Monday, November 2, 2009

என்ன நடக்கிறது காஷ்மீரில்?"தீவிரவாதிகளை சமாளிக்க காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும். மாநிலமும் வளர்ச்சி அடையும்" - இப்படி ஒரு பேட்டி அளித்திருக்கிறார் ருக்சனா கவுசர் என்ற 21வயது காஷ்மிரை சேர்ந்த ஒரு இளம்பெண்.

ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அவர்களால், பாராட்டு பெற்றவர் இவர். அதற்க்கு காரணம்,காஷ்மீரில் ரஜோரி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தன் வீட்டில் நுழைந்த 2 தீவிரவாதிகளில் ஒருவரின் துப்பாக்கியைப் பிடுங்கி அவரை சுட்டுக் கொன்றுஇருக்கிறார் ருக்சனா கவுசர்.

இதற்கு பழிவாங்கும் விதமாக ருக்சனாவின் வீட்டில் சில தினங்களுக்கு முன் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினர். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்ப்படவில்லை.

பாதுகாப்பு காரணங்களுக்காக ருக்சனா ருக்சனா கவுசர் மற்றும் அவரது குடும்பத்தை டெல்லியில் தங்கவைத்து இருக்கிறது காவல்துறை.

ஜம்மு-காஷ்மீர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோ க்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70%, அடுத்து இந்துக்கள் 25%. மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர்.

காஷ்மீர் ஜம்முப் பகுதியுடன் இணைந்தது 1846இல். அப்போது ஜம்மு, டோ க்ரா அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு காஷ்மீர், சீக்கிய அரசனான ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். அப்போதைய டோ க்ரா அரசனான குலாப் சிங் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க ரகசியமாக உதவியதால், ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஜம்முவுடன் இணைத்து குலாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். குலாப் சிங்கால் அதற்கு ஒரு தொகையும் தரப்பட்டது. இந்து அரசனான குலாப் சிங்கின் நிர்வாகிகளில் 90%க்கும் மேல் இந்துக்கள். அவர்கள் காஷ்மீரிப் பிராமணர்களான பண்டிட்கள். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் 90% பேர். அப்போது அவர்களுக்குப் படிப்பறிவு மிகவும் குறைவு. விவசாயமும் பிற சிறு கைத்தொழில்களும்தான் அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள்.

டோ க்ரா வம்சத்தின் கொடூர ஆட்சிக்கான எதிர்ப்பு, இயக்கமானது 1931இல். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்கள் எதிர்ப்பை இயக்கப்படுத்தினார்கள். 13 ஜூலை 1931இல் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிகளை குலாப் சிங்கின் போலீஸ் படை சுட்டுக் கொன்றது. அதனால், 1932இல் 'ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் மாநாடு' என்னும் விடுதலைக்கான அமைப்பு உருவானது. அதன் நோக்கம், ஆங்காங்கே ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுமாக இருந்தது. 1938இல், அதன் பெயரைத் 'தேசிய மாநாடு' என மாற்றினார்கள்.

1946இல், 'டோ க்ரா ராஜாவே, காஷ்மீரை விட்டு வெளியேறு' என்னும் போராட்டம் வெடித்தது. 'சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை' என்னும் முழக்கம் தோன்றியது. தமது நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை ஆங்கிலேயர் 1947இல் இந்தியா-பாகிஸ்தான் என உருவாக்கிச் சுதந்திரம் வழங்கினர். அதே சமயம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். ஹைதராபாத் நிஜாமும் (முஸ்லிம்) காஷ்மீரின் ஹரி சிங்கும் (இந்து) தனித்திருக்க விரும்பினர்.

இந்து அரசனான ஹரி சிங் தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். .
அப்படிப்பட்ட சூழலில், ஹரி சிங்கின் அதிகாரிகள் ஜம்முப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நிர்வாகம் நிலைகுலைந்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட அப்துல்லா, சரிந்து வந்த அரசு நிர்வாகத்தைச் சீராக்கினார்.

26 அக்டோபர் 1947 அன்று நிபந்தனையுடன் கூடிய இணைப்புச் சாசனத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டார். பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவற்றை இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை ஏற்ற இந்திய அரசு மறுநாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், 'சட்டம், ஒழுங்கு சீரடைந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் மக்களின் சம்மதத்தை அறிந்து இந்தியாவுடனான இணைப்பு முடிவுசெய்யப்படும்' என அறிவித்தது. இந்திய ராணுவம் வந்ததும் தேசிய மாநாட்டுத் தொண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர்.
1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையில் 'ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்' என்று நேரு கூறினார். பின்பு, 31 டிசம்பர் 1947இல், ஐ.நா. சபைக்குக் கொடுத்த புகாரிலும் அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, ஐ.நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும், காஷ்மீரில் மற்ற மாநிலங்களை போல நிலைமை சீரடையாதது ஏன்?

காஷ்மீரில் நடப்பது என்ன? அங்குள்ள மக்களின் உணர்வுகள் என்ன?

சில வருடங்களுக்கு முன், அங்கு நேரில் சென்று, மக்களை சந்தித்த ஒரு பத்திரிக்கை குழுவினர் இவ்வாறு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் (நன்றி : காலச்சுவடு).

ஸ்ரீநகரிலும் அதனைச் சுற்றி 50-60 கிமீ வட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கும் நேரில் சென்று விவரங்களைச் சேகரித்தோம். ஸ்ரீநகரில் சையத் அலி ஷா கிலானி, இஸ்லாமிய மாணவர்கள், லீக் தலைவர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் (இதில் பண்டிட்களும் அடக்கம்), மற்றும் சில பேராசிரியர்கள் எனப் பலரைச் சந்தித்துப் பேசினோம். இரண்டு விஷயங்களை எங்களால் தெளிவாக உணர முடிந்தது.

ஒன்று, ராணுவத்தினரின் அடக்குமுறையும் ஆட்சியும். இரண்டு, இந்தியாவையும் இந்தியாவைப் பற்றியும் காஷ்மீரிகளின் கருத்து. அங்குத்

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதென்றாலும் நிர்வாகத்தின் பிடி ராணுவத்தின் கையில்தான் என்பதை உணரலாம். இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருப்பது சர்வசாதாரணமான காட்சி. எங்களுக்குப் பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் - இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட - பதில் சொல்லத் தேவையில்லை.

எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள். ராணுவத்தினரின் ஆணைப்படி நடக்கவில்லை என்றால், அந்தக் கிராமவாசிகளுக்கு ஆபத்து வந்துவிடும். . கடந்த 18 வருடங்களில் 80,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20,000 பேரைத் தீவிரவாதிகள் கொன்றனர். ராணுவம் கொன்றது 60,000 பேருக்கும் அதிகம். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆனால், சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ராணுவத்தினரின் அத்துமீறல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

இந்தியர்களும் தாங்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னும் காஷ்மீரிகளின் மனோபாவம்தான் அடுத்ததாக நாங்கள் கவனித்த முக்கியமான விஷயம். ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த எங்களை அவர்கள் 'நீங்கள் இந்தியர்கள்' என்று குறிப்பிட்டார்கள். இந்தியர்கள் வேறு, காஷ்மீரிகள் வேறு என்னும் எண்ணம் காஷ்மீரின் எல்லாத் தரப்பு மக்களிடமும் வயதினரிடமும் வலுவாக உள்ளது. 'இந்திய ராணுவம் அயல்நாட்டு ராணுவம். அது எங்கள் நாட்டை ஆக்கிரமித்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது' என்னும் கருத்தே அவர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவின் மேல் அவர்களுக்கு வெறுப்பும் விரோத மனோபாவமும்தான். இந்திய ராணுவமும் காஷ்மீர் மக்களைச் சொந்த நாட்டு மக்களைப் போலல்லாமல் அடிமைகளைப் போல நடத்துகிறது. ஜனநாயகப் போர்வையில் கொஞ்சம் கொஞ்சமாக எதேச்சாதிகார அரசாக இந்தியா மாறிவருகிறதோ என்னும் கேள்வி எழுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த நிலைமை உள்ளது. இவ்வாறு போகிறது அந்த அறிக்கை.

நம் தமிழகத்தில் எந்த மூலையில் ஒரு சிறு விபத்து நடந்தாலும் அதை ஒளிப்பரப்ப நமது டிவி சேனல்கள் போட்டிபோடுகிறார்கள். இது போல, ஏன் காஷ்மீரில் நடக்கும் விஷயங்கள், மக்களின் உணர்வுகள் வெளிவருவதில்லை?

காஷ்மீர் விவகாரத்தில் பத்திரிகையாளர்களுக்கு முழு சுதந்திரமும், உரிமையும் தரப்பட்டு இருக்கிறதா?

எப்படி நம்மால் இலங்கை தமிழர்களின் உண்மை நிலையை அறியமுடிவதில்லையோ அது போலவே நம் இந்தியாவிற்குள் இருக்கும் காஷ்மீர் மாநில நிகழ்வுகளை முழுமையாக அறியமுடிவதில்லை.

பஞ்சாப்பில், தனி மாநிலம் கேட்ட காலிஸ்தான் தீவிரவாத குழுக்களை ஆரம்ப கட்டத்திலேயே முறியடித்த நம் ராணுவத்தால் நக்சலைட்டுகளையும், காஷ்மீர் தீவிரவாதத்தையும் ஏன் இதுவரை தீர்க்க முடியவில்லை?

அதற்க்கு காரணம் அவைகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவே.

முதலில் காஷ்மீரில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் பாரபட்சமின்றி மீடியாவின், பிற பகுதி மக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டும்.

காஷ்மீரில் வேற்று மாநிலத்தவர்கள் யாரும் நிலம் வாங்கவோ, விற்கவோ கூடாது என்னும் சட்டம் உள்ளது. இது, அந்த மாநில மக்களை இந்தியாவிடம் இருந்து தனிமைப்படுத்துவதில் முக்கிய இடம் வகிக்கிறது. முதலில், இந்த சட்டத்தை நீக்கி,அங்கு பிற மாநில மக்கள் குடியமர்வதற்கு அரசு முயற்சிகள் எடுக்கவேண்டும்.

காஷ்மீர் நமது இந்தியாவின் ஒரு பகுதி, அது யாருக்கும் சொந்தம் இல்லை என்று நாம் சொல்வதைவிட, காஷ்மீரில் உள்ள மக்கள் சொல்லவேண்டும். அதற்க்கு, அங்கு வேலைவாய்ப்புகள் தரும் செயல் திட்டங்களை நமது மத்திய அரசு நிறைவேற்றவேண்டும். மக்களின் அன்பை,அபிமானத்தை பெறவேண்டும்.


ராணுவத்தின் செயல்பாடுகளை முறைப்படுத்தி, மக்களுக்கும் நமது ராணுவத்திற்கும் உள்ள இடைவெளியை போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். சிறிது சிறிதாக ராணுவ துருப்புகளை குறைத்து, நிலைமையை சீரடைய செய்யவேண்டும்.

தீவிரவாதத்திற்கு தீவிரவாதமே தீர்வு என்பது முட்டாள்தனமானது. காஷ்மீர் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி தருவதாலேயே அங்கு நிலவும் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்த்துவிட முடியாது. அது திடிரென்று மீடியாக்களாலும், காவல்துறையினராலும் புகழ் அடைந்த ஒரு அறியா கிராமத்து பெண்ணின் பேச்சு என எடுத்துகொள்வதே சரி.

அங்கு நிலவும் முடிவற்ற போராட்டத்தில் நாள்தோறும் உயிர்த்தியாகங்கள் செய்யும் நமது ராணுவ வீரர்கள், அசாதாரணமான சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு இருக்கும் காஷ்மீர் மாநில பொருளாதாரம் மற்றும் அப்பாவி மக்களை தங்களது சுயநலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளும் தீவிரவாத அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒரு நல்ல,நிரந்திர தீர்வு வேண்டும்.

தீவிரவாதத்திற்கு அடிப்படை காரணங்கள்..பொருளாதார ரீதியான புறக்கணிப்புகளும், வேலை வாய்ப்புகள் இல்லாததும் மற்றும் அடிப்படை உரிமைகள் மறுக்கபடுவதும்தான் என்பதை நாம் அனைவரும் உணரவேண்டும்.

கடைக்காரர் கமெண்ட்:
விடுதலை அடைஞ்ச அப்புறம் நாட்டுல எவ்வளவோ விஷயங்கள் மாறிடிச்சு..ஆனா இன்னும் மாறாம இருக்கறது அரசியல்வாதிங்களோட சுயநலம்தான்..

காஷ்மீர் முதல் நம்ம கன்னியாகுமரி வரை இருக்குற எல்லா மக்கள் பிரச்சினைக்களுக்கும் முழு காரணம் அதுதான்ங்க..

பதிவு : இன்பா

1 comments:

Srinivas said...

Details are good. But i feel we,ourself not sure what kind of move we have to take in Kashmir.

 
Follow @kadaitheru