Thursday, March 31, 2011

கருணாநிதி ஒரு மானமுள்ள கணவரா??


தமிழகத்தைக் கட்டிக்காக்கும் தன்மானத்துக்கும், சுயமரியாதைக்கும் சொந்தக்காரர்கள் என்று தங்களை வர்ணித்துக்கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ""அண்ணா அறிவாலயத்தில்'' கருணாநிதி தலைமையில் 5.3.2011-அன்று தி.மு.க.வின் உயர்மட்டக்குழு கூடி, காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி குறித்து மிகத் தெளிவான முடிவொன்றை எடுத்தார்கள்.


அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் கட்சிக்கு 60 இடங்கள் மட்டுமே ஒதுக்க முடியும். காங்கிரஸ் கேட்பதுபோல 63 இடங்கள் ஒதுக்குவது என்பது இயலாத ஒன்று. இதனைக் காங்கிரஸ் ஏற்காவிட்டால் 7.3.2011 அன்று தி.மு.க.வின் தன்மானப் படைவீரர்களான கட்சியின் மத்திய அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பார்கள். பதவி விலகல் கடிதத்தைக் கொடுப்பார்கள். மத்திய கூட்டணி அரசுக்கு வெளியிலிருந்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்பது போன்ற திட்டவட்டமான வழிகாட்டுதலோடு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.

தில்லி சென்றவர்கள் 7.3.2011 அன்று காலை 11 மணிக்குப் பிரதமரைச் சந்திப்பதாகத் தெரிவித்தார்கள். இதற்கிடையில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் காத்திருந்து சந்தித்தார். நிதித்துறை இணையமைச்சர் பழநி மாணிக்கம் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க.வை காங்கிரஸ் கைவிட்டுவிடாமல் இருக்கத் தன்னாலான முயற்சிகளில் ஈடுபட்டார்.


தி.மு.க.வின் குடும்பத் தொலைக்காட்சி நிருபர்கள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் தி.மு.க. முடிவு பற்றிக் கேள்வி எழுப்பினர். ""அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா...'' பாணியில் அவரும் கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு சுமுக முடிவு ஏற்படும் என்று பதிலளித்த பிறகுதான் முதல்வர் கருணாநிதிக்குப் போன உயிர் திரும்பி வந்தது. அன்றைய தினம் மாலைக்குள் இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்கள். இதற்குள் பதவி விலகல் 7-ம் தேதியிலிருந்து 8-ம் தேதிக்கு ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது.

உலகம் முழுவதும் பரவி விரவி நிற்கின்ற தமிழர்களின் ஒட்டுமொத்தக் குத்தகைக்காரராகத் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்ளும் ""மானமிகு வீரமணி'', ""தி.மு.க.வுக்கு காங்கிரஸடு உள்ள உறவை உதறித்தள்ளுவதை நாங்கள் பாராட்டுகிறோம்'' என்று ஆர்ப்பரித்தார்.


இலங்கைத் தமிழர்களின் காப்பாளர் ""தன்மானச் செம்மல்'' தொல். திருமாவளவன், ""காங்கிரஸ் என்ற பயனற்ற மூட்டையை நாம் ஏன் சுமக்க வேண்டும்'' என்று கொக்கரித்தார். ""காங்கிரஸக் கூட்டணியிலிருந்து விலக்கியதற்கு எனது பாராட்டுகள்'' என்றார் சுப. வீரபாண்டியன்.


""கூட்டணியில் காங்கிரஸ் இல்லாவிட்டால் குடியொன்றும் முழுகிவிடாது'' என்றும், ""தி.மு.க.வின் தேர்தல் வெற்றியைப் பாதிக்காது'' என்றும் பேட்டியே கொடுத்தார் சட்ட அமைச்சர் துரை. முருகன்.


இதற்கிடையே 7.3.2011 அன்று இரவு 8 மணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் "தென்மண்டலக் காப்பாளரும்' மத்திய அமைச்சருமான மு.க. அழகிரியும், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சோனியா காந்தியைச் சந்தித்து, ""நீங்கள் எங்கள் கூட்டணியில் (காங்கிரஸ்) இருந்தாக வேண்டும், எங்களை விட்டுப் போக வேண்டாம். நீங்கள் கேட்கும் 63 தொகுதிகளை நிச்சயம் தருகிறோம். இதுதொடர்பாக நீங்கள் கருணாநிதியோடு பேசத் தேவையில்லை மற்றவர்கள் பேசினாலே போதும்'' எனக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக் கொடியை இந்தியாவின் தலைநகரில் தலைகீழாக ஏற்றி வைத்தார்கள்.


கடந்த மூன்று ஆண்டுகளாக சோனியா காந்தியைச் சந்திப்பதற்குத் தவறாமல் தி.மு.க. குழுவில் இடம்பெற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழியை ஏன் தூது அனுப்பவில்லை? பிரச்னையே கனிமொழிதான் என்பதாலா? திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஜனநாயகப் பாசறை கூடி முடிவெடுத்த தீர்மானத்தை அந்தப் பாசறையோடு கலந்து பேசாமல் முதலமைச்சர் கருணாநிதி தன்னிச்சையாக காங்கிரஸýக்கு 63 தொகுதிகளைத் தருவதென ஏற்றுக் கொண்டார் என அறிவிக்கப்பட்டது.


தி.மு.க.வின் வழி வழி ஜனநாயகம் கருணாநிதியால் குழிதோண்டிப் புதைக்கப்பட்டதை மானமிகுக்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இதெல்லாம் குடும்பத்துக்காகத்தானே? கழகம் ஒரு குடும்பம் என்பதன் அர்த்தத்தை இப்போதாவது தி.மு.க.வினர் புரிந்துகொண்டால் சரி. ""மூன்று தொகுதிகள் அதிகம் கேட்பது அல்ல அவர்கள் பிரச்னை.


தேர்தல் முடியும்வரை தமிழகத்தின் முதல் குடும்பமான கருணாநிதியின் குடும்பத்தைச் சார்ந்த அவரது மகள் கனிமொழியையோ மனைவி தயாளு அம்மாவையோ புலனாய்வுத்துறை கைது செய்வதைத் தள்ளிப்போடுங்கள் என்பதுதான், சோனியா காந்தியிடம் மண்டியிட்டு வைக்கப்பட்ட வேண்டுகோள்'' என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் கேட்ட 63 தொகுதிகள் தரப்பட்டு விட்டன. காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. காங்கிரஸின் இன்னொரு கோரிக்கையான கூட்டணி ஆட்சியை, வெறும் 119 தொகுதிகளில் மட்டுமே போட்டி போடுவதன் மூலம் மறைமுகமாக ஏற்றுக்கொண்டு விட்டிருக்கிறது தி.மு.க. இத்தனைக்குப் பிறகும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று வீராவேசம் பேசுகிறார்களே, அதுதான் கருணாநிதியின் சாமர்த்தியம்.


கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா விவகாரத்தில் ""கைது செய்யப்பட்டால் குற்றவாளியா?'' என்று கேட்ட கருணாநிதி, இந்த 2ஜி அலைக்கற்றை ஊழல் பற்றிய விசாரணை ""தம் மகளிடமும், மனைவியிடமும்'' நடைபெறுவதற்கு என்ன சொல்லப்போகிறார்?


வீட்டுக்கு வந்த ஒருவர் கதவைத் தட்ட, அந்த வீட்டில் இருந்த குழந்தை கதவைத் திறந்தது. வந்தவர் ஏதோ சொல்ல அந்தக் குழந்தை வெட்கத்தில் தன்னுடைய கவுனை எடுத்து முகத்தை மூடிக்கொண்டது. பிறகுதான் தெரிந்தது அந்தக் குழந்தைக்கு ஜட்டி போடும் பழக்கம் இல்லை என்பது!


63 இடங்கள் தர முடியாது என்பதுதானே பிரச்னை. அதற்காகத்தானே ராஜிநாமா அறிவிப்பு செய்யப்பட்டது? பிறகு அதே 63 இடங்களைக் காங்கிரஸக்கு அளித்து சமரசம் செய்து கொள்வானேன்? ஆதரவை விலக்கிக் கொள்கிறோம் என்று திட்டவட்டமாக அறிவித்தவர்கள், காங்கிரஸ் கேட்ட தொகுதிகளைக் கொடுத்து சமரசம் செய்து கொண்டதற்கும், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தயாளு அம்மாவையும், கனிமொழியையும் சி.பி.ஐ. விசாரித்ததற்கும் தொடர்பு கிடையாது என்று சொல்வதற்கும், பனைமரத்தடியில் அமர்ந்து பால் குடித்தேன் என்பதற்கும் வேறுபாடு இருக்க வழியில்லை.


மத்தியப் புலனாய்வுத் துறையினர் தயாளு அம்மாவையும், கனிமொழியையும் அவர்களது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றல்லவா விசாரித்திருக்க வேண்டும்? ஆ. ராசாவை அப்படித்தானே விசாரித்தார்கள்? இல்லையென்றால், அவர்கள் வீட்டிலாவது விசாரித்திருக்க வேண்டும். இரண்டும் முதல்வரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் என்பதால் விசாரிக்க முடியவில்லையா, இல்லை அதைத் தவிர்க்க சி.பி.ஐ. நிர்பந்திக்கப்பட்டதா?

கலைஞர் தொலைக்காட்சி அலுவலகத்தில் விசாரித்தார்களா இல்லை அண்ணா அறிவாலய நூலகத்தில் விசாரித்தார்களா என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஆனால், அண்ணா அறிவாலயத்துக்குள் மத்தியப் புலனாய்வுத் துறையினர் வந்தனர். விசாரித்தனர் என்பது தெரியும்.


ஒருபுறம், தி.மு.க. தலைவர் வேட்பாளர் தேர்வு நடத்துகிறார். இன்னொருபுறம், காங்கிரஸ் தேர்வுக்குழு தொகுதிப் பங்கீடு பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. அதே அண்ணா அறிவாலயத்தில், அதேநேரத்தில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மனைவியிடமும், மகளிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்துகிறது.


இதைவிட வெட்கக்கேடான ஒன்று நடக்குமா? வேறு ஒரு மானமுள்ள கணவரால் இதைச் சகித்துக்கொள்ள முடியுமா?


இதற்குத்தான் "இனமானம்' என்று பெயரோ என்னவோ? மானமாம், சுயமரியாதையாம், இன உணர்வாம்... ஆஷாடபூதிகள்...!


-திண்டிவனம் ராமமூர்த்தி (நன்றி : தினமணி)

0 comments:

 
Follow @kadaitheru