Friday, July 30, 2010

'டாப் கியரில்' அஜித்


"வாழ்க்கை என்பது ஒரு பயணம் " - இது நடிகர் அஜித் அடிக்கடி சொல்லும் வார்த்தை. அவருக்கு மிக பொருத்தமாகவே இருக்கிறது.

அஜித் திரையுலகிற்கு வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன. தனது பொன்விழா படமான, தனது 50 வது படமான "மங்காத்தா" பட வேலைகளில் வெங்கட்பிரபுவுடன் இணைந்து இறங்கிவிட்டார். இதில் இன்னொரு கதாநாயகனாக நாகார்ஜுனா நடிக்க போகிறார்.

ஆனாலும். அவரது ரசிகர்களிடம் நிலவும் குழப்பம் அஜித் எதற்கு முக்கியத்துவம் தருகிறார் என்பதுதான். சினிமாவுக்கா அல்லது அவரது தனிப்பட்ட தாகமான கார் ரேசுக்கா?

அவருக்கு மிகவும் நெருக்கமான நம்பத்தகுந்த வட்டாரங்கள் இவ்வாறு தெரிவிக்கின்றன.

"இப்போது அவர் தெளிவாக இருக்கிறார். கார் ரேசில் இருந்து விலகி தொடர்ந்து படங்கள் தரப்போகிறார். மேலும், பல புதிய திறமையான இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரவிருக்கிறார் ".

தனது 50 வது படம் பற்றி பேசுகிறார் அஜித்.

"நான் இப்போது என்னுடைய 50 வது படம் செய்கிறேன். இதுவரை கடந்து வந்த பாதையை பார்த்தால், சினிமாவில் எனது பயணம் மிகவும் கடினமானது. நிலையில்லாத திரையுலகில் இவ்வளவு காலம் நிலைத்து இருப்பது சாதாரண விஷயம் இல்லை.அது ஒரு கயிற்றின் மீது நடப்பது போல " என்கிறார் அஜித்.

தனது வெற்றி மற்றும் தோல்விகளை சமமாக பார்க்கும் அஜித், தன்னம்பிக்கைக்கு பெயர் போனவர்.

சினிமா உலகிற்க்குள்ளும் அஜித்திற்கு தீவிர ரசிகர்கள் உள்ளனர். உதாரணம் சிம்பு. ஒரு கேள்விக்கு சிம்பு அளித்த பதில்.

கேள்வி : த்ரீ இடியட்ஸ் ரீமேக்கில் நடிகர் விஜய்யுடன் நடிக்கிர்களா?

சிம்பு தந்த பதில் : விஜய் சார் பெரிய நடிகர்தான். அவர் கூட நடிக்கிறது நல்ல விஷயம் தான். ஆனால், எனக்கு அஜித் சார் பேன்ஸ் அதிகம் இருக்கிறார்கள். அதையும் யோசிச்சு தான் முடிவு பண்ணனும். அஜித் ரசிகர்களை நான் சங்கட படுத்த விரும்பவில்லை"


வெங்கட்பிரபு இயக்கத்தில், இன்னொரு முன்னணி நடிகரான நாகர்ஜுனாவுடன் எந்தவித இகோ இல்லாமல் நடிக்கும் அஜித், அடுத்ததாக விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், பில்லா படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிக்கிறார்.

சர்வம் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் கமிட் ஆகாத விஷ்ணுவர்தன்,
பில்லா 2க்கான கதைக்களத்தை எழுதியிருக்கிறார். அஜித்தை மையமாக வைத்தே கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, கிரிடம் படத்தை இயக்கியவரும் , தற்போது வெற்றி நடை போடும் மதராச பட்டினம் படத்தின் இயக்குனர் விஜய்யுடன் ஒரு படம் செய்யபோகிறார். கௌதம் வாசுதேவ மேனனுடன் ஒரு படம் பண்ணவும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.

"நான் இங்கே நிலைப்பதற்காக இருக்கிறேன். என் எல்லைகளை தாண்டி சில தொலைவுகள் கூடுதலாக ஓடவும் நான் தயார்" என்கிறார் அஜித்.

சினிமா என்னும் காரை டாப் கியரில் ஓட்ட தொடங்கி இருக்கிறார் 'தல'.இனி அவரது பயணம் வெற்றிகரமாக இருக்கும் என எதிர்பார்ப்போம்.

-இன்பா

Wednesday, July 28, 2010

எழுத்தாளர் பிரபஞ்சன் கண்ட ஞானதீபம்


சமிபத்தில் திருவண்ணாமலை சென்று வந்த தனது அனுபவத்தை பகிர்கிறார் எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்.

போனவாரம் திருவண்ணாமலை போயிருந்தேன், ஞானத்தேடலா என்றால், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இல்லாதவனுக்குத்தானே தேடல். எனக்கு இருக்கிறது. அது காரணம் இல்லை. சும்மா பட்டணத்துப் பிடுங்கலிலிருந்து நாலைந்து நாட்கள் தப்பித்து ஓடலாம் என்பதுதான். அதிகாலையிலும், மாலை மயங்கி வரும் நேரத்திலும் மலைப்பாதை நடப்பதற்குச் சுகமாக இருக்கும். போடப்பட்ட பாதையை விட்டுவிலகி, குறுக்காகவும், தான் தோன்றித்தனமாகவும் நடக்க வேண்டும். அப்படி நடந்தவர்கள்தான் சேரிடம் அறிந்து சேர்ந்திருக்கிறார்கள். ஒழுங்காக நடந்தவர்கள் ஒழுங்கில்லாமல் செத்திருக்கிறார்கள். நாங்கள் நடந்த (நாங்கள் என்பது என்னையும்., என் நண்பர் விசித்திர சித்தனையும்) பாதையில் நிறைய காவி உடுத்தியவர்கள் தட்டுப்பட்டார்கள். அவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று அழைக்கப்பட்டார்கள். யாரிடமாவது பேசுவோமா என்றார் நண்பர். காவிக்கும், நமக்கும் சம்பந்தம் இல்லை என்று விட்டு நடந்தேன். அப்படியென்றால், நீங்கள் சண்முகம் ஐயாவைத்தான் சநதிக்க வேண்டும் என்றார் நண்பர். அவர் யார் என்றேன்.

'துறவி.'

'எதுக்காகத் துறந்தார்? யாருக்கு முன்னால் துறந்தார்?'

'அப்படிப்பட்டவர் இல்லை அவர். யாரையும் தன்னிடம் அண்ட விடாதவர். தன்னைப்பற்றி எந்த நல்ல அபிப்ராயமும் யாருக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவர்.’ அப்படியென்றால் அவரைச் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஒரு குகைக்குள் அவர் இருந்தார். வெள்ளைச் சட்டையும், வேட்டியும். மடக்கிய கால்களுக்கு முன் பில்டர் வில்ஸ் சிகரெட் இருந்தது. புகைத்துக் கொண்டு இருந்தார். நண்பரை அடையாளம் கண்டுகொண்டு புன்னகை செய்தார். என்னைப் பார்த்து ‘யார் இவர்’ என்றார். நான் சொல்லிக் கொடுத்தபடி 'சும்மா என்னைப் பார்க்க வந்தவர்' என்று மட்டும் சொன்னார்.

'உக்காருங்க' என்றார்.

'இவருக்கு உங்ககிட்ட சில கேள்விகள் கேட்க இருக்கு. நீங்கள் விரும்பினால் சொல்லலாம்.'

'கேட்கச் சொல். ஆனால் கடவுளைப் பற்றி மட்டும் கேட்கக் கூடாது. அது அயோக்கியர்களுக்கான பிரச்சினை. நமக்கு வேணாம்.'

இதைத் தொடர்ந்து நாங்கள் கேட்டதில் அவர் சொன்னதும், அவர் பாஷையிலேயே சொல்கிறேன். இதை வேதாந்தமாகவோ, விவாதமாகவோ நீங்கள் வியாக்யானம் செய்து கொள்ளலாம்.

அப்போது ஒரு இளம்பெண், சாமியார் வேஷத்தில் எங்களைக் கடந்து போனாள். என் மனசு அவள் பின்னால் போயிற்று.

'சரி. வந்துடு' என்றார் சண்முகம் என்னைப் பார்த்து.

'வந்துட்டேன்' என்று நான் அடங்கினேன்.

1) மழை இப்போதெல்லாம் பெய்யும் காலத்தில் பெய்யாமலும், பொய்த்தலும், காலம் அல்லாத காலத்தில் பெய்தலும் எதனால்? நல்லவர்கள் குறைந்து போனார்கள். அதனால், மழை குறைந்துவிட்டது என்பதெல்லாம் உண்மைதானா?

அழுக்கு மற்றும் சாக்கடைகளின் வெப்ப அனல் நெருப்பின் ஆவிப் பிசாசுகள், மேல் எழுந்து குளிராது. நெருப்புக்கோளமாய் விகசித்துப் பெய்கிறது கல்மழை. மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது. முன்னெல்லாம் சூரியன் கடலில் இருந்து நீரை முகந்தது. இப்போது கூவத்திலிருந்து. மழை மக்கள் உறங்கும் போது பெய்கிறது. மக்கள் அதை அறிய மாட்டார்கள். மழையை, அரசர்கள் மற்றும் சமஸ்தானாதிபதிகள் தங்கள் வங்கிக் கணக்கில் வைத்து லாக்கரில் பூட்டி இருக்கிறார்கள். உனக்கும் எனக்கும் மழை என்பது இனி இருக்காது. தவிரவும், என்ன மயித்துக்கு மழை? அரிசியை, உணவை இறக்குமதி செய்து கொள்ளலாம். கமபெனிகள் கமிஷன் பல்லாயிரம் கோடிகள் வரும். தண்ணீருக்குப் பதில், மலிவு மது விற்பனைக்கு வரும்.

2) வள்ளுவன் வான் சிறப்பு என்ன ஆவது? இளங்கோவை?

வான்சிறப்புக்குப் பதிலாக மன்னர் சிறப்பு இடம்பெறும். பெறட்டுமே. நீங்கள் உண்ணாவிரதம் இருப்பீர்களா என்ன?

3) கனகவிசயர்களின் முதுகு நிமிர்ந்ததா, இல்லையா?

இனமகளை விட்டு இறங்கி வழிந்தது / புனைவில் புகைத்தெழுந்த கனக விசயக் கதா மைதுனம் புலிக் கொடி ஏற்றிய மூதினத்தின் முதுகில் ஏறின/ சதுக்கப் பூதங்கள்.

4) சாம்ராஜ்யங்கள் எப்படிக் கட்டமைக்கப்படுகின்றன?

தற்கொலைப் பிணங்கள் மிதக்கும். சாக்கடை நதியில் பூதம், ஸ்தாபிதம் ஆகிறது. அந்தச் சாம்ராஜ்யம். அந்த மாபெரும் அரண்மனையை ஆட்டின் கால் ஒரு தூணாகவும், ஒடிந்த நாயின் கால் ஒரு தூணாகவும், கோழியின் காலும், காக்கையின் காலும், நான்கு தூண்களின் மேல் நிற்கின்றன. நின்றன சாம்ராஜ்யங்கள். வீட்டின் சுவர்கள் இடிந்து அரண்மனைச் சுவர்கள் உருவாகின்றன. ஏரிகளின் மேல் அரண்மனை வருகிறது. தராசுகளை உருக்கிக்கத்திகள் தயாரிக்கப்படுகின்றன.

பள்ளிக்கூட வகுப்பறைகளில் ரம்பை, ஊர்வசி, மேனகா, திலோத் தமை நடனங்கள் நடக்கின்றன. அரவம் தீர்ந்த இரவுகளில் உடைந்த குழம்புச் சட்டிகளில் முரசங்கள் தயாராகின்றன. சாயம் தீட்டப்பட்ட கோவணங்கள் கொடிகளாகின்றன. அரசமரமும், ஆலமரமும் மோதிக் கொள்கின்றன. எல்லாக் காலத்திலும் வழிந்தோடுகின்றன சகோதர ரத்தம். மனித ரத்தத்தில் தொட்டு எழுதப்படுகின்றன சமாதான உடன்படிக்கைகள். சமாதானத்தின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னும் யுத்த முஸ்தீபுகளே கள்ளச் சிரிப்புடன் ஒளிந்திருக்கின்றன.

5) போரைப் புலவர்கள் ஆதரிக்கிறார்களே?

போரை ஆதரிப்பவர்கள் புலவர்கள் ஆகார். அறிஞர் என்போர் அரசுக்கு வாழ்த்துப்பாட தம் வார்த்தைகளை எடுக்க மாட்டார்கள். அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுகிறவரே அறிஞர்கள், எழுத்தாளர்கள். நெஞ்சில் உரமும், நேர்மைத்திறமும் கொண்டவர்கள், கருவறையிலேயே விஷம் வைத்துக் கொல்லப்படுகிறார்கள். மீறிப் பிறந்தால் கல்லில் அடித்துச் சாகடிக்கப்படுகிறார்கள். அதையும் மீறி நிமிர்ந்து நின்றால், புறக்கணிப்பின் நஞ்சை அருந்தி தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். உண்மைப் படைப்பாளிகள் பட்டினியால் சாவதில்லை. அவமானப்படுத்தலால் சாகிறார்கள். நீ, உண்மையை எழுதப் பேனாவை எடுக்கும்போதே உன் தோள்களில் சிலுவைகள் சுமத்தப்படுகின்றன. உன் ஒவ்வொரு எழுத்தும், உனக்கு நீயே வெட்டிக் கொள்ளும் சவக்குழி. எல்லாக் காலத்திலும் அரசர்களுக்குச் சார்ந்து தங்கள் மூளையைக் கபடமைத்துக் கொண்டவர்களே சௌகர்யமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

6) அறம் என்ற ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்களே?

நானும் கூடக் கேள்விப்பட்டிருக்கிறேன் அப்படி ஒன்று இருந்ததாக. இப்போது அது, அரசுக் கட்டிலின் பக்கத்தில் நின்று சாமரம் வீசிக் கொண்டிருப்பதாக அரண்மனைச் சேவகர்கள் சொல்கிறார்கள்.

இந்த யுகத்தில் அறம், நக்கிப் பிழைத்தல், வாக்கு சுத்தம் அல்ல, நாக்கு நீளம் முக்கியம். அதிகாரத்தின் காலையும் மற்றும் அதிகாரம் விரும்பும் இடங்களை நக்குபவர்களே இந்தச் சமூகத்துக்கு நாயகர்கள். அதிகாரத்தில் உள்ளவர்கள், அவர்களைச் சார்ந்தவர்கள், அவர்களின் சுற்றம் மற்றும் உறவுக்காரர்கள், உறவுக்காரர்களின் அடிமைகள் இவர்களே நக்கப்படுவதற்கு ஏற்ற நபர்கள். நக்கிப் பிழைத்தலுக்குத் தமிழில் மிக நீண்ட மரபு உண்டு. பாரியைக் கபிலர் புகழ்வதைப் படித் திருக்கிறாயா? 'பாரி பாரி' என்று சொல்லிக் கொண்டு புலவர்கள் எல்லோரும், பாரியைச் சூழ்ந்து கொள்கிறீர்களே, பாரி மட்டுமா கொடுப்பவர். மாரி, மாரி (மாரி என்பது பிஸ்கட் அல்ல, மழை என்பது பொருள்) என்ற ஒன்றும் இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியாதா' என்பதே கபிலனின் பாட்டு.

நக்கல் மரபை அங்கிருந்தே இனம் காணலாம். காலம்தோறும் அறிஞர்கள் அந்தக் கலையை மிக ஆழமாகக் கற்றுத் தங்களை வளப்பமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கடவுளாகவே உயர்த்திச் சௌகர்யம் அடைந்திருக்கிறார்கள். ‘திருவுடை மன்னரைக் காணில், திருமாலைக் கண்டேன் எனும்' என்று பூரிக்கிறார் ஒரு புலவர். புதுச்சேரி ஆனந்தரங்கப் பிள்ளையைக் காணவந்தார் ஒரு புலவர். 'கொஞ்சம் இரும்' என்றார் பிள்ளை. புலவருக்கு அவசரம். பறந்தார். ‘சீக்கிரம் கொடுப்பதைக் கொடும்’ என்றார். பிள்ளை 'ஏன் பறக்கிறீர்' என்று சினந்தார். புலவர் ஒரு பாட்டுபாடுகிறார். 'கொக்கு பறக்கும் குருவி பறக்கும், நக்கிப் பொறுக்கிகளும் பறப்பர்,... நீ என் அருகிருக்க, ஒரு நாளும் பறவேன், பறவேனே' என்பது போலப் பாடி இருக்கிறார். ஆக, ஆனந்த ரங்கப்பிள்ளை காலத்திலும் நக்கிப் பொறுக்கிகள் இருக்கிறார்கள் என்பது பெறப்படுகிறது.

ஆக. அறிவு மரபில், இந்தத் தொழும் மரபு மிக நீண்ட காலமாகவே தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் சமணர்கள், துறவிகளின், பெரிய ஞானிகளின் கால்களை வணங்கி ஒரு மரபைத் தொடங்கி வைத்தார்கள். பாதங்களை மட்டும் கவ்விப்பிடித்து வணங்கி இருக்கிறார்கள். பிறகு, இந்தத் தொழும் மரபு தொடங்கியது. கண்ணகி தன் கணவனை அடிகள் என்றுகூட அழைத்திருக்கிறாள். சைவர்கள் அடியார்களை உருவாக்கினார்கள். தொண்டர்கள் தொழுவதற்கு என்றே பிறப்பெடுத்து வந்தார்கள். அவர்கள் தலைவர்களின் முகத்தை அறியார்கள். கால்களை மட்டுமே அறிவார்கள். ஆங்கிலேயர் காலத்தில் 'பூட்ஸ் நக்குபவர்கள்'என்ற சொல்லாக்கத்தையே உருவாக்கினார்கள். ஆக, இந்த அரும் மரபு மிக நீண்ட ஆயுளை உடையது.

7) இந்த நக்கல் மரபை மீறிய அறிவுத் தடம் தமிழில் இல்லையா?

உண்டு. நிறையவே உண்டு. ‘மன்னவனும் நீயோ, உலகத்தை எல்லாம் நீதான் ஆள்கிறாயோ, உன்னைக் கண்டா, எதிர்பார்த்தா தமிழை ஓதினேன். என்னை மரியாதையோடு நடத்த மன்னர்கள் ஏராளம் உண்டு. தெரியுமா?’ என்று கேட்ட அறிஞர்கள் இருக்கிறார்கள். 'மன்னா.. உனக்கு உன்நாட்டில்தான் மரியாதை. எனக்கு உலகம் முழுக்க மரியாதை தெரியுமா' என்று மன்னன் முகத்துக்கு நேராகக் கேட்டவர்கள் இருக்கவே செய்கிறார்கள். உலக அளவில் அமெரிக்காவை எதிர்க்கிற அறிவாளிகளே மிக அதிகம். உண்மையான அறிஞர்கள் என்போர் ஆதிக்கத்துக்கு எதிராகவே தம்மை நிறுவிக் கொள்கிறார்கள். இந்த நக்கலை மறுத்து வாழும் உண்மை அறிஞர்கள் தமிழ் பூமியிலும் இருக்கவே செய்கிறார்கள். தமிழ் மரபு, அவர்களில் பலரை உருத்தெரியாமல் அழித்து இருக்கிறது. இன்னும் அந்த அழிப்பு வேலை நீடிக்கவே செய்கிறது. என்றாலும், அந்தப் பெருமைக்குரிய சிறுபான்மை அறிவு மரபினர் தங்களை விற்றுக் கொள்ளாமல் நிமிர்ந்து நிற்கிறார்கள். தமிழ் என்கிற மொழியும் அது உருவாக்கி இருக்கும் கலாச்சாரமும், உருவாக்க இருக்கும் பண்பாடும் இந்தச் சிலராலேயே வாழ்கிறது. அந்தப் பெரும்பான்மை தயாராக இல்லை.

8) அறிவாளிகள் என்போர் எங்ஙனம் சீரழிவுக்கு உள்ளாகிறார்கள்?

அவரவரும் அவரவர் வழியில் கெட்டுப் போகிறார்கள். கெடுவதற்கு மிகப் பெரிய அசைவுகள் தேவைப்படுவதில்லை. தமிழ்ச்சூழலில் உண்பது, உடுப்பது, சம்சாரம் பேணுவது போன்ற அடிப்படைத் தேவைகள் பூர்த்தியானவர்கள் பலரே, அறிவுத்துறைக்குள் பிரவேசிக்கிறார்கள். ஆசிரியர்கள், அரசு அலுவலர், வங்கி அலுவலர் என்று பலரும் இங்கு இலக்கிய, கலாச்சாரத் துறைக்குள் இருக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்த நாள் காலை உணவு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏதோ ஒரு இனம் தெரியாத அச்சத்தில் இவர்கள் உழல்கிறார்கள். தங்களுக்களிக்கப்பட்ட ரொட்டி தங்களிடம் இருந்து பிடுங்கப்பட்டு விடுமோ என்ற கவலையிலேயே அவர்கள் வாழ்கிறார்கள். தங்கள் துறைத்தலைவர்கள்/அதிகாரிகள் மூலம் தங்களுக்குத் துன்பம் வரலாம் என்று அஞ்சுகிறார்கள். இந்தவகை மனோபாவம் கொண்டவர்களுக்கு, ஏற்கனவே உருவாக்கப்பட்ட சிந்தனைகளை, மரபை, இலக்கணத்தை மீற முடியாது. மரபை மீறாது, முன்னோர்கள் வெட்டிய உப்புக்கிணற்றில் தண்ணீர் குடிப்பார்கள். இவர்கள் அதிகாரத்தை ஒருபோதும் நிமிர்ந்தே பார்க்கமாட்டார்கள். வாழ்க்கைப் பாதுகாப்பு என்பதே முதலும் கடைசியுமான லட்சியமாக இருப்பதால் அவர்களிடம் இருந்து அந்தப் பாதுகாப்பை அசைக்கிற எந்தச் சிறுமுனகலும் வராது.

இந்த அறிவாளிகள், அதிகாரத்தை அணுகி, அவர்கள் பாதுகைகளைக் கழற்றி, கால் உறைகளையும் நீக்கித் தங்கள் பணியைத் தொடங்குகிறார்கள். அதிகாரத்துக்குள், தம்மை நிறுவிக்கொள்ளும் பொருட்டு அறிஞர்கள் சகவாசம் தேவைப்படுகிறது. இந்த அதிகாரம்+அறிவுத்துறை கூட்டு பரஸ்பரம் இருவருக்கும் இலாபமாக அமைகிறது. அறிவு வர்க்கம்- இந்த அ-அறிவு வர்க்கம் அதிகாரத்துக்கு முகஸ்துதியும் பாதபூஜையும் செய்து, அதிகாரத்தின் அங்கமாகத் தம்மை வடிவமைத்துக் கொள்கிறது. இவர்கள் பொதுவாகவே நாலாம் தரத்தினராகவே இருப்பார்கள். இப்படி இருப்பதே அதிகாரத்துக்கும் வசதி. அதிகாரம், இந்த அடிமுடி வருடிகளுக்குப் பட்டம், பதவி, பணம், விருது என்று பல சலுகைகள் தருகிறது. அ.அறிவாளிகள் அதிகாரத்துக்குத் தங்கள் போற்றிப் பரவலால் அதற்கு ஈடு செய்கிறது.

9) மக்கள், மக்கள் அரசியல் என்றெல்லாம் அடிக்கடி பேசப்படுகிறதே. மக்கள் என்றால் என்ன. அவர்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறார்கள்?

மக்கள் பாவம். அவர்களை "மக்கள் அரசியல்வாதிகளே"கைவிட்டு மட்டும் அல்லாமல் காட்டிக் கொடுத்தும் விட்டார்கள். மக்களுக்கு அயோக்கியத்தனம், ஊழல், என்பவைமேல் எல்லாம் அலுப்பு வந்துவிட்டது. இவைகளைத் தம் வாழ்வின் ஒரு தவிர்க்க முடியாத பகுதியாக அவர்கள் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள். ஒரு மனிதன் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்ததை அவர்களிடம் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்கு அது ஒரு பிரச்சினை இல்லை. எவன் திருடலை, எவன் ஊழல் செய்யலை என்றே அவர்கள் கேட்பார்கள். இதுக்கு என்ன காரணம். இந்த தேசத்து அறிவுஜீவிகள் என்போல அயோக்கியர்களாகி விட்டார்கள் என்பதே காரணம். பிரக்ஞை என்கிற சூட்டை மக்களுக்குள் என்றும் ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டியவர்கள் அறிவாளர்கள். அவர்களே அதிகாரத்து மனிதர்களை விடவும் இழிந்து போனார்கள். நம் தலை முறையின் மிகப்பெரிய பிரச்சினையே இதுதான். மக்கள், தங்கள் அன்றாட ஜீவியத்துக்குப் படும் அல்லல், எத்தனை பேருக்குத் தெரியும்?

இன்னொரு வீழ்ச்சியும் இங்கு நடந்திருக்கிறது. ஊழலை ஒரு சாதாரண சமாச்சாரம் என்கிற மன நிலைக்கு மக்களைக் கொண்டுவிட்டதில் வெற்றி பெற்ற அதிகாரவர்க்கம், மக்களையும் அவர்களின் சக்திகளுக்கு ஏற்ற விதத்தில் அளவில் முடிந்தால் சுரண்டிக் கொள்ளலாம் என்ற மனநிலையையும் கட்டமைத்துக் கொடுத்துவிட்டது. மக்கள் எல்லோரும் இன்னும் கறை படிந்தவர்களாக மாறவில்லை. என்றாலும், அப்படி அவர்களை ஆக்கும் சதி வலை பின்னப்பட்டுவிட்டது. மக்களுக்கு, அவர்களின் உழைக்கும் தகுதிக்கு ஏற்ப உழைப்புச் சூழலை உருவாக்கிக் கொடுத்து, கண்ணியம் மிக்க மனிதர்களாக ஆக்க வேண்டிய அரசுகள், அவர்களுக்கு இலவசங்களைக் கொடுத்து அவர்களை இழிவுபடுத்திக் கொண்டு இருக்கிறது. இது மக்களின் ஆளுமையைச் சிதைக்கும். இதுகுறித்து எந்த மக்கள் அரசியல்வாதிகளும் கவலைப்படவில்லை. மக்கள் மத்தியில் அரசியல் தத்துவம், கட்சி அரசியலாகச் சீரழிந்து கிடக்கிறது. கட்சி நடத்துகிறவர்களின் தகுதியே அதுவாகத்தான் இருக்கிறது. மக்கள் கலாச்சாரத்தைச் சீரழிக்கும் சினிமா, தொலைக் காட்சி, பத்திரிகை என்ற அனைத்து ஊடகங்களும் அதிகாரத்தின் கைவசமே இன்று இருக்கிறது. அரசியல், பண்பாடு என்று அனைத்து வகையாலும் மக்கள் இன்று இழிவுக்கு ஆளாகி நிற்கிறார்கள்.

10) இன்றைய மனிதனுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை?

தனித்திருக்க விரும்பாதே. கூட்டத்தில் உன்னைக் கரைத்துக் கொள். நாக்கை வலிமைப்படுத்து. அதிகாரத்தின் அருட்பார்வையில் இடம் பெற்று, அறிஞர் குழாத்தில் இடம் பெறு. சொத்துகளைப் பெருக்கிக்கொள். சுவிஸ் வங்கியில் பணம்போடு. சினிமா எடு அல்லது சினிமாவில் பங்கெடு. உனக்குப் பின்னால் சுற்றும் ஒளிவட்டத்தின் பிரகாசத்தை அதிகப்படுத்து. அதிகாரத்துக்கு ஊறுகாய் பிடிக்காது என்றால், உன் பரம்பரை மற்றும் உன் மனைவிக்கும் ஊறுகாய் பிடிக்காது என்பதை ஊர்ஜிதப்படுத்து. துரோகம் செய். பழிவாங்கு. எல்லா சட்ட மீறல்களையும் சட்டபூர்வமாகச் செய். காட்டிக் கொடுத்தலை ஒரு கலையாகச் செய்.

மேன்மைமிகு சண்முகத்திடமிருந்து நாங்கள் விடைபெறும்போது இருண்டிருந்தது. இருட்டு. செல்லும் வழி இருட்டு. சிந்தையிலும் தனி இருட்டு. என்றாலும் அந்த மகான் அளித்திருந்த ஞானதீபத்தால் எந்தப் பிரச்சினையுமின்றி நாங்கள் வழி நடந்தோம்.

அனுபவம் : எழுத்தாளர் திரு.பிரபஞ்சன்
(நன்றி : உயிர்மை)

Monday, July 19, 2010

"அரவான்" உருவான கதை - எழுத்தாளர் சு.வெங்கடேசன்

வெயில் மற்றும் அங்காடிதெரு போன்ற படங்களின் மூலம் கனமான கதைகளை தருபவர் என்று தென்னிந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து இருக்கிறார் வசந்த பாலன்.

புதிய கதைகளம்களை அறிமுகபடுத்துவதும் மற்றும் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு எழுத்தாளர்களுடன் இணைந்து ஸ்க்ரிப்ட்டில் பணியாற்றுவதும் வசந்தபாலனின் தனிசிறப்புகளாக இருக்கின்றன.(எஸ்.ராமகிருஷ்ணன் - வெயில் வசனம், ஜெயமோகன் - அங்காடிதெரு வசனம்).

"அரவான்" - இது வசந்த பாலனின் அடுத்த படம். மதராசபட்டினம் வெற்றியை தொடர்ந்து நாம் பல சரித்திரபாணி படங்களை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. அரவானும் அப்படி ஒரு சரித்திர பின்னணியில் உருவாக்கபடும் படம்தான்.

இந்த படத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதி, இலக்கியத்தில் இருந்து சினிமாவுக்கு அடிஎடுத்து வைத்து இருக்கிறார் சு.வெங்கடேசன்.

சு.வெங்கடேசன் இது வரை எழுதி இருப்பது ஒரே ஒரு நாவல் மட்டுமே. அதன் பெயர் "காவல் கோட்டம்".

அந்த நாவலே அரவான் என்று திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த நாவல் எழுதுவதற்காக சு.வெங்கடேசன் சுமார் ஒன்பது வருடங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறார்.

"இந்த நாவலை வைத்து படம் எடுக்க திரு.வசந்தபாலன் கேட்டபோது மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். ஆறு மாதங்கள் விவாதத்துக்கு பின்னர் நாவலின் திரைவடிவத்தை நானும்,வசந்தபாலனும் உருவாக்கினோம்" என்கிறார் சு.வெங்கடேசன்.

"அரவானில் முற்றிலும் ஒரு புதிய உலகத்தை உருவாக்கும் சவால் இருந்தது. ஆனால், இலக்கிய பரிச்சயமும், ஏற்க்கனெவே ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்ற எழுத்தாளர்களுடன் பணிபுரிந்த இயக்குனர்வசந்தபாலனுடன்பணிபுரிவதில் எந்தவொரு முரண்பாடும் வரவில்லை " என்றும் கூறுகிறார் சு.வெங்கடேசன்.

இந்த நாவலை எழுதும்போதே, காட்சிவடிவங்களை முன்னிருத்தியே எழுதியதாகவும், அதனால், அதை சினிமாவுக்கான கதையாக உருவாக்கும் போது, தனக்கு சிரமங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

மகாபாரதத்தில்,குருஷேத்திர யுத்தத்தின் போது, பாண்டவர்களுக்காக காளி கோவிலுக்கு நரபலி இடப்பட்டவரின்தான், அர்ஜுனனின் மகனான அரவான்.ஆணும் பெண்ணும் அல்லாத இன்று நாம் திருநங்கை என்று அழைக்கும் ஒரு அரவானை பற்றிய கதை இது என்கிறார் வசந்த பாலன்.

அரவான் படத்தின் கதை :

சுமார் 600 வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த சில வரலாற்று நிகழ்வுகளை பற்றி பேசுகிறது அரவான். மொகலாய அரசன் ஒவுரங்கசீப்பின் படைத்தளபதி மாலிக்காபூர் மதுரையை கைப்பற்றியதும், மதுரை முழுவதும் ஒரு பொதுவான பாதுகாப்பு முறையை உருவாக்க முடிவு செய்தான். மாலிக்காபுரும் ஒரு அரவாணி அல்லது திருநங்கை என்பதால், தன்னை போல உள்ள அரவான்களை கொண்டு ஒரு தனிப்படையை உருவாக்கி, அவர்களையே மதுரையின் பாதுகாப்பு அரண்களாக உருவாக்கினான்.
அதன் பின் மதுரை பிரிட்டிஷார் வசம் ஆனதும், மதுரையை விரிவாக்க விரும்பிய அவர்கள். அரவான்களை கூடலூர் - கம்பம் பகுதியில் தனியே குடியமர்த்திய ஆங்கிலேயேர்கள், பின்னர் அந்த மக்களை குற்ற பிரிவினராக அறிவித்தனர்.

1000 பக்கங்களை கொண்ட 'காவல் கோட்டம்' நாவல் இந்த அரவான்களின் வரலாற்றை பற்றி பேசுகிறது. நாவல் வெளியான ஒரு வருடத்தில், வசந்தபாலனால் கவனம் பெற்று படமாக உருவாகபோகிறது.
ஆதி,பசுபதி மற்றும் பேராண்மை நாயகி தனிஷிக்கா போன்ற திறமையான நடிகர்களுடன், பிரபல பின்னணி பாடகர் கார்த்தி முதல்முறையாக இசை அமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


அரவான் - தமிழ் சினிமாவின் மீது நமக்கு ஒரு புதிய நம்பிக்கையை தரும் படமாக இருக்கும் என நம்பலாம்.

(நன்றி : தி இந்து).

-இன்பா

Wednesday, July 14, 2010

சொல்லக்கூசுதடா நண்பா!


காவேரி
முல்லை பெரியாறு
நெய்வேலி மின்சாரத்துக்கு
மாற்றாய்...
தமிழகதிற்கு கிடைப்பது
'அல்வா'.

மணல் அள்ளி
மணல் அள்ளி
நூலாராய் போன
பாலாற்றுக்கும்
வந்ததடா சோதனை
ஆந்திர அணை.

தேர்தல் நேரத்தில் மட்டுமேவரும்
வேட்ப்பாளர்களை விட
அடிக்கடி வரும்
நக்சலைட்டுகளை
நம்ப தொடங்கிவிட்டனர்
தருமபுரிக்காரர்கள்.

வெடித்திரிகளே விரல்களென
வாழும்
சிவகாசி மக்கள்.

காசு கொடுத்தாலும்
கிடைக்காத குடிநீருக்காய்..
கிலோ மீட்டர்களை
சைக்கிளில் கடக்கும்
விருதுநகர்வாசிகள்

பசியடக்க
இடுப்பு துணிக்கு கூட
ஈரம் இல்லாமல்
வறண்டுபோன
தென்கோடி தமிழர்கள்.

சொல்லக்கூசுதடா
நண்பா!

சோறுடைத்த சோழநாட்டில்
இன்று
வேற்று மண்ணில் இருந்து
அரிசி இறக்குமதி.

ஈழத்தமிழனின்
குருதிச்சுவை கண்ட
சிங்கள நாய்களுக்கு
இந்தியத்தமிழனின் ரத்தமும் வேண்டுமாம்.

செத்தமீனுக்கு
கிடைக்கும் மரியாதை கூட
கிடைக்க பெறாமல்
சிங்கள துப்பாக்கிகளுக்கு
இரையாகும்
எங்கள்
மீனவ செல்லப்பன்கள்.

இலங்கை கூடாரத்தில்
கொத்தடிமைகளாய்...
கேட்பாரற்று வாழும்(?)
ஒரு தமிழ் கூட்டம்.

காசுக்கு நடிக்கும் நடிகர்களை
'நாளைய முதல்வர்களாய்'..
நினைத்து கொண்டாடும்
இங்கொரு வெட்டிக்கூட்டம்.

டாஸ்மாக்கில் குடித்து
ஒரு ரூபாயில்
புழுத்த அரிசி தின்று
இலவச டிவிக்குள்
தொலைந்து போன இனம்
தமிழ் இனம்.

சொல்வதற்கே வெட்ககேடு.
இங்கே
நானூறு கோடியில்
மொழிக்கு ஒரு மாநாடு.
சுயநல அரசியல்வாதிகள்
காலம்காலமாய்
தமிழனின் சாபக்கேடு.

-இன்பா

Monday, July 12, 2010

கேள்விகளால் ஒரு வேள்வி


பிரபலங்களிடம் நான் கேட்க விரும்பும் கேள்விகள்.....கேள்விகளால் ஒரு வேள்வியாக அவ்வப்போது தருகிறேன்.

1.முதல்வர் கருணாநிதியிடம் :

உங்கள் மகன்,பேரன்,பேத்திகளுக்கு பதவிகள் வாங்கித்தர நேரடியாக டெல்லி செல்லும் நீங்கள், தமிழக மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்கு மட்டும் டெல்லிக்கு கடிதம் எழுதுவதும், முரசொலியில் மடக்கி மடக்கி கவிதை எழுதுவதும் ஏன்??

(மீனவர் செல்லப்பன் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு அந்த கடிதம் கூட இல்லையே?)

2. செல்வி ஜெயலலிதாவிடம்:

சென்னையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தை கொட நாட்டுக்கு மாற்றும் திட்டம் உண்டா?

3.டாக்டர் ராமதாசிடம்:

"வன்னியர் ஒட்டு அன்னியருக்கு இல்லை" என்று முழங்கும் நீங்கள், வன்னியர் அல்லாத கருணாநிதி அல்லது ஜெயாவை முதல்வராக்க கூட்டணிக்கு கெஞ்சுவது ஏன்?

4.தொல்.திருமாவிடம்

"தென்னகத்து பிரபாகரன்" என்று உங்கள் அடிவருடிகளால் அழைக்கபடும் நீங்கள், எம். பி. ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஒரு வருடத்தில் தமிழகத்திற்கு சாதித்தது அல்லது தமிழர்களுக்கு செய்தது என்ன??

5. பங்காரு அடிகளாரிடம் :

சக்தியின் ஆண் வடிவமாக அப்பாவி கிராமத்து மக்கள் தங்களை கருதும் நிலையில், அவர்களை ஏமாற்றி மேல்மருவத்தூரையே வளைத்து போட்டுயிருப்பதும், லஞ்சம் கொடுத்து எந்த வித விதிமுறைகளையும் கடைபிடிக்காமல் மருத்துவக்கலூரி நடத்துவதும் பாவம் இல்லையா?

6. தமிழ்நாடு பத்திரிக்கைகள் மற்றும் மீடியாக்களிடம் :

நித்தியானந்தர் - ரஞ்சிதா விவகாரத்தை வைத்து கிழிகிழி என்று கிழித்து சம்பாதித்த நீங்கள் எல்லோரும், பங்காரு அடிகளார் ஊழல் விவகாரத்தில் மட்டும் ஒன்றுமே நடக்காதது போல மௌனம் சாதிப்பது ஏன்?

(இந்த லட்சணத்தில் அங்கு சென்ற நிருபர்கள் மீது தாக்குதல் வேறு நடந்து இருக்கிறது)

7.தேமுதிக தலைவர் விஜயகாந்திடம் :

எதற்கெடுத்தாலும் அடித்தட்டு மக்கள், ஏழை மக்கள் என்று பேசும் நீங்கள், தாங்கள் நடத்தும் ஆண்டாள் அழகர் கல்லூரியில் கட்டணமே இல்லாமல் எத்தனை ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறீர்கள்??

8.'நாம் தமிழர்' இயக்குனர் சீமானிடம் :

நீங்கள் இயக்கிய "தம்பி" படத்தில் சிங்கள நடிகையான பூஜாவை நடிக்க வைத்தபோது, எங்கே போயிருந்தது உங்களின் தமிழ் இன மொழி உணர்வு??

9.சன் டிவியிடம் :

சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்கள் சுறா போன்று படுமொக்கையாக இருந்தாலும், படம் ரிலிஸ் ஆன முதல் நாளே "உலகமெங்கும் வெற்றிநடை போடும்" என்றும், சன் டிவி டாப் டென்னில் "இந்த வாரம் முதல் இடத்தை பிடித்த படம் " என்றும் விளம்பரம் செய்யும் போது, மக்களை இப்படி ஏமாற்றுகிறோமே என்று உங்கள் மனசாட்சி உங்களை உறுத்தவில்லையா??

10. திருவாளர் பொதுஜனம் மற்றும் என்னிடமே நான் கேட்க விரும்பும் கேள்வி:

காசு வாங்கிகொண்டு ஒட்டு போடும் நமக்கெல்லாம் அரசியல்வாதிகளை பற்றியும், சமுதாயத்தை பற்றியும் கேள்வி கேட்க என்னய்யா தகுதி இருக்கிறது??

(கேள்விகள் தொடரும்)

-இன்பா

Friday, July 9, 2010

அஸ்திவாரம் இல்லாத ஆனந்தபுரத்து வீடு"இன்று உள்ள பல தயாரிப்பாளர்கள் சரியாக ஸ்க்ரிப்ட்டை படிப்பதில்லை" என்று சில வாரங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசினார் இயக்குனர் தங்கர் பச்சான். அது இயக்குனர் ஷங்கருக்கே சரியாக பொருந்திஇருக்கிறது.

"எந்திரன்" பட பிஸியில் தனது சொந்த நிறுவனமான எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களின் ஸ்க்ரிப்ட்டை ,சமிப காலமாக ஷங்கர் படிப்பதோ ஏன் கேட்பது கூட இல்லை இன்று தோன்றுகிறது. அதற்க்கு, முதல் உதாரணம் தாமிராவின் ரெட்டை சுழி, இரண்டாவது உதாரணம் நாகாவின் ஆனந்தபுரத்துவீடு.

"விடாது கருப்பு" என்று கலக்கிய, சின்னதிரையின் மணிரத்னம்(!) என்று அழைக்கபட்ட நாகாவின் படம், கூடவே எழுத்தாளர் இந்திரா சௌந்திரராஜன்னின் திரைக்கதை மற்றும் வசனம் என்றதுமே ஒரு பேய் அல்லது அமானுஷிய படம் பார்க்கும் முடிவுக்கு வந்துவிடுகிறோம். பேய் படத்தில் லாஜிக் பார்க்கலாமா? (விஜய் போன்ற நடிகர்களின் படங்களில் மட்டும் என்ன லாஜிக் வாழ்கிறதாம்?)

"ஆனந்தபுரத்துவீடு" படமும் பேய் படம்தான்.

படத்தின் முதல் காட்சியிலையே இயக்குனர் நாகா படத்தின் ஹீரோ,ஹீரோயின் (வயதான பேய்கள்) அறிமுகத்தை செய்துவிடுகிறார்.

சிறுவயதில் ஒரு விபத்தில் தனது தாய் தந்தை இருவரையும் இழக்கும் நந்தா, 50 லட்சம் கடன் தொல்லையில் சிக்குகிறார்.அதில் இருந்து தப்ப, 15 வருடங்களுக்கு பின் கிராமத்தில் இருக்கும் தனது வீட்டிற்க்கு மனைவி மற்றும் குழந்தையோடு வருகிறார்.அவரை தேடி, கடன் கொடுத்த வில்லன் குண்டர்களோடு வர, கூடவே பிசினஸ் பார்ட்னராக இருக்கும் நபரும் வருகிறார். அந்த வீட்டில், ஆவிகளாக வாழும் நந்தாவின் பெற்றோர்கள் எப்படி நந்தாவின் சிக்கலை தீர்க்கிறார்கள் என்பதே கதை.

நந்தாவிடம் கொடுத்த பணத்தை வசூலிக்க வரும் அந்த சேட்டு வில்லனின் குரலே மிரட்டுகிறது.ஆனால், நந்தாவின் பார்ட்னராக, அவருடன் ஆனந்தபுரத்து வீட்டில் இருக்கும் அவரது நண்பனே மெயின் வில்லன் என்பதை எளிதாக யூகிக்க முடிவது கதையின் பலவீனம்.

பேய் படத்தில் வரும் குழந்தை என்றாலே தலை சீவாமல், ஒரு மாதரியாக இருக்கவேண்டும் என்று இலக்கணமே வகுத்து இருக்கிறார்கள் போலும். இதிலும் நந்தாவின் மகனாக(?) வரும் பையனுக்கு அதே கெட்டப்.

நந்தாவின் மனைவியாக சாயாசிங். பயந்து அலறி, பின் பேயாய் உலவும் மாமியாரின் பாசத்தை(?) புரிந்து கொள்கிறார்.

வெளிநாடுகளுக்கு போகாமல், எளிமையாக, விரல் விட்டு எண்ணக்கூடிய கதாபாத்திரங்கள்,ஒரு பழமையான வீடு என்று 50 லட்சம் பட்ஜெட்டில்(கதையில் நந்தாவின் கடன் தொகை) படத்தையே முடித்துவிட்ட நாகாவுக்கு ஒரு ஷொட்டு.

கடன் அடைக்க வீட்டை விற்க நந்தா முடிவு செய்ய, அந்த வீட்டை பார்க்க அண்ணாச்சி ஒருவர் வரும் காட்சியில் நல்ல காமெடி சென்ஸ் தெரிகிறது. பேசாமல் முழு படத்தையும் காமெடி படமாகவே எடுத்து இருக்கலாம்.இந்த திகில்(!) கதையை சீரிசாக எடுப்பதா அல்லது காமெடியாக எடுப்பதா என்று இயக்குனர் நாகாவும் குழம்பி, நம்மையும் குழப்பி இருக்கிறார்.

அறிமுக இசை அமைப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா பாடல்களில் டிவி சீரியல் எபக்ட் கொடுத்தாலும், ஒரு திகில் படத்துக்கு உரிய பின்னணி இசையை தந்துஇருக்கிறார்.ஒளிப்பதிவு : அன்புமணி பழனி.ஓகே ரகம். ஆனால், பெரியதாக சொல்வதற்கு இல்லை.

படம் முழுவதும் நந்தாவை மிரட்டும், சாயா சிங்கை பார்த்து ஜொள்ளுவிடும் அந்த சேட்டு வில்லன் கடைசி காட்சியில் நந்தாவுக்கு அறிவுரை சொல்வது தலைவி ஷகீலாவின்(!!) படங்களை நினைவு படுத்துகிறது.

திகில் படம் என்றால் திருப்பங்கள் நிறைந்த வேகமான திரைக்கதை அவசியம். இதில் அது மிஸ்ஸிங். "ஈரம்" வரை ஷங்கர் தயாரிப்பில் வந்த படம் என்றாலே துணிந்து போகலாம் என்ற நம்பிக்கை இருந்தது. அந்தநம்பிக்கை அவர் தயாரித்த கடைசி இரண்டு படங்களில் ஆட்டம் கண்டு இருக்கிறது. கவனியுங்கள் ஷங்கர் சார்.

ஆனந்தபுரத்து வீடு - விறுவிறுப்பு என்னும் அஸ்திவாரம் இல்லாத வீடு.

-இன்பா

Tuesday, July 6, 2010

மங்காத்தா - 'தல' நிமர வைத்த அஜித்


தெருவோர கிரிக்கெட்டை கடந்து வராத இளைஜனே நம் தமிழகத்தில், ஏன் இந்தியாவிலையே இருக்க முடியாது. அதையே தனது முதல் படமான
'சென்னை - 28 ' இல் கருவாக்கி, நம்மை கவர்ந்தவர் வெங்கட் பிரபு.

அடுத்தது, ஒரு புதுசான ட்ரீட் மென்ட்டில் ஒரு திரில்லரை 'சரோஜா' என்று தந்தார். ஒரே பாணியில் வெளிவந்த 'கோவா' கொஞ்சம் சறுக்கினாலும்,வெங்கட் பிரபு நம் தமிழ் சினிமாவின் சிறந்த வளரும் இயக்குனர்களில், முதல் பத்தில் கண்டிப்பாக இடம் பிடிக்ககூடியவர்.

மங்காத்தா - இது வெங்கட் பிரபு இயக்க போகும் நான்காவது படம். அவர் இயக்குனர் ஆவதற்கு முன்பே, அவருக்கு உற்சாகம் தரும் நண்பராக விளங்கிய ஒரு முன்னணி நடிகர் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதுவும் அவருக்கு இது 50 வது படம்.

மேலும். இந்த படத்தில் ஜீவா உட்பட நான்கு ஹீரோக்கள்.

தனது 50 வது படத்தில், நான்கு ஹீரோக்களுடன்..அதுவும் கிட்டத்தட்ட நெகடிவ் வேடத்தில் நடிக்கும் துணிச்சல் வேறு யாருக்கும் வரும்?? 'தல' அஜித்தை தவிர.

வேட்டைக்காரன், சிங்கம் படங்களை தொடர்ந்து அனுஷ்கா அஜித்துடன் இதில் நடிக்க விருக்கிறார்.இந்த படத்தை தயாரிக்க போவது துரை தயாநிதியின் கிளவுட் நைன் மூவீஸ்.

மும்பையில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை ஏற்கனவே 'நாயகன்' படத்தில் பேசப்பட்டு இருந்தாலும், அங்கு வாழும் தமிழ் தாதாக்களின் வாழ்க்கையை,தமிழர்களின் இருண்ட நிழல் உலகத்தை முதல் முறையாக வெங்கட் பிரபு "மங்காத்தா" மூலம் சொல்லப்போகிறார். மும்பையில் உள்ள தாராவியில் தங்கி, நெறைய ஹோம்வொர்க் செய்து இருக்கிறார் வெங்கட் பிரபு.

"வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நான்கைந்து ஹீரோக்களுடன் இணைந்து அஜித் நடிக்க உள்ளார். ஒரு இயக்குனராக எனக்கு இது மிகவும் பிடித்த விஷயம்" என்கிறார் அஜித்தின் 50 வது படத்தை இயக்குவதாக இருந்த கவுதம் மேனன்.

ஈகோ இல்லாமல் பல முன்னணி நடிகர்கள் ஒன்றாக ஒரே படத்தில் நடிப்பதை பல இந்தி படங்களில் கண்டு இருக்கறேன்.தமிழிலும் அது போன்ற ஆரோக்கியமான ஒரு முயற்சிக்கு "மங்காத்தா" மூலம் அடித்தளம் போட்டு இருக்கும் அஜித்துக்கு ஒரு Hats off.


-இன்பா

Saturday, July 3, 2010

தமிழக சேவை மையங்கள் - சில பயனுள்ள தகவல்கள்


எனக்கு வந்த ஒரு இ - மெயில் ஒன்றின் அடிப்படையில் சேவை மையங்கள் பற்றிய சில தகவல்களை தருகிறேன்.

1. நீங்கள் எங்காவது, சிறுவர் அல்லது சிறுமியர் நம் தமிழ்நாட்டில், பிச்சை எடுப்பதை கண்டால், பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளவும்.

"RED SOCIETY" , தொடர்பு எண் - 9940217816

அந்த குழந்தைகளுக்கு கல்வி உட்பட முடிந்த வசதிகளை செய்ய தயாராக இருக்கிறார்கள்.

2. உங்களுக்கு உடனே ரத்தம் தேவைப்படுகிறதா? ரத்த தானம் செய்பவர்கள் பற்றிய விவரம் வேண்டுமா? உடனே கீழ் காணும் வெப்சைட்டை பார்க்கவும்.


இங்கே உங்களுக்கு தேவைப்படும் ரத்த தான டோனர்கள் கிடைப்பார்கள்.

3. நீங்கள் இன்ஜினியரிங் படிக்கும் மாணவரா? கீழ் காணும் வெப்சைட்டில் நாற்பதிற்கும் மேற்ப்பட்ட நிறுவனங்கள் உங்களை கேம்பஸ் இன்டர்வியு மூலம் தேர்வு செய்ய காத்துஇருக்கின்றனர்.

http://www.campuscouncil.com/

உடனே ரெஜிஸ்டர் செய்யுங்கள்.

4.ஊனமுற்ற குழந்தைகளுக்காகவே, இலவச கல்வி மற்றும் இலவச தங்கும் இடம் தர தொண்டு இதயங்கள் இருக்கிறார்கள். அதற்க்கு பின்வரும் எண்களை தொடர்பு கொள்ளவும்.

9842062501 & 9894067506

5.உங்களுக்கு தெரிந்து யாரவது முகத்தில் ஆறாத தீக்காயங்கள் அல்லது வடுக்களோடு இருக்கிறார்களா?.மேலும் உங்களுக்கு தெரிந்த மனிதர்கள் காது,மூக்கு அல்லது வாய் ஆகியவற்றில் பிறவியில் இருந்தே பிரச்சினைகள் இருக்கிறதா?
அவர்களுக்கு இலவச PLASTIC SURGERY சிகிச்சை அளிக்க காத்து இருக்கும் மருத்துவமனை இதோ.

பாசம் ஹாஸ்பிடல், கொடைக்கானல்.
தொடர்பு எண் : 045420-240668,245732

6.நீங்கள் பஸ்சிலோ அல்லது ரயிலிலோ போகும்போது, யாராவது தங்களின் Driving license, Ration card, Passport, Bank Pass Book போன்ற அத்தியாவசிய ஆவணங்களை தவறவிட்டு இருந்தால், அருகில் உள்ள போஸ்ட் பாக்ஸில் போட்டுவிடவும். அவை உரியவரிடம், போஸ்ட் ஆபீஸ் மூலமாக கொண்டு சேர்க்கப்பட்டு, அதற்க்கான கட்டணம் அவர்களிடம் வசூலிக்க பட்டுவிடும்.

பிறரது ஆவணங்கள் தங்களிடம் கிடைத்தால்,தவறாமல் போஸ்ட் பாக்ஸில் போடவும்.

7.ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், நமது பூமி தற்போது நிலவுவதை விட நான்கு டிகிரி வெப்பத்தை கூடுதலாக அடையும் என்று எச்சரிக்கை விட பட்டு உள்ளது.
பூமி வெப்பத்தை தடுக்க, பின்வரும் நம்மால் ஆன முயற்சிகளை நாம் எடுப்போம்.

மரம் வளர்த்தல், தண்ணீர் மற்றும் மின்சார சிக்கனம், முடிந்தவரை பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களை தவிர்த்தல்.

8. 38 ட்ரில்லியன் டாலர்கள் தேவைபடுகிறதாம் அடுத்த ஆறு மாதங்களுக்கு வாழும் உயிர்களுக்கு எல்லாம் எனப்படும் பிராண வாயு கொடுப்பதற்கு. அப்பணியை, இலவசமாக செய்யகூடிய ஒன்றே ஒன்று...மரங்கள்.

மரம் வளர்ப்போம்,மனிதம் காப்போம்.

9. கண்கள் தானம் மற்றும் கண்கள் வங்கிக்கு பின்வரும் முகவரியை தொடர்பு கொள்க.
Sankara Nethralaya Eye Bank - தொடர்பு எண் :04428281919 / 04428271616.
கண்கள் தானம் பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் வெப்சைட்டுகளை தொடர்பு கொள்க.

http://www.kannoli.com/eyebank.html

10. குழந்தைகளுக்கான (0-10 yrs) இலவச இருதய அறுவை சிகிச்சை பெற, பின்வரும் முகவரியை தொடர்பு கொள்க.
Sri Valli Baba Institute Banglore.
Contact : 9916737471

11.உங்கள் வீட்டிலோ, அல்லது விருந்து நிகழ்ச்சிகளிலோ, உணவு பொருட்கள் கூடுதலாகி விட்டதா அல்லது வீணாக போகிறதா? அவைகளை அடிப்படை உணவு வசதிகள் இல்லாத குழந்தைகளுக்கு தர ஒரு சேவை உள்ளது.
ஹெல்ப் லைன் - 1098 (only in India ) தொடர்பு கொள்ளவும்.

12. நினைவு கொள்ளுங்கள் அன்பு நண்பர்களே.

"பிராத்திக்கும் உதடுகளைவிட, பிறருக்கு உதவும் கரங்களே புனிதமானது".


-இன்பா.

Friday, July 2, 2010

"சூன்" என்பது எந்த மொழிச்சொல்??

தமிழில் மட்டும் பெயர்பலகைகள் வைக்கவேண்டும் என்று அறிவித்து, சென்னை மற்றும் கோவை போன்ற நகரங்களில் நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.


கலைஞரின் குடும்ப நிறுவன பெயர்களை முதலில் பாருங்கள். சன் டிவி, உதயநிதியின் திரைப்பட நிறுவனத்தின் பெயர் ரெட் ஜெயின்ட் மூவிஸ். அழகிரியின் மகன் துரை தயாநிதி நடத்தும் திரைப்பட நிறுவனத்தின் பெயர் கிளவுட் நைன் மூவிஸ்.
இவற்றையெல்லாம் யார் தமிழ்ப்படுத்துவது?.


இரண்டு அறிவிப்புகள் பற்றி சொல்கிறேன்.


தமிழக முதலமைச்சர் கருணாநிதி அவர்கள் தமிழ் நாடு மட்டுமின்றிப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள் பலரின் கோரிக்கையை ஏற்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவையில் 2010 சூன் 23 முதல் 27 வரை நடைபெறும் என்று மாநாடு பற்றிய தனது முதல் அறிவிப்பை, உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டிற்கான அரசாணையை 23.10.2009 அன்று வெளியிட்டு இருந்தார்.

இதைபோலவே இன்னொரு அறிவிப்பு, ஆகத்து 17 இல் எழுச்சி தமிழர் திருமா அழைக்கிறார் என்று எதோ ஒரு விடுதலை சிறுத்தைகளின் மாநாட்டுக்கு ஒரு அழைப்பு விடுக்கபட்டு இருந்தது.

நடந்து முடிந்த உலக தமிழ் மாநாட்டில், அந்த மாநாடு தொடங்கும் முன்பாக வெளிவந்த அனைத்து அறிவிப்புகள்,விளம்பரங்கள், பேருந்து மற்றும் ரயிலில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்கள் என அனைத்திலும் குறிப்பிட பட்டு இருந்த விஷயம்....சூன் 23 முதல் 27 வரை என மாநாட்டின் தேதி குறிப்பிடபட்டு இருந்தது.

JUNE என்ற ஆங்கில வார்த்தையை தமிழில் ஜூன் என்று எழுதுகிறார்கள். ஆனால், சூன் என்பது எந்த மொழிச்சொல்???

ஜூ என்ற வடமொழியை தவிர்த்து விட்டால் அது தூய தமிழ் ஆகிவிடுமா???

மு.க.ஸ்டாலின் என்ற மட்டும் ஏன் எழுதுகிறார்கள். ஸ்டாலின் என்ற பெயரில் வரும் 'ஸ்' என்பதற்கு எந்த தமிழ்ச்சொல்லை பயன்படுத்துவது?

ஜூன் மாதத்தினை ஏன் "ஆனி" என்று தமிழில் அழைக்கவில்லை??

மாநாட்டின் எந்தவொரு அறிவிப்பிலும்,அழைப்பிலும் "ஆனி" தமிழில் என்று குறிப்பிடபடவில்லை. சூன் என்றுதான் இருக்கிறது.ஆகத்து,சூன் என்பதல்லாம் எந்த மொழிச்சொற்கள்? தமிழ் மாநாடு நடத்தியவர்களே முறையாக தமிழை கடைபிடிக்கவில்லை.

"அரசியல்வாதிகளால் தமிழ் வளரவில்லை. தமிழால்தான் அரசியல்வாதிகள் வளர்ந்து இருக்கிறார்கள்.வளர்கிறார்கள்" என்று திரு.தமிழருவி மணியன் சொல்வது எவ்வளவு உண்மை.

-இன்பா

 
Follow @kadaitheru