செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகள் படிப்பதையே நிறுத்திவிடலாமா என்று சில சமயங்களில் தோன்றுகிறது. அந்த அளவிற்கு அதில் வரும் செய்திகள் வாழ்க்கை குறித்தும், மனிதர்கள் குறித்தும் மிகுந்த அவநம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
பெரும் பணக்காரர்களிலிருந்து சாதாரண மக்கள் வரை பணத்திற்காக யாரும், எவ்விதக் காரியத்திலும் ஈடுபடத் தயாராகிவிட்டார்கள் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. அரசியல்வாதிகள், வியாபாரிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் குற்றங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தும் காலகட்டத்தை எல்லாம் ஏற்கனவே கடந்துவிட்டதால், இச்செய்திகள் பெரிய மன அதிர்வை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தொடர்பாக சமீபத்தில் வரும் செய்திகள்தான் மிகுந்த அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. குறிப்பாக, விருநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாவது படிக்கும் மாணவன் ஒருவன், தனது நண்பர்களைப் போல் ஜாலியாக வெளியூர் சுற்றுவதற்காகவும், புதிய ட்ரெஸ் வாங்குவதற்காகவும் வீடு வீடாக நகை கொள்ளையடித்தான் என்ற செய்தி மிகுந்த மனப்பதட்டத்தை ஏற்படுத்தியது.
கடந்த ஆறு மாத காலத்திற்குள் இது போன்று ஏராளமான செய்திகள். இரண்டு மாதங்களுக்கு முன் சென்னைக் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கூட்டாகச் சேர்ந்து, சென்னையில் பைக்குகளைத் திருடி, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விற்றிருக்கிறார்கள். இதில் ஒரு மாணவனின் பெற்றோர் சராசரி நடுத்தர வர்க்க அரசு ஊழியர்கள். செய்தி கேள்விப்பட்டு, போலீஸ் ஸ்டேசனுக்கு வந்த அவர்கள், மகனின் குற்றச் செயல் குறித்துக் கேள்விப்பட்டு, அதிர்ந்துபோய் பையனை ஜாமீனில் கூட எடுக்காமல் சென்றிருக்கிறார்கள்.
அதுபோல் ஒரு தலைமை ஆசிரியரின் மகன் கல்லூரியில் படிக்கும்போது ஆடம்பரச் செலவுகளுக்காக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுக் கைதாகியுள்ளான். ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்கள், அந்தக் கல்லூரியில் சீட்டு வாங்கிக் கொடுக்கும் புரோக்கர் வேலையில் ஈடுபட்டு, அது தொடர்பாக இன்னொரு கோஷ்டியிடம் மோதல் ஏற்பட்டு பெரிய அடிதடியில் முடிந்திருக்கிறது.
இந்தச் செய்திகள் கூறும் செய்தி என்ன?
முன்பு போல் இளம் குற்றவாளிகள் என்பவர்கள் வறுமையினாலும், வளர்ப்புச் சூழலினாலும் விளிம்பு நிலையிலுள்ள சமூகத்திலிருந்து மட்டும் உருவாவதில்லை.
நம்மைப் போன்ற சராசரி நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அக்கௌன்டன்ட்கள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள் போன்றவர்களின் பிள்ளைகளும் கூட வழிப்பறிக்கொள்ளை, திருட்டு போன்ற காரியங்களில் இறங்கிவிட்டார்கள் என்பது இந்தக் காலத்தின் அவலங்களுள் ஒன்று.
தெருவில் ஒரு கொலை நடந்தால் கூட எதற்கு வம்பு என்று ஓடி ஒளியும் நடுத்தரக் குடும்பத்திலிருந்து எப்படி இந்தக் குற்றவாளிகள் உருவானார்கள்?
படிக்கவேண்டும். படித்த பிறகு ஏதோ ஒரு சுமாரான வேலை கிடைத்து, ஒரு சுமாரான பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு, ஒரு சுமாரான வீட்டில், ஒரு சுமாரான வாழ்க்கை வாழ்ந்தால் போதும் என்ற கனவுகளுடன் வளர்ந்து வந்த மாணவர் கூட்டம் என்றிலிருந்து திருடவேண்டும் என்று நினைக்க ஆரம்பித்தது?
இவர்கள் எல்லாம் வறுமையினாலோ, கல்லூரி ஃபீஸ் கட்டுவதற்காகவோ, அக்கா, தங்கைக்குத் திருமணம் செய்து வைப்பதற்காகவோ இந்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை.
இக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் சொன்ன காரணம் ஒன்றுதான்: ஆடம்பரமாக வாழவேண்டும். பைக், கார், குடி, ரிசார்ட்ஸ், பெண்கள்... என்று சொகுசு வாழ்க்கை வாழவேண்டும் என்ற ஆசைதான், கடைசியில் இவர்களைக் கொள்ளைக்காரர்களாக மாற்றியுள்ளது.
உலகமயமாக்கலின் மறைமுக விளைவுகளில் இதுவும் ஒன்று.
உண்மையில் உலகமயமாக்கலின் ஆரம்ப காலகட்டத்தில், ஆங்கில ஊடகங்களின் பாதிப்பில் நானும் ஓபன் மார்க்கெட் எகானமிக்கு ஆதரவாகவே இருந்தேன். இருபது ஆண்டுகள் கழித்து நோக்கும்போது, உலகமயமாக்கலால் பத்து சதவீதத்திற்கும் குறைவான நபர்கள் மட்டுமே பயனடைந்திருக்க... அது நமது மொத்த சமூகத்திலும், தனி மனித வாழ்க்கையிலும் ஏற்படுத்தியிருக்கும் மாபெரும் சீரழிவுகள்தான் இன்று பிரமாண்டமான அச்சுறுத்தலாக உள்ளது.
மாணவர்கள் கொள்ளையில் ஈடுபடுவதற்கான வித்து, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் சக மாணவர்களாலேயே ஊன்றப்படுகிறது. முன்பு போல் இப்போது மாணவர்கள் கிடையாது.
முன்பு மாணவர்களின் வாழ்க்கை என்பது, கொஞ்சம் சிகரெட், எப்போதாவது தண்ணி, கொஞ்சம் கவிதை(?), அரைகுறை கம்யூனிஸ அறிவு, சிறிது காலத்திற்கு சமூகக் கோபங்கள், கட் அடித்துவிட்டு காலைக் காட்சி மலையாளச் சினிமா, சிறிது காதல், சைட் அடித்தல் என்பதோடு முடிந்துவிடும்.
ஆனால் நகரங்களில் இன்று கல்லூரிகளில் படிக்கும் பல மாணவர்களின் வாழ்க்கை முறையைக் கேட்டால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.
அவர்கள் எப்போதும் செல்ஃபோனை டாப்அப் செய்து செய்து பெண் தோழிகளிடம் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். பெரிய வர்த்தக வளாகங்களுக்குச் சென்று இஷ்டத்திற்கு செலவழிக்கிறார்கள. பெரிய பார்களில் ரெகுலராகத் தண்ணியடிக்கிறார்கள். ரிசார்ட்ஸ்களுக்குப் பெண்களைத் தள்ளிக்கொண்டு சென்று அனுபவிக்கிறார்கள்.
அனைத்து வசதியான மாணவர்களும் இப்படிச் செய்வதில்லை என்றாலும், வசதியுள்ள மாணவர்களில் பாதிக்குப் பாதி பேர் நிச்சயம் இது போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சாத்தியமாவதால், சுற்றிலுமுள்ள பணமில்லாத மாணவர்கள் தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகிறார்கள்.
நமது சினிமாக்களும் இளைஞர்கள் என்றால் ஜாலியாகத் தண்ணியடித்துவிட்டு, பெண்களுடன் ஊர் சுற்றுவதுதான் என்ற மாயையை உருவாக்கி வைத்துள்ளதால், எப்பாடு பட்டாவது தானும் அந்த இன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்று துடிக்கிறார்கள். எனவே முதலில் இவர்கள் சிறிதாக வீட்டில் திருட ஆரம்பிப்பார்கள். ஆனால் இவர்கள் ஆடம்பரமாகச் செலவழிக்க நினைப்பதற்கெல்லாம் அது எந்த மூலைக்கு?
நான் விசாரித்த வரையில், சென்னை போன்ற நகரங்களில் ஜாலியாக இருப்பதற்கு இளைஞர்களுக்கு சராசரியாகப் பின்வருமாறு செலவாகிறது.
ஃபோன் செலவு மாதத்திற்குக் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய். பெண் நண்பர்கள் இருந்தால், அவர்களுக்கு வேறு டாப்அப் செய்யவேண்டும். நல்ல பாரில் வாரத்துக்குக் குறைந்த பட்சம் இரண்டு முறை பீர் அடித்தால் கூட அதற்குக் குறைந்தபட்சம் நானூறு ரூபாய் எடுத்து வைக்கவேண்டும். பெண் நண்பர்களும் பீர் அடித்தால், அவர்களுக்கும் இவர்கள்தான் அழவேண்டும். முதலில் எல்லாம் நட்சத்திர ஹோட்டல் பார்களில்தான் பெண்களைக் காணமுடியும். இப்போதெல்லாம் நடுத்தர மக்கள் வரும் பிக்னிக் பிளாஸா போன்ற பார்களில் கூட ஆண்களுடன், பெண்களும் சேர்ந்த வந்து தண்ணீர் அடிக்கும் கண்கொள்ளாக் காட்சியைப் பார்க்கமுடிகிறது
(கிராமத்திலிருந்து வந்திருந்த என் நண்பன் ஒருவன் இதைப் பார்த்த அதிர்ச்சியில் விழித்துக்கொண்டிருக்க... அதில் ஒரு பெண் இவனிடம், "கேன் யு ஹேவ் மேட்ச்பாக்ஸ்?" என்று அவனிடமே சிகரெட்டுக்கு வத்திப்பெட்டி கேட்க... அவனுக்கு ஏறிய போதையெல்லாம் இறங்கிவிட்டது.).
பிறகு மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் சினிமா. பெண் தோழிகள் பிக்அப்பானால், ஏதாவது ரிசார்ட்ஸ். குறைந்தபட்சம் மூவாயிரம் ரூபாய் இல்லாமல் ரிசார்ட்ஸ்க்கு செல்லமுடியாது. எனவே நவீன வாழ்க்கை முறை நமக்கு அளித்திருக்கும் சுகங்களை அனுபவிக்க குறைந்த பட்சம் மாதம் பத்தாயிரம் ரூபாயாவது ஒரு இளைஞனுக்குத் தேவைப்படுகிறது.
இது குறைந்த பட்சம்தான். நீங்கள் நினைத்தால் சென்னையில் மாதம் பத்து லட்சம் ரூபாய் கூட சுலபமாகச் செலவழிக்கமுடியும்.
வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்குப் பிரச்னையில்லை. ஆனால் வேலையில் இல்லாத மாணவர்களுக்கு எவ்வாறு பணம் கிடைக்கிறது?
நகரங்களில் பெரும்பாலான மாணவர்களின் தாய்-தந்தை இருவருமே வேலைக்குப் போவதால், பிள்ளைகளைக் கவனித்து வளர்க்காத குற்ற உணர்வைத் தணித்துக்கொள்ள பிள்ளைகள் கேட்கும்போது கேள்வி கேட்காமல், பணத்தைத் தருகிறார்கள். அந்தப் பிள்ளைகள் அந்தப் பணத்தை எவ்வாறு செலவழிக்கிறார்கள் என்பதை எல்லாம் யாரும் கண்காணிப்பதில்லை.
மேலும் முந்தைய தலைமுறை பெற்றோர்கள் எல்லாம் தங்கள் செல்வச் செழிப்பை வெளிப்படுத்திக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு சம்பாரித்தாலும், பெரியதொரு வீட்டில் இருப்பார்களே தவிர, வெளியே அவர்களைப் பார்த்தால் சாதாரணமான மக்களைப் போல்தான் இருப்பார்கள். எவ்வளவோ பெரிய மனிதர்கள் தங்கள் குழந்தைகளை,
சராசரி மனிதர்கள் போல் பஸ்களில் பள்ளிகளுக்கு அனுப்பியதைப் பற்றி (நடிகர் சிவகுமார் தனது மகன்களை பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்புவாராம்.) கேள்விப்பட்டிருக்கிறோம். என்னுடன் படித்த ஸ்ரீராம் என்ற நண்பனின் வீட்டிற்குச் செல்லும் வரையிலும் அவன் அவ்வளவு பெரிய பணக்காரன் என்று எனக்குத் தெரியவே தெரியாது.
ஆனால் இப்போதைய உயர் நடுத்தர மற்றும் பணக்கார வர்க்கத்தினரிடையே எக்ஸிபிஷனிஸம் என்பது பெரும் நோயாக உருவெடுத்துள்ளது. கல்லூரிப் படிப்பைக்கூட முடிக்காத பையனுக்கு இருபதாயிரம் ரூபாயில் செல்ஃபோன்... கேட்கும்போது கேட்கும் பணம்... கார்... என்று அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.
இந்தக் காலத்தில், இவ்வளவு வசதிகளையும் வைத்துக்கொண்டு ஒரு இளைஞன் நல்லபடியாக வளருவான் என்று எதிர்பார்த்தால் உங்களைப் போல் முட்டாள் வேறு யாரும் இல்லை.
இவ்வாறு வசதியாக வாழும் சக மாணவர்களைப் பார்க்கும் பிற மாணவர்களுக்கு தாமும் அது போல் வசதியாக செலவழிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
சிலர் இதற்காகவே படிக்கும்போதே பார்ட் டைம் வேலையில் சேர்ந்து சம்பாரித்து செலவழிக்கின்றனர். இது பரவாயில்லை. ஆனால் அதில் கூட நினைத்த அளவுக்கு எல்லாம் பெரிதாக சம்பாரித்துவிட முடியாது என்ற நிலையில் சிலர் குற்றச் செயல்களிலும் இறங்குவதின் விளைவே நீங்கள் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் படித்த செய்திகள்.
அடுத்த காரணம், பெற்றோர்களின் கண்காணிப்பின்மை.
இந்தக் காலத்தில் பெரும்பாலான தாய், தந்தை இருவருமே வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். வீடு திரும்ப இரவு ஏழு, எட்டு மணியாகிவிடும். பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் மதியம் 3 மணிக்கே விட்டுவிடுகிறது. பெற்றோர் வீட்டுக்கு வருவதற்குள் நடுவே நாலு மணி நேரம் லட்டு போல் இருக்கிறது(சே... நமக்கெல்லாம் அந்த சான்ஸ் கிடைக்காம போயிடுச்சு.).
இந்த நேரங்களில் தமது பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பலரும் கவனிப்பதில்லை. மேலும் சில வீடுகளில் தாய்மார்கள் வீட்டில் இருந்தாலும் கூட சமூகத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் எவ்வாறு வாழ்கின்றனர் என்பது குறித்த அறியாமை மற்றும் பிள்ளைகளின் மீதுள்ள அதீத நம்பிக்கையாலும் பிள்ளைகளைச் சரியாகக் கண்காணிப்பதில்லை.
எனது அலுவலக நண்பர் ஒருவர், "வீட்டுல கம்ப்யூட்டர் வாங்கினேன். இன்டர்நெட் வேண்டாம்னேன். ஆனா என் பையன் இன்டர்நெட் இல்லன்னா கம்ப்யூட்டரே வேண்டாம். இன்டர்நெட்லயே கோச்சிங்லாம் சொல்லித் தர்றாங்கன்னனான். சரின்னு போட்டேன். ஆனா எனக்குத் தெரிஞ்சு, நாங்க இருக்கறப்ப அவன் இன்டர்நெட்டே போடுறதே இல்லை. ஆனா பில்லு மட்டும் ஆயிரம், இரண்டாயிரம்னு வருது" என்றார்.
எனக்கு அப்படியே அந்தாளைத் தூக்கிப் போட்டு மிதிக்கலாமா என்று தோன்றியது.
வீட்டிலேயே இன்டர்நெட் கனெக்சனைக் கொடுத்துவிட்டு, ஒரு 18 வயதுப் பையன், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பார்ப்பான் என்று நீங்கள் நினைத்தால் உங்களை என்னத்தச் சொல்ல? நல்லா வருது வாயில.
உண்மையில் பிரச்னை என்னவென்றால், நமது பெரும்பாலான பெற்றோர்களுக்கு தற்போதைய பிள்ளைகள் எதிர்கொள்ளும் சூழல்கள் குறித்த அறிவே சுத்தமாகக் கிடையாது. சிலர் கூறலாம்.
பத்திரிகைகளில் எல்லாம் நிறைய செய்திகள் வருகிறதே என்று,
அதைப் படிப்பவர்கள் எல்லாம் ஒரு இருபத்தைந்து சதவீதம் இருந்தாலே பெரிய விஷயம். பெரும்பாலான நவீன பெற்றோர்கள், ஒரு செய்தித்தாள் படிக்கும் பழக்கம் கூட இல்லாத, நம்மைச் சுற்றிலும் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி எதுவுமே தெரியாத பெற்றோர்கள்தான்.
திடீரென்று பையனோ, பெண்ணோ புது செல்ஃபோன் வைத்திருப்பார்கள். கேட்டால் நண்பன் இலவசமாகக் கொடுத்தது என்பார்கள். அப்படியே நம்புவார்கள். யாராவது கொடுத்தார்கள் என்றால், யார் கொடுத்தார்கள்? ஏன் கொடுத்தார்கள்? என்றெல்லாம் விசாரிக்கவேண்டும். ஆனால் எதுவும் கிடையாது. ஒரு வேளை ஒரு திருட்டுக் காரியத்தில் ஈடுபட்டுக் கூட அவர்கள் அந்தப் போனை வாங்கியிருக்கக் கூடும். எனவே கண்காணிப்பின்றி வளரும் குழந்தைகளும் திருட்டு மற்றும் பாலியல் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
அடுத்து நம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்று எவ்வாறு இயங்குகின்றன என்று பார்ப்போம். நமது பள்ளிகளில் மாரல் ஸ்டடீஸ் என்று ஒரு பாடம் இருக்கிறது. இது பெரும்பாலான பள்ளிகளில் ஐந்து அல்லது எட்டாம் வகுப்போடு முடிந்துவிடுகிறது. அடப்பாவிகளா... மாணவர்கள் கெட்டுப்போவதற்கான வயது என்பது 13க்கு மேலேதான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்குப் பிறகு மாரல் ஸ்டடீஸே கிடையாது.
அதுவும் நவீன குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலச் சூழலில்தான் அது மிகவும் அவசியம். விடலைப் பருவத்தில் இருக்கும் மாணவர்களுக்குத்தான் மாரல் ஸ்டடீஸ் என்பது இன்றைய கட்டாயத் தேவை. அவர்களுக்கு இது போன்ற வகுப்புகளில், ஆடம்பர வாழ்க்கை மற்றும் கட்டற்ற சுதந்திரத்தின் பின் விளைவுகள் குறித்தும் எடுத்துக் கூறி, இது மாதிரியான காரியங்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து விளக்கவேண்டும். ஏனெனில் விடலைப் பருவம் என்பது, செய்யும் காரியங்களின் பின் விளைவுகளை அறியாத வயது. ஆனால் அந்தப் பருவத்தில் அதையெல்லாம் எடுத்துச் சொல்ல இங்கு ஆட்களே கிடையாது.
காலம் மாறிவிட்டது. குற்றங்கள் நடக்கின்றன என்பதற்காக அந்தக் காலத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளமுடியாது. ஆனால் குற்றங்களைத் தவிர்த்தாக வேண்டும். என்ன செய்யலாம்?
பெற்றோர்கள், சிறுவயதிலிருந்தே குழந்தைகளிடம் நண்பர்கள் போல் பழகி, அவர்கள் மனதில் உள்ள விஷயங்களைத் தங்களிடம் வெளிப்படையாக விவாதிக்குமாறு பிள்ளைகளை வளர்க்கவேண்டும். அவர்கள் தங்கள் பிரச்சினைகள் கூறும்போது, நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் வழிகாட்டமுடியும்(ஆனால் இவ்வாறு வளர்க்கும்போது நீங்கள் சிற்சில அதிர்ச்சிகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். என் பையன் என்னிடம் ஃப்ரீயாகத் தினமும் ஒரு ஆங்கில கெட்ட வார்த்தைக்கு அர்த்தம் கேட்கிறான்.).
இன்றைய மாணவர்கள் வளரும் சூழ்நிலை என்பது பத்து, இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சூழ்நிலை அல்ல. அவன் உலகமயமாக்கலாலும், நுகர்ப்பொருள் கலாச்சாரத்தாலும் சீரழிந்து கொண்டிருக்கும் ஒரு சமூகத்திற்கு நடுவே வளர்கிறான். எனவே முன்பு எப்போதையும் விட அதிக வழிகாட்டுதல் தேவைப்படும் காலகட்டம் அது.
எனவே தற்போதைய நவீன, ஆடம்பர மற்றும் கட்டற்ற சுதந்திர வாழ்க்கையின் பின் விளைவுகள் குறித்து வீட்டிலும், பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் அம்மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடி, அவர்களின் எண்ண ஓட்டங்களைப் புரிந்துகொண்டு, அதற்கு முறையான வழியில் விளக்கம் கூறி நல்வழிப்படுத்துவதே நமது மாணவர்களைக் குற்றங்களில் ஈடுபடுவதிலிருந்து தடுக்க முடியும்.
வாழ்க்கை அற்புதமான ஒன்று.
சக மனிதர்கள் மீது நம்பிக்கை இழப்பு ஏற்படும்போதெல்லாம், அதை மீட்டெடுக்கவென்றே யாரேனும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பணத்திற்காக மாணவர்கள் கூட குற்றங்களில் ஈடுபடும் இன்றைய காலகட்டத்திலும், கையில் குழந்தையுடன் பூ வைக்க சிரமப்படும் இளம் தாய்க்கு, வியாபாரத்தை விட்டு விட்டு பூ வைத்துவிடும் பூக்காரப் பெண்மணிகளும், புரோட்டோக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே படித்து ஸ்டேட் ரேங்க் வாங்கும் மாணவர்களும், வங்கிகளில் பொறுமையாகக் கேட்பவர்களுக்கு எல்லாம் சலான் எழுதித் தரும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களே மனிதர்கள் குறித்த அவநம்பிக்கையிலிருந்து நம்மை மீட்கிறார்கள்.
(கட்டுரை:திரு.ஜி.ஆர்.சுரேந்திரநாத், உயிர்மை பதிப்பகம்)
Tuesday, May 31, 2011
இன்றைய மாணவர்கள்....
Posted by கடை(த்)தெரு at 2:08 AM
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
Thanks for this thought provoking article. Great.
I am having a blog to inspire youth who are getting distracted by various factors. Pl Visit this link to view my blog "Inspire Minds".
http://changeminds.wordpress.com/
It is surprising to see over 97000 hits for my inspirational blog from youth without any publicity. This shows youth also look for positive and inspirational material to improve their future.
A.Hari
இப்போதுள்ள காலக்கட்டத்தில் பெற்றோர்கள் தன் பிள்ளைகளை அக்கறையுடன் கவனிக்கவில்லை என்பதை விட கவனிக்க நேரமில்லை என்பதை விட அவர்களுக்கு வீட்டில் நிற்பதற்கே நேரமில்லை அப்படி இருந்தாலும் அந்த நேரத்தை தன் பிள்ளைகளிடம் செலவழிக்க நேரமில்லை என்பது தான் மறுக்கமுடியாத யாராலும் மன்னிக்கமுடியாத தண்டனைக்குரிய உண்மை. அன்றாடம் வாழ்க்கையை எப்படியோ ஓட்டினால் போதும் என்றே
ஒப்பேத்துகிறார்கள். நடப்பது நடக்கும் நாம் என்ன செய்யமுடியும் என்று தான் காலங்கள் ஓடுகின்றன என்பதை விட காலங்கள் தான் நம்மை ஓட்டுகின்றன.
இனி அவ்வளவு தான் மீதமுள்ள காலமும் இப்படியே புலம்பியே சென்றுவிடும். உண்மையான பெற்றோர்கள் தன் பிள்ளைகளிடம் அமர்ந்து ஒரு நாளைக்கு அரை மணி நேரமாவது அவர்களிடம் செலவழித்தால் தான் அவர்களுடைய மனநிலையை புரிந்துகொள்ள முடியும்.அவ்வாறு இருந்தால் மட்டுமே தன் பிள்ளைகளை நல்வழிப்படுத்த முடியுமே தவிர வேறு வழியில்லை.
Post a Comment