Thursday, December 17, 2009

அன்புள்ள அப்பாவுக்கு,


"குந்தியின் மகனே, சீதம், உஷ்ணம், இன்பம், துன்பம் என்பனவற்றைத் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் வந்து போகும் இயல்புடையன. அநித்யமாயின; அவற்றைப்பொறுத்துக் கொள், பாரதா! ஆண்காளையே! இவை எந்த மனிதனைத் துன்புறுத்தமாட்டாவோ, இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கருதும் அந்தத் தீரன் சாகாதிருக்கத் தகுவான்" .
(பகவத் கீதை,2-ஆம் அத்தியாயம், 14/15 -ஆம் சுலோகம்)


நம்மை மிகவும் நேசிக்கும் ஒருவர், நாம் மிகவும் அறிந்த ஒருவரை வாழ்நாளில் இனி நாம் சந்திக்கவே இயிலாது என்னும் சோகமே மரணம். அந்த வேதனையை, வலியை ஒவ்வொரு மனிதனும் கடந்து போகும் ஒரு சூழல் வருகிறது. பிறக்கும் யாவருக்கும் மரணம் நிச்சியம் என்னும் நிதர்சனம் நமக்கு புரிந்தாலும், மரணம் தரும் வலி தாங்க இயலாத சோகமாகவே இருக்கிறது.
கடந்த 6-12-2009 அன்று இயற்கை எய்திய தனது தந்தைக்கு ஒரு கடிதம் எழுதி, தன் மனத்தின் சுமைகளை இங்கே இறக்கி வைக்கிறார் நமது வாசக நண்பரும், கவிஞருமான திரு. லாரன்ஸ்.

கை பற்றி, மெல்லமாய் அழுத்தி, கண்கள் நேருக்கு நேர் சந்தித்து இதை சொல்லி இருக்க வேண்டும். அப்போது சொல்லாமல், என் தந்தை இறந்து அவர் உடல் நடு வீட்டில் கிட்த்தியபோது அழுது கொண்டே ... டாடி ஐ லவ் யூ திரும்ப திரும்ப மனம் சொன்னது.

கண்கள் என் கட்டுப்பாடின்றி கண்ணீர் சிந்தியது.அந்த வெப்ப நீர் பார்வையை மறைத்த்து. வெளி உலக பிரஞ்கை இன்றி எனக்குள் பேசிக் கொண்டு இருந்தேன்.


சாரி டாடி... இன்னும் உங்களை பார்த்திருக்கணுமோ. தவறி விட்டேனோ. ஒரு மனுசனாய் இருக்க வைத்த்தே நீங்கள் தானே. இந்த உடல், உள்ளம், படிப்பு, சோறு, வாழ்க்கை தரம் என எல்லாம் நீங்கள் தந்த்து தானே. நன்றி என வாய் வார்த்தையாய் சொல்லவில்லையோ.நன்றி என எப்படி சொல்வேன், நான் உங்களின் மறு பிம்பம் தானே.

ஏன் அழுகை. ஏன் புலம்பல். ஏன் துயரம். மரணம் தெரியும் தானே.கவிஞனாகவும், தத்துவ சிந்தையும் என்னுள் அனுமதித்த்தால் இந்த துயரம். இரண்டும் இல்லை என்றால் எம்பது வயசு தகப்பன் சாகும் போது சமனம் தானே .ஆறு மாதம் முன்பு விடுப்பு எடுத்து வந்த போது நானாய் நினைத்து கொண்டேன்.

அடுத்த முறை உங்களை உயிருடன் பார்ப்பேனா என கேள்வி கேட்டு. தெரியாது, சரியாய் சொல்லவும் தெரியாது என பதிலும் யோசித்தேனே. அந்த நினைப்பு வந்த்தால், உங்கள் அருகில் அமர்ந்து நிறைய நேரம் பேசினேனே. மெல்ல தோள் அணைத்து உங்கள் மறுப்பையும் மீறி, அருகில் இருந்த பூங்கா சென்று அமர்ந்தோமே. நீண்ட நேரம் உங்களை பேச விட்டு கண்கள் மூடி கேட்டேனே.சுகர் காரணம் காட்டி, பிஸ்கட் தின்னதை அக்கரையாய் சுட்டிக் காட்டிய போது , அவசரக் குடுக்கையாய் அறிவுரை எல்லாம் சொல்லாது, வேறு என்ன ஆசை. எதுவும் சாப்பிடணுமா, எதுவும் வேணுமா, சினிமா போகணுமா, உடுப்பு எதுவும் வேணுமா, என கேட்டேனே.


மெல்லிய வார்த்தையில் உங்கள் வாழ்வு வெற்றிகரமானது. உழைப்பால் முன்னேறி, நல்ல ஒரு குடும்பம் சமைத்த்தை நினைவு கூர்ந்து எல்லாம் நல்லதே என நாம் இருவரும் கருத்தில் இணைந்தோமே.எல்லா கடமையும் நல்ல படியா முடிஞ்சுச்சு, மேல இருக்கிற ஐயா எப்போ கூப்பிட்டாலும் ரைட்டு என குண்டி மண்ண தட்டி விட்டு போக வேண்டியது தான் என நயம்பட சொன்னீர்களே. தூத்துக்குடி காரர் நீங்கள், கடல்கரை மண்ணில் உட்காருவதும், எழுந்து உடைகள் சரி செய்வதும் என் நினைவுக்கு வந்த்தே. வாழ்க்கை என்பது நம் கடமைகள் நிறைவேற்றும் அல்லது பொறுப்புக்கள் முடிக்கும் தளமாய்த்தான் யோசித்தீர்களா.

நீங்கள் வாழ்வை ரசித்தீர்களா, இன்பம் துய்த்தீர்களா. ஐயா கூப்பிட்டா போக வேண்டியது தான் எனும் வார்த்தை பிரயோகத்தில் இறை நம்பிக்கையும், அன்பு கலந்த வாஞ்சையும் தெரிகிறது. இறைவனை காதலனாகவும், வேலைக்காரனாகவும் பார்க்கும் பாரதியின் பக்குவம் இதை சொல்லிக் கொடுத்த்தோ.


மரணம் மனிதனுக்கு முழுதும் புரியாதது. ஓங்கி நிற்கும் குழப்பத்தில் பயமே பிரதானம். வெல்ல முடியாத மரணத்தில் இயலாமையே பல் இளிக்கும். சே என்னடா இது நாமளும் செத்துப் போவோமே என கோபம். ஏனோ தெரியவில்லை, அமைதியாய் அன்பாய்... ஆங்.... தெரியுமப்பா பிறந்தால் இறப்போம் என அலட்டிக் கொள்ளாமல் அமைதியாய் மரணிக்க கடினம் உள்ளதே இல்லையா?.

தூக்கத்தில் பிரிந்த தங்கள் உயிர், மூடிய போர்வை விலகாத விந்தை, எனக்கு தாங்கள் மனித இயலாமையை மீறியதாய் தோன்றுகிறது. முரண்டு பிடிக்காது, அன்புடன் மரணத்தை முத்தமிட்ட்தாய் தோன்றுகிறது.

அறிவியல், மனிதன் உடம்புதான் அதற்கு மேல் ஒன்றும் இல்லை என அடம் பிடிக்கும். முதலில் ஒத்து கொள்ளாத மனஇயல் கூட பிற்பாடு ஒட்டிக் கொண்ட்து. ஆன்மீகம் ஆசிரமம் கடந்து இன்று ஆஸ்பத்திரியில் நுழைந்து இருக்கிறது. புற்று நோயால் பாதிக்கப் பட்ட நோயாளிகளுக்கு பிராணிக் ஹீலீங், ரெய்க்கி என தனி பிரிவு அமைத்து அப்பல்லோ எனை ஆச்சர்யப்படுத்தியது.


நித்திய வாழ்வு, சொர்க்கத்தில் சுகம் என மதங்கள் எத்தனை மத்தளம் வாசித்தாலும் சராசரி மனிதன் சஞ்சலம் தீரவில்லை. ஆமா..யில்ல என சொல்லிவிட்டு ; இல்ல..... ஆமாம்!!! என சிந்திக்கிறான்.அன்னை இறந்த போது, எனக்கு வாழ்க்கை மேல் ரெளத்திரம். எனை பெற்றவளுக்கு தமிழ் இலக்கியத்தில் அப்படி ஒரு புலமை. சங்க, சமகால இலக்கியத்தில் ஏறக்குறைய எல்லாம் தெரியும். எந்த கடின வார்த்தையாயினும் அர்த்தம் தெரியும். தமிழ், அழிந்து போன கிரந்தம் எல்லாம் தெரியும். கல்வெட்டில் முனைவர் ஆக முயற்சி வேறு. அறைகுறை தமிழ் தெரிந்த நான் வெக்கி தலை குனிந்து ... சே! எப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்குவேன் என ஏக்கப் பார்வை இட வைத்த அன்னை மறைந்த போது. இவ்வளவுதானா. எங்கே அந்த ஞானம், எங்கே அந்த புலமை. என திரும்ப திரும்ப கேள்வி பிறந்து, இது தான் வாழ்க்கைன்னா எதுக்கு வாழணும். எதுக்கு கஷ்டப்படணும் என சிறு குழந்தை போல் திகைத்து நின்றது என் பகுத்தறிவு.எதுவுமே எதற்குமே அர்த்தம் இல்லை என்பதாய் அவசர தீர்மானம் செய்தது.ஆனால் தங்கள் மறைவு எனை சமனமாக்கியது.


இவ்வளவு தாண்டா வாழ்க்கை, பெரிசா அலட்டிக்கிறதோ, கவலைப்படறதோ அவசியமில்லை. என எதிலும் சாராமல் உணர்வுகள் அனாதையாய் இருக்கின்றன.தங்கள் மறைவு எனக்கு மறைமுகமாய் என் சாவு பற்றி பறை அறைகிறது. அதன் ஒலியில் என் செவிப்பறை கிழிகிறது. என் பதவிசு, பொக்கிஷம், கவலைகள் சுவடு தெரியாமல் காணாமல் போயிற்று. என் மரணம் பற்றிய தீர்மானத்தில் வாழ்வு வேறு ஒரு திசையை காட்டுகிறது. நித்திய வாழ்வு எல்லாம் பொறகு பார்க்கலாம். என் இன்றைய தெளிவு நித்தியமாகட்டும்.



ஐ லவ் யூ டாடி.....




திரு. லாரன்ஸ்,தங்கள் பிரியமான தந்தையின் ஆத்மா அமைதி அடையுமாறு பிராததிக்கிறோம்.

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46) .

தன் தாய் மரணம் அடைந்த போது ஒரு நண்பன் இப்படி சொன்னான். "நான் ஒரு மகனா அவங்களுக்கு நெறைய செய்யனும்ன்ணு நினைச்சு கிட்டு இருந்தேன். ஆனா, இதுவரைக்கும் நான் ஒண்ணுமே செய்யலைன்னு அவங்க போன அப்புறம்தான் புரியுது " .

ஆகவே நண்பர்களே, நம்முடைய பெற்றோர்களுக்கு, அவர்கள் நம்முடன் இருக்கும்போதே நாம் முழுமையான அன்பை தருவோம்.





உணர்வு : லாரன்ஸ்
(கடைத்தெருவின் முதல் விருந்தினர் பதிவு).

1 comments:

Loganathan - Web developer said...

எனக்கும் எங்கப்பாவை ரொம்ப பிடிக்கும் , அவரின் உழைப்பும் , அன்பும் அதிகம் பிடிக்கும். பதிவிற்கு நன்றி.

 
Follow @kadaitheru