விமான நிலையம் புறப்பட ஆயத்தமாகும்போது இனிமேல் இந்தியப் பணம் தேவையிருக்காது என்று மீதமிருக்கும் நோட்டுக்களை நண்பர்களிடம் கொடுத்துவிட்டு வருவது என்னுடைய பழக்கம். இந்த முறை நண்பன் விஜயன் ‘ஒரு 500 ரூபாய்தான், எதற்கும் வைத்துக்கொள். உள்ளே சென்றவுடன் உனக்குத் தேவைப்படும்’ என்றான்.
கஸ்டம்ஸில்...
‘‘அட்டைப்பெட்டியில் என்ன இருக்கிறது?’’
‘‘இடியாப்பமாவு’’ என்றேன்.
"இதெல்லாம் சிங்கப்பூரில் கிடைக்காதா?" கேள்வி மேலிருந்து கீழாகப் பார்த்துவிட்டு, ‘‘ஏதாவது இருந்தால் கொடுத்துவிட்டுப் போங்கள்.’’ சட்டம் கை நீட்டியது.
சட்டத்திற்குப் புறம்பான காரியங்களை மட்டும் செய்ய லஞ்சம் கொடுப்பது தற்போது நிலைமை. மாறாக சட்டப்படியும் லஞ்சம் வாங்கலாம் என்று லஞ்சத்தின் உருவமே இப்போது மாறிவிட்டது.
சிங்கப்பூரில் குறிப்பிட்ட வேக அளவுக்கு மேல் கார் ஓட்டியதற்காக வழி பறித்த போக்குவரத்து போலீஸிடம் "வெள்ளிதானே கொடுக்கக்கூடாது. மலேசியாவுக்கு வாருங்கள், வேண்டிய உதவிகளைச் செய்கிறேன். இப்போது நான் அவசரமாகப் போக வேண்டும்" என்று சொன்ன மலேசியத் தொழில் அதிபர் லஞ்சம் வாங்க அதிகாரியைத் லஞ்சம் வாங்கத் தூண்டினார் என்று தண்டனை விதிக்கப்பட்டு கம்பி எண்ணினார்.
ஒன்வேயில் சைக்கிள் ஒட்டியதற்காகப் பிடிபட்ட கருப்பசாமி சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு "ஸார், 20 வெள்ளி வைத்துக்கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர் சட்டைப் பையில் வைத்தார். மேலும் இரண்டு பிரிவுகளில் சேர்த்து வழக்குப் போட்டு உள்ளே தள்ளிவிட்டார்கள். இந்தியாவில் இதுமாதிரி சட்டத்தைக் கடுமையாக்கி தண்டனைகள் கொடுக்க முடியாதா என்று பேசிக் கொண்டிருந்தபோது ஒரு அறிவுஜீவி நண்பர் சொன்னார். ‘இந்தியா என்ன 5 மில்லியன் மக்கள் தொகையுள்ள சின்ன நாடா?’
‘அமெரிக்கா, இந்தோனேஷியா, பிரேசில், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஜப்பான் இந்த ஆறு நாடுகளின் மக்கள் தொகை மொத்தம் 1.21 பில்லியன்.
2011 சென்சஸ்படி இந்தியாவின் மக்கள் தொகை 1.21 பில்லியன். நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்றார். அப்பெடியெனில் சென்னையை சிங்கப்பூர் ஆக்குவேன், விருத்தாசலத்தை சிங்கப்பூர் ஆக்குவேன் என்று ஏன் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார்கள் என்றவுடன் நண்பர் அர்த்தத்துடன் சிரித்தார்.
ஒவ்வெரு வருடமும் உலகின் ஊழல் மலிவு சுட்டெண் (1000uption porception index) ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட நிறுவனம் சர்வே செய்து வெளியிடுகிறது. உலக வங்கியின் சர்வேக்கு கிட்டத்தட்ட நிகரானது.
2010ல் சிங்கப்பூர் 1.07 பெற்று உலகில் ஊழல் ஒழிப்பில் முதலிடம்
ஹாங்காங் & 1.89
ஆஸ்திரேலியா & 2.40
அமெரிக்கா & 2.89
ஜப்பான் & 3.99
தென்கொரியா & 4.64
மக்காவ் & 5.84
சைனா & 6.16
தைவான் & 6.47
மலேசியா & 6.70
பிலிப்பைன்ஸ் & 7.00
வியட்நாம் & 7.11
இந்தியா & 7.21
இந்தோனேஷியா & 8.31
சிங்கப்பூரில் ஊழல் ஒழிப்பு திடீரென்று வந்துவிடவில்லை. சுகந்திரம் பெற்று 1959 லிருந்து 1990 வரை திரு.லீகுவான்யூ பிரதமராக இருந்தார். சுமார் அரை நூற்றாண்டுகளாக மக்கள் செயல் கட்சியே ஆட்சியிலிருக்கிறது. தன்னுடைய முதல் கொள்கையாக ஊழல் ஒழிப்பை முனைந்து 1970 லிருந்தே லீ செயல்படுத்த துவங்கினார். அந்தக் கால கட்டத்தில் ஊழல் ஒழிப்பின் அங்கமாக அரசாங்க ஊழியர்கள் சம்பளம் அவ்வளவாக உயர்த்தப்படவில்லை. அடித்தளம் அமைத்த பின்பு 1980களில் அரசாங்க ஊழியர்கள், பிரதமர், அமைச்சர்கள் சம்பளம் அதிக அளவு உயர்த்தப்பட்டது. அரசு ஊழியர் சட்டங்கள் காமன்வெல்த் நாடுகளில் இந்தியாவைப் போலவே சிங்கப்பூரில் இருந்தாலும் Public service™ இந்த அளவுக்கு ஊழல் ஒழிப்பு வியத்தகு நடவடிக்கை என்கிறார். சென்ற வாரம் The Histiry of singapore public service புத்தகத்தை வெளியிட வந்திருந்த Dr.N.C.Sexana (INDAN NATIONAL ADVISONY COVNCIL)
1992ல் சிங்கப்பூர் வந்த சீன அதிபர் Mr. Den Xiaping ஊழல் ஒழிப்பு போன்ற விஷயங்களில் சிங்கப்பூரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் என்றார். சிங்கப்பூரின் வளர்ச்சிக்கு
Exellent Educated, wook Force open Trade Routes, Rule of law Low Taxes என்ற நான்கு காரணங்களுடன் ஊழல் ஒழிப்பும் மிக முக்கியமான காரணங்கள்.
அமெரிக்க அதிபரின் ஒபாமா சம்பளத்தை விட அதிக சம்பளம் சிங்கப்பூர் அமைச்சர்கள் பெறுகிறார்கள் என்ற கேள்வியை தேசிய பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து சிங்கப்பூர் பிரதமர் எதிர்நோக்கினார். அதற்கான தேவைகளும், சூழ்நிலையும் அவர் விளக்கியபோது எதிர்க் கேள்விகளுக்கு இடமில்லாமல் போயிற்று.
ST Forum பகுதியில் ஒரு வாசகர் அப்படி ஒன்றும் மக்கள் பணத்தை சம்பளமாகக் கொடுத்துவிடவில்லை என்பதை இவ்வாறு பட்டியலிட்டார்.
சிங்கப்பூரரின் வருமானத்தில் ஒரு டாலரின் 20 சென்ட்ஸ் GST மற்றும் வரிகள் மூலம் அரசு எடுத்துக் கொள்கிறது. ஒட்டி நோக்க அமெரிக்கா, 40% பிரிட்டன் மதிப்புச் சட்டப்பட்ட VAT வரி சேர்த்து 56% மற்ற நாடுகள் 40 லிருந்து & 60% வரை மக்கள் பணத்தை எடுத்துக் கொண்டு பற்றாக்குறை பட்ஜெட் போடுகிறார்கள்.
ஊழல் ஒழிப்பின் காரணமாக தற்போதைய GDP 43000 டாலர்கள் 2020ல் 55,000 தொடும் என்கிறார்கள். அது சாத்தியமானால் உலகின் 10 பணக்கார நாடுகளில் சிங்கப்பூர் ஒன்றாகிவிடும்.
என்ன இருந்தும் ஜனநாயகம், சுதந்திரம் கூடுதலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இங்கு இருக்கிறதா? என்ற கேள்விக்கு விடையாக இவைகளை வைத்துக் கொண்டுள்ள நாடுகள் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக அல்லாடுவதைச் சொல்லலாம்.
இவ்வருடம் அநேகமாக மே, ஜூன் மாதங்களில் தேர்தல் நடக்கவிருக்கிறது, வாக்களிப்பது சிங்கப்பூரில் கட்டாயம் தகுந்த காரணங்கள் இல்லாமல் வாக்களிக்காமல் இருப்பது குற்றம். அப்படியும் 2006 தேர்தலில் 72,000 பேர் வாக்களிக்கவில்லை. 60,000 பேர் தகுந்த காரணங்கள் சொல்லி இந்தத் தேர்தலில் 1965க்குப் பிறந்த Post-65 இளந்தலைமுறை வாக்களிக்கவிருக்கிறார்கள். புதிய தலைமுறை வாக்காளர்களுக்காகப் புதிய தலைமுறை வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.
மக்கள் செயல்கட்சி இதுவரை 12 புதிய வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. சென்ற தேர்தலை விட பட்டதாரி வாக்காளர்கள் இரண்டு மடங்காகி இருக்கிறார்கள்.
2006ல் 84க்கு 82ல் வெற்றி பெற்ற மக்கள் கட்சி ஊழல் ஒழிப்பில் குறிப்பிடத்தக்க நகரமாக்கிய இரண்டு லீக்களை விட்டால் அடுத்து யார் என்ற கேள்விக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கூட பதில் இல்லை, ஒரு சமயம் லீ குவான்யூ சொன்னார். ஒரு தடவை இலவசங்கள் கொடுத்துவிட்டால் அதை நாமே நினைத்தாலும் நிறுத்தமுடியாது, அதை விட நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் எதுவுமில்லை என்றார்.
அண்டை நாடுகள் ஊழல் ஒழிப்பில் பின்தங்கியிருப்பது சிங்கப்பூரை அவ்வப்போது அசைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்திய ஆயுதத் தொழிற்சாலை இயக்குநர் Sudipto gosh மீதான ஊழல் புகார்களை சி.பி.ஜ விசாரிக்க ஆரம்பித்தபோது அதில் முக்கிய பங்கு வகித்ததாக சிங்கப்பூர் நிறுவனங்கள், சிங்கப்பூர் டெக்னாலஜி மற்றும் மீடியா ஆர்க்கிடெக்ஸ் பிளாக் லிஸ்ட் செய்யப்பட்டன.
ஒரு நிகழ்ச்சிக்காக டைரக்டர் - நடிகர் சேரன் சிங்கப்பூர் வந்திருந்தார், இவ்வளவு சுத்தமாக, அழகாக, ஊழலற்ற சிங்கப்பூரிலிருந்து விட்டு ஊருக்கு வந்தவுடன் பழக்கத்தை மாற்றிக் கொள்கிறீர்கள் ஏன் அப்படி? என்று கேட்டு கைதட்டல் வாங்கினார். அவருக்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது. சட்டத்தினரைப் பார்த்து கேள்வி கேட்க விரும்புபவர்கள் கேட்கலாம் என்றார்.
நண்பர் சசிகுமார் எழுந்து ‘‘இங்கிருப்பவர்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்கும் கைதட்டல் வாங்குவதற்கும் நம் நாட்டைப் பற்றி தரக் குறைவாகப் பேசும் பல பேச்சாளர்கள் மாதிரி நீங்களும் பேசுகிறீர்கள். நம் நாட்டில் பெருமை கொள்ளும் விஷயங்கள் எதுவும் இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
சேரன் ‘‘நான் என்ன சீனர்களிடமும் மலாய்க்காரர்களிடமா போய் சொல்கிறேன். தமிழர்களிடம்தான் சொல்கிறேன் என்றார். அதுவரை OK. ஆனால் கூட்டம் முடியும் தருவாயில் சேரன், சசிகுமாரை வம்புக்கிழுத்தார். தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. கூட்டம் ஏற்பாடு செய்தவர்களுக்குத் தர்மசங்கடமான நிலைமை.
இப்படி சத்தம் போட்டுக் கொண்டிருந்தால் சிங்கப்பூரில் போலீஸ் வந்துவிடும் என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தோம்.
(கட்டுரை : சிங்கப்பூரில் இருந்து அப்துல் காதர் ஷாநவாஸ், உயிர்மை இதழில்)
Wednesday, May 4, 2011
சிங்கப்பூர் - ஊழல் இல்லாத ஒரே நாடு
Posted by கடை(த்)தெரு at 11:13 PM
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
உண்மைதான்.நான்கு வருடங்களாக சிங்கப்பூரில் வசிக்கும் எனக்கும் ஒரு சந்தேகம் வந்தது.
உண்மையில் இங்கு ஜனநாயகம் இருக்கிறதா என்று.ஆனால் நேற்றைய தேர்தல் முடிவுகள் சொல்லிவிட்டன. மிக தெளிவாக!ஆம் இது ஒரு நிஜமான ஜனநாயக நாடு என.வளரட்டும் சிங்கை.
Post a Comment