சிறு நகரங்களின் ரயில் நிலையங்கள்,மாலை வெளிகளில் கோவில்களின் வெளிப்ரகாரங்கள்,சர்ச்சின் வாசல்கள், பள்ளிவாசலின் தனியிடங்கள், பார்க்குகள், பீச் இங்கெல்லாம்,,,, முதுமையில் மனம்விட்டு தங்களின் பழைய நினைவுகளை அசைபோடும் முதுமையான நண்பர்களை நீங்கள் கவனித்து இருக்கீர்களா?
Bucket list அது போன்று இரண்டு நண்பர்களை பற்றிய படம். திரு.ஜகதீஷ்குமார் எழுதிய படத்தின் திரைவிமர்சனம் இங்கே..
"வயோதிகத்தின் விளிம்பிலிருக்கிற ஒவ்வொருவருக்குள்ளும் தங்களது நாட்கள் எண்ணப்படுவது பற்றிய விழிப்புணர்வு இருந்து கொண்டே இருக்கும். இந்த நாட்களில் ஒவ்வொரு தினமும் ஒரு பரிசுப்பொருள் போலத் துலங்குகிறது" என்கிறார் சுஜாதா.
தன் தேக ஆரோக்கியம் இப்போதுபோல் முன்னெப்போதும் மேன்மையாக இருந்ததில்லை என்று தன் கடைசி நாட்களில் சுந்தர ராமசாமி எழுதுகிறார். குழந்தைப் பருவத்தில் நம்மை விட்டுத் தொலைந்துபோன தெய்வீகத்தின் பிரசன்னம் முதுமையின் இறுதிநாட்களில் குடியேறிவிடுகிறது. வாக்கியங்கள் நிதானமாகவும், எளிமையாகவும் வெளிப்படுகின்றன. வாழ்வை அணுகும் முறை நேர்த்தியாகின்றது. சொற்படி கேட்க மறுக்கின்ற இரைப்பைக்கும், இருதயத்துக்கும் ஏற்றாற்போல் அன்றாட நடவடிக்கைகள் மென்மையாகின்றன.
செத்துப் போவதற்குமுன் என்னென்ன செய்துவிட வேண்டுமென்ற ஆசைகளின் பட்டியல் எல்லோரிடமும் இருக்கிறது. ஒரு நாவல் எழுதிவிட வேண்டும்; எகிப்து பிரமிடை, சீனப் பெருஞ்சுவரை, தாஜ்மஹாலைப் பார்த்துவிட வேண்டும். நகரத்தின் எல்லையிலாவது ஒரு வீட்டைக் கட்டிவிட வேண்டும் என்பன போன்று.
நம் வீட்டுக் கிழவிகள் கூட கொள்ளுப் பேத்தியின் கல்யாணத்தைப் பார்த்துவிட்டுத்தான் மண்டையைப் போட வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். எல்லாருக்குமே அந்தக் கடைசித் தருணத்தில் நுழைவதற்குள் முடித்துவிட வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன.
திடீரென்று ஒருநாள் உங்கள் மருத்துவர் உங்களுக்கு இன்னும் மூன்று மாதங்கள்தான் வாய்தா என்று சொல்லிவிட்டால் என்ன செய்வீர்கள்? மத்திம வயதிலிருக்கிறவர்களுக்கு ஏற்படக் கூடிய பதற்றமும், நடுக்கமும், விரக்தியும் குறித்து வேறெப்போதாவது பேசிக்கொள்ளலாம். ஆனால் ஏற்றுக்கொண்டேயாக வேண்டிய கட்டாயத்திலிருக்கிற, மூட்டையைக் கட்டிக் கொண்டு புறப்படவேண்டிய நிலையிலிருக்கிற, முதுமையின் விளிம்பிலிருக்கிற மனிதர்கள் இதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள்?
ஜாக் நிக்கல்சன், மார்கன் ஃப்ரீமன் இணைந்து நடித்துள்ள ‘பக்கெட் லிஸ்ட்’ திரைப்படத்தில் இருவருக்கும் இதுதான் பிரச்சினை. கார் மெக்கானிக்காகப் பணிபுரியும் கார்ட்டருக்கு (மார்கன் ஃப்ரீமன்) இன்னும் மூன்று மாதங்கள்தான் என்று மருத்துவர் சொல்லிவிடுகிறார். அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையின் உரிமையாளர் கோடீஸ்வரர் எட்வர்ட் கோல் (ஜாக் நிக்கல்சன்). அறிமுகக் காட்சியிலேயே அவர் எப்படிப்பட்டவர் என்று காட்டிவிடுகிறார்கள்.
தன் மருத்துவமனையில் ஒரு அறைக்கு இரு நோயாளிகளை அனுமதித்து அவர்கள் தனிமையைப் பாதிக்கிறார் என்று அவர் மீது வழக்கொன்று நீதிமன்றத்தில் வருகிறது. தனக்கு விருப்பமான ஃபில்டர் காபியை அருந்தியவாறே (தங்கநிற ஃபில்டரிலிருந்து நேரடியாக இறக்கிக் குடிக்கிறார்). தன் முடிவை மாற்றிக்கொள்ள முடியாது என்று வாதாடிக் கொண்டிருக்கும்போதே இருமி ரத்தவாந்தி எடுக்கிறார். அவரது மருத்துவமனையிலேயே அவரை அனுமதிக்கிறார்கள். அவருக்குப் பக்கத்துப் படுக்கையில் கார்ட்டர்.தன்னைத் தனி அறைக்குக் கொண்டுசெல்ல அவர் நிர்ப்பந்திக்கும்போது, நீதிமன்றத்தில் வாதாடியது நீங்கள்தான்; இங்கேயே இருங்கள், இல்லையெனில் தீர்ப்பு பாதகமாகிவிடும் என்கிறார்கள்.
எட்வர்டுக்கு மூளை அறுவைச் சிகிச்சை நடக்கிறது. சிகிச்சையின் முடிவில் அவருக்கும் நாள்குறித்து விட்டது தெரியவருகிறது. இருப்பினும் அவர் கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. வகைவகையான உணவுகளை உண்டுவிட்டு நாள்பூரா வாந்தி எடுக்கிறார். எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்கிற மருத்துவருக்கு நடுவிரலைக் காட்டுகிறார். இன்னமும் தன் மேலாளரைப் பெயர் மாற்றி தாமஸ் என்றுதான் அழைக்கிறார்.
இறந்து போவதற்கு ஆங்கிலத்தில் ‘வாளியை உதைத்தல் ‘(kicking the bucket) என்று ஒரு மரபுத்தொடர் உண்டு. ஒருநாள் பக்கத்துப் படுக்கையிலிருக்கும் கார்ட்டர் ‘பக்கெட்லிஸ்ட்’ என்று தலைப்பிட்டு ஏதோ எழுதிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறார் எட்வர்ட். என்னவென்று கேட்க ஒன்றுமில்லை என்கிறார். சாவதற்கு முன்னால் அவர் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியல் அது என்று தெரியவருகிறது. "இங்கபார், எங்கிட்ட பணம் இருக்கு, சாவதற்கு முன்னால் செய்து பார்க்க நினைக்கும் விஷயங்களை நாம் ஏன் செய்து பார்க்கக் கூடாது" என்கிறார் கண்ணைச் சிமிட்டியபடியே.
முதலில் தயங்கும் கார்ட்டர் பின்பு ஒப்புக்கொள்கிறார். மனைவியின் அழுகையையும், அரற்றலையும் மீறி எட்வர்டுடன் புறப்படுகிறார் கார்ட்டர். இருவரும் சேர்ந்து பல ஆயிரம் அடி உயரத்தில் விமானத்திலிருந்து குதிக்கிறார்கள்; சீனப்பெருஞ்சுவரில் புல்லட் ஓட்டுகிறார்கள்; பிரமிடின் உச்சியில் அமர்ந்து வியர்க்கிறார்கள்; தாஜ்மஹாலின் வராந்தாக்களில் உலாவியபடி, தங்களை எரித்தால் அந்தச் சாம்பலை என்ன செய்வது என்று விவாதிக்கிறார்கள். (இந்தியாவில் அவர்களைச் சூழ்ந்து கொள்கிற இந்தியக் குழந்தைகளையும், அவர்களுக்கு எட்வர்ட் வீசி எறிகிற காசுகளையும் காட்டியபோது எரிச்சலாக இருந்தது.) இமயமலை மீதுள்ள புத்தவிஹாரத்தில் வழிபடுகிறார்கள். ஏதோ ஒரு மலைச்சிகரத்தில் ஏற முயற்சித்து, காலநிலை காரணமாகக் கைவிட்டுவிடுகிறார்கள்.
ஆடம்பரமான சொகுசு ஓட்டலில் தங்கியிருக்கும்போது, (உங்கிட்ட எவ்வளவுதான் பணம் இருக்கு? – கார்ட்டர்) கார்ட்டரின் மனைவி எட்வர்டை தொலைபேசியில் அழைத்து, என் கணவனை என்னிடம் திருப்பிக் கொடு என்கிறாள். ஐம்பது வருடங்களுக்கும் மேலாக ஒரே பெண்ணுடன் வாழ்கிற, வேறு பெண்ணுடன் தொடர்பே கொள்ளாத கார்ட்டரைப் பார்த்து (நிச்சயமா இதுவும் லிஸ்ட்டில் இருக்கணும்) வரிசையாய் மனைவிகளை விவாகரத்து செய்துவிட்டுத் தனியாய் வாழும் எட்வர்ட் வியக்கிறார்.
அவர் ரகசியமாய் ஒரு பெண்ணை கார்ட்டரிடம் அனுப்பி வைக்க, அவருக்கு மனைவிக் குழந்தைகளின் ஞாபகம் வந்து விடுகிறது. இறக்கும்போது நமக்குப் பிரியமானவர்கள் மத்தியில் இருப்பதைவிட வேறெதுவும் தேவையில்லை என்று கார்ட்டர் உணர்கிறார். உடனே ஊர் திரும்ப வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறார்.
அமெரிக்கா வந்ததும் கார்ட்டர் எட்வர்டுக்குத் தெரியாமல் காரை அவர் மகள் வீட்டுக்குச் செலுத்தச் செய்கிறார். எட்வர்ட்மீது கோபம் கொண்டு அவரைப் பிரிந்து நீண்ட நாட்களாய் வாழ்கிறாள் அவர் மகள். தன்னைப் போலவே மரணத்துக்கு முன் எட்வர்ட் தன் மகளுடன் வாழவேண்டுமென்று நினைக்கிறார் கார்ட்டர்.
ஆனால் எட்வர்ட் மறுத்து, கோபமடைந்து போய்விடுகிறார். கார்ட்டர் வீடு திரும்பிக் குடும்பத்தோடு இணைகிறார். அவர்களோடு உண்டு மகிழ்கிறார். எட்வர்ட் தனிமையில் புழுங்குகிறார். அடுத்த நாளே தீவிரமாய் உடல் நலம் குன்றி கார்ட்டருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கிறது. அவர் எட்வர்டுக்கு எழுதிய கடிதத்தில் அவர் தன் மகளோடு சேர வேண்டுமென்ற விருப்பத்தை வெளியிடுகிறார் கார்ட்டர். தனிமையின் கொடுமையைத் தீவிரமாய் உணர்ந்திருக்கும் எட்வர்ட் நண்பனின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய மகளோடு சேருகிறார். சிகிச்சை பலனின்றி கார்ட்டர் இறக்கிறார்.
இறுதிச்சடங்கில் கார்ட்டரின் இறுதிமாதங்கள் தன் வாழ்வில் மிகச்சிறந்த நாட்கள் என்று நினைவுகூறுகிறார் எட்வர்ட். அவர் கண்களில் துளிர்க்கும் கண்ணீரில் தூய்மையான நட்பு வழிகிறது.
ஜாக் நிக்கல்சனும், மார்கன் ஃப்ரீமனும் இணைந்து ஒரு இனிமையான அனுபவத்தைக் கொடுக்கிறார்கள். முதியவர்கள் உலகிற்குள் புகுந்து பார்த்ததுபோல் இருக்கிறது. மரணத்தை வெகுமென்மையாய் எதிர்கொள்ளும் இருவரின் மனமுதிர்ச்சியும் நமக்கும் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.
(கட்டுரை : ஜெகதீஷ் குமார்)
Thursday, May 12, 2011
Bucket List - திரைவிமர்சனம்
Posted by கடை(த்)தெரு at 10:43 PM
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
விமர்சனம் நல்ல இருக்கு.
படம்??
பார்த்துட்டு சொல்றேன்
Extraordinary movie.....Except one scene as u have mentioned....
nanri,
nanri
Post a Comment