Saturday, May 28, 2011

அசத்தும் "அஸ்வின்" - சென்னையின் வெற்றி ரகசியம்


ஐ.பி.எல்.2011 இறுதிப்போட்டி.

ஏற்கனவே இந்தியா - பாகிஸ்தான் போல உள்ளூர் போட்டிகளில் சரிசமமாக மோதும் சென்னை - பெங்களூர் அணிகள் மோதிய போட்டி. சென்னை அணி 205 ரன்கள் குவித்து, பெங்களூருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றி இலக்கை நிர்ணயித்தும், யாருக்கும் சென்னை வெற்றி அடையும் என்கிற முழு நம்பிக்கை வரவில்லை.

இதற்க்கு காரணம்....இந்த தொடர் முழுவதும் தனது அதிரடியால் மிரளவைத்த பெங்களூர் அணியின் துவக்க ஆட்டக்காரரும்,மேற்கிந்திய அணியை சேர்ந்தவருமான கிறிஸ் கெயில்.

ஆனால், மற்ற அணிகளில் சோபித்த அவர், சென்ற ஆட்டம் போலவே தமிழக வீரரின் முதல் ஓவரிலேயே எளிமையாக கீப்பர் தோனிக்கு 'கேட்ச்' கொடுத்து வெளியேறினார்.

இந்த தொடரில் அவரை ஆரம்பத்திலியே இரண்டு முறை வெளியேற்றியவர்.. நம்ம சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஷ்வின்.

இது மட்டுமல்ல, உலக கோப்பை தொடரில், காலிறுதியில் உலகின் மிகசிறந்த பேட்ஸ்மேனான ஷேன் வாட்சனை வெளியேற்றி இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார் அஷ்வின்.

சுழல் பந்து வீச்சாளாரான இவர்,கடந்த ஐ.பி.எல் தொடரில் துவக்க பந்து வீச்சாளராக களத்தில் நின்று, சென்னை அணிக்கு பெரும் திருப்பத்தை தந்தார். ஒரு ஸ்பின்னரை துவக்கத்தில் பந்து வீச செய்யும் ஒரு புது டிரண்டை செட் செய்தார் அஷ்வின்.

கடந்த சாம்பியன் கோப்பை போட்டிகளில், 14 விக்கெட்டுக்களை வீழ்த்தி, தொடரின் சிறந்த பந்து வீச்சாளருக்கான தங்கப்பந்து பரிசினை வென்றார்.

அஷ்வினின் பந்து வீச்சு, மற்ற சுழல் பந்து வீச்சாளர்களிடம் இருந்து வேறுப்பட்டது.

கேரம் என்னும் ஒரு புதுவகை பந்துகளை வீசுகிறார் அஷ்வின்.

"ஹர்பஜனுடன் ஒப்பிடுகையில் சராசரியாக தெரிந்தாலும் அஷ்வினின் திறமைகள் வேறுமாதிரியானவை. அவர் சம்பிரதாய சுழலர் அல்ல. சற்று வேகமாக நேராக சிக்கனமாக வீசக்கூடியவர்.

தூஸ்ரா, டென்னிஸ் பால், ஆர்ம் பால் உள்ளிட்ட பல வேறுபாடுகளை பந்து வீச்சில் கொண்டுள்ள அஷ்வின் கடுமையான நெருக்கடிகளின் போது அணித்தலைவரின் வலது கையாக செயல்படக் கூடியவர். மற்றொரு வலு அவர் பந்து வீச்சில் பெறும் பவுன்ஸ். ஓரளவுக்கு நல்ல மட்டையாளரும் கூட. அஷ்வினை புறக்கணிக்க முடியாது." என்கிறார் கிரிக்கெட் விமர்சகர் அபிலாஷ்.

"அவர் புதிதாக தன் வீச்சில் சேர்த்துள்ள கேரம் பந்துக்காக. இலங்கையின் அஜந்தா மெண்டிசினுடையது போன்றே அஷ்வினின் கேரம் பந்தும் லெக்-மிடில் குச்சி லைனில் விழுந்து எகிறுகிறது.

ஹர்பஜன் அளவுக்கு சுழல், லூப், ஃபிளைட் போன்ற செவ்வியல் அம்சங்கள் அஷ்வினுக்கு இல்லை. இந்த காரணத்தினாலே அவர் பஜ்ஜிக்கு சிறந்த ஜோடியாக இருப்பார். ஒரு முனையில் அஷ்வின் ஓட்டங்களை வறள வைத்தால், சர்தாரால் மறு முனைவில் தாக்க முடியும். இருவரும் முற்றிலும் மாறான வீச்சு முறை மற்றும் அணுகுமுறை கொண்டவர்கள் என்பதால் மட்டையாளர்கள் ஒரே போன்றதாக பழகி விடும்படி இந்த ஜோடி அமையாது.

இன்று வலுவான பந்து வீச்சு கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாக்கிஸ்தான் போன்ற அணிகள் சுழல் ஜோடிகளை முக்கிய ஆயுதமாக கொண்டுள்ளன. பாக்கிஸ்தானின் அஃப்ரிடியையும் அவ்வாறே கருதுவோமானால், இந்த ஜோடிகள் முழுநேர சுழலர்கள் தாம். மெண்டிஸைப் போன்றே அஷ்வினால் அவரை முதன்முறை சந்திக்கும் மட்டையாளர்களை தனது புதிர் காரம் பந்தால் கதிகலங்கடிக்க முடியும். " என்றும் கூறுகிறார் திரு.அபிலாஷ்.

இன்று நடந்த ஐ.பி.எல். போட்டியில், முதல் ஓவரில் ஜாம்பவான் கிறிஸ் கெயிலை, அஷ்வின் வீழ்த்திய போதே, சென்னை அணியின் அபார வெற்றி உறுதி ஆகிவிட்டது.
கெயிலின் விக்கெட் வீழ்ந்ததும், தோனி உட்பட நமது சென்னை அணியின் வீரர்கள் , அஷ்வினை கொண்டாடியபோதே, இந்த ஐ.பி.எல் கோப்பை நமதே என்று முடிவு செய்யப்பட்டது.

ஐ.பி.எல்லின் இறுதிப்போட்டியில் அவரின் பத்துவீச்சை கவனியுங்கள்.

நான்கு ஓவர்கள் - மூன்று மிக முக்கிய விக்கெட்டுகள் - கொடுத்த ரன்கள் வெறும் 16 ரன்கள் மட்டுமே.

ஹர்பஜனுக்கு மாற்றாக உருவாகிவரும் அஷ்வின், இந்திய கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம்.

ரஞ்சி கோப்பை போட்டிகளில்,30 ஓவர்கள் வீசும் அஷ்வினுக்கு, டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.


"ஒவ்வொரு போட்டியிலும், நான் புதிதாக கற்று வருகிறேன்.எந்த சூழலிலும் "நம்மால் முடியும்" என்ற எண்ணத்தை நான் விட்டுவிடுவதில்லை" என்று தன்னடக்கத்தோடு தெரிவிக்கிறார் 24 வயது அஷ்வின்.

விளையாடும் ஐந்து போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே முறையாக பந்து வீசிவிட்டு, மற்ற போட்டிகளில் 'மொக்கை' போட்டுவிட்டு, பெரிய 'படம்' காட்டும் ஸ்ரீசாந்தை, ஏதோ மலையாள தெய்வம் போன்று கொண்டாடுகிறார்கள் கேரள மீடியாக்கள்.

ஆனால், எந்தவித ஆர்பாட்டமும் இல்லாமல், விக்கெட்டுகளை வெற்றிகளோடு குவித்து வரும் ரவிச்சந்திரன் அஷ்வின். வளரும் பல கிரிக்கெட் வீர்களுக்கு,ஸ்ரீசாந்துக்கும் சேர்த்து
ஒரு நல்ல முன்னுதாரணம்.

-இன்பா

2 comments:

Anonymous said...

///"ஹர்பஜனுடன் ஒப்பிடுகையில் சராசரியாக தெரிந்தாலும் அஷ்வினின் திறமைகள் வேறுமாதிரியானவை./// உண்மை தான் . ஆனால் ஹர்பஜன் தேசிய அணியில் இருக்கும் போது அஷ்வினுக்கு வாய்ப்பு அதிகமாக வழங்கப்படாது என்றே தோன்றுகிறது. மேற்கிந்திய தொடருக்கான டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு நீங்கள் சொன்னது போல மிகவும் தன்னடக்கமுள்ள வீரர், விக்கெட் எடுத்தாலும் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது போல நடந்து கொள்வதில்லை...

அதிக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதன் மூலம் ஒரு தரமான வீரரா வர வாய்ப்பு உள்ளது
பொறுத்திருந்து பார்ப்போம்

Unknown said...

விளையாடும் ஐந்து போட்டிகளில், ஒரு போட்டியில் மட்டுமே முறையாக பந்து வீசிவிட்டு, மற்ற போட்டிகளில் 'மொக்கை' போட்டுவிட்டு, பெரிய 'படம்' காட்டும் ஸ்ரீசாந்தை, ஏதோ மலையாள தெய்வம் போன்று கொண்டாடுகிறார்கள் கேரள மீடியாக்கள்.
'SUPERU"...

 
Follow @kadaitheru