Wednesday, May 18, 2011

யாழ்ப்பாண நூலக எரிப்பு பற்றிய குறும்படம்



ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர்.

அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். அதிலுள்ள பொருள்கள் சுமார் 97,000 புத்தகங்கள்.

சில மணி நேரங்களில் இரண்டுமே தீக்கிரையாகின்றன. அன்று காலை கண் விழித்த உலகம் இக் காட்டுமிராண்டித்தனமான செயலால் அதிர்ந்துபோனது.

ஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் ஒரு பெரும் நூலகம் மனிதகுல நாகரிகத்தின் கருவூலம். சிங்களவர்களாகிய தங்கள்மீது தமிழர்கள் அறிவாதிக்கம் கொண்டிருப்பதாக நினைத்து அதனை அழிக்க வேண்டித் தமிழர்களின் தொன்மை, இலக்கியம் ஆகியவற்றின் பாசறை யாழ் நூலகம் என்ற எண்ணத்தில் அதை எரித்ததன் வாயிலாக, சிங்களவர்கள் தங்களையும் சேர்த்து அழித்துக்கொண்டார்கள்.

அந்நூலகத்தில் இருந்தவை தமிழர்களின் உடமைகள் மட்டுமே என்று அவர்களால் எவ்வாறு எண்ண முடிந்தது? ஸ்ரீலங்காவின் மொத்த சரித்திரமும் அங்குதானே குடிகொண்டிருக்கும்? பேதமைக்கு இதைவிடவும் வேறொரு உதாரணம் கூற முடியுமா?

ஆனால், இது பேதமையன்று; இனப்போருக்குக் கிடைத்த வெற்றி என்ற ஸ்ரீலங்கா அரசின் அரசியல் பார்வையைத் தமிழர்கள் எவ்வாறு பாவித்தனர் என்பதைப் பற்றிய 49 நிமிட நேர டாகுமெண்டரி படம் எரியும் நினைவுகள்.

இப்படத்தின் இயக்குனர் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த திரு.சோமிதரன்.

இனப்போர் பற்றிய பெரும் வரைவுகளுக்குச் செல்லாது படம் யாழ்ப்பாண நூலகம் என்னும் மையத்திற்கு உடனே சென்றுவிடுகிறது.

1933இல் யாழ்ப்பாணத்தில் கே. எம். செல்லப்பா என்னும் ஒரு நூல் ஆர்வலரின் முயற்சியால் ஒரு சிறு நூல்நிலையம் தொடங்கப்பட்டது. பொதுமக்களின் கொடையாகப் பெறப்பட்ட 844 நூல்களுடன் அது 1935இல் யாழ்ப்பாண நகரசபையின் வசம் ஒப்புவிக்கப்பட்டது. பெரிய கட்டடத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நூலக விஞ்ஞானி எஸ். ஆர். ரங்கநாதன் அழைக்கப்பட்டார்.

கட்டடக் கலைஞர் நரசிம்மன் வரைபடம் தந்தார். இருவரும் இந்தியர்கள். 1954இல் யாழ்ப்பாணப் பொதுசன நூலகக் கட்டட அடிக்கல் நாட்டப்பட்டு 1959இல் நூலகத் திறப்பு விழா நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் இயங்கிவந்த அமெரிக்க நூலகம் அதனுடன் இணைந்ததால் நூல்களின் எண்ணிக்கை பெருகியது. பயன்பெறுபவர்களும் அதிகமாயினர். ஆனால், இந்தச் சரித்திரம் மே 31, 1981 அன்று முடிவிற்குவந்தது.

அன்றைய யாழ்ப்பாண மாநகர முதல்வர் இராசா. விஸ்வநாதன் யாழ் நூலக எரிப்பு, அதைத் தொடர்ந்து கடைகள், ஈழ நாடு பத்திரிகை அலுவலக நாசங்கள் ஆகியவற்றினால் மொத்த இழப்பு 100 மில்லியன் ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கணக்கிடுகிறார்.

சமன் செய்யும் முயற்சிகளில் ஒன்றாக யாழ்ப்பாண நூலகப் புனருத்தாரணம் மேற்கொள்ளப்பட்டது. 1984இல், எரிக்கப்பட்ட நூலகத்தின் மூன்றாமாண்டு நினைவாகப் புதிய நூலகக் கட்டடம் பழைய கட்டடத்தின் மேற்குப் பகுதியில் சிறிய அளவில் திறந்து வைக்கப்பட்டது. மே 1985இல் மீண்டும் அங்கே குண்டுகள் வெடித்தன.

அது யுத்த களமாக மாறியது. வட பகுதியில் மூண்ட போரில் யாழ்ப்பாணத்திலிருந்து 5 லட்ச மக்கள் ஒரே நாளில் வெளியேறினர். சிங்களவர்களை எதிர்க்கவோ ராணுவத்தினருக்குப் பதிலடி கொடுக்கவோ தமிழர்களால் இயலாத நேரம் அது. ஆனால், நிலைமை விரைவில் மாறியது. ஆயுதம் ஏந்திய தமிழ்ப் போராளிகளின் தாக்குதல், தமிழீழம் என்னும் கோரிக்கை ஆகியவற்றால் நிலைகுலைந்த அரசு சமாதானப் பேச்சிற்கு இணங்கிற்று. சந்திரிகா குமாரதுங்கா அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்திசெய்யக்கூடியவராகக் கருதப்பட்டவராதலால் அவர் 1994இல் அதிபரானார்.

நல்ல பெயர் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திலிருந்த பொதுசன ஐக்கிய முன்னணி, நூலகத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டது. புத்தகமும் செங்கல்லும் திரட்டும் பணியில் ஈடுபட்டது. அதாவது பள்ளிக் குழந்தைகளும் கிராம மக்களும் ஒவ்வொருவரும் நூலகத்திற்கு ஒரு புத்தகமோ செங்கல்லையோ அளிக்கும்படி வேண்டப்பட்டது.

அத்திட்டம் பெரும் வெற்றி பெற்றது. அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆர்வம் காட்டாது நூலகத்தை மீண்டும் எழுப்புவது என்னும் அடையாளச் செயல்பாட்டை மோசமான அரசியலாகத் தமிழர்கள் பார்த்தார்கள். சாம்பலாக்கப்பட்ட நூலகம் நினைவுச் சின்னமாகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்று அவர்கள் நிபந்தனையிட்டனர்.

ஆனால், ஸ்ரீலங்கா அரசினர் அதை நிராகரித்துவிட்டு அதே இடத்தில் புதிய நூலகத்தை எழுப்பியுள்ளனர். அதன் திறப்பு விழாவிற்குத் தமிழர்கள் எதிர்ப்பினைக் காட்டவே, அந்த விழாவை நடத்தாமலேயே நூலகம் 2003இல் இயங்கத் தொடங்கியது. நூலகப் பகுதி ராணுவத்தின் உச்ச பாதுகாப்பு வளையத்தினுள் இருப்பதால் அது இன்று ஒரு சிறையாகக் காட்சியளிக்கிறது.

யாழ் நூலகம் ஒரு எரிகிற பிரச்சினையாகத் தொடர்கிறது.

இதுவரை எவரும் தொட்டிராத ஒரு நிகழ்வினை, யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட அதே ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த இயக்குநர் சோமிதரன் திறம்படக் கையாண்டிருக்கிறார். இம்மாதிரிக் கடந்த காலமொன்றைப் படம்பிடிக்கும்பொழுது தகுந்த ஆவணங்கள் தேவை. இனப்போரில் ஸ்ரீலங்கா ஈடுபட்டுள்ள நிலையில் அத்தகைய ஆவணங்கள் அங்கிருந்து கிடைப்பது அவ்வளவு சுலபமானதல்ல.

சோமிதரன் அந்தக் குறைபாட்டினைப் பார்வையாளர்கள் அதிகம் உணராத வண்ணம் நேர்காணல்கள் வாயிலாகவே படத்தை எடுத்துச்செல்கிறார். ராணுவம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள யாழ் நூலகத்தைப் படம்பிடிப்பது சற்றும் எளிதானதல்ல.

அவர் மிகுந்த லாவகத்துடன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார். மினி டிவி, ஹேண்டிகேம் என்று கிடைத்த உபகரணங்களைக் கொண்டு யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், அந்த இடத்திற்குத் தன்னை அழைத்துச் சென்ற கார் டிரைவரை வைத்தே சொற்ப வசதிகளுடன் அவர் துணிகரமாகச் செயல்பட்டிருக்கிறார். படத்திற்கான ஆய்வினையும் அவரே மேற்கொண்டுள்ளார். லயோலா கல்லூரி விஷ§வல் கம்யூனிகேஷன் மாணவரான அவர், 'நிகரி' என்கிற அமைப்பினூடாகத் தொழில் திறன் மிகுந்த இப் படத்தைத் தயாரித்துள்ளார்.

நூலக எரிப்பு உணர்வுபூர்வமாகப் பார்க்கப்பட்டிருக்கிறது.

ஆனால், நூலக இழப்பு விஞ்ஞானப் பார்வையுடன் அணுகப்பட்டிருக்க வேண்டும். 97,000 நூல்கள் தீயில் கருகின என்பதை அடிக்கடி சொல்லும்பொழுது அவற்றில் இருந்த அரிதான நூல்கள் பற்றிக் குறிப்பிட்டிருக்க வேண்டும். நூலகத்தின் சிறப்புப் பயன்பெற்றவர்களின் நேர்காணல்களைச் சேர்த்திருக்க வேண்டும்.

புலம்பெயர்ந்து வாழ்கிற ஸ்ரீலங்காத் தமிழர்களையும் இதன் பொருட்டு நாடியிருக்கலாம். அப்போதுதான் நாம் எவற்றையெல்லாம் இழந்து நிற்கிறோம் என்பதை இன்றைய தலைமுறையினர் உணர முடியும். பேராசிரியர் கா. சிவத்தம்பி அணுகப்பட்டிருந்தும் அவரிடமிருந்து அடர்த்தியான விஷயங்கள் எதுவும் திரளாதது ஏமாற்றம்தான். நூலகம் பற்றி எடுக்கப்பட்ட இப்படத்தில் இவை சுட்டிக்காட்டப்பட வேண்டிய குறைகள். ஆனால், இது வீடியோ படம் என்பதால் அடுத்த பதிப்பிலேயே இக்குறைகளை நேர் செய்துகொள்ள முடியும்.

சூடான அரசியல் விவாதங்களை வெளிப்படையாக எதிர்பார்ப்பவர்களுக்கு இப்படம் ஏமாற்றம் அளிக்கக்கூடும். ஆனால், பல்வேறு விவாதங்களுக்கும் படத்தில் இடம் உண்டு. இன்று நிலவும் அரசியல் நிலைமை குறித்த கவனத்துடன் ஒரு சுய தணிக்கையை மேற்கொண்டு சோமிதரன் படத்தை எடுத்திருக்கிறார்.

மிதவாதிகளே நேர்காணல்களில் இடம்பெற்றுள்ளனர். இது போன்ற காரணங்களால் இப்படம் சிக்கல்களின்றி எங்கும் உறுதியாகத் திரையிடப்படும் வாய்ப்பினைக் கொண்டுள்ளது. இருபத்தியேழு வருடங்களுக்கு முன் நடந்த ஒரு பேரழிவு ஏதோ நேற்று நடந்தது போன்ற அண்மை உணர்வு கொள்ளும் வகையில் படத்தில் சித்தரிக்கப்பட்டிருப்பது இயக்குநரின் திறமைக்கு மேலும் ஓர் எடுத்துக்காட்டு.

(நன்றி : பிரபல குறும்பட இயக்குனர் திரு.அம்ஷன்குமார்,காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

source : http://www.burningmemories.org/

1 comments:

Anonymous said...

Each [url=http://papoziw.abgefahrene-website.de/novolog-flexpen-patient-assistance/]flexpen size[/url] avoided suggested [url=http://papoziw.abgefahrene-website.de/pantoprazole-$4.00/]pantoprazole 10[/url] vaulted entrusted [url=http://papoziw.abgefahrene-website.de/bactroban-2-cream/]bactroban ointment used for[/url] tubes upward [url=http://papoziw.abgefahrene-website.de/novation-hospira-heparin/]hospira[/url] jogged towering [url=http://papoziw.abgefahrene-website.de/what-is-malarone/]buy malarone[/url] sharp plotted [url=http://papoziw.abgefahrene-website.de/berna-products/]berna dean he's mine[/url] recruiting endurance [url=http://papoziw.abgefahrene-website.de/bacteriostatic/]bacteriostatic saline v s lidocaine[/url]

 
Follow @kadaitheru