Friday, March 18, 2011

அழகர்சாமியின் குதிரை - இசையும், கதையும்


கவுதம் வாசுதேவ மேனன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் "அழகர்சாமின் குதிரை " படத்தின் இசை வெளியிட்டு விழா சமிபத்தில் நடந்தது. இதில், இளையராஜா பேசிய உரை திரையுலகில் பெரும் கவனம் பெற்று உள்ளது.
அவர் பேசியதாவது,

"இந்த படத்தில் இசையமைக்கும் போது என் முதல் படம் போல் வேலை பார்த்தேன். இந்த இயக்குநர் சுசீந்திரன் எனக்கு தெரியாது, அறிமுகமும் இல்லை. வெண்ணிலா கபடிக்குழு படம் வந்தபோது போஸ்டரை பார்த்துவிட்டு என் உதவியாளரிடம் சொன்னேன், இந்தபடம் நல்ல வந்திருக்கும் போல, வித்யாசமான போஸ்டராக இருக்குது என்றேன். படமும் வந்து நன்றாக போனது.

நான் மகான் அல்ல வந்தபோது திடீரென்று ஒருநாள் சுசீந்திரன் என்னை சந்தித்தார். இந்தபடத்தி‌ன் கதையை பற்றி சொன்னார். வார இதழில் வெளிவந்த பாஸ்கர் சக்தி எழுதிய அழகர்சாமியின் குதிரையை சினிமாவாக்கும் முயற்சியில் இருந்தார். கதை பிடித்திருந்தது, இதுஒரு புதுமுயற்சி என்றேன். பாடல் கம்போசிங்கை இப்போதே தொடங்கலாமா? அல்லது படத்துக்கு பிறகு ‌வைத்துக் கொள்ளலாமா? என்று உங்கள் விருப்பம் என்றார் டைரக்டர். பின்னர் மொத்த படத்தையும் முடித்து வந்து போட்டு காட்டினார் டைரக்டர். பிறகு என்னுடைய வேலையை தொடங்கினேன். 3பாடல் கம்போசிங்கும் செய்தேன்.

உலகமே தமிழ்நாட்டு படைப்பாளிகளை தான் திரும்பி பார்க்கின்றனர். நல்ல புதுபுது கதை களங்களுடன், படைப்பாளிகள் உருவாகி வருகின்றனர். டைரக்டர்கள் ஒருவருக்கொருவர் பழகுவதையும், பகிர்ந்து கொள்வதையும் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கு, அத்தனைபேரும் அழகர்சாமியின் குதிரை படத்தில் நன்றாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சுசீந்திரன் இயக்கி இருக்கும் இப்படம் நல்ல உணர்வையும், உறவையும் வெளிப்படுத்துகிறது. 10நிமிடம் அனைவரும் கவலையை எல்லாம் மறந்து கண்ணைமூடி இந்த படத்தின் இசையை கேட்டீங்கினா, நிச்சயமாக கண்ணுல இருந்து தண்ணீர் வரும். அப்படி வரலேனா, இசையமைப்பதையே நான் நிறுத்தி விடுகிறேன். அந்தளவுக்கு இப்படம் உணர்வுபூர்வமா வந்திருக்கு.

படத்தின் ஆடியோ ரிலீஸின்போது அப்புக்குட்டிக்குதான் அவ்வளவு பாராட்டும் கிட்டியது. உடனே அவரை சூப்பர் ஸ்டார் என்று நினைக்க கூடாது. சூப்பர் ஸ்டாரால கூட இந்த கேரக்டரை பண்ணியிருக்க முடியாது. இந்தபடத்துல உன்னை(அப்புக்குட்டி) ஹீரோவாக்கிய இயக்குநரைத்தான் பாராட்டனும். இனி உனக்கு வரும் படங்களை எல்லாம், கதை கேட்காமா ஒத்துக்கணும். ஏனென்றால் இயக்குநர் மனசுல அந்த கதையோட்டத்துடன் தான் வாழ்கிறார்கள், அவர்களுக்கு எல்லாம் தெரியும், சொல்லப்போனால் நமக்கெல்லாம் அவர்கள் தான் முதலாளி. நாட்டுல நடக்குற பிரச்சனை, குழப்பம் எல்லாம் பார்க்கும்போது நமக்கு சில நேரம் கண்ணீர் வருது. அதுக்காக என்னபண்ண முடியும், அரசியல் கட்சியை குற்றம் சொல்ல முடியுமா, எல்லாம் ஆண்டவனால் விதிக்கப்பட்டது. எது நடக்குமோ, அது நடகும், அதுபோலத்தான் ஒரு கலைஞனும் உருவாகிறான் அதை யாராலும் தடுக்க முடியாது.

சிலநேரங்களில் கதையை கேட்கும்போது, நானே இயக்குநரிடம் சொல்லியிருக்கிறேன், என்னய்யா இதுமாதிரியான குப்பையான கதையெல்லாம் எடுத்து வந்திருக்க என்று. இசை என்பது ஒரு கதையை கேட்டதும், ஜீவனுக்கு உள் இருந்து அப்படியே வெளிவரணும், அதைத்தான் அழகர்சாமியின் குதிரையில கொட்டி ‌வச்சுருக்காங்க. டைரக்டர் சுசீந்திரன் நல்ல கதையை டைரக்ட் பண்ணி அனைவரையும் இம்ப்ரஸ் செய்ய வைத்துள்ளார்.

நல்ல இசையை கேளுங்க, விளம்பரபடுத்துவதற்காக இதை நான் சொல்லவில்லை, ஒரு நல்ல உணர்வுபூர்வமான கதையை சொல்லியிருக்காங்க. இதமனசுல வச்சுகிட்டு, மக்கள்கிட்ட இந்தமாதிரி படத்தை கொண்டு போங்கனு கேட்டுகிறேன்". இவ்வாறு அவர் கூறினார்.

அழகர்சாமி குதிரை படத்தில் மொத்தம் மூன்றே பாடல்கள்.

"அடியே இவளே" என்றே ஒரு பாடல். இதை பாடலாசிரியர் சிநேகன், லெனின்பாரதி இவர்களுடன், "ஜில்லா விட்டு" புகழ் தஞ்சை செல்வி ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இளையராஜா சொந்த குரலில் பாடியிருக்கும் "குதிரைக்காரா". கார்த்திக், ஷேரேயா கோசல் பாடியிருக்கும் "பூவைக்கேளு" என்னும் ஒரு கிராமிய டூயட் பாடல் போன்றவை மட்டும் இடம் பெற்று உள்ளன.

பிரபல எழுத்தாளர் பாஸ்கர் சக்தியின் சிறுகதை தான் இந்த 'அழகர்சாமியின் குதிரை'. ஒரு கிராமத்து கதையான இந்த சிறு கதையின் மீது சுசீந்திரனுக்கு இருந்த ஆர்வத்தினால், சினிமாவிற்கு ஏற்ற சிறு மாற்றங்களோடு படமாகிறது.

இப்படம் பற்றி இயக்குனர் சுசீந்திரன் கூறியதாவது,

"தேனி அருகே உள்ள மல்லையாபுரம் கிராம மக்கள், ஊரில் உள்ள கோவில் திருவிழா நடந்தால்தான் ஊரில் மழை பெய்யும் என்று நம்புகிறார்கள். திருவிழா நடைபெறும் நேரத்தில், சாமியின் வாகனமான மரத்தினால் ஆன குதிரை காணாமல் போய்விடுகிறது.

அதேநேரத்தில், பெரியகுளம் அருகே உள்ள அகமலை என்ற மலை கிராமத்தில் குதிரையில் பொதியேற்றி பிழைக்கும் அழகர்சாமிக்கு திருமணம் நெருங்கும் நேரத்தில், குதிரை காணாமல் போய்விடுகிறது. குதிரை கிடைத்தால்தான் திருமணம் என்னும் சூழ்நிலையில், அழகர்சாமி தன் குதிரையை தேடி புறப்படுகிறான்.

மரக்குதிரை கிடைத்து கிராம மக்களின் திருவிழா நடந்ததா, இல்லையா? நிஜகுதிரை கிடைத்து அழகர்சாமியின் திருமணம் நடந்ததா, இல்லையா? என்ற கேள்விகளுக்கு படத்தில் விடை இருக்கிறது".

அழகர்சாமியாக அப்புக்குட்டி என்பவர் நடித்துள்ளார். அவருடன் சரண்யா மோகன், அழகன் தமிழ்மணி, கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். பாஸ்கர் சக்தி வசனமும், சினேகன், யுகபாரதி, ஜெ.பிரான்சிஸ் கிருபா ஆகியோர் பாடல்களும் எழுதியிருக்கிறார்கள்

படத்தின் பாடல்களை விட,இளையராஜா அவர்கள் படத்தின் பின்னணி இசையில் முழு கவனம் செலுத்தி இருக்கிறார் என்று தோன்றுகிறது.

-இன்பா

1 comments:

மதுரை சரவணன் said...

எதிர்ப்பார்ப்புடன் உள்ள படங்களீன் இதுவும் ஒன்று ... பகிர்வுக்கு நன்றி.வாழ்த்துக்கள்

 
Follow @kadaitheru