே தெரிவித்தேன். அந்தக் கருத்துகள் ஒரு விவாதப் புள்ளி என்ற அளவில் அதைப் பிரசுரிக்கவும் செய்தேன். எனது கவிதைகள் தொடர்பான யாருடைய எந்த அபிப்பிராயத்திற்கும் நான் இதுவரை பதில் சொன்னதில்லை. அப்படி பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. எனக்கு வக்கீல்கள் யாருடைய உதவியும் தேவை இல்லை.


என் கவிதைகள் தொடர்பாக நான் பதற்றமடையவேண்டிய இடத்தில் இல்லை என்பதை வேறு யாரையும்விட ஜெயமோகன் நன்கறிவார். எனக்குக் கால்கள் இல்லை என்பது எனக்குக் கைகள் இருக்கின்றன என்பதற்கு நிகரான ஒரு உண்மைதானே. நான் அதில் சஞ்சலம் அடைய ஒன்றுமே இல்லை. இதுபோல என்னிடம் இல்லாத, எனக்குத் தேவைப்படுகிற எவ்வளவோ விஷயங்கள் இந்தப் பிரபஞ்சத்தில் இருக்கின்றன. மேலும் என்னுடைய காதலிகள் மட்டுமே என்னுடைய உடலைப்பற்றி அக்கறை காட்டவேண்டியவர்கள். அவர்களுடைய கருத்துகள் மட்டுமே இந்த விவகாரத்தில் எனக்கு முக்கியமானவை.


மாறாக இந்த விவகாரத்தை தாழ்வுணர்ச்சி கொண்ட ஒருவனின் சதி என்ற ரீதியில் தொடர்ந்து சித்தரிக்க முயல்வது எனக்கு இழைக்கப்பட்ட பெரும் அவமானமாகக் கருதுகிறேன். என்னுடைய உடல்பற்றிய அத்தனை ரகசியங்களும் நான் சொல்லி நீங்களும் பிறரும் அறிந்ததுதானே? என்னுடைய நிர்வாணத்தை நான்தானே மனத்துணிவுடன் எல்லோருக்கும் முன்னதாக வைத்திருக்கிறேன்?

என்னைத் தாழ்வுணர்ச்சி கொண்டவன் என அவமதிக்க விரும்புகிறவர்கள் அதன்மூலம் என்னைப் புண்படுத்த விரும்பினால் நான் அவர்களுக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்ளவே விரும்புவேன்.

உயிரோசை இந்த இதழில் ஜெயமோகனுக்கு எதிர்வினையாற்றி அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது கூட்டுச் சதியின் இன்னொரு அங்கமாக இருக்கலாம். அல்லது உடல் ஊனம் கொண்ட தாழ்வுணர்ச்சிகொண்ட இன்னொரு நபரின் எதிர்வினையாகவும் இருக்கலாம். விஷயங்கள் எவ்வளவு எளிமையும் சிறுமையும் படுத்தப்பட்டுவிட்டன என்பதை நினைக்கும்போது பெரும் கசப்பே மிஞ்சுகிறது.

ஜெயமோகன்,

இந்த இரண்டாண்டுகளில் உயிர்மைக்கு எதிராக எத்தனையோ குறிப்புகளை நீங்கள் எழுதியிருக்கிறீகள் என்பது உங்களுக்குத் தெரியும். உயிர்மைக்கு எதிராக தமிழினி, வார்த்தை போன்ற பத்திரிகைகள் மேல் நீங்கள் காட்டிய உற்சாகம் உங்களுக்கு பெரும் அவப்பெயரையே தேடித் தந்தது. பதிலுக்கு உங்கள் மேல் நான் எவ்வளவு பிரியத்தையும் நட்பையும் வெளிப்படுத்தினேன் என்பதும் உங்களுக்குத் தெரியும். முறித்துக்கொள்ளவேண்டும் என்பது உங்கள் நீண்ட நாள் விருப்பம். நான்தான் உங்களை எனது அறியாமையின் காரணமாக தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தேனோ என்று சந்தேகமாக உள்ளது. என் வாழ்க்கையில் மிகப் பெரிய தீங்கை இழைத்தவர்களிடம்கூட உறவை முறித்துக்கொள்ளலாம் என்று நான் அறிவித்ததில்லை. அதில் வெளிப்படும் அகங்காரமும் மனிதவிரோதத் தன்மையும் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்ல அதைப் பற்றிக் கேள்விப்படுகிறவர்களைக்கூட ஆழமாகக் காயப்படுத்தக்கூடியது.

உங்கள் மூலம் எனக்கு நடக்கும் வியாபாரம்தான் நான் இதையெல்லாம் எழுதக் காரணம் என்று தயவுசெய்து புரிந்துகொள்ளாதீர்கள். உயிர்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் நானும் இருப்பேன். நீங்களும் இருப்பீர்கள். விஷ்ணுபுரம் கையெழுத்துப் பிரதியை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு அகரம் கதிரைப் பார்க்கப்போகும் வழியில் துவரங்குறிச்சியில் இறங்கி அதன் இன்னொரு பிரதியைப் படிப்பதற்கு என்னிடம்கொடுத்த நாள்தான் நினைவுக்கு வருகிறது. அந்த நாளின் நினைவுதான் என்னை உங்களுடைய பதிப்பாளனாகவும் மாற்றியது. நீங்கள் இப்போது வெளியிடும் வர்த்தக பிரகடனங்களைப் பார்க்கும்போது எதையும் புரிந்துகொள்ளாத நினைவில் வைத்துக்கொள்ள விரும்பாத ஒரு இடத்திற்குப் போய்விட்டீர்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நீங்கள் கற்பனை செய்யும் வர்த்தகன் நான் அல்ல. 50 விற்கக்கூடிய புத்தகங்களை வெளியிட்டால் 100 விற்காத புத்தகங்களை வெளியிடுபவன் நான். வணிக சினிமாவின் மையத்தை நோக்கி வெகு வேகமாக நீந்திக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் ஆளுமைக்கு தகுதியற்ற எத்தனையோ வேலைகளை அங்கே செய்துகொண்டிருக்கும் நீங்கள் உங்களுடைய நூல்களைப் பதிப்பிக்கும் ஒருவனை வணிகன் என்று அழைக்கிறீர்கள். வரலாறு நீங்கள் சித்தரிப்பது போல என்னையோ உங்களையோ ஒருபோதும் எழுதப்போவதில்லை.


உங்களுக்கு எதிராக இதுவரை என்னை எவ்வளவோ பேர் எத்தனையோ விதங்களில் தூண்டியிருக்கிறார்கள். நான் ஒருபோதும் அதற்கு செவிசாய்த்ததில்லை. அவை உங்களைப் பற்றிய எனது நிலைப்பாடுகளை எந்தவிதத்திலும் பாதித்ததுமில்லை. ஆனால் சாரு நினைத்தால் எனக்கு எதிராக உங்களைத் தூண்ட முடியும், எனக்கு எதிராக அதிக பட்ச நடவடிக்கைகளை எடுக்க வைக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். இது சாருவின் வெற்றியல்ல. உங்களது தோல்வி. உங்கள் தன்னிலையின் தோல்வி. உங்கள் அகங்காரத்தின் தோல்வி. இந்தத் தோல்வியை உங்களது வெற்றியாக உங்களை நம்பவைக்க முயல்பவர்கள் உங்களைப்பற்றி எதுவுமே அறியாதவர்கள்.

இந்தத் தோல்வி உங்கள் நண்பன் என்ற முறையில் என்னை ஆழமாக சங்கடப்படுத்துகிறது.

- கவிஞர் மனுஷ்யபுத்திரன்

Monday, January 4, 2010

'அசல்' இசை


தனது குருவான கே. பாலச்சந்தரை போலவே இசை ரசனையும், கவிதைகள் வாசனையும் உடையவர் சரண். வைரமுத்து அவர்கள் தான் எழுதிய கவிதைகள் சிலவற்றை ஒரு ஆல்பமாக உருவாக்க தெரிவு செய்த இயக்குநர் சரண்.

சரண் - பரத்வாஜ் - வைரமுத்து கூட்டணி இணைந்த படங்களில் மறக்கமுடியாத, மிகவும் ஹைலைட்டான ஒரு பாடல் தாமாகவே அமைந்துவிடும். 'உன்னை பார்த்த பின்புதான்' - காதல் மன்னன், 'சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்' - அமர்க்களம், 'என்னக்கென ஏற்க்கனவே ' - பார்த்தேன் ரசித்தேன், 'உனை நான் ' - ஜெஜெ இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு இடைவேளைக்கு பின் 'அசல்' படத்தின் மூலம் சேர்ந்து இருக்கும் இந்த அணியில் புதியதாக இசையில் இணைந்து இருப்பது ஸ்காட்லாண்ட் நாட்டை சேர்ந்த, ஐரொப்பாவில் மிகவும் புகழ் பெற்ற இசை குழுவான
Y-KINZ.

" நாங்கள் படத்தின் கதைக்கு ஏற்ப, ஒரு சிறந்த பாடலை முதலில் உருவாக்கி விடுவோம். அந்த பாடலை அளவு கோலாக வைத்து, படத்தின் மற்ற பாடல்களை உருவாக்குவோம்" என்று சரண் மற்றும் பரத்வாஜ் உடனான தனது அனுபவங்கள் பற்றி கூறினார் கவிஞர் வைரமுத்து.

அசல் பாடல்களை கேட்ட போது, எது அந்த அளவுகோல் பாடல் என்று கணிக்க முடியவில்லை.

படத்தில் 7 மொத்தம் பாடல்கள்.

1 . அசல்
பாடியவர் : சுனிதா மேனன்

"காற்றை அழைத்து கேளு...கடலை அழைத்து கேளு" என்று தொடங்கும் பாடல். அடடா தல போல் வருமா என்று சுனிதாவின் கிறங்க அடிக்கும் குரலில் 'தல' புகழ் பாடும் பாடல். டைட்டில் பாடல் என்று நினைக்கிறேன்.

பாடல் கம்பொஸிங்கில் drams பயன்படுத்தபட்ட விதம் அருமை .

2. குதிரைக்கு தெரியும்.
பாடியவர் : சுர்முகி , ஸ்ரீசரண்.

ஒரு பாப் பாணியில் உள்ள பாடல். "எனக்கு ஒரு ஜாக்கி நீ என்று " என வரும் பாடலின் வரிகள் சில இடங்களில் கொஞ்சம் ஓவர். ஹாட் டுயட் பாடல். peppy music and fresh tune.

3.அதிரி புதிரி பண்ணிக்கடா எதிரி உனக்கு இல்லையடா
பாடியவர் : முகேஷ்,ஜனனி

மற்றொரு super டுயட் பாடல். "கண்களால் தொட்டதும் கற்பு பதறுதே " என்ற வரியில் வைரமுத்து இன்னும் இளமையா இருக்கிறார்

அதிரடியான பின்னணி இசை.

4. எங்கே எங்கே மனிதன் எங்கே
பாடியவர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்.

ரொம்ப நாளைக்கு பின் ஒரு நல்ல தத்துவ பாடல். துரோகத்தால் பாதிக்க பட்ட ஒரு மனிதனின் மனோ நிலையில் எழுதப்பட்ட பாடல். "வலிகளால் வாழ்க்கையில் ஞானம் கண்டேன் " என்று படத்தின் கதையை உணர்த்தும் பாடல்.


5. எங்கே எங்கே மனிதன் எங்கே
கார்த்திகேயன் மற்றும் குழுவினர்.

இரண்டாவது முறையாக பாடல் இடம் பெறுகிறது.

6. ஏய் துஷ்யந்தா..
பாடியவர் : சுர்முகி,குமரன்.

எல்லாரையும் ரீச் ஆகும் டுயட் பாடல்.

7.எம் தந்தைதான்..
பாடியவர் : பரத்வாஜ்


"விண்மீன்கள் கடன் கேட்க்கும் அவர் கண்ணிலே " பரத்வாஜீன் சோகமாயமான குரலும், வைரமுத்துவின் பாடல் வரிகளும், அதற்கு ஏற்றது போல மென்மையான இசையும் கை கோர்த்து இருக்கின்றன.


மொத்தத்தில் அசல் இசை - அல்டிமேட் ஸ்டாருக்கு ஏற்ற ஒரு அல்டிமேட் இசை.


பதிவு : இன்பா

கருணைக் கொலைக்கு காத்திருக்கும் அருணா ஷன்பக்


அருணா ஷன்பக் சாக வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டுவரும் உணவு நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

அருணா ஷன்பக்க்கிற்கு வயது 61.

37 ஆண்டுகள் முன்னால் அவர் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவந்தார். சோஹன்லால் வால்மீகி என்ற ஒரு அறை உதவியாளனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் அப்போது மாதவிலக்கில் இருந்தார். பின்புறமாக அவன் உறவு கொண்டான். அவன் அவரை ஒரு நாய்ச் சங்கிலியால் கழுத்தில் கட்டினான். அந்தச் சங்கிலி அவருடைய கழுத்தை இறுக்கியது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டன. கண்பார்வை போனது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைப்பட்டது. அவர் மூளைச் சாவு அடைந்தார். அவரால் பேச முடியாமல் போனது. அவரை பலாத்காரம் செய்தவன் மீது கொலைமுயற்சி வழக்குதான் தொடரப்பட்டது.

ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அவன் டில்லியில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்துவருவதாகத் தெரிகிறது. கடந்த 37 ஆண்டுகளாக அருணா ஷன்பக் ஒரு சக்கையாக, காய்கறி போல் இருக்கிறார். அவருக்கு உணவு வலிய வழங்கப்படுகிறது. அது நிறுத்தப்பட்டால் அவர் இறந்துவிடுவார். அவர் எந்த மருத்துவமனையில் பணி செய்தாரோ அதே மருத்துவமனையில் ஒரு அறையில் அவர் அடைந்திருக்கிறார். அவரை அவருடைய குடும்பம் நிராகரித்துவிட்டது. முழுக்கக் கைவிட்டுவிட்டது. மருத்துவமனை ஊழியர்கள்தான் அவரைக் கவனித்து வருகிறார்கள். இன்னும் அவர் ஒரு காய்கறி போல் உயிர் வாழ வேண்டாம், அவருக்கு வழங்கப்பட்டு வரும் உணவை நிறுத்திவிட அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.


அவருடைய நிலை பற்றி அறிக்கை அளிக்கும்படி அரசுக்கும் மருத்துவமனைக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அருணா ஷன்பக் சாக அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்கும்.


அருணா ஷன்பக் சாக அனுமதிக்கப்பட்டால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இருக்கும். அவர் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று நீதிமன்றம் நினைக்கிறது என்பதை அது காட்டும். ஒரு உயிர் ஏன் வாழ வேண்டும் என்று இந்தச் சமூகம், அமைப்பு நினைக்கிறது என்பதையும் அது காட்டும். ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால் அது வாழ்வதற்குத் தகுதியாக இருக்க வேண்டும். வாழ்வதற்குத் தகுதியாக இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு சாதாரண உடல் இயக்கம், மன இயக்கம் என்று பல அம்சங்கள் இருக்கின்றன. உயிர்வாழ்வதாகச் சொல்லப்படும் மனிதன் சாக அனுமதிக்கப்படுவது கருணைக் கொலை என்று கூறப்படுகிறது. கருணையுடன் கொலை செய்வது என்று இது உணரப்படுகிறது. கொலையில் கருணை பார்த்துவிட்டது இந்த அமைப்பு என்று இதைக் கொள்ளலாம்.

அருணா ஷன்பக் இப்போது கருணையுடன் கொலை செய்யப்பட்டால் அவர் இறந்துவிடுவார். அவர் மரணத்திற்கு யார் காரணம் என்று இந்த அமைப்பு சுய விசாரணை செய்துகொள்ளுமா என்று சொல்ல முடியாது. அதற்கு உச்சநீதிமன்றம் காரணமாக இருக்குமா, அல்லது அரசு காரணமாக இருக்குமா, மொத்தச் சமூகம் காரணமாக இருக்குமா என்று சொல்லத் தயாராக இருக்க மாட்டார்கள். அவருடைய இன்றைய கொலைக்கு அன்று அவரைக் கொன்றவன் காரணமாக இருக்கலாம். ஆனால் அவன் மீது கொலைமுயற்சி வழக்கு மட்டும் சுமத்தி அவனை ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்து வாழ விட்டிருக்கிறது நீதி, அமைப்பு. ஆனால் அவனால் அனேகமாக கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணை இந்த அமைப்பு இப்போதுதான் கொல்கிறது. அவருடைய மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை அவன் நிறுத்தினான். இந்த அமைப்பு அவருடைய வயிற்றுக்குச் செல்லும் உணவை நிறுத்துகிறது. சுயபிரக்ஞையுடன் இந்த அமைப்பு கொலை செய்கிறது. அவன் போதையில் கொலை செய்தான். அவனுக்கு அப்போது இருந்தது காமப் போதை. எப்படியும் காமச் சுகத்தை அடைந்துவிட வேண்டும் என்று அருணா ஷன்பக்கை அவன் சங்கிலியால் கட்டினான். மகிழ்வு அடைந்தான். அவரை ஒரு சக்கையாக்கிவிட்டான்.

ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து இப்போது அவன் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்கிறான். அவனுக்குள்ளும் ஒரு உயிரைக் கொன்றுவிட்ட குற்றவுணர்வு இருக்கும். இருக்கலாம். குற்றவுணர்வு இல்லாத ஒரு சமூகம் உருவாகிவருகிறது என்பதற்கு அவனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு உடல் தேடலுக்காக தண்டனை பெற்றுவிட்டான் என்று அவனுக்கு அவன் சமாதானம் செய்துகொண்டிருக்க முடியும். ஆனால் அவன் பாலியல் வன்முறை செலுத்தியதற்காக தண்டனை பெறவில்லை. அப்படிப் பார்க்க அப்போது நீதி அமைப்புகள் தயாராக இருக்கவில்லை. அவன் பாலியல் குற்றம் மட்டும் செய்திருந்தான் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் குறைவான தண்டனையுடன் அவன் தப்பித்திருக்க முடியும். பாலியல் மீறல்களுக்கு நமது சமூகத்தில் எப்போதும் போதுமான தண்டனைகள் கிடைப்பதில்லை. பாலியல் என்பது மீறலுக்கானது என்ற கருத்தோட்டம் அமைப்பின் ஆழ்மனங்களில் மண்டிக் கிடக்கிறது.

சாதாரண மனிதன் என்பவனோ, குற்ற பாவனை கொண்டவன் என்பவனோ, யாராக இருந்தாலும் பாலியல் என்பது ஒரு ஒழுங்கின் வன்முறை என்று மனதில் படிய வைத்திருக்கிறான். அது மீறலுக்கானது என்று பயின்று வந்திருக்கிறான். பாலியல் மீறல்தான் மனித மனத்திற்குப் போதுமான மகிழ்வைத் தருகிறது. அதைச் செயல்படுத்தும் ஊக்கத்தில் எப்போதும் மனித மனம் தயாராக இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் பாலியல் ஒழுங்கும் ஒழுங்கு மீறலும் மறைவுக்குரியதாக இருக்கிறது. இதன் போக்கில் நடத்தப்படும் குற்றங்களும் மறைவுக்குரியவையாக இருக்கின்றன. பொருளுக்காக நடத்தப்படும் குற்றங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பாலியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் குற்றங்களுக்குத் தரப்படுவதில்லை. முக்கியத்துவம் தரப்படும் அளவுக்கு அதற்கு எதிரான நடவடிக்கைகள் இருப்பதில்லை. பாலியல் ஒழுங்கை சட்டத்தின் மூலம் வரைமுறைப்படுத்த முடியாது. அதற்கான மனித மனப் பக்குவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு எப்போதும் சட்டம் மட்டும் உதவியாக இருக்க முடியாது. பாலியல் மீறலின் போக்கில் ஒரு உடல் மீது வன்முறை செலுத்தப்பட்டால் அது ஏற்படுத்தும் பரபரப்பு அளவுக்குத் தீர்வுகள் கிடைப்பதில்லை.

அருணா ஷன்பக்கை அவருடைய குடும்பம் எப்போதோ நிராகரித்துவிட்டது. அவர் இறந்துவிட்டதாக அந்தக் குடும்பம் நினைத்திருக்க வேண்டும். அவர் உயிர்வாழ்வதும், இறந்துபோவதும் அவருடைய குடும்பத்திற்கு எந்த வேறுபாட்டையும் கொடுக்காமல் போகலாம். அவர் மூளைச் சாவு அடைந்து சக்கையாகிப் போனதால் அவர் இறக்கலாம் என்று நினைத்தார்களா, அல்லது பாலியல் ரீதியாக பலியானவர் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. இரண்டுக்கும் சமூகக் காரணங்கள் இருந்திருக்கலாம். எப்படியும் அவர் தேவையற்றவர் என்று அவர்கள் அப்போதே நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சமூக எந்திரம் இப்போதுதான் அதை நினைக்கிறது.

அருணா ஷன்பக் அறுபது வயதைத் தாண்டிவிட்டதால் அவர் இறக்கலாம் என்று இப்போது நினைக்கப்பட்டிருக்கலாம். அவர் நாற்பது அல்லது ஐம்பது வயது கொண்டவராக இருக்கும்போது அவரைச் சாக அனுமதித்திருக்க மாட்டார்கள். தேவையற்றவனைக் கொல்வது மனித இயல்பாகிப் போனது. அது குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஒருவன் மீது கருணை கொண்டு கொன்றால் அதற்கு அத்தனை நியாயங்களும் இருக்கும். இருக்க வேண்டும். இத்தனை சாத்தியங்களும், சாதகங்களும் இருக்கும்போது அருணா ஷன்பக் எதற்கு உயிர் வாழ வேண்டும்?


(நன்றி : திரு.நிஜந்தன்).

 
Follow @kadaitheru