Tuesday, October 27, 2009

ஒரு வட்டத்தில் சிக்கிய பெரியார்"நமக்குள் ஒற்றுமையும், பொறாமையற்ற கூட்டுவாழ்க்கை நடத்தும் திறனும், கட்டுப்பாடும் சுயநலமற்ற தன்மையும், பதவி மீது வேட்கையில்லா நிலையும் ஏற்பட்டு விடுமேயானால் நாம் வெற்றி காண்பது மாத்திரமல்லாமல் இந்திய நாட்டிற்கே ஒரு மாபெரும் புரட்சிக்கு வழிகாட்டியாக ஆகிவிடலாம் என்பது உறுதி"

ஜூலை 16, 1939 ஆம் அருப்புகொட்டையில் நடந்த ஒரு திராவிட கழக மாநாட்டில் இப்படி முழங்கினார் தந்தை பெரியார் அவர்கள்.

அவர் கனவு பலித்ததா? நெருப்பாய் தொடங்கிய அத்தைகைய ஒரு புரட்சி எங்கு போயிற்று இன்று?

"இந்திய நாட்டில் பெண்கள் சகல துறைகளிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் வேதனையையும், இழிவையும்,அடிமைத்தனத்தையும்விட மிக அதிகமாகவேஅனுபவித்து வருகிறார்கள்.மனிதன் "பெண்களை"த் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை. பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதைவிட,ஆண்டான் தனது அடிமையை நடத்துவதைவிட,மோசமானதாகும். அவர்கள் எல்லாம் இருவருக்கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகிறார்கள்.ஆனால் ஆண்களோ, பெண்களைப் பிறவி முதல் சாவுவரை அடிமையாகவும், கொடுமையாகவுமே நடத்துகிறார்கள்"

இப்படி எந்த காலத்துக்கும் பொதுவான பெரியாரின் கருத்துக்கள் ஏன் மக்களை சென்று அடையவில்லை? சாதி ஒழிப்பு, மூட நம்பிக்கைகள், பெண்ணடிமைத்தனம் குறித்த அவரது உலகளாவிய சிந்தனைகளும், படைப்புகளும் எல்லாருக்கும் எளிமையாக கிடைத்திருக்கிறதா??

"நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, உத்தி அனுபவம் இவைகளுக்கு ஒத்துவராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒருவனுடைய எந்த கருத்தையும் மறுப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு. ஆனால், அதனை வெளியிடக்கூடாது என்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது." - என்கிறார் பெரியார்.

பெரியாரின் படைப்புகள் மற்றும் எழுத்துக்கள் அனைத்தும் எங்களுக்கே சொந்தம். அதை வேறு யாருக்கும் தரமாட்டோம். எங்கள் உரிமையை விட்டு தரமாட்டோம் என்று அறிவித்து இருக்கிறார் இன்றைய திராவிட கழக தலைவர் திரு. கி. வீரமணி.

இந்த உரிமையை பெற கோர்ட் வரை சென்று இருக்கிறார் அவர்.

பெரியார் எழுதிய கட்டுரைகள் மற்றும் புத்தகங்களை அச்சிட்டு தி.க. வெளியிட்டு வருகிறது. இவற்றை அச்சிட்டு வெளியிட பெரியார் திராவிடர் கழகமும் முன்வந்தது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று தி.க. தலைவர் வீரமணி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நீதிபதி சந்துரு விசாரித்து, ‘’பெரியார் படைப்புகளை யார் வேண்டுமானாலும் வெளியிடலாம். ஒருவர் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து வீரமணி அப்பீல் செய்தார்.

தந்தை பெரியாரின் படைப்பு உரிமை தொடர்பாக வீரமணி தொடுத்துள்ள வழக்கு தொடர்பாக விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பெரியார் படைப்புகள் வெளியிடும் உரிமை தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பிரபா ஸ்ரீதேவன், சத்யநாராயணன் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அவர்களும் இந்த வழக்கை விசாரிக்க மறுத்து, வேறு பெஞ்ச் விசாரணைக்கு அனுப்ப கோரி தலைமை நீதிபதிக்கு வழக்கின் கோப்புகளை அனுப்பி வைத்தனர்.

தந்தை பெரியார் அவர்கள் தனது திராவிட கழக இளைஞர்கள், தொண்டர்கள் எப்படி இருக்கவேண்டும் என்று ஒரு இலக்கணமே வகுத்துதந்துதான் போயிருக்கிறார்.

08.05.1948-இல் தூத்துக்குடியில் திராவிடர் கழக 18-வது மாகாண மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினர்.

"நமது கழகத்தில் சுயநலக்காரர்களுக்கு இடமில்லை. கழகத்தில் தன் சொந்த லாபத்தைக் கருதியிருப்பவனுக்கு இடமில்லை. கழகத்திற்காகத் தம் சொந்தப் பணத்தை, சொந்த உழைப்பைச் செலவு செய்பவர்களுக்குத் தான் கழகத்தில் மதிப்புண்டு. கழகத்தினிடம் ஊதியம் பெற்று வேலை செய்பவன் கழகத்தின் வேலைக்காரனாகத் தான் மதிக்கப்படுவான். எவனொருவன் தன் சொந்தப் பணத்திலிருந்து ஒரு அரைக்காசாயினும் கழகத்திற்குச் செலவு செய்கிறானோ அவனைத்தான் நான் என் நண்பனாக, என் துணைவனாக, என் தலைவனாகக் கூடக் கருதுவேன்.

கழகம் பாடுபடுகிறவனுக்குத் தான் சொந்தமே ஒழிய, கழகத்தின் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டுமென்று நினைப்பவனுக்கல்ல. கழகத்தின் பேரால் வாழ்க்கை நடந்துகிறவன் கழகத்தின் வேலைக்காரன். கழகத்திற்காகத் தன் காசைக் கொடுப்பவன் கழகத்தின் நண்பன். எவனையும் இந்த உரை கல்லைக் கொண்டு தான் நம் இளைஞர்கள் மதிப்பிட வேண்டும்.

இவ்விதம் ஆராய்ந்து தெரியாமல் நம் இளைஞர்கள் பொறாமைக்காரர்களின் விஷமப்பிரசாரத்திற்கு இடம் கொடுத்து வருவார்களேயானால் நான் கழகத்தைக் கலைத்து விடவும் தயங்க மாட்டேன். நம் இளைஞர்களுக்கு உண்மையை உணர்ந்து கொள்வதில் கவலை இருக்க வேண்டும். யாரை வேண்டுமானாலும் தூக்கிக் கொண்டு கூத்தாடும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும். நமது கழகம் தியாகிகளுக்கே சொந்தமான கழகம், சுயநலக்காரர்களுக்குச் சொந்தமானதல்ல என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும் "

பெரியாரை, அவரது அறிவுரைகளை அவரால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கமே கடைப்பிடிக்கவில்லை.

பாரதியாரின் படைப்புக்களை போலவே,எல்லாரையும் பெரியாரின் கருத்துக்கள் சென்றடைய வேண்டும். அவரது எழுத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்க படவேண்டும்.

அப்படி இல்லையென்றால்,அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசார கூட்டங்களில்...மேடைகளுக்கு பின்னால் ஒட்டப்பட்டு இருக்கும் போஸ்டர்களில் மட்டுமே இருப்பார் பெரியார் அவர்கள்.


கடைக்காரர் கமெண்ட்:
பெரியாரை பத்தி பேசறவங்களுக்கும் சரி..பெருமாளை பத்தி பேசறவங்களுக்கும் சரி..இன்னைய தேதியில எல்லாருக்கும் 'வியாபாரம்' தான் முக்கியமா போச்சு...பதிவு : இன்பா

1 comments:

R.Gopi said...

//கடைக்காரர் கமெண்ட்:
பெரியாரை பத்தி பேசறவங்களுக்கும் சரி..பெருமாளை பத்தி பேசறவங்களுக்கும் சரி..இன்னைய தேதியில எல்லாருக்கும் 'வியாபாரம்' தான் முக்கியமா போச்சு...//

********

ஒன்றே சொன்னீர்கள்.. நன்றே சொன்னீர்கள்...அதுவும் இன்றே சொன்னீர்கள்...

 
Follow @kadaitheru