Saturday, October 24, 2009

மனதோடு பேசும் தெரு - பிரபஞ்சன்


சிறு வயதில் நாம் பிறந்து,வளர்ந்த தெருவை மறக்க முடியுமா? நம் பால்யகால நினைவுகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டு நாம் ஓடி..விளையாடிய அந்த தெரு.அன்று நம் சட்டையில் படிந்த புழுதி....இன்று பூக்களாய் மணக்கிறது நம் நினைவுகளில்.

அப்படி தன்னை பாதித்த, தன்னை எழுத வைத்த புதுச்சேரியில் இருக்கும் தன தெருவை பற்றி எழுதுகிறார் திரு. பிரபஞ்சன்.


உயிர்மை இதழுக்காய், 'மனதில் புகுந்தது மா மத யானை' என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு கட்டுரையின் சில பகுதிகள் மட்டும் உங்கள் உணர்வுக்கு...



ரொம்ப காலம் இல்லை. ஐந்து வருஷங்கள்தான். ஐந்து வருஷங்களுக்குப் பிறகு எங்கள் தெருவுக்குள் நான் நுழைகிறேன். ஐம்பத்தெட்டு வருஷங்கள் நான் வாழ்ந்த தெரு அது. எனக்கே அடையாளம் தெரியாதபடி தெரு மாறி இருந்தது. எங்கள் தெருவின் முகம் எனக்குத் தெரியும். அதன் குரல், அதன் வாசம் எனக்குத் தெரியும்.


விடியலுக்கு முந்தைய வைகறைப் போதிலும், நள்ளிரவுக்குப் பிறகான யாமத்திலும் தெருக்கள் பேசும். நான் கேட்டிருக்கிறேன். கடல்கள் 'கத்தும்' என்றான் ஒரு கவி, நாகைப்பட்டிணத்துக் கடலை. ஒரு பழைய ஊர் 'கல்' என்ற ஓசையைக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார் ஒரு சங்கக் கவி. ஓசை மட்டுமல்ல, தொண்டி நகரத்துக் காற்றில் தேன் மணந்தது என்கிறார் ஒரு புறக்கவி. தேன் எப்படி மணக்கும்? காதில் தேன் வந்து பாயும் என்பது சரியானால் அதுவும் சரிதான். பௌதிகமாகப் படரும் ஓசையும் மணமும்தான் நம் புலன்கள் அறியும் என்றால், நம் புலன்கள் பழுது பட்டவை என்று பொருள். ஓசை ஒரு சத்தம் என்றால், அ-ஓசை பெருஞ் சத்தம். என் தெரு என்னிடம் பேசும். அரை நூற்றாண்டுக்கு முன்னால். முதலில் அதற்குப் பெயர் இல்லை. எங்கள் தெரு முடியும் இடத்திலிருந்து ஒரு பெரு வெளி இருந்திருக்கிறது.


ஒரு குறிப்பிட்ட சாதியார்க்கென்று ஒதுக்கப்பட்ட தெரு அது. அப்படி, ஒரு காலத்து விதி. எங்கள் தெருவுக்குச் சாணார் தெரு என்பது பழம் பெயர். கள்ளிறக்கும் தொழிலாளர் வாழும் தெரு. என் மூதாதையர்கள் அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால், அத்தெருவில் குடியேறினார்கள் போலும். யாரோ ஒரு குலங்கோத்திர மேதை, சாணார் என்ற சொல் சான்றோர் என்ற சொல்லின் மரூஉ என்றும், சான்றோர் என்பது சான்றார் என மாறி, சான்றார் என்பதே சாணார் என்று மாறியதாக (கன்று-கன்னு) 'ஆய்ந்து' அறையப் போக, எங்கள் தெருக்காரர்கள் பலருக்குத் தாங்கள்தான் அந்தச் 'சான்றோர்' என்ற பெருமிதம் ஏற்பட்டுவிட்டது. சான்றோன் ஆக்குதலாகிய கடமையைச் செய்யும் தந்தையர் தாங்கள்தான் என்றும் அவர்கள் தலைப்பாகை கட்டிக் கொண்டார்கள். சாதியை ஒழிக்கக் கிளம்பிய கிளர்ச்சியாளர்கள் தெருவின் பண்டைய பெயரை ஒழித்து வ.உ.சி. பெயரை இட்டழைத்துப் பெருமை கொண்டார்கள். இப்போது வ.உ.சி.க்கும் ஒரு சிலை அமைந்துவிட்டது ஊரில். செக்கிழுத்த அந்தத் தியாகிக்குச் சிலை வைத்தவர்கள் பிள்ளைமார்கள்.




எங்கள் தெருவுக்கும் இந்தப் பிள்ளை விளையாட்டுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தெரு அப்படியே இருந்தது. மூடர்களையும் பித்தர்களையும் ஒரு சேரச் சகித்துக்கொண்டு தெரு அப்படியேதான் இருந்தது. கப்பி போட்டுத் தெருவை உயர்த்தி இருந்தார்கள். அதனால், வீடுகளின் உயரம் குறைந்து கொண்டிருந்தது. என்னை உறுத்தியது வேறு விஷயம். புதிதாக உருவான வீடுகள் சுற்றுச் சுவர்களை எழுப்பிக் கொண்டு, மேலும் இரும்பு கேட் போட்டும் தங்களை மூடிக்கொண்டிருந்தன. நான்கு முதல் ஆறு அடி உயரம் கொண்ட காம் பவுண்டுச் சுவர்களின் முகத்தில் ததும்பி வழிந்த குரோதம் பயமாகக் கூட இருந்தது. தங்கள் வசிப்பிடம் இது. இதற்குள் எவரும் பிரவேசிக்க அனுமதி இல்லை என்று உரத்துக் கூவிக் கொண்டிருந்தன அந்தச் சுவர்கள். தெருவில் இருந்தும், அடுத்த வீடுகளில் இருந்தும், மனிதர்களிடம் இருந்தும் தன்னைத் துண்டித்துக் கொண்டதான குறியீடாக இருந்து கொண்டிருந்தன அந்தக் காம்பவுண்டுச் சுவர்கள். சில சுவர்கள், கல் அடுக்குச் சுவர்களின் மேல், ஈட்டிகளைச் செருகி வைத்திருந்தன. ஒன்றிரண்டு சுற்றுச் சுவர்களின் தலைப்பகுதியில் உடைந்த பாட்டில் ஒட்டுத் துண்டுகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தன.



அடுத்த மனிதனை, அடுத்த வீட்டை, அடுத்த வெளியை இவை விலக்கிவைத்திருக்கின்றன. எச்சரிக்கின்றன. அச்சம் ஊட்டுகின்றன. ஒவ்வொரு வீடும் தனித்தனித் தீவுகள். இப்படியும் சொல்லலாம்: ஒவ்வொரு வீடும் அடுத்த வீட்டை, அடுத்த மனிதனை அஞ்சின. தன்னை ஒளித்துக் கொள்ளும் முகத் தான் தன்னைக் குறுக்கிக் கொண்டும், தன்னை மறைத்துக் கொண்டும் வரம்பு எழுப்பிக் கொண்டன.



தமிழர் வாழ்க்கையில், அவர்கள் வீடுகளுக்கு சுற்றுப்புறச் சுவர் ஏது? மன்னர்கள், எதிரி மன்னர்களுக்குப் பயந்துகொண்டு சுற்று மதிலைத் தங்கள் கோட்டைகளுக்கு வெளியே கட்டிக் கொண்டார்கள். மக்களின் வீடுகள், அவர்களின் தெருக்களின் வாசல்களில் தொடங்கின. தெருக்களையும் தங்கள் வீடுகளின் தொடக்கமாகவே அவர்கள் கருதினார்கள். அதனால் தான், தங்கள் வீட்டுக்கு முன் உள்ள தெருப்பகுதியில் கோலம் போட்டுத் தங்கள் விஸ்தீரணத்தை, அல்லது பரவலை ஊர்ஜிதம் செய்து கொண்டார்கள். தங்கள் வீட்டு வாசலுக்கு முன் உள்ள குறடுகள், பாதசாரிகளுக்கானவை; திண்ணைகள் வழிப்போக்கர்களுக்கு உரியவை என்று தங்கள் வீடுகளைப் பங்கிட்டுக் கொடுத்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள். தெருவில் நின்று பார்த்தால் வீட்டுத் தோட்டத்துக் கிணற்றடி தெரிகிற திறந்த மரபு அவர்களுடையது; மட்டும் அல்லாமல், வாயில் கதவுக்கு உட்புறம் இருண்ட ரேழியை அடுத்து, வானம் தெரிகிற வாசல் கூடம் இருக்கும். வெயிலும் மழையும், வெளிச்சமும் காற்றும் உள்நுழைய இடம் கொடுக்கும் அமைப்பைக் கொண்டவை மத்திய தர மக்கள் வாழ்ந்த வீடுகள். 'வெளியே போ' என்று உத்தரவு போட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சுற்றுச் சுவர்கள், ஆங்கிலேய, பிரஞ்ச், டேனிஷ், போர்ச் சுக்கீசியர்களிடம் இருந்து பெற்ற கலாச்சாரக் கொழுந்து. அந்த அன்னியர்கள், தங்கள் ஆளும் மக்களை அஞ்சிக் கொண்டே இருந்தவர்கள். மிகக் குறைந்த எண்ணிக்கையினராகிய அவர்கள், தங்கள் ஆதிக்கத்துக்குட்பட்ட மக்களிடம் அச்சம் கொண்டிருந்ததன், தங்கள் பாதுகாப்பு குறித்த உள்ளுணர்வின் வெளிப்பாடே அந்தச் சுவர்கள். ஆதிக்கம் செலுத்துபவர்கள் அனைவருமே கோழைகள். விதேசிகளிடம் இருந்து தங்கள் வாழ்க்கைக் கூறுகளைக் கற்ற, கற்க வேண்டிய அவசியத்தில் இருந்த, அதிகாரங்களை அண்டி வாழ்ந்த மேட்டுக் குடியினர், அதிகார வர்க்கம், அதிகார வர்க்கமாக இருப்பதாலேயே செல்வம் ஈட்டிய பணக்கார வர்க்கம், ஜாதியப் படி முறையில் மேம்பட்ட மனிதக்கும்பல், தங்கள் குடியிருப்புகளையும் அவ்வாறே ஒரு சுற்றுச் சுவருக்குள் அடக்கிக் கொண்டன. மேல் மட்டத்துப் பழக்க வழக்கங்களை அனைத்து மட்டங்களும் ஏற்பது என்பது ஒரு சமூகப் பொதுவிதி.



இந்தச் சாணார் வீதியில்தான் என் இளமைக் காலம் சென்றது. இந்தத் தெருவில், தெருப் பையன்களோடுதான் கால்பந்து, கிட்டிப்புள், சடுகுடு விளையாட்டுகள் நிகழ்ந்தேறின. விளையாடிக் களைத்த பையன்கள் யார் வீட்டுக்குள்ளும் நுழைந்து தண்ணீர் கேட்டுக் குடித்தோம். சிலவேளைகளில் பனங்கல்கண்டு எலுமிச்சை ரசம் சேர்ந்த பானகம் கிடைக்கும். எல்லாச் சாதியாருமே - பிராமணர்கள் இல்லை, முதலியார்கள் இல்லை, ஒரு ரெட்டியார் குடும்பம் இருந்தது - தெருவில் இருந்தார்கள். எங்களுக்கு எல்லா வீடுகளும் சொந்த வீடுகள் போலவே இருந்தன. சமையல் அறை வரை சென்று, 'அத்தை. . . தண்ணீர் வேணும்' என்று கேட்டுக் குடித்தது, என் நினைவில் நிற்கிறது.


எந்தத் தடையும் எந்த உருவத்திலும் எங்களுக்கு இருந்தது இல்லை. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். எங்கள் வீட்டுக்கு எதிரே, பால் வியாபாரம் செய்த யாதவக் கோனார் வீடு இருந்தது. அடுத்த சில வீடுகள் கோனார்கள். அப்புறம் ஒரு பெரிய வீடு. அது செட்டியார் வீடு. ஆலைகளில் வேலை செய்த ஆலைச் சுவர் வீடுகள், ஆலைரைட்டர் (குமாஸ்தாக்கள்) வீடுகள், ஒரு மாரியம்மன் கோயில், சில கள் சார்ந்த கிராமணிகள் குடும்பம், சில கிறிஸ்தவர் வீடுகள், ஒன்றிரண்டு வன்னியர் வீடுகள், இரண்டு இசுலாமியர் வீடுகள் என்று இருந்தன. ஒரு விளக்கம் காரணமாகவே சாதிகள் பற்றிக் குறிப்பிட்டேன்.


சாதிகள், அந்தக் காலங்களில் திருமணங்களின்போது சிந்திக்கப்பட்டிருக்கக்கூடும். மற்ற வாழ்க்கை ஊடாட்டத்தில் அவர்களின் அடையாளம் சாதி சார்ந்ததாக இல்லை. அண்ணன், மாமன், சித்தப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணி, அக்கா, பெரியம்மா என்றுதான் எங்கள் உறவுகள் இருந்தன.



அந்தக் காலத்து வீடுகள் என் நினைவில் இருக்கின்றன. தெருவுக்கு இருபுறமும் வீடுகள் ஒரு ஒழுங்காகக் கட்டப்பட்டிருக்கும். நடுவாக்குக்கு இருபுறமும் மயிர்க்கற்றைகள் படிந்துள்ளது போன்று, மிக அழகாக இருக்கும். பெரும்பாலும் ஓடு வேய்ந்த வீடுகள். முன் திண்ணையைத் தாங்கிக் கொண்டு நிற்கும் தூண்கள் மிகவும் கவர்ச்சியாக இருக்கும். தூண்களை அடிப்படையாகக் கொண்டு நிறைய விளையாட்டுகள் எங்களிடம் இருந்தன.


திண்ணைகள் எங்கள் சந்திப்பு மற்றும் விளையாட்டுக் கூடங்கள். எங்கள் வீட்டுத் திண்ணைகள் மிகப் பெரியவை. ஒவ்வொரு திண்ணையிலும் பத்துப் பேர்கள் படுக்கலாம். அப்பா மதிய உணவுக்குப் பிறகு சுருட்டு குடிக்கும் இடம் திண்ணை தான். எனக்கு அப்பாவின் சுருட்டு மணம் மிகவும் பிடிக்கும். திண்ணை முழுக்கவும் பரவும் புகையிலை மணம், தெருவுக்குச் சாம்பிராணி போடுவது போல இருக்கும். அப்பா சாப்பாட்டுக்குப் பிறகு சுருட்டும், மற்ற நேரங்களில் சிகரட்டும் பிடிப்பார். முதலில், பிளேயர்ஸ் டின் சிகரட்டுகள் பிடித்துக் கொண்டிருந்தார். 50 சிகரட்டுகள் கொண்ட டின் அது. அவரது பொருளாதார வீழ்ச்சிகளின்போது சார்மினாருக்கு மாறினார். அவர் பாக்கெட்டிலிருந்து நான் பல சமயங்களில் சிகரட்டுகள் எடுத்துக் கொள்வது என் பழக்கமாக இருந்தது. தெரியும் அப்பாவுக்கு. அவர் எதற்காகவும் என்னைக் கோபித்ததும் இல்லை. வருத்தப்பட்டதும் இல்லை. ஏழாம் வகுப்பில் சிகரட்டும், ஒன்பதாம் வகுப்பில் சாராயமும் எனக்கு அறிமுகம் ஆயின. ஒன்பதாம் வகுப்பில், காதல் தோல்வியைச் சுவைத்த பிறகும், குடிக்காமலும், கவிதை எழுதாமலும் இருந்தால் எப்படி?



துண்டு துண்டாக, தனித் தனியாக, நின்றிருந்தன புதிய வீடுகள். ஒன்றை ஒன்று அறியாத மூட வீடுகள். அடுத்த வீட்டு மனிதர்களை அறியாத, அவர்களின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளாத ஈரமற்ற வீடுகள். வாழ்க்கை அப்படியாகிவிட்டது என்பது ஒரு சமாதானம். அவசர கதி, இயந்திர கதி, மனிதப் பரவல், புதியவர்கள் பரவல் எதைச் சொன்னாலும், மனிதர்கள்தாமே நாம்? வீடு என்ன செய்யும். தெருதான் என்ன செய்யும். எவ்வழி நல்லவர் மக்கள், அவ்வழி நல்லது நமது தெருவும், நாடும்.

- பிரபஞ்சன்.

இக்கட்டுரையை படித்தவுடன் நான் வாழ்ந்த தெருவின் நினைவுகள் நெஞ்சில் பாரமாய் நிற்கின்றன. ஆனால், மீண்டும் அந்த தெருவுக்கு சென்று பார்க்க நான் விரும்பவில்லை.


வாழ்ந்த தெருவை, சொந்த ஊரை பிரிந்து வாழும் சோகத்தை விடவும் கொடுமையானது நம் தெருவில் காலம் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்கள்... அவை நம் மனதில் இருக்கும் பசுமைகளை ஒரே நொடியில் பாலைவனமாக்கிவிடும்.

நம் பழைய தெரு.. நினைவுகளில் மட்டும் நிலைத்து இருக்கட்டும் அதன் பழமை மாறாமல்.







பதிவு : இன்பா

0 comments:

 
Follow @kadaitheru