Monday, December 7, 2009

நாட்டுப்புற கலைஞர்கள் - ஒரு ஒடுக்கப்பட்ட இனம்

திருச்சியில் ஒரு நண்பனை பார்க்க சென்று இருந்தபோது, பக்கத்தில் ஒரு ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா. இரவில் கரகாட்ட நிகழ்ச்சி என்று என் நண்பன் அழைத்தவுடன், ஒரு நல்ல கலை நிகழ்வை காண ஆவலுடன் சென்றேன்.

நிகழ்ச்சி தொடங்கும் முன் அந்த கரகாட்ட குழுவை சேர்ந்த பெண்கள் ஒரு கடைக்கு செல்வதை பார்த்தேன். மிக மோசமான ஆடை, அளவுக்கு அதிகமான மேக்கப். வாயில் சரளமான கெட்ட வார்த்தைகள். ஒவ்வொரு பெண்களும் ஆளுக்கு இரண்டு பான்பராக் வாங்கி, அலட்சியமாய் வாயில் போட்டதை கண்டு அதிர்ந்து போனேன்.

உடனே நாங்கள் அங்கு இருந்து வெளியேறினோம்.அதன் பின் கரகாட்டம் என்ற பெயரில் அங்கு அரங்கெறியது ரெகார்ட் டான்ஸ் போன்ற ஒரு ஆபாச நடனம் என்று அறிந்தேன்.

இத்தனைக்கும் அவர்கள் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு காலத்தில் பகழ் பெற்று விளங்கிய கரகாட்ட குழுவின் வழி வந்தவர்கள். என்று தெரிந்து கொண்டபோது , மேலும் அதிர்ச்சி அடைந்தேன்.

ஒரு பாரம்பரியம் மிக்க , பண்பாடு மிக்க மண்ணின் கலை இப்படி சீர் அழிந்ததமைக்கு யார் காரணம்?

புனிதமான கரகாட்டம் , ரெகார்ட் டான்ஸ் என ஆனது ஏன்?
"குறைந்த பட்சம் இந்த டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்ததே. எதாவது புது பட சிடி போட்டு இருந்தா இந்த வாய்ப்பு அவங்களுக்கு கூட வந்து இருக்காது " என்றான் என் நண்பன்.

எங்கள் கடலூர் மாவட்டத்தில் கிராம்புறங்களில் தோல்பாவை கூத்து முன்பு மிக பிரபலம் "அழகி" படத்தில் தங்கர் பச்சான் ஒரு பாடலில் பயன் படுத்தி இருப்பார். ஆனால் இன்று மாவட்டத்தில் தோல் பாவை கலைஞர் ஒருவர் கூட இல்லை.


"கலையை எப்போதும் கலைஞன் மட்டுமே முடிவு செய்வதில்லை. ரசிகனும் சேர்ந்தே முடிவு செய்கிறான். இன்றைக்கும் என்னால் விடிய விடிய கச்சேரி செய்யமுடியும். ஆனால் பார்க்க யார் இருக்கிறார்கள்?

காலம் மாறிப்போய்விட்டது. அதற்கேற்ப நாங்களும் மாறித்தானே ஆகவேண்டும்! இல்லாவிட்டால் நாங்களும் அழியவேண்டும். இந்தக்கலையும் அழியவேண்டும். பாவைக்கூத்து என்பது பின்பாட்டும் உரையாடலும் மாறி மாறி மணிக்கணக்காக செய்யும் வேலை. எனக்கு 5,000 பாடல்கள் வரை மனப்பாடம். எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லத்தெரியவில்லை. நிலைமை ஒவ்வொருநாளும் மோசமாகிக்கொண்டே போட்க்கொண்டிருக்கிறது. எனக்குத்தெரிந்த வித்தையில் பாதியே என் மகனுக்குத்தெரியும். இந்த மண்ணின் கலைகள் எல்லாம் வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இரவெல்லாம் கூத்து நடத்திய காலம் போய்விட்டது. இப்போதெல்லாம் இரண்டுமணிநேரத்துக்குள் முடித்துவிடு என்கிறார்கள். பக்த பிரகலாதன் கதையில் ரஜனி, கமல் எல்லாம் கலந்து காமெடி செய்யச்சொல்லுகிறார்கள்." என்று தெரிவித்து இருந்தார் பாவைக்கூத்துக்கலைஞர் கும்பகோணம் சங்கரநாதன்.

தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பகல்வேடம், இலாவணி, உடுக்கைப் பாட்டு, சேவையாட்டம், ஒயிலாட்டம்,கணியான் கூத்து, வில்லுப் பாட்டு போன்றவை கதை தொடர்புடைய கலைகள்

கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்,தேவராட்டம், கோலாட்டம், மயிலாட்டம், காளையாட்டம்,குறவன் குறத்தி ஆட்டம், கைச்சிலம்பாட்டம், சக்கையாட்டம், மரக்காலாட்டம், தப்பாட்டம், புலியாட்டம் . போன்றவை கதை தொடர்பு அற்ற கலைகள்.

கதை தொடர்புடைய கலைகளில் வில்லுப் பாட்டு, உடுக்கைப் பாட்டு, இலாவணி ஆகியவை பாடல் உள்ள கலைகள். ஒயிலாட்டம், சேவையாட்டம் ஆகியவை ஆடலொடு பாடல் உள்ள கலைகள். தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், இராஜாராணி ஆட்டம் ஆகியவை ஆடல்,பாடல்,உரையாடல் உள்ளவை.

கதை தொடர்பு அற்ற கலைகளில் கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், காளையாட்டம்,தப்பாட்டம், தேவராட்டம், மரக்காலாட்டம், புலியாட்டம் ஆகியவை ஆடல் உள்ளவை. கோலாட்டம், சக்கையாட்டம், கைச்சிலம்பாட்டம், கழியல் ஆட்டம் ஆகியவை ஆடலொடு பாடல் உள்ள கலைகள்.குறவன் குறத்தி ஆட்டம் ஆடல்,பாடல்,உரையாடல் உள்ள கலை .

இத்தனை நாட்டுப்புற கலைகளில் இன்று எத்தனை கலைகள் இருக்கின்றன? இந்த கலைகளில் ஈடுபட்ட கலைஞர்கள் என்று அடுத்த வேளை சோற்றுக்கு என்ன செய்கிறார்கள்? நமது அரசு என்ன செய்து இருக்கிறது அல்லது செய்ய போகிறது?

தமிழக அரசு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறையின் கீழ், தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தை அமைத்து ஆணையிட்டுள்ளது.
இந்த அரசாணைப்படி நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

"இவ்வாரியத்தில் நாட்டுப்புற கலைகளில் ஈடுபட்டுள்ள 18 வயது முடிவடைந்த, 60 வயது முடிவடையாத கலைஞர்கள் ரூ. 100 பதிவுக்கட்டணம் செலுத்தி உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ளவும், ஆண்டுதோறும் ஜனவரி 31-ம் தேதிக்குள் ரூ. 10 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வாரியத்தில் உறுப்பினராக பதிவுசெய்ய மாவட்ட கலைமன்றத்தால் கலைஞர்களுக்கான அடையாள அட்டை நகல் அல்லது இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை நகலை இணைத்து பதிவுசெய்து கொள்ளலாம்.

இந்த அடையாள அட்டை பெறாத கலைஞர்கள் கிராம நிர்வாக அலுவலர் அல்லது அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவரிடமிருந்து, தாங்கள் கலைஞர் என்பதற்காக பெறப்பட்ட சான்றிதழ் அல்லது தொடர்புடைய சான்றிதழ்களை இணைக்க வேண்டும்.

நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் உறுப்பினராக உள்ள கலைஞர்கள் மற்றும் கலைஞர்களுடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை 10-ம் வகுப்பிலிருந்து மேற்படிப்பு வரையிலும் ரூ.1000 முதல் ரூ.6000-ம் வரையும், திருமண உதவித் தொகை ரூ.2000, மூக்கு கண்ணாடி உதவித் தொகை ரூ. 500, மகப்பேறு உதவித் தொகை ரூ.6000, இயற்கை ஈமச்சடங்கு நிதியுதவி ரூ. 17 ஆயிரம், தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் உறுப்பினர்களாக புதுப்பித்து இருந்தால் ரூ. 300 ஓய்வூதியம் வழங்கப்படும்.

நிகழ்த்தப்படும் நாட்டுப்புற கலைகளில் இன்றளவும் மக்களால் போற்றி பாதுகாத்து வரும் வில்லுப்பாட்டு, நையாண்டி மேளம், கரகாட்டம், கணியான்கூத்து, களியல் ஆட்டம், சிலம்ப ஆட்டம், தப்பாட்டம், புலியாட்டம், மேடை நாடகம், மயில் ஆட்டம். தேவராட்டம், கும்மி ஆட்டம், ராஜா ராணி ஆட்டம், தெருக்கூத்து, நாட்டுப்புறப்பாட்டு மற்றும் ஆலி ஆட்டம் முதலிய கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

மேலும், முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்தவாரிய உறுப்பினர்களுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டு அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இந்த வாரியத்தில் இதுவரை உறுப்பினர்களாக பதிவு செய்யாத கலைஞர்கள் உறுப்பினர்களாகி நல உதவிகள் பெறலாம்". என்கிறது அரசு.

இவையல்லாம் போதுமா இந்த கலைகளை வாழ வைக்க?

ஒரு சமயம் பெங்களூர் கவர்னர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக நமது நாட்டுப்புற கலைஞர்களை அழைத்து வர வந்த வாகனம் லாரீ என்கிறார் தஞ்சை தமிழ் பல்கலை கழக நாடக துறையின் தலைவராக இருந்த முனைவர் ராமசாமி.

"நாட்டுப்புற கலைஞர்களை தாழ்த்தபட்ட அல்லது ஒடுக்கபட்ட இனமாக அறிவிக்க வேண்டும். தாழ்த்தபட்ட, ஒடுக்கபட்ட என்னும் போது அங்கே அரசியல் வந்து விடுகிறது. அப்போதுதான் இந்த கலைஞர்களுக்கு விடிவு பிறக்கும் " என்கிறார் முனைவர் ராமசாமி.

கல்லூரி, பல்கலை கழகங்களில் நாட்டுப்புற கலைகளை பாடங்களாக கொண்டுவந்து, அங்கு கற்று தரும் வாய்ப்பை சமகால நாட்டுப்புற கலைஞர்களுக்கு வழங்க வேண்டும். மாணவர்களின் ஆர்வத்தை இந்த கலைகள் மீது திருப்பி, அவர்களது வேலை வாய்ப்புகளுக்கு உததிரவாதம் தரவேண்டும். செய்யுமா நம் அரசு?

கடைக்காரர் கமெண்ட்:பரத நாட்டியம் ஆடுவதையும், கர்நாடக சங்கீதம் படிக்கிறததையும் கவுரவமா நினைக்கிறவங்க நம்ம தமிழ் மண்ணொட கலைகளை விரும்பாதது ஏன்னு தெரியல.


பதிவு : இன்பா

1 comments:

ந.லோகநாதன் said...

நல்ல பதிவு. நாட்டுப்புற கலைஞர்கள் வளர அரசு மற்றும் மக்கள் ஆதரவு தர வேண்டும்.

 
Follow @kadaitheru