Monday, March 7, 2011

குடியால் சீரழியும் தமிழ்க்குடும்பங்கள்


சென்னை, திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பார் ஒன்றில் மது அருந்திய ஒருவர் சாவு. மூன்று பேர் மயக்கம். சென்னை சுங்கச் சாவடி அருகே உள்ள பார் ஒன்றில் தகராறு, கத்திக் குத்து. ஒருவர் கைது. இருவர் அரசு மருத்துவமனையில் அனுமதி. இரண்டு ஆட்டோ டிரைவர்கள் மகிழ்ச்சிக்காக மது அருந்தினராம். வாக்குவாதம், விளைவு, ஒருவருக்குக் கத்திக்குத்து. இது நடந்தது சென்னை முகப்பேரில் உள்ள டாஸ்மாக் பாரில்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் ஒருவரின் மாமனார், மாமியார், மருமகள் ஆகிய மூவர் தூக்கிட்டுத் தற்கொலை. ஒருவரின் குடிப்பழக்கம், ஊதாரித்தனம் கந்து வட்டிகாரர்களிடம் பட்ட கடன் சுமையே தற்கொலைக்குக் காரணம் எனப் புகார்.

விருதுநகர் முத்தால்நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்துத் தற்கொலை. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் மனைவி, மகனை குடிபோதையில் வெட்டிக் கொன்ற விவசாயி.

இவையெல்லாம், ஏதோ ஓராண்டிலோ அல்லது ஒரு மாதத்திலோ நடைபெற்ற சம்பவங்கள் அல்ல. சென்னையில் பிப்.22-ம் தேதி ஒரே நாளில் வெளியான செய்திகள். இப்படிக் குடும்பம் குடும்பமாய் மக்கள் மடிவதற்கும், இளைஞர்கள் எல்லாம் கொலை செய்யும் காட்டுமிராண்டிகளாக மாறிக் கொண்டிருப்பதற்கும் என்ன காரணம்?

மகிழ்ச்சியாக இருக்க மதுவைக் குடித்த மனிதன் அதற்கே அடிமையாய்ப் போனது ஏன்? மனிதன் தவறு செய்கிறானா அல்லது மது தவறு செய்ய வைக்கிறதா?

சமீபத்தில் நடைபெற்ற பாதிக்கும் மேற்பட்ட குற்றநிகழ்வுகள் குடிபோதையில்தான் நடைபெற்றுள்ளன. அனைத்து மகளிர் காவல்நிலையங்களில் வரதட்சிணையைவிட, குடிபோதையில் பெண்களைத் துன்புறுத்தும் கணவன்மார்கள் மீதான புகார்கள்தான் சுமார் 80 சதவீதம் இருக்கிறது. நெடுஞ்சாலை விபத்துகளுக்குக் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதேநிலை நீடித்தால் இன்னும் 10 ஆண்டுகளில் இதற்கெனவே நூற்றுக்கணக்கில் மருத்துவமனைகளைக் கட்ட வேண்டியதும், பெரும் தொகை செலவு செய்யவேண்டியதும் தவிர்க்க முடியாததாகும்.

மேலும், கல்லீரல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் உயரும் என்கிறார் அரசு ஸ்டான்லி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் சுரேந்திரன்.

இதுமட்டுமல்ல, பள்ளிக்கூடம் முதல் கல்லூரிகள் வரை மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலச் சந்ததியே ஒழுக்கம் கெட்டவர்களாக மாறிவிடும் அபாயம் தொடங்கிவிட்டது. கிராமப்புறங்களில் திறக்கப்பட்டுள்ள மதுக்கடைகளால் கிராமியப் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது.

மது அருந்தியவர்களைக் கண்டாலே சற்று ஒதுங்கி நிற்கும் கிராமங்களில் இப்போது குடிப்பழக்கம் இல்லாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தனை அவலங்களும், கேடுகளும் சமூக ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, ஆட்சியாளர்களுக்கும் புரியாதது அல்ல.

எல்லாவற்றுக்கும் காரணம் வருமானம்தான். அரசு நிறுவனமான டாஸ்மாக் 1983-84-ல் தொடங்கப்பட்டபோது அதன் முதலீட்டுத் தொகை ரூ.15 கோடி. அன்றைய ஆண்டு வருவாய் ரூ. 139 கோடி மட்டுமே. இன்றைய ஆண்டு வருமானம் மட்டும் ரூ.15,000 கோடி. 25 ஆண்டுகளில் 107 மடங்கு வளர்ச்சி. இந்தியாவில் எந்த நிறுவனமும் இத்தகைய வளர்ச்சியை அடைந்திருக்காது.

மதுவிற்பனையைத் தனியார் மூலம் நடத்திய அரசு 2003-04-ல் டாஸ்மாக் மூலம் நேரடி விற்பனையைத் தொடங்கியபோது கிடைத்த வருவாய் ரூ.2,828 கோடி. 2009-10-ல் இது ரூ.12,461 கோடியாக உயர்ந்து, நடப்பாண்டில் ரூ.15,000 கோடியைத் தாண்டிவிட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சுமார் ரூ.50 ஆயிரம் கோடிக்கு மேல் மது விற்பனை மூலம் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

இதில் ஐந்து ஆண்டுகளில் ஒரு ரூபாய் அரிசித் திட்டத்துக்கு சுமார் ரூ.15 ஆயிரம் கோடியும், இலவச வண்ணத் தொலைக்காட்சித் திட்டத்துக்கு ரூ.4,500 கோடியும், இலவச எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்துக்கு ரூ. 650 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் பல திட்டங்களுக்கும் கோடிகளில் ஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், ஒன்று புரிகிறது.

ஆட்சி அதிகாரத்தில் தொடர வாக்காளர்கள் அவசியம். வாக்காளர்களைக் கவர இலவசங்கள் தேவை. இலவசங்கள் தொடர கஜானா நிரம்பியிருக்க வேண்டும். கஜானாவை நிரப்ப மது விற்பனைதான் ஒரே வழி என்பதைத் தமிழக அரசியல் தலைவர்கள் கொள்கை முடிவாகக் கொண்ட பிறகு சமூகம் சீரழிந்தால் என்ன? சாமானிய, நடுத்தரக் குடும்பங்கள் கூட்டாகத் தற்கொலை செய்துகொண்டால் என்ன?

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளின் எண்ணிக்கை 23,978. மதுக்கடைகளின் எண்ணிக்க 6,642. முன்னதைப் பின்னது இன்னும் சில ஆண்டுகளில் தொட்டுவிடும். கசாப்புக் கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்கும் ஆட்டின் நிலைமைதான் மதுவிலக்கை எதிர்பார்க்கும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்பதே இப்போதைய நிலை.

தேர்தல் வந்துவிட்டது. சமூகம் பற்றிப் பேசுவது எல்லாம் பிறகு வைத்துக் கொள்ளலாம். இப்போது கூட்டணி யாரோடு என்பதே இன்றைய கவலை.

(நன்றி : தினமணி)

2 comments:

S.Sudharshan said...

சில சுவாமி மார் தமிழ் சமூகத்தை கெடுத்தாலும் குடியும் பெரிய பங்கு வகிக்கிறது ...தேவையான அலசல் :)

R.Gopi said...

இன்பா...

உலகின் ஒரே ஏழை, தானைத்தலைவர் இந்த இத்துப்போன தமிழ்நாட்டில் ஏதோ டாஸ்மாக் வச்சு சின்ன அளவுல (சுமார் 16,000 கோடி அளவு) சாராயம் வித்து பொழைக்கறாரு...

அது உங்களுக்கு பொறுக்கலியா?

 
Follow @kadaitheru