Monday, May 9, 2011

"டிராபிக்" - கமலின் அடுத்த படம்



"என்னுடைய சிந்தனையை விரிவுபடுத்தியது மலையாள திரைப்படங்கள்தான்" என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் கமல்ஹாசன்.

சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு, நம் தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்லாது இந்திய சினிமா உலகிலும் முன்னோடியாக இருந்தது மலையாள திரைப்படங்கள்.

சிறந்த நடிகர்,சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் போன்ற தேசிய விருதுகள் அந்த காலகட்டத்தில் மலையாள திரையுலகிற்கு மட்டும்தான் செல்லும்.

அமரம்,பரதம்,மணிசித்திரதாழ், பூதகண்ணாடி,தாளவட்டம்,தனியாவர்த்தனம் உட்பட பல அற்புத,உலக தரமான திரைப்படங்களின் களமாக இருந்தது கேரளா.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்தில், சிறந்த தொழிநுட்பம், இசை, பிரம்மாண்டம் போன்ற அம்சங்களால் தமிழ்சினிமா கேரளாவில் பெரும் வளர்ச்சி பெற்றது.

அதே சமயம், தெலுங்கு படங்களின் மசாலாத்தனங்களும் அங்கு வரவேற்ப்பு பெற, கேரள திரையுலகம் தனக்கே உரித்தான யதார்த்த பாதையில் இருந்து விலகி, கலையம்சமும் இல்லாமல், பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாமல் 'மொக்கை' படங்களின் உலகமாகி போய்விட்டது. மலையாள சினிமா புதிய இளைஞ்ர்களின் வருகை இல்லாமல் ,தொழில்நுட்ப வளர்ச்சியும் இல்லாமல் பின்னடைவை சந்தித்து விட்டது.

இத்தகைய சுழலில், கேரளாவில் நல்ல தரமான படங்களின் வருகைக்கு மீண்டும் நம்பிக்கை தந்து இருக்கிறது ஒரு படம். பல வருடங்களுக்கு பிறகு அழுத்தமான கதையுடன் அழகியல் யதார்த்த சினிமா ஒன்று பெரும் வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

அந்த படம்தான்....."டிராபிக்".

படத்தின் இயக்குனர் ராஜேஷ் பிள்ளை என்ற இளைஞர். மீண்டும், இந்த படத்தின் மூலம் ஒரு புதிய வெளிச்சத்தை தந்து இருக்கிறார்.


படத்தில் பிரதான வேடத்தில் நடித்து என்று சொன்னால் அது தவறு. வாழ்ந்து இருப்பவர்..சீனிவாசன்.

சீனிவாசன்...எத்தனை அற்புதமான கலைஞர். நடிகர்,எழுத்தாளர்,இயக்குனர் என்று பல முகங்களை கொண்டவர்.இந்தியாவில் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக போற்றபடவேண்டியவர் சீனிவாசன். ஏற்று கொண்ட கதாபாத்திரதிற்கு இவ்வளவு அளவான,பொருத்தமான நடிப்பை வேறு யாராலும் தர இயலுமா?

"டிராபிக்" - ஒரு டிராபிக் சிக்னலில் சந்திக்கும் பலவிதமான மனிதர்களை, அவர்களது கதைகளை பற்றி பேசுகிறது.

"relation between the series of events " என்று கமல் அவர்கள் 'தசாவதாரம்' படத்தில் மூக்கை தொட்டு சொன்னதை, ஒரு எளிமையான கதை மூலம் பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லி இருக்கிறார் ராஜேஷ் பிள்ளை.

சில வருடங்களுக்கு முன், சென்னையில் ஒரு இதயமாற்று அறுவை சிகிச்சை நடைபெற, பாதுகாக்கப்பட்ட இதயம் மும்பையில் இருந்து கொண்டு வரப்பட்டது. காவல்துறை ஒத்துழைப்போடு, குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு உள்ளாக அந்த இதயத்தை கொண்டுவந்து சேர்த்து சாதனை படைத்தனர்.

அந்த சாதனையே..இப்படத்தின் கதைக்கரு.

"டிராபிக்" படத்தில் பல கதாபாத்திரங்கள். ஆனால், அனைவருக்கும் பங்கு உள்ள கதை.

இதில், நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்.

சுதேவன் என்ற லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட டிராபிக் போலீஸ்காரர்(சீனுவாசன்), சித்தார்த் என்ற நிஜவாழ்விலும் போலித்தன பகட்டு முகமூடியோடு வாழும் முன்னணி நடிகர்(ரகுமான்), ரீஹான் என்கிற இளம் பத்திரிக்கை நிருபர், ஏபெல் என்கிற இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணர்.

இந்த நான்கு கதாபாத்திரங்களையும் ஒரு டிராபிக் சிக்னலில் நடக்கும் விபத்து எப்படி இணைக்கிறது என்பதை மிக யதார்த்தமாக சொல்லி இருக்கிறார்கள்.அதே சமயம், விறுவிறுப்புடனும்.

சுதேவனுக்கு ஒரு அமைச்சரின் சிபாரிசு மூலமாக மீண்டும் காவல்துறையில் வேலை கிடைக்கிறது. அவசரகதியில் நடிகர் சித்தார்த்தை பேட்டி காண செல்லும் ரீஹான், ஒரு சிக்னலை கடக்கும்போது அவசரகதியில் வரும் காரில் அடிபட்டு உயிர் பிழைப்பது கடினம் என்ற நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தனது மனைவிக்கும், நண்பனுக்கும் உள்ள கள்ளதொடர்பை அறிந்து, அவள் மீது காரை ஏற்றிவிடுகிறார் டாக்டர் ஏபெல்.

இந்த சூழ்நிலையில், பாலக்காட்டில் இருக்கும் நடிகர் சித்தார்த்தின் பதிமூன்று வயது மகளுக்கு அவசரமாக இதய மாற்று சிகிச்சை செய்ய இதயம் தேவைப்படுகிறது. ரீகானின் இதயத்தை தர, அவனது பெற்றோர்கள் சம்மதிக்க, அந்த இதயத்தை பாலக்காட்டுக்கு கொண்டு செல்லவேண்டும்.

எர்ணகுளத்தில் இருந்து பாலக்காடு 180 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும். விதிக்கப்பட்ட காலக்கெடு...இரண்டு மணிநேரம் மட்டுமே. வழியில் உள்ள டிராபிக் சிக்னலில் காவல்துறையினர் ஒத்துழைப்பு தர, வழியில் எங்கும் நிற்காமல் நூறு கிலோமீட்டர்க்கும் மேலான வேகத்தில் சென்றால் மட்டுமே இலக்கை குறிப்பிட்ட நேரத்தில் அடையமுடியும் என்று பெரும் சவாலான நிபந்தனை.

தன் மீது உள்ள லஞ்ச களங்கத்தை துடைக்க சுதேவன் அந்த பொறுப்பை ஏற்க, கூடவே தனது மனைவி மீது கோபத்தில் கார் ஏற்றிவிட்டு அவளை கொன்று விட்டதாக தவிக்கும் டாக்டர் ஏபெல்,அந்த பயணத்தில் இணைக்கபடுகிறார்.

சுதேவன் சாதித்தாரா? டாக்டர் ஏபெல் என்னவானார்? நடிகர் சித்தார்த்தின் மகளுக்கு சரியான நேரத்தில் இதயமாற்று சிகிச்சை நடந்ததா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள்தான், படத்தில் இடைவேளைக்கு பின் வரும் இரண்டாம் பகுதி.

கோபம்,காமம்,காதல்,ஏமாற்றம்,போலித்தனம், பாசம்,நட்பு,துரோகம் என்று எல்லாவித மனிதர்களின் உணர்ச்சிகளின் குவியலும் அழகியலோடு படத்தில்,இந்த இரண்டு மணிநேரத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன.

படம் முழுவதும் அடிநாதமாய் இழையோடுகிறது மனிதநேயம். இயக்குனர் ராஜேஷ்பிள்ளைக்கு வாழ்த்துக்கள்.

படத்தில் ஹைலைட்டான பகுதி, எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு இடையே உள்ள வழிநெடுக இருக்கும் தடங்கல்களை சுட்டிக்காட்டி,காவல்துறை அதிகாரி ஒருவர் ரீஹானின் இதயத்தை, இரண்டு மணிநேரத்திற்குள் கொண்டு சேர்க்க உத்திரவாதம் தர இயலாமல் மறுக்கிறார்.அவரிடம் தொடர்பு கொள்ளும்,பாலக்காடு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் பேசும் ஒரு வசனம்....

"நீங்கள் மறுத்தால், ஒன்றும் நடக்கபோவதில்லை.இந்த நாளும் ஒரு சாதாரண நாளாக கடந்து போகும். ஆனால், இந்த பொறுப்புக்கு நீங்கள் ஆமாம் என்று சொன்னால், இந்த நாள் சரித்திரத்தில் இடம் பெறும்".

'டிராபிக்' படமும் மலையாள சினிமா சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்று விட்டது.


நம் தமிழிலும் இந்த சிறந்த படைப்பு வெளிவரப்போகிறது. இந்த படம் பார்த்த, கமலஹாசன் படத்தின் உரிமையை வாங்கிவிட்டார்.'உன்னைப்போல் ஒருவன்' படத்திற்கு பின் அவர் செய்யப்போகும் ரீமேக் இது.

"டிராபிக்" - கமலின் அடுத்த படம்.

கமலின் கைவண்ணத்தில் மூலத்தை விட மேலும் மெருகேறி, இப்படம்
நம் தமிழ் சினிமா சரித்திரத்திலும் நீங்கா இடம்பெறும் என்று எதிர்பார்ப்போம்.

-இன்பா

0 comments:

 
Follow @kadaitheru