Thursday, December 3, 2009

ஆஸ்கார் வென்ற "பிங்கி ஸ்மைல்" - குறும்படம்


பிங்கிகுமாரி என்ற ஆறு வயது பெண்ணிற்கு உதட்டில் அமைந்த பிளவு முகத்தைக் கோரமாக்கி விட்டது. பள்ளிக்குச் செல்வதும், சமூக வாழ்க்கையில் சகஜமாக இருப்பதும் அவளுக்கு இயல்பானதாக இல்லாமல் போய்விட்டது. எதேச்சையாய் ‘ ஸ்மைல் ட்ரெயின் ‘ என்றத் தன்னர்வத்தொடு நிறுவனம் அந்தப் பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து நடத்திய 45 நிமிட அறுவைச் சிகிச்சை அப் பெண்ணுக்கு மறுவாழ்வு அளித்திருக்கிறது.

இது பற்றின விவரணப்படம் ‘பிங்கி ஸ்மைல் ‘ ஆஸ்கர் பரிசும் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவைச் சார்ந்த மேகன் மைவன் என்ற பெண் இயக்குனர் இந்த 40 நிமிட படத்தை இயக்கியிருக்கிறார்.

உதடு பிளவு என்பது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்தில் ஒருவருக்கு இருப்பதாகும். ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இது அதிகமாக உள்ளது. மரபியல் ரீதியான காரணங்களூம் இதற்கு உள்ளன. கர்ப்ப காலத்தில் தவறாக உபயோகப்படுத்தப்பட்ட மருந்துகள், கர்ப்ப நோய்கள், போதைப் பொருட்கள், மது பானங்கள் பயன்படுத்தியதன் விளைவாய் இந்த உதடு பிளவு பிறப்பில் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகின்றது..

பிங்கி குமாரியை ஒரு சமூக சேவகர் கண்டு பிடித்து இலவச அறுவைச்சிகிச்சைக்ககாக கூட்டிச் செல்வது பற்றி இப்படம் தெரிவிக்கிறது. ஸ்மைல்ட்ரெயின் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உதடு பிளவு போன்றவற்றுக்கான விழிப்புணர்வு, சிகிச்சையில் அக்கறை செலுத்தி இயங்கி வருகிறது இதற்கான சிகிச்சை குறித்து சமூகப் பணியாளர்கள் , பிங்கியின் தகப்பனார் இடம் விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள்.

அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது. பிங்கியோடு சொகான் என்ற பையனுக்கு நேர்ந்த சிகிச்சை முறைகளும் அவன் தன்னம்பிக்கை பெற்று பள்ளி வாழ்க்கையைத் தொடர்வதி இந்தப்படம் சொல்கிறது.

இப்பிரச்சினை குறித்து விழிப்புணர்வின் அடையாளமாக இப்படட்த்தை எடுத்துக் கொள்ளலாம். ரசூல் பூக்குட்டி சிறந்த ஒளிப்பதிவுக்காக இப்படத்திற்கு ஆஸ்கார் பரிசு பெற்றிருக்கிறார்.

ஆனால் இந்தியாவில் கிடைக்கும் இப்படத்தின் பிரதியில் ஒளிப்பதிவின் பிரத்தியேகத்தன்மை இல்லாமல் சாதாரண கல்யாண வீடியோ காமிராவில் எடுக்கப்பட்டது போல படம் அமைந்திருப்பது அதிர்ச்சி தருகிறது, ஆஸ்கார் பரிசு பெற்ற ஸ்லம் டாக் மில்லினர் படம் பம்பாயைச் சார்ந்த விளிம்புநிலைக்குழந்தைகளை மையமாகக் கொண்டு அமெரிக்காவைச் சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். இந்தக்குறும்படமும் அமெரிக்காவைச் சார்ந்த ஒரு பெண் இயக்குனரால் , இந்தியாவின் பெனாரசைச் சார்ந்த ஒரு கிராமத்தினரை மையமாக வைத்து அங்கு விளிம்பு நிலையில் வாழும் குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது.

ரோட்டரி, அரிமா சங்கத்தினர் உதடு பிளவுக்கான இலவச சிகிச்சைகளை பல ஆண்டுகளாக தங்களின் சமூகப் பணியில் ஒன்றாக செய்து வருவதை இங்கு குறிப்பிடவேண்டும்.




(கட்டுரை : திரு.சுப்ரபாரதிமணியன், நன்றி : உயிர்மை)

3 comments:

பெசொவி said...

ஒரு திரைப்படத்தின் விமரிசனத்தின் மூலமாக பல பயனுள்ள தகவல்கள், நன்றி, இன்பா!

Loganathan - Web developer said...

சமுகத்தில் இது போல் புறக்கணிக்கப்பட்டர்வர்கள் முன்னேற நாம் உதவி செய்ய வேண்டும். பயனுள்ள தகவல். நன்றி.

சேட்டைக்காரன் said...

உலுக்கும் தகவல். தங்கள் வலையில் உயரமாய் நிற்கிறது.

/// அவர்களின் கிராமச்சூழலும், அங்கு பள்ளி செல்ல விடாமல் தடுக்கும் குழந்தைகளின் கேலியும் முன் வைக்கப்படுகின்றன். இதை சாப நோயாக எடுத்துக் கொள்ளும் முதியவர்களும் இருக்கிறார்கள். இதை மீறி பிங்கியை சிகிச்சைக்காகக் கூட்டிச் சென்று வெற்றி பெற்றுத்திரும்பும்போது அப்பெண்ணுக்கு இயல்பாய் பள்ளிக்குப் போகும் சூழ்நிலையும் , மற்றவர்களுடன் பழகும் சகஜநிலையும் ஏற்படுகிறது.////

ஆயிரம் சொல்லுங்க, வெள்ளைக்காரன் படம் எடுத்தா அர்த்தமும், பயனும் இருக்கும்.

நம்மாளுங்க வேட்டைக்காரனத்தான் எடுப்பாஙக....

 
Follow @kadaitheru