Monday, May 16, 2011

என்றும் உன் நினைவுகளில்....


கவிதையின் விதை:
காதலன் : Zhuang Huagui (வயது 26 ) காதலி : Hu Zhao (வயது 21 )

சீனாவை சேர்ந்த இந்த இளம் காதலர்கள் ஆயுள் முழுவதும் கரம்பிடித்து நடக்க முடிவெடுத்தார்கள். திருமணம் நடைபெற ஒரு வாரமே இருந்த நிலையில், மணமகளாய் இருக்கவேண்டியவள் மரணதேவனால் களவாடப்பட்டாள்.

சில சமுக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டாள் அந்த தேவதை. ஆனாலும், காதலன் நிச்சயித்த அதே தேதியில் அவளை திருமணம் செய்தான்.

ஆம்,அவளது இறந்த உடலுக்கு மோதிரம் அணிவித்து,தனது அன்பு மனைவியாய் ஏற்றுக்கொண்டான்.

இறப்பு என்பது உடலுக்குதானே. காதலுக்கு.....?

சில மாதங்களுக்கு முன் சீன காதலர்களை உலுக்கிய இந்த செய்தி... இங்கே அந்த காதலனின் மனதாய்...


ரோஜா
செடியில் இருந்தால் என்ன?
பூஜையில் இருந்தால் என்ன?

அதுபோலவே
நீயும்...
உயிரோடு இருந்தபோதும்
இல்லாதபோதும்.



இந்த
சவப்பெட்டியில் குவிந்துகிடக்கும்
மலர்கொத்துக்களில்
நீ மட்டுமே
உயிர்ப்பாய் இருக்கிறாய்.

மரணதேவன் திறக்கவேமுடியாமல்
பூட்டிய
உன் விழிச்சிறைகளில்
சிக்கி படபடக்கின்றன
நம் காதல் பறவைகள்.

காதலுக்கு கண்ணில்லை
எவ்வளவு பெரிய பொய்.

இங்கேயே சுற்றிகொண்டிருக்கும்
உன்
ஜீவனை
காண்கின்றன என் கண்கள்

உடல் பாதி
உயிர் பாதி
பகிரல்கள்
எல்லா திருமணங்களிலும்.

முழுவதுமாய்
உயிர்களின் பகிரல்
நம் திருமணத்தில் மட்டும்.

'பிரியும்' விடை தருகிறேன்
உன் உடலுக்கு.

பத்திரமாய் வைத்திரு.
இன்று நான்
சூட்டும் திருமண மோதிரத்தை.

அதுவே...
நாளை
சொர்க்கவாசல் தேடி
உனக்காக வரும்
என் ஆன்மாவுக்கான திறவுகோல்.

நீ
இல்லாதபோதும்
இருப்பதாய்
நினைத்துகொண்டிருந்தவனுக்கு...

நீ
இப்போது இல்லாமலே போய்விட்டது
ஒரு குறையா என்ன?

ஓயாது உன் நினைவுகள்
அடிக்கும்
என் இதயக்கடற்கரை.

அங்கு
சங்குகளாய்...
சிதறிக்கிடக்கின்றன
நாம்
காதலித்த நொடிகள் ஒவ்வொன்றும்.

தேடித்தேடியே
இனி தீரும்
என் ஆயுள்.

காதல் போயின்
சாதல் என்றானே பாரதி
இதோ..
இங்கே..
சாதலுக்கு பின்னும்
வாழும் உண்மைக்காதல்.




கவிதை : இன்பா

1 comments:

லாரன்ஸ் said...

நெஞ்சை உருக்கிய பதிவு.

ஆழமான அர்த்தமான ஒரு செய்தியை அழகாக கவிதை வரிகளாக படர விட்டு, படிப்பவரை நெகிழ்த்தி விட்டீர்கள்.

இதயம் கனத்தும், கண்கள் பனித்தும், கவிதை வரிகள் வாசித்து மனம் மலர் போல் ஆனது.

வாழ்த்துக்கள் இன்பா, தொடர்ந்து கலக்குங்க...

 
Follow @kadaitheru