"உனக்கு பின்னால் இருக்கிற தலைமுறையை உத்து பார். டிவி சீரியல் பார்த்து வளர்ந்த ஒரு பலகீனமான தலைமுறை தெரியும். உன் ஐடியாலாஜி எல்லாம் அவங்ககிட்ட எடுப்படாது " - இது குருதி புனல் படத்தில் ஒரு காட்சியில் கமல் , தீவிரவாதி நாசரிடம் பேசும் வசனம்.
தமிழகத்தில் டிவிகளின் தாக்கம் பற்றி நான் படித்த கட்டுரையை இங்கே அப்படியே தருகிறேன்.
பொழுதுபோக்கை மையமாக வைத்துக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைக்காட்சி, இன்று நம் அனைவரின் வாழ்விலும் தொலைந்து போன காட்சிகளைத்தான் காண்பித்துக் கொண்டிருக்கிறது. தொலைக்காட்சியைப் பார்த்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களும் உண்டு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வட இந்தியர்களை விட தென்னிந்தியர்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும், தமிழகத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், அதிலும் குறிப்பிட்ட 3 சானல்களை 54 சதவீதம் பேர் பார்ப்பதாகவும் தனியார் நிறுவனம் ஒன்றின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
கேரளத்தில் இது 4 எபிசோடுகளாக உள்ளதாகவும், பிற்பகலில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில் கேரளம், கர்நாடகத்தை விட தமிழகமும், ஆந்திரமும் தான் முன்னணியில் உள்ளதாகவும்,அதிலும் முன்னணில் இருப்பவர்கள் பெண்கள் என்றும் அந்தப் புள்ளிவிவரம் மேலும் தெரிவிக்கிறது.
தொலைக்காட்சிகளால் நம்மவர்கள் அடைந்த பயன்தான் என்ன? பக்கத்து வீடுகளுடனான தொடர்பும், சச்சரவுகளும் குறைந்துள்ளது. கொலையும், கொள்ளைகளும், வீடுகளில் பிரச்னைகளும் அதிகரித்துள்ளன என்பது தான் பதில்.
பெண்களையும், தொடர்களையும் மையமாக வைத்தே இன்றைய டிவி சேனல்கள் தொடங்கப்பட்டு இயங்கி வருகின்றன. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கொலைக்காட்சிகளாகத்தான் இருக்கின்றன என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.
நல்ல நிகழ்ச்சிகளை வழங்கும் டிவி சேனல்களுக்கு நம்மிடையே பெரிய அளவில் வரவேற்பில்லை என்பதும், இந்த தொலைக்காட்சி தொடர்களின் ஆதிக்கத்துக்குக் காரணம். பெண்களை மட்டுமன்றி குழந்தைகளையும் கவரக்கூடிய வகையில் ஏராளமான டிவி சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிஞ்சுக் குழந்தைகளின் மனதில் நஞ்சை விதைப்பதாகத்தான் உள்ளன.
சிறுவயதிலேயே டிவிக்கு அடிமையாகும் குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு உள்ளாவதாகவும், மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை வீதியில் கொண்டாடிய காலம் போய் இன்று டிவியில் பார்த்து ரசிக்கிற காலத்தில் இருக்கிறோம். பண்டிகைக் காலங்களில் கோயில்களுக்குச் செல்வது,உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று வருவது போன்ற பழக்க வழக்கங்கள் எல்லாம் இன்று நம்மிடம் இருந்து மறைந்து போய்விட்டது (மறந்து போய்விட்டது) என்றே சொல்லலாம்.
"ஓடி விளையாடு பாப்பா" என்று சொன்ன கவிஞர் பாரதி வாழ்ந்த நாட்டில், இன்று நாம் டிவி முன் கூடி வாழ பழகிவிட்டோம்.
டிவி சேனல்கள்,இணையத்தின் வருகையால் இன்றைக்கு மைதானங்களில் விளையாடுவோரின் எண்ணிக்கையும்,தெருமுனைகளில் கதை பேசுபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.
தொலைக்காட்சிக்கு அடுத்தபடியாக இன்று ஏராளமானோரை தன்னுடைய கட்டுக்குள் வைத்திருப்பது இணையதளம். தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி என்று சொல்லக்கூடிய அளவுக்கு வளர்ச்சியையும்,வரவேற்பையும் பெற்றுள்ளது இணையதளம்.
அதன் விளைவு தான் மழைக்கு முளைத்த காளான்களைப் போன்று தோன்றியிருக்கும் தெருமுனை பிரவுஸிங் சென்டர்கள்.
சமூகத்தில் மாற்றங்களும்,இணையத்தால் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளன என்பதை ஒத்துக்கொள்ளும் அதே வேளையில் அதனால் ஏற்பட்டுள்ள சமூகச் சீரழிவுகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மணிக்கணக்காக டிவி மற்றும் இணையதளங்களின் முன் அமரும் பெரும்பாலன இளைஞர்கள் மனஅழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும்,
தவறான வழிகளில் செல்வதாகவும்.சிலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சுற்றத்தோடும்,உறவுகளோடும் வாழ்ந்தவர்கள் அக்கால மனிதர்கள். தொலைக்காட்சியோடும்,இணையத்தோடும் வாழ்ந்து கொண்டிருக்கிறவர்கள் இக்கால மனிதர்கள்.
இன்றைய இளைஞர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதைவிடஅதைப் பார்த்து ரசிப்பதைத்தான் விரும்புகின்றனர்.
இதன் விளைவு கிரிக்கெட் தவிர மற்ற விளையாட்டுகளில் மெச்சுகின்ற அளவுக்கு இந்தியர் யாரும் இல்லை. இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கியின் நிலையோ மிகவும் பரிதாபத்துக்குரியது.
உலக வரைபடத்தில் ஒளிந்திருக்கும் நாடுகள் கூட ஒலிம்பிக்கில் கோப்பையை வென்ற நாடுகளின் பட்டியலில் ஒளிர்கிறது. ஆனால் உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகையை கொண்ட இந்தியாவின் நிலையோ வெற்றிப்பட்டியலில் தேடும் நிலையில் தான் இருக்கிறது.
(நன்றி : தினமணி)
இன்று நடனம் என்ற பெயரில் வரும் நிகழ்ச்சிகளில் ஆபாச கூத்துக்கள் அரங்கற்ற பட்டு வருகின்றன. குடிப்பதும், கள்ள உறவுகளும் இன்று வரும் மெகா தொடர்களில் சகஜம். தங்கள் வீட்டு குழந்தைகளும் டிவி பார்க்கிறார்கள் என்ற அடிப்படை அறிவு கூட இந்த டிவி சம்பந்தப்பட்ட ஆசாமிகளுக்கு இல்லாதது ஏன்?
சினிமாவை போலவே, சின்ன திரைக்கு எப்போது, எந்த அரசு தணிக்கை கொண்டு வர போகிறது?
கடைக்காரர் கமெண்ட்:
இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அரசு, இலவசமா வீட்டுக்கு வீடு டிவி தரும் அவலமும் , அதுக்காகவே ஒட்டு போட்ட ஜனங்களும் நம்ம
தமிழ் நாட்ட தவிர வேற எங்க உண்டுங்க?
பதிவு : இன்பா
2 comments:
அருமையான பதிவு. உண்மையில் நல்ல கருத்து கட்டுரையும் கூட. என்னுடைய வலைப்பதிவில் போட்டுக்கொள்கிறேன். இன்று அனைவரும் டி.வி இல்லையென்றால் எதோ வாழ்க்கையை தொலைத்து விட்டது மாதிரி நினைக்கிறார்கள்
//// சராசரியாக நாள் ஒன்றுக்கு 6.5 எபிசோடுகளைப் பார்ப்பதாகவும், ////
புள்ளி விபரம் பின்னி விளையாடுதே.
பாவங்க... 6.5 எப்பிஸோடு பாக்கும் போது 0.5 எப்பிஸோடோட கிளைமேக்ஸ் மிஸ்ஸிங்.
இல்ல இது தான இருக்கும்னு ஏந்திருச்சு போயிர்ராங்களோ...
//// குழந்தைகள் கண்பார்வைக் குறைபாடுகளுக்கு மனரீதியான பாதிப்புக்குள்ளாவதாகவும் ////
பயமாயிருக்கே நண்பா.....
/// "ஓடி விளையாடு பாப்பா" இன்று நாம் டிவி முன் ///
கரெக்ட்தேன்... டிவிய வைச்சுட்டு அத சுத்தி சோபாவ போடுறோம்... அது மட்டுமா டைனிங் டேபிள்ல இருந்து தெரியுதான்னு பார்த்துட்டு தான தட்டய போடுறோம்...
//// கடைக்காரர் கமெண்ட் அரசு, இலவசமா டிவி தரும் அவலமும் , வேற எங்க உண்டுங்க?///
என்ன செய்யுறது கடைக்காரரே.... சினிமா பார்த்தே, அதுதான் வாழ்க்கைன்னு நினைக்குற கூட்டம் நம்மிது.... இல்லன்னா வில்லன அடிக்குற ஆளுதான் ஆளனும்னு இன்னும் நம்பிகிட்டு இருக்கே....
Post a Comment