Wednesday, December 2, 2009

சமச்சீர் கல்வி....பயிற்று மொழி....அரசு பள்ளிகள்


"சமச்சீர் கல்வி என்பது அனைத்துபள்ளிகளிலும் ஒரே மாதரியான பாடதிட்டத்தை அமல் படுத்துவது. அரசு பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், ஒரியேண்டல் பள்ளிகள் ஆகியவற்றை ஒரே போர்டின் கீழ் கொண்டு வரப்படும்" என்றார் மாநில கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு.

சரி, பாடங்கள் எந்த மொழியில் பயிற்றுவிக்கபடும்? எந்த,எந்த பாடங்கள் என்று அறிவித்த அரசு,பயிற்று மொழி பற்றிய விளக்கம் எதுவும் சரியாக தரவில்லையே?

"தற்போது எந்த மொழியில் படிகின்றனரோ, அதே மொழியில் சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்த பிறகும் படிக்க முடியும்.
தமிழ் மொழி பாடத்திட்டத்தில் இருந்து, ஆங்கில மொழி பாடதிட்டத்திற்கு மாற விரும்பும் மாணவர்கள், எந்த பள்ளியில் ஆங்கிலம் பயிற்று மொழியாக உள்ளதோ, அந்த பள்ளிக்கு மாற வேண்டும் " என்கிறார் அமைச்சர்.

ஆசிரியர் நியமனம், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை காரணங்களாக சொன்ன அமைச்சர், அரசு பள்ளியில் தமிழ், ஆங்கிலம் என இருவேறு பயிற்று மொழியை செயல்படுத்த இயலாது என்று அறிவித்து விட்டார்.

உலகில் முன்னேறிய நாடுகளான அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் மட்டுமன்றி உலகின் எல்லா நாடுகளிலுமே பள்ளிகள் அளவில் அவரவர் தாய்மொழிகள் தான் பயிற்றுமொழியாக உள்ளன. ஆங்கிலம் அல்ல. எங்கும் ஆங்கிலம் நூலக மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் ஆங்கிலேயர் நாட்டில் மட்டுமே பள்ளிகளில் பயிற்றுமொழியாக உள்ளது.

ஏன் தமிழ் வழி கல்வியை முழுவதும் நடைமுறை படுத்த கூடாது? ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளை விருப்பபாடமாக வைக்கும் வழிமுறை,சமச்சீர் கல்வியில் இருக்கிறதா?

இது குறித்து, தமிழக முன்னாள் உதவிக் கல்வி அலுவலர் திரு.ருத்ரபன்னீர் ஒரு கட்டுரையில் இவ்வாறு எழுதுகிறார்.
(நன்றி:தினமணி)

"கற்றலுக்கு வேண்டிய அடிப்படைச் சிந்தனைத் திறனில் தாய்மொழியில் படிப்போர் பின்தங்கியவர்கள் அல்ல. அதனால்தான் பொருள் புரிந்து தமிழ் மீடியத்தில் படிக்கும்போது மதிப்பெண்களை அவர்களால் அள்ள முடிந்தது. இதனை பெற்றோர்களும், ஆசிரியர்களும் கவனத்தில் கொள்வது அவசியம்.
""தம் பிள்ளைகள் சாதாரண பள்ளியில் அல்ல, மெட்ரிகுலேஷன் பள்ளியில் இங்கிலீஷ் மீடியத்தில் படிக்கிறார்கள்'' என்று சொல்வதை கௌரவம் தரும் சொல்லாக எண்ணிச் செலவழிக்கிறார்கள். பிள்ளைகளின் இயற்கை சுபாவங்களைக் கவனியாது, அவர்கள் வளர்ச்சிக்கு பெற்றோர்களே தடைகளை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

கல்வி என்பது ஓர் அனுபவமே. இந்த அனுபவம் சிந்தனையின் அடிப்படையில் எழுவதே ஆகும். குழந்தை சிந்திப்பதில் உள்ள வலு, ஆழம், உண்மை, தீவிரம் இவற்றைப் பொருத்து அமைவதே கற்றல் எனப்படும். குழந்தை சுயமாகச் சிந்தித்தல் தாய்மொழியில்தான் சாத்தியப்படும்.

அது அல்லாமல் ஆங்கில வழியில் மேற்கொள்ளப்படும் மனப்பாட முறையின் வழியாகப் பெறப்படும் மதிப்பெண்கள் முறைதான் உயர்வழிக் கல்வி, அதுவே கல்வி கற்றல் அல்லது கல்வி அடைவின் அளவுகோல் என்பது ஏற்புடையதாகாது. எனவே கற்பனைத்திறன், படைப்பாற்றல், புதியவை காணும் ஆற்றல், ஊக்கமுடைமை இவையாவும் தாய்மொழிக் கற்றல் மூலமே சாத்தியமும், வலிமையும் பெறும்.

ஆங்கில வழிக்கற்றலில் மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவர்கள் படிக்கத் தகுதியற்றவர்கள், மந்த புத்தியுடையவர்கள், கல்வியில் பின்தங்கியவர்கள் என்று ஆசிரியர்கள் தவறான முத்திரையிட்டு அவர்களுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து விடுகின்றனர். பெற்றோர்களும் அன்றாடம் மனப்பாட சக்தி வழியே அதிக மதிப்பெண் வாங்கியவர்களோடு ஒப்பிட்டுப் பிள்ளைகளை வசைபாடுகின்றனர். ஆசிரியர்களும் பெற்றோர்களும் பின்பற்றும் இவை இரண்டும் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டியவையாகும்.

ஏனெனில் மனப்பாடத்திறனே படிப்பு அல்லது அறிவு வளர்ச்சி என்பது தவறான அளவுகோலாகும். நம் முன்னாள் குடியரசுத் தலைவரும் உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான ஏபி.ஜெ. அப்துல் கலாம், ""தாம் 8-ம் வகுப்புவரை ராமேசுவரம் மீனவப் பள்ளியில் தமிழ்வழியிலேயே பாடங்களைப் பயின்றதால்தான் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. விஞ்ஞானி ஆவதும் சாத்தியப்பட்டது'' என்கிறார்.

கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி ""அறிவியலும் தொழில்நுட்பமும் மற்ற துறை அறிவும் தாய்மொழி மூலம் கற்றால்தான் அதன் பயனைப் பெற முடியும். 50 ஆண்டுகளுக்கு முன்னதாக பொருளாதார வளர்ச்சியில் நம்மை ஒத்த நிலையிலிருந்த அண்டைய நாடுகள் இன்று நம்மைவிட சற்று மேலாக வளர்ந்திருப்பதற்கு அவர்கள் தாய்மொழி வழியே கல்வி பயின்ற வலிமை ஒன்றுதான் அடிப்படைக் காரணம் '' என்று குறிப்பிடுகிறார்.

நம் இந்திய நாட்டிலும் தமிழகம் நீங்கலாக மற்ற மாநிலங்களில் எல்லாம் அவரவர் தாய்மொழிகள்தாம் பள்ளியில் பயிற்றுமொழியாக உள்ளன. இவ்வாறு நம் நாட்டில் பள்ளிக்கல்வியில் 67 பயிற்றுமொழிகள் (அவரவரது தாய்மொழிகள்) பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

நம் தமிழகத்தில் மட்டுமே தாய்மொழியாகிய தமிழை பள்ளிகளிலிருந்து அப்புறப்படுத்திவிட்டு ஆங்கில மொழிவழியே பாடங்களைக் கற்பிக்கிற அவலநிலை உருவாகியுள்ளது. இது எந்த ஒரு மனிதகுலமும் எங்குமே கண்டிராத விநோதம் ஆகும்.

இந்த உலகமகா விநோதம் சிறார்களுக்கு ஆங்கில வழியே கற்பித்தல் என்ற பெயரில் சிறார் கல்வியை வணிகமாக்கிப் பணம் சேர்க்கும் நோக்குடைய ஒருசிலரால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இந்தப் பயிற்றுமொழி சிக்கலால் பாதிக்கப்படுவது குழந்தைகளும், மாணவர்களுமே.

மேற்படி வணிகமயமாக்கலுக்கு எதிராக சமச்சீர் கல்வியின் ஓர் அம்சமான

அண்மைபள்ளி (அ) அருகாமைப்பள்ளி முறை, முறையாகச் செயல்படுத்தப்பட்டால் அன்றாடம் படும் அவஸ்தையிலிருந்து சிறார்களும், வேன், ஆட்டோ, பேருந்துக் கட்டணம் மற்றும் தனியார் பள்ளிகளில் விதிக்கப்படும் ரசீது இல்லாத கட்டணங்களிலிருந்து பெற்றோர்களும் விடுவிக்கப்படுகின்றனர்.

எனவே இந்த அண்மைப்பள்ளி முறை பெற்றோர்களால் பெரிதும் விரும்பி ஏற்கப்படும்.

இந்த சமச்சீர் கல்வி நடைமுறைக்கு சகல வல்லமையும் சாதுர்யமும் மிக்க மெட்ரிக் பள்ளியினுடைய தாளாளர்களும், முதல்வர்களும் இளைய தலைமுறையினரின் நலனைக் கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு நல்கி அவர்களுடைய கல்விப் பணியைத் தொடர வேண்டுமென்று தமிழகம் எதிர்பார்க்கிறது" என்கிறார் கல்வியாளர் திரு.ருத்ரபன்னீர்.

நாங்கள் சிறப்பாக ஆங்கிலம் சொல்லித்தருகிறோம் என்று விளம்பரம் செய்துதான், இன்று அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் கல்வி வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் சமச்சீர் கல்வி முறைக்கே எதிர்ப்பு தெரிவிப்பவர்கள். வெறும் லாப நோக்கமே குறிக்கோளாய் கொண்டவர்களிடம் எப்படி ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது?

டாக்டர். அப்துல்கலாம், கல்வியாளர் வா.செ. குழந்தைசாமி உட்பட நாம் காணும் அன்றாட வாழ்வில் அரசு பள்ளிகளில் படித்து சாதித்தவர்கள் அநேகம்பேர் இருக்கிறார்கள். அவர்களை முன்னுதாரனமாக கொண்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில், தமிழ் வழி கல்வியில் சேர்க்கவேண்டும். விளம்பரங்களை நம்பாமல், தங்கள் குழந்தைகள் மேலும், அரசு பள்ளிகள் மேலும் இனி பெற்றோர்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும்.

கடைக்காரர் கமெண்ட்:
கல்வி ஒரு அனுபவம்கிறது எவ்வளவு அருமையான விஷயம். காசு சம்பாதிக்க மட்டும் படிக்காம, கத்துகிறதுக்குகாக படிக்கவைக்கிறோம் என்று பெத்தவங்களும், அதை படிக்கற பிள்ளைகளும் உணரனும்ங்க.


பதிவு : இன்பா

2 comments:

ந.லோகநாதன் said...

சமச்சீர் கல்வி வரவேற்க்க தக்க ஒன்று. அனைவருக்கும் சமச்சீர் கல்வி புகட்ட வேண்டும். அவரவர் தம் தாய் மொழியில் கல்வி கற்கவும் செயல் முறைபடுத்தவும் வேண்டும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கடைக்காரரின் கமென்ட் எல்லாம் சரிதான்.....ஆனால், யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது. நீங்கள் சொன்ன நாடுகளில் எல்லாம் தாய்மொழியில் படித்து அந்த நாட்டிலேயே வேலை வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், நம் தமிழ் நாட்டில் தமிழிலேயே படித்து வேலை தேடும்போது மாநிலத்தைவிட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை நிலவும் வரை, இந்த தாய்மொழிக் கல்விக் கொள்கை வேலைக்கு ஆகாது.

 
Follow @kadaitheru