கல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
திரு.பழ நெடுமாறன் அவர்களுடன் தமிழகத்தில் எங்கு நமது இனம் தொடர்பான எங்கு போராட்டம் நடந்தாலும் பங்கு கொள்ளும் மொழி போராளி.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திர பாண்டியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கல்யாணி திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் விருப்ப ஓய்வுபெற்றுத் தற்போது அங்கேயே வசிக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மக்கள் யுத்தக் குழு)யின் பண்பாட்டு அமைப்பான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’த்தில் செயல்பட்டவர். அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ‘செந்தாரகை’ என்னும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த கல்யாணி பிறகு அதிலிருந்து விலகிக் கல்வி சார்ந்த பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்தினார். மக்கள் கல்வி இயக்கம் என்னும் அமைப்பைத் தோற்றுவித்து அதன் சார்பாகத் தாய்த் தமிழ்ப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.
பணியிலிருக்கும் போதே பல்வேறு மனித உரிமைப் போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திய கல்யாணி, ஓய்வுக்குப் பிறகு பழங்குடி இருளர் பேரவை என்னும் அமைப்பின் மூலம் அவர்களது வாழ்வுரிமை சார்ந்த போராட்டங்களை முன் நின்று நடத்தி வருகிறார்.
காலச்சுவடு இதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து, அவரது போராட்ட, அரசியல் வாழ்வு அவரது பார்வையில்......
எனது ஊர் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திரபாண்டியபுரம். அப்பா சிறு விவசாயி, சமூகரெங்கபுரத்தில் தலையாரி வேலை பார்த்தார். குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகம். நான் கடைசியாக, பத்தாவது குழந்தையாக 1947இல் பிறந்தேன். கல்யாணி எனும் பெயரை எங்கள் பகுதியில் மறவர், தலித் சாதிகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு வைப்பார்கள். நான் மறவர். மறவர் என்பது denotified tribe. அங்கு அது சிறுபான்மைச் சாதியாக இருந்தது. நாடார்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர்.
ஐந்தாம் வகுப்புவரை சொந்த ஊரில் படித்தேன். அப்புறம் கள்ளிகுளம் பள்ளிக்குச் சென்றேன். அது சாமியார்கள் நிர்வாகத்தில் செயல்படும் பள்ளி. அண்ணன் பத்தாம் வகுப்பு. நான் ஒன்பதாம் வகுப்புப் படித்தேன். பள்ளியில் அண்ணன் செய்த ஒரு தவறுக்காக நிர்வாகத்தினர் அவனைத் தண்டித்தனர். அவனுடன் சேர்ந்து தவறுசெய்த இன்னொரு மாணவர் நிர்வாகத்தினருக்கு வேண்டியவரென்பதால் அவரை விட்டுவிட்டனர். அதனால் அந்தப் பள்ளியில் படிக்க மாட்டேனென வீம்புடன் சொல்லிட்டு சமூகரெங்கபுரத்திலிருந்த பள்ளியில் சேர்ந்தேன். அது டிஸ்ட்ரிக்ட் போர்டு பள்ளி. அங்கு ரெட்டியார்கள் பெரும்பான்மை வகுப்பினராக இருந்தனர்.
பின்னர் அமெரிக்கன் கல்லூரியில் பியூசி (1963 - 1964). கல்லூரியில் நான்தான் கடைசி மதிப்பெண். ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துவார்கள். முதலில் அவற்றைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருந்தது. பியூசி முடித்துவிட்டு அங்கேயே இயற்பியல் (1964-1967) படித்தேன். ஆங்கிலத்தில் மதிப்பெண் குறைவாக இருந்ததால் தொடர்ந்து ஆங்கில நாளிதழ்கள் படிப்பது போன்ற சுய முயற்சிகளைச் செய்தேன். மூன்று வருடப் படிப்பில் ஆங்கிலம் கற்றுக்கொள்ள அதிக நேரம் விரயமாகியது. இயற்பியல் துறை சார்ந்து படித்தது மூன்றாம் ஆண்டில் தான். அறிவியல் பாடங்களில் அடிப்படை பலமாக இருந்ததால் தேர்ச்சி பெற்றேன். மேலும் விடுமுறையின் போதே கல்லூரிப் பாடப் புத்தகங்களை எடுத்துக் கொண்டுபோய்ப் படித்துவிடுவேன்.
65இல் கல்லூரியில் இந்திப் போராட்டம் தீவிரமாக இருந்தது. திமுகவில் இருந்ததால் ஆர்வமாகக் கலந்துகொண்டேன். ரகுமான்கான் அமெரிக்கன் கல்லூரி தானே! கல்லூரியில் அவர் எனக்குச் சீனியர். மற்றவர்களுடன் சென்று நானும் கலந்துகொண்டேன். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் பருவத்திலேயே திமுக அனுதாபி. அப்போது எனக்குப் பதினோரு வயது.
என் அண்ணன் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர், திராவிடர் கழகத்துக்காரர் என்றே சொல்லலாம். என் சித்தப்பா கொழும்பில் இருந்தார். சித்தி மட்டும் இங்கே இருந்தார். அவரது வீட்டுக்கு அண்ணனுடன் போய்ப் பேசிக்கொண்டிருப்பது உண்டு. அப்போது அரசியல் பற்றிய பேச்சுகளும் வரும். அதனால் அந்தச் சின்ன வயதிலேயே கடவுள் மறுப்பு, திமுக அரசியலிலெல்லாம் ஈடுபாடு வந்துவிட்டது.
1967இல் இளங்கலை முடித்தேன். முதுகலைப் படிப்புக்குச் செல்லவில்லை. வேலைக்குப் போகவே விரும்பினேன். கும்பகோணத்தில் ஒரு தனிப்பயிற்சிக் கல்லூரியில் அறிவியல் ஆசிரியராகச் சேர்ந்தேன். மாதம் 150 ரூபாய் சம்பளம். ஒரு வருடத்திற்குப் பிறகு மாமா மூலமாகத் திருப்பத்தூர் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் ஒரு வருடம் வேலை. அடுத்த வருடம் சிவகங்கையில் வேலை. அங்கே பதினான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்த்தேன். அப்போது முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. ஆனால் அதே சமயத்தில் யானைமலை ஒத்தக்கடை அரசு விவசாயக் கல்லூரியில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது. நான் அதில் சேர்ந்துவிட்டேன்.
அந்த வேலையில் சேர்ந்த பிறகு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் நிறைய நேரம் கிடைத்தது. திமுகவின் மீது விமர்சனம் எழத் தொடங்கியிருந்த தருணம் அது. அப்போதுதான் செம்மலர் பத்திரிகை வந்தது. மக்கள் உரிமைக் கழகத்தின் தில்லைநாயகம் மூலமாக முற்போக்கு இயக்கம் அறிமுகமானது. எனக்குத் திமுகவின் கொள்கைகளோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இடதுசாரிச் சார்பு மனநிலை உருவானது. முற்போக்கு இயக்கங்களில் ஈடுபாடு ஏற்பட்டது. எனக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைக் காட்டிலும் மார்க்சிஸ்ட் கட்சிதான் நெருக்கமாகத் தென்பட்டது. அதற்கு எந்தத் தத்துவார்த்தப் பின்னணியும் காரணமல்ல. எங்கள் கல்லூரி விவசாயப் பல்கலைக் கழகமாக ஆன பின்னர் அங்கே பணியில் தொடர எனக்கு ஆர்வமில்லை, எனவே கடலூருக்கு வந்துட்டேன். அங்கேதான் பழமலயைச் சந்தித்தேன். அவர் கடலூரில் பேராசிரியராக இருந்தார். அங்கேயிருந்து மதுரை மேலூரிலும் பிறகு மதுரை மருத்துவக் கல்லூரியிலும் வேலைக்குச் சேர்ந்தேன். மூன்று மாதம் அங்கே வேலை பார்த்தபின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் படிப்புக்கு இடம் கிடைத்தது. அதனால் விடுப்பு எடுத்துக்கொண்டு படிக்க வந்துவிட்டேன்.
அப்போதெல்லாம் சம்பளத்தோடு அனுப்பமாட்டார்கள். அப்போது 1975 நெருக்கடிநிலை சமயம். திமுகவின் நட வடிக்கைகள் பிடிக்காத சூழலில்கூட நெருக்கடிநிலைமீது ஒரு கோபம் வந்தது. நான் இருந்த விடுதிக்கு நேரெதிரே இருந்த இடத்தில் இரவு நேரத்தில் நெருக்கடிநிலை அமலாகியிருப்பது குறித்த சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்ததைப் பார்த்தேன். காலையில் போய் டீ குடித்துவிட்டுச் சுவ ரொட்டிமீது சாணி அடிக்க வேண்டுமென்று சாணியை எடுத்துக்கொண்டு வந்தேன். ஆனால் எனக்கு முன்பே யாரோ அந்தச் சுவரொட்டிமீது சாணி அடித்திருந்தனர்.
1972-73இல் எம்ஜிஆர் திமுகவிலிருந்து விலகினார். அப்போது நான் கடலூரில் வேலையில் இருந்தேன். ஒரு கட்சிக்காரனாக எப்போதும் எம்ஜிஆரின் சினிமாத்தனங்கள்மீது எனக்கு விமர்சனம் உண்டு. அவரை விலக்கியது என்னை மிகவும் சந்தோஷப்படுத்தியது. இந்த மாதிரி ஆள்களைக் கட்சியில் வைக்கக் கூடாது என்னும் நினைப்பு எனக்கிருந்தது. மாயத்தேவருக்காக சிபிஐ, சிபிஎம் எம்ஜிஆரை ஆதரித்ததால் அந்தக் கட்சிகளை வெறுத்து, சிபிஎம்மிலிருந்து நான் விலகிவிட்டேன்.
1976இல் முதுகலைப் படிப்பை முடித்தேன். பிறகு விழுப்புரத்தில் வேலை கிடைத்தது. முதுகலை முடித்த புத்துணர்ச்சியோடு மிக ஆர்வமாக வகுப்பு எடுக்கத் தொடங்கியிருந்த சமயம் அது. வகுப்பில் போகிறபோக்கில் வாய்ப்புக் கிடைக்கும்போது கடவுள் மறுப்பு பற்றியெல்லாம் பேசுவேன். என் இயல்பு அது. மாணவர்களும் என்னை விரும்புவார்கள். விடுதிக்குச் சென்று தலித் மாணவர்களுக்குத் தனியாகப் பயிற்சி கொடுத்தால் அவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற துறைப் படிப்புகளுக்குப் போக முடியும் என்பதால் அவர்களுக்குப் பயிற்சியளிப்பேன். கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும் முக்கியமான பொறுப்பில் இருந்தேன். இப்படிப் பல தளங்களிலும் இயங்கியதைப் பார்த்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் என்னை அவர்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். அப்போதுதான் தினகரன் பத்திரிகை வந்தது. எப்போதும் தினகரன் பத்திரிகையோடுதான் இருப்பேன். அப்போது நான் தீவிர திமுக ஆதரவாளன். ஆனால் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், அவர்களின் வேண்டுகோள்களுக்காகக் கடவுள் மறுப்பு போன்ற செய்திகளைப் பேசுவேன்.
அஷ்வகோஷ் அங்கே அறிமுகம் ஆனார். ஒரு நாள் அங்கே ஏற்பட்ட விவாதத்தில் நான் பேசியதைக் கேட்ட ஒரு மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சித் தோழர் என்னைப் பார்க்க அறைக்கு வந்துவிட்டார். அவர் வெளிப்படையாகத் தான் அந்த இயக்கத்தில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளமாட்டார். என்னை அந்தத் தோழர் பார்த்ததை அறிந்த மார்க்சிஸ்ட்கள் அவரை மிரட்டினர். எனக்கு அவர்களின் இந்த நடவடிக்கை பிடிக்கவில்லை. அவர்களைப் பிடிபிடியென்று பிடித்துவிட்டேன். பிறகு அவர்களிடமிருந்து விலகிவந்துவிட்டேன். தோழர் செந்தாரகை வந்து என்னைச் சந்தித்தார். இரவில்தான் வருவார், தலைமறைவு அரசியலிலிருந்துதான் தொடங்குவார். எனக்கு நன்றாகத் தூக்கம் வரும். மார்க்சிஸ்ட்டுகளோடு இருந்த முரண்பாடு காரணமாக அவர் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக்கொண்டிருப்பேன். இயல்பான பிடிப்பு இல்லை. இப்படியான சூழலில் இலங்கையிலிருந்து வந்த சில மலையகத் தமிழர்கள் மார்க்சியம் பற்றி எனக்கு அதிகமாகத் தெரியுமென நினைத்து என்னிடம் வந்தார்கள். எனக்கும் எதுவும் தெரியாது. எல்லோரும் சேர்ந்து படிக்கலாம் என்று சொல்லி அரசுங்கிற புத்தகத்தை வரிக்கு வரி படித்தோம். பின்னர் குடும்பம் தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அரசும் புரட்சியும் ஆகிய புத்தகங்களைப் படித்தோம்.
அதன் விளைவாக மார்க்சியத்தின் அடிப்படை புரிந்தது.
1983இல் இலங்கைப் பிரச்சினை வந்தது. அதை ஆதரித்தது. பிரபாகரன் மேல் விமர்சனங்கள் இருந்தாலும் இந்தியா சிங்கள அரசுக்கு ஆயுதம் கொடுக்கக் கூடாது, இராணுவத்தை அனுப்பக் கூடாது என்று கூறினார்கள். திமுகவினர் இராணுவத்தை அனுப்ப வேண்டும் என்று சொன்னார்கள். ஈழ விடுதலையை, தனி ஈழத்தை மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்கள் ஆதரித்தனர். ஒரு தேசிய இனத்துக்கு சுயநிர்ணய உரிமை என்பது அடிப்படை ஜனநாயக உரிமை. அதில் எனக்கும் உடன்பாடு உண்டு. தேசிய இனப் பிரச்சினையிலும் மொழிப் பிரச்சினையிலும் இந்திய அளவில் ஏஎம்கே அளவுக்குத் தெளிவானவர்கள் யாரும் இல்லை. மொழிப் பிரச்சினை தொடர்பான இந்திய அளவிலான விவாதத்தில் தமிழ்நாடு வைத்த பயிற்சி மொழி, ஆட்சி மொழி, தொடர்பு மொழி மூன்றும் ஒரே மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்னும் ஒரு மொழிக்கொள்கையை அப்படியே எல்லா மாநிலங்களும் பின்பற்றின. மொழிப் பிரச்சினை தொடர்பாக மபொசி எழுதிய புத்தகம் மிக முக்கியமான ஒன்று. நாடாளுமன்றத்தில் தேசிய இனங்களுக்கான இடம் சமமாக இருக்க வேண்டும். மக்கள்தொகை சார்ந்து கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கக் கூடாது என்று சிந்தித்திருக்கிறார்.
தொடக்கத்தில் சரியான அமைப்பு கிடையாது. நான் நக்சல்பாரி இயக்கத்தில் இருப்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் பெண் கல்வி தொடர்பா ஒரு பள்ளி கொண்டுவர வேண்டிய முயற்சிக்கு என்னை அணுகினர். வன்னியர் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி அது. மருத்துவர் ராமதாஸ் மக்களைச் சார்ந்து நிற்பார் என அவரைக் கொண்டுவந்தோம். அவரும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார். பல்வேறு தரப்பினரைக் கொண்டு பள்ளி திறப்புக் குழு, வெகுஜன மேம்பாட்டுக் குழு என இருகுழுக்களை உருவாக்கினோம். தலைவர் மருத்துவர் ராமதாஸ். நான் ஒரு குழு உறுப்பினர். செயலாளர் பவனந்தி. ஹீராசந்த் அப்ப நகராட்சித் தலைவர். ஒன்றுபட்ட தென்னார்க்காடு மாவட்டத்தின் அதிமுக செயலாளர். அவரை எதிர்த்துதான் அதை நடத்த வேண்டும். கடுமையான போராட்டம். அவர்தான் இலக்கு. அவரை எதிர்த்து எப்படி அணி திரட்டுவது என்பது குறித்த தெளிவான பார்வை இருந்தது. அதில் எனக்குப் பயங்கர பாதிப்பு. ஆனால் திண்டிவனத்தில் எனக்குக் கிடைத்த நல்ல பெயர் அப்போராட்டத்தை வைத்து உருவானதுதான். நாங்கள் விரும்பியபடி பள்ளியைக் கொண்டுவந்துவிட்டோம். பல தடைகளைத் தாண்டி இப்போது அது மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்திருக்கிறது.
98இல் டிசம்பர் 6 நிகழ்வை முன்னிட்டுத் தமிழகம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினரையும் இஸ்லாமியரையும் கைதுசெய்திருந்தனர். இதற்கு எதிராக ஒரு பத்திரிகைச் செய்தி கொடுக்க வேண்டுமென ரவிக்குமார் சொன்னார். செய்தியை அவரே எழுதினார். அப்போது இஸ்லாமியர்களுடன் இணைந்து சதிசெய்ததாக ஒரு வழக்கு எங்கள்மீது போடப்பட்டது. ரவி என்பவர் அப்போது மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளராக இருந்தார். இருளர்களுக்கு எதிரான வழக்குகளில் ரவி சரியாகச் செயல்படவில்லை என நான் முன்பு அவர்மீது குற்றம் சுமத்தியிருந்தேன். அதை மனத்தில் வைத்துக்கொண்டு பழிவாங்கும்விதமாக இப்படி ஒரு வழக்குப் போடப்பட்டது.
2002இல் திண்டிவனம் அருகே பட்டிணத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரைப் போட்டு அடித்துவிட்டார்கள். புகார் கொடுத்தோம். எதிர்த் தரப்பினர் கட்டப்பஞ்சாயத்துக்கு வந்தனர். தலித் இனத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஒருவர் தலைமையில் அந்தப் பஞ்சாயத்துக்கு வந்தனர். எப்போதும் கட்டப்பஞ்சாயத்துகளை நான் ஒத்துக்கொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொள்ளமாட்டேன். கடுமையாகப் பேசிவிடுவேன். அதனால் இருளரில் ஒருவரைப் பிடித்துக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கையெழுத்து வாங்கி அவரை நான் திட்டியதுபோல் என்மேல் வழக்குப்போட்டார்கள். ஆனால் கைது செய்யவில்லை. அதை எதிர்த்துத் திருமாவளவன் தலைமையில் விழுப்புரத்தில் 10,000 பேர் திரண்ட பெரிய பேரணியையும் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினோம். அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அப்பேரணியில் இணைந்தனர்.
மார்க்சிய - லெனினிய இயக்கத்திலிருந்து வந்த பின்பு பண்ணையபுரம் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான உண்மையறியும் குழுவில் இணைந்து பணிபுரிந்தேன். அப்போது 93இல் அத்தியூர் விஜயா வழக்கு கவனத்திற்கு வந்தது. ஒரு கைதியைத் தேடிப் போவதுபோல் போய் அந்த இருளர் இனத்துப் பெண்ணைக் குழுவாகச் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்தனர். உண்மையில் இது ஒரு திட்டமிடப்பட்ட வன்முறை. வழக்கமாகப் பாண்டிச்சேரி போலீசார் இவ்வாறு செய்வதுண்டாம். தமிழகப் போலீசாரும் இதற்கு உடந்தைதான். அதனால் போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை.
அவர்கள் பகுதியில் வின்செண்ட் என்பவர் ஒரு தொண்டு நிறுவனம் நடத்துகிறார். விஜயாவின் அண்ணன் ஏழுமலை அதில் உறுப்பினர். அதன் மூலம் புகார் தந்தி அனுப்பியுள்ளனர். விசாரணைகள் நடக்கின்றன.
அப்போது இணை ஆட்சியர் ஜவஹர் விசாரித்து அதில் முகாந்திரம் இருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை போடச் சொல்லிவிட்டார். இச்சம்பவம் நடந்து 15 நாள்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கை போடப்பட்டது. இந்தச் செய்தி போலீஸ் செய்தி வழியாகத் தினசரி நாளிதழ்களுக்கு வந்தது. அதை வைத்து மணிவண்ணன் எனும் மனித உரிமைப் பத்திரிகையாளர் மூலமாகத் தகவல் வந்தது. அதுவரை இருளர் என்று ஒரு பழங்குடியினர் சாதி இருப்பதே எனக்குத் தெரியாது. அதன் பின்பு பவனந்தி தலைமையில் உண்மையறியும் குழு அமைத்து, வழக்கறிஞர் லூசியானா போன்றோர் அங்கே சென்றோம். அந்த உண்மை அறியும் குழுவின் அறிக்கையை இண்டியன் எக்ஸ்பிரஸிலும் தினமணியிலும் மிகப் பெரிய செய்தியாக வெளியிட்டனர்.
அதைத் தொடர்ந்து விஜயாவுடைய அப்பாவைத் திருப்பதி போலீஸ் அழைத்துச் சென்றுவிட்டனர். அந்த வழக்கைக் கையில் எடுத்தோம். நானும் சிஸ்டர் லூசியானாவும் திருப்பதி போய் ரத்தினம் முலமாக ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்து அவரை பெயிலில் எடுத்தோம். இதற்கிடையில் இண்டியன் எக்ஸ்பிரஸ் நியூஸ் மூலமாக ஆந்திரா போலீஸ் விஜயாவின் அப்பாவைக் கடத்தியது ஹைதராபாத்தில் ஆங்கில நாளிதழில் வெளியானது. இதைப் படித்த இளைஞர் ஒருவர் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார். எனவே விஜயாவின் தந்தையை ஹைதராபாத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையோடு எங்களிடம் ஒப்படைத்தனர். அங்கே மனித உரிமைப் போராளி பாலகோபால் இருக்கும் இடத்தில் தங்கியிருந்தோம். ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தவர் இளம் வழக்கறிஞர் என்பதால் இந்த வழக்கு பற்றி நீதிமன்றத்துக்கு வழிகாட்ட மூத்த வழக்கறிஞர் சீனிவாசலு என்பவரை நியமித்திருந்தனர். நாங்கள் சென்று கண்ணபிரானைப் பார்த்தோம். அவர் சீனிவாசலுவை அறிமுகப்படுத்தினார். அவர் இவ்வழக்கு குறித்த முன் தயாரிப்புகளோடு இருந்தார். அங்கே அன்று நீதிமன்றப் புறக்கணிப்பு வேறு. எங்களிடம் போதிய பணமும் இல்லை. நாங்கள் தமிழகத்திலிருந்து சென்றிருந்ததால் வழக்கறிஞர் சங்கத்தினரே எங்களுக்குப் போக்குவரத்துக்கென 1,000 ரூபாய் கொடுத்தனர். இந்த வழக்கில் திருப்பதி போலீஸ் விஜயாவின் அப்பாவுக்கு 5,000 ரூபாய் தர வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் பின்பு விஜயா மூலமாகக் கிட்டத்தட்ட 16 வழக்குகள் எங்களிடம் வந்தன. அதனால் இவர்களுக்கென்று ஓர் அமைப்பு வேண்டும், அதற்கு ஒரு தலித் தலைமை ஏற்கவேண்டுமென நினைத்தேன். விடுதலைச் சிறுத்தைகளைச் சார்ந்த லாரன்ஸை வைத்து அமைப்பை உருவாக்குவதாக ஏற்பாடு. கடைசி நேரத்தில் அவரால் வர இயலவில்லை. கூட்டம் திட்டமிட்டபடி கூடியதால் ரத்தினம், சிஸ்டர் லூசியானா ஆகியோர் ஆலோசனைப்படி நானே அந்த அமைப்புக்குத் தலைமையேற்க வேண்டியதாயிற்று. எனவே 04.08.1996இல் மயிலத்தில் பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் உருவானது. 01.10.1996இல் இருளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு பேரணி நடத்தினோம். வழக்கமான முழக்கங்களுக்குப் பதிலாகப் பழமலய் பாடல் எழுதிப் பாடினார். பல ஜனநாயகச் சக்திகளை ஒன்றிணைத்ததுதான் நான் செய்த செயல்.
மார்க்சிய லெனினிய இயக்கத்தில் முழுமூச்சாகச் செயல்பட வேண்டும் என நினைத்தேன். அதற்குக் குடும்பம் இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். பின்னர் நாள் கடந்துவிட்டது. ஆனால் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்தது நல்லதென்று இப்போது நினைக்கிறேன். வேலைகள் செய்வதற்குத் தடையில்லாமல் இருக்கிறது.
தமிழ்மொழிப் பற்றுக் காரணமாக நான் எப்போதுமே பேசியதில்லை. நான் திமுகவில் இருக்கும்போதுதான் அப்படியொரு கருத்து எனக்கு இருந்தது. நான் மார்க்சிய - லெனினிய இயக்கத்துக்கு வந்தபோது அவரவர் தாய்மொழி அவரவருக்குப் பெரிது என்னும் எண்ணம் வந்துவிட்டது.
நமது மொழிக்கு ஆயிரம் சிறப்புகள் இருக்கலாம். அதற்காக நாம் சிறப்பு உரிமை கொண்டாட முடியாது. மொழிப் பிரச்சினையை ஜனநாயக உரிமையாகப் பார்க்கிறேன். என் மொழியில் படிப்பதற்கு எனக்கு எல்லா வாய்ப்பும் இருக்க வேண்டும் என்கிறேன். தமிழக அரசு போடுகிற கடிதம் தமிழில் இருக்க வேண்டாமா?
பதிவு : இன்பா
2 comments:
மிகவும் நல்ல மனிதர். சிந்தனையாளர். செயல் வீரர்.
இவரை விஜய் டிவி-ல் நீயா நானா நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்திருந்தனர். அவர் பள்ளியில் பயிலும்போது அவருக்கு ஏற்பட்ட ஒரு அவமானமான நிகழ்வை கூறி அழுதார். அது பலரையும் மிகவும் பாதித்தது. அவர் இப்போது தான் இது போன்ற பேட்டிகளின் மூலம் மக்களின் பார்வைக்கு படுகிறார். ஊடகங்கள் எதிர்பார்க்கும் கவர்ச்சி அவரிடம் இல்லையே. :-(
இவரைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். நல்ல பதிவு. சிறந்த மனிதர் மற்றும் சமுக ஆர்வளர்
Post a Comment