Thursday, January 27, 2011

ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை - இயக்குனர் சீமானுக்கு கவிஞர் தாமரை கடிதம்


இயக்குனர் சீமான் அவர்களுக்கு,

வணக்கம். இனியவளே படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும்.

பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோஞ் எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்!

திரைக்கலைஞர்களாக இருந்து கொண்டே தமிழீழ மக்களைக் காப்பதற்காக மற்றவர்களோடு சேர்ந்து போராடினோம். ஆவேசமான பேச்சு, கைது, சிறை என்று நீங்கள் போனீர்கள். ஒரு கட்டத்தில் நேரடியாக அரசியலில் இறங்கி ‘நாம் தமிழர்’ கட்சியை நிறுவுனீர்கள். தெளிவான சில அரசியல் கொள்கைகளின் அடிப்படையில் இயங்கினாலும் நான் எந்தக் கட்சி அல்லது அமைப்பையும் சேர்ந்தவனில்லை. எப்போதும் இப்படி இருப்பதையே விரும்புகிறேன்.

ஆனால் உங்கள் முயற்சியும் அதில் நீங்கள் கண்டுவரும் வளர்ச்சியும் எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. மொழி இனவுணர்வு படைத்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்று உங்கள் பின்னால் அணிவகுத்திருக்கிறார்கள். தமிழீழத் தேசியத் தலைவரிடம் நீங்கள் கொண்டுள்ள அன்பும் பொங்கு தமிழர்க்கு இன்னல் விழைந்தால் சங்காரம் நிசமென்று நீங்கள் முழங்குவதும் உங்கள் பின்னால் அணிவகுத்து நிற்கும் இளைஞர் வரிசையை மென்மேலும் நீளச் செய்யும் என்பது உறுதி!

என் அயல்நாட்டுச் சுற்றுப் பயணங்களின்போது உலகத் தமிழர்கள் உங்கள் பால் வைத்துள்ள நேசத்தை நேரில் அறிந்து வியந்தேன், மகிழ்ந்தேன். அத்துணைப் பேரும் உங்களைத் தங்கள் உறவாகவே மதிக்கிறார்கள். உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் ‘நம்பிக்கை நாயக’னாக நீங்கள் நிற்பது கண்டு வாழ்த்தி வரவேற்கிறேன்.

ஆனால், உங்கள் நலம் விரும்பிகள்ஞ் என்று சாதாரணமாகச் சொல்லமாட்டேன், உங்கள் உறவுகளை – நான் உட்பட உரிமைச் சொந்தங்களை, அண்மையில் குழம்பித் திகைக்கச் செய்துள்ள ஒன்றை, உங்கள் முகத்திற்கு நேரே சொல்லப் பலரும் தயங்கிக் கொண்டிருக்கும் ஒரு செய்தியை இந்த திறந்த மடல் வழியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன். எனக்கு அந்த உரிமை இருக்கிறது என்றே நம்புகிறேன்.

வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதாவையும் அ.தி.மு.கவையும் ஆதரிக்கப் போவதாக நீங்கள் பேசியும் எழுதியும் வருவது எங்கள் நெஞ்சங்களில் ஆயிரம் இடிகளை ஒன்றாக இறக்கியுள்ளது.

நம் தமிழினத்தை அழித்து, மென்று, உமிழ்நீரால் ஊறவைத்த காங்கிரஸ் கட்சியைத் தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு சரி. ஆனால் அதற்காக அ.தி.மு.கவை ஆதரிக்கவேண்டும் என்றால் எப்படி?

யார் இந்த ஜெயலலிதா?

‘போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்’ என்ற, காலத்தால் அழிக்க முடியாத அரும்பெரும் பொன்மொழியை உதிர்த்தவர் அல்லவா? அதுதான் அவருடைய ‘உண்மையான உள்ள வெளிப்பாடு’!

தேசியத் தலைவரைப் பிடித்து இழுத்து வந்து தூக்கில்போட ஆசைப்பட்டவர், நோய்வாய்ப்பட்ட ஐயா ஆன்ரன் பாலசிங்கம் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடியாமல் மூர்க்கமாகத் தடுத்து அவர் உயிருக்கு உலையானவர், வைகோ, நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவுத் தலைவர்களைப் பொடாக் கொடுஞ்சிறையில் அடைத்தவர், இப்படியெல்லாம் கொடுமைகள் புரிந்ததற்கு இன்றுவரை ஒப்புக்குக்கூட வருந்தாதவர், இன்றளவும் ராஜபட்சே புரிந்த இனப்படுகொலையைக் கண்டித்து ஒரு வார்த்தை பேசாதவர், அந்தக் கொலைகாரனுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் இந்திய அரசைக் கண்டிக்காதவர், தமிழர்களின் வாக்கைப் பெறுவதற்காக ‘தமிழீழம் அமைத்துத் தருவேன்’ என்று முழங்கிவிட்டு, தமிழ் மக்கள் இவர் ‘சிலநாள் மட்டும் நடிக்க வந்த புது நாடகத்தை’ நம்பவில்லை என்றதும், உண்ணாவிரதக் களைப்பு நீங்க கொடாநாடு போய்விட்டவர் – இவரையா சீமான் நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்கிறீர்கள்? என்ன கொடுமை இது?

உங்கள் தர்க்கப்படி பார்த்தால் இலங்கை அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபட்சேவைத் தடுக்க ரணில் விக்ரமசிங்கேவை நம் அண்ணன் பிரபாகரன் ஆதரித்திருக்க வேண்டும், அப்படித்தானே? இதைத்தான் இந்து ராம் சொன்னார், நக்கீரன் பேட்டியில் ரணிலே சொன்னார், கலைஞரும் ஆமோதித்தார். அண்ணனுக்கு அருவருப்பாகத் தெரிந்த சந்தர்ப்பவாதம் உங்களுக்கு மட்டும் தேர்தல் வியூகமாகத் தெரிவது எப்படி இயக்குனரே?

உங்கள் நிலையை சுபாஷ் சந்திரபோசோடு ஒப்பிடுகிறீர்கள். அவர் பிரிட்டனை எதிர்க்க ஜப்பானியனை நாடியதாகக் கூறுகிறீர்கள். ஆம் உண்மைதான். ஆனால் ஜப்பான் பிரிட்டனின் எதிரிநாடு! பிரிட்டனை மெய்யாகவே எதிர்த்தது, போர் புரிந்தது. களத்தில் நின்றது. எனவே போஸ் ஜப்பானிய ‘இராணுவ’த்தின் உதவியை நாடினார். இங்கே ஜெ உண்மையிலேயே காங்கிரசை எதிர்க்கிறாரா? இந்த வகையிலும் கலைஞர் செய்வதைத்தானே ஜெவும் செய்கிறார்?

தீயை அணைக்க சாக்கடையை வீசலாம். பெற்ரோலை வீசலாமா?

கலைஞரின் இனத் துரோகத்தைத் தோலுரித்துக் காட்டும் நீங்கள் ஜெயின் இனத்துரோகத்தையும் உரிக்க வேண்டாமா? அதை மன்னிக்க முடியாது என்றால் இதையும் மன்னிக்க முடியாது அல்லவா?

‘ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விரோதப் போக்கில் செயல்பட்டால் எதிர்த்து முழங்குவேன்’ என்று கூறியுள்ளீர்கள். அப்படியானால் அவர் இதுவரை தமிழர் விரோதப் போக்கில் செயல்படவில்லை என்கிறீர்களா? அல்லது ‘இனி தமிழர் விரோதப் போக்கில் செயல்படமாட்டேன்’ என்று உங்களிடம் தனியாக ஏதும் உறுதியளித்திருக்கிறாரா?..

கலைஞர் காங்கிரசோடு அப்பிக் கொண்டிருப்பவர், ஜெ அதைப் பிய்த்து எடுத்துத் தான் அப்பிக் கொள்ளத் துடிப்பவர். இவர்களுக்கிடையே எதில்தான் வேறுபாடு உள்ளது – ஒருவர் வேட்டி, மற்றவர் சேலை அணிவது தவிர?

ஒருவேளை கூட்டணியில் ‘திடீர்’ மாற்றம் ஏற்பட்டு காங்கிரசுடன் அதிமுக கூட்டணி சேர்ந்துவிட்டால் உங்கள் ‘வியூகம்’ என்னாகும்? அப்போது காங்கிரசை ஒழிப்பதற்காகக் கலைஞரை ஆதரிப்பீர்களா?

‘அதிமுக ஆட்சிக்கு வந்தர்லும் சீமான் இருக்குமிடம் சிறைதான்’ என்கிறீர்கள். சரி, தமிழீழ ஆதரவாளர்களை – வைகோ, நெடுமாறன், சீமான் யாராயினும் – ஒடுக்குவதில் திமுக, அதிமுக ஆட்சிகளுக்கிடையே வேறுபாடு இல்லை என்று தெரிந்தும் அதிமுக ஆட்சிக்கு வர நாம் ஏன் உதவ வேண்டும். இப்போது அவசரமாகக் கலைஞரைப் பதவியிறக்கி, அம்மையாரை அரியணையில் அமர்த்தி நாம் சாதிக்கப் போவது என்ன? – அரசு அலுவலகங்களில் தொங்கும் படம் மாறும் என்பதைத் தவிர?

ஐந்தாண்டு கழித்து (ஜெயின் உண்மை உருவத்தைப் பார்த்து, ‘அதிர்ந்து’போய், மேடை, சிறை, வழக்கு, வாய்தாவெல்லாம் முடித்து) – அடுத்த தேர்தலில் கலைஞருக்கு ஆதரவு கேட்க மாட்டீர்கள் என்பது என்ன நிச்சயம்?

அவரை எதிர்ப்பதற்காக இவரையும், இவரை எதிர்ப்பதற்காக அவரையும் ஆதரித்து தேர்தலுக்குத் தேர்தல் கால்பந்தாக மாறி.. ஐயகோ.. அதைத்தானே இயக்குனரே, எங்கள் அன்பிற்கினிய வைகோ அவர்களும் தோழர் திருமாவளவனும் செய்து கொண்டிருக்கிறார்கள். காலங்காலமாகத் தமிழகம் இந்தக் கால்பந்து விளையாட்டைத்தானே பார்த்துக் கொண்டிருக்கிறது!

தமிழக அரசியல் என்பது ரங்க ராட்டினமாகி வெகுகாலமாகிவிட்டது. திமுகவும் அதிமுகவும் மேலும் கீழுமாகப் போய் வந்துகொண்டிருக்கின்றன. இதில் ஏறினால் மேலும் கீழுமாகச் சுற்றிச் சுற்றி, ‘தலைசுற்றிப்’ போகலாமே தவிர, வேறு ஊருக்குப் பயணம் போக முடியாது. இதை மக்கள் தெரிந்து கொண்டார்கள்ஞ் அதனால்தான் ஒரு மாற்று அரசியலை எதிர்பார்த்து தவம் கிடக்கிறார்கள்.

விஜயகாந்த் இட்டு நிரப்ப முயன்றது இந்த இடத்தைத்தான். இரு கழகங்களுக்கும் மாற்றாக அவர் இருப்பார் என்று நம்பித்தான் மக்கள் இன்றைய இடத்தை அவருக்குக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவரும் மக்களை ஏமாற்றிவிட்டார். ஊழலற்ற நல்லாட்சி என்ற அடிப்படையில்தான் அவர் மக்களை அணுகினார். தமிழினம், தமிழர் இறையாண்மை என்ற அடிப்படையில் அணுகவில்லை. எனவேதான் காங்கிரசுக்குக் கைகொடுக்கும் நிலைக்கு நெருங்கி வந்தார். காலாவதியாகிப் போன இந்திய இறையாண்மை என்ற இறகுத் தொப்பியை அணிந்து வந்தவர் அவர். தமிழக அரசியல் வெற்றிடத்தை அவரால் நிரப்ப முடியாது என்பது நிதர்சனம்!

காங்கிரஸ் கட்சியைத் தமிழகத்தில் இருந்து ஒழிக்க வேண்டும் என்பது அவர்கள் தமிழீழத்தைச் சிதைத்தார்கள் என்பதற்காக மட்டும்தானா? இல்லவே இல்லை. இன்னும் விரிந்த நோக்கில், நம் தௌ;ளிய, நேரிய நோக்கமான ‘தேசிய இனங்களின் தன்னுரிமை, இறையாண்மை பெற்ற தமிழ்நாடு’ ஆகியவற்றின் முழுமுதல் எதிரியாகவும் இருப்பதால்தானே?


உங்களிடம் தமிழினம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை நீங்கள் உணரவேண்டும். ஆங்கிலேய அரசுக்கு எதிராகப் போராடுவதற்கு அன்று இந்தியத் தேசியம் தேவைப்பட்டது. இந்திய சுதந்திரத்தோடு அதன் தேவை முடிந்துபோய் விட்டது. காங்கிரஸ் கட்சி அத்தோடு கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக, தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தேசிய இன மக்களுக்கும் எதிராக வளர்ந்து, அடித்துத் தின்ன முயன்றது. ஆதனால் ‘திராவிட தேசியத்தின்’ தேவை உருவானது. திமுக அபரிதமான வெற்றி பெற்றது. ஆனால் பதவி நாற்காலியில் அமர்ந்த பின் தன் கொள்கைகளைக் கைகழுவி விட்டது. திமுக வும் எதிர்க்கட்சியான அதிமுக வும் மீண்டும் ‘இந்திய தேசியத்’தைச் தூக்கிச் சுமக்கப் போட்டியிடுகின்றன. பதவிக்காக இந்தக் கழகங்கள் போட்டுக் கொள்ளும் பங்காளிச் சண்டை காங்கிரசுக்கு மறுபிறவி கொடுத்துவிட்டது. ‘எரிவதைப் பிடுங்கினால் கொதிப்பது அடங்கும்’ என்ற அடிப்படையில் காங்கிரசைத் தமிழ்நாட்டிலிருந்து ஒழித்தால் கழகங்கள் இரண்டும் தமிழ்நாட்டை, தமிழரை முன்னிறுத்தி அரசியல் செய்ய வேண்டி வரும். அந்த நிலையை ஏற்படுத்துவதே நம் போன்றோரின் அவசரக் கடமை.

தமிழ்த் தேசியமே இன்றைய தேவை. அதை அரசியல் நிலைப்பாடாகக் கொண்டு, களம் காணும் அரசியற் கட்சிகளே இல்லை என்ற நிலையில் நீஙகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கிறீர்கள் சீமான் அவர்களேஞ் உங்கள் பொறுப்பு பெரும் பொறுப்பு. எதிர்காலத் தமிழினத்திற்கு நீங்கள் ஆற்றும் மகத்தான கடமை!

சிங்களன் தமிழ் மீனவனை நோக்கிச் சுடும் ஒவ்வொரு தோட்டாவிலும் இந்திய இறையாண்மை பொத்தலாகிக் கிழிந்து தொங்கும் நேரம் இது! இரண்டகம் செய்யும் இரட்டையர்களான திமுக வையும் அதிமுக வையும் ஒன்றாகக் கருதி, ஒரு சேர தனிமைப்படுத்த வேண்டும். பதவி அரசியலை சந்தர்ப்பவாதக் கூட்டணி அரசியலை மறுதலிக்க வேண்டும். தேர்தல் வரட்டும், போகட்டும். ஆனால் இந்த கொள்கை வழித் தமிழ்த் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பது உங்கள் பணியாக இருக்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் எம்மைப் போன்ற தமிழ் உணர்வாளர்களின் ஆதரவு கிட்டும். தமிழ்த் தேசிய இயக்கங்கள் வலுவாக உங்கள் பின்னால் அணிவகுப்பார்கள். உலகத் தமிழர்கள் வலுக்கூட்டுவார்கள். நாளை அழிக்க முடியாத பெரும் அரசியல் சக்தியாக உருவெடுக்கலாம்.

அதைவிடுத்து நீங்களும் அரசியல் சதுரங்கத்தில் பகடையாக மாறி உருண்டீர்களானால், நாங்கள் பதைபதைத்துப் பார்த்து பத்தடி தள்ளி நிற்பதைத் தவிர வேறென்ன செய்வது?

நான் என்ன செய்யட்டும், பகலவன் படப்பிடிப்பை இப்போதே நடத்தலாமா என்று நண்பர்களைக் கேட்கிறீர்கள். சரி என்னுடைய யோசனையைச் சொல்கிறேன்.

ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க வேண்டாம். ஊர் ஊராகச் சென்று ‘நாம் தமிழர்’ கட்சி அமைப்பை வலுப்படுத்துங்கள். தமிழ்த் தேசியச் சிந்தனையை மக்களிடம் வலுவாக வளர்த்தெடுங்கள். காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் எதிர்த்துப் பரப்புரை செய்யலாம்.

இல்லை, இந்தத் தேர்தலிலேயே நின்றாக வேண்டும் என்றால், நல்லது, காங்கிரஸ் நிற்கும் தொகுதிகளில் மட்டும் போட்டியிடுங்கள். காங்கிரசை எதிர்த்துத் தோற்கடிப்போம்.

மற்றத் தொகுதிகளில் ‘திமுக வும் அதிமுக வும் ஒன்றே’ என்ற நிலைப்பாட்டை எடுங்கள். ’49 ஓ’ வுக்குக் குரல் கொடுங்கள். அது உங்களுக்கு உடன்பாடு இல்லை எனில், யார் வென்றால் என்ன, அந்தத் தொகுதிகளைப் பற்றி கவலையில்லை என்று முடிவெடுங்கள்.

இலங்கைப் புறக்கணிப்பை வலுவாக மேற்கொள்வோம். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்பாடுகளைத் தமிழகத்தில் கொண்டு வருவோம். தமிழீழமும் தமிழ்நாடும் ஒன்றாக விடியல் காணட்டும்!

இதையெல்லாம் செய்தபின் பகலவனுக்காகவும் நேரம் ஒதுக்கினால், நல்லது.. சொல்லியனுப்புங்கள், நானும் வந்து பாடல் எழுதுகிறேன்.

திரை அதிர, தமிழனின் சிறை உடைப்போம்!
என்றும் அடங்கா தமிழ்த் தாகத்தோடு

உங்கள்
தாமரை

Thursday, January 20, 2011

நிரஞ்சன் பாரதி - யார்?

பி.இ. படிப்பு. ஒரு நல்ல ஐ.டி. நிறுவனத்தில் வேலை. ஹைதராபாத்தில் எம்.பி.ஏ என்னும் மேற்படிப்பு. இப்படி இருந்த நிரஞ்சன் பாரதி, இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, வேறு ஒரு வேலைக்கு போயிருக்கிறார்.

அதற்க்கு இவர் கூறும் காரணம், "அந்த வாழ்க்கை பிடிக்கவில்லை".இவர் தற்போது பார்த்துகொண்டு இருக்கும் வேலை..சினிமாவுக்கு பாடல் எழுதுவது.

அஜித்தின் 50 வது படமான "மங்காத்தா" படத்தின் மூலம் பாடலாசிரியராக தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் ஆகிறார் நிரஞ்சன்.

"ஸ்கூல் படிக்கும்போது நோட் புக்குல எதவாது கவிதை மாதரி கிறுக்கிவைப்பேன். எல்லாரையும் போல கவிதையில் எனக்கு இப்படிதான் ஈடுபாடு வந்தது.ஒரு நல்ல பாடலாசிரியராவதுதான் என் லட்சியம்" என்கிறார் நிரஞ்சன்.

மங்காத்தா பட வாய்ப்பு எப்படி கிடைத்து?

" பாடல் எழுத வாய்ப்பு கேட்டு நிறைய பேரை பார்த்தேன்.டம்மி டியுன்களுக்கு நான் எழுதிய பாடல்களையும், கவிதைகளையும் எடுத்துக்கொண்டு வெங்கட் பிரபுவிடம் சென்றேன். அவர் என் தந்தையிடம் மிருதங்கம் வாசித்தவர்.அப்படி வந்த வாய்ப்பு இது" என்று கூறுகிறார் நிரஞ்சன். இவரது தந்தை ராஜ்குமார் பாரதி, கர்நாடக சங்கீத கலைஞர்.

"முதல் படம்..மங்காத்தா என்றதும் தலை கால் புரியல. நானும், என் நண்பர்களும் அஜித் ரசிகர்கள். 'தல பாட்டு பார்த்து எழுதுங்க'.'தலைவரை' அசத்துற மாதரி பாட்டு எழுதுடா' என்று பேஸ்புக்கில் வெறி ஏற்றுகிறார்கள் என் நண்பர்கள்" என்ற நிரஞ்சன், படத்தில் வரும் இவரது பாடல்....அஜித் - த்ரிஷா இடையில் ஆன ஒரு டூயட் பாடல் என்கிறார்.

"ஒரு போதும் இரட்டை அர்த்த பாடல்கள் எழுதமாட்டேன். இளைஞ்சர்கள்தான் இன்னைக்கு படம் பார்க்க வருகிறார்கள். அவங்களுக்கு குத்துபாடல்களும், ஆங்கில வரிகள் கலந்த பாடல்களும்தான் பிடித்து இருக்கிறது" என்று ஒரு பேட்டியில் சொன்ன நிரஞ்சன், "பிற மொழி கலக்காத தமிழ் பாடல்களை எழுதுவதுதான் என் பாணியாக இருக்கும்" என்று உறுதியாக சொல்கிறார்.

" 'அவர்' சந்ததியில் வந்தது நான் செய்த புண்ணியம். மற்றபடி, என் வாழ்க்கையை நான்தான் தீர்மானிக்கணும். 'அவர்' பெயரை கெடுக்கக்கூடாது என்று உறுதியாக இருக்கிறேன்" என்கிறார் நிரஞ்சன்.

இவர் கூறும் 'அவர்'......இவரது தாத்தா .........மகாகவி சுப்ரமணிய பாரதியார்.

-இன்பா

Tuesday, January 18, 2011

தமிழ் எண்ணியல் முறைகள்

தமிழ் எண்கள் : பூஜ்யத்தை கண்டுபிடித்து இந்தியா என்று தெரியும். ஆனால், நம் தமிழ் மொழிக்குள் அடங்காத எண்களே இல்லை என்பதற்கு வரலாற்று சான்றுகள் இருக்கின்றன.

ஏறுமுக இலக்கங்கள்

1 = ஒன்று
10 = பத்து -ten
100 = நூறு -hundred
1000 = ஆயிரம் -thousand
10000 = பத்தாயிரம் -ten thousand
100000 = நூறாயிரம் -hundred thousand
1000000 = பத்துநூறாயிரம் – one million
10000000 = கோடி -ten million
100000000 = அற்புதம் -hundred million
1000000000 = நிகர்புதம் – one billion
10000000000 = கும்பம் -ten billion
100000000000 = கணம் -hundred billion
1000000000000 = கற்பம் -one trillion
10000000000000 = நிகற்பம் -ten trillion
100000000000000 = பதுமம் -hundred trillion
1000000000000000 = சங்கம் -one zillion
10000000000000000 = வெல்லம் -ten zillion
100000000000000000 = அன்னியம் -hundred zillion
1000000000000000000 = அர்த்தம் -?
10000000000000000000 = பரார்த்தம் —?
100000000000000000000 = பூரியம் -?
1000000000000000000000 = முக்கோடி -?
10000000000000000000000 = மஹாயுகம்

இறங்குமுக இலக்கங்கள்

1 -ஒன்று
3/4 – முக்கால்
1/2 – அரை கால்
1/4 – கால்
1/5 – நாலுமா
3/16 – மூன்று வீசம்
3/20 – மூன்றுமா
1/8 – அரைக்கால்
1/10 – இருமா
1/16 – மாகாணி(வீசம்)
1/20 – ஒருமா
3/64 – முக்கால்வீசம்
3/80 – முக்காணி
1/32 – அரைவீசம்
1/40 – அரைமா
1/64 – கால் வீசம்
1/80 – காணி
3/320 – அரைக்காணி முந்திரி
1/160 – அரைக்காணி
1/320 – முந்திரி
1/102400 – கீழ்முந்திரி
1/2150400 – இம்மி
1/23654400 – மும்மி
1/165580800 – அணு
1/1490227200 – குணம்
1/7451136000 – பந்தம்
1/44706816000 – பாகம்
1/312947712000 – விந்தம்
1/5320111104000 – நாகவிந்தம்
1/74481555456000 – சிந்தை
1/489631109120000 – கதிர்முனை
1/9585244364800000 – குரல்வளைப்படி
1/575114661888000000 – வெள்ளம்
1/57511466188800000000 – நுண்மணல்
1/2323824530227200000000 – தேர்த்துகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் அரசுக்கு ஏற்ப்பட்ட இழப்பு,

இந்திய ரூபாயில் 17600,00,00,0000 கோடிகள்.

அமெரிக்க டாலர்களில் 38,825,613,433 USD

இந்த தொகைக்கான சரியான இலக்கங்களை சொல்வதற்கு நம் தமிழ்மொழியை தவிர உலகில் வேறு மொழிகள் உண்டா?

Thursday, January 13, 2011

இன்று..இந்த நிமிடம்...இலங்கையில் தமிழர்கள்??

இலங்கையில் என்ன அதிரடி அரசியல் செய்தாலும் மகிந்த ராஜபக்ச என்ற குடும்பத்தை தாண்டி ஒரு துரும்பைக்கூட எவராலும் எடுத்து போட முடியாத படிக்குதான் எல்லாம் நடக்க வேண்டியிருக்கிறது. இலங்கையில் ஒன்றுமில்லை ஒன்று மகிந்த ராஸபக்சவுக்கு சார்பானவர்கள் அல்லது மகிந்த ராஜபக்சவுக்கு சார்பாக போகிறவர்கள். எதிரானவர்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. எதிரானவர்களுக்காக என்று எப்பொழுதோ கட்டப்பட்ட சிறைச்சாலைகள் இன்னும் கதவை அகலமாக திறந்தே வைத்திருக்கின்றன. அது பெரிய ராணுவ தளபதி என்று சர்வதேச புகழ் பெற்றிருந்தாலும் அவர் சிறைக்குள்ளேதான் இருக்க வேண்டும்.

அண்மையில் மகிந்த ராஜபக்ச தன்னை மரபு வழி இராஜ பரம்பரைக்காரர் என்று சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சொல்லி வருகிறார். தானும் இலங்கையை முன்பு ஆட்சி செய்த இராஜசிங்க மன்னனை போன்று குரக்கன் மா பண்டங்களைதான் விரும்பி சாப்பிடுவதாக குறிப்பிட்டு தன்னையும் ஒரு அரசனாக நாட்டு மக்கள் கருத வேண்டும் என்று சாடை காட்டியிருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் அரசர் காலத்தில் மரக்கன்றுகளை இலங்கையில் நட்ட் பாரம்பரியம் அரச பாரம்பரியம் என்றும் அதனை தானும் அரசர்களைப்போல செய்வதாகவும் சொல்லி பெருமைப்பட்டார். மகிந்த ராஜபக்ச தனக்கு ஒவ்வாதவர்களை அரசர்மார் செய்வது போல சிறையில்தள்ளுவதும் அவர்களை சித்திரவதை செய்வதையும் அவரது ஆட்சியில் தொடர்ந்து கண்;டு வருகிறோம்.

இலவச கல்விக்கெதிரான மாணவர் கிளர்ச்சி கடந்தமாதம் இலங்கையில் பெரும் போராட்டமாக வெடித்து கிட்டத்தட்ட கொழும்பையே ஸ்தம்பிக்க செய்திரந்தது. இதனை மகிந்த அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்கிறது.

கடந்த இரண்டு மாத காலத்துக்குள் 176 பல்கலைக்கழக மாணவர்களுக்கு வகுப்புகளில் பங்கு பற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் 27 மாணவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார்கள் பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களிடம் இனிமேல் போராட்டங்களில் பங்குபெற மாட்டோம் என்று கைப்பட கடிதம் எழுதி பாதுகாப்பு அமைச்சர் வாங்கியிருக்கிறார்.

இந்த போராட்டங்களின் போது பொலிசாரால் தாக்கப்பட்டு நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

மாணவர் போராட்டங்களை அடக்க வழி தெரியாமல் திணறிக் கொண்டிருக்கும் உயர் கல்வி அமைச்சும் அரசாங்கமும் அதற்கென அடக்குமுறை சட்டத்துக்கொப்பான பகிடிவதை மற்றும் வன்முறைத் தடுப்பு சட்டத்தின் கீழும், பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழும் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த சட்டங்களின் கீழ் கைது செய்யப்படுகின்றவர்கள் இலகுவில் பிணையில் வெளிவர முடியாதபடியான சட்ட ஏற்பாடுகள் இருப்பதன் காரணமாக அதனைப் பயன்படுத்தி மாணவர்களை பயமுறுத்தி அடிபணிய வைக்க அரசாங்கம் முயற்சித்த போதிலும் மாணவர் போராட்டங்கள் தணிவதாக இல்லை. இப்பொழுது மாணவர் தலைவர் உதுல் பிரேமரட்ண கைதசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு இப்பொழுது விடுதலை செய்யப்பட்டிருக்கிறார் கைதுக்கு பிறகு அவர் வாய் திறக்கிறார் இல்லை.

ஊவா-வெல்லஸ்ஸை பல்கலைக்கழகத்தில் எதுவிதமான தொழிற்சங்கங்களோ, மாணவர் அமைப்புக்களோ உருவாக்கப்படாதவாறு தடுப்பதிலும் மகிந்த அரசாங்கம் தீவிர முனைப்புக்காட்டி வருகின்றது. அதற்கென கலாசார உத்தியோகத்தர்கள் எனும் பெயரில் அரசாங்கத்தின் உளவாளிகள் அங்கு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.என்று மாணவர்கள் சொல்கின்றனர். இப்பொழுது மேலதிகமாக அரசை விமர்சிப்பவர்கள் எதிர்க்கட்சிகளை கண்காணிப்பதற்கென்றே புதிய உளவாளிகள் பிரிவு ஒன்றை அரசாங்கம் கட்டி அமைத்திருக்கிறது. அடக்குமுறைச் சட்டங்களின் பிரகாரம் அந்தப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் ஐந்து பேருக்கு மேல் ஒன்றாகக் கூடி நின்று பேச முடியாது தடுக்கப்படுகின்றனர்.

மேலும் மாலை 6 மணிக்கு மேல் ஆண் மாணவர்கள் பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைவதை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் கொழும்பு பல்கலைக்கழகம் என்பன மட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.

மாணவிகளை மட்டும் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்துள்ள விடுதிகளில் தங்க வைத்து மாணவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதன் மூலம் மாணவர் போராட்டங்களைத் தணிக்கும் வழி வகைகள் குறித்தும் மகிந்த அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

பொலிசாரை ஏவிவிட்டு தமக்கெதிரானவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடும் அடக்குமுறை வழியை அரசாங்கம் தீவிரமாக செய்யப் போகின்றது என்பது தெளிவாக தெரிகிறது. மாணவர் அமைப்புகளின் போராட்டங்களைக் கூட அந்த வழியிலேயே அடக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இப்பொழுது பல்கலைக்கழக மாணவர் அமைப்புக்கள் 1989ம் ஆண்டுக்குப் பின் முதற்தடவையாக தமிழ் மாணவர்களின் உரிமைகள் குறித்து பகிரங்கமாக குரல் கொடுக்க முன்வந்துள்ளமை ஒர முக்கியமான விடயமாக பார்க்கபடுகிறது. இது ஒரு பாராட்டத்தக்க விடயமாகும். அனைத்துப் பல்கலைக்கழக அமைப்பின் தலைவர் உந்துல் பிரேமரத்ன அந்த வகையில் குறிப்பிடத்தக்க முன்மாதிரியொன்றை வெளிக்காட்டி வருகின்றார்.

அரசாங்கத்துக்கெதிரான போராட்டங்களில் ஈடுபடும் மாணவர்களை ஆயிரக்கணக்கில் என்றாலும் கைது செய்து சிறையில் தள்ள அரசாங்கம் தயங்காது என்று உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க அண்மையில் எச்சரித்திருந்தார். இது பெரும் அராஜகத்தின் வெளிப்பாடாகும்.

1994ம் ஆண்டு வரை அதிகாரத்திலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கடைசி கட்டத்தில் கூட அரசாங்கத்துக்கெதிரான மாணவர்கள் போராட்டங்கள் இதே வடிவில் தான் நடைபெற்றன. அன்றைய கட்டத்தில் அணி திரண்ட மாணவர்கள் இன்னும் பல அமைப்புகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைப்பதில் வெற்றி கண்டனர.;

இவ்வளவுகாலமும் புலிகளை காரணம் காட்டி நாட்டின் அபிவிருத்தி தொடர்பாக எதனையும் செய்யாத அரசாங்கம் இப்பொழுது ஏழை மக்களின் நாளாந்த உணவாக உட்கொள்ளும் பாணை (பிறட்) கூட மலிவு விலைக்கு கொடுக்க தயாராக இல்லை. இலங்கையில் தேர்தல் காலங்கள் பாணுக்கு(பிரட்) முக்கிய பங்கு இருக்கிறது. பாணும்(பிரட்) மைசூர் பருப்பும் இலங்கையில் உழைப்பாளிகள் வறியவர்களின் பிரதான உணவு. பாணின் விலையை குறைப்போம் பருப்பின் விலையை குறைப்போம் என்றுதான் சிங்கள அரசாங்கங்கள் தேர்தல் வாக்குறுதியை கொடுத்து வாக்குகளை வாங்கும் தேர்தல் முடிந்து மூன்று மாதங்களில் பழையபடிக்கு பாணின் விலையை ஏற்றிவிடும் இம்முறையும் அப்படித்தான் மகிந்த அரசாங்கம் செய்திருக்கிறது. இதுவும் பாட்டாளி மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான அதிருப்தியாக மாறிக்கொண்டு வருகிறது. பொறுங்கள்; புலிகளை ஒழித்துவிட்டு இலங்கையை சிங்கப்பூராக மாற்றிக்காட்டுகிறேன் என்று மகிந்த ராஜபக்ச மக்களை கேட்டிருந்தார். ஆனால் இப்பொழுது சிங்கப்பூர் வேண்டாம் நிம்மதியாக இருக்க விடுங்கள். என்று சிங்கள மக்கள் கேட்கும் நிலமைக்கு நாடு போய்க்கொண்டிருக்கிறது.

மகிந்த ராஜபக்ச இன்னொன்றையும் வலுவான திட்டத்துடன் செய்துவருகிறார.; அதுதான் யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு மத்தியில் சிங்கள மக்களை கலப்பது. அதற்காக முதலில் இடிபாடடைந்த யாழ் புகையிரத நிலையத்திற்கு சிங்கள குடும்பங்களை தெற்குப்பகுதியில் இருந்து அனுப்பிவைத்தார்கள். அவர்கள் சொன்னார்கள் தாங்கள் யாழ்ப்பாணத்தில் பிறந்த சிங்களவர்கள் என்று. அத்துடன் அவர்கள் நன்றாக தமிழ் பேசக்கூடிய சிங்களவர்கள.; அங்கு ஒரு மாதமாக தங்க வைத்த விட்டு சிங்களக் குடும்பங்களில் 32 குடும்பங்கள் நவம்பர்மாதம் செவ்வாய்கிழமை இரவு 9.30 அளவில் இராணுவப் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தில் நாவற்குழி பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குடியேற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் அரசாங்க அதிபருக்கோ யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலகங்களுக்கு எதுவித அறிவித்தல்களும் வழங்கப்படவில்லையென அதிகாரிகள் சொல்கின்றனர்.

சிங்களக் குடும்பங்கள் யாழ் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தமை தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் முதற்கொண்டு புத்திஜீவிகள்வரை பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் இந்த சிங்கள குடியேற்றம் நடைபெற்றிருக்கிறது.

தற்போது குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்கள் இப் பகுதியில் வீடுகள் கட்டுகிறார்கள்; இனி புத்த விகாரை ஒன்று வரும் சிங்கள மயப்படுத்தலின் ஆரம்பம்தான் இந்த விடயம். யாழ்ப்பாணம் இனி தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல என்ற எண்ணம் தமிழர்களிடம் வர வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் நோக்கம்.

இனி தட்டிக்கேட்க தமிழர் தரப்பில் யாருமில்லை என்பது அரசுக்கு ஆறுதலான விசயம் தானே.


(இலங்கை தமிழர் திரு.இளைய அப்துல்லா எழுதி, உயிர்மையில் வெளியான ஒரு கட்டுரை).

Saturday, January 8, 2011

செருப்பைக் காட்டிய கமல் அவர்களே.. - கவிஞர் அறிவுமதி.


கவிஞர் அறிவுமதி - இன, மான உணர்வோடு இருக்கும் ஒரு கவிஞர். நமது திராவிட இனத்தின் கருப்பு நிறத்தை, இயக்குனர் ஷங்கர் 'அங்கவை சங்கவை' என்று 'சிவாஜி' படத்தில் இழிவுபடுத்தியதை கண்டித்தவர். தற்சமயம் "மன்மதன் அம்பு" படத்தை பார்த்துவிட்டு கமலுக்கு அவர் எழுதிய கடிதம் இங்கே...


30.12.2010. இரவு.. சத்யம் திரையரங்கு

இரவுக் காட்சி உடன் பிறந்தார் அழைக்க..
கமல் படம்.
மன்மதன் அம்பு.
மார்கழி மாஸ ஸபா ஒன்றுக்கு
வந்து விட்டோ‌மோ‌
என்கிற அளவிற்கு
ஒரே கமலஹாஸன் களும்!
கமல ஹாஸிகளும்!

அடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில்
பதுங்கிக் கொண்டு
நூல்தனம் காட்டும் அவரை
பரமக்குடி பையன் என்றும்
பெரியாரின் பிள்ளை என்றும்
பிறழ உணர்ந்து உணர்த்தவும் முற்பட்டவர்கள்

இந்த
அம்பு
இராம பக்தர்களின் கைகளிலிருந்து
இராவண திசை நோக்கி
குறிவைக்கப் படுகிற அம்புகளில் ஒன்று
என்பதை
உணர்ந்து திருந்துதல் நல்லது.

கவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப்
பெரும்பகுதித் தமிழர்களுக்கு
அறிமுகமானவர்,
நவராத்திரித் தமிழனை
தசாவதாரத்தால்
முறியடிக்கவும் முயன்றுபார்த்தவர் கமல்.

இந்த மன்மத அம்புவின்
வாயிலாக
தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை,
தாய்த் தமிழை
இழிவு செய்வதில்
உயிரே.. மணிரத்னம், அங்கவை சங்கவை
புகழ் சுஜாதா ஆகியோரைத்
தாண்ட முயற்சி
செய்திருக்கிறார்.

"தமிழ் சாகுமாம்
தமிழ் தெருப் பொறுக்குமாம்.
வீடிழந்து, நாடிழந்து,
அக்காள் தங்கைகளின்
வாழ்விழந்துஞ்
ஏதிலிகளாய் இடப்பெயர்வுற்றுஞ்
கொத்துக் கொத்தாய்
தம்
சொந்தங்களை
மொத்தமாய்ப் பலியெடுத்த
கொடுமைகளுக்கு
இன்னும் அழுதே முடிக்காத
அவர்கள் வாழும் (அ) பிழைக்கும்
இடத்திற்கே போய்..

பனையேறி விழுந்தவரை
மாடு
மிதித்ததைப் போலஞ்
வாடகை வண்டி ஓட்டுகிறவராக
ஓர் ஈழத் தமிழரை.. தங்களிடம்..
பாத்திரம்.. பிச்சைக் கேட்பவராக..
கதா பாத்திரமாக்கி..
ஒரு செருப்பாக அன்று..
இரு செருப்பாகவும்
என்று
கெஞ்ச வைத்து..
இறுதியில்

அந்த எங்கள்
ஈழத் தமிழரை
செருப்பால் அடிக்கவும்
ஆசைப்பட்டு ஏதோவோர்
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ள
முயன்றிருக்கிறீர்களே
கமல்!

அது என்ன ஆத்திரம்!
போர்க்குற்றவாளியாகிய அந்தக்
கயவனின் தானோடு ஆடுகிற
சதைதானா உங்களுடையதும்! ஆம்..
சதைதானே உங்களுடையதும்!
அந்த உலகநாடுகளில் போய்.. பாருங்கள்.

அங்குள்ள கோயில்களில்
கழுத்துகள் நிறைய, கைகள் நிறைய
தங்க நகைகளாய்த் தொங்க விட்டு
உங்களவர்களை அர்ச்சகர்களாக
அவர்களைப் பார்த்து, பாதுகாத்து மகிழ்வதை!

தங்கள் பிள்ளைகளுக்கான
பரதநாட்டிய பயிற்சிக்காவும்,
அரங்கேற்றத்திற்காகவும்
இலட்சம் இலட்சமாய்க் கொட்டிக்
கொடுத்து அழைத்து, வரவேற்று,
சுற்றிக் காட்டி, கண்கலங்க
வழியனுப்பி வைத்து நெகிழ்வதை!

இந்தப் படம் எடுக்கப்போன
இடங்களில் கூடஞ் நீங்கள்
பெரிய்ய நடிகர் என்பதற்காக
உங்களுக்காக
தங்கள் நேரத்தை வீணாக்கி
தாங்கள் சம்பாதித்த பணத்தை வீணாக்கி,
எவ்வளவோ உதவியிருப்பார்களே!
அத்தகைய பண்பாடு மிக்க
எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு
நீங்கள் காட்டுகிற
நன்றி இதுதானா கமல்!
செருப்புதானா கமல்!

ஈழத் தமிழ் என்றால்
எங்களுக் கெல்லாம்
கண்ணீர்த்
தமிழ்!
குருதித்
தமிழ்!

இசைப்பிரியா என்கிற
ஊடகத் தமிழ்த்தங்கை
உச்சரித்த
வலிசுமந்த
தமிழ்!

ஆனால்.. உங்களுக்கு மட்டும்
எப்படி கமல்
அது
எப்போதும்
நகைச் சுவைத்
தமிழாக மட்டுமே
மாறிவிடுகிறது!

பேசி நடிக்கத் தமிழ் வேண்டும்.
தாங்கள் நடித்த
படத்திற்குக் கோடிகோடியாய்
குவிக்க.. தமிழனின் பணம்
வேண்டும்.
ஆனால்

"அவன் தமிழ்
சாக வேவண்டும்
அவன் தமிழ்
தெருப் பொறுக்க
வேண்டும்."
தெருப் பொறுக்குதல்
கேவலமன்று.. கமல்.
அது
தெருவைத் தூய்மை
செய்தல்!

தோட்டி என்பவர்
தூய்மையின் தாய்..
தெருவை மட்டும் தூய்மை
செய்தவர்கள் இல்லை..

நாங்கள்
உலகையே
தூய்மை செய்தவர்கள்..
"யாதும் ஊரே யாவரும்‘
கேளிர்' என்று
உலகையே பெருக்கியவர்கள்

உங்கள்.
எங்களைப் பார்த்து
செருப்பைத் தூக்கிக்
காட்டிய
கமல் அவர்களே..
உங்களை
தமிழ்தான்
காப்பாற்றியது.
பசி நீக்கியது. நீங்கள்
வாழ்கிற வீடு, நீங்கள் போகிற
மகிழ்வுந்து,‘
நீங்கள் உடுத்துகிற உடை
அனைத்திலும்..

உங்கள்
பிள்ளைகள் படிக்கிற
படிப்பில்.. புன்னகையில்
எல்லாம்
எல்லாம்!

கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட
எங்கள்
ஈழத் தமிழ் உறவுகளின்
சதைப் பிசிறுகள்

இரத்தக் கவுச்சிகள்
அப்பிக் கிடக்கின்றன.
அப்பிக் கிடக்கின்றன.
மோந்து பாருங்கள்.

எங்கள் இரத்த வாடையை
மோந்து பாருங்கள்
மோந்தாலும்.. எங்கள் இரத்த வாடையை மீறி
உங்கள்
படத்தில் வருகிற கைபேசியின் மேல்
வருகிற
மூத்திர வாடைதானே உங்களுக்கு
அதிகமாய் வரும்.
கமல்..

நகைச்சுவை என்பது
கேட்கும் போது
சிரிக்க வைப்பது!
நினைக்கும் போது
அழ வைப்பது!

ஆனால் உங்கள்
நகைச்சுவை
செருப்பால் அடித்து
எங்களைச்
சிரிக்கச் சொல்கிறதே!

இதில் வேறு வீரம்..
அகிம்சைக்கான
வியாக்யானங்கள்!

அன்பான கமல்..
கைநாட்டு மரபிலிருந்து எங்களைக்
கையெழுத்து மரபிற்கு
அய்யாவும் அண்ணலும்
கரையேற்றி விட்டார்கள்.

இனியும் உங்கள்
சூழ்ச்சி செருப்புகளை
அரியணையில் வைத்து ஆளவிட்டு
அழகு பார்க்க மாட்டோம்.
சீதையைப் பார்த்து

"உயிரே போகுதே'
பாட மாட்டோம்.
சூர்ப்பநகையின் மூக்கறுபட்ட
வன்மம் அள்ளித்தான்
"உயிரே போகுதே'
பாடுவோம்.

ஆம்.. கமல்
தாங்கள் சொல்லியபடி..
எம்
தமிழ்
தெரு பொறுக்கும்!

எவன்
தெருவில்
எவன் வந்து
வாழ்வது
என்று
தெரு பொறுக்கும்!

அப்புறம்
எவன் நாட்டை
எவன்
ஆள்வது
என்ற
விழிப்பில்
நாடும்
பொறுக்கும்.

அதற்கு
வருவான்‘
வருவான்
வருவான்
"தலைவன்
வருவான்!'

இந்தத் தலைப்பையாவது
கொச்சை செய்யாமல்
விட்டுவிடுவது நல்லது கமல்.

நீங்கள் பிறந்த இனத்திற்கு
நீங்கள்
உண்மையாக
இருக்கிறீர்கள் கமல்!

நாங்கள்
பிறந்த
இனத்திற்கு
நாங்கள்
உண்மையாக இருக்க வே‌ண்‌டா‌மா‌?

அன்புடன்
அறி‌வு‌மதி

 
Follow @kadaitheru