Thursday, May 5, 2011

என்டோசல்பான் என்னும் சாத்தான்



"நமது மத்திய அரசை பன்னாட்டு மற்றும் வர்த்தக நிறுவனங்கள்தான் நடத்துகின்றன " என்று ஒரு பேட்டியில் கூறி இருந்தார் எதிர்க்கட்சி தலைவர் திரு.அத்வானி.

அவர் கூற்று நூற்றுக்கு நூறு சதம் உண்மை என்பதை நிருபிக்கும் விதமாக மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

பன்னாட்டு அணு உலைகளை திறப்பது,பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை பெட்ரோலிய நிறுவனங்களிடம் ஒப்படைத்தது...தற்சமயம் அதை விட ஒரு மிகப்பெரிய கொடுமையை மக்களுக்கு இழைத்து இருக்கிறது மத்திய அரசு.

கம்யுனிஸ்ட் ஆட்சி நடைபெறும் கேரளாவில் சமிபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருக்கிறது.

காசர்கோடு - கேரளாவில் உள்ள அழகான மாவட்டம். கேரள - கர்நாடக எல்லையில் அமைந்து உள்ள, முந்திரி காடுகள் நிறைந்துள்ள மாவட்டம். (மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் "உயிரே" பாடல் காட்சி மற்றும் வசந்தின் சத்தம் போடாதே படத்தில் இந்த காதல் போன்ற பாடல்கள் எடுக்கப்பட்ட "பேக்கல் போர்ட்" இங்குதான் உள்ளது).

இங்கு உள்ள முந்திரி மரங்களை பூச்சிகளிடம் இருந்து பாதுகாக்க என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தின் பயன்பாட்டை முந்திரிக்காட்டு விவசாயிகள் அதிகரிக்க தொடங்க, அதன் விளைவுகள் பயங்கரமாக விஸ்வரூபம் எடுத்து உள்ளது இப்போது தெரியவந்து உள்ளது.

சமிபகாலமாக அந்த மாவட்டத்தில் உடல் முடங்கி போகும் குழந்தைகளின் பிறப்பு கணிசமாக அதிகரிக்க, அதன் காரணம் இந்த என்டோசல்பான் மருந்தே என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது.



காசர்கோட்டை சேர்ந்த புருஷோத்தமன் என்கிற ஏழை விவசாயின் பதிமூன்று வயதான மகளான பிரியங்கா, என்டோசல்பானால் பாதிக்கப்பட்டு நடக்கவும் இயலாமல் ஒரு கோமா நோயாளி போல வாழும் செய்தி நம்மை அதிர வைக்கிறது (படத்தில் இருப்பவர்).

இதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்ட அம்மாநில முதல்வர் திரு.அச்சுதானந்தன், உடனே என்டோசல்பானுக்கு கேரளாவில் தடை விதித்ததோடு, இந்த பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்துவதை உடனே நிறுத்துமாறு,நம் தமிழக முதல்வர் கருணாநிதி உட்பட அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார்.

இதற்காக ஒரு உண்ணாவிரத போராட்டமே நடத்தினார் கேரளா முதல்வர்.

ஆனால், யாரும் இதை பற்றி அக்கறை காட்டவில்லை. முன்பு, பெப்சி மற்றும் கோலா போன்ற பானங்களில் இது போன்ற சில விஷ பொருட்கள் கலந்து இருப்பது தெரியவந்த போது, அந்த பானங்களை தடை செய்யும் முதல் போராட்டம் நடைபெற்றதும் கேரளாவில்தான் என்பதை நாம் இங்கே நினைவு கொள்ளவேண்டும்.

"இந்தியாவில் மூன்று நிறுவனங்கள் எண்டோசல்பான் தயாரிப்பில் உள்ளன. இவை ஆண்டுக்கு 9,000 டன் எண்டோசல்பான் மருந்தைத் தயாரிக்கின்றன. இதில் பாதி அளவு இந்திய விவசாயிகளால் பயன்படுத்தப்படுகிறது. மீதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.1,340 கோடி. தற்போது இந்த மருந்தைத் திடீரென்று தடைசெய்து நிறுத்திவிட்டால், இந்தியாவில் இதை நம்பியிருக்கும் 75 விழுக்காடு விவசாயிகளுக்கு மாற்றுப் பூச்சிக்கொல்லி மருந்து கிடைக்காது என்று இந்தியா கருதுகிறது" என்கிறது தினமணி செய்தி.


"பூச்சி கொல்லி நஞ்சுகள் பூச்சியைக் கொல்லுவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவையல்ல. இரண்டாம் உலகப் போரில் உருசியப் படைவீரர்களைக் கொல்லுவதற்காகக் கிணற்றிலும் ஆற்றிலும் கொட்டுவதற்காக ஹிட்லர் படை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தவை

இவை. போர் முடிந்த பிறகும் கம்பெனிகள் இலாபம் குவிக்க வேண்டும் என்பதற்காகவே பூச்சி மருந்து என்ற பெயரில் இந்த நஞ்சுகள் உழவர் தலைகளில் கட்டப்பட்டன"

-என்று தனது நீண்டதொரு ஆராய்ச்சி பயணத்தில் கண்டுகொண்ட ஒரு அதிர்ச்சி தரும் உண்மை சில வருடங்களுக்கு முன்பே வெளியிட்டு இருக்கிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்.

"இயற்கை வழி உழவாண்மை ஒன்றே நிலைத்தும் நீடித்தும் இருக்க வல்லது. இயற்கை வழி என்பது யூரியாவுக்குப் பதிலாகச் சாணி போடுவது இல்லை. உயிர் உள்ள இயற்கை. உயிர் இல்லா இயற்கை இவற்றுக்கிடையில் உள்ள உறவுகளை அறிந்த பயிர் செய்வது இயற்கை வழி.

எடுத்துக்காட்டாக, பயிர்ச் செடிகளை உண்ணும் பூச்சிகள் மிகவும் சொற்பம். அவற்றைத் தின்னும் பூச்சிகளும் குருவிகளுமே உலகில் அதிகம். பூச்சிகளைக் கொல்வதற்கு என்று நஞ்சு தெளித்த போது நன்மை செய்யும் பூச்சிகள் மடிந்தன.பறவைகள் மறைந்தன. ஆகவே பூச்சி கொல்லி தெளிப்பதாலேயே பெருகுகின்றன" என்று விளக்கம் தருகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை வேளாண்மை திட்டத்தை, ஒட்டுமொத்த இந்தியாவும் பயன்படுத்த வேண்டிய தருணம் இப்போது வந்து இருக்கிறது. ஆனால், அவரது இந்த திட்டங்களுக்கு நம் தமிழக அரசே ஒத்துழைக்காதது அநியாயம் ஆகும்.

173 நாடுகள் கூடிய மாநாட்டில், என்டோசல்பானின் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை சுட்டிக்காட்டி, இந்த பூச்சிகொல்லி மருந்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று விவாதம் எழுந்த போது, என்டோசல்பானை தடை செய்ய கூடாது என்று வாதிட்டு அனைவரையும் கவர்ந்த(?) ஒரே ஒரு நாடு....விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நமது இந்தியா என்னும் செய்தியை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.

சர்வதேச நிறுவனமான என்டோசல்பானிடம் இருந்து, 'முக்கியமானவர்களுக்கு' 'பொட்டி' போய்விட்டதோ என்றே நினைக்க தோன்றுகிறது. இந்தியாவின் எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நாட்டு மக்களை பற்றி உண்மையான அக்கறை இல்லை. தொலைநோக்கு பார்வை என்பது இவர்களுக்கு கூட்டணி அமைப்பதில்தான் இருக்கிறது. தங்கள் 'பாக்கெட்டுகள்' நிரம்பினால் போதும் என்று வாழும் அரசியல்வாதிகள், பூச்சிக்கொல்லி மருந்துகளைவிட மோசமானவர்கள்.

என்டோசல்பானை தயாரிக்கும் ஐரோப்பிய நாடுகள் தங்களது நாடுகளில் ,அதன் பயன்பாடுகளை நிறுத்திவிட்டு, அதே சமயம் என்டோசல்பானை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்து இருக்கும் கொடுமையை எப்போது இந்தியா உணரப்போகிறது? நாம் உணரப்போகிறோம்?

Ban Endosulfan - விழிப்புணர்வுக்காக ஒரு அனிமேஷன் வீடியோ இங்கே.



-இன்பா

1 comments:

hariharan said...

நல்ல கட்டுரை..

முன்னேறிய நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்து மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் எல்லாம் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் சந்தையாகிறது. காரணம். லஞ்சம், இந்தியாவில் இடதுசாரிக் கட்சிகளை தவிர்த்து எல்லா அரசியல் கட்சிகளும் பெரிய நிருவனங்களிடமும் பன்னாட்டு நிறுவனக்களிடமும் கட்சிக்காகவும் தேர்தலுக்காவும் பணம் பெறுகின்றன. அதற்கு கைமாறு தான் அவர்களின் வேட்டைக்காடாக இந்தியா மாறிவருகிறது.

 
Follow @kadaitheru