Tuesday, March 22, 2011

"விம்பம்" - லண்டன் குறும்பட விழா - ஒரு பார்வை.

அம்ஷன்குமார் - குறும்பட இயக்குனர்களின் மிகவும் முக்கியமானவர். சர்வதேச அளவில் தனது குறும்படங்கள் மூலம் கவனம் பெற்றவர். இன்றைய குறும்படங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களில் முதன்மையானவர் இவர்.

விம்பம் - ஆறாவது குறும்பட விழா, லண்டனில் நடைபெற்ற விழா.

சமிபத்தில் நடந்த இந்த குறும்பட விழா பற்றி அம்ஷன்குமார் உயிர்மை இதழில் எழுதி இருக்கும் கட்டுரை இங்கே...

பலவற்றிலும் தனித்துவம் காட்டும் இலங்கைத் தமிழர்கள் தமிழகத் தமிழர்களின் படங்களைத் தங்கள் படங்கள் என்று பாவிக்கத் தொடங்கியதால் பெரும் வீழ்ச்சியை சந்திக்க நேரிட்டது. இதனால் அங்கு தயாரிக்கப்பட்ட சொற்பமான எண்ணிக்கைப் படங்கள் தரத்திலும் மிகவும் பின்தங்கின. இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு திரைப்படக்கேந்திரமும் அங்கு உருவாகவில்லை. ஆனால் சிங்களர்கள் அவர்கள் விரும்பிப் பார்த்த இந்தி திரைப்படங்களின் தாக்கத்திலிருந்து தங்களை விரைவிலேயே விடுவித்துக்கொண்டு ஒரு புது பாணியை உருவாக்கத்தொடங்கினார்கள். இதனால் இன்று சர்வதேச திரைப்பட அரங்குகளில் சிங்களப் படங்கள் பேசப்படுகின்றன.

தக்க வழிகாட்டல் இன்றியும் தயாரிப்பு நிறுவனங்கள் இன்றியும் நிலைகுத்திப் போயிருந்த இலங்கைத் தமிழர் திரைப்பட உலகம் இன்று அதன் இளம் தலைமுறையினரால் குறும்படங்கள் வாயிலாக ஒரு புதிய திசை நோக்கி செல்லத் தொடங்கியிருக்கிறது. இலங்கைத் தமிழர்கள், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து, ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் தயாரிக்கும் குறும்படங்கள் தமிழகத் தமிழர்கள் தயாரிக்கும் படங்களுக்கு சற்றும் குறைந்தன அல்ல.

இலங்கைத் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் ஆகிய இருவரும் குறும்படங்கள் எடுத்தாலும் குறும்படங்கள் பற்றிய செயற்பாடுகளில் முந்தையவர்கள் பிந்தையவர்களை மிஞ்சி விட்டார்கள். தமிழின் முதல் குறும்பட டாகுமெண்டரி போட்டியை சர்வதேச அளவில் லண்டன் சினி சங்கம் யமுனா ராஜேந்திரனின் முயற்சியால் 2001ம் ஆண்டு நடத்திற்று.

அதைத் தொடர்ந்து அவர்கள் தாங்கள் குடியேறிய பல நாடுகளிலும் இவ்விழாக்களை உற்சாகத்துடன் நடத்தி வருகிறார்கள். கலை இலக்கிய அமைப்பான ‘விம்பம்’ லண்டனில் கடந்த ஐந்து வருடங்களாகத் தொடர்ச்சியாக குறும்பட விழாக்களை சிறந்த படங்களுக்கான விருதுகள் அளித்து நடத்தி வருகிறது. நவம்பர் 2010ல் லண்டனில் விம்பம் நடத்திய ஆறாம் குறும்பட விழாவில் சிறப்பு விருந்தினனாகக் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவ்விழாவில் திரையிடப்பட்ட விருது பெற்ற படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலும் நான் இடம் பெற்றிருந்தேன்.

விழா க்ரீன்விச் யுனிவர்சிடி ஆடிடோரியத்தில் நடைபெற்றது. தமிழர்களின் விழா ஒன்று இவ்வரங்கில் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். விழா அரங்கு நிறைந்த காட்சியாக இருந்தது. தமிழகத்தில் நடைபெறும் மாற்றுப்பட நிகழ்ச்சிகளுக்கு அவற்றில் திரையிடப்படும் படங்களில் இடம் பெற்ற கலைஞர்கள், அவர்களது நண்பர்கள் ஆகியோரை மட்டுமே காணமுடியும். பெரிய நடிகர்கள் நடித்த படங்கள் அல்லது அவர்கள் கலந்துகொள்ளும் விழாக்கள் என்றால் திருவிழாபோல் சுற்றத்தாருடன் மக்கள் கூடிவிடுவார்கள்.

ஆனால் கலாச்சார உணர்வு மிக்க இலங்கைத் தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் குறும்பட டாகுமெண்டரி படத் திரையிடல்களுக்கு வருவதை நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அந்த நிகழ்விற்கு பாரீஸிலிருந்தும் சிலர் வந்திருந்தனர். எந்தெந்தப் படத்திற்கு என்னென்ன விருது கிடைக்கும் என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள அவர்கள் முன்னதாகவே ஆர்வம் கொண்டிருந்தனர். ‘எங்கடை ஆட்கள் எப்படி படமெடுக்கிறார்கள்? அவர்கள் முன்னேறிவிட்டார்களா?’ என்று என்னிடம் பலரும் அக்கறை மேலிட விசாரித்தனர். எல்லா தரப்பினரின் ஆதரவினையும் பெற்ற இக்குறும்படத் திரைப்பட விழா பற்றிய அறிவுப்புகள் ஐரோப்பியத் தமிழர்களால் அதிக அளவில் பார்க்கப்படும் லண்டன் தீபம் டிவி சேனலில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன.

சென்ற ஆண்டுகளில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டிகளிலிருந்து இந்த ஆண்டு போட்டி சிற் சிலவற்றில் வேறுபட்டது. இவ்வாண்டிலிருந்து இலங்கை வாழ் தமிழர்கள், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் ஆகியோர் மட்டுமே கலந்துகொள்ளும் போட்டியாக விம்பத்தின் சர்வதேச குறும்பட விழாக்கள் அமைகின்றன.

‘தமிழகத் தமிழர்களுக்கான அமைப்புகள் ஏற்கனவே நிறைய உள்ளன. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கான அமைப்புகள் வெகு சிலவே. தவிரவும் முழு முனைப்போடு இலங்கைத் தமிழர்களின் குறும்பட செயல்பாடுகளுக்கு ஊக்கம் தரவேண்டும் என்பது எங்களது இலட்சியம்’ என்று விம்பத்தின் புதிய நிலைப்பாடு குறித்து சிறந்த ஓவியக்கலைஞரும் விம்பத்தின் முக்கிய பொறுப்பாளர்களுள் ஒருவருமான கே.கிருஷ்ணராஜா கூறியபொழுது அதிலுள்ள நியாயத்தை உணர முடிகிறது. குறும்படங்களைத் தவிர டாகுமெண்டரி படங்களையும் விம்பம் போட்டிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கூறியபொழுது அவர் விம்பம் எல்லாவித படங்களையும் வரவேற்கிற அமைப்பு என்று தெளிவுபடுத்தினார்.

விருது பெற்ற படங்கள் பலதரத்தவையாக இருந்தன. ‘அம்மாவுக்கு ஒரு கடிதம்’, ‘12 pm to 12 am’ ஆகிய படங்கள் விருது பெறாதவை என்ற போதிலும் அனுப்பப்பட்ட பல படங்களைவிட அவை சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்ததால் அவையும் விழாவில் திரையிடப்பட்டன.

‘அம்மாவுக்கு ஒரு கடிதம்’ (லண்டன். இயக்கம்: எஸ்.வி.ஜெயராஜ். 15 நிமிடங்கள்)

லண்டன் ரயில் நிலைய ப்ளாட்பாரத்தில் தலைமுதல் கால்வரை குளிருடைகள் அணிந்துகொண்டு படுத்துக் கிடக்கும் ஒரு 25 வயது இளைஞன் போவோர் வருவோரிடம் ஒரு பவுண்டு தர முடியுமா என்று யாசித்துக் கொண்டிருக்கிறான். சாப்பிடுவதற்காகப் பணம் கேட்பதாகச் சொல்லும் அவன் அதை போதை மருந்து வாங்குவதற்காகச் செலவிடுகிறான். ஊரிலிருந்து இங்கு வந்தது டாக்டராக வேண்டும் என்கிற கனவுடன்தான். இரண்டு வருடங்கள் டாக்டர் படிப்பு படித்துக்கொண்டிருந்தபொழுது இந்தக் கொடிய போதைப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அது அவனுக்கு வரக் காரணம், அவனால் தனிமையைத் தாங்கிக்கொள்ள இயலவில்லை என்பதுதான். தன் தாய்க்கு மன்னிப்புக் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்கிறான். ஒரு காட்சி தவிர படப்பிடிப்பு முழுவதும் நடைபாதைகளிலேயே படமாக்கப்பட்டிருந்தது.

‘நேசம்’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: சி.கோணேஸ்வரன். 20 நிமிடங்கள்)

படம் சிங்கப்பூரில் நடக்கிறது. குடும்பத் தலைவனுக்கு வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் வனிதா மீது ஒரு கண். அதாவது சந்தேகக் கண். வீட்டில் தான் வைக்கும் சிகரெட்டுகளையும் சில்லறைகளையும் அவள்தான் களவாடுகிறாள் என்று தன் மனைவியிடம் கூறுகிறான். அவளுக்கு அம்மாதிரியான சந்தேகங்கள் எதுவும் கிடையாது. அவனுடைய நச்சரிப்பு தாங்காமல் பணிப்பெண்ணை அவன் முன்னிலையில் கேட்கிறாள். வனிதா குற்றத்தை ஒப்புக்கொள்கிறாள். அவள் தரப்பில் அதற்கு அவள் அளிக்கும் விளக்கம்தான் வேறாகிறது. அவளுடைய தந்தை பீடிப் பழக்கத்தினால் மாரடைப்பு வந்து இறந்துபோனதால் தனது கல்வி நின்றுபோய் வேலைக்காரியாக மாறிவிட்ட தனது நிலைமை, அவர்களது குழந்தை அனுவிற்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவள் சிகரெட் பாக்கெட்டுகளைத் தூர எறிந்து விட்டதாகக் கூறுகிறாள். சில்லறைகளை உண்டியலில் போட்டு விட்டதாகவும் கூறுகிறாள். ஏன் அவள் சில்லறைகளை எடுக்க வேண்டும்? படம் பார்ப்பவர்களுக்கு க்ளைமாக்ஸ் நெருங்கும்வரை பலவிதமான எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற புதிர் உத்தியின் விளைவாக அதைக் கொள்ளலாம். இதுவும் பிரச்சாரப் படம்தான். குடும்பத் தலைவனாக நடித்த சிவகுமாரின் தேர்ந்த அசைவுகள் அவரை ஒரு நல்ல நடிகராகக் காட்டின. வனிதாவாக நடித்த லேசா சோனத்திற்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

‘12 pm to 12 am’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: எரிக் தாம்ஸன். 16 நிமிடங்கள்)

எளிதில் கலவரம் அடையக்கூடிய சுபாவம் கொண்டவன் பிரேம். மத்தியானம் 12 மணிக்கு அவன் கையில் ஒரு துண்டுக் கடிதம் கிடைக்கிறது. அதில் அன்று இரவு 12 மணிக்கு அவனுக்கு சாவு என்று எழுதப்பட்டிருக்கிறது. அறைக்குள் சென்று பதுங்கிக்கொள்ளும் அவனுக்கு மொபைல் போனில் மிரட்டல் தொடர்கிறது. 12 நாட்களுக்குப் பிறகு சித்தப்பிரமை கொண்டு தெருவில் அலையும் பிரேமை அவனது அலுவலக நண்பன் பார்க்கிறான். பிரேமிற்குக் கடிதம் எழுதியும் போனில் மிரட்டியும் வந்த கும்பலில் அவனும் ஒருவன். இந்த அளவிற்கு நிலைமை விபரீதமாகிவிட்டதே என்று அவனுக்குக் கவலை. என்ன செய்தாலும் பிரேமை சுயநினைவுக்குக் கொண்டு வர இயலவில்லை. அவனுக்கும் ஒரு மொபைல் கால் வருகிறது. அதே மிரட்டல் தொடர்கிறது. பிரேமாக நடித்த கமல்ராஜ் தன் கதாபாத்திரத்தை சரியாக நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார்.

‘கறுப்பு வெள்ளை’ (பிரான்ஸ். இயக்கம்: ஸ்ரீ தயாளன். 3 1/2 நிமிடங்கள்)

பாரிஸில் ஒரு தெருவிற்குக் கீழே சுரங்கப் பாதையில் இலங்கைத் தமிழன் தொப்பி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறான். தொப்பியின் விலை ஒன்று 5 யூரோக்கள் என்று அவன் கூறுவதைக் கேட்கும் ஒரு பார்வையற்ற இளைஞன் அவனிடம் வருகிறான். அவனுக்கு ஒரு தொப்பி தரப்படுகிறது. அதை அணிந்துகொண்டபின் அவனுக்கு ஒரு சந்தேகம். தொப்பியின் நிறம்? சிவப்பு. ஆனால் தனக்குக் கறுப்புத் தொப்பிதான் வேண்டுமென்கிறான். தொப்பி வியாபாரியிடம் கறுப்புத் தொப்பி இல்லை. இல்லை இல்லை, இருக்கிறது. அந்த ஒன்றை அவன் அணிந்து கொண்டிருக்கிறான். அதைக் கழற்றிக் கொடுத்து விடுகிறான். பார்வையற்றவனால் அதைக் கண்டுகொள்ளவா முடியும்? ஆனால் அவன் தொப்பியை அணியுமுன் அதை முகர்ந்து விடுகிறான். இப்பொழுது அவன் இரண்டு ஐந்து யூரோ நோட்டுகளைத் தருகிறான். ஒன்று தொப்பிக்கு. இன்னொன்று? ‘நீங்கள் ஆசையாக அணிந்திருந்த தொப்பியை எனக்குத் தந்தீர்களே அண்ணா. அதற்காக.’ தொப்பி வியாபாரி தலை குனிகிறான். கறுப்புத் தொப்பியை அணிந்து படிகள் மீதேறி வெளியேறும் அவனது உலகம் ஒளியினால் பிரகாசிக்கிறது. இது என்னை மிகவும் கவர்ந்த படம். படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருந்தது. காமிராவைக் கையில் வைத்துக்கொண்டு டெசுபன் கதாபாத்திரங்களைச் சுற்றிச் சுற்றி வந்து அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சிவப்புத் தொப்பி தவிர மற்ற அனைத்தும் கறுப்பு வெள்ளையாகப் படமாக்கப்பட்டிருந்தன. ஜனாவின் மெலிதான பியானோ பின்னணி இசை சறுக்கல், மேன்மை ஆகிய படத்தின் ஆதார உணர்வுகளை வருடுகின்றன. சிறந்த ஸ்கிரிப்டிற்கான விருதினைப் பெற்ற படம் இது.

‘இனியவள்’ (பிரான்ஸ். இயக்கம்: ஐ.ரமணன். 4 1/2 நிமிடங்கள்)

முதல் இரவு. மணப்பெண் பட்டுப்புடவை, ஜாக்கெட் அணிந்து உடல் முழுவதும் நகைகளைப் பூட்டிக்கொண்டு கட்டில் மீது சற்று பதற்றத்துடன் அமர்ந்திருக்கிறாள். அருகே சிறு மேஜையில் பால் சொம்பு. கூடையில் பழங்கள்.எத்தனையோ படங்களில் பார்த்து அலுத்துப்போன காட்சி. சற்று பொறுங்கள், ஓர் ஆச்சர்யம் காத்திருக்கிறது. மேஜை டிராயரைத் திறந்து ஒரு கவரை எடுத்துப் பிரிக்கிறாள். அதிலிருந்து எதையோ எடுத்துப் பார்க்கிறாள். அரவம் கேட்கவும் அதைப் பழையபடி அங்கேயே வைத்து விடுகிறாள். ஆசையோடு அவள் கணவன் உள்ளே நுழைந்து அவள் கரம் பற்றுகிறான். அவள் அவன் கையை உதறிவிடுகிறாள். அவன் காரணம் கேட்கிறான். அவள், ‘உங்களைப் பிடிக்காது’ என்கிறாள். அவன், ‘பிடிக்கலேண்டா, நான் உங்கடை புருஷன்’ என்கிறான். அவள் மேஜையிலிருந்து அந்த கவரைத் தருகிறாள். அதிலுள்ள புகைப்படத்தைப் பார்த்து ‘யார்’ என்று கேட்கிறான். ‘அது என்ட லவர்’ என்கிறாள் அவள். பின்னர் அவள் எல்லா கதாநாயகிகளையும்போல இதை யாரிடமும் சொல்ல வேண்டாமென்றும் அப்பா, அம்மா வற்புறுத்தலுக்காகத்தான் இந்தக்கல்யாணத்திற்கு சம்மதித்தேன் என்றும் கூறி விசும்புகிறாள். அவன் விரக்தியுடன் வெளியேறுகிறான். அந்தப் புகைப்படத்தை நாம் இப்போது பார்க்கிறோம். அவளுடைய லவர் ஒரு யுவதி. ஓரினக் காதல் பற்றிய படமான ‘இனி அவள்’ தலைப்பு ‘இனியவள்’ என்று காட்டப்பட்டதின் அர்த்தம் நமக்குப் புரிகிறது. ஒரு இனியவளுக்காகத் திருமணத்தை துறந்தவள். இலங்கைக்கு வெளியே எடுக்கப்பட்ட சிறந்த படம் என்கிற விருது இதற்குக் கிடைத்தது.

‘3 இரவு 4 பகல்’ (பிரான்ஸ். இயக்கம்: ஐ.வி.ஜனா. 22 நிமிடங்கள்)

படத்தின் தலைப்பு சுற்றுலா பயணத்தை நடத்தும் பயண நிறுவனங்களின் விளம்பரத்தை நினைவுபடுத்துவதாயுள்ளது. ஆனால் இப்படம் இலங்கையிலிருந்து தங்கள் சொந்தங்களைக் காணச் செல்பவர்களின் பயணங்கள் எத்தனை கொடூரமானவை என்பதைக் காட்டுகின்றது. ஒரு ராப் பாடலுடன் படம் துவங்குகிறது. வாழ்வோ சாவோ நம் கையில் இல்லை என்ற அறிவுறுத்தலை மனதில்கொண்டு கொழும்பு விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ செல்கிறார்கள் ஒரு குழுவினர். மாஸ்கோ சென்றவுடன் அவர்களது பயணம் நகரைத் தாண்டிய எல்லையோரத்தை வந்தடைகிறது. இடைத்தரகர்கள் அவர்களிடமிருந்து பலவற்றையும் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஒரு வேனில் அவர்கள் அடைக்கப்படுகிறார்கள். போலந்தை வேன் அடைகிறது. அங்கு சிலர் இறக்கிவிடப்படுகிறார்கள். ஒரு இளைஞனை கார் டிக்கியில் வைத்து ஜெர்மனி வழியாக பாரிஸ் கொண்டு செல்கிறார்கள். அந்த இளைஞனை அழைத்துப்போக அவனது சகோதரன் காரிடம் வருகிறான். ஆனால் அவனை அழைத்து வந்தவர்கள் (அவர்களும் தமிழர்கள்தான்) பேசிய தொகையைக் காட்டிலும் அதிகமாக இரண்டாயிரம் பிராங்குகளைத் தருமாறு கேட்கிறார்கள். ஒருவழியாக அதைக் கொடுத்துவிட்டு வெளியே கூட்டி வரும்பொழுது அடையாள அட்டை இல்லை என்பதற்காக, அண்ணன் கதறக் கதற தம்பியை போலீஸ் பிடித்துச் செல்கிறது. புலம்பெயர்ந்த பல இலங்கைத் தமிழர்களின் கண்ணீர் பயணத்தின் சுவடுகள் இவை என்பதால் அரங்கிலுள்ள பார்வையாளர்களைப் படம் வெகுவாக நெகிழ வைத்தது. சிறந்த படம் மட்டுமின்றி, சிறந்த இயக்குநர், நடிகர், சிறந்த குழந்தை நட்சத்திரம் என்று பல விருதுகளைப் பெற்ற படம் இது.

‘கலாச்சாரம்’ (பிரான்ஸ். இயக்கம்: பி.கீதரன். 11 நிமிடங்கள்)

இக்குறும்படத்தின் நிகழ்வுகள் அனைத்தும் 11.07.2010 அன்று நடக்கின்றன. ஒவ்வொரு நிகழ்வும் எந்த நேரத்தில் நடக்கிறது என்பது காட்டப்படுகிறது. 13.25. குறுந்தாடி இளைஞன் அடுக்குமாடிக் கட்டிடத் தினுள் நுழைந்து ஒரு ப்ளாட்டின் கதவைத் தட்டுகிறான். டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் இளம்பெண் கதவைத் திறக்கிறாள். அவளுடைய புருஷன் எங்கே என்று கேட்கிறான். அதற்கு அவள் ‘வெளியே’ என்கிறாள். ‘உன்னுடைய கள்ளப் புருஷனைக் கேட்கவில்லை. சொந்தப் புருஷனை’ என்கிறான். அதற்கு அவள் ‘தெரியவில்லை’ என்கிறாள். உடனே அவளைக் கத்தியால் குத்திக் கொலை செய்கிறான். 15.12, 19.27, 23.54 என்று வெவ்வேறு நேரங்களில் இதே போன்று தனியாக உள்ள திருமணத்திற்கு அப்பால் தொடர்புள்ள பெண்களைக் கொலை செய்கிறான். பின்னர் கொலைகாரன் அமைதியாக எலெக்ட்ரிக் ஷேவரில் சவரம் செய்கிறான். மேலே விவரிக்கப்பட்ட நான்கு கொலைகளும் ப்ளாஷ்பேக்கில் பின்னோக்கிச் செல்கின்றன.

11.57. அதாவது படத்தில் நடந்த முதல் கொலைக்கும் முந்தைய நேரம். ஒரு வீட்டிலிருந்து ஒரு ஆண் ஒருத்தியைப் படுக்கையில் அனுபவித்தபின் வெளியே செல்வதை அவன் பார்க்கிறான். வீட்டிற்குள் சென்று அவளைக் கொலை செய்கிறான். அவள் வேறு யாருமல்ல. அவனது மனைவிதான் என்பதை அவர்கள் இருவரும் இணைந்துள்ள படத்திலிருந்து தெரிகிறது. கலாச்சாரம் என்கிற பெயரில் பெண்கள் கள்ளப் புருஷர்களுடன் சல்லாபிப்பதைப் படம் கண்டிக்கிறதா? கலாச்சாரத்தைக் காப்பவனாகத் தன்னைக் கருதிக்கொண்டு ஆணாதிக்க வெறியுடன் பெண்களைக் கொலை செய்வதைப் படம் சாடுகிறதா? தலைப்பு குழப்புகிறதென்றாலும் படத்தின் கதை சொல்லும் உத்தி வித்தியாசமானது. சிறந்த படத்தொகுப்பிற்கான விருதினை இப்படம் பெற்றது.

‘அம்மணம்’ ( பிரான்ஸ். இயக்கம்: ஐ.வி.ஜனா. 11 நிமிடங்கள்)

பாரிஸில் ஒரு இளம் ஓவியன். அவனுக்கு கல்கி பகவானின் உருவத்தைக் கீற (வரைய) அழைப்பு வருகிறது. பண நெருக்கடியினால் ஒப்புக் கொள்கிறான். இச்சம்பவங்களுக்கு இணையாக அவன் பாரிஸ் நகரத் தெருக்களில் ஒரு பெரிய சூட்கேஸுடன் நடந்து செல்வதை அவனது இடுப்புக்குக் கீழே காட்டப்படுகிறது. அந்த சூட்கேஸில் என்ன இருக்கக்கூடும் என்கிற எண்ணத்தைப் பார்வையாளர்களுக்கு அக்காட்சிகள் அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

ஓவியம் முடிகிற தருவாயில் தொலைக்காட்சியில் நித்தியானந்தா, பிரேமானந்தா, கல்கி ஆகியோரின் லீலா விநோதங்கள் பற்றிய செய்திகள் வருகின்றன. ஓவியன் தன்னால் படத்தை வரைய முடியாது என்கிறான். அவனுக்கு முன்பணம் தந்திருப்பதைக் காட்டி மிரட்டுகிறான் கல்கி பக்தன். சுருட்டிய படத்தையும் தொலைக்காட்சிப் பெட்டியையும் அந்த சூட்கேஸில் அடைத்து வெளியே வருகிறான். படத்தை எறிந்துவிட்டு தொலைக்காட்சிப் பெட்டியை விற்கிறான். முன்பணத்தைக் கொடுப்பதற்காக அவன் மடித்த சூட்கேஸுடன் செல்கிறான். காசுக்கு விலை போகாத கலைஞனைப் பற்றிய குறும்படம். பாரிஸ் நகரத் தெரு ஒன்றில் ஓவியர்கள் வரைந்து கொண்டிருக்கும்பொழுது அவர்களை அவன் சூட்கேஸுடன் கடந்து செல்வது காண்பிக்கப்படுகிறது. மோசடியான பேர்வழியை வரைவதற்கு அவனுக்குக் கிடைத்த வாய்ப்பிற்கும் தெருவில் வரும் மக்களை வரைவதற்கும் உள்ள வேறுபாட்டினை அக்காட்சி வலிமையுடன் உணர்த்துகிறது. சிறந்த ஒளிப்பதிவிற்கான விருது இப்படத்திற்கு வழங்கப்பட்டது.

‘100% Discount’ (ஸ்ரீலங்கா. இயக்கம்: நிலனி பாஸ்கரன். 8 நிமிடம்)

ஒரு டிபார்மென்டல் ஸ்டோரில் கல்லாவில் நின்றுகொண்டு சதா நேரமும் மொபைல் போனில் பேசிக்கொண்டிருக்கும் பணிப்பெண்.

வெளியே காரில் ஒரு ஆணும் பெண்ணும் வந்திறங்குகிறார்கள். அவர்களிடம் ஏதோ ஒரு திட்டம் இருக்கிறது. அந்தப் பெண் கடைக்குள் நுழைந்து அங்குள்ள அலமாரிகளிலுள்ள பொருட்களை ஏதோ வகைக்கு ஒன்று என்பதைப்போல அள்ளிப் போடுகிறாள். பணம் கொடுக்க கல்லாவிற்கு வருகிறாள். பணிப்பெண்ணின் கவனத்தைத் திருப்ப, அவளுக்கு வெளியே காரில் வந்த ஆணை போன் செய்யுமாறு அவள் ஏற்பாடு செய்கிறாள். பணிப்பெண் மொபைலில் பேசிக்கொண்டே எல்லா பொருட்களையும் பையில் போட்டு அவளிடமே கொடுத்துவிடுகிறாள்.

அந்தப் பெண் காரியம் பலித்துவிட்டதால் மூட்டையுடன் வெளியேறி அவனுடன் சேர்ந்து கொள்கிறாள். இருவரும் காரில் ஏறிச் சென்று விடுகிறார்கள். அப்பொழுதுதான் பணிப்பெண்ணுக்குத் தான் பணம் பெற்றுக் கொள்ளாமலேயே பொருட்களைக் கொடுத்தது தெரிய வருகிறது. அவள் எல்லா பொருட்களையும் ‘நூறு சதவிகித தள்ளுபடி’ செய்திருக்கிறாள். நகைச்சுவையான படம். மொபைல் போன் மீதான மெல்லிய விமர்சனமும் இதில் இருப்பதாகக் கருதலாம்.

போட்டிக்கு வந்த படங்களிலிருந்து இலங்கைத் தமிழ்க் கலைஞர்களின் இன்றைய மனோபாவமும் ஒருவாறாகப் புலப்படுகிறது. எதிர்காலப் பிரச்சினைகள், மனித உறவு சம்பந்தப்பட்ட என்றைக்குமான சிக்கல்கள் ஆகியன மீது அவர்கள் மையங்கொள்ள ஆரம்பித்துவிட்டதை இக்குறும்படங்கள் மூலம் அறியலாம். தமிழ் தேசியம் பற்றிய படங்கள் எதுவும் வெளிவரவில்லை. படங்களைப் பற்றிப் பார்வையாளர்கள் நிர்த்தாட்சண்யத்துடன் விமர்சனங்களை முன்வைத்தது அவர்கள் அடையவிருக்கும் வளர்ச்சியை எண்ணிப் பார்க்க வைத்தது. ‘நேசம்’, ‘100% Discount’ ஆகிய படங்கள்மீது அவர்களுக்குக் கடுமையான விமர்சனங்கள் இருந்தன. ஆனாலும் குறும்படங்கள் ஆதரிக்கப்பட வேண்டும் என்கிற தளர்வடையா நோக்கில் உற்சாகப்படுத்தப்பட வேண்டிய கோணங்களில் அவற்றில் என்னவெல்லாம் தென்படுகின்றன என்பதையும் அவர்கள் பார்த்தார்கள்.

இக்குறும்படங்களில் குறும்படத்திற்கான கருக்களைத் தேர்ந்தெடுத்தல், பின்னணி இசை, படத்தொகுப்பு, ஒளிப்பதிவு, படமொழியை உருவாக்கும் இயக்கம் என்று பலவற்றிலும் நல்ல வளர்ச்சியைக் காணமுடிகிறது. இலங்கைத் தமிழர்களிடம் பிரத்யேகமான திரைப்படமொழி உருவாகி வருவதை இக்குறும்படங்களை முன்வைத்து உறுதியாகக் கூறமுடியும்.


(நன்றி : இயக்குனர் திரு.அம்ஷன்குமார், உயிர்ம்மை)

0 comments:

 
Follow @kadaitheru