Thursday, May 26, 2011

"என்னை ஓவியனாக்கிய இந்து மதம் " - எம்.எப்.ஹுசைன்


பிரபல ஓவியர் எம்.எப்.ஹுசைன், தற்சமயம் இந்தியாவை விட்டு வெளியேறி, கத்தார் நாட்டில் குடிவுரிமை பெற்று அங்கே வசித்து வருகிறார்.

இந்து மத தெய்வங்களை நிர்வாண ஓவியமாக வரைந்தமைக்காக, அவருக்கு நேர்ந்த கடும் எதிர்ப்பும், மிரட்டல்களுமே இதற்க்கு காரணம் என்பது நமக்கு தெரிந்ததே.

ஆனால், ஹுசைன் அவர்கள் இந்து மதத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடும், பற்றும் கொண்டவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

அவர் ஓவியராக உருவாக காரணமே, இந்து மத கடவுள்கள் மீது அவர்க்கு இருந்த காதல்தான் என்று முன்பு ஒரு முறை தெஹல்கா இதழுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறி இருந்தார் திரு.எம்.எப்.ஹுசைன்.

அவர் அளித்த பதில்கள் இங்கே...

ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்?

இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கடுமையான அறிக்கைகளை நாடி, கிட்டத் தட்ட நம்பி - ஊடகங்கள் என்னிடம் வருகின்றன.

ஆனால், உண்மையில் இந்தியாவைப் பற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தப் போக்கைக் காலத்தின் ஒரு சிறிய கணமாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு சிறிய தடங்கல் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய வேலைகள் 5000 ஆண்டுகளாக வலுவான ஒரு விசையுடன் நடந்துவருகின்றன.

இளைய தலைமுறை அடிப் படைவாதத்தை, பழமைவாதத்தை வெறுத்து ஒதுக்கி, இந்த நிலையை மாற்றிவிடும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

என் வீட்டை விட்டு வெளியேற நான் விரும்பவில்லை. அதே சமயத்தில் பழமைவாத சக்திகள் சமூகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் நான் நினைக்கவில்லை. நாம் அனைவரும் பெரிய தொரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

ஒரு குழந்தை வீட்டில் எதையாவது உடைத்துவிட்டால், உடனே அந்தக் குழந்தையை நாம் வெளியே துரத்தி விடுவதில்லை. அப்படிச் செய்யக் கூடாது என்று அந்தக் குழந்தைக்கு எடுத்துச் சொல்ல முயல்கிறோம். இது குடும்ப விவகாரம். என் கலையை எதிர்ப்பவர்கள் அதைப் புரிந்துகொள்ளவில்லை, அல்லது அதை அவர்கள் பார்க்கவில்லை.

நீங்கள் ஏன் இந்தியாவுக்குத் திரும்பி வந்து போராடக் கூடாது?

இப்போதுள்ள நிலையில் நான் திரும்பிவர இயலாது. யாரும் என்னை வெளியேற்றவில்லை. நான் வயது முதிர்ந்தவன், உடல்ரீதியான அபாயத்திற்கு எளிதில் இலக்காகிவிடக்கூடியவன் என்பதால் நான் வெளியே வந்துவிட்டேன்.

அவர்கள் உருவாக்கிவைத்திருக்கும் மனநிலையில் இப்போது நான் திரும்பி வந்தால் சாலையில் போகும்போது யாரேனும் என்னைத் தாக்கிவிடக் கூடும். என்னால் என்னைத் தற்காத்துக்கொள்ள முடியாது.

ஒருவேளை பாஜக அல்லது மாயாவதி ஆட்சிக்கு வந்தால் நான் திரும்பி வரலாம். இந்த அரசுக்கு முதுகெலும்பு இல்லை. அவர்களது கைகள் கட்டப்பட்டிருக்கின்றன. வெளிப்படையாகப் பேசினாலோ நடவடிக்கை எடுத்தாலோ குஷிப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுவோமோ என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆட்சியில் இல்லாதபோது, தங்கள் வாக்கு வங்கியைக் காப்பாற்றிக்கொள்ள பாஜக இது போன்ற பிரச்சினைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது. ஆட்சியில் இருந்தால் தனது தீவிரவாதப் படையினர் மரியாதைக்குரியவர்களாக, மதச்சார்பற்றவர்களாகத் தோற்றமளிக்கும் வகையில் கட்சி அவர்களைக் கட்டுப்படுத்திவைக்கும் .

இதுதான் இந்தியாவின் வேடிக்கையான முரண்பாடு. உண்மையில் நீதிமன்றங்கள்தான் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். என்னுடைய படைப்பு ஆபாசமாக இருக்கிறது, அது சமய உணர்வுகளைப் புண்படுத்துகிறது என்பதெல்லாம் நீதிமன்றத்தில் ஒருபோதும் செல்லுபடி ஆகாது. இதற்கு எதிராக ஒரு பொதுநல வழக்கை யாராவது தாக்கல் செய்தால் நன்றாக இருக்கும். அதை நான் செய்ய முடியாது. அது எனது களம் அல்ல.

உங்கள் கலைக்காக நீங்கள் ஏன் மன்னிப்புக் கேட்டீர்கள்? இந்துச் சிற்பக் கலை பற்றியும் சாஸ்திரங்கள் பற்றியும் உங்கள் படைப்புகளைச் சிதைத்த குண்டர்களைவிட
உங்களுக்கு நன்றாகத் தெரியும் அல்லவா?


இல்லை. நான் மன்னிப்புக் கேட்கவேயில்லை. என் படைப்புகளை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். நான் என்ன சொன்னேன் என்றால், என் படங்களை - கடவுளர் உருவங்கள் உள்பட - நான் ஆழமான அன்புடனும் ஈடுபாட்டுடனும் அவற்றைக் கொண்டாடும் விதமாகவும் வரைந்திருக்கிறேன். இப்படிச் செய்வதன் மூலம் நான் யாருடைய உணர்வுகளையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறினேன். அவ்வளவுதான். கலையை நான் குறைவாகக் காதலிக்கிறேன் என்பதல்ல. மனித இனத்தை அதிகமாகக் காதலிக்கிறேன்.

இந்தியா முற்றிலும் அலாதியானதொரு நாடு. தாராளப்போக்கும் பன்முகத்தன்மையும் கொண்டது. உலகில் இது போல ஒரு நாடு இல்லை. நாட்டில் தற்போது நிலவும் இந்த மனநிலை வரலாற்றுரீதியான ஒரு நிகழ்முறை. என்னைப் பொறுத்தவரை இந்தியா என்பது வாழ்வின் கொண்டாட்டம். உலகில் வேறு எங்கும் இது போன்ற தன்மையைக் காண இயலாது.

இந்துச் சிற்பக் கலை, கலாச்சாரம் ஆகியவற்றின் மீதான உங்கள் ஆர்வமும் அறிதலும் எப்படித் தொடங்கின என்று சொல்ல முடியுமா?

குழந்தையாக இருந்தபோது பந்தார்பூரிலும் பிறகு இந்தூரிலும் நான் ராம லீலாக் கொண்டாட்டங்களால் கவரப்பட்டிருக்கிறேன். என் நண்பன் மங்கேஷ்வரும் நானும் ராம லீலா நாடகத்தை நிகழ்த்திக்கொண்டிருப்போம்.

டாக்டர் ராஜகோபாலாச்சாரி சொல்வதுபோல, ராமாயணம் என்னும் பௌராணிகப் புனைவு ஒரு யதார்த்தமாகவே மாறிவிட்டது. அந்த அளவுக்கு ராமாயணக் கதை வலுவானதும் வளமானதும் ஆகும். 19 வயது ஆனபோது ஆன்மீக நூல்களைப் படித்தேன். 14-15 வயதில் நான் என் தாயை இழந்தேன். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டேன்.

இரவில் கொடும் கனவுகள் கண்டு விழித்துக்கொள்வேன். 19 வயதாகும் போது இவையெல்லாம் நின்றுவிட்டன. முகம்மது இஷாக் என்னும் குரு எனக்குக் கிடைத்தார். இரண்டு ஆண்டுகள் அவருடன் இருந்து புனித நூல்களைப் படித்தேன். கீதை, உபநிஷதங்கள், புராணங்களையும் படித்து மங்கேஷ்வருடன் அவை குறித்து விவாதிப்பேன். அவன் அப்போது ஒரு துறவியாகியிருந்தான். அவன் இமயமலையை விட்டுச் சென்ற பிறகு நான் பல ஆண்டுகள் ஆழமாகப் படித்துக் கொண்டிருந்தேன். இவை எல்லாம் என்னை மிகவும் அமைதிப்படுத்தின.

அதன் பிறகு கொடுங்கனவுகள் எனக்கு வந்ததில்லை. 1968இல் ஹைத ராபாதில், டாக்டர் ராம் மனோஹர் லோஹியா, ராமாயணத்தைச் சித்திரமாகத் தீட்டும்படி என்னிடம் சொன்னார். என்னிடம் அப்போது சுத்தமாகப் பணமே இல்லை. ஆனாலும் நான் 150 கேன்வாஸ்களை எட்டு ஆண்டுகளில் தீட்டினேன். வால்மீகி ராமாயணம், துளசிதாசர் ராமாயணம் இரண்டையும் படித்திருக்கிறேன் (முன்னது மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடியது). ராமாயணத்தில் உள்ள நுட்பங்களை பனாரஸின் புரோகிதர்களுடன் விவாதித்துத் தெளிவுபடுத்திக் கொண்டிருந்திருக்கிறேன்.

இதையெல்லாம் நான் செய்யும்போது நீ ஏன் இஸ்லாமியக் கருத்துகளைச் சித்திரமாகத் தீட்டக் கூடாது என்று இஸ்லாமியப் பழமைவாதிகள் சிலர் என்னிடம் கேட்டார்கள். இந்து மதத்தில் இருப்பது போன்ற சகிப்புத்தன்மை இஸ்லாத்தில் இருக்கிறதா என்று நான் கேட்டேன்.

திருமறையின் எழுத்துகளைத் தவறாக எழுதினாலே ஓவியம் வரையும் திரைச்சீலையைக் கிழித்துவிடுவார்கள். என் வாழ்நாளில் நூற்றுக் கணக்கில் பிள்ளையார் உருவங்களை வரைந்திருக்கிறேன். பிள்ளையார் உருவம் மிகவும் அற்புதமானது. பெரிய படைப்பு எதையும் தொடங்குவதற்கு முன் எப்போதும் பிள்ளையாரைத்தான் வரைவேன்.

சிவனின் சிலை வடிவமும் எனக்கு மிகவும் பிடிக்கும். நடராஜர் சிலை உலகின் மிகச் சிக்கலான வடிவங்களில் ஒன்று. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பரிணமித்துவந்திருக்கும் வடிவம் அது. பிரபஞ்ச இயற்கை பற்றியும் பொருண்மை சார்ந்த உலகம் பற்றியுமான ஆழமான தத்துவம் மற்றும் கணிதச் சமன்பாடுகளின் விளைவு அது. கிட்டத்தட்ட ஐன்ஸ்டீனின் சூத்திரத்தைப் போல.

என் மகள் ராயிசா திருமணம் செய்துகொள்ள விரும்பியபோது அவள் எந்தச் சடங்கையும் விரும்பவில்லை. நான் ஒரு அட்டையில் அவள் திருமணம் பற்றிய செய்தியுடன் ஒரு படம் வரைந்து அதை அச்சிட்டு உலகம் முழுவதும் உள்ள என் உறவினர்களுக்கு அனுப்பினேன். அதில் பார்வதி சிவனின் மடியில் அமர்ந்திருப்பாள். சிவனின் கை பார்வதியின் முலையைப் பற்றியிருக்கும்.

பிரபஞ்சத்தின் முதல் திருமணம் அது. இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம். நான் மிகவும் நெருக்கமாக உணரும் ஒரு விஷயத்தை நான் இழிவுபடுத்துவேனா?

நான் ஷியா பிரிவின் உட்பிரிவான சுலைமணி என்னும் சமூகத்தில் பிறந்தவன். இந்துக்களுடன் எங்களுக்கு நிறைய ஒற்றுமைகள் உண்டு. மறு ஜென்மம் உள்படப் பல நம்பிக்கைகள் பொதுவானவை. பண்பாடு என்ற முறையில் யூதம், கிறிஸ்தவம் ஆகியவைதான் உணர்ச்சிப்பூர்வமாக மிகவும் விலகியிருக்கின்றன.

என்னை எதிர்ப்பவர்களுடன் இதையெல்லாம் நான் விவாதிக்க முடியாது. கஜுராஹோ பற்றி அவர்களிடம் பேசிப்பாருங்கள். அதன் சிற்பங்கள் மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவிப்பதற்காக உருவாக்கப்பட்டவை என்றும் அவற்றின் நோக்கங்கள் தமது எல்லையைக் கடந்துவிட்டன என்றும் சொல்வார்கள். கிராமத்து மக்கள்தான் இந்துக் கடவுள்களின் கிளர்ச்சியூட்டக்கூடிய, உயிர்ப்புள்ள, காலந்தோறும் பரிணாம வளர்ச்சி கொள்கிற இயல்பைப் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் ஒரு பாறையின் மேல் ஆரஞ்சு வண்ணத்தைப் பூசுகிறார்கள். பிறகு அது ஹனுமானாகக் கருதப்படுகிறது.

இந்தியக் கலாச்சாரத்திலும் மரபிலும் பல சாதனைகள் புரியப்பட்டுள்ளன. இருந்தும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் ஓவியக் கலை மாணவர்கள் கிரேக்கக் கலை வடி வங்களைப் பார்த்துத்தான் உடலின் தன்மையைக் கற்கிறார்கள்.

டாக்டர் குமாரசாமியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. கல்லூரிகளில் ஷேக்ஸ்பியரையும் கீட்ஸையும் படிக்கிறீர்கள். காளிதாசனைப் பற்றிப் பேச்சே இல்லை. இதனால்தான் இந்தியாவில் இந்தியத் தன்மைக்கு அங்கீகாரம் இல்லை. இங்கே பல விஷயங்கள் போலித்தனமாக இருக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் எம்.எஸ். சுப்புலட்சுமி, ஜே.ஆர்.டி. டாடா, அன்னை தெரசா, ஆகியோருடன் என்னையும் கௌரவித்தபோது எங்களுக்குச் சிவப்புத் தொப்பியும் அங்கிகளும் (ஐரோப்பிய பாணியிலான பட்டமளிப்பு) வழங்கப்பட்டன .

இந்துக் கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கான மையம் இது. பாரதீயப் பண்பாட்டைக் காக்கும் மையம்! உலகில் ஆபாசம் என்ற ஒன்று இருக்கிறதா? மோசமான நடத்தைதான் ஆபாசமானது. அவ்வளவுதான்.

-எம்.எப்.ஹுசைன்.

(நன்றி : காலச்சுவடு பதிப்பகம்)
(பதிவில், திரு.ஹுசைன் வரைந்த சில ஓவியங்கள்)

4 comments:

Anonymous said...

நல்ல பதிவு...அருமை

virutcham said...

ஹுசைனின் சில ஓவியங்கள் குறித்த விமர்சனம் எனக்கும் இருந்தது. இந்த பேட்டி அதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. காலச்சுவட்டின் எந்த இதழில் இது வெளியாகியது?

கடை(த்)தெரு said...

//virutcham said...
ஹுசைனின் சில ஓவியங்கள் குறித்த விமர்சனம் எனக்கும் இருந்தது. இந்த பேட்டி அதை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது. காலச்சுவட்டின் எந்த இதழில் இது வெளியாகியது?

//
மன்னிக்கவும்,நண்பரே.அதை குறித்துவைக்கவில்லை.
வேறு ஒரு தகவலுக்காக 'தேடியபோது'
இப்பேட்டியை படித்தேன்.

தங்களின் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அன்புடன்,
இன்பா

Anonymous said...

This іs a topic thɑt iѕ near to my heart... Cheers!
Exaсtly ѡhere агe yߋur contact details thougһ?

 
Follow @kadaitheru