Thursday, December 31, 2009

கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை - பாரதியாரின் முதல் சொற்பொழிவு


முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார். அரசியல் வாழ்க்கையைத் துறப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டொரு இடங்களில் மட்டுமே உறைவதாகவும் தாம் எழுதுவதையும் பேசுவதையும் சி. ஐ. டி துறையின் தணிக்கைக்கு உட்படுத்த உடன்படுவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பேரில் 14 டிசம்பர் 1918இல் விடுதலை செய்யப்பட்டு, தம் மனைவியின் சொந்த ஊரான கடையம் சென்றார் பாரதி.

1919 ஜனவரி 30இல் தம் எட்டயபுரம் நண்பர் ஒருவருக்குக் கடையத்திலிருந்து பாரதி எழுதிய கடிதத்தை ரா.அ. பத்மநாபன் வெளியிட்டுள்ளார். 1919 மே 2 அன்று எட்டயபுரம் மன்னருக்குப் பாரதி எழுதிய ஓலைத்தூக்கும் கிடைக்கிறது.
இவற்றுக்கு இடைப்பட்ட காலத்தில் பாரதி சென்னைக்கு வந்திருக்கிறார். மணி அய்யர் என்று அழைக்கப்பட்ட எஸ். சுப்பிரமணிய அய்யரின் தலைமையில் சென்னை விக்டோரியா பப்ளிக் ஹாலில் 2 மார்ச் 1919 ஞாயிற்றுக்கிழமையன்று உரையாற்றியிருக்கிறார். சிறையிலிருந்து விடுதலையான பின்பு பாரதி கலந்துகொண்ட முதல் பொதுநிகழ்ச்சி இதுவேயாகலாம்.

எஸ். சுப்பிரமணிய அய்யர் (1842-1924) காங்கிரசின் முதல் மாநாட்டில் (1885) கலந்து கொண்டவர். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி. அன்னி பெசண்டின் பிரம்ம ஞான சபையிலும் ஹோம் ரூல் இயக்கத்திலும் முக்கியப் பங்காற்றியவர். ரவுலட் சட்டத்தைக் கண்டித்தவர். பாரதி சிறைபட்டபொழுது அவர் விடுதலை பெற முயன்றவர்களில் இவரும் ஒருவர்.

பாரதி தம் இறுதிக் காலத்தில் கொண்டிருந்த தத்துவ, ஆன்மிகப் போக்கை இவ்வுரை புலப்படுத்துகிறது. இதில் பாரதி வெளிப்படுத்தும் கருத்துகள் ‘பாரதி அறுபத்தாறு’ என அறியலாகும் பாடல்களோடு ஒத்திசைகின்றன.


இவ்வுரையினிடையே பாரதி பாடிய இரணியன்-பிரகலாதன் தொடர்பான பாடல் ‘பாரதி அறுபத்தா’றில் (பாடல் எண்: 15) இடம்பெறும் செய்யுளாகலாம். இதன்வழி ‘பாரதி அறுபத்தாறு’ பாடல்கள் இயற்றப்பட்ட காலத்தைக் கணக்கிடலாம்.

திரு. சுப்பிரமணிய பாரதி, தாம் இயற்றிய தேசபக்திப் பாடல்களைக் கணீரென்ற குரலில் பாடியவாறு தம் உரையைத் தொடங்கினார்.

காலச்சுவடு இதழில் முதன்முறையாக அச்சில் வந்த பாரதியின் உரை இங்கே....

‘எல்லா உயிர்களும் ஒன்று’ என்பதை அவர் முதலில் ஸ்தாபித்தார். சக்தி இல்லாமல் வஸ்து இல்லை, வஸ்து இல்லாமல் சக்தி இல்லை’ என்றார் ஹாக்கெல். இவ்வுலகை வியாபித்திருக்கும் தெய்வாம்சத்தின் - பிரபஞ்சசாரத்தின் - இரு அடிப்படையான தன்மைகள் வஸ்துவும் ஜீவனுமாம். (ஹாக்கெல் எழுதிய) ‘புதிர்’ பிரசுரமான பிறகு வேதியியலில் பல முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஹாக்கெல் தம் ‘புதிர்’ என்ற நூலைப் பிரசுரித்தபோது அணுக்கள், எலெக்ட்ரான்கள் பற்றிய நவீனக் கோட்பாட்டையும் அதன் முழு முக்கியத்துவத்தையும் கணக்கிலெடுத்துக்கொள்ள இயலவில்லை. வஸ்துவின் பிளவுபடாத்தன்மையை எலெக்ட்ரான் கோட்பாடு மிகத் தெளிவாக நிறுவியுள்ளது. மிக அடிப்படையான கூறு மின்தன்மை உடையது என்பது கண்டறியப்பட்டு, வஸ்து என்பது சரீரமற்ற மின்தன்மைகளின் கூட்டு என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ‘சரீரமற்ற’ எனில் அலௌகீகம் எனப் பொருள்படும்.

லார்மர் மற்றும் லாரெஞ்சு, தாம்சன் மற்றும் ஆலிவர் லாட்ஜ் ஆகியோரின் ஆராய்ச்சிகளின் மொத்த விளைவு என்னவென்றால் ‘வஸ்து’ என்பது சக்தியின் செம்மைப்படாத வடிவம் என்பதே. சக்தி என்பது மனத்தின் வெளிப்பாடே என்றும் பிரசங்கி மேலும் கூறினார். வஸ்துவின் முந்திய நிலையே சக்தி என்பதால், மனமே சக்தியின் மூல வடிவமாகும். ஒரு தனி மனம் பிரபஞ்சமாக வெளிப் படுவதில்லை; எல்லாம் தழுவிய பிரபஞ்ச மனமே எப்போதும் தன்னை வெவ்வேறு பிரபஞ்ச - பௌதீக, ஜீவாதாரமான, மனரீதியான, ஆன்மிக - மண்டலங்களாக வெளிப்படுத்திக்கொள்கின்றது. நெருப்பும் வெப்பமும் எங்கும் பொதிந்துள்ளது போலவே, உயிரும் பிரக்ஞையும் பிரபஞ்சத்தில் பொதிந்துள்ளன; ஆனால் சில குறிப்பிட்ட சூழல்களில் மட்டுமே அவை செயல்பட்டு வெளிப்படுகின்றன.

அணுவின் பிரக்ஞை பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்தவர்கள்கூட ஒரு மனிதன் அல்லது தவளைக்கு இருப்பதுபோல் ஓர் அணுவுக்குப் பிரக்ஞை உண்டு என்று கூறமாட்டார்கள். மனம் என்பது சக்தியின் ஒரு வடிவம் என்றார் ஹாக்கெல்; சக்தியே மனத்தின் வெளிப்பாடுதான் என்பதைப் பிரசங்கி நிறுவிக்காட்டினார்.

‘எல்லாம் ஒன்றே. எல்லாம் கடவுள்’ என்பதே ஸ்பினோஸா, கொய்தே, ஷொப்பன்ஹைர், ஷெல்லி ஆகியோரின் நிலைப்பாடு. வேத, உபநிஷத்துகள் மற்றும் எல்லா மதங்களின் ஞானிகள், புலவர்களின் நம்பிக்கையும் அதுவே. இக்கோட்பாட்டை உணர்த்தும் இரணியன், பிரகலாதன் பற்றிய ஒரு தமிழ்ப் பாடலையும் பிரசங்கி பாடினார். நித்தியத்தின் இன்பத்தை அறிந்தவர்க்கு அச்சம் இல்லை. எல்லா உயிர்களின் ஒருமைத் தன்மையும் தெய்வத்தன்மையும் உலக மதங்கள் எதனுடையதன் சாரத்திற்கும் பொருந்தாததன்று. இந்திய துவைதத்தில் சைவ, வைணவ வழிபாட்டு முறைகள் இதற்குப் போதுமான உதாரணங்களாகும். இவ்வுலகம் கடவுளின் வடிவமல்ல, அவனுடைய சிருஷ்டியே ஆகும் என்றாலும்கூட இவ்வுலகின் தெய்வத்தன்மையை எவரும் மறுக்க இயலாது. கடவுளின் கைவண்ணம் தெய்வீகமானதாகவே இருக்கவியலும். தந்தை கடவுளாயிருக்கும் பட்சத்தில் மைந்தன் தவளையாக இருக்க முடியாது.


எவர் ஒருவரும் கடவுளின் மைந்தனாகும் பட்சத்தில் அவனும் கடவுளேயாவான். விஷ்ணு புராணம், ‘நீயே சூரியன்; நீயே கிரஹங்களும்; வடிவம் கொண்டதும் கொள்ளாததும்; காணப்படுவதும் காணப்படாததுமான அனைத்தும் நீயே’ என்று விஷ்ணுவை நோக்கிப் பரவுகின்றது.


வசிஷ்டர் முதல் வாமதேவர்வரை, அரவிந்த கோஷ்முதல் ஸ்ரீமதி அன்னி பெசண்டுவரை ஆன்மிக தேசியவாதிகள் அனைவரும் உண்மையை அதன் தூய வடிவில் நேருக்கு நேர் கண்டனர். ‘இந்த ஒருமைத் தன்மையை அறிவது, எல்லாத் தத்துவங்களின் நோக்கம் மட்டுமல்ல, இயற்கை பற்றிய முழு ஞானத்தின் நோக்கமுமாகும். இறைவனும் உலகமும் ஒன்றே என்ற கோட்பாட்டைச் சில ஞானிகள் கண்டஞ்சியதற்குக் காரணம் பிரபஞ்சம் அழியக் கூடியது, கடவுள் அழியாதவர் என்று அவர்கள் கருதியதாலேயாகும்.

எல்லா வஸ்துக்களும் எல்லா ஜீவன்களும் ஒன்றேயாகவும் தெய்வீகமானவையாக - சமஅளவில் தெய்வீகமானவையாகையால் மனிதர்கள் தேவ, தேவதைகளை அணுகுவதைப் போலவே மக்கள் அனைவரும் எல்லா வஸ்துக்களையும் ஜீவன்களையும் அணுக வேண்டும். உலகின் பல்வேறுபட்ட தன்மையை, அதாவது கடவுளின் எண்ணற்ற வடிவங்களை அவை எதிர்ப்படும் வகையிலேயே கருத வேண்டும். எல்லா வடிவங்கள், வஸ்துக்களின் அடிப்படையான ஒருமையையும் சம தெய்வீகத்தன்மையையும் உணரும் அதே வேளையில் பரிணாம வளர்ச்சியின் படிநிலைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். எல்லாமே தெய்வீகம் என்பதால் சக மனிதரைக் கொல்வதோ ஏன் அடிப்பதோகூடத் தெய்வக் குற்றமும் பாவமுமாகும்.

ஆனால் ஒரு கல்லை உடைப்பதென்பது பாவமன்று. ஏனெனில் மனிதருள் உள்ள கடவுள் காயப்படுவார்; கல்லினுள் உள்ள கடவுள் காயப்படுவதில்லை. எந்த ஒரு சிருஷ்டியையும் தார்மீகமற்றதெனக் கூறக் கூடாது. எல்லாமே தெய்வீகமானதால், அனைவரும் கடவுளைப் போல் சிந்தித்து, பேசி, செயல்பட வேண்டும். பிரசங்கி பின்வரும் வார்த்தைகளுடன் தன் பேச்சை நிறைவு செய்தார்.

‘நாம் எல்லாரும் கடவுளராக உறுதிபூண்டு வேத தீர்க்கதரிசனத்தை மெய்ப்பிப்போம்'.

எல்லாச் சூழ்நிலைகளிலும் நன்மை, அன்பு, வலிமை, உறுதி, விடுதலை, அச்சமின்மை ஆகியவற்றைக் கொண்டிருப்போம். நீங்கள் உங்கள் தெய்வத்தன்மையை உணர்ந்து மற்றவர்களையும் தெய்வங்களாக நடத்தினால் அவர்களும் அவ்வாறே செய்வார்கள். ஏனெனில் அன்பு அன்பை ஈனுகிறது. எந்த உயிரையும் பறிக்காதீர். ஏனெனில் இயற்கை உங்கள் உயிரையும் பறித்துவிடும். எவரையும் துன்புறுத்தாதீர். எல்லார்மீதும் அன்பு செலுத்துக!’

(‘தி ஹிந்து’, 4 மார்ச் 1919).

(நன்றி: திரு.ஆ.இரா. வேங்கடாசலபதி ).

வாசக நண்பர்களுக்கு எங்கள் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

0 comments:

 
Follow @kadaitheru