Friday, March 11, 2011

விபுதி மணம்


"கைத்தல நிறைகனி அப்பமொடவல் பொரி" என்ற விநாயகர் துதிப்பாடலை கேட்டாலோ இல்லை எங்காவது படித்தாலோ கிருபானந்த வாரியாரின் தமிழும், குரலும் நம் நினைவுக்கு வந்துவிடுகிறது. 'திருமுக' என்ற அடைமொழிக்கு ஏற்ற ஒரு முகம் அவர் முகம். அதில் எப்போதும் புன்சிரிப்புமாய், நம் நினைவுகளில் கமழ்கிறது. ...அவர் நெற்றியில் பூசிஇருக்கும்... விபுதி மணம்.

இன்று சுவாமிகள்(அல்லது) குரு என்று தன்னையே அழைத்துகொள்ளும் யாரையும் நீங்கள் காசு கொடுக்காமல் பார்க்கஇயலாது. சிலவருடங்களுக்கு முன்னால் நான் புனேவில் இருந்த ஒரு ஆஸ்ரமதிற்கு போனபோது, அங்கு உள்ள சுவாமிகள் இறைவனை அடையும் வழி (!) குறித்து பயிற்சிமுகாம் நடத்துவதாகவும், அதில் கலந்துகொள்ள 5000 கொடுங்கள் என்றார்கள்.

வேலூர் பொற்கோவிலை கட்டியதாக(?) கூறப்படும் சக்தி அம்மாவை 'தரிசிக்க' 1000 கட்டணம். ஸ்ரீ அம்மா மற்றும் கல்கி பகவானின் ஆஸ்ரம்கள் சார்லஸ் அரண்மனையின் 'மினியேச்சர்' வடிவங்கள்.

ஆனால், கிருபானந்த வாரியார் எளிமையின் வடிவமாக வாழ்ந்தவர். கூலி தொழிலாளிக்கும், கோடிஸ்வரனுக்கும் சரிசமமாக 'ஆன்மிகத்தை' கொண்டுசென்றவர்.

1906 ஆம் வருடம் வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் பிறந்த வாரியார் பள்ளியே சென்றதில்லை. இவருக்கு இசை, தமிழ் இலக்கண, இலக்கியங்களை,அற நூல்களை கற்பித்து, குருவாகவும் விளங்கினர் இவரது தந்தை மல்லையதாசர். நல்ல இல்லறத்தில் சிறந்துவிளங்குவதே துறவரதிர்க்கான முதல்படி என்னும் இந்துமத நெறிப்படி இளம்வயதில் திருமணம் செய்துகொண்டவர்.
(இன்று உள்ள 'சாமியார்கள்' முறைப்படி 'ஒன்று'கூட இல்லாமல், முறையே இல்லாமல் 'ஊருக்கு ஒன்றாய்' வைத்துகொள்கிறார்கள்).

1936 இல் முருகவழிபாட்டை ஆரம்பித்தவர், திருப்புகழமிர்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்து, திருப்புகழ், கந்தர்அலங்காரம் போன்றவற்றுக்கான உரைகளும்,
சமய கட்டுரைகளையும் எழுதினார். 1956 இல் திருப்புகழ் திருச்சபை என்ற அமைப்பை நிறுவி கோவில்களுக்கான திருப்பணிகள் மற்றும் ஏழைமக்களுக்கான கல்வி,மருத்துவ சேவைகளையும் செய்தார். 57 ஆண்டுகள் அவர் ஒருநாளும் முருகவழிபாட்டை நிறுத்தியதுஇல்லை, 1993 இல் அவர் இறைவனடிசேரும் வரை.

தன் சமய,தமிழ் பணிகளுக்காக அண்ணாமலை மற்றும் தஞ்சை பல்கலைகழகங்களால் முனைவர் பட்டம் பெற்றவர் வாரியார். சிதம்பரத்தில் ஒரு சொற்பொழிவின்போது நான் கேட்ட "என்அப்பன் முருகன்" என்னும் குரல் இன்னும் நினைவில் இருக்கிறது. மக்களை தன் தமிழாலும், நகைச்சுவை உணர்வாலும் கட்டிபோட்டவர் அவர்.

ஒருமுறை கூட்டத்தில் இருந்த ஒரு சிறுவனை பார்த்து முருகபெருமானின் தந்தை பெயரை கேட்க, சினிமா பார்த்த ஞாபகத்தில் அந்த சிறுவனும் உடனே "சிவாஜி" எனப் பதிலுரைத்தான். சுற்றியிருந்த மற்றவர்கள் அச்சிறுவனை கடிந்தனர். உடனே வாரியார், "அவன் சரியாகத்தானே கூறியுள்ளான், அவனை ஏன் கடிந்து கொள்கிறீர்கள்? பெரியவர்களை மரியாதையாக விளிக்கும் போது ஹிந்தியில் ஜீ என்று இறுதியில் சேர்த்து சொல்வது வழக்கம். அவ்வாறே இவனும் முருகனின் அப்பனை மரியாதையுடன் விளித்துள்ளான். அவன் சொன்னது சரியே" என்று சிவாஜிக்கு புது அர்த்தம் சொன்னவர் வாரியார்.

இன்று உள்ள ஆன்மிகவாதிகளுக்கு போஸ்டர்கள், பேனர்கள், டிவி/பத்திரிகை விளம்பரம் தொடங்கி சொந்தமாக டிவி சேனல்வரை தேவைப்படுகிறது. இது எதுவும் இல்லாமலே கிராமம் தொடங்கி உலகம்வரை புகழும், பெயரும் அவருக்கு தேடிவந்தது. எளிமையின் இலக்கணமாக வாழ்ந்த வாரியார் ஒரு நிஜமான ஆன்மிகவாதி.

அவரது சமாதியும் அவர் பிறந்த காங்கேயநல்லூரில் உள்ளது. அவர் விட்டு சென்ற பணிகளை கிருபானந்த வாரியார் அறக்கட்டளை செய்துவருகிறது.

அவரின் சில பொன்மொழிகளோடு, அவரின் இறைபணிகளை நாம் நினைவில் கொள்வோம்.

"பிறர் குற்றங்களை மன்னிப்பதுதான் பெருமையும் பொறுமையுமாகும்".

"நேற்று" என்பது உடைந்த மண் பானை; "நாளை" என்பது மதில் மேல் பூனை; "இன்று" என்பது அழகிய ஒர் வீணை"

"ஆசையின்றிப் பயன் கருதாமல் மக்களுக்குச் சேவை செய்தால் புகழ் தானே வந்து சேரும். புகழுக்கு ஆசைப்படக் கூடாது, மலரை நாடி வண்டுகள் வருவதுபோல பற்றற்ற சேவையால் புகழ் தானே வரும்"

- வேலும்,மயிலும் துணை -

(நான்,முன்பு இட்லிவடையில் எழுதிய ஒரு பதிவு)

-இன்பா

2 comments:

R.Gopi said...

//இன்று சுவாமிகள்(அல்லது) குரு என்று தன்னையே அழைத்துகொள்ளும் யாரையும் நீங்கள் காசு கொடுக்காமல் பார்க்கஇயலாது. //

******

இன்பா... இப்போ தான் ராமதாஸ் பார்த்து கேட்டேன்... பா.ம.க.ல இருக்கற ”காடுவெட்டி குரு”வ இலவசமாவே பார்க்கலாமாம்...

என் இசைக்குரு “ஏகலைவன்” பார்க்க கூட கட்டணம் ஏதுமில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்...

வேலும் மயிலும் துணை...

எளிமையின் உருவம் தான் கிருபானந்த வாரியார் அவர்கள்...

R.Gopi said...

// 'திருமுக' என்ற அடைமொழிக்கு ஏற்ற ஒரு முகம் அவர் முகம்//

வாரியார் அவர்களின் பக்தி கமழும் ”திருமுக”த்தில் அடித்து போடப்பட்ட திருநீர்ப்பட்டையை காணலாம்...

அதே இன்னொரு ”திருக்குவளை தீய திருமுக”ம் நம் நாட்டினர் அனைவருக்கும் “நாமம்” போடுவதையும் காணலாம்...

 
Follow @kadaitheru