Monday, January 4, 2010

கருணைக் கொலைக்கு காத்திருக்கும் அருணா ஷன்பக்


அருணா ஷன்பக் சாக வேண்டும். அவருக்கு வழங்கப்பட்டுவரும் உணவு நிறுத்தப்பட வேண்டும். இதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்க வேண்டும். சமூக ஆர்வலர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார்.

அருணா ஷன்பக்க்கிற்கு வயது 61.

37 ஆண்டுகள் முன்னால் அவர் ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிவந்தார். சோஹன்லால் வால்மீகி என்ற ஒரு அறை உதவியாளனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவர் அப்போது மாதவிலக்கில் இருந்தார். பின்புறமாக அவன் உறவு கொண்டான். அவன் அவரை ஒரு நாய்ச் சங்கிலியால் கழுத்தில் கட்டினான். அந்தச் சங்கிலி அவருடைய கழுத்தை இறுக்கியது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டன. கண்பார்வை போனது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது தடைப்பட்டது. அவர் மூளைச் சாவு அடைந்தார். அவரால் பேச முடியாமல் போனது. அவரை பலாத்காரம் செய்தவன் மீது கொலைமுயற்சி வழக்குதான் தொடரப்பட்டது.

ஏழு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு அவன் டில்லியில் ஒரு மருத்துவமனையில் பணிபுரிந்துவருவதாகத் தெரிகிறது. கடந்த 37 ஆண்டுகளாக அருணா ஷன்பக் ஒரு சக்கையாக, காய்கறி போல் இருக்கிறார். அவருக்கு உணவு வலிய வழங்கப்படுகிறது. அது நிறுத்தப்பட்டால் அவர் இறந்துவிடுவார். அவர் எந்த மருத்துவமனையில் பணி செய்தாரோ அதே மருத்துவமனையில் ஒரு அறையில் அவர் அடைந்திருக்கிறார். அவரை அவருடைய குடும்பம் நிராகரித்துவிட்டது. முழுக்கக் கைவிட்டுவிட்டது. மருத்துவமனை ஊழியர்கள்தான் அவரைக் கவனித்து வருகிறார்கள். இன்னும் அவர் ஒரு காய்கறி போல் உயிர் வாழ வேண்டாம், அவருக்கு வழங்கப்பட்டு வரும் உணவை நிறுத்திவிட அனுமதி அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.


அவருடைய நிலை பற்றி அறிக்கை அளிக்கும்படி அரசுக்கும் மருத்துவமனைக்கும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அருணா ஷன்பக் சாக அனுமதிக்கப்பட வேண்டுமா என்பதை உச்சநீதிமன்றம் தீர்மானிக்கும்.


அருணா ஷன்பக் சாக அனுமதிக்கப்பட்டால் அது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இருக்கும். அவர் ஏன் உயிர்வாழ வேண்டும் என்று நீதிமன்றம் நினைக்கிறது என்பதை அது காட்டும். ஒரு உயிர் ஏன் வாழ வேண்டும் என்று இந்தச் சமூகம், அமைப்பு நினைக்கிறது என்பதையும் அது காட்டும். ஒரு உயிர் வாழ வேண்டும் என்றால் அது வாழ்வதற்குத் தகுதியாக இருக்க வேண்டும். வாழ்வதற்குத் தகுதியாக இருக்கப் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு சாதாரண உடல் இயக்கம், மன இயக்கம் என்று பல அம்சங்கள் இருக்கின்றன. உயிர்வாழ்வதாகச் சொல்லப்படும் மனிதன் சாக அனுமதிக்கப்படுவது கருணைக் கொலை என்று கூறப்படுகிறது. கருணையுடன் கொலை செய்வது என்று இது உணரப்படுகிறது. கொலையில் கருணை பார்த்துவிட்டது இந்த அமைப்பு என்று இதைக் கொள்ளலாம்.

அருணா ஷன்பக் இப்போது கருணையுடன் கொலை செய்யப்பட்டால் அவர் இறந்துவிடுவார். அவர் மரணத்திற்கு யார் காரணம் என்று இந்த அமைப்பு சுய விசாரணை செய்துகொள்ளுமா என்று சொல்ல முடியாது. அதற்கு உச்சநீதிமன்றம் காரணமாக இருக்குமா, அல்லது அரசு காரணமாக இருக்குமா, மொத்தச் சமூகம் காரணமாக இருக்குமா என்று சொல்லத் தயாராக இருக்க மாட்டார்கள். அவருடைய இன்றைய கொலைக்கு அன்று அவரைக் கொன்றவன் காரணமாக இருக்கலாம். ஆனால் அவன் மீது கொலைமுயற்சி வழக்கு மட்டும் சுமத்தி அவனை ஏழு ஆண்டுகளில் விடுதலை செய்து வாழ விட்டிருக்கிறது நீதி, அமைப்பு. ஆனால் அவனால் அனேகமாக கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணை இந்த அமைப்பு இப்போதுதான் கொல்கிறது. அவருடைய மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனை அவன் நிறுத்தினான். இந்த அமைப்பு அவருடைய வயிற்றுக்குச் செல்லும் உணவை நிறுத்துகிறது. சுயபிரக்ஞையுடன் இந்த அமைப்பு கொலை செய்கிறது. அவன் போதையில் கொலை செய்தான். அவனுக்கு அப்போது இருந்தது காமப் போதை. எப்படியும் காமச் சுகத்தை அடைந்துவிட வேண்டும் என்று அருணா ஷன்பக்கை அவன் சங்கிலியால் கட்டினான். மகிழ்வு அடைந்தான். அவரை ஒரு சக்கையாக்கிவிட்டான்.

ஏழு ஆண்டுகள் சிறையில் இருந்து இப்போது அவன் ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்கிறான். அவனுக்குள்ளும் ஒரு உயிரைக் கொன்றுவிட்ட குற்றவுணர்வு இருக்கும். இருக்கலாம். குற்றவுணர்வு இல்லாத ஒரு சமூகம் உருவாகிவருகிறது என்பதற்கு அவனும் ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு உடல் தேடலுக்காக தண்டனை பெற்றுவிட்டான் என்று அவனுக்கு அவன் சமாதானம் செய்துகொண்டிருக்க முடியும். ஆனால் அவன் பாலியல் வன்முறை செலுத்தியதற்காக தண்டனை பெறவில்லை. அப்படிப் பார்க்க அப்போது நீதி அமைப்புகள் தயாராக இருக்கவில்லை. அவன் பாலியல் குற்றம் மட்டும் செய்திருந்தான் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தால் இன்னும் குறைவான தண்டனையுடன் அவன் தப்பித்திருக்க முடியும். பாலியல் மீறல்களுக்கு நமது சமூகத்தில் எப்போதும் போதுமான தண்டனைகள் கிடைப்பதில்லை. பாலியல் என்பது மீறலுக்கானது என்ற கருத்தோட்டம் அமைப்பின் ஆழ்மனங்களில் மண்டிக் கிடக்கிறது.

சாதாரண மனிதன் என்பவனோ, குற்ற பாவனை கொண்டவன் என்பவனோ, யாராக இருந்தாலும் பாலியல் என்பது ஒரு ஒழுங்கின் வன்முறை என்று மனதில் படிய வைத்திருக்கிறான். அது மீறலுக்கானது என்று பயின்று வந்திருக்கிறான். பாலியல் மீறல்தான் மனித மனத்திற்குப் போதுமான மகிழ்வைத் தருகிறது. அதைச் செயல்படுத்தும் ஊக்கத்தில் எப்போதும் மனித மனம் தயாராக இருக்கிறது. நமது நாட்டைப் பொறுத்தவரை எப்போதும் பாலியல் ஒழுங்கும் ஒழுங்கு மீறலும் மறைவுக்குரியதாக இருக்கிறது. இதன் போக்கில் நடத்தப்படும் குற்றங்களும் மறைவுக்குரியவையாக இருக்கின்றன. பொருளுக்காக நடத்தப்படும் குற்றங்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் பாலியல் நோக்கத்திற்காக நடத்தப்படும் குற்றங்களுக்குத் தரப்படுவதில்லை. முக்கியத்துவம் தரப்படும் அளவுக்கு அதற்கு எதிரான நடவடிக்கைகள் இருப்பதில்லை. பாலியல் ஒழுங்கை சட்டத்தின் மூலம் வரைமுறைப்படுத்த முடியாது. அதற்கான மனித மனப் பக்குவத்தை உருவாக்க வேண்டும். அதற்கு எப்போதும் சட்டம் மட்டும் உதவியாக இருக்க முடியாது. பாலியல் மீறலின் போக்கில் ஒரு உடல் மீது வன்முறை செலுத்தப்பட்டால் அது ஏற்படுத்தும் பரபரப்பு அளவுக்குத் தீர்வுகள் கிடைப்பதில்லை.

அருணா ஷன்பக்கை அவருடைய குடும்பம் எப்போதோ நிராகரித்துவிட்டது. அவர் இறந்துவிட்டதாக அந்தக் குடும்பம் நினைத்திருக்க வேண்டும். அவர் உயிர்வாழ்வதும், இறந்துபோவதும் அவருடைய குடும்பத்திற்கு எந்த வேறுபாட்டையும் கொடுக்காமல் போகலாம். அவர் மூளைச் சாவு அடைந்து சக்கையாகிப் போனதால் அவர் இறக்கலாம் என்று நினைத்தார்களா, அல்லது பாலியல் ரீதியாக பலியானவர் என்று நினைத்தார்களா என்று தெரியவில்லை. இரண்டுக்கும் சமூகக் காரணங்கள் இருந்திருக்கலாம். எப்படியும் அவர் தேவையற்றவர் என்று அவர்கள் அப்போதே நினைத்திருக்கிறார்கள். ஆனால் ஒரு சமூக எந்திரம் இப்போதுதான் அதை நினைக்கிறது.

அருணா ஷன்பக் அறுபது வயதைத் தாண்டிவிட்டதால் அவர் இறக்கலாம் என்று இப்போது நினைக்கப்பட்டிருக்கலாம். அவர் நாற்பது அல்லது ஐம்பது வயது கொண்டவராக இருக்கும்போது அவரைச் சாக அனுமதித்திருக்க மாட்டார்கள். தேவையற்றவனைக் கொல்வது மனித இயல்பாகிப் போனது. அது குற்றமாகவும் கருதப்படுகிறது. ஆனால் ஒருவன் மீது கருணை கொண்டு கொன்றால் அதற்கு அத்தனை நியாயங்களும் இருக்கும். இருக்க வேண்டும். இத்தனை சாத்தியங்களும், சாதகங்களும் இருக்கும்போது அருணா ஷன்பக் எதற்கு உயிர் வாழ வேண்டும்?


(நன்றி : திரு.நிஜந்தன்).

2 comments:

jebam said...

indha karuthu manitha urimaikkalahathukku theriuma

jebam said...

ithu pondra kodumaihalukku sattathl sariyana theerpalikka mudiyathu.

 
Follow @kadaitheru