Monday, December 14, 2009

மனிதனை ஆளப்போகும் எறும்புகள்


இந்த மாத துவக்கத்தில் பெய்த புயல் மழையில் என் மாடித் தோட்டம் பாதிப்புக்கு உள்ளாகியது. அதில் வசித்து வந்த ஒன்பது வகை எறும்பு இனங்களின் வாழ்விடங்கள் முற்றிலும் நாசமாகியது.90,000 எறும்புக் குடும்ப உறுப்பினர்கள் அடித்து செல்லப்பட்டனர். கரு முட்டைகள் கூமுட்டைகள் ஆகின.மழை ஓய்ந்த மறுநாள் எஞ்சிய எறும்புகள், மிகத் துடிப்புடன் புதிய புற்றுகள் அமைப்பதில் ஈடுப்பட்டு இருந்தன. மனிதனை போன்று ஒய்ந்து போய்விடவில்லை. அரசு உதவிக்காக காத்திருப்பது போன்றோ, நாட்களை கடத்தவில்லை. உடனடி செயல்பாட்டில் இறங்கிய அதன் உத்வேகத்தை, அதனிடம் கடிபட்ட போது உணர முடிந்தது.

எறும்புகள் இவ்வுலகிற்கு வந்து நூறு மில்லியன் ஆண்டுகள் ஆகின்றது. வெற்றி கொண்ட அழியா பூச்சி இனம், என்ற வரிசையில் இது இரண்டாம் இடம் வகிக்கிறது. முதல் இடம் பெற்றது கரப்பான் பூச்சி. 20,000 வகை உண்டு என்றும் இது அறுதி இடாத தகவல் என்று அறிவியல் கூறுகிறது. கும்பல் கும்பலாக வாழும் இவை, தலை சிறந்த சமூக அமைப்பின் அடையாளம். ஒரு கும்பலில் ஆண், ராணி, பெண் உழைப்பாளிகள் என கட்டாயம் மூன்று வகை உண்டு. பெண் உழைப்பாளிகளில் பல வேலைக்கார எறும்புகளாகவும் ,சில போர் புரியும் ராணுவ வீரர்களாகவும் செயல் படும் உட்பிரிவு உண்டு.


கும்பலாக வாழும் இவை பல்வேறு வகை எறும்பினங்களையும் கூட்டாக சேர்த்துக் கொள்கின்றன. அவை ஒவ்வொன்றும் தங்களுக்குள் சிறு குழுக்களை ஏற்படுத்தி அரசாளுகின்றன. அவை வசிக்க தங்களுக்கென தனி வீடுகளை அமைத்துக் கொள்கின்றன. இவை புற்றுகள் என அழைக்கப் படும். இப்புற்றுகள் சகதி மண், களிமண் கொண்டு அமைக்கப்படும். வேறு சில வகை எறும்புகள் சிறு குச்சி, களிமண் உருண்டை கொண்டு பூசி கட்டும். அமேசான் காடுகளில் வாழும் எறும்புகள், 15 அடி உயர மலை போன்ற அமைப்புடைய புற்றுகளை கட்டுகின்றன.

இது மழையாலோ ,காற்றாலோ ,வேறு விலங்குகளாலோ பாதிப்புக்கு உள்ளாகாதவாறு இறுக்கம் கொண்டிருக்கும். ராணுவ கேந்திர மையம் போல அமையப் பெற்றிருக்கும் இப்புற்றுகளில் பல சுரங்க வழிகள், அறைகள் உண்டு.குழந்தைகளை பேணிக் காக்க, உணவு சேமித்து பாதுகாக்க, ஓய்வெடுக்க என பல அறைகள் ஒதுக்கப் பட்டு அறிவியல் நுட்பத்தோடும், கலை நயத்தோடும் அமையப் பெற்றிருக்கும்.இவ்வகையான கட்டமைப்பை வேலைக்கார எறும்புகள் செய்கின்றன. இவைகளுக்கு உதவியாக படை வீரர்கள் உதவி புரிகின்றன.


ஒரு சோகமான விஷயம் என்னவெனில் இவ்வகை எறும்புகளுக்கு என எந்த அறையும் ஒதுக்கப் படுவதில்லை. ஓய்வெடுக்க கட்டை இடுக்குகளையும், சுவரின் விரிசல்களையும் இவை தேர்ந்தெடுக்கின்றன. கூட்டமாக சென்று வேட்டையாடி உணவு சேமிப்பதும் , புதிய வாழிடங்களை உருவாக்கி தருவதிலும், ஈடுபடும் இவை எப்போதும் தனித்து இயங்குவதே கிடையாது. சில சந்தர்பங்களில் மாற்று புற்றுகளுக்கு சென்று, வேட்டையாடி கரு முட்டைகளை திருடி வந்து பேணிக்காக்கின்றன. அவற்றிலிருந்து வரும் எறும்புகள், இளமை பருவம் முதல் அடிமை சிந்தனையுடன் வளர்க்கப் படுகிறது. முழு வளர்ச்சி அடைந்த பிறகு சேவகம் புருவதில் தங்கள் வாழ் நாளை கழிக்கின்றன.

கும்பலில் உள்ள பெண் எறும்பே ராணி எறும்பு .கரையான், தேனி போன்று இங்கு உயிரியல் அந்தஸ்து காணப்படுகிறது. ஆணின் முக்கிய வேலை, உடலுறவு கொள்ளுதல்.அதிக சக்தி விரயம் ஆவதால் இவை பெரும்பாலும் 2 வாரங்களில் இறந்து விடுகின்றன. பெண் எறும்பு நீண்ட நாட்கள் உயிர் வாழும். ஒரு முறை பருவத்திற்கு வந்து பாலுறவு கொண்டவுடன், முட்டையிடுவதே இதன் பிரதான வேலை.


தன் வாழ்நாள் முழுதும் லட்சக் கணக்கான முட்டையிடும். ராணி இவ்வாறிருக்க பிற எறும்புகள் தங்கள் வேலைகளை யாருடைய கட்டளையும் இன்றி நிறைவேற்றும். பிற பூச்சி இனங்களை போன்று இவற்றிற்க்கும் 4 பருவ நிலை உண்டு. முட்டை , லார்வா, கூட்டுப் புழு, எறும்பு. ஆணோடு உறவு கொள்ள இவை வான் வெளியை தேர்ந்தெடுக்கும். பெரும்பாலும் வெயில் காலங்களிலும், இள வேனிற் காலங்களிலும் வானில் பறந்த படி இசையமைத்து ,நடனமாடி உறவு கொள்கின்றன. உறவானது சில நிமிடங்களே நீடிக்கும் என்றாலும், உறவுக்கான காதல் விளையாட்டு பல மணிநேரம் நீடிக்கும். பெண் பருவத்திற்கு வரும்போது இயற்கையின் கொடையாக இறக்கைகள் முளைக்கின்றன.உறவு முடிந்த உடன் பெண் தனது இறக்கைகளை உதிர்த்துவிடும்.


முட்டையில் இருந்து வெளிவரும் அனைத்து பெண் எறும்புகளும் பருவமடைந்து, கருவுறுவது கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வகை எறும்புகள் மட்டுமே கருவுறுகிறது. பதவிச் சண்டை என வரும்போது அது பெரும் பாலும் தாய்க்கும், மகளுக்குமே நிகழுகிறது. சில வேளைகளில் தாயானது விரட்டி அடிக்கப்படும் மகளுக்கும் சில நேரம் இப்படி நேரும் . பிரிந்த பெண்ணானது தனியே சென்று தனக்கென கும்பலை உருவாக்கி அரசாள்கிறது.


எறும்புகள் உடல் மூன்று பகுதிகள் கொண்டது. தலை, உடல், மற்றும் பின் பகுதி.இவற்றிர்க்கு ஆறு கால்களும் நடுப்பகுதியும் உடல் எனப்படும். தலைப்பகுதியில் வாய், கண் மற்றும் உணர்வுக் குழல்கள் உண்டு.இதன் கண்கள் பல லென்சுகளை கொண்டது .எனவே இவற்றால் ஒரு பொருளை பல கோணங்களிலும் ஆராய முடியும். வாய் பகுதி கூரிய ரம்பம் போன்று இருக்கும் . இவற்றை கொண்டு இலைகளை கவ்வுவதும், துண்டாக்கி புற்றுக்கு கொண்டு செல்லவும் முடிகிறது. தீ எறும்புகள் ,இவ்வகையான செயல்களில் அதிகம் ஈடுபடும். உணர்வுக் குழல் மூலம் ,சுவை, மணம், சத்தம் போன்றவற்றை உணர முடிகிறது.


பின் பகுதியில் வயிறும், மலப் புழையும் உண்டு. பல எறும்பு வகைகளுக்கு இங்கு தான் விஷ நீர் சுரப்பியும் , கொடுக்கும் உண்டு. இதை கொண்டு தன்னை விட பத்து மடங்கு எடை கொண்ட உயிரினத்தையும் வீழ்த்த முடியும். எறும்பிற்கு குடல் கிடையாது. பெரும்பாலும் உறிஞ்சி உண்ணுகின்றன. கர்ப்ப காலத்தில் மட்டும் ,பெண் எறும்புகள் புரதம் கலந்த உணவை உண்ணுகின்றன. பிற வகை எறும்புகள் "சுக்ரோஸ்" கலந்த இனிப்பு உணவையே எடுத்துக் கொள்ளும். நீரை பருகும் இவை பனி நீரை அதிகம் விரும்பிகின்றன.தன் உடல் முழுதும் காணப்படும் துளைகள் மூலமே இவை ஆக்ஸிஜனை உறிஞ்சி கார்பன்-டை- ஆக்ஸைடை வெளிவிடுகின்றன.ரத்த அணுக்கள் கிடையாது. எனவே இவைகளின் ரத்தம் நிறமற்றவை.
இதயம் நீண்ட குழாய் வடிவில் இருக்கும். இதிலிருந்து வெளியேறும் நீரே ரத்தம் என்கிறார்கள். இது மூளையிலிருந்து வெளியேறி இதயத்திற்கு செல்லும். நரம்பு மண்டலம் மூலமாக மீண்டும் மூளைக்கே சென்றுவிடும். இவ்வகை நரம்பு மண்டல அமைப்பு மனித நரம்பு மண்டலத்தை ஒத்திருக்கிறது.


தங்களுக்குள் நிகழும் உரையாடலையும், கருத்து வெளிப்பாடையும் ,உணர்வுக் குழல்கள் மூலம் வெளிப்படுத்துவதோடல்லாமல் தொடுதல், தடவுதல், அணைத்தல் என அங்க மொழியையும் பயன் படுத்துகின்றன.இம் மொழி தன் கூட்டத்தை சார்த்த உறுப்பினர்களை அடையாளம் காணவும் உதுவுகிறது.இதை தவிர "பிரமோன்ஸ் " என்ற நீரையும் பீய்ச்சி விட்டு செல்லும். இதை நுகர்ந்த வாறு அந்த எறும்பை பிற எறும்புகள் பின் தொடரும். பிற இனங்கள் விலகிக் கொள்ளும்.மீறி நுழைபவர்களும், வழிதவறியவர்களும் கொல்லப் படுவார்கள்.


அமெரிக்கா, உள்ளிட்ட ஏராளமான ஐரோப்பிய நாடுகளில் இவற்றை எப்படி அழிக்கலாம் என பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்தியாவில் அவ்வாறில்லை .எனினும் பல வேதியியல் பொருட்கள் கொல்வதற்கு பயன் டுத்தப்படுகின்றன.

ராகுல சாங்கிருத்தியாயன், தனது பயண குறிப்பேட்டில் மனித சமுதாயம் கம்யூன் அமைப்பு மூலமே வளர்ச்சி அடைந்து ஆளும் தன்மையை பெற்றிருக்கிறது.இவ்வமைப்பு உடையும் போது அவன் அழிவும் துவங்குகிறது என்கிறார். மனிதன் கைவிட்ட நிலையில் யானை உள்ளிட்ட பேருயிர்களும் ,எறும்பு போன்ற சிற்றுயிர்களும், இவ்வமைப்பை மையமாக கொண்டே வாழந்து வருகின்றன.அவை நம்மை ஆளும் நாள் வருமேயானால்....?

கற்பனை செய்து பாருங்கள்!


கடைக்காரர் கமெண்ட்:
எறும்புங்கள பாக்கும்போது இத்தனை பெரிய மனிதனுக்கு இத்தனை சிறிய அறிவு இருக்கு பாட்டு ஞாபகம் வருதுஙக.






(நன்றி :எஸ்.கிருஷ்ணன் ரஞ்சனா,உயிர்மை)

படங்கள்,பதிவு : இன்பா

1 comments:

Loganathan - Web developer said...

எறும்புகளைப் பற்றி இவ்வளவு சுவாராசியமான தகவலா? அருமை. எறும்புகள் போல உழைப்பை நாம் எங்கும் பார்க்க முடியாது.

 
Follow @kadaitheru