Tuesday, March 1, 2011

"பஸ் டே " - மாணவர்கள் பார்வையில்..

"பஸ் டே" பற்றி நமது எதிர்ப்பாக நண்பர் கோபி எழுதிய ஒரு பதிவை நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் நடத்திய "பஸ் டே கொண்டாட்டத்தின் போது, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டு, காவல்துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் மூண்டது. இதில், பெண் காவலர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதில், அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். இதை அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, மாணவர்கள் "பஸ் டே" கொண்டாட தடை விதிக்கபட்டது.

நேற்று, தடையை மீறி, சென்னை பிரெசிடென்சி கல்லூரி மாணவர்கள்
"பஸ் டே" கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பஸ்ஸை கல்லூரி வளாகத்திற்குள் கொண்டு செல்ல முயன்றனர். இப்போதும், அங்கு நின்று இருந்த பெண் காவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

பொதுமக்கள் மத்தியில் கடுமையான கசப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இந்த "பஸ் டே" பற்றி மாணவர்கள் கருத்து என்ன?

நானும் மாணவர் பருவத்தில் "பஸ் டே" கொண்டாடியவன் என்ற முறையிலும், தற்சமயம் எனக்கு தெரிந்த கல்லூரி மாணவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் ஒரு பார்வை இதோ...

கேள்வி : "பஸ் டே" என்றால் என்ன?

மாணவர்கள் : மூன்று அல்லது நான்கு வருடங்கள் கல்லூரிக்கு, இதே பேருந்தில், இதே வழித்தடத்தில் காலையும்,மாலையும் சென்றுவருகிறோம். பேருந்தின் ஓட்டுனரும், நடத்துனரும் எங்களின் நெருங்கிய நண்பர் கூட்டத்தில் ஒன்றாகவே ஆகிவிடுகின்றனர்.

கல்லூரி காலத்தின் இறுதி நாளை Farewell Party என நாங்கள் கொண்டாடும்போது ஏற்படும், 'இவர்களை மீண்டும் எப்போது சந்திப்போம்' என்ற ஏக்கமும், பிரிவுத்துயரும், "பஸ் டே" கொண்டாடும் நாளில் இருக்கிறது. இதே பேருந்து,இதே நண்பர்கள், இதே வழித்தடம் மீண்டும் இந்த நாட்கள் வருமா? அதற்காகத்தான் "பஸ் டே".

இதை, அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.

கேள்வி : "பஸ் டே" எப்படி கொண்டாடுகிறீர்கள்?

மாணவர்கள் :
அந்த நாளில், பேருந்தை அலங்காரம் செய்வோம். ஆடல், பாடல் என மிகவும் சந்தோஷத்துடன், நாங்கள் தினமும் சென்று வரும் வழித்தடத்தில் செல்வோம்.

நடத்துனர்க்கும், ஓட்டுனருக்கும் புத்தாடை எடுத்து கொடுப்போம். அவர்களை கேட்டுபாருங்கள். ஏதோ ஒரே வகுப்பில் படித்ததை போன்று,அன்பை பரிமாறிக்கொள்ளும் அந்த நிமிடங்களின் அருமையை.

பஸ் முழுக்க மாணவர்களாகிய நாங்கள் மட்டுமே இருப்போம். எங்களின் வாழ்நாளில், நீங்கா இடம் பெறப்போகும் கல்லூரி கால வாழ்வில், மிகவும் முக்கியமானது "பஸ் டே".

நீங்கள் நன்கு கவனித்து கொள்ளுங்கள். "பஸ் டே" கொண்டாடும் அந்த நாளில், பேருந்துக்குள் பயணிகள் யாரும் இருக்க மாட்டார்கள்.

கேள்வி : பஸ் டே என்ற பெயரில், போக்குவரத்து நெரிசலை உண்டாக்குவது என்ன நியாயம்?

மாணவர்கள்
: நாங்கள் செல்லும் பேருந்து, அன்றைய தினம் மெதுவாகத்தான் செல்லும் என்பதை ஒப்புகொள்கிறோம். முடிந்தவரை, போக்குவரத்து நெரிசல் வாராமல்தான் இருக்கும். காரணம், பஸ் எங்கும் நின்று விடுவதில்லை. ஒரு ஓரமாக மற்ற வாகனங்களுக்கு வழிவிட்டு, சென்று கொண்டுதான் இருக்கும். அப்போது, போக்குவரத்து நெரிசல் எப்படி ஏற்ப்படும்?

அப்படியே கொஞ்சம் போக்குவரத்து நெரிசல் வருவதாக வைத்துக்கொள்ளுங்கள்.எதோ, ஆண்டுக்கு ஒருமுறைதான் நாங்கள் "பஸ் டே" கொண்டாடுகிறோம்.

சவ ஊர்வலம் என்ற பெயரில், போக்குவரத்து நெரிசல்கள் இல்லாத ஒரு ஊரை சொல்லுங்கள் பார்ப்போம்.

முதல்வர்,அமைச்சர்கள்,முக்கிய அரசியல்வாதிகள் செல்லும்போதெல்லாம் தினசரி சாலையை அடைத்து விடுகிறார்களே. அதை, யார் தட்டிக்கேட்பது? அப்போது மட்டும் உங்களுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லையா??

கேள்வி : அன்றைய தினத்தில், பெண் பயணிகளை கிண்டல் செய்வதுண்டா?

மாணவர்கள் :
கேள்வியே தவறு. எந்த கல்லூரி, எந்த மாணவர்கள் "பஸ் டே " கொண்டாடினாலும், அன்றைய தினம், பயணிகள் யாரும் பஸ்ஸில் இருக்கமாட்டார்கள். மிகவும் மெதுவாக, மாணவர்களின் உற்சாகத்தோடு செல்லும் பேருந்தில், பயணிகள் எப்படி வருவார்கள்?

கேள்வி : பஸ்சின் மேலே ஏறி நின்று சட்டையை கழற்றிவிட்டு ஆடுவது ஏன்?

மாணவர்கள் : அது தவறுதான். ஆனால், எல்லா கல்லூரி மாணவர்களுமே இப்படி நடப்பதில்லையே. எதோ ஒரு காவல் நிலையத்தில், கற்பழிப்பு நடந்துவிட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த காவல்துறையினருமே குற்றவாளிகள் என்று கூறமுடியுமா? மாணவர்களுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்?

கேள்வி : பச்சையப்பா கல்லூரி நடத்திய "பஸ் டே" அன்று, பேருந்தில் இருந்து பீர் மற்றும் குவாட்டர் பாட்டில்கள் இருந்தது என்று கூறப்படுவது குறித்து?

மாணவர்கள்
: குடிப்பது தவறு, சட்ட விரோதம், கலாச்சார கேடு,உடல்நல கேடு என்று என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள்.இன்றைக்கு, குடிப்பதை நமது அரசே மூலைக்கு மூலை கடை திறந்து, ஊக்குவிக்கிறதே. அது மட்டும் என்ன நியாயம்.அதை தடுக்க முடியுமா உங்களால்?

எந்த கட்சியின் அரசியல் கூட்டமாக இருந்தாலும், அதில் பேசும் அரசியல்வாதிகளும் சரி. அதில் கலந்து கொள்ளும் அடிபொடிகளும் சரி. குடித்துவிட்டுதானே வருகிறார்கள். ஏன், அவர்களை யாரும் தடுக்கவில்லை.

கேள்வி : "பஸ் டே" அன்று, நீங்கள் செல்லும் பேருந்தின் பின்னால், காவல்துறையினர் வாகனங்களில் பின்தொடர்ந்து, பாதுகாப்புக்கு வருவது...?

மாணவர்கள் :
தேர்தலில் வென்றவன், தோற்றவன், ஊழல் வழக்கில் சிக்கியவன், போலி சாமியார்கள் இவர்களுக்கு எல்லாம் பின்னால் செல்லும் காவலர்கள், ஒரு நாள் மட்டும் எங்களுக்காக மாணவர்கள் பின்னால் வந்தால் என்ன சார்?

கேள்வி : பச்சையப்பா மற்றும் பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள், பாதுகாப்புக்கு வந்த பெண் காவலர்களை தாக்கியது குறித்து?

மாணவர்கள் : இதுதான் காவல்துறை எதிர்பார்த்தது. அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்றால், அவர்களுக்கு பலன் இருக்கும். "பஸ் டே" அன்று எங்கள் பின்னால் வருவது அவர்களுக்கு முன்பிருந்தே விருப்பம் இல்லை.

கவனியுங்கள். ஆண் மாணவர்கள் மட்டுமே "பஸ் டே" கொண்டாடியபடி செல்லும் பேருந்துக்கு பின்னால், பெண் காவலர்கள் வரவேண்டிய தேவையும் இல்லை. அவசியமும் இல்லை.ஏன், வந்தார்கள்?

ஆண்கள் கல்லூரியில், பெண் காவலர்களை ஏன் நிறுத்தினார்கள்? ஏன், ஆண் காவலர்களே இல்லையா? இது, வேண்டுமென்றே செய்த செயல். அப்போதுதான், இந்த விவகாரத்தை பெரிது படுத்தி, எங்களின் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்க முடியும்.

பெண் காவலர்களை எங்களோடு தேவையின்றி வரவழைத்து, மோதலை உண்டாக்கி, நினைத்தை சாதித்துவிட்டது தமிழக காவல்துறை.

கேள்வி : உங்கள் கொண்டாட்டத்திற்கு எதிராக, பொதுமக்களில் சிலர் பொது நல வழக்கு தொடர்ந்தது பற்றி?

மாணவர்கள் : எங்களின் இளமை,கல்லூரி கால கொண்டாட்டங்கள் ஆகியவற்றை பிடிக்காத சில பெருசுகள், பொறாமை காரணமாகவே இந்த வழக்கை போட்டு இருக்கிறார்கள். கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து ரசித்தவர்கள் கண்டிப்பாக "பஸ் டே" தினத்திற்கு எதிர்ப்பாக இருக்கமாட்டார்கள்.

இப்படிதான், மெரீனா கடற்கரையில் யாரும் கிரிக்கெட் விளையாட முடியாதபடி ஏதோ ஒரு ரிடையர்டு கேஸ் வழக்கு தொடர்ந்து, தடை வாங்கிவிட்டார். அப்பார்மென்ட் நகரத்தில், நாங்கள் எங்கே போய் விளையாடுவது? மைதானங்கள் எங்கே இருக்கின்றன? சந்தடி நிறைந்த தெருவில் விளையாட முடியுமா?

படிப்பு,விளையாட்டு, சின்ன சின்ன ஜாலிகள், அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் மேலாக பஸ் டே, Farewell Day போன்ற கொண்டாட்டங்களால் கிடைக்கும் நினைவுகள், நட்பு இப்படி எல்லாம் சேர்ந்ததுதான் "கல்லூரி வாழ்க்கை"

படிப்பை தவிர வேறு எதுவும் தேவை இல்லை என்றால், எதற்கும் லாயக்கு இல்லாத, மற்ற எந்த அறிவும் இல்லாத ஒரு "மொக்கையான" மாணவ சமுதாயம் மட்டுமே இதனால் எதிர்காலத்தில் உருவாகும்.

அப்படிதான் வேண்டும் என்று திட்டத்தோடு செயல்படுகிறார்கள் காவல்துறையும்,அரசியல்வாதிகளும்.

அன்பு வாடிக்கையாளர்களே,மாணவர்களின் பேட்டி பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?

பதிவு : இன்பா

1 comments:

மதுரை சரவணன் said...

thala naama pinnaala athntha passa paarrkka mudiyaama pokalam.... athunaala kondaadalaam pothu makkal aruverukkath thakka vakaiyil... uyirukku uththuravaatham illaathavaaru kondaaduvathu kuutaathu enbathu thaan visayam.. pakirvukku nanari..

 
Follow @kadaitheru